வியாழன், பிப்ரவரி 13, 2014

காதலனைக் குரங்கு என்று சொல்லலாமா? ( ‘அபுசி-தொபசி’-29)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி- வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்).
(அரசியல்-புத்தகம்-சினிமா-தொலைக்காட்சி-பத்திரிகை-சிரிப்பு)

அரசியல் 
தெலங்கானா அரசியல் என்னவாகுமோ என்று காங்கிரஸ் மட்டுமல்ல, பி.ஜே.பி.யும் கவலையுடன் இருக்கிறது. தெலங்கானா உருவானால் அது சீமாந்திராவில் உள்ள இவ்விரு கட்சிகளுக்கும் பலத்த அடி கொடுக்கும்என்பது உறுதி. இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைதான். தெலங்கானா உருவாவதை விடவும், ஹைதராபாத்தை தெலங்கானாவுக்கு விட்டுக் கொடுப்பதில் தான் சீமாந்திராக்காரர்கள் நொந்துபோகிறார்கள்.

சரியாக அறுபத்தோரு  வருடங்களுக்கு முன்னால், (1953)  இதே போன்றதொரு தலைநகர் பிரச்சினை தலைதூக்கியது. அந்த வருடம் தான் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டது. அப்போது, சென்னை நகரத்தை ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கவேண்டுமென்று தெலுங்கர்கள் சார்பில் காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அன்றைய தினம் அந்த ஒரு தலைவர் மட்டும் தமிழ்நாட்டில் இருந்திருக்காவிட்டால், சென்னைதான் ஆந்திராவின் தலைநகராக ஆகியிருக்கும். அந்தத் தலைவரை இன்று அனேகமாக எல்லாரும் மறந்துவிட்டார்கள். அவர் தான், ‘சிலம்புச் செல்வர்’ என்றும், ‘கிராமணியார்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்கள்.


 1953  ஜனவரி  3ஆம் தேதி, சென்னை நகரசபையில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்து, ம.பொ.சி. அவர்கள் ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையின் சிறு பகுதி இதோ:

சென்னைத் தமிழர்கள் சார்பாக மட்டுமல்லாமல், நகரிலுள்ள 14 லட்சம் பிரஜைகள் (‘குடிமக்கள்’) சார்பிலும் இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கிறேன்.(‘முன்மொழிகிறேன்’). சென்னையைப் பற்றியப் பிரச்சினை, ஆந்திரருக்கும் தமிழருக்கும் நடக்கும் மொழிச் சண்டையன்று; ஆதிக்கப் புத்திக்கும் நியாய உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டமாகும்......

காங்கிரசின் கொள்கைவழி ஆந்திரப் பிரிவினை பற்றி, பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கையை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆந்திரரைப் போன்றே தமிழரும் தனி மாகாணம் கோருகின்றனர். ஆந்திர மாகாணம் பிரிவது தமிழ் மாகாணம் அமைவதற்கான ஆரம்ப வேலையென்று நான் எண்ணுகிறேன். ஆகவே ஆந்திரப் பிரிவினையை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நான் வரவேற்கிறேன்.

ஆந்திர மாகாணத்தின் தலைநகரம் பற்றி, ஆந்திரத் தலைவர்களிடையே அபிப்பிராய ஒற்றுமையில்லை. மேலும், ராயலசீமை மக்கள் சென்னையில்லாத ஆந்திரப் பிரிவினையில் திருப்தியடையவில்லை. ஆகவே, அண்டை நாடான தமிழ்நாட்டின் தலைநகரைப் பறிப்பதில், ஆந்திரத் தலைவர்கள் முனைந்திருக்கின்றனர். ஆம், தர்மத்தை முன்னிட்டோ, நியாயத்தை முன்னிட்டோ ஆந்திரத் தலைவர்கள் சென்னையைக் கேட்கவில்லை. தேவையை முன்னிட்டும், ராயலசீமையாரை திருப்தி செய்விப்பதற்காகவும் சென்னையைக் கேட்கின்றனர்.

சென்னை, சந்தேகத்துக்கிடமில்லாமல் தமிழ்நாட்டின் உட்பகுதியாக இருக்கிறது. சென்னை நகரின் வடக்கேயும் தமிழ் நிலம்; தெற்கேயும் முழுத் தமிழ்நாடு; கிழக்கே வங்காளக் குடாக் கடல். இந்த நாற்பாங்கெல்லைக்கு நடுவே இருக்கிறது சென்னை நகரம். அப்படியிருக்க சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்கவேண்டுமென்று கேட்பது அரசியலுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாத ஆதிக்கக் கூச்சலாகும்.....

சென்னை நகரை, தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டால் இங்கு வாழும் தமிழர்களின் கதி என்னவாகும்? நான் சென்னையின் பூர்வகுடிமகன்; நான் தமிழன்; சென்னை உள்ளிட்ட தமிழ்நாடே என் தாய்நாடு. அப்படியிருக்க சென்னை நகரை தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவிட்டால், அண்டையிலுள்ள தமிழ்நாட்டிற்கு நான் அந்நியமாகி விடுகின்றேன். காவிரிக்கரையின் கலாச்சாரமும் எனக்கு அந்நியமாகிவிடும். அந்தக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு கதம்பக் கலாச்சாரத்துக்கு நானும் சென்னைத் தமிழர்களும் அடிமைப்பட்டுப் போவோம். அந்த அபாயத்துக்கு நான் இரையாக வேண்டுமா? அந்த அநியாயத்திற்கு நான் ஆதரவு கொடுக்க வேண்டுமா? ஒரு போதும் முடியாது. ஆந்திரர்களின் நியாயமற்றக் கோரிக்கை எங்கள் நெஞ்சைப் புண்ணாக்கி இருக்கிறது. வேதனையை பொறுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாமென்று ஆந்திரத் தலைவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இந்தத் தீர்மானம், ஆந்திரர்களைத் தாக்குவதல்ல; அவர்களின் தாக்குதலிலிருந்து சென்னை நகருக்குத் தற்காப்புத் தருவது! உரிமை, உண்மை இரண்டுங்கலந்த தீர்மானம் இது.

ஆந்திரநாட்டில் சென்னையைப் போன்ற பட்டினம் எதுவும் இல்லையாம் ஆகவே, ஆந்திரத் தலைநகரை, தற்காலிகமாக இங்கு வைத்துக் கொள்ள இடந்தர வேண்டுமென்று ஆந்திரத் தலைவர்கள் கேட்கின்றார்கள்.

தற்காலிகமாகக் கூட ஆந்திர அரசாங்கம் சென்னையில் இருக்கக்கூடாது என்று ஆந்திரக் கம்யூனிஸ்ட்டுகள்  தீர்மானித்திருக்கிறார்கள். வேறு விஷயங்களில், நான் கம்யூனிஸ்ட்டுகளோடு கருத்து வேற்றுமை கொண்டவனாயினும், இந்த விஷயத்தில் ஆந்திரக் கம்யூனிஸ்ட்டுகளின் துணிவையும் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன்.

புதிதாக அமையும் ஒரு அரசாங்கத்திற்கு, முதல் தரமான தலைநகர் கிடைக்க முடியாது. அசாம் தனி மாகாணமாக ஆனபோது மூன்றாந்தரமான இடத்தில்தான் அதன் தலைநகரம் ஏற்பட்டது; ஒரிசா பிரிந்து தனி ராஜ்யமானபோது மூன்றாந்தரமான கட்டாக்கில்தான் அதன் தலைநகரம் அமைக்கப்பட்டது. அவசர முகாம்கள் போட்டே அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டன; ஒரிசா பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் புவனேஸ்வர் அதன் நிரந்தரத் தலைநகராயிற்று! ஏன், சென்னை நகரையே எடுத்துக் கொள்ளுங்கள்! மாகாண அரசாங்கம் சென்னையில் அமைந்தபோது இன்று காணும் வளம் அன்று இருக்கவில்லை! அரசாங்கம் அமைந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆன பிறகுதான், ஆண்டுக்கு ஆண்டு திட்டமிட்டு வளர்த்த பிறகுதான், இன்றுள்ள வளமான சென்னையைக் காண முடிகிறது. உண்மை இதுவாக, ஆந்திரம் அமையும்போதே அதற்குச் சென்னையைப் போன்ற முதல் தரமான தலைநகர் வேண்டுமென்று கேட்பது அரசியல் ஞானமற்ற, அனுபவ அறிவற்றக் கோரிக்கையாகும். நமது ஆந்திரத் தலைவர்கள், அவசரத்தில் வரலாற்று உண்மைகளைக் கூட மறந்து விடுகின்றனரே!

நான் ஆந்திரனாக இருந்தாலும் சென்னை நகரில் தற்காலிக இடம் கேட்பதை முழுமூச்சுடன் எதிர்த்திருப்பேன். ஏனென்றால், அது ஆந்திர மக்களின் சுயமரியாதையையே அவமானப்படுத்துவதாகும்.....

தற்காலிகமாக இடங் கொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்புறம் எப்போது, எப்படி அவர்களை சென்னையிலிருந்து வெளியேற்றுவது? இது, சட்டரீதியான சிக்கல். வெளியேற மறுத்தால், அல்லது தாமதித்தால் இரண்டு அரசாங்கங்களிடையேயும் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்த நிலையில், ஆந்திரர்- தமிழர் உறவு கெட்டுவிடும்; பகைமை முற்றிவிடும்; ஆகவே, உறவு கெடாமல் இருப்பதற்காக தற்காலிகமாகவும் இடங் கொடுக்கக்கூடாது என்பது எனது தீர்மானத்தின் குறிக்கோள். ஆந்திர நாட்டில், மக்களிடையே அசைக்கமுடியாத செல்வாக்கு பெற்ற ஒரு தலைவர் இல்லை. எந்த அரசியல்கட்சிக்கும் அங்கு நிலையான செல்வாக்கில்லை. இது, ஆந்திர நாட்டிற்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டந்தான். இந்த நிலையில், எந்தத் தலைவரின், அல்லது எந்தக் கட்சியின் வாக்குறுதியை நம்பி நாம் சென்னையில் இடங் கொடுப்பது!

இறுதியாக எனது வேண்டுகோள் இதுதான்!

ஆந்திரர்களே! நீங்கள் பிரிந்து போக விரும்புகிறீர்கள்; தாராளமாக வாழுங்கள்; எங்களையும் வாழவிடுங்கள்.

தமிழ்மக்களில் எவரும் எந்த நாடுகளிலும் ஆந்திரருக்கு விரோதமாக எதையும் செய்ததில்லை. இனிதும் செய்யப் போவதில்லை. பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்திற்குப் பிறகு, எங்கள் தமிழ் மக்கள் ஆந்திர நாட்டில் சிக்கி அல்லல்பட்டார்கள்; ஆந்திர வெறியர்களால் அடிக்கப்பட்டார்கள். அவர்கள் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எங்கள் சகோதரர்களுக்கு நேர்ந்த அந்தத் துன்பங்களைக் கேட்டு எங்கள் நெஞ்சு கொதித்தது. ஆயினும் சகித்துக் கொண்டோம்; ஆந்திரரும் எங்களைப் போன்றே இந்தியர்கள் என்ற காரணத்தால். எங்கள் சகிப்புத் தன்மையை மேலும் சோதிக்கவேண்டாமென்று ஆந்திரத்தலைவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்....

கடைசி ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை, ஆந்திரர்கள் சென்னையை அடைய முடியாது; தமிழ்நாட்டிலிருந்து அதைத் துண்டிக்கவும் முடியாது.

(நன்றி: ‘இளந்தமிழன்’ மாத இதழ்,மார்ச் 2011,  பக்.27-32.) (இந்த இதழை, மூத்த பதிவர், புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள் இல்லத்தில் கண்டெடுத்தேன். அவருக்கு என் சிறப்பு நன்றிகள்!)

புத்தகம்

காதலித்துவிட்டு, விரைவில் திரும்புவேன் என்று சொல்லித் தன் நாட்டிற்குச் சென்று விடுகிறான், காதலன். இவளோ, எப்போது வருவான் அவன் என்று கலங்கி நிற்கிறாள். சங்க இலக்கியங்களில் அகத்துறை நூல்களில் இதுபோல எண்ணற்ற காட்சிகள் உண்டு.

அண்மையில் முடிந்த புத்தகக் கண்காட்சியில் ‘குறிஞ்சிச் சுவை’ என்று ஒரு சிறிய நூலைத் தற்செயலாகப்  பார்த்தேன். அதன் ஆசிரியர் பெயர் கேட்டால் வியந்து போவீர்கள், அவ்வளவு நீ...ள...ம். ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா. தமிழில் தோய்ந்தெழுந்த புலவர். ஐங்குறுநூறு என்னும் சங்க நூலிலிருந்து, சில குறிஞ்சித்திணைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சுவையை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நூல். மீண்டும் என்னை மாணவப் பருவத்திற்குக் கொண்டுசென்ற நூல். (வெளியிட்டவர்கள்: ஜமாலிய்யா பதிப்பகம், மதுரஸதுல் ஹஸநைன் ஃபீ ஜாமிஆ யாஸின் அறபுக் கல்லூரி, சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குளத்துப்பட்டி அஞ்சல், மணப்பாறை ரோடு, திருச்சி-620009. Ph. 0431-2914554; 9952689099.) (பக்.92, ரூ.60).


ஒரு கேள்வி: யாராவது பதில் சொல்லுங்களேன்: அந்தக் காலத்தில் பூலாங்குளம் மாயவநாதன் என்றொரு திரைக் கவிஞர் இருந்தார். (வாலி அவர்கள் மரணமடைந்த சமயம் இவரும் மறைந்தார்.) ‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இவரது  ‘தண்ணிலவு தேனிரைக்க, தாழைமரம் நீர்தெளிக்க’ என்ற இனிமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். திருமணத்திற்குச் சிலநாட்கள் முன்பு, இதே பாடல், எனக்கு மனைவியாகப் போகிறவருக்கும்  மிகவும் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ந்துபோனேன். (இப்படிச் சொல்வதால், திருமணத்திற்குப் பின் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறவேண்டியவனாகிறேன்.) அந்தப் பூலாங்குளம் தான் இந்தப் பூலாங்குளத்துப்பட்டியா?

“அசோக மரத்தின் பவளம் போன்ற செந்நிற எழில் தளிர்களை, செந்நிறத் தலையுடைய  பெண்குரங்கின் குறும்புத்தனமுள்ள குட்டி உண்ணுவதான  மலைவளத்தை உடைய நாட்டுக்குத் தலைவனே,   நீ பிரிந்து செல்வாய் என்றால், தலைவி, என்னைவிடக் கண்கலங்குவாள்” என்கிறாள், தோழி. அதாவது, தன் தோழியான தலைவியின் மேல் இவள் வைத்த அன்பானது, அவளுடைய காதலன் பிரிந்துபோய்விடுவானோ என்று கலங்கவைக்கிறது. அப்படி என்றால், அந்தத் தலைவியின் துக்கம் எவ்வளவு தீவிரமானதாயிருக்கும்- என்பது கருத்து.

அத்தச் செயலைத் துப்புற ழொண்டளிர்
புன்றலை மந்தி வன்பறழாரும்
நன்மலை நாட, நீ செலின்,
நின்னயந் துறைவி யென்னினுங் கலிழ்மே.(273)

அடுத்துவரும் பாடலைக் கவனியுங்கள். இதில் தோழி பேசவில்லை. தலைவியே பேசுகிறாள். (தலைவன் பிரிந்து சென்றுவிட்டான்.) “எப்படி, வலிமிக்க புலியின் ஒலிகேட்டு ஆண் குரங்கு (‘கடுவன்’) அஞ்சி விரைந்தோடி உடனடியாய் மலையின் உயர்ந்த, பக்கவாட்டிலுள்ள,  மலைகளில் பாய்ந்து பற்றிக்கொள்ளுமோ, அத்தகைய மலைவளம் உடைய நாட்டின் தலைவன், என்னை விட்டுவிட்டுப் போய்விட்டான். போகும்போது, என் மென்தோளின் எழிலையும், என் (விழிகளிலிருந்து) துயிலையும் எடுத்துச் சென்றுவிட்டான்” என்கிறாள், தோழியிடம்.

அதாவது, புலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்) தான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி, (என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக் கேட்டதும் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள். காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம் அந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்! என்னே நம் தமிழ்ப் பண்பாடு!

மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்
குன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மென்தோள் கவினும் பாயலும் கொண்டே. (274)

இவர் மாதிரி சங்கத்தமிழ்ப் பாக்களை நமக்கு அறிமுகம் செய்வித்துத் தொண்டாற்றும் இஸ்லாமியப் புலவர்கள் இன்னும் எத்தனை பேரோ! வாழ்க அவர்தம் தமிழ்த்தொண்டு!

சினிமா

“தமிழில் படம் தயாரித்ததற்காக வெட்கப்படுகிறேன்! கண்ணீர் விடுகிறேன்!”
என்கிறார் ஒரு தயாரிப்பாளர். அவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர் என்பது தான் நமக்கு வேதனையை அதிகப்படுத்துகிறது. ‘அவனுக்கென்றொரு மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அவர். முழுதும் படிக்க:

தொலைக்காட்சி :

இளையராஜாவின் இளையமைந்தரும் நூற்றுக்கு மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளவருமான யுவன் ஷங்க்கர் ராஜா, திடீரென்று தான் முஸ்லீமாக மாறிவிட்டதாக அறிவித்திருக்கிறாராம். இதுபற்றிய ஈழத்தமிழர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை இங்குத் தருகிறேன்: (யுவனின் முதல் மனைவி ஓர் ஈழத்தமிழராம்.)

யுவன் சங்கர் இனிமேல் தப்பு (Duff) மட்டும் தான் வாசிப்பாரா?

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் இஸ்லாத்துக்கு  மாறியது புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்களுக்கு  மிகவும்  அதிர்ச்சியைக்  கொடுத்திருக்கும் விடயமாகும். இசையமைப்பாளர்  இளையராஜாவுக்கும்  அவரது மகனுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த அபிமானம்  உண்டு,  எந்த மதத்துக்கும் மதம் மாற எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம் இருந்தாலும் கூடஅவரது  மகன் இஸ்லாத்துக்கு  மதம் மாறியது,  ஈழத் தமிழர்களுக்கும் 
அவருக்குமிடையே  ஒரு  நிரந்தர  இடைவெளியை  ஏற்படுத்தி விட்டது போல் தெரிகிறது. இஸ்லாமை தமது மதமாகக் கொண்ட ஈழத்தமிழர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 

இசையமைப்பாளர் திரு. இளையராஜா கனடாவுக்கு வருகை தந்த போது கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தி, கனடாத் தமிழர்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராகிய செல்வி. ராதிகா சிற்சபேசன் அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தியது தவறாக இருந்தாலும் கூட, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் அவருக்கு எந்தளவுக்கு அன்பும், மரியாதையும் உண்டு என்பதை அது காட்டுகிறது. 
தமிழ்நாட்டில் எப்படி இருந்தாலும், ஈழத்தில் முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்களும்,  அவர்களின் அரசியல்வாதிகளும் ஒரு போதும் ஈழத் தமிழர்களுடன் ஒத்துழைத்ததில்லை.  இன்றும் சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின்  நலன்களுக் கெதிராகத்தான் இயங்குகிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லீம்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த  ஈழத் தமிழர்களைத் தவிர ஏனைய ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாகத்தான் 
அடையாளப் படுத்துகிறார்கள்  என்ற உண்மை தெரியாது......

 தமிழ்நாட்டு முஸ்லீம்கள், இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக 
கொல்லப்பட்ட போது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் எதையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, .... இலங்கை அரசுக்கு ஆதரவாக, முஸ்லீம்களுக்கு  மத்தி(யி)ல் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். அதனால்  இனிமேலும் புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்கள்  யுவன் சங்கரை  ஆதரிக்க  வேண்டுமா என்றகேள்வி எழுவது தவிர்க்க முடியாதது(என் கேள்வி: இதனால் யுவனுக்கு என்ன நஷ்டம்?)

அது ஒருபுறமிருக்க, இசை(Music), சங்கீதம் என்பனவற்றுக்கு இஸ்லாத்தில் 
அனுமதி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். அந்த விடயத்தில் 
இணையத்திலுள்ள காணொளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் 
போது அது உண்மை போல்தான் தெரிகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்,  சூஃபி இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவராக  இருக்கலாம்ஏனென்றால் தர்கா வழிபாடு, 
ஞானிகளை நம்புவது எல்லாம், தீவிர வாத வஹாபிய இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதுஉண்மையில் இஸ்லாத்தில் இசை, ஹராமா இல்லையா என்ற விடயம் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த விடயத்தில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் கருத்தையறிய அவரது 
காணொளிகளைத் தேடினேன்.  கிடைக்கவில்லை. 

புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகர்  Dr. Zakir Naik இன் கருத்துப்படி, தப்பு அல்லது-Duff (Tambourine) மேளத்தைத் தவிர, வேறு இசைக்கருவிகளை இசைப்பது ஹராம்,அதாவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அப்படியாயின் யுவன்சங்கர் இனிமேல் தப்பு   (Tambourine) வாத்தியத்தை மட்டும் தான் 
வாசிப்பாரா/அடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. 

(பாவம், ஈழத்தமிழர்கள்! இது யுவன் என்ற தனி மனிதனின் முடிவு என்று விலகிப்போய்விடலாமே, ஏன் செய்யவில்லை? தமிழ்மீதும் தமிழ் இசைமீதும் அவர்கள் வைத்த அன்பும் பற்றுமல்லவா இப்படிப் பேசவைக்கிறது! யார்மீது நம்பிக்கை வைத்தாலும், யார்மீது அன்பு செலுத்தினாலும்  அவர்களால் கைவிடப்படுகிறார்களோ ஈழத்தமிழர்கள்?)

முழுவதும் படிக்கவும், இக்கட்டுரைக்கு வந்த எதிர்த்தரப்பின் மறுமொழிகளைக் காணவும் சொடுக்கவும்:  http://viyaasan.blogspot.in/2014/02/duff.html )
பத்திரிகை

இந்த மாதம் அமுதசுரபியில் நான் ரசித்த கேள்வி-பதில்

கேள்வி: புதிது புதிதாக ஏராளமான சிறுபத்திரிகைகள் வருகின்றனவே, அவற்றைப் பற்றி? (ஆர்.கலைவாணி, பொள்ளாச்சி)

அமுதசுரபி ஆசிரியர்- திருப்பூர் கிருஷ்ணன் பதில்:
நண்பர்களை எழுத்தாளர்களாக ஆக்குவதற்காகப் பத்திரிகை நடத்தக் கூடாது. எழுத்தாளர்களை நண்பர்களாக்கிக்கொண்டு பத்திரிகை நடத்தவேண்டும். எழுதத் தெரியாத தங்கள் நண்பர்களின் நாலாந்தரப் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் போக்கைப் பல சிற்றிதழ்களில் காண முடிகிறது. நா.பா.வின் தீபம், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா போன்ற பழைய இதழ்களை ஊன்றிக் கவனித்தால் சிறுபத்திரிகைகளை எப்படி நடத்தவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சிரிப்பு

92 வருடமாகியும் சில விஷயங்கள் மாறவேயில்லை!

1922 ஆம் வருடம், ரீடர்ஸ் டைஜெஸ்ட் தனது முதல் இதழை வெளியிட்டது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்டுரையின் தலைப்பு: “எப்படிப்பட்ட கணவர் நீங்கள்?”

அதில், தம்முடைய பொருட்கள் வீட்டுக்குள் எங்கெங்கே கிடக்கும் என்பதைக் கூட கணவர்களால் ஏன் கண்டுபிடித்துக்கொள்ள முடிவதில்லை என்று அங்கலாய்க்கிறாள் ஒரு மனைவி.

“ஏன் தெரியுமா? அவர்களெல்லாம் ஆண்கள்!” என்று பதில் சொன்னாளாம்,  இன்னொரு மனைவி.

(நன்றி: ரீடர்ஸ் டைஜெஸ்ட் –பிப்ரவரி  2014 பக். 95)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

15 கருத்துகள்:

  1. உங்கள் தளத்தைப் படித்தாலே முக்கிய நிகழ்வுகள் அறிய முடிகிறது.நன்றியுடன் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பத்திரிகை துவங்கினால் மறக்காமல் என்னை அழையுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. வேண்டுகோளை ஆந்திரத்தலைவர்கள் உணர வேண்டும்...

    குறிஞ்சிச் சுவை மிகவும் ரசனை... (உடனே வாங்க வேண்டும்... நன்றி...)

    குரங்கு போல் சேட்டைகள் செய்தால் தானே காதலன்...!?! ஹா... ஹா...

    யுவன் சங்கர் - அவரவர் விருப்பம் + முடிவு...

    சிரிப்பு எத்தனை வருடங்கள் ஆனாலும் சிரிப்பு தான்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்துரைக்காக :
    "எந்தெந்த உயிருக்கு எத்தெத்தனை சதவீதம் அன்பு செலுத்தணும்ன்னு ஒரு பட்டியலிருந்தால் ரொம்பச் சந்தோசம்...!

    எதற்கும் எனக்கு புரிவதற்கு இந்தப் பதிவுலே "உயிர்" என்றிருக்கும் இடத்திலெல்லாம் கடவுள் என்று மாற்றி வாசிக்கிறேன்...!"

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html

    பதிலளிநீக்கு
  4. ம.பொ.சியை எல்லோரும் மறந்த் வேளையில் தாங்கள் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி! அரசியல்வாதி மட்டுமல்ல, நல்ல எழுத்தாளரும் கூட....தாங்கள் தந்திருக்கும் செய்தி தெரிந்தது தான் என்றாலும்...இங்கு நினைவுப்படுத்தியதால் தெரியாத பலர்க்கும் தெரிய வரும்....நல்ல தகவல்! அதுவும் தெலங்கானா, ராயல்சீமா பிரச்சினை உயிர்த்தெழுந்த இந்த் சமயத்தில்!

    பூலாங்க்குளம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது.
    பூலாங்குளத்துப்பட்டி திருச்சி மாவட்டம்!

    யுவன் சங்கர் முடிவு அவரது! ஆனால், திருவண்ணாமலையாரின் ப்க்தராகிய அவரது தந்தை இசைக்ஞானி என்ன சொல்கிறாரோ?

    மட்டுமல்ல ஒரு மதத்தைத்தழுவித்தான் நாம் அந்த மதத்தை மதிக்க வேண்டும் என்றோ அதை பின்பற்ற வேண்டும் என்றோ இல்லை! நாம் எந்த மதத்தைச் சார்ந்தவரோ அந்த மதத்தில் இருந்து கொண்டே மற்ற் மதங்களையும் நாம் பின்பற்றலாம், கடவுளர்களையும் தொழலாமே! நம் நாடு செக்குலர் நாடுதானே! அப்புறம் என்ன?!
    ஜோக் நல்ல அருமையான ஜோக்!

    த.ம. 7 என்று நினைக்கிறோம்!!

    பதிலளிநீக்கு
  5. குறிஞ்சிப்பதிவு சங்க காலத்திற்கு எங்களை அழைத்துச் சென்றது. நீங்கள் மட்டும் மாணவப் பருவத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறிக் கொண்டு, எங்களையும் அங்கே கொண்டுபோய் விட்டுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது, எனக்குத் துணை வரவும் சிலர் இருப்பது பெருமையாக இருக்கிறது! நன்றி.

      நீக்கு
  6. 1தங்களின், எதையும் விடாமல் படித்து அதையும் வலைவழி எடுத்துக் காட்டும் ஆற்றல்
    கண்டு வியக்கிறேன்! வளர்க தங்கள் தொண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற சான்றோர்கள் எனக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதால்தான் முடிகிறது ஐயா! வருகைக்கு நன்றி!

      நீக்கு
  7. குறிஞ்சிச் சுவை நூலைப்பற்றிய ஐயாவின் கருத்தக் கண்டு மகிழ்கிறேன். குறிஞ்சிச் சுவை நூலை எழுதிய அசிரியர் ஈழநாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இதுபோன்று பல நூல்களை எழுதியுள்ளார்கள். சங்ககால புலமையைக் இவர்களின் தமிழ் ஆக்கங்களில் காணலாம். ஈழத்திருநாட்டில் ஒரு மூலையில் இருந்துகொண்டு கொண்டு யாப்பிலக்கண விதிப்படி கவிதைகள் எழுதி சங்கத்தமிழை காத்து வருகிறார். இவர்களால் எழுதப்பட்ட "ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர் " என்ற கவிதைக் கோவை இலங்கை சாகித்திய மண்டலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக் கவிதையாகும். இவர்கள் தமிழ் மொழிக்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கும் அரும் பங்காற்றி வருகிறார்கள். "தமிழ் எம் உயிர் : அதில் தவறு செய்பவரை மன்னிக்கமாட்டோம் " என்று கூர்வார்கள். இவர்களின் முழுப் பெயர் ஜமாலிய்யா செய்யத் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா .

    பதிலளிநீக்கு
  8. குறிஞ்சிச் சுவை நூலைப் பற்றி // மீண்டும் என்னை மாணவப் பருவத்திற்குக் கொண்டுசென்ற நூல் // என்று நெகிழ்ந்துள்ளீர்கள்...
    தமிழின் சுவைத் தெரிந்தவர்களால் தான் இலக்கிய நூல்களைச் சுவைத்து பிறருக்கும் சுவைக்க தர முடியும் என்பதை தங்களின் பதிவுகள் நிருபிக்கின்றன.
    அண்மையில் நடைபெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவிற்கு டாக்டர் அவ்வை நடராஜன் தலைமை ஏற்று சிற்புரையாற்றினார்.
    இவ்விழாவில் பெருங்கவிக்கோ வா . மு . சேதுராமன் கவிஞர் மு . மேத்தா , டாக்டர் நாகூர் ரூமி டாக்டர் ஹ.மு. நத்தர்சா இன்னும் பல தமிழறிஞர்னகள் கலந்து மௌலானா அவர்களின் சிறப்பு மிகு நூற்கள் குறித்து உரை நிகழ்த்தினார்கள். ஆனால் நூலாசிரியர் நிகழ்ச்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் வளமைமிக்கவர்கள் ஆனால் எளிமையானவர்கள்.
    தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே!

      எந்தெந்த நூல்களை என்னால் ரசிக்க முடிகிறதோ அவற்றை, எந்த விதமான குறைவுமின்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் எளிய பணியைச் செய்துகொண்டு வருகின்றேன். தங்களைப் போன்றவர்கள் அதைக் கவனித்துப் பார்க்கிறீர்கள் என்பது என்னை நன்றிக்குரியவனாக்குகிறது.

      "நூலாசிரியர் நிகழ்ச்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்கிறீர்களே, என்ன காரணம்? மத ஒழுக்கத்தின் அடிப்படையில் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தவிர்க்கப்பட்டதா? எப்படியாயினும் அவருடைய தமிழ் அறிவிற்கு எனது வணக்கங்கள்.

      நீக்கு
  9. வணக்கம் அய்யா.
    தேனினும் இனியதாம் நம் தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றுபவர்கள் அதிகமான மக்களுக்கு தெரியாமல்தான் இருக்கிறார்கள். குறிஞ்சிச்சுவை நூலாசிரியர் ஜே எஸ் கே ஏ ஏ எச் மௌலானா அவர்கள் ஞான நூற்கள் நிறைய எழுதியுள்ளார்கள். மனிதன் தன்னை அறிவதே அவனின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்றும் அதன்மூலமே தன் சுயத்தையறிந்து இறைவனை அறியமுடியும் என்று தங்கள் தமிழ்ஞான நூற்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களின் தமிழ்ப்புலமைக்கு குறிஞ்சிச்சுவை ஒரு எடுத்துக்காட்டு என்பதுபோல் அவர்களின் மதங்கள் கடந்த இறைஞான அறிவிற்கு அவர்களின் தாகி பிரபம் என்ற நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு