திங்கள், பிப்ரவரி 10, 2014

ராஜீவ் காந்தியும் மகாத்மா காந்தியும் சந்தித்த போது...( ‘அபுசி-தொபசி’-28)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இன்னும் முடிவு செய்யவில்லையாம், விஜயகாந்த், எந்த அணியுடன் சேருவது என்று. இப்படியே போனால், எந்த அணியிலுமே இவர் சேருவது கேள்விக்குறியாகிவிடும். கடைசியில் காங்கிரஸ் ஒன்றுதான் விதியே என்று இவரை அணைத்துக்கொள்ளவேண்டி வரலாம். தோற்கப்போவது நிச்சயம் என்ற நிலையில் யாரைச் சேர்த்துக்கொண்டு தோற்றால்தான் என்ன என்ற விரக்தியின் உச்சகட்டத்திற்கு காங்கிரஸ் போய்க்கொண்டிருக்கிறது. ப.சிதம்பரம் இனித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம். காங்கிரசில் மற்றவர்களும் அவரைப் பின்பற்றக்கூடும்.

எட்டாம் தேதி சென்னை வண்டலூரில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக உரையாற்றினார் நரேந்திர மோடி. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உரிமையாளர் பாரிவேந்தராம்.

புத்தகம்
அண்மையில் இயற்கையெய்திய பெரியவர் திரு ரா.அ. பத்மநாபனை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அன்னாரின் 'சித்திர பாரதி' என்ற நூல்தான் பாரதியை உலகுக்கு முழுமையாக அறிமுகப்படுத்திய முதல் நூல் எனலாம். பாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்களைச் சேகரித்தும், அவருடைய புகைப்படங்களை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தும், பாரதியின் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பாரதி புழங்கிய ஊர்களிலெல்லாம்போய்   செய்திகளைத் திரட்டியும் அவர் படைத்ததுதான் அந்த நூல். பாரதியின் இறுதி நாளான  1921 செப்டம்பர் 11 நடந்த நிகழ்வுகளை   இப்படித் தருகிறார்:

அன்று இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம் "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக்கொண்டுபோகவேண்டும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அமானுல்லாகான் அப்பொழுது அப்கானிஸ்தானத்து மன்னனாக இருந்தவர். 1914-18  முதல்-மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டிஷார் அவர்மீது கருவிக்கொண்டிருந்தார்கள்.

'முன் இரவில் பெரும் பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டுமணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்' என்கிறார்  நீலகண்ட பிரம்மச்சாரி.

நெல்லையப்பர், "எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரை கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். 'கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்' என்றும், 'காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கின்றேன், - என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கின்றேன், அட, (காலா)' என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்" என்று கூறுகிறார்.

பாரதி காலமான சரியான நேரம், சரியாக இரவு 1.30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.

பாரதியாரின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிறிஸ்தவப் பாதிரியாகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.என்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர். பாரதியார் குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவு புரிந்து வந்த வக்கீல் துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார். 

'பாரதியார் உடலை காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்குக் கொண்டு சென்றோம். நானும், லக்ஷ்மண ஐயரும்,  குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும், பாரதியார் பொன்னுடலை இறுதியாகச் சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். (அதாவது சுமார் 45 கிலோ.) இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்துக்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம். பாரதியாரின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்'- இவ்வாறு நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.

பாரதிக்குப் பிள்ளை இல்லாததால், யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ, நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், 'என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?' என்று மறுத்துவிட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மாதான் காரியங்களைச் செய்தார்.

பல நூற்றாண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்திய தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும் அறிஞர்களும் சிலரே உணர்ந்திருப்பர்.

தென் தமிழ்நாட்டில் சித்திரபானு கார்த்திகை 27, மூல நட்சத்திரத்தில் ( 1882  டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27 -ஆம் தேதி   (1921 செப்டம்பர் 11) ஞாயிறன்று, அதிகாலை 1.30 மணிக்கு பூதவுடல் நீங்கிப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக, 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!
**** 
பாரதியின் இறுதிநாளை உலகுக்கு வெளிப்படுத்திய பெரியவர்  திரு ரா.அ. பத்மநாபன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக!

சினிமா & தொலைக்காட்சி :  
இந்த வாரம் பார்த்த எந்த சினிமாவுமே - (பழைய, புதிய) -திருப்தி தரவில்லை. எனவே பேரன், பேர்த்தியின் ஆலோசனையின்பேரில் போகோ டிவியில் 'சோட்டா பீம்' பார்த்தேன். சத்தியமாக நல்ல படம்தான்! இந்தக் காலத்துக் குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள்!  

பத்திரிகை
இந்த பிப்ரவரி  2014 கலைமகள் இதழைத் தேடிக்கொண்டு அடையாரில் பல கடைகள் ஏறி இறங்கவேண்டியதாயிற்று. திடீரென்று எப்படி வெளிவந்த இரண்டே நாட்களில் விற்றுத்தீர்ந்து விட்டது என்று புரியவில்லை. கடைசியில் ஒரு கடையில் ஒரே ஒரு பிரதி இருந்தது. 
வாங்கிப் பார்த்தபின்தான் ரகசியம் புரிந்தது. பிரபாராஜன் அறக்கட்டளையின் சார்பில் கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசுபெற்ற எனது சிறுகதை ‘சாந்தி நிலவ வேண்டும்’ இந்த இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்களின் அன்புதான் என்னே! அறக்கட்டளை நடத்திய பரிசுவிழாவின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. கலைமகளுக்கு நன்றி.

தமிழ் இலக்கிய உலகில் எண்பத்திரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு இதழ் கூடத் தவறாமல், வெளியாகிவந்து கண்ணியத்துடன் இயங்கும் மாத இதழ் கலைமகள்.  தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் மாணாக்கரும் பிரபல தமிழ் அறிஞருமான கி.வா.ஜ. அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான கலைமகளின் இன்றைய ஆசிரியர், கீழாம்பூர் என்றே அழைக்கப்படும் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள். சில பத்திரிகைகளைப் போல் வடிவம் பெருக்காமலும், அளவில் இளைக்காமலும், இலக்கியத்தன்மையில் சளைக்காமலும்  கலைமகளைக் கொண்டுவந்துகொண்டிருக்கும் கீழாம்பூருக்கு தமிழ்ச் சமுதாயம் வாழ்த்து சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்னும் பதினான்கே மாதங்களில் கலைமகளின் ஆயிரமாவது இதழ் வெளியாகவுள்ள சுபமான தருணத்தில் ஆசிரியராக விளங்கும் நற்பேறு எத்தனை பேருக்குக் கிடைக்கும்?


(ஒருவேளை மேற்படி கலைமகள் இதழில் எனது சிறுகதையை நீங்கள் படிக்க முடியாமல் போயிருந்தால் வருந்தவேண்டாம்: மிக மிக அண்மையில் வெளியான எனது ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.  விலை ரூ. 120. கிடைக்குமிடம்: அகநாழிகை புத்தகக் கடை, சைதாப்பேட்டை, சென்னை. தொலைபேசி: 044-3189989; 9994541010. இணையத்தின் வழி வாங்கிட: http://aganazhigaibookstore.com  )


மகாத்மா காந்தியும் ராஜீவ் காந்தியும் சந்தித்திருக்க முடியுமா? முடியாது என்றே நினைத்திருந்தேன். ஏனெனில் மகாத்மா இறந்தபோது ராஜீவுக்கு நான்கு வயது. ஆனால் அவுட்லுக் வாரஇதழ் பிப்ரவரி 3,  2014இதழ் படித்தவுடன் விடை கிடைத்தது.


தான் விரைவில் இறந்துபோய்விடுவோம், அதுவும், சாதாரணமாக அல்ல, யார்மூலமாவது கொல்லப்படுவோம் – என்ற முன்னறிவு, அவர் இறப்பதற்குச் சிலநாட்கள் முன்பிருந்தே மகாத்மாவை வாட்டிக்கொண்டிருந்தது என்ற தகவல், My Experiment with Gandhi –by- Pramod Kapoor  என்ற நூலில் இருப்பதை அதில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். (பக்கம் 63). குறிப்பாக,  1948 ஜனவரி  29 அன்று- அதாவது, இறப்பதற்கு ஒரு நாள் முன்பு- அந்த எண்ணம் அவரிடம் மிகுந்திருந்தது. அதை, தன்னோடு பேசிய அனைவரிடமும்  அவர் குறிப்பாக உணர்த்தினார் என்று அந்நூலில் பிரமோத் கபூர் கூறுகிறார். இந்தக் கட்டுரையை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதன் ஒரு பகுதி இதோ:

நேருவின் சகோதரி கிருஷ்ணா ஹத்தீ சிங் பின்வருமாறு கூறுவதாக ஆசிரியர் எழுதுகிறார்:

“அன்று காந்தி மிகவும் ஆரோக்கியமாகக் காணப்பட்டார். அவரது பழுப்புநிறமான வெற்றுடம்பு ஒளிமயமாக இருந்தது. அதற்குக் காரணம் உண்டு. உண்ணாவிரதம் இருக்கும் நாட்களில்கூட, அவர், தன் உடல்நலத்தில் அக்கறையோடிருந்தார். தனது உயர் ரத்த அழுத்தத்தை முன்னிட்டும், உடல் வலிமைக்காகவும் தலையில் மண்காப்பும், (உடலில்)எண்ணெய்த் தேய்ப்பும் செய்துகொள்வார்.... சூரியவெளிச்சத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனது சொற்பொழிவு-யாத்திரை பற்றியும், கணவர் ராஜாவைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசினோம். ரொம்ப முக்கியமில்லாத, மகிழ்ச்சியான, வெட்டிப் பேச்சுதான்.”

அப்போது சிறு குழந்தையான ராஜீவ் (காந்தி), பார்வையாளர்கள் கொண்டு வந்திருந்த பூக்களைக் கைகளில் அள்ளிக்கொண்டுவந்து மகாத்மாவின் கால்களைச் சுற்றிலும் வைக்க ஆரம்பித்தான். உடனே காந்தி  அவனுடைய காதுகளைப் பற்றிக்கொண்டு, செல்லமாக, “இதெல்லாம் செய்யக்கூடாது. இறந்துபோனவர்களின் கால்களில்தான்  பூக்களை இடுவார்கள்..” என்றார்.

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது. உலகிற்கே நல்லதுசெய்ய நினைத்த மகாத்மா காந்தியும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈழத்தமிழருக்கு நல்லதுசெய்யப்போய் ராஜீவும் மனிதவெடிகுண்டுக்கு இரையானார்.....! என்ன உலகம் இது!


சென்ற மாதம் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் சென்றிருந்தபோது, ஆசிரம வெளியீடான  ‘வைகறை’ காலாண்டிதழ் வாங்கினேன். தொடும்போதே புனிதமான உணர்வுகள் மனதை வருடுகின்றன. இன்று நேற்றல்ல,  1986 முதலே அந்த இதழை வாங்கும்போதெல்லாம் ஒருவித அமைதி என் மனதை ஆட்கொண்டுவிடும்.

மற்ற பத்திரிகைகள் போன்றதல்ல வைகறை. அன்னை அரவிந்தர் எழுத்துக்களை மட்டுமே, அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பிலிருந்து மட்டுமே, சிறுசிறு கட்டுரைகளாக வெளியிடுகிறார்கள். தவிர்க்கமுடியாத நிலையில், அன்னை அரவிந்தர் தத்துவங்களைப் பற்றி எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வெளியிடுவார்கள். தடிமனான புத்தகங்களை வாங்கி அன்னை அரவிந்தரைப் புரிந்துகொள்ள முயல்பவர்கள், முதலில் இந்தக் காலாண்டிதழைச் சிறிது காலம் வாங்கிப் படித்துத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது நல்லது. இந்த இதழில் வெளியாகியுள்ள அன்னையின் பொன்னெழுத்துக்களிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு:


இந்த இதழ் கடைகளில் கிடைக்காது. ஆண்டுச் சந்தா ரூ.120. email: vaikaraisri@gmail.com.  அலைபேசி:  9442787833.

சிரிப்பு

“அதென்ன அரசியல்வாதிகளுக்கு ஸ்பெஷல் சலூன்?”

“அரசியல்வாதிகள் வந்தா பொன்னாடை போர்த்தி முடிவெட்டுவாங்களாம்!”

(தமிழ் இந்து – பிப்ரவரி 7 –வெள்ளியன்று – பக்கம் 12 –எழுதியவர்: வி. சகிதா முருகன். அவருக்கு வாழ்த்துக்கள்!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

31 கருத்துகள்:

  1. பாரதி அவர்களின் இறுதி நாள் தகவல், கலைமகளின் ஆயிரமாவது இதழ், சிறப்பான சந்திப்பு தகவல் என அனைத்திற்கும் நன்றி...

    அன்னையின் பொன்னெழுத்துக்களை சேமித்துக் கொண்டேன்...

    அட...! சோட்டா பீம்...

    கலைமகள் இதழில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ஜோக் ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு


  2. உங்கள் பதிவைப் பார்த்தபின் தான் அடுத்த ரூமுக்கு சென்று
    இரண்டொரு நாட்களோ அதற்கு முன்னரோ வந்திருந்த கலைமகள் பத்திரிகையை கண்டேன். பிரித்தேன்.
    சாந்தி நிலவ வேண்டும் என்ற கதையை படித்தேன்.
    சாதரணமாக, எனக்கு கதைகளில் அவ்வளவு மனம் போவதில்லை.
    யதார்த்தத்தில் இருந்து வெகு தூரம் பயணித்த ஒரு வார்த்தை ஜாலம் என்று தான் நான் பொதுவாக கதைகள் பற்றி நினைப்பதுண்டு.

    இமயத்தலைவன் என்ற பெயரில் வெளிவந்த இரண்டாம் பரிசு பெற்ற கதை.

    ஒரு வரி கூட விடாமல், அடுத்த கணம் படித்து முடித்தேன்.

    கர்சீப் அனுப்பவும்.
    கண்கள் கசிவதை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. மாத, வாரப் பத்திரிகைகளே வாங்குவதில்லை. ஆனால் கலைமகளும், அமுதசுரபியும் படிக்கணும்னு நினைச்சுப்பேன். உங்க கதையை அதில் படிச்சால் தான் உண்டு. அல்லது நீங்க இங்கே பகிரணும். :)))

    இரண்டாம் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.

    நல்லதொரு தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  4. ரொம்பவே முயற்சி எடுத்தேன், பின்னூட்டமே வராதோனு நினைக்கையில் வந்திருக்கு. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்புகிறீர்களே! என்னுடைய பதிவுக்கு யாரிடமிருந்தும் பின்னூட்டம் வராது என்று நினைத்தீர்களா, அல்லது, பாதி சமையலில் பின்னூட்டம் இட வந்து விட்டு, சாம்பாருக்கு இரண்டுமுறை உப்பு போட நேர்ந்ததால் திகைத்து நின்று இதை எழுதினீர்களா?

      நீக்கு
    2. குழப்பமெல்லாம் எதுவும் இல்லை! :)))) உங்க பதிவில் கொடுத்த பின்னூட்டங்களெல்லாம் போகவே இல்லை! சரினு மீண்டும், மீண்டும் முயன்று பார்த்தும் வரலையேனு நினைக்கிறச்சே திடீர்னு பின்னூட்டம் வந்தது. அதுக்குத் தான் இரண்டாவது பின்னூட்டம் கொடுத்தேன்.

      நீக்கு
    3. பாதி சமையலில் எல்லாம் கணினிக்கு வர வழக்கம் இல்லை. அது தனி, இது தனி! காலை ஆகாரம் முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் உட்காருவேன். திரும்ப கணினிக்கு வரும்போது மதியம் ஒரு மணி ஆகிவிடும். அப்போத் தான் தொடர்ந்து உட்காருவேன்.

      நீக்கு
    4. மொபைலில் இருந்து பின்னூட்டம் அல்லது பதில் எழுதும்போது நானும் இதே போன்ற சங்கடத்தை அனுபவித்திருக்கிறேன். அதிலும், ஒரு வாக்கியத்தின் பாதிதான் எழுதியிருப்பேன், கை தவறி அது 'வெளியிடு' விற்குப் போய்விடும். அந்தப் பாதி வாக்கியத்தை வைத்துக்கொண்டு அந்தப் பதிவர் என்னைப் பற்றி என்ன நினைத்துகொள்வாரோ என்ற அச்சம் ஏற்படும்.

      (சாம்பார்...உப்பு..எலாம் ஒரு வேடிக்கைக்காக! தப்பாக எடுத்துக்கொள்ளவில்லையே?) அடிக்கடி வாருங்கள். நன்றி.

      நீக்கு
  5. எல்லா பகிர்வுமே அருமை! நம்ம ஊரில் அரசியல் காமேடிதானே எப்பவுமே! பெட்டி மாற்றுவதில்தான் அவர்களது குறி! அந்தப் பெட்டியில் ஓட்டுப் போடும் மக்களின் வயர்வையும், ரத்தமும், உழைப்பும் இருக்கிறது என்று அவர்கள் நினைத்தால் நல்ல ஜன நாயக, மக்களுக்காகப் பாடுபடும் நல்ல அரசியவாதி உருவாகமுடியும்! அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையே!

    பாரதியைப் பற்றிய இறுதிக்காலத்துத் தகவல் இது புதியதாகத்தான் இருந்தது,இது வரை அறிந்ததிலிருந்து!..பகிர்வுக்கு மிக்க நன்றி!

    கலைமகள் போன்று அமுத சுரபியும் கூட நல்ல தரம் வாய்ந்த ஒரு பத்திரிகை!

    சோட்டா பீம்னிஜமாகவே அனைத்து குட்டி பசங்களுக்கும் கண் அகலாமல் பார்க்க வைக்கும் ஒரு கார்ட்டூன்.....இப்படியாவது நம் அடுத்த தலைமுறைக்கு நம் இந்தியக் இதிகாச கதா பாத்திரங்கள் அறிமுகமாகின்றனவே! எந்தக் குழந்தையும் இப்போது மஹா பாரதமோ, ராமாயணமோ புத்தகமாகப் படிப்பதில்லை! பாட்டிகளும், தாத்தாக்களும் கூட குழந்தைகளுக்கு கதை சொல்லுவதாகவும் தெரியவில்லை! நமக்கு கிடைத்த நல்ல அனுபவங்கள்!

    சிரிப்பு.......நிஜமாகவே ஹாஹாஹஹ தான்!

    த.ம.

    பதிலளிநீக்கு
  6. ராஜீவ் ஈழ தமிழருக்கு நல்லது செய்ய நெனச்சரா. காங்கிரஸ் காரனே இதை சொன்னா நம்ப மாட்டார்கள்நல்ல நகைச்சுவைதான். அவர்செய்த வினைக்கு அவரே இரையானர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜீவ் காந்தி நல்ல எண்ணத்தில் தான் படை அனுப்பினார். ஆனால் கிழட்டு ஓநாய் ஜெயவர்த்தனா தன் சதி திட்டத்திற்கு அதைப் பயன்படுத்திக். கொண்டார். ரமேஷ் பண்டாரி, ராஜீவ் காந்தியிடம் தவறான தகவல்களைத் தந்து அவருக்கு அழியாப் பழியை ஏற்படுத்தி இறுதியாக அவர் தனுவால் சிதறுண்டு சாகும்படி நேரிட்டது.

      நீக்கு
  7. வணக்கம் அய்யா...

    பாரதி அவர்களின் இறுதி நாள் நிகழ்வுகள் மிகவும் அருமை...

    அரசியல் காமடி சூப்பர்...

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு

  8. பாரதியைப் பற்றி படிக்கும்போதெல்லாம் நெஞ்சுக்குள் ஏதோ குமிழ் இடுவதுபோல் தோன்றுகிறதுஅவரைப் பற்றிய செய்திகள் ஏறத்தாழ எல்லாமே பிறர் சொல்லித் தெரிவதாகவே உள்ளது. ஆனால் அவர் எழுத்துக்களைப் படித்து அவரைப் பற்றி உருவகப் படுத்திக் கொள்வதெல்லாம் ஒரு வேளை தவறாயிருக்கலாம் அவர் யார் எப்படிப்பட்டவர் எந்த சூழ்நிலையில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட கவிதைகளை எழுதி இருக்கமுடியும், அவரது கொள்கை பிடிப்புகள் என்ன என்றெல்லாம் அடிக்கடி நினைப்பதுண்டு. கடந்த செப்டம்பர் மாதம் பாரதியை நினைப்போம் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நீங்கள் அதைப்படித்ததாகத் தெரியவில்லை. சுட்டி இணைக்கிறேன் முடிந்தால்படித்துப் பாருங்கள். அதே போல் காந்தியைப் பற்றியும் அவரே எழுதி இருப்பதைப் படித்துத் தெரிந்து கொள்வதே சரியாக இருக்கும். பிறர் எழுதியதில் அவர்களுக்குத் தோன்றுவது அவர்கள் சாயமும் சேர்த்து காட்டும் ஒருவர் இறந்தபின் கியாதி பெற்றார். ஒருவர் இருக்கும்போதே போற்றப் பட்டார். நடப்பு அரசியலில் ராமன் ராவணன் அடையாளமே தெரிவதில்லை. இந்தத் தொகுப்பு ரசித்தேன்/
    gmbat1649.blogspot.in/2013/09/blog-post_11.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிவை படித்தேன். நன்றி.

      நீக்கு
    2. உங்கள் பதிவை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். எனினும், நீங்கள் சொன்னதர்காக் இன்று மீண்டும் படித்தேன். அதில் உங்களுடைய கீழ்க்கண்ட வரிகள் மறக்க முடியாதவை. எனவே அவ்வரிகளை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்:
      "பாரதியை நினைவு கூறும்போது அம் மாமனிதனின் எழுத்துக்கு அடிமையாகாமல் இருக்க முடியவில்லை. எனகொன்று தோன்றுகிறது. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை பாரதி வாழ்ந்திருந்தால் அத்தனை அல்லல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார். அப்படி ஆளாகாமல் இருந்திருந்தால் இத்தகு உயிரோட்டமுள்ள எழுத்துக்களை எழுதி இருக்க மாட்டார். பல வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டவர் உடலம் கிடத்தியபோது அவர் பெருமை அறிந்தவர்கள் யாரும் இருக்கவில்லையோ எனும் படித் தானே காடேகினார்.?

      “ காலாஉனை நான்சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
      காலருகே வாடா.! சற்றே உனை மிதிக்கிறேன்”
      என்று காலனுக்கே சவால் விட்டவனைக் காலன் யானையின் காலாக வந்து மிதித்ததுதான் அவரது வாழ்க்கையின் IRONY.!"

      நீக்கு
  9. //ஈழத்தமிழருக்கு நல்லதுசெய்யப்போய் ராஜீவும் மனிதவெடிகுண்டுக்கு இரையானார்.....! என்ன உலகம் இது!// joke?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே ராஜாவுக்கு எழுதிய பதிலைப் பார்க்கவும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. 638 ways to kill Castro என்ற தலைப்பில் ஃபீடல் காஸ்ட்ரோ தொடர்பான ஒரு குறும்படம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவு. காந்தியையும் கொல்ல சில முயற்சிகள் நடைபெற்றதாகவும் படித்துள்ளேன். இந்நிலையில் இவ்வாரப் பதிவில் அவுட்லுக் முகப்பு கட்டுரை தொடர்பான பதிவு மனதில் நின்றது.

    பதிலளிநீக்கு
  11. //பூதவுடல் நீங்கிப் புகழுடல் எய்தினார்//

    பாரதியின் கடைசித் தருணம். படிக்கையில் மனம் நெகிழ்ந்தது.
    20 பேர்களே வந்த அந்த இறுதிப் பயணம், சோகத்தை வரவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிப்ரவரி இதழ் கலைமகள் எங்களுக்குக் கிடைக்காவிடில் பரவாயில்லை; தங்களுக்காவது கிடைத்ததே!

      நீக்கு
    2. எனது இன்னொரு தளமான 'இமயத்தலைவனில்' அக்கதையை ஏற்றி இருக்கிறது. பார்க்கவும். நன்றி.

      நீக்கு
  12. பாரதி அவர்களின் இறுதி நாள் தகவல், கலைமகளின் ஆயிரமாவது இதழ், சிறப்பான சந்திப்பு தகவல் என அனைத்திற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  13. பாரதியின் இறுதிநாள் பற்றிய செய்தி, அவலத்தின் உச்சக்கட்டம்! கண்ணீர்த் துளிகளே அவருக்குக் காணிக்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஒரு மாகவிஞனும் தன் காலத்திற்குப் பிறகே அறியப்பட்டு புகழப்படுகிறான் என்பதற்கு பாரதியும் விதிவிலக்கல்லவே! தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  14. தங்கள் வருகைக்கும் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. கவிதைப் படைப்போர்க்கு கஷ்டம் மட்டுமே மிச்சம் என்பது புரிகிறது.
    சிறந்தக் கலவையானப் பதிவு.

    பதிலளிநீக்கு