திங்கள், அக்டோபர் 28, 2013

மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே – என்று கவிபாடி எச்சரித்த பிரதமர் ( ‘அபுசி-தொபசி’-8)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல் 

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர் அ(ட்)டல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள். இரண்டுமுறை பிரதமராக இருந்தவர். இக்கட்டானதொரு சூழ்நிலையில் நிச்சயமற்ற அரசியல் சதிக்கு நடுவே மகாபாரதத்தில் தருமர் மாதிரியான சமநிலையோடு 16 நாட்கள் மட்டுமே (16-5-1996 முதல் 01-6-1996 வரை)  இந்தியாவின் 11-ஆவது பிரதமராக இருந்தது முதல்தடவை. பின்னர்  19-3-1998  முதல் 22-05-2004 வரையான  6 வருடம்  64 நாட்கள் பிரதமராகி நாடுபோறும் ‘தங்க நாற்கரம்’ என்னும் நாடு தழுவிய நெடுஞ்சாலை வசதி முதலியவற்றைத் தந்தது, இரண்டாம் தடவை.

வாஜ்பாய் அவர்களின் ஹிந்திச் சொற்பொழிவைக் கேட்டால் அறிஞர் அண்ணாவின் தமிழ்ச் சொற்பொழிவைக் கேட்பதற்குச் சமம். (இதைவிட வேறு வார்த்தைகளில் அவரது பேச்சாற்றலை யாரும் வருணித்துவிட முடியாது என்பது உறுதி.) சொல்லப்போனால் அண்ணாவை விடவும் கம்பீரமான மொழிநடை அவருடையது.

இந்திராகாந்தியின் இளையமகனான சஞ்சய்காந்தி, புதுடில்லி சப்தார்ஜங் விமானதளத்தில் நிகழ்ந்த ஒரு  விபத்தில் சோகமரணம் அடைந்த சில நாட்களில் ஹைதராபாத்தில் வாஜ்பாய் அவர்களின் பேச்சை முதன்முறையாகக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிகச்சில வார்த்தைகளில் மகனை இழந்த தாயின் துக்கத்தை அவர் வருணித்தபோது கண்ணீர் விடாதவர் இல்லை. “அப்பெண்மணி அத்தகைய துயரத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் நாம் அரசியல்பேதத்தால் அவரைச் சாதாரணமாக எதிர்த்தாலும் அது அவரது வேதனையைப் பெருக்குவதாகும். எனவே, சிறிது காலம் பொறுக்கவேண்டும்” என்று தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். 1967 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோற்று, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் “கண்ணீர்த்துளிகள்” என்றும், பக்தவத்சலம் அவர்களால் “விஷக்கிருமிகள்” என்றும் குறிக்கப்பட்ட  தி.மு.க. பதவிக்கு வந்தபோது பெருந்தலைவர் காமராஜர் சொன்னாரே, “அவர்களுக்கு ஆறு மாதம் கொடுப்போம். அதுவரை விமர்சிக்கவேண்டாம்” என்று, அதுபோன்ற பெருந்தன்மையான அரசியல்மொழிகள் அவை. “இன்றுபோய் நாளை வா” என்று இராமன் இராவணனுக்குச் சொன்னமாதிரி.

தமது அரசியல் வாழ்க்கையை ஒரு பத்திரிகையாளராகவே துவக்கியவர் வாஜ்பாய். முடிந்தபோது கவிதைகளும் எழுதினார். அவற்றில் சிறந்த 51 கவிதைகளைத் தொகுத்து “எனது 51 கவிதைகள்” (மேரி இக்யாவன் கவிதாயேம்) என்ற நூலாக ஹிந்தியில் வெளியிட்டனர். அப்போது அவர் பிரதமராகவும் இருந்ததால் எல்லா மொழியிலும் போட்டிபோட்டுக்கொண்டு இந்நூலை உடனடியாக மொழிபெயர்த்தார்கள். தமிழில் பிரபல பத்திரிகையாளர் வாமனன் “வாஜ்பாய் கவிதைகள்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். 2000ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட முதல் பதிப்பு.  அதிலிருந்து சில எடுத்துக்காட்டுக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

Blades of Grass  என்று வால்ட் விட்மன் கவிதை எழுதினார். வாஜ்பாய் என்ன சொல்கிறார் தெரியுமா? நிரந்தரமான சூரியனை ரசிக்கமுடிகிறபோது, சில கணங்களே உயிர்வாழ்ந்து அச்சூரியகிரணத்தினால் மரணமடையப்போகும் பனித்துளிகளையும் ஏன் ரசிக்கக்கூடாது?

 புல்லின் இதழ்களில்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
இதோ இருந்தன
இப்போது இல்லை.

எப்போதும் நம்முடன்வரும்
இனிமைச் சுகங்கள்
என்றும் இருந்ததில்லை
எங்கும் இல்லை.

பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பிவரும் குழவிச் சூரியன்
கிழக்கின் மடியில்
தவழத் தொடங்கும் போது
என் தோட்டத்தில்
ஒவ்வொரு இலையிலும்
பொன்னொளி சுடர்விடுகிறது.

முளைத்தோங்கும் சூரியனை
எதிர்கொண்டு கும்பிடுவேனோ,
கதிர்வீச்சில் தொலைந்துபோன
பனித்துளியை தேடுவேனோ?

சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என்ன முடியாது.
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே.

கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்.
அந்தக் கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக்கூடாது?

கணத்திற்குக் கணம்
ஒவ்வொரு துளியிலும்
பரந்து கிடக்கும்
சௌந்தர்யங்களை
ஏன் பருகக்கூடாது?

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்
எல்லாப் பருவங்களிலும்
காண இயலாது.

உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கில் மருத்துவமனையில் இருந்தபோது வாஜ்பாய் எழுதிய “மரணத்தோடு மோதிவிட்டேன்” என்ற தீரமான கவிதையின் சில பகுதிகள்:

மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.

தமிழ் தெரிந்தவர்கள் இந்த நூலையும், ஹிந்தி தெரிந்தவர்கள் மூல நூலையும் படித்துப் பார்க்கலாம். சிறிய நூல் தான். எத்தனை நாடுகளில் பிரதம மந்திரிகள் இதுபோல் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள்?

புத்தகம்
ரிலையன்ஸ் அம்பானி காதலுக்கு எதிரியா?

ரிலையன்ஸ் நிறுவனர் (அமரர்) திருபாய் அம்பானி, புதுமை விரும்பி. உலகின் எந்த மூலையில் புதிய தொழில்நுட்பம் கிடைப்பினும் உடனே வாங்கிவந்து தன் தொழிற்சாலையில் செயல்பட வைப்பார். அப்படிப்பட்டவர், தனது இளைய மகன் அனில் அம்பானி ஒரு திரைப்பட நடிகையை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது என்ன செய்தார் தெரியுமா?

சென்னை, ஸிக்ஸ்த்-சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (தொலைபேசி:  044-24342771, 044-65279654)  வெளியீடான “ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை” என்ற ம.லெனின் எழுதிய, அழகிய தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூலில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது. (பக்கம் 158-159):

அனில் அம்பானி, வார்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். ரிலையன்சின் அடுத்த தலைமுறை வாரிசுகளில் சமபங்கு வகிப்பவர். இத்தனை பெரிய சிறப்பைக் கொண்ட இளைஞர் ஒருவர் திரைப்பட நடிகை ஒருவரைக் காதலிக்கிறார் என்று கேள்விப்பட்டால் ஒரு தந்தை உள்ளம் என்ன பாடுபடும்?

தொழிலில் எப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாரோ அதே போல்தான் தன் சொந்த வாழ்க்கையிலும், அனில் தனது காதல் விவகாரத்தில் ரொம்பவும் உறுதியாக இருந்தார்.

(தந்தை) அம்பானிக்கே இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லப்பட்டது. ரொம்பவும் கட்டுப்பாடுகள் நிறைந்த, பாரம்பரிய முறைகளை மதிக்கும் குடும்பம். அதிலும் இந்தியாவின் பணக்காரக் குடும்பம்.

அனிலின் நடவடிக்கைகளால் குடும்ப கெளரவம் பாதிக்கப்படக் கூடாது என்று அம்பானி நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் அனிலின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்.

(கடைசியில்) மகனின் வாழ்க்கையில் தான் குறுக்கே நிற்க வேண்டாம் என்று நினைத்திருப்பார் (போலும்). அனில் – டீனா காதல் வெற்றிகரமாகத் திருமணத்தில் முடிந்தது. டீனாவும் அம்பானிகளின் பெருமையைக் காப்பாற்றும் வகையில் ஒரு பொறுப்புள்ள குஜராத்திக் குடும்ப மருமகளாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா
‘மந்திரிகுமாரி’ படம் பற்றி...

தி.மு.க. பேச்சாளர் / எழுத்தாளர், மு.கருணாநிதி மேடை ஏற்றியிருந்த ‘மந்திரிகுமாரி’, குண்டலகேசியை அடிப்படையாகக் கொண்ட கதை. ஐந்நூறு ரூபாய் மாதச் சம்பளத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் இவரை கதை வசனகர்த்தாவாக நியமித்தார். அப்போது கருணாநிதி, ‘ராஜகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றிருந்தார். இப்படத்தில் ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடலுக்கு ஜி.கிருஷ்ணவேணி என்ற ‘ஜிக்கி’ யை அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் ஜி..ராமநாதன். இப்பாடல் அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தி ஜிக்கியை தமிழின் நிரந்தரமான திரைப்பாடகியாக ஆக்கியது.
அதே படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல், ஜி. ராமநாதன் சொன்னபடி குறிப்பிட்ட கட்டத்தில் கதையில் இடம்பெற்றது. இதை சம்பந்தப்பட்டவர்களே விரும்பவில்லை. ‘உச்சகட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை’ என்று யாரோ அதைக் கூறிவிட, டி.ஆர்.சுந்தரத்திற்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. பாடலைக் கத்தரித்துவிடலாம் என்று எண்ணத் தொடங்கினார்.

 இசை அமைப்பாளர் ராமனாதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் மிகுந்த உற்சாகத்துடன் அமைத்த பாடல் அது. உச்சக்கட்டத்திற்கு பாடல் இன்னும் மெருகூட்டுவதாக  ராமநாதன் நம்பினார். மருதகாசி எழுதிய அப்பாடலில் வரும் சிலேடைகள், காதலைக் குறிப்பதுபோலவே அமைந்து சாதலையும் அழகாகச் சுட்டின. ‘முடிவிலா மோன நிலையை, மலை முடியில் காணலாம் வாராய், புலிஎனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய், இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்’ என்றெல்லாம் இனிக்கவும் இரட்டை அர்த்தத்துடனும் பேசி பலிபீடத்திற்கு மந்திரிகுமாரியை அழைத்துச் செல்லும் நேர்த்தி தான் அழகே தவிர, மேலிருந்து தலைகுப்புற விழுவதா! கொல்லநினைத்தவனே கொல்லப்படுவதும், குறிவைக்கப்பட்டவன் குறிவைத்தவனைக் கொல்வதும் தான் உச்சக்கட்டத்தின் வெற்றித்திருப்பங்கள்.

“படம் வெளியானதும் முதல்நாள் மட்டும் இந்தப் பாடல் இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்” என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒருநாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படம் பார்த்து விட்டுச் சென்ற ரசிகர்கள் ‘வாராய் நீ வாராய்’ என்று முணுமுணுத்துக்கொண்டு சென்றார்கள். லோகநாதனின் இசை விலாசத்தை அறிவிக்கும் பாடலாக அமைந்த ‘வாராய்’ கத்தரியிடமிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.

(இசை அமைப்பாளர் அமரர் ஜி.ராமனாதனின் வாழ்க்கை வரலாறு – ‘சங்கீத சக்ரவர்த்தி ஜி.ராமனாதன்’ –வாமனன் எழுதியது- மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு 2006 – பக்கம் 192-194)

தொலைக்காட்சி
ஒரு வாரமாகச் சரியாகத் தொலைக்காட்சி பார்க்கமுடியவில்லை. எனவே இப்பகுதியை  அடுத்த வாரம் ஈடுகட்டிவிட உத்தேசம்.  மன்னித்து விடுங்கள்.

பத்திரிகை
தமிழ்நாட்டில் நான்கு பதிப்பாளர்கள் கூடினால் உடனே பேசப்படும் தலைப்பு, அரசு நூலகங்களில் புதிய புத்தகங்களுக்கு இன்னும் ஆர்டர் வரவில்லையே என்பதுதான். அரசின் கவலைகள் இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையானால், இதோ இணைத்துள்ள படத்தையும் செய்தியையும் பார்க்கலாமே!  (நன்றி- ‘தினமலர்’ சென்னை, அக்டோபர் 26, காஞ்சிபுரம் இணைப்பு)
சூணாம்பேடு ஊர்ப்புற நூலகத்தில் ‘ரேக்’குகள் இல்லாததால் புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டு உள்ளன.  
சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு கிராமத்தில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு 2400 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்க ரேக்குகள் இல்லாததால் தரையில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மழைக்காலம் தொடங்கி உள்ளதால், தரையில் கிடக்கும் நூல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:
“கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு முழுநேர நூலகம் செயல்பட்டு வந்தது. என்ன காரணத்தாலோ, இங்கிருந்த நூல்கள் வேறு நூலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. தற்போது, குறைந்தளவு புத்தகங்களுடன், ரேக்குகள் கூட இல்லாமல் செயல்பட்டு வருகிறது. நூலக கட்டடத்தில் மின்வசதியும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது”.

காஞ்சிபுரம் மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
“இந்த கட்டடம், தனியாரிடம் தானமாக பெறப்பட்டு உள்ளது. இதை கையகப்படுத்தி தர, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். கையகப்படுத்தப்பட்ட உடன், மின் இணைப்பு வசதி செய்து தரப்படும். புத்தகங்கள் அடுக்க அடுத்த வாரத்தில் ரேக்குகள் அனுப்பிவைக்கப்படும். கூடுதல் புத்தகங்களும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.”

அது சரி, இந்தப் புத்தகங்களை முதலில் வெறும் தரையில் யார் எடுத்து வைத்தார்களோ, அவர்களுக்கு உறைக்கவில்லையா, குறைந்தபட்சம் நாலு செங்கல்களை வைத்து, ஒரு தடியான காகித அட்டையின்மேல் சணல்பைகளையாவது போட்டு அதன் மேல் வைத்திருக்கலாமே! ஒரு வேளை, ‘கற்றது கைம்மண்ணளவு’ என்பதைச் சொல்லிக் காட்டுகிறார்களோ?

மூடிக்கிடக்கும் நூலகங்கள், வெறுந்தரையில் (தள்)ளாடிக்கிடக்கும் நூல்கள் என்ற உண்மைநிலைக்கு நடுவே, எந்த நம்பிக்கையில் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? பதிப்பாளர்கள் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்?

சிரிப்பு

விருப்பங்கள்- (புதுக்கவிதை -1977)

 அடுத்த வீட்டு அலமேலு
அடிக்கடி என்னைப் பார்த்துக்
கண்களால் சாடை காட்டிக்
காதல் தீயை என் நெஞ்சில் மூட்டிப்
புன்னகைப் பூக்களை உதிர்த்துப் போகணும்.

எதிர்த்த வீட்டு இராமன் மனைவி
மொட்டை மாடியில் துணிகாயப் போடும்
சாக்கில் என்னைக் கண்களால் சந்தித்து
உதட்டில் சிரிப்பை உரசிப் பார்க்கணும்.
 
அதோ அந்த ஆங்கிலோ இந்தியப்
பெண்மணி குளியல் அறைக்குள் நிற்கையிலே
என்னைப் பார்த்துக் கைகளை அசைக்கணும்.
 
என்மனைவி....என்மனைவி.....அவள்
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்றபடியே வீட்டுக்குள் கிடக்கணும்!
    - குருவிக்கரம்பை சண்முகம் (‘பூத்த வெள்ளி’-1977)

மணிவாசகர் பதிப்பகம் மே-1984 இல் வெளியிட்ட, பேராசிரியர் ஆ செகந்நாதன் தொகுத்த “நூறு பூக்கள்” என்ற புதுக்கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. பக்கம் 101.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.

14 கருத்துகள்:

  1. "வாராய் நீ வாராய்" மறக்க முடியாத பாடல்...

    கவிதைகள் மிகவும் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா, நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. 77ல் எழுதினாலும் ஆண்களின் மன நிலை இன்றும் அப்படிதான் இருக்கிறது. அது என்றும் மாறது எனபது தெரிந்த ஒன்றுதான்.


    இதே போன்று 'மரண ஹைஹூ' கவிதைகள் ஜப்பானியர்கள் எழுதுகிறார்கள். மரணப் படுக்கையில் இருக்கும் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் சாகாவரம் பெற்றது.

    பதிலளிநீக்கு
  3. /மரணத்தின் வயது இரண்டு கணங்கள் கூட இல்லை.மரணமே திருட்டுத்தனமாகப் பதுங்கிக் கொண்டு வராதே. நேரே மோதவா/ .... பதுங்கி வந்த மரணத்தை எதிர் கொண்டு தற்காலிக வெற்றி கொண்ட என் அனுபவம் பதிவாய் எழுதி இருக்கிறேன்.நீங்கள் படித்துப் பார்க்க விரும்புகிறேன்
    gmbat1649.blogspot.in/ 2011/09/blog-post_22.html ( வீழ்வேனென்று நினைத்தாயோ)
    gmbat1649.blogspot.in/2012/04/blog-post_06.html ( எண்ணிப் பார்க்கிறேன் )

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ஐயா உடனே படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பல்சுவைப் பகுதி அனைத்தும் இனித்தன!

    பதிலளிநீக்கு
  6. வாஜ்பாய் கவிதைகள் அருமை ஐயா. முதன் முறையாக அவரது கவிதைகளைப் படிக்கிறேன். தெளிவு மிக்கவர்.
    பல்சுவைப் பகுதிகள் அனைத்தும் அருமை ஐயா.
    நூலகத்தில் நூல்கள் தரையில் அடுக்கி வைக்கப் பட்டிருப்பது வேதனையாக இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே! விண்ணைத் தொடப்போகும் கருத்துக்கள் இந்த நூல்களில் இருக்கலாம். அவற்றை மண்ணோடு மண்ணாக வைப்பதா? தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. அட்டல் பிஹாரிம் அம்பானியும்

    சிறந்த படைப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பானி போலத் தாங்களும் உயர்ந்திட வாழ்த்துகிறேன், நண்பரே!

      நீக்கு