திங்கள், செப்டம்பர் 16, 2013

அபுசி-தொபசி - (2)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன தான் அமைதியை விரும்புகிறவராக இருந்தாலும், அமெரிக்காவை உண்மையில் ஆட்சி செய்பவர்களாக நம்பப்படும்  எண்ணெய்க் கம்பெனிகளும் ஆயுதக் கம்பெனிகளும் சும்மா இருக்குமா? சிரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று ஒபாமாவைச் சம்மதிக்க வைத்தன. போர் மூண்டு, எண்ணெய் விலை ஏறினால் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மேலேறும் என்பது சரித்திர உண்மை. மூன்றாவது உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில், ரஷிய அதிபர் புடின் விடுத்த எச்சரிக்கை, ஒபாமாவைப் பின்வாங்க வைத்தது. (அமெரிக்காவின் வழக்கமான ஐரோப்பிய பந்துக்களும் அவரைக் கைவிட்டுவிட்டது குறிப்பிடத் தக்கது. ஐநா சபையிலும் அவருக்கு ஆதரவு கிடைக்க வழியில்லை என்ற நிலை உறுதிப்பட்டது. அமெரிக்க மக்களும் போருக்கு ஆதரவு தரவில்லை என்பது தெளிவு.) 


சுய சிக்கல்களால் உலக அரங்கில் பத்தாண்டு காலத்திற்கு மேல் மதிப்பிழந்திருந்த ரஷியா, இதனால் மீண்டும் தன் பழைய கம்பீரத்தைப் பெற்றுவிட்டது. சிரியப் போர் தடுக்கப்பட்டு விட்டது. முதலில் எட்வர்டு ஸ்னோடென்னுக்குப் புகலிடம் கொடுத்ததன் மூலம் உலகின் நன்மதிப்பையும் அமெரிக்காவின் சீற்றத்தையும் ஒருசேரச் சம்பாதித்த புடின், சிரியப் போரை அமெரிக்கா தொடங்கவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிந்ததன் மூலம் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் தன் செல்வாக்கை நிலைப்படுத்தியுள்ளார். இன்னொரு உலகப்போரைத் தாங்கும் சக்தி அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் இல்லை என்ற ஒபாமாவுக்குத் தெரியாத உண்மை அவருக்குத் தெரிந்திருந்ததே காரணம். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டுமென்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமானதே. அமெரிக்க மக்களே இதை முழுமனதோடு ஆதரிக்கக் கூடும்.

ஆனால் ஒபாமா முதல்முறையாக அதிபரானவுடன், எல்.கே.ஜி. வகுப்பில் ‘அ’ ஒழுங்காக எழுதியதற்காகச் சிறு குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதுபோல, அவசரம் அவசரமாக,  எந்தக் காரணமும் இன்றி, அவருக்கு இதே நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டதே, அப்போதே அது தன் மரியாதையை இழந்துவிட்டதே! (ஒபாமாவே அப்பரிசைக் கிண்டல் செய்தாரே!) அத்தகைய பரிசை இப்போது ஏற்பாரா புடின்? 

ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் என்ன வித்தியாசம்? 16-9-2013 ‘அவுட்லுக்’ ஆங்கில இதழில் சுனில் வரைந்த கார்ட்டூனைப் பாருங்கள்:

 புத்தகம்
பரத்வாஜர் என்ற ஒரு முனிவர், தன்னுடைய மூன்று புருஷ ஆயுட்காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்து வேதம் பயின்றார். (ஒரு புருஷ ஆயுள் என்பது 400 ஆண்டுகள் ஆகும்.)

மானிட ஜன்மமான அவர், முதுமையடைந்து, தர்ந்து, படுத்தபடியே இருக்கிறார். இந்திரன் அவரைப் பார்க்க வருகிறான். (அதெல்லாம் அந்த யுகத்தில் சகஜம்.)

இந்திரன் அவரிடம், “பரத்வாஜரே! உமக்கு நான் நான் காவது புருஷ ஆயுளைத் தருகிறேன். அதை எப்படிச் செலவழிப்பீர்கள்?” என்று வினவ, “அதிலும் பிரம்மச்சாரியாகவே இருந்து வேதங்களை மென்மேலும் கற்பேன்” என்கிறார்.

உடனே இந்திரன், அவருக்கு எதிரிலேயே மூன்று மலைகளைப் படைத்து, ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒவ்வொரு பிடி மண்ணை  எடுத்துக் கொண்டு பரத்வாஜரிடம் காண்பித்து, “நீங்கள் இந்த 1200 ஆண்டுகளாகக் கற்றவைகள் இவைகள் தான். எதிரில் தெரியும் மலைகள் வேத மலைகள். நான் எடுத்துக் காண்பித்த மூன்றுபிடி மண் போக, எஞ்சியவை நீர் கற்க வேண்டியவைகள்” என்றார்.

வேதங்கள் முடிவு இல்லாதவை, அளவு இல்லாதவை , அவற்றை  அளக்கவும் இயலாது. இதிலிருந்து தான் “கற்றது கைம்மண் அளவு”  என்று வந்திருக்கலாம்.

நர்மதா பதிப்பகம், சென்னை (தொலைபேசி 24334397) வெளியிட்டுள்ள “ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும், பத்து உபனிஷதங்களும்-எளிய தமிழில்” என்ற 852  பக்கமுள்ள  நூலின் 39ஆவது பக்கத்தில் இடம்பெற்ற பகுதி. வடுவூர் நாரயணன் என்பவர் எழுதிய அழகான தமிழ் மொழிபெயர்ப்பு. (ஆனந்தவிகடன்-கல்கி அளவில் பெரிய பக்கங்கள்) காசுள்ளவர்களும் மனசுள்ளவர்களும் கட்டாயம் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டிய நூல். விலை ரூபாய் 650 மட்டும். முதல் பதிப்பு. மே 2008). 
உங்கள் காதலி அல்லது மனைவியின் பெயர் மந்தாகினி என்றால், நீங்கள் வீட்டில் வைக்க முடியாத புத்தகம் ஒன்று உண்டு: 330 பக்கங்கள் கொண்ட ‘புதிய தமிழ் அகராதி’ – கோலாலம்பூரிலிருந்து உமா பதிப்பகம் வெளியிட்டது (2009). ரூபாய் 130 க்கு புத்தகப் பொருட்காட்சியில் வாங்கியது. அழகிய வடிவமைப்பும் அச்சமைப்பும் பொருத்தமான அர்த்தங்களுமாக வெளியாகியிருக்கும் நல்ல நூல். ஆனால் பக்கம் 260இல் ‘மந்தாகினி’ என்ற சொல்லுக்குப் பின்வருமாறு அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன: ஆகாய கங்கை; கங்கை நதி; பால்வீதி மண்டலம்; அறுபது வயதானவள்.
சினிமா
நான் பணியாற்றி ஓய்வு பெற்ற கார்ப்பொரேஷன் வங்கியின் சென்னைக் கிளையொன்றில் ஊழியராகப் பணியாற்றுபவர், நகைச்சுவை நடிகர் மனோகர். ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் (அவற்றுக்கே உரிய அசட்டு நகைச்சுவைக் காட்சிகளில்) மும்முரமாக இருந்தவர், அதன் பரிணாம வளர்ச்சியாகத் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவருக்கு ‘காட்ஃபாதர்’ யாரும் இல்லாததால் இவருடைய முன்னேற்றம் சற்று மெதுவாகவே நடந்துகொண்டிருக்கிறது. மென்மையானவர். அதிர்ந்து பேசாதவர். நல்ல பண்பாளர். சந்தானமும் மனோகரும் இணைந்து இப்போது சில படங்களில் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. செந்தில் மாதிரி உருவத் தோற்றம் கொண்ட மனோகர், செந்தில் மாதிரியே நகைச்சுவை நடிப்பில் தனக்கென முத்திரை பதிக்கக் காத்திருப்பவர். காலம் கைகொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
தொலைக்காட்சி
வெள்ளிக்கிழமை (13-9-2013) பகல் ஒன்றேகால் மணிக்கு ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ‘தேவாமிர்தம்’ என்ற நிகழ்ச்சியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் பெருமைகளை ஒருவர் அழகான தமிழில் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். நாகை முகுந்தன் குரல் மாதிரி இருந்தது. ஆனால் கடைசியில் தான் உருவத்தைக் காட்டினார்கள் – இவர் வேறு யாரோ. பெயர் போட்டிருக்கலாமே! இல்லை.
 
“திருப்பதி மலை, மொத்தம் ஏழு மலைகளைக் கொண்டது. வேங்கடவனைத் தரிசிக்க விரும்பினால் காலால் நடந்து தான் மலையேறி வர வேண்டும். வாகனங்களில் அல்ல. மலை மீது ஏற ஏற, நமது கணக்கில் புண்ணியங்கள் படிப்படியாக ஏறுகின்றன. மலையிலிருந்து இறங்க யிறங்க நமது பாவக் கணக்கு படிப்படியாக இறங்குகிறது” என்றார் உரையாளர். அருமையான கருத்து. அவர் யாரென்று தெரிந்தால் நல்லது.

 பத்திரிகை
தமிழ்ப் பத்திரிகைகளைப் பிடித்துள்ள ‘இலவச இணைப்பு’ வியாதி எப்போது தீரும் என்று தெரியவில்லை. எந்தப் பத்திரிகைக்கு இந்த இதழுடன் எந்த இணைப்பு என்று தெரியாமல் கடைக்காரர்கள் தடுமாறுவதைப் பார்க்கிறேன். இணைப்பை வாங்கிவர  மறந்து விட்டாலோ, வீட்டிலுள்ள சட்டபூர்வமான இணைப்பு (!) உங்களை ஒருவழியாக்கிவிடுவார் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?
இந்த ஆவணி மாதம் கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளிலுமே ‘கொழுக்கட்டை’ இணைப்பு தான். உதாரணத்திற்கு: செப்டம்பர் - மஞ்சுளா ரமேஷ் சினேகிதியில் ’30 வகை கொழுக்கட்டை’ என்ற இணைப்பு வந்திருக்கிறது. பொருள்கள் விற்கும் விலையில் ஒரு கொழுக்கட்டைக்கே வினாயகர் தாளம் போடும் நிலையில், 32 வகை கொழுக்கட்டை என்றால் வயிறு பொருமத்தானே செய்யும்?

மூன்று கேள்விகள்: (1) இந்த இலவச இணைப்புகளால் பத்திரிகையின் விற்பனை கூடியதாகச் சரித்திரம் உண்டா? (2) இந்த இணைப்புகளை யார் யார் எவ்வளவு காலத்திற்குச் சேகரித்து வைக்கிறீர்கள்? (3) இந்த இணைப்புகளால் யாருக்காவது எப்போதாவது பயன் கிடைத்ததுண்டா?

சிரிப்பு
மண்ணுலகம்
திருவல்லிக்கேணியிலே செ……ஸங்கம்என்பதாக ஓர் தேச பக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, “காரியங்கள்” – ஒரு காரியமும் நடக்கவில்லைநடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சுவை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும்.

நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; ‘காலணாவின் அடியார்க்கும் அடியார்.

ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும் படியாக இருக்கும். பணத் தொண்டரடிப்பொடியாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான்.ஒருவன் நாம் இந்த ரேட்டில் இந்த விதமாகவே வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறுமாதத்தில் காற்றாய்ப் போய்விடும்என்பான். மற்றொருவன் சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார், ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறதுஎன்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன் ஆறு மாதமென்று சொல்லடாஎன்று திருத்திக் கொடுப்பான்.
 
………………… ஆழ்வார் எங்களிலே முக்கியஸ்தர், அவர் இதை எல்லாம் கேட்டுப் பரமானந்தமடைந்து கொண்டிருப்பார். ஆனால் ஒரு தேவதை அவரிடம் வந்து, “உங்களுக்கு நான் ஸ்வராஜ்யம் நாளை ஸூர்யோதத்திற்கு முன்பு சம்பாதித்துக்கொடுக்கிறேன். நீ உன் வீட்டிலிருந்து அதற்காக ஒரு வராகன் எடுத்துக் கொண்டுவாஎன்று சொல்லுமாயின், அந்த ஆழ்வார், “தேவதையே உனக்கு வந்தனம் செய்கிறேன். ஓம் சக்தியை நம: ஓம் பராயை நம: இத்யாதி; அம்பிகே, இந்த உபகாரத்துக்கு நாங்கள் உனக்கு எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறோம்? எங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் உன்னுடையதே யாகும், ஆனால், ஒரு வராகன் கேட்ட விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கேள். நீ சொல்லுகிற காரியமோ பொதுக் காரியம். அதற்குப் பொது ஜனங்கள் பணம் சேர்த்துக் கொடுப்பதே பொருத்தமுடையதாகும். நான் ஒருவன் மட்டிலும் கையிலிருந்து பணம் செலவிடுதல் பொருத்தமன்று. இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் அடுத்த வாரம் கூடப் போகிற மீட்டிங்கில் பேசித் தீர்மானம் செய்கிறோம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந்தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தே மாதரம்என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார்.
         (மகாகவி பாரதி – ‘ஞானரதம்’ என்ற நூலிலிருந்து)
******
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.

5 கருத்துகள்:

  1. நோபல் பரிசின் தரம் குறைந்துதான் போய்விட்டது ஐயா. நிச்சயம் புட்டினுக்கு வழங்கலாம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தையார் அவர்களே! நாம் விவாதிப்பது அமைதிக்கான நோபல் பரிசு பற்றி மட்டுமே. பிற துறைகளில் வழங்கப்படும் -அதாவது நீங்களும் நானும் எதிர்காலத்தில் பெறக்கூடிய வாய்ப்புள்ள--நோபல்। பரிசுகள் பற்றியல்ல. சரியா?

      நீக்கு
  2. கற்றது கைம்மண் அளவு வந்த விதம் உண்மை தான்... பத்திரிகை மட்டுமல்ல... எல்லாவற்றிக்கும் இணைப்பு இருந்தால் தான் விற்பனை எனும் நிலைமை ஆகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! இங்கு மட்டும் அல்ல அமெரிக்காவிலும் இதே நிலையைக் கண்டேன். அச்சுப் பிரதிகளின் விற்பனை கவலையூட்டும் வகையில் குறைந்து கொண்டு வருகிறது. கணினியின் தாக்கம் அத்தனை வலுவானது.

      நீக்கு
  3. அரசியலையும் எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புத்தகங்களுமே பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
    நகைச்சுவை நடிகர் திரு மனோகர் விரைவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வர வாழ்த்துக்கள்.

    பத்திரிகைகளில் இப்போது இந்த இணைப்பு ரொம்பவும் முக்கியம் என்றே தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இதழில் நான் எழுதிய மாறி வரும் புதுயுகத் திருமணங்கள் என்ற கட்டுரை வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன்.

    http://wp.me/p244Wx-zY முதல் பகுதி
    http://wp.me/p244Wx-A6 - இரண்டாம் பகுதி

    இந்த வார 'பாரதியின் சிரிப்பு' அமர்க்களம்!

    பதிலளிநீக்கு