திங்கள், செப்டம்பர் 23, 2013

தமிழ் இந்துவும் சரிதாவின் துப்பட்டாவும் (“அபுசி-தொபசி” -3)

 (“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்

சென்னை நகரில் ‘அம்மா உணவகம்’, ‘அம்மா குடிநீர்’ ஆகியவை சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. குறைந்த விலையில் உணவும் நீரும் கிடைப்பதால் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. ஆட்சி மாறினால் முன்னவர்களின் நல்ல திட்டங்கள் கூட கிடப்பில் போடப்படுவதே தமிழ்நாட்டின் தலைவிதி ஆயிற்றே!

ஆதார் அட்டை பெறுவது பற்றிய குழப்பம் தீர்ந்தபாடில்லை. இதுவரை ஆதார் அட்டை பெற்றிராதோர், தங்களிடம் பதிவு செய்துகொள்ளும்படி சென்சஸ் நிறுவனம் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டு வருகிறது. ஆதார் நிறுவனமோ தன் பாட்டுக்கு இன்னொரு விளம்பரம் வெளியிடுகிறது. TOTALLY DISJOINT ACTION. கடைசியில் எப்படியோ எல்லாரிடமும் ஆதார் அட்டை வந்து சேர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் எரிவாயுவுக்குத் தரப்படும் உதவித்தொகை கிட்டாமல் போய்விடும் அபாயம் உள்ளது. (எனக்கும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்பதை யாராவது கவனிப்பார்களா?)
 

புத்தகம்

பதிவுலகில் நன்கு அறிமுகமானவர், கவியாழி கண்ணதாசன். தனது முதல் கவிதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். “அம்மா நீ வருவாயா! அன்பை மீண்டும் தருவாயா?” என்பது தலைப்பு. 100 பக்கம். ஐம்பது ரூபாய்.   
எல்லாமே கையடக்கமான கவிதைகள். அன்பு, ஆனந்தம், காதல், நட்பு, பக்தி, பொதுநலன், சமூகம் என்ற பொதுப் பிரிவுகளில்  62 கவிதைகளை ஒரே புத்தகத்தில் அடக்கியிருப்பது பெரிய விஷயமே.

“சேலை மாற்றிச் சிவந்த முகத்துடன்
செம்பில் பாலுடன் நடந்தேன்...”
என்று தன் முதலிரவு பற்றி எழுதுகிறாள் ஒருத்தி. இவனோ,

“இதமாக நீ வருட வேண்டும்-
இளைப்பாறி நான் மகிழவேண்டும்”
என்று எதிர்பார்க்கிறான். அந்த அனுபவத்தில்,

“இமை மூடிப் பாருங்கள் – இளமையை
இனிதாக்கி மகிழுங்கள்..”
என்று உலகிற்குப் போதிக்கிறான்.

எல்லாமே ‘மென்’கவிதைகள் தாம். (சீரியசான கவிதைகளைத் தன்  இரண்டாவது புத்தகத்திற்காகச் சேகரித்து வைத்திருக்கக்கூடும் கவிஞர்.)
 
சினிமா
‘கோச்சடையான்’ என்ற தனது கிராபிக்ஸ் படத்தை அனேகமாக முடித்துவிட்டாராம் ரஜினி. அவரும் அவரது ரசிகர்களும் பெருமூச்சு விடுகிறார்கள். எல்லாம் ரஜினியின் உடல்நிலை பற்றிய கவலை தான். அத்துடன் அடுத்த வருடம் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலும் கவலையைக் கிளப்பியிருக்கிறது. ராஜினியின் ஆதரவைப் பெற்றுவிட்டால் நல்லது என்று ஒவ்வொரு பெரிய கட்சியும் FEELER களை அனுப்பிக்கொண்டிருக்கிறனவாம். எனக்கென்னவோ வழக்கம்போல் ரஜினி வழவழா-கொழகொழா என்று தான் முடிவெடுப்பார் என்று தோன்றுகிறது. அதனால் யாருக்குமே லாபமில்லாமல் போவதுடன், அவருடைய படங்களின் ஓட்டமும் தள்ளாடிவிடக்கூடும். ஜெய் பாபா!

தொலைக்காட்சி
வெளிநாடு போகும் அப்பாவைக் கடைசி மணிகளில் கெடுபிடி செய்து புதிய சைக்கிள் வாங்கிக் கொண்டதில் பேரனிடமிருந்து டிவி ரிமோட்டுக்குத் தற்காலிக விடுதலை கிடைத்த அதிர்ஷ்டமான நேரம். Star Worldஇல் One Tree Hill என்ற சீரியல் திடீரென்று பார்க்கக் கிடைத்தது. யூடியூபில் தேடினதில் அரதப் பழசான சீரியலாம். அதனாலென்ன? கண்ணைக் குளமாக்க வைக்கும் எபிசோட் அல்லவா நான் பார்த்தது?

பாட்டி தன் மூன்று வயதுப் பேரனுக்குப் பழைய ஆல்பம் ஒன்றைக் காட்டுகிறாள். ஒவ்வொரு படத்திலும் இருப்பவர்களை விவரிக்கிறாள். தாத்தாவின் படத்தைக் காட்டுகிறாள். ‘தாத்தா உன்னை எப்படியெல்லாம் நேசித்தார் தெரியுமா’ என் கிறாள். ‘நீ ரொம்பச் சின்னக் குழந்தை, அவர் சாகும் போது. அதனால் அவரை உனக்கு ஞாபகம் இருக்க வழியில்லை’ என்கிறாள். சாவு என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. ‘என்னையும் ஒருநாள் இதேபோல் போட்டோவில் நீ பார்க்கப் போகிறாய்’ என்கிறாள். தன்னை மறந்து வந்து விட்ட வார்த்தைகள். அவளுக்குக் கடைசிகட்டப் புற்றுநோய் இருப்பது அவனுக்குத் தெரியவேண்டிய நேரமல்ல அது. என்ன செய்வது? சொல்லியாகிவிட்ட்து. ‘நீ இறந்து போய்விடுவாயா?’ என்று மீண்டும் கேட்கிறான். தன் அம்மாவிடம் போய், ‘பாட்டி இறக்கக் கூடாது. அதில் எனக்கு விருப்பமில்லை’ என்கிறான். அதைச் சொல்லும்போது அக்குழந்தையின் நடிப்பு எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது தெரியுமா! (நம்முடைய பேரன் பேத்திகளும் இப்படித்தான் நம் மரணத்தைப் பற்றி யோசிப்பார்களோ?)

பத்திரிகை

தினமலர் இணைப்பாக வரும் ‘ஏரியா செய்திகள்’ 21-9-2013 காஞ்சிபுரம் இணைப்பில் ‘ஈயம் பூசுவோர்’ பற்றிய வருத்தமான தகவல் வந்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகள் முன்பு கூட சென்னை நகரின் பல தெருக்களில் ஈயம் பூசுவோரின் துருத்தி அடுப்பு புகைவதைப் பார்க்க முடிந்தது. வீட்டில் விசேஷம் என்றால் முதல் காரியம், அண்டா குண்டா சாமான் களுக்கு ஈயம் பூசுவதுதான். இது பற்றிய கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையும் பிரபலமானது தான். இப்போதோ எவர்சில்வர் பாத்திரங்களும் பீங்கான் பாத்திரங்களும் மைக்ரவேவ்-அவனில் வைக்கும்தரமான பிளாஸ்டிக் டப்பாக்களும் வந்துவிட்டதால், நம் குழந்தைகளுக்கு ஈயம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. நாகரிக மாற்றத்தால், ஏழைகள் கூட ஈயம் பூசிய பாத்திரங்களை விரும்புவதில்லை என்பதால் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் படத்தில் ஈயம் பூசிக்கொண்டிருக்கும் பாட்சா.

 


 
135 வருடங்களாக ஆங்கிலத்தில் வரும் ‘தி இந்து’ அதே பெயரில் தமிழிலும் வருகிறது, செப்டம்பர் 15 முதல். இந்துவின் பாரம்பரியமான தெளிவான அச்சும், கண்ணை உறுத்தாத வடிவமைப்பும், புதியதொரு எழுத்துருவும் தமிழ்ப் பதிப்பிலும் காணக்கிடைக்கிறது.

புதிய பகுதிகள் நாள்தோறும் சேர்க்கப்பட்டுவருகின்றன. முக்கியமாக ‘குறுக்கெழுத்து’. தினமலர் வாரப்பதிப்பில் மட்டுமே தொடர்ந்து வரும் அறிவுக்கு விருந்தான இப்பகுதி, இப்போது தமிழ் இந்துவில் இடம் பெறுவது நிச்சயமாக அதற்கெனவே காத்திருந்த என்போன்ற வாசகர்களுக்கு இனிப்பான செய்தியாகும். ஞாயிறு மலரும் வித்தியாசமாக இருக்கிறது. பொருளாதாரச் செய்திகளுக்கென்றே  ‘பிஸினஸ்லைன் பக்கம்’ என்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கும் முக்கிய இடம் அளிக்கபடுகிறது. ஆனால் இளைஞர்களுக்கான அம்சங்கள் அதிகம் தேவைப்படும் என்பது தெளிவு.

ஆங்கில இந்துவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. (ஆனால் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிக அளவில் (OF A MORE-THAN-DESESERVING MAGNITUDE)  பிரசுரமாகும்.) தமிழ் இந்துவிலாவது இன்னிலைமை மாற வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.   

சிரிப்பு



பட்டுக்கோட்டை பிரபாகருடன் ‘ஊஞ்சல்’ பத்திரிகையில் பணியாற்றிய பாலகணேஷ், ‘மின்னல் வரிகள்’ என்னும் வலைத்தளத்தில் எழுதிவருபவர். அவர் மனைவி பெயர் சரிதா. அந்த மனவியைப் பற்றிய புராணம்தான் ‘சரிதாயணம்’. (இராமனைப் பற்றியது ‘இராமாயணம்’ என்பது போல்.) 104 பக்கங்களில் அழகான வடிவமைப்பும் ஒவியங்களும் கொண்ட 13 நகைச்சுவைக் கட்டுரைகள் (அல்லது கதைகள்?) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அறுபது ரூபாய் கொடுத்துவிட்டு  மீதிச் சில்லறை கேட்காமல் இருந்தால் கே.கே.நகரில் டிஸ்கவரி புக் பேலஸில் இந்த நூலைப் பெறலாம்.

பாத்திரங்கள் அடிக்கடி ‘ங்கே’ என்று விழிக்கிறார்கள். எல்லாமே சுவையான அனுபவங்கள். ஆனால் தன்னை இவ்வளவுதூரம் மட்டம்தட்டுவதை அந்த அம்மையார் எப்படி அனுமதிக்கிறார் என்பது MILLION DOLLAAR QUESTION.  இது அந்தக் கால நகைச்சுவை எழுத்தாளர் ‘நாடோடி’யின் பாணி. போகட்டும், கணவனும் மனைவியும் சொல்லிவைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்கள் போலும். எப்படியோ ஒரு நல்ல நூலைப் படித்த அனுபவம் நமக்குக் கிட்டிவிடுகிறது. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சி:

ஹோட்டலைவிட்டு வெளியே வந்ததும் வாசலில் இருந்த பீடாஸ்டாலில் பீடா வாங்கி இருவரும் போட்டோம். காரில் அவள் பின்சீட்டில் அமர்ந்ததும், கதவைச் சாத்திவிட்டு முன்புறம் வந்து டிரைவிங்க் சீட்டில் அமர்ந்தேன்.

“என்னங்க... துப்பட்டா...” என்றாள் சரிதா.

“ஹோட்டல் செக்யூரிட்டி திட்டுவான்மா. காம்பவுண்டு தாண்டினதும் ரோட்டோரமா நிறுத்தறேன். ஜன்னலை இறக்கிட்டுத் துப்பு” என்றேன்.

“அதில்லீங்க...கார்க் கதவுல துப்பட்டா...”

“கதவு நாறிப் போயிடும் சரிதா. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாதா? ஏன் உன் புத்தி இப்படிப் போகுது?” சற்றுக் கோபமாகவே கேட்டேன்.

“ஐயோ என் அறிவே...கார்க் கதவுல துப்பட்டா மாட்டிக்கிச்சின்னு என்னை முழுசாச் சொல்ல விட்டாதானே...” என்றாள்.

அம்மையார் சொன்னது DHUPPATTAA, ஐயா புரிந்துகொண்டது  THUPPATTAA.என்ன செய்வது, தமிழில் DHA வுக்கும் THA வுக்கும் வேவ்வேறு எழுத்துக்கள் இல்லையே!

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.

19 கருத்துகள்:

  1. சக பதிவர்களின் புத்தக விமர்சனம் மனதிற்கு சந்தோசம் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. 'அம்மா குடிநீர்' என்று பாட்டில்களில் வழங்குவது நல்ல திட்டம்தான் சார். ஆனால் அதன் பயன் 'குடி' மகன்களுக்கே சென்று சேராமல் பொதுமக்களை அடையும்படி அரசு பார்த்துக் கொண்டால் நல்லது என்பது எனது எண்ணம்.

    தி இந்து இன்னும் கொஞ்சநாளில் தமிழ் தினசரிகளில் உயர்ந்த இடத்தை எட்டி விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்புறம்...

    'சரிதாயணம்' பற்றி இங்கே கிடைத்த அறிமுகம் மிகமிக மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! நகைச்சுவைக் கதைகள் எனில் மற்றவரைக் கலாய்ப்பதைவிட (திட்டு/உதை வாங்குவதைவிட) மனைவி, மைத்துனன் உள்ளிட்ட சொந்தக் குடும்பத்தைக் கலாய்த்தல் சாலச் சிறந்தது (ஏன் மனைவி, மைத்துனனை கலாய்ப்பவர்கள், அம்மா, தம்பியைக் கலாய்ப்பதில்லை என்ற இன்னொரு மில்லியன் டாலர் கொஸ்டினுக்கு நோ ஆன்ஸர்) என்பது தொன்றுதொட்ட நடைமுறை. சக்ஸஸ் ஃபார்முலாவும்கூட. அதுவே எனதும்.

    பதிலளிநீக்கு
  3. அபுசிதொபுசி
    அத்தனையும்மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் பதிவர்களின் புத்தக அறிமுகம் நன்றாக இருக்கிறது. திரு கணேஷ் அவர்களின் புத்தகத்தைப் படித்து சிரித்து மகிழ்ந்திருக்கிறேன். கவியாழி அவர்களின் கவிதைகளை அவரது தளத்தில் படித்து வருகிறேன். இருவருக்கும் பாராட்டுக்கள்.

    தொலைக்காட்சியில் சில சமயங்களில் நல்ல படங்கள் வருகின்றன - நமக்கு அதிர்ஷ்டம் உண்டென்றால் பார்க்க முடியும்!

    ஈயம் பூசுகிறவர்களின் நிலைமை பாவம் தான்.

    இந்து தமிழ் செய்தித்தாள் விரைவில் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. ஈயத்தைபார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியை விளக்கக்கூட இந்த தலைமுறையில் ஈயம் பூசுதல் வழக்கொழிந்திருக்கிறதே..!

    காலமாற்றம் தான்..!

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. பேங்கிலுருந்து ஆதார் எண் தரும்படி sms வேண்டுகோள் விடுக்கிறார்கள். பதிவு செய்த பல பேருக்கும் அட்டை கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. டைட்டில் புகைப்படத்தின் மேலே டபுள் இமேஜ் கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. சார், வெகு அபாராம். எழுத்து மிக எளிதாக துள்ளி குதித்துக் கொண்டு ஓடி வருகிறது. வித்தியாசமன பதிவுகள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  10. மான்யங்களுக்கு ஆதார் கார்ட் கட்டாயப் படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்வதாகச் செய்தி. அண்மையில் மின்னல் வரிகள் கணேஷின் பதிவில் இன்னொரு வார்த்தை சிலம்பம் ஏசிப்போடு A/C போடு ஏசிப்போடு= திட்டுவது. அபுசி தொபசி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. பதிவுலக நண்பர் கவியாழி கண்ணதாசன் மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகின்றேன். நன்றி

    பதிலளிநீக்கு

  12. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. பலவாறான செய்திகளைத் தாங்கள் கூர்ந்து நோக்கி எழுதும் விதம் மனதில் பதியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. கதம்பம் அருமை. இந்தப் பாணியைத் தொடரலாம். (நான் தொடராமல் விட்டு விட்டது !)

    பதிலளிநீக்கு
  15. டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! ஷாஜகான் அவர்களே! தங்கள் வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் அருமை அய்யா. படித்து ரசித்தேன். தங்களைப் போன்றவர்களின் வலைப்பக்கம் வருவதே மகிழ்ச்சியாக உள்ளது,. வருகை தொடரும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  17. கவிஞர் கனையாழி கண்ணதாசன் அவர்களின் புத்தக விமர்சனம் மகிழ்ச்சியளிக்கிறது. சக பதிவரின் படைப்பிற்கு விமர்சனம் பாராட்டுக்குரியது. நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி, பாண்டியன் அவர்களே! எனக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு எழுதி வருகிறேன். குறைகள் குறைவாகவும் நிறைகள் மிகுதியாகவும் இருக்குமாறு அன்றாடம் என்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறேன். தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன.

    பதிலளிநீக்கு