சனி, ஜூலை 06, 2013

எழுத்தாளருக்குத் தூக்கு!
எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்ததால்!!

பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (2)

நைஜீரியாவில் ‘ஷெல்’(SHELL)லின் சாகசங்கள்
இயற்கை தன் வளங்களையெல்லாம் பூமிக்கடியிலும் கடலுக்கடியிலும் புதைத்து வைத்திருக்கிறது. தங்கமாகவும், வைரமாகவும், இரும்பாகவும், பெட் ரோலிய எண்ணெயாகவும் ஒளிந்து கிடக்கும்  இவற்றை யாரும் எளிதில்  திறந்து பார்த்துக் களவாடிவிடக்கூடாது என்னும் கருத்தில் தானோ என்னவோ தொழில்நுட்ப அறிவு, பொருள்வளம், மானிடத்திறமை போன்ற வசதிகள் இல்லாத ஏழை நாடுகளுக்கே இவற்றை பெரும்பாலும் வழங்கியிருக்கிறது. மத்திய கிழக்காகட்டும், ஆஃப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளாகட்டும் இத்தகைய PARADOX OF PLENTY என்னும் சிக்கலில் வீழ்ந்திருக்கின்றன. தங்கள் நாட்டு வளங்களை வெளியில் எடுத்துத் தங்களுக்குப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவும் பிறநாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
கென் சாரோ விவா 
பெரும்பாலும் இந்நாடுகள், குடியரசோ, அல்லது நேர்மையான சர்வாதிகாரமோ இல்லாத நாடுகளாக அமைந்தது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகுந்த சாதகமாயிற்று. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிலரையோ, அல்லது ஓர் அரச குடும்பத்தையோ திருப்திப்படுத்தினால்
போதும் என்பதால், ஜனநாயக நாடுகளை விட இந்நாடுகளே அவற்றிற்கு முன்னுரிமையான ஆடுகளமானது. பல சந்தர்ப்பங்களில் இவை தங்களுக்குச் சாதகமான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குப் பணபலத்தையும் சூழ்ச்சித் திறனையும் வெளிப்படுத்துவதுண்டு. அவற்றின் தாய்நாடுகளும் இவை புரியும் எந்தவொரு தீச்செயலுக்கும் திரைமறைவில் நின்று துணைபுரியும். எனவே, வளரும் நாடுகளுக்குள் புதைந்திருக்கும் இயற்கை வளமானது, வரமல்ல, சாபமே என்று எண்ண வேண்டியிருக்கிறது.

அந்நாளில் கிழக்கிந்தியக் கம்பெனி எப்படி இந்தியாவை ஆளும் திறன் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத திறம் இப்பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு உண்டு என்பதை அண்மைக்கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
ஏழை நாடான நைஜீரியாவில் அமெரிக்காவின் வல்லமை வாய்ந்த எண்ணெய் நிறுவனமான ‘ஷெல்’ இப்படித் தன்னிச்சையாகச் செயல்பட்ட போது. அக்கம்பெனியை எதிர்த்துப் போராடியதற்காக ஒரு புரட்சி எழுத்தாளர் தூக்கில் தொங்க வேண்டி வந்த வேதனையை இன்று காணலாம். அவர் பெயர், கென் சாரோ-விவா.

சாரோ விவா வின் முழுப்பெயர், கென்யூல் பீசன் சாரோ விவா. (Kenule  Beeson Saro Wiwa) ஆகும். 1941ல் பிறந்தவர். நைஜீரியாவின் ஒகோனி (Ogoni) என்ற வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்கள் வாழும் பகுதிக்கு ஒகோனிலேண்டு என்றே பெயர். பல்வேறு இனங்கள் ஆக்ரோஷத்துடன் வாழும் நைஜீரியாவில் இந்த ஒகோனிகள் சிறுபான்மையினராவர். நைஜர் நதியின் வண்டல்பூமியான  ஒகோனிலேண்டில் தான் பிரபலமான அமெரிக்க எண்ணெய் நிறுவனம்  ‘ஷெல்’ (Royal Dutch Shell) எண்ணெய் தோண்டும் உரிமை பெற்றிருந்தது.
தான் பிறந்த பத்தாம் ஆண்டு முதலே ஷெல் தனது ஊரில் இயங்கிவந்ததௌ சாரொ-விவாவுக்குத் தெரியும். அவர் வளர வளர, எண்ணெய் துரப்பணப் பணிகளால் ஒகோனிலேண்டின் இயற்கைச் சூழ்னிலை முற்றிலும் மாசுபட்டுப் போனதை உணர்ந்தார். எங்கு நோக்கினாலும் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணும் மாசுபடிந்த கழிவுகளும் தான். வண்டல் மண்ணின் வளம் போய் நிலமனைத்தும் வறண்ட மண்ணாகி விட்டது. நதி மாசுபட்டதுடன், மற்ற நீர் ஆதாரங்களும் மாசுபட்டதால் தூய குடிநீர் என்பது கனவாகிப்போனது.

சாரோ-விவா எழுத்தாளர், மட்டுமன்றி, தொலைக்காட்சிப் படங்களும் தயாரிப்பவர். ‘கோல்ட்மேன்’ விருது பெற்ற சுற்றுச்சூழல் போராளி. ஆரம்பத்தில் தனது மானிலத்தை அழிவிலிருந்து காக்கும் எளிய போராளியாகக் கிளம்பியவர், காலத்தின் கட்டாயத்தால் அதற்கெனவே தோற்றுவிக்கப்பட்ட ‘மொசாப்’ (Movement for the Survival of the Ogoni People (MOSOP) என்னும் ‘ஒகோனி மக்கள் பாதுகாப்பு இயக்க’த்தின்  தலைவராகவும் ஆனார்.  ‘மொசாப்’ சார்பாக அகிம்சை வழியில் மக்களை அணிவகுத்துப் போராடினார்.
இந்தப் போராட்டத்திற்கு இரண்டு போர்முனைகள் இருந்தன. ஒன்று, ஷெல் என்னும் பன்னாட்டு எண்ணெய்க் கம்பெனி. இன்னொன்று, இத்தகைய கம்பெனிகளின் போக்கைக் கட்டுப்படுத்தும் திறனற்று, அவற்றின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்திருந்த நைஜீரிய சர்வாதிகார அரசு.

காந்தி வழியில் நடைபெற்ற இப்போராட்டத்தின் உச்சகட்டத்தில் சாரோ-விவா கைது செய்யப்பட்டார். நைஜீரிய ராணுவத்தை எதிர்த்துப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவசரமாகக் கூடிய ராணுவ கோர்ட்டால் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இதற்குக் காரணமான சர்வாதிகாரியின் பெயர், ஜெனரல் சநி அபாஷா (General Sani Abacha).

திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட இத்தூக்கு தண்டனையை உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்ததன் விளைவாக ‘காமன்வெல்த்’ திலிருந்து மூன்றாண்டுகளுக்கு நைஜீரியா விலக்கி வைக்கப்பட்டது. ஆனால் எண்ணெய்க் கம்பெனிகளின் சுரண்டலும் அதன் விளைவான மனித உரிமைகள் மீறலும் சிறிதளவும் குறையவில்லை.
****
நைஜீரியாவின் சரித்திரம், ஏனைய ஆஃப்ரிக்க நாடுகளின் சரித்திரத்திலிருந்து சற்றும் வேறு பட்டதல்ல. (இனக்குழுக்களின் போராட்டங்களும், ராணுவ தளபதிகளின் ஆட்சியும், வெளிநாட்டுப் பணம் விளையாடுதலும், கண்ணாமூச்சி தேர்தல்களும் என்று).

1970ல் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள்  தமக்குள் ஓர் சங்கத்தை நிறுவிக்கொண்டு (OPEC) கச்சா எண்ணெயின்  விலையைக் கண்டபடி ஏற்றி, உலகையே நடுங்கவைத்தன அல்லவா, அப்போது அந்தக் கும்பலில் தன்னையும் இணைத்துக்கொண்டது நைஜீரியா. அபரிமிதமான எண்ணெய் உற்பத்தியால் நிதிவெள்ளம் புரண்டது. ஆனால் அனைத்தும் ஆளும் கும்பலுக்கே போனது. அவர்களிடமிருந்து வெளி நாட்டு வங்கிகளில் தனி நபர்கள் பெயரில் அடைக்கலமானது. உள்நாட்டிலோ சோற்றுக்கும் நீருக்கும் லாட்டரி அடித்தனர் மக்கள்.

எண்ணெய் தரும் வருமானம் தவிர வேறு இல்லாததால், வெளிச்சந்தையில் விலை குறையும்போதெல்லாம் நாட்டின் நிதி நிலைமை ஊசலாடியது. வருமானத்தின் பெரும்பகுதி ஆட்சியாளரின் கைக்கும் ராணுவ ஜெனெரல்களுக்குக் கையூட்டாகவும் போனதால், உள்கட்டமைப்புக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ வழியில்லாமல் நாடு வறுமையின் உச்சத்திற்கே போக நேர்ந்தது.

1979ல் தேர்தல் நடந்து குடியாட்சி ஏற்பட்டது என்றாலும், ஊழல் மிகுந்திருந்த காரணத்தால், 1984ல் முகமது புகாரி என்ற ராணுவத் தலைவர் ஆட்சியைக் கைப்பற்றினார். இதை மக்களும் வரவேற்றனர். ஆனால் இவரது ஆட்சியும் ஊழல்  மிகுந்ததாகவே இருந்ததால் அடுத்த ஆண்டில் இன்னொரு ராணுவத்தலைவரால் இவர் தூக்கி எறியப்பட்டார். அப்படிப் பதவிக்கு வந்தவர் தான், இப்ராகிம் பபாங்கிடா (Babangida).

1985ல் இவர் பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் தன்னை ஜனாதிபதியாகவும் அனைத்துப் படைகளின் தலைவராகவும் அறிவித்துக்கொண்டது தான். இதனால் ராணுவத்தில் எவரும் தன்னை எதிர்த்து புரட்சி செய்யமுடியாதபடி பார்த்துக்கொண்டார்.  ஐ.எம்.எஃப்.-ன் கடனுதவி பெற்று நாட்டின் நிதி நிலையைச் சீராக்க முயன்றது இவரின் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளோடு சேர்ந்து கொண்டு தன் நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது உள்நாட்டில் அமைதியின்மை ஏற்படக் காரணமானதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நைஜீரியாவில் லஞ்ச ஊழலை நிறுவனமாக்கிய பெருமை, பபாங்கிடாவையே சாரும்.

பதவியேற்றவுடன் இவர் அளித்த வாக்குறுதியான ‘1990க்குள் தேர்தல் நடத்துவது’ நிறைவேறுவதற்குள், இவரை எதிர்த்து ராணுவத்தினர் புரட்சி செய்தனர். அதை ஒருவழியாக அடக்கியவர், இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தேர்தலை ஒத்திப்போட்டார். 1993ல் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இத்தேர்தலில் வென்றவர், இவருக்கு வேண்டாதவரான மஷூத் அபியொலா  (Moshood  Abiola) என்பவர். இதனால், தேர்தலே செல்லாது என்றார் பபாங்கிடா. நாட்டு மக்கள் விடுவார்களா? தொடர் போராட்டத்தால் நாடே அசைவற்றுப்போனது. எனவே வேறு வழியின்றி தன் ஆதரவாளரான எர்னஸ்ட் ஷானக்கன் (Shonekan)  என்பவரைத் தற்காலிக ஆட்சியாளராக்கி விட்டுப் பதவி விலகினார் பபாங்கிடா.

ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே இவரது பதவி பறிபோனது. வழக்கம்போல இன்னொரு ராணுவ அதிகாரி யான சநி அபாஷா கடுமையான புரட்சி செய்து சர்வாதிகாரியானர்.(1993). மக்கள் புரட்சிகளை இரும்புக்கரம் கோண்டு அடக்கினார். அரசின் வருமானத்தை அயல்நாட்டு வங்கிகளில் தன் பெயரில் பதுக்கினார். தன்னை எதிர்த்துவிடாதபடிக்கு மற்ற ராணுவ அதிகாரிகளுக்கு ‘மாமூல்’ கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த சாரொ-விவாவைத் தூக்கில் போட்டவரான அபாஷா, கடைசியில் 1998ம் வருடம், விவரம் தெரியாத முறையில் பிணமாகிப்போனார். 1999 முதல் நாட்டில் மக்களாட்சி அமுலுக்கு வந்தது.
****  
இனி சாரோ-விவாவின் வாழ்க்கையைச் சற்று பார்ப்போமா?


ஒகோனி இனத் தலைவர்  ஒருவரின் மகனாகப் பிறந்த விவா, நைஜீரியாவின் ‘இபதான்’ (IBADAN) பல்கலைகழகத்தில் பயின்றவர். சிறந்த மாணவருக்கான உதவித்தொகை பெற்றார். நாட்டின் தலைநகரில் இருந்த ‘லாகோஸ்'(LAGOS) பல்கலைகழகத்தில் ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆனால் விரைவிலேயே அதிலிருந்து (மாவட்ட ஆட்சியாளர் போன்ற) அரசாங்கப் பதவிக்கு மாறினார்.

 

1970ல் மானில கல்வித்துறை கமிஷனராகவும் பணியாற்றினார் விவா. ஆனால் அவரது போராட்டங்கள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அதன் பிறகு முழுநேர எழுத்தாளராகவும் போராளியாகவும் ஆனார் அவர்.
 
தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்திய காலம் இது. “Sozaboy: A Novel in Rotten Englishஎன்ற நாவல் புகழ் பெற்றது.   ‘சோல்ஜர்’ என்பதைக் குறிக்கும் கொச்சை மொழியாக Soza” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ராணுவத்தில் பயிற்சி-டிரைவராக சேரும் ஓர் இளைஞனின் கதை இது. பேச்சு வழக்குக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நைஜீரிய இலக்கியம் இது என்கிறார்கள். (அமேஸானில் கிடைக்கும்).
 
 இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி நடக்கும் போர்களில் ஒரு சமயம் இப்பக்கமும் மறு சமயம் அப்பக்கமும் போரிடவேண்டி வருவதன் நியாயம் புரியாமல் திகைக்கிறான் கதாநாயகன். வியாபாரிகள், அரசியல்வாதிகள், ராணுவம் இம்மூவரின் கைப்பாவைகளாகத்தான் சோல்ஜர்கள் இருக்கிறார்கள் என்று உணர்கிறான். இவ்வளவு மோசமான உலகத்தில் எதற்காக இன்னும் மக்களைப் பெற்றுப்போட்டுகொண்டே இருக்கிறார்கள் என்று கேட்கிறான். ராணுவத்திலிருந்து விலகி வருகிறான். ஆனால் அவனுக்கு வேண்டிய எதுவும் அங்கில்லை. வேண்டியவர்களும் இல்லை. எல்லாம் அழிவு தான். எல்லாவற்றிற்கும் காரணம் போர். ராணுவம். சோல்ஜர்கள்.

“என்னை மட்டும் மறுபடியும் ‘ஸோசா’ வுக்குப் போ என்றால் நான் எங்காவது ஓடி, ஓடி, ஓடி, ஓடி, ஓடிப் போய் விடுவேன்” என்று கதையை முடிக்கிறான் நாயகன்.

On a Darkling Plain,     “A Forest of Flowers” என்பவை அவருடைய மற்றும் இரு  புகழ்பெற்ற நூல்கள்.

“Basi & Company” என்ற தொலைக்காட்சித் தொடர் அவருடையது. (யூ-ட்யூபில் கிடைக்கிறது.) மூன்று கோடி  நைஜீரிய மக்கள் இதைக் கண்டு இரசித்தார்களாம் என்றால் விவாவின் புகழுக்கு வேறென்ன வேண்டும்?

இத்தகைய பின்னணியில்  மக்கள் மன்றத்தில் பெரும் சக்தியாக விளங்கினார் விவா. எனவே, ஒகோனிலேண்டிலிருந்து எண்ணெய்க் கம்பெனிகளை வெளியேற்ற அவர் தொடங்கிய அகிம்சைவழி போராட்டத்திற்கு  எப்படிப்பட்ட ஆதரவு இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

விசித்திரம் என்னவென்றால், பபாங்கிடா சர்வாதிகாரி ஆனவுடன் அவரிடமே ஒரு பதவிக்கு அமர்த்தப்பட்டார் விவா. ஆனால் மிகச் சிறு காலமே அதில் இருந்தார். பபாங்கிடா வின் கையிலிருந்து ஜனநாயகம் மீட்கப்படாது என்று உறுதியாகத் தெரிந்தவுடன், அவரைப் பகைத்துக்
கொண்டு வெளியேறினார். அதன் பிரகு அதிபரானவர், அபாஷா.

‘மொசாப்’ (Movement for the Survival of the Ogoni People (MOSOP)  இயக்க’த்தின்  தலைவராக ஆனார், விவா (1990). இவ்வியக்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் மூன்று: (1) ஒகோனி மக்களுக்கு அதிகப்படியான மானில சுயாட்சி வேண்டும் (2) ஒகோனி பகுதியில் எடுக்கப்படும் எண்ணெயின் அளவைப் பொறுத்து அம்மானிலத்திற்கு வருவாயில் சரியான பங்கு தரவேண்டும் (3) சொந்த நிலங்களை எண்ணெய்க் கம்பெனி (ஷெல்) வீணாக்கிக் களர் நிலமாக்கியதற்கும், சுற்றுச்சூழல் மாசுபட்டதற்கும் நியாயமான இழப்பீடு தரவேண்டும்.

ஆனால் சர்வாதிகாரம் இதை ஏற்குமா? விவா கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். வெளிவந்தவுடன் மொசாப் சார்பில் ஒகோனி மக்களைப் பெரிய அளவில் ஒருங்கிணைத்து மாபெரும் அமைதி ஊர்வலம் நடத்தினார். மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒகோனி மானிலம் முழுவதும் ராணுவத்தின் வசம் வந்தது. சில மாதங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் தனது ஒகோனி மானிலத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ந்நிலையில், ஒகோனி இனத்தை சேர்ந்த நான்கு தலைவர்கள் தங்களுக்குள் இருந்த இன்னொரு குழுவால் கொல்லப்பட்டார்கள். இதற்கும் விவாவுக்கும் சம்பந்தம் கிடையாது என்றாலும் அவர் கைது செய்யப்பட்டார். அவசரமாகக் கூடிய அதிபர் அபாஷாவின் ராணுவ கோர்ட்டு இவருக்கும் இன்னும் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்தது.

உலக நாடுகள் இதைக் கண்டனம் செய்தன. அதிபர் அபஷாவிடம் மிகுந்த "நட்புறவு"  கொண்டிருந்த ஷெல் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்களது தணடனையை ரத்து செய்யவோ  குறைக்கவோ முயல வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஷெல் நிறுவனமோ இப்படியொரு அறிக்கை வெளியிட்டதுடன் நிறுத்திக்கொண்டது: “ஷெல் போன்ற வணிக நிறுவனங்கள் எக்காரணத்தை முன்னிட்டும், ஒரு நாட்டின் சட்ட நடைமுறைகளில் தலையீடு செய்ய முடியாது; செய்யவும் கூடாது”.

எனவே விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்பட்டது. தமது கூட்டாளிகள் எட்டு பேரையும் தூக்கில் போடுவதை விவா தன் கண்ணால்  பார்த்து கலங்கவேண்டும், அதன் பிறகே அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று கட்டளையாம். அதனால் அவருக்குக் கடைசியாகத்தான் தூக்கு விழுந்தது. (1995 நவம்பர் 10ம் தேதி).

விவாவின் கம்பீரமான ஆனால் அகிம்சை ததும்பும் உருக்கமான கடைசி பேட்டி யூட்யூபில் கிடைக்கிறது:

கடைசி பேட்டி: (பகுதி-1)
       http://www.youtube.com/watch?v=62-rLX1UYBE

கடைசி பேட்டி: (பகுதி-2)
       http://www.youtube.com/watch?v=VXphETmMt9w
*****
இத்தனைக்கும் காரணமான பன்னாட்டு நிறுவனம் ‘ஷெல்’ இதன் பிறகாவது தண்டிக்கப்பட்டதா?

அமெரிக்காவில் இரண்டு சட்டங்கள் உண்டு.
 
(1)   ALIEN TORT STATUTE: (அன்னியர் பழிச் சட்டம்): இதன்படி, உலகில் எங்கு மனித உரிமை மீறலுக்குக் காரணமான பழி(TORT) இழைக்கப்பட்டிருந்தாலும், இழைத்தவர் ஓர் அமெரிக்கர் (அல்லது அமெரிக்க நிறுவனம்) என்றால், அப்பழிக்கு ஆளான எந்த நாட்டுக்காரர்களும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

(2)   TORTURE VICTIM PROTECTION ACT ( கொடுங்கோன்மையில் சிக்கியோர் காப்பு சட்டம்): இதன்படி, அமெரிக்க நிறுவனங்களால் கொடுமைக்கு ஆளானவர்களும், அநீதியானமுறையில் உயிரிழக்க நேர்ந்தவர்களும், அவர்கள் எந்த நாட்டுக்காரர்களாயினும், குற்றங்கள் எந்த நாட்டில் நடந்திருந்தாலும், அமெரிக்க நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரலாம்.

பெரும்பாலும் அதுவரை யாராலும் பயன்படுத்தப்படாமல் சட்டப் புத்தகங்களில் தூங்கிக்கொண்டிருந்த இவ்விரு சட்டங்களின் அடிப்படையில் ஷெல் நிறுவனத்தின் மீதும், அதன் நைஜீரிய மேலதிகாரி  மீதும்   விவா குடும்பத்தினர் சார்பில்  அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன: (1) நியாயமற்ற தூக்கு தண்டனைகள், (2) கொடுமைகள், (3) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், (4) மனிதாபிமானமற்ற நடத்தைகள், (5) காரணமற்ற கைதுகள்.

ஆனால் நைஜீரியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழம் தின்று கொட்டை போட்ட ஒரு பன்னாட்டுக் கம்பெனி, இந்தப் 'பன்னாடைப் பயல்'களின் வழக்குகளுக்கா பயந்து விடும்? தன் வசமிருந்த சட்ட வல்லுனர்களைக் கொண்டு போராடியது. தனக்கும் விவா முதலியோரின் தூக்கு தண்டனைகளுக்கும் சம்பந்தமில்லை என்றது. விட்டால் இறுதிவரை போராடியிருக்கும், ஆனால் அதற்குள் ஒரு முக்கிய சங்கதி கசிந்துவிட்டது.

அதாவது, ஒகோனி மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காகத் தனது வசமிருந்த ஆயுதங்களையும் லாரிகளையும் ஆட்களையும்  ஷெல் நிறுவனம் வழங்கியதற்கான ஆதாரம் வாதிகளால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பதே. அது மட்டுமன்றி, தங்களுக்கு எதிரான போராட்டத்தை அடக்க உதவியதற்காக ராணுவத்திற்கு ஷெல் சம்பளம் கொடுத்த  ஆதாரமும் அவர்கள் கைக்குக் கிடைத்துவிட்டதாம்!

அவ்வளவு தான், வழக்கு எந்தத் தேதியில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்ததோ, அதற்குச்  சில நாட்கள் முன்னதாகவே ஷெல் நிறுவனம் ஓடோடி வந்து வாதிகளுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேசினர். முடிவில் 15.50 மில்லியன் டாலர்கள் இழப்பீடாகப் பெற்றனர் விவாவின் குடும்பமும் மற்றவர்களும். ஷெல்லின் மனித உரிமை மீறல்கள் என்றைக்குமே அதனால் ஒப்புக்கொள்ளப்படாத ஆனால் ஊரறிந்த ரகசியமாகவே புதையுண்டு போனது.
****
ஆனால் பத்திரிகைகள் விடுவதாயில்லை.

எனவே ஷெல் தனது நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் விளைவாக “தொழிலுக்கான பொதுக் கோட்பாடுகள்” (General Business  Principles) என்ற கொள்கை விதிகளைப் புதிதாக வரையறுத்தது. “நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்ச்சி” (CSR –Corporate Social Responsibility) க்கான புதிய நடைமுறை விதிகளையும்  வகுத்தது. வேறு சில பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய விதிகளைத் தாங்களும் பின்பற்றிட இது முன்மாதிரியாக அமைந்ததாம். 
               (நாளை: போபால் துயரமும் யூனியன் கார்பைடும்)

  • இவ்வரிசையில் இதற்கு முந்தைய பதிவுகள்:
பன்னாட்டு நிறுவனங்களின் மனித உரிமை மீறல்கள் (1) – நைக்கீ (‘Nike’) 
http://chellappatamildiary.blogspot.com/2013/07/1-nike.html  
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

7 கருத்துகள்:

  1. ஷெல்லின் மனித உரிமை மீறல்கள் என்றைக்குமே அதனால் ஒப்புக்கொள்ளப்படாத ஆனால் ஊரறிந்த ரகசியமாகவே புதையுண்டு போனது....
    வேதனையாக இருக்கிறது அய்யா.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஐயா.


    வணக்கமுடன் ஹரணி.

    ஒரு படைப்பாளியாக ஒரு படைப்பாளிக்கு நேர்ந்த அவலம் குறித்து வருத்தப்படுகிறேன். உலகின் வரலாற்றேடுகளில் இதுபோன்ற எத்தனையோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

    இருப்பினும் வலிமையான எழுத்து இவ்வுலகத்தில் நியாயத்தை நிலைநிறுத்தும் என்பதும் ஷெல் நிறுவனம் நீதிக்குத் தப்பாமல் அகப்பட்டமை உறுதி செய்கிறது.

    இழப்பீடுகளை விவா குடும்பத்தினர் பெற்றாலும் அவரின் அநியாய மரணம் மன்னிக்கமுடியாத ஒன்றாகும். இருப்பினும் இது எதிர்கால உலகில் படைப்பாளிகளின் நிலைப்பாட்டை அறிவுறுத்தும்.

    உங்கள் பதிவுகள் அனைத்தும் வாசிக்கத் துர்ண்டுவதோடு மிக் முககியமானவைகளாகவும் அமைந்துள்ளன. மனம் கசிய வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு நன்றி. பிரபலமாகாத தகவல்களைத் தர வேண்டும் என்று தான் முயன்று கொண்டிருக்கிறேன். தங்கள் கருத்துரைகள் ஊக்கமளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு விவரங்களைத் தாங்கள் திரட்டி எங்களுக்காகப் பகிர்ந்துகொள்வதை நோக்கும்போது வியப்பும் மகிழ்ச்சியும் மேலிடுகிறது.பல புதிய செய்திகள், கருத்துக்கள். ஜம்புலிங்கம்.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் மற்றொரு தளத்தையும் படித்தேன். மிக அழகாக நேர்த்தியாக எழுதிய எழுதும் உங்களுக்கு என் பாராட்டுகள். ஞானாலயா வளர்ச்சியில் இடுகையை உங்கள் தளத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு