புதன், ஜூலை 24, 2013

கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் "எஸ்.ஆர்.கே." நினைவு நாள் (ஜூலை 24)


மனைவி டாக்டர் கமலாவுடன் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் 

தஞ்சை மாவட்டம் கிளிமங்கலத்தில் பிறந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சிறுவயதில் இருந்தே பத்திரிகையாளனாக வேண்டும் என்ற கனவு இருந்தது. 13வது வயதில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னைக்கு ரயிலேறி, ஆனந்தவிகடன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆசிரியராக இருந்த ‘கல்கி’, ஆச்சரியத்துடன் இவரைப் பார்த்து, ‘நீ சிறிய பையனாக இருக்கிறாய், படிப்பை முடித்துக்கொண்டு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் இண்டர்மீடியட் சேர்ந்தார் (1937-38). பொதுவுடைமைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டார். மாணவர்களின்  கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது அதில் முன்னிலையில் இருந்ததால் பல்கலைகழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய மூவரில் இவரும் ஒருவர். (பின்னாளில் விமான விபத்தில் காலமான கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலதண்டாயுதமும், ‘பேராசிரியர் அ.ச.ஞா.’ என்று அறியப்பட்ட அ.ச.ஞானசம்பந்தனும் மற்றவர்கள்).
இந்திய சுதந்திர உணர்வுக்கும் கலாச்சாரத்திற்கும் அடையாளமாக விளங்கிய பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார் ராமகிருஷ்ணன். பி.எஸ்.சி.(இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி)யில் தான் இடம் கிடைத்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார். சிறிது காலம் வாரணாசியில் சிறை வைக்கப்பட்டார்.  (பின்னாளில் சென்னை மாகாண ஆளுனரான ஸ்ரீ பிரகாசா அப்போது இவருடைய சிறைத்தோழர்). அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது வேலூர் சிறையின் இன்னொரு பகுதியில் இருந்தார் காமராஜர். பின்னாளில் ஜனாதிபதியான நீலம் சஞ்சீவ ரெட்டியும், கம்யூனிசத் தோழர்கள் என்.சங்கரய்யாவும் பாலதண்டாயுதமும் உடன் இருந்தனர்).
ஆனால், உடல் நலம் குன்றியதால் ராமகிருஷ்ணன் தனது கிராமத்திற்கே அனுப்பப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு கட்டமாக, ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தபோது, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனை, ஜெர்மனிக்கு எதிராகவும் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும் மாறியதால் அரசியல் காரணங்களுக்காகச் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள் விடுதலை ஆனார்கள். அவர்களில் ராமகிருஷ்ணனும் ஒருவர்.
மீண்டும் படிப்பைத் தொடர விரும்பி  திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். (1942 ஜூன்). ஆனால் இங்கும் அவரது கனவு நிறைவேறவில்லை. “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டதால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. அதே சமயம் கம்யூனிசக் கொள்கையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். அகில இந்திய மாணவர் சம்மேளனத்தில் தமிழ்மானிலப் பொதுச்செயலாளரானார்.
அக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சொத்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால், தந்தை இறந்தவுடன் தனக்குப் பாகமாகக் கிடைத்த நான்கு ஏக்கரையும் விற்று கட்சிக்குக் கொடுத்துவிட்டு, முழுநேர கம்யூனிச ஊழியராகி, கட்சி தரும் மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்தலானார் எஸ்.ஆர்.கே.
கம்யூனிச நாளேடான ‘ஜனசக்தி’ யின் ஆசிரியர் குழுவில் சேர்ந்ததும், தனது உணர்ச்சி மிக்க தமிழால் ‘ஈட்டிமுனை’, ‘தேசபக்தன் டைரி’ ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து எழுதினார். அவை   அவருக்கு மிகுதியான வாசகர்களைப் பெற்றுத் தந்தன.  கம்யூனிச நூல்களை விரைந்தும் சுவை குன்றாமலும் மொழிபெயர்த்தார். அப்போது அவர் கீழ் பணியாற்றிய ஓர் இளைஞர் பின்னாளில் ஞானபீட விருது பெற்றார். “எனக்குள் எனக்கே தெரியாமல் மறைந்திருந்த சக்தியை, திறமையை, எழுத்தாற்றலை முதலில் கண்டு பிறருக்கும் பிரகடனப்படுத்தியவர் அவர் தான்... என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்த முதல் ஆசான்...” என்கிறார் ஜெயகாந்தன். (எஸ்.ஆர்.கே. நினைவு மலர்-1996 பக்கம் 190-191).
1953ல் மதுரைக்குக் குடிபெயர்ந்தபிறகு, கம்யூனிச ராமகிருஷ்ணன் படிப்படியாகப் பின்னுக்குப் போய் இலக்கிய ராமகிருஷ்ணன் உதயமானார். மனைவி கமலா, மருத்துவராகத் தொழில் தொடங்கி நிலையான வருவாய்க்கு வித்திட்டதால், மனதிற்கினிய தொழிலான இலக்கியத்தில் முழுநேரமாக ஈடுபடலானார் ராமகிருஷ்ணன்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறந்த பேச்சாளர் என்று பெயர் பெற்றிருந்ததால் அத்திறமையை மாணவர்களுக்குப் போதிப்பதில் பயன்படுத்த எண்ணினார். அரசியல் போராட்டங்களால் அரைகுறையாக நின்றுவிட்டிருந்த கல்வியைத் தொடர்ந்தே தீருவது என்று ஆவேசமாகத் தீர்மானித்தார். ஆனால் இன்று போல் அன்று வசதிகள் இல்லையே! உத்கல் பல்கலைகழகத்தில் பி.ஏ.வும், நேபாள் பல்கலைகழகத்தில் எம்.ஏ.வும் முடித்தார்.
1966ல் தெ.பொ.மீ. அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முதல் துணைவேந்தராக அமர்ந்தபோது ‘கம்பனும் மில்ட்டனும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அளித்து பி.எச்டி. பட்டம் பெற்றார். அன்று முதல் ‘டாக்டர் எஸ்.ஆர்.கே” என்று அழைக்கப்படலானார்.
தனிப்பட்ட முறையில் எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) படிக்கும் மாணவர்களுக்காகத் தன் வீட்டிலேயே பல்லாண்டுகள் வகுப்புக்கள் நடத்தினார் டாக்டர் எஸ்.ஆர்.கே. (சுமார் அறுநூறு பேர் அவரால் பயன்பெற்றவர்கள் என்று தெரிகிறது).
இத்தகைய மேதைமையின் இன்னொரு வெளிப்பாடு தான் கம்பன் மேல் அவர் கொண்ட காதல். அது கம்பன் கழகப் பட்டிமன்றங்களிலும் ஆய்வுரைகளிலும் தீவிரமாக வெளிப்பட்டது. எஸ்.ஆர்.கே. இல்லாத கம்பன் கழக விழாக்கள் இல்லை என்றானது. ஜீவாவும், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழ்க்கடல் ராய.சொ., ஜஸ்டிஸ்  மகராஜன், ஜஸ்டிஸ் இஸ்மாயில், பேராசிரியர்கள் தெ.பொ.மீ., அ.சீ.ரா., அ.ச.ஞா., கே.ஆர்.சீனிவாச ஐயங்கார், சங்கரநாராயணன் ஆகியோரும் இவரது புலமையில் அழியாத பற்றும் மரியாதையும் கொண்டவர்கள்.
“ஒருமுறை பட்டிமண்டபத்தில் அவர் எடுத்துக்காட்டிய தொல்காப்பிய சூத்திரத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்த நான் அச்சூத்திரத்தின் சொற்களை ஒடித்து என் கட்சிக்கு வேண்டிய முறையில் பொருள் செய்துவிட்டேன். ஓரளவு நான் சொல்வது சரிதான் என்று கூட பலர் நம்பி விட்டனர். அவருடைய முறை வந்ததும், அவர் எழுந்து நான் வேண்டுமென்றே செய்த சூத்திரப்பொருளை தவறு என்று எடுத்துக்காட்டி அவர் ஆடிய ஆட்டம் இன்றும் என்முன் நிற்கின்றது” என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞா. (எஸ்.ஆர்.கே. நினைவு மலர்-1996 –பக்கம் 50). 
சொற்களுக்குள்
சூறாவளிகளைக் கருத்தரித்த
உன் பொழிவுகளில்
பிரளயங்கள் கொலுவிருந்தன” 

என்கிறார் டாக்டர் ‘சிற்பி’ பாலசுப்ரமணியம் தனது நினைவுக் குறிப்பில். (அதே நூல்-பக்கம் 27).
டாக்டர் எஸ்.ஆர்.கே. யின் தமிழ்க்கொடைகள் காலத்தால் அழியாதவை. தமிழுக்கு “ஒப்பிலக்கியம்” என்ற புதிய துறையை, மேனாட்டு அறிவியல் பூர்வமான கொள்கைகளின் அடிப்படையில் மறுவடிவு செய்தவர் அவர் என்கிறார், அ.ச.ஞா. ஒரே மாதிரியான நாவல்களையோ கவிதைகளையோ ஒப்பிடுவது தான் ஒப்பிலக்கியம் என்றிருந்த நிலையை மாற்றின, அவருடைய முக்கிய படைப்புகளான “கம்பனும் மில்ட்டனும்”, “இளங்கோவும் ஷேக்ஸ்பியரும்”   ஆகிய இருநூல்கள். கம்பனின் பாத்திரப்படைப்புகளின் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுவன அவரது “சிறியன சிந்தியாதான்”, “கற்பின் கனலி”, “இளங்கோவின் பாத்திரப்படைப்பு” “கம்ப சூத்திரம்” ஆகியவை.
சென்னையில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் அமைந்தபோது அதன் முதல் செயலாளரானவர், எஸ்.ஆர்.கே. அவரைத் தொடர்ந்து அப்பொறுப்பை ஏற்றவர், அவரிடம் பாடம் கேட்டவரான டாக்டர் ஜான் சாமுவேல். தனது ‘ஷெல்லியும் பாரதியும்’ என்ற ஆய்வுநூல் உருவானதற்கு எஸ்.ஆர்.கே. தான் காரணம் என்கிறார்.

திருக்குறள், எஸ்.ஆர்.கே.யை மிகவும் கவர்ந்த இன்னொரு நூல். ‘வள்ளுவர் கண்ட வாழ்வியல்’, ‘திருக்குறள்- ஒரு சமுதாயப் பார்வை’ ஆகிய இரு  நூல்களில் இதைக் காணலாம். பரிமேலழகர் முதல் மு.வ. வரை பலர் எழுதிய உரைகளில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து எழுதி இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்பார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, அவர் பேசுவதை மற்றவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்,  ஒற்றை விரலால் நாட்கணக்கில் கணினியில் தானே அச்சடித்து “திருக்குறள்- ஆய்வுரை" என்ற பெரிய நூலை எழுதினார். (இந்தியாவில் கணினிப் பயன்பாடு  பரவியிராத 1989-90களில் இது நடந்தது என்றால் அவர் முயற்சியின் திறம் எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம்!)
 
தில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘திருக்குறள்-ஆய்வுரை’ நூலை வெளியிட்டுப் பேசுகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. மேடையில் எஸ்.ஆர்.கே., ஜஸ்டிஸ் மோகன், சங்கப் பிரமுகர்கள். பின்னால் நிற்பது நான்.
மொழியறிவிற்கும், பேச்சாற்றலுக்கும், இலக்கியத் திறமைக்கும், உலகளாவிய மனிதநேயத்திற்கும் உருவமாக விளங்கிய டாக்டர் எஸ்.ஆர்.கே.யின் இந்நூலுக்கு  தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு விழா நடத்தலாம் என்று அப்போது சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த நான் தெரிவித்த யோசனையைச் சங்கம் அங்கீகரித்தது. எஸ்.ஆர்.கே.யை  நன்கறிந்த, அவர் போலவே இலக்கியத்திறனும் இருமொழியாற்றலும் கொண்டவர்களான டாக்டர் வா.செ.குழந்தைசாமியும், ஜஸ்டிஸ் மோகனும் அழைக்கப்பட்டனர். குழந்தைசாமி அப்போது தில்லியில் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்தார். மோகன், அப்போது தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வுபெற்று தில்லிக்கு வந்திருந்தார். (நூல் வெளியீடு: என்.சி.பி.எச். சென்னை. இவ்விழாவின்  வெற்றிக்குப்  பெரிதும் உழைத்தவர் 'புதியவன்' ஷாஜகான்.)
தமிழ்ச்சங்கச் செயலர் எம்.என்.எஸ்.மணியன் நன்றியுரை 

பாரதி நூற்றாண்டுக்காக பாரதியாரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளியிட்டார் எஸ்.ஆர்.கே. ஆனால் பாரதிதாசனைப் பற்றி விளக்கமான ஆய்வுரை எழுதவேண்டும் என்ற அவர் விருப்பம் இறுதிவரை நிறைவேறாமலே போனது.
அவருக்கு மக்கள் மூவர். இரு புதல்வர்களும் அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பணியாற்றுகிறார்கள். கட்டிடத் தொழிலாளர் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு போராடி வருகிறார், அவரது ஒரே மகள் கீதா. அவரது  சென்னை அயனாவரம் இல்லத்தில் 1995 ஜூலை  24ம் தேதி தனது 74வது வயதில் இறுதி மூச்சை விட்டார் எஸ்.ஆர்.கே. (கம்யூனிச வழிவந்தவராதலால் சடங்குகள் இன்றி அவரது உடல் நீக்கப்பட்டது).
இன்றும் தமது 90வது வயதில் எஸ்.ஆர்.கே. என்றால் துள்ளி எழுந்து அவர் நினைவுகளைத் துல்லியமாக அசைபோடுகிறார், மனைவி, டாக்டர் கமலா. மாணவப் பருவத்தில்  கம்யூனிசக் கொள்கையால் கவரப்பட்டு, போராட்டங்களில் ஒன்றாகச் செயல்பட்டு, அது காதலாகிக் கனிந்து கடிமணத்தில்  முடிந்த கதையையும், பர்மாவில் கழிந்த தன் இளமைக் காலத்தையும் பற்றி மீண்டும் சென்னையில் சந்திக்கும்போது இன்னும் விளக்கமாகச் சொல்லக்கூடும் அவர்.
****
(c) Y. Chellappa
email: chellappay@gmail.com
 

11 கருத்துகள்:

  1. திருக்குறள்- ஆய்வுரை - சிறப்பு நூலை முதலில் வாங்க வேண்டும்... நன்றிகள் ஐயா....

    பதிலளிநீக்கு
  2. மைக்கில் பேசுபவர் - எம்.என்.எஸ். மணியன், தில்லித் தமிழ்ச்சங்கச் செயலர். மூலையில் நீங்கள். அமர்ந்திருப்பவர்கள் - எஸ்.ஆர்.கே, ஜஸ்டிஸ் மோகன், தமிழ்நாடு இல்லத்தில் ரெசிடென்ட் கமிஷனராக இருந்த ..... , உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் தமிழ்ச்சங்க துணைத்தலைவராகவும் இருந்த சீனிவாசன்.
    இந்த நூல் நான் பணியாற்றிய பாவை அச்சகத்தில்தான் அச்சிட்டது. இந்தத் திருக்குறள் ஆய்வுரை நூலின் முக்கிய அமசம் - அடுத்தடுத்து வருகிற குறள்கள் ஒவ்வொன்றும் முந்தைய குறளுடன் தொடர்புடையது என்று அவர் எழுதியது என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி ஷாஜகான் அவர்களே! வெளியீட்டு விழா அன்று நீங்கள் ஆற்றிய பெரும்பணிகளை நான் மறக்க மாட்டேன். அன்று வந்த உங்களை மீண்டும் சென்னைக்கு அனுப்ப மறுத்துவிட்டதே, புதுடில்லி, அதையும் மறக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா ! கமலா ஆஸ்பத்திரி மாசிவீதியில் இருந்தது ! அங்கு வருவேன்! பல முறை எஸ்.ஆர்.கே அவர்களொடு பேசிப் பழகி இருக்கிறேன் ! கூட்டுறவுத்துறை வெளிவீதி அழகப்பன் ஹாலில் அவர் பெச்சினை அடிக்கடி கேட்டிருக்கிறேன் ! தத்துவார்த்த ரீதியில் அவரோடு விவதித்திருக்கிறேன்! என்னிடம் "let us agree to disagree" என்பார் ! peopleS democracy, nationaldemaocracy, non capitalist path என்று அவ்ர்கொடுக்கும் விளக்கங்கள் இன்றும் என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன! அற்புதமான நினைவலைகள் ! நன்றி ஐயா ! ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டவை மகிழ்ச்சி அளிக்கிறது. கணவனின் முயற்சி மற்றும் வளர்ச்சிக்கு பின்னால் மனைவி இருக்கிறார் என்பதை இவரின் வாழ்வியல் விளக்குகிறது. நாட்டிற்காக தம் வாழ்க்கையை அற்பணித்த எஸ்.ஆர்.கே அவருக்கு தலை வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. நாட்டிற்காக தம் வாழ்க்கையை அற்பணித்த எஸ்.ஆர்.கே அவருக்கு தலை வணங்வேண்டும் அய்யா
    திருக்குறள்- ஆய்வுரை - சிறப்பு நூலை முதலில் வாங்க வேண்டும்...
    தற்பொழுது கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  7. இவ்வாறான பெரியவர்களைப் பார்க்கும்போது இன்னும் உழைக்கவேண்டும், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. உத்வேகத்தைத் தருமளவு ஒரு சாதனையாளரைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். ஒரு பி.எச்டி. முடிப்பது எவ்வளவு கடினமான செயல் என்று அதை செய்து முடித்தவர்களுக்கல்லவா தெரியும்! தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல இருந்தது தங்கள் வலைத்தகவல்.
    எஸ்ஆர்கே என்போன்ற பலருக்கு,கட்டைவிரலைக் கேட்காத துரோணர்! ஜீவாவும் இவரும், இலங்கை எழுத்தாளர்களும் இல்லையெனில் கம்பனை வெறும் பக்திஇலக்கியவாதியாகவோ, அல்லது அழகியல் உபாசகராகவோதான் புரிந்திருப்பார்கள் தமிழர்கள். இது பற்றி நானும் ஒரு கட்டுரையை ஜனசக்தியில் எழுதி, கம்பன்கழகப் பவளவிழா மலரிலும் வெளியிட்டு, எனது வலையிலும் இட்டிருக்கிறேன். நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.
    http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html
    தங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்.
    வணக்கம்.
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்.

    பதிலளிநீக்கு
  10. 2023 தற்போது, Dr.S.R.K யின் திருக்குறள் - ஆய்வுரை நூலினை சமீபத்தில் படிக்க ஆரம்பித்து, அவரை பற்றி தெரிந்து கொள்ள தேடிய போது, இந்த வலைப்பக்கம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...மிகவும் நன்றி🙏🙏🙏

    பதிலளிநீக்கு