திங்கள், பிப்ரவரி 24, 2014

உமா மகேஸ்வரி கொலையின் பின்னணியில்...( ‘அபுசி-தொபசி’-31)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பத்திரிகைகளில்  உமா மகேஸ்வரி பற்றிதான் பேச்சு. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த  ஓவிய ஆசிரியரின் மகள். 23 வயது. ஐ.ட்டி. நிறுவனமான டி.சி.எஸ்.ஸில் சென்னையில் சிறுசேரியில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். கடந்த 13ஆம் தேதி இரவுப்பணி முடிந்து சென்றவர், தன் தோழியரோடு தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பவில்லை. சில நாள் கழித்து அழுகிய நிலையில் அவரது பிணம், அதே சிறுசேரியில் ஒரு முட்புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி துப்பு கொடுத்தால் இரண்டு லட்சம் பரிசாம். போலீஸ் அறிவிப்பு.

வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் அதிகரித்துவரும் இந்நாளில், தன் வயதுக்கொத்த இளம்பெண்கள் கம்பீரமாகக் குளுகுளு அறையில் அமர்ந்து கைநிறையச் சம்பளம் வாங்குவதைக் காணப்பொறாத ஒருவர்தான் இக்கொலையைச் செய்திருக்கவேண்டும். பக்குவமில்லாத இத்தகைய கிராமத்து இளம்பெண்களைக் காதல் என்ற பெயரில் கவர்ந்திழுத்து, பின், கொலை செய்துவிடும் போக்கும் நிலவுகிறது. (டில்லி, பெங்களூரில் இது சர்வசாதாரணம்.) பெற்றோர்களின் பார்வையில் இத்தகைய நிகழ்வுகளை எப்படித் தடுக்க முடியும் என்று பார்க்கிறேன்.

இரவுநேரப் பணிகளுக்குச் செல்லாதே என்று தடுக்கமுடியுமா? வழியில்லை. நல்ல பணியில் இருந்தால் தானே பெண்களுக்குத் திருமணம் நடக்கிறது! அது மட்டுமன்றி, முதலில் இரவுப் பணியில் ஓராண்டாவது இருந்தவர்களுக்குத்தான் பகல்நேரப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அலுவலகத்திலிருந்து அவர்களின் வாகனத்தில்தான் வந்துபோகவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? அதுவும் இயலாது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் வாகனம் செலுத்தமுடியுமா எந்தக் கம்பெனியாலாவது? அதே சமயம், வாகன வசதி இல்லை என்பதற்காக, நல்ல கம்பெனியிலிருந்து வரும் வாய்ப்பை உதறித் தள்ள முடியுமா?

நிகழ்ச்சி நடந்த சிறுசேரிக்கு நான் அடிக்கடி போகிறேன். வானளாவியதும் தரையளாவியதுமான கட்டிடங்கள் நிறைந்த தனிப் பகுதி. நடக்க இடமின்றி, கம்பெனி பஸ்கள் எங்கும் முகாமிட்டிருக்கும். ஆனால் இரவு ஆறரை ஆகிவிட்டால் தெரு விளக்குகள் கிடையாது. ஆட்டோ போன்ற வசதி கிடையாது. யார் லிஃபட் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டுதான் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலையின் முகப்பிற்கு வரமுடியும்.

சிறுசேரியின் அலுவலகங்களிலிருந்து பின்புறமாக, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம், ஆள் அரவமற்ற, முட்புதர்கள் நிறைந்த, நல்ல சாலைகளற்ற, தரைவழியே நடந்து போனால்தான் எல்-அண்ட-ட்டி என்ற பல கோபுரக் குடியிருப்பு வரும். (இங்கும் மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள்!) எனவே, அலுவலகம் முடிந்து, எந்த இளம் பெண்ணையாவது இந்த இருட்டில்  கடத்திக்கொண்டுவந்து கற்பழித்தால் போலீசுக்குத் தெரியவே ஒருவாரம் ஆகும். (இந்தப் பகுதியில் போலீஸ் ரோந்து என்று எதுவும் கிடையாது என்று தெரிகிறது. அப்படியே போலீஸ் ரோந்து வந்தாலும், அந்த ரோந்து வண்டி நகர்ந்தபிறகு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை எப்படிப் பொறுப்பாக்கமுடியும்?)

சிறுசேரி, பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத பகுதிதான். இரவுப் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்களைத் தாக்கி, மொபைல்போன், கிரெடிட் கார்டுகளைப் பறித்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்துள்ளன.

எனவே, முதலாகச் செய்யவேண்டியது:

  1. சிறுசேரியிலுள்ள கம்பெனிகள், உடனடியாக, சிறுசேரிக்குள் தனிப்பட்ட பாதுகாவல்படை ஒன்றை அமைக்கவேண்டும். அது, சிறுசேரி முகப்பிலிருந்து,  எல்-அண்ட-ட்டி குடியிருப்புவரை பாதுகாப்பில் ஈடுபடவேண்டும்.
  2. முட்புதர்கள் முழுமையாக அகற்றப்படவேண்டும். சரியான சாலைவசதி செய்யப்படவேண்டும்.
  3. சென்னைக்கு வெளியிலிருந்து வந்து, சிறுசேரியில் பணியாற்றும் பெண்களின் கூட்டமொன்றை சிறுசேரிக் கம்பெனிகள் கூட்டி, அவர்களின் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் அப்பகுதி காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதி வழங்கவேண்டும்.
  4. சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நகரின் எந்தப் பகுதியிலும் பெண்களின் கழுத்திலுள்ள தாலிச்சங்கிலி பத்திரமாக இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை. இதனால் சென்னையில் காலை நேரங்களில் வாக்கிங் செல்வதும் கோலம் போடுவதுமான பணிகளில் ஈடுபடுவதைப் பெண்கள் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். வயதானவர்கள், ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, வீட்டில் தனியாக இருந்தால் தாக்கிவிட்டுக் கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் ஏராளம். "நகரம் பெரியது - இருக்கும் காவல்துறையின் ஆள்பலமோ சிறியது" என்ற வாதம் உண்மையாகவே இருப்பினும், மக்களின் கவலையை அது தீர்க்குமா? இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினைகளில் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். விஷயம் அவருடைய காதுகளுக்குச் சென்றுவிட்டது என்றால் போதும், காவல்துறை மும்முரமாக ஈடுபட்டுக் குற்றவாளிகளை வழிக்குக் கொண்டுவந்துவிடும். உமாமகேஸ்வரி கொலை வழக்கிலும் முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

(மற்ற வழக்கமான பதிவுகள் அடுத்த இதழில்.)

நான் ரசித்த கேள்வி-பதில்
கேள்வி: தமிழா, இன உணர்வு கொள்” என்கின்றனரே..எதற்காக?
பதில்: இவன் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருந்தால்தானே, அவன் மாட மாளிகை கட்ட முடியும்!
               (நன்றி: அந்துமணி பதில்கள்: தினமலர்-16-2-2014 பக்.10)
சிரிப்பு
“நீங்கள் எங்கும் தனியாக இருப்பதில்லை. எப்போதும் உங்களுடன் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன!” (தமிழ் இந்துவில் ஒரு மேற்கோள்).

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

 © Y Chellappa 

திங்கள், பிப்ரவரி 17, 2014

50 காதல் கவிதைகளும், பெரியார் கொடுத்த திருநீறும் ( ‘அபுசி-தொபசி’-30)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
புதுடில்லியில் அரவிந்த கேஜ்ரிவால், தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது இப்படித்தான் நடக்கவேண்டும் என்று காங்கிரஸ் செய்திருந்த முடிவின்படியே இது நடந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முன் அனுபவமில்லாத கேஜ்ரிவாலை ஆதரித்து வைப்போம், பிறகு அவரை சமயம் பார்த்துக் காலை வாரிவிடலாம் என்பதுதானே அவர்களின் திட்டம்! கேஜ்ரிவால் அதிபுத்திசாலி. ‘லோக்பால் மசோதாவை அவையில் நுழைக்கமுடியாமல் காங்கிரஸ், பா.ஜ.க. இருவரும் சதி செய்துவிட்டார்கள்’ என்று மக்களிடம் அனுதாபம் கோரும்வண்ணம்  தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துவிட்டார். ஆனால் அதே சமயம், அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் நடந்துகொண்டுவிட்டார் என்பதால் நேர்மையானவர்களையும் அறிவிஜீவிகளையும் ஒரேகல்லில் காயப்படுத்திவிட்டார். முதலமைச்சராக இருந்துகொண்டு ஆர்பாட்டக்காரகளுடன் அமர்ந்து போராடுவது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்படுமா என்றுகூட எண்ணாமல் மனம் போன போக்கில் நடந்துவந்தார் கேஜ்ரிவால்.

இனி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து வாக்களிக்க எத்தனை பேர் முன்வருவர் என்பது கேள்விக்குறியே.

புத்தகம்
சரித்திரப் புகழ்பெற்ற நட்புகள் என்றவுடன் உங்களுக்கு எந்தெந்த நட்புகள் நினைவுக்கு வருகின்றன? கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் அனைவருக்கும் நினைவுக்கு வரலாம். குடியாத்தம் நகரைச் சேர்ந்த இளைஞர், ஈ.எஸ்.லலிதாமதிக்கு மேலும் பதின்மூன்று நட்புகள் நினைவுக்கு வருகின்றன. அவையாவன: (1)அவ்வையார்-அதிகமான், (2)பாரி-கபிலர், (3)ராஜா தேசிங்கு-மகமது கான், (4)கர்ணன்-துரியோதனன், (5)கண்ணன்-குசேலர், (6)கைகேயி-மந்தரை, (7)குகன்-ராமன், (8)ராமன்-சுக்ரீவன், (9)துரோணாச்சாரியார்-துருபன், (10)இராஜாஜி-பெரியார் ஈ.வெ.ரா., (11)கார்ல் மார்க்ஸ்-ஏங்கல்ஸ், (12)ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், (13)காமராசர்-பெரியார் ஈ.வெ.ரா.


இவர் எழுதிய நட்பதிகாரம் என்ற 80 பக்கமும் 50 ரூபாய் விலையுமுள்ள நூல், (நக்கீரன்) சாருபிரபா பப்ளிகேஷன்சால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி  2014  வெளியீடு. பள்ளி மாணவர்களுக்கும் அதைவிட முக்கியமாகப் பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும், (தேர்தல் நேரத்தில்) அரசியல் பேச்சாளர்களுக்கும் மிகவும் பயன்படத்தக்க அளவில், சுருக்கமாகவும், நிறைவாகவும்  தெளிவாகவும் எழுதியிருக்கிறார் இந்த இளைஞர்.

“....முன் நூறு ஊரும் பரிசில் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே”

என்று, படை எடுத்து வந்த மூவேந்தர்களை எதிரில் வைத்துக்கொண்டு பாரிக்கு ஆதரவாக அவ்வையார் பாடியதை அழகாக எடுத்துக்காட்டுகிறார்.

இராஜாஜி-பெரியார் நட்பின் இடையே, பெரியார்-திரு.வி.க. நட்பு பற்றியும் பேசுகிறார்:

“திரு.வி.க.வோ கடவுள் பக்தி உடையவர். ஒரு முறை பெரியாரின் வீட்டிற்கு வந்திருந்தார். அன்றிரவு பெரியார் வீட்டிலேயே தங்கினார். மறுநாள் எழுந்து குளித்து முடித்து திரு.வி.க. வந்தவுடன், அவருக்கு ஒரு கிண்ணத்தில் திருநீறை எடுத்து நீட்டினார் பெரியார்.

‘நீங்களோ கடவுள் மறுப்பு கொள்கை உடையவராயிற்றே? உங்கள் வீட்டில் எப்படி திருநீறு’ என்று கேட்க, ‘நான்தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் என் நண்பராகிய நீங்கள் நம்பிக்கை கொண்டவராயிற்றே? எனது விருந்தாளியான உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்னுடைய கடமை’ என்று பெரியார் சொல்லவும், பெரியாரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார் திரு.வி.க.(பக்.60).

பெரியார் – காமராசர் நட்பும் சிறப்பாக விவரிக்கப்படுகிறது:

1967  தேர்தலில் விருதுநகரில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் என்பவரிடம் காமராசர் தோற்றுப் போனார். இதைச் சிலர் கேலியாக ‘படித்த சீனிவாசனிடம் படிக்காத காமராசர் தோற்றுப் போனார்’ என்று சுவரொட்டி ஒட்டினர். இது பெரியாரை மிகவும் பாதித்தது.

அந்தச் சுவரொட்டிக்கு அருகிலேயே படிக்காத காமராசர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்’ என்று ஒட்டச் செய்தார்.(பக்.75).

மனிதாபிமானம் நிரம்பிவழிந்த காலம் அது!

குடியாத்தம் என்றால் பீடி சுற்றும் தொழில்தான் எல்லோருக்கும் கவனம் வரும். இனிமேல், இளைஞர் ஈ.எஸ். லலிதாமதியும் கவனத்திற்கு வருவார்.

சினிமா & தொலைக்காட்சி : அடுத்த இதழில்.

பத்திரிகை
கல்கி வார இதழ் இப்போதெல்லாம் முழுக்க முழுக்க இளைஞர்களையே சுற்றி வருகிறது. காரணம் தெரியாமலில்லை. இன்றைய இளைஞர்களை ஈர்த்துப் பிடித்தால்தானே இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு ஒரு  captive audience  கிடைக்கும்? (என்னைப் போல?)

காதலர் தினத்தை ஒட்டியோ என்னவோ, இந்த இதழில் ஓர் அற்புதமான சிறுகதை வந்திருக்கிறது. ஜி.ஆர்.சுரேந்திரநாத் எழுதிய YES காயத்ரி என்ற சிறுகதை. மெல்ல இழையோடும் நகைச்சுவையும், அருவிபோல் ஊற்றும் மொழிநடையும், ஒவ்வோர் எழுத்திலும் நடனமிடும் இளைமையின் துள்ளலும் உங்களைக் கவர்வது நிச்சயம். ஒரு சாம்பிள்:


“ஒரு ஆண் தன்னைப் பார்க்கும்போது பெண்கள் காட்டும் விதவிதமான ரி-ஆக்சன்களை யாராவது ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி.பட்டம் வாங்கலாம்.

“தன்னை ஒருவன் பார்ப்பது குறித்தப் பெருமையும், அதே சமயத்தில் கொஞ்சம் பயமும், அதே சமயத்தில் யாராவது கவனித்து விடுவார்களோ என்ற தவிப்பும், மறுபடியும் பார்க்கமாட்டானா என்ற ஏக்கமும் கலந்து அது ஒரு தனி பார்வை பாஸ். அந்த தனிப் பார்வையை என் மீது எய்ய, நான் கப்பென்று பிடித்து நெஞ்சுக்கூட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

“ஒருநாள் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, உலகில் நான் மட்டுமே அறிந்துகொள்ளும் ஒரு அதிரகசியப் புன்னகையுடன் கர்ச்சீப்பை  வேண்டுமென்றே கீழே போட்டாள். நான் எனது கர்ச்சீப்பை கீழே போட, முகம் மலரச் சிரித்தாள். நான் சிரித்தபடி என் கர்ச்சீப்பை எடுக்கக் குனிந்தேன். சட்டென்று முடிவுசெய்து, அவள் கர்ச்சீப்பையும் எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள... அவள் முறைத்தாள். அந்த முறைப்பில் செல்லம், கனிவு, பிரியம், அன்பு போன்றவற்றோடு லைட்டாக காதலும் கலந்திருந்தது.
***
“அவளுக்கு அளித்த புளியோதரையுடன் (கோவிலில்) பிரசாதம் தீர்ந்துவிட்டது. நான் ஏமாற்றத்துடன் திரும்ப...’இந்தாங்க..ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம்’ என்றபடி அவள் கொஞ்சம் புளியோதரையை எடுத்து என் கையில் வைக்க... அப்போது அவள் நுனிவிரல்கள் என் உள்ளங்கையில் பட...நான் காற்றில் மிதந்தேன்.

‘இதை அப்படியே வச்சிருந்து,   தினம் ஒரு பருக்கையா சாப்பிடப்போறேன்’ என்றேன்.
‘ஏன்?’
‘நீங்க கொடுத்ததாச்சே, அவ்வளவு சீக்கிரம் தீத்துடலாமா...’ என்று நான் கூற அவள், ‘சீ..’ என்று வெட்கத்துடன் கொலுசுகள் ஒலிக்க, தாவணி காற்றில் பறக்க...அழகாக ஓடிப் போனாள்......

இந்த வார இதழ் தானே, கடையில் நிச்சயம் கிடைக்கும். உடனே வாங்கி மீதிக்  கதையைப் படித்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள், ஜி.ஆர்.சுரேந்திரநாத்!
****

தமிழின் சிறந்த காதல் கவிதைகள் ஐம்பது’ என்ற தலைப்பில் அந்திமழை- பிப்ரவரி  2014 இதழில் சிறப்புத் தொகுப்பு வந்துள்ளது.

மீரா முதல் கனிமொழி வரை, பிரமிள் முதல் யூமா வாசுகி வரை, அப்துல் ரகுமான் முதல் நா.முத்துக்குமார் வரை என்று ஐம்பது கவிஞர்களின் படைப்புக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க அந்திமழை ஆசிரியர் குழு நிச்சயம் பல நாட்கள் உழைத்திருக்கவேண்டும். வாழ்த்துக்கள்!

 அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது!
தொடமாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும்!

என்ற மு.மேத்தாவின் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப்பின் படிக்கும்போது காலம் விரைந்து பின்னோக்கி நகர்ந்து நம் இளைமைக் காலத்தில் கொண்டுபோய்விடுவதை மறைக்கமுடிவதில்லை.

என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா?
மீன்வலையா?
....
சில நேரங்களில்
இமைச் சிறகுகளை
விட்டுவிட்டு
உன் பார்வைகள்
பறந்து வருவது
என் கிளைகளில்
இரை தேடவோ?
கூடு கட்டவோ?

என்ற அப்துல் ரகுமானின் பிரபலமான கவிதை இடம் பெற்றுள்ளது. அதே சமயம், ஆண்களின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டும் லட்சுமி மணிவண்ணனின் இந்தக் கவிதையும் இருக்கிறது:

எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து
நிலையங்களிலும்
என் கண்ணில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்

அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே
படுகின்றன

'கவிஞன் சாதாரணமானவனல்ல, சதா ரணமானவன்’ என்பார், இளந்தேவன்.    நா.முத்துக்குமாரின் கவிதை ஒரு சான்று:

நீ தரிசனம் தந்த கோயில்..
வௌவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.

உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித்தாளில்
கன்னி கழியாமல்.

தெரியும்,
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.

அதற்குச் சற்றும் குறையாத சோகம் வெளிப்படுகிறது, செல்வராஜ் ஜெகதீசனின் இந்தக் கவிதையில்:

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்.

எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிவாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

ஆனால்  ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் மறக்க முடியாத  கவிதை, பொருளாதாரத்திற்கும் சமூக ஜாக்கிரதை உணர்வுக்கும் முன்னிலை வழங்கும்  சமுதாயத்தைப் பிரதிநிதிப்படுத்தும் மீராவின் கவிதைதான்:

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்-
வாசுதேவநல்லூர்.

நீயும் நானும்
ஒரே மதம்..
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட..

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்..
மைத்துனன்மார்கள்.

எனவே
செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

ஒரு கேள்வி: வழுவழுப்பான உயர்தரத் தாளில், கல்கி அளவில், 64 பக்கம், இருபதே ரூபாய்க்கு எப்படித் தர முடிகிறது, அந்திமழையால்? வாங்கி வாசிக்கும் நேயர்கள் அதிர்ஷ்டசாலிகள். தொலைபேசி: 044-43514540, 9443224834.

நான் ரசித்த கேள்வி-பதில்

கேள்வி:  ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளாரே? (ப.முரளி, சேலம்)

தராசு பதில்: மாணவர்களின் எதிர்காலத்தைச் சற்றும் மனத்தில் நினைக்காது எடுக்கப்பட்ட அரசியல் முடிவு இது. அறுபது சதவிகிதமே மிகக் குறைவு. ஆசிரியர்களின் தேர்ச்சியே, மாணவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை. ஆசிரியர் பணி என்பதை வெறும் நாற்காலி தேய்க்கும் வேலையாகக் கருதுவதால் வந்த வினை இது. கல்வி கற்பிப்பதுடன் மாணவர்களின் உடல், மன வளங்களைப் பெருக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
(நன்றி: கல்கி, 23 பிப் 2014  பக். 43)

சிரிப்பு

“காலிலே பெரிய பேண்டேஜோட இருக்கிற இந்த பேஷண்ட், ஒரு கிரிக்கெட் வீரர்ன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க?”

“பேண்டேஜ் மேல, குளிர்பான விளம்பரம் எழுதி இருக்குதே, அதை வச்சுத் தான்!”

(தினமலர் வாரமலர் 16 பிப் 2014 இதழில் பக்.21 – எழுதியவர்: பொன். பிரபாகரன். நன்றி!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa (எடுத்துக்காட்டுகள் நீங்கலாக)
Email: chellappay@yahoo.com

வியாழன், பிப்ரவரி 13, 2014

காதலனைக் குரங்கு என்று சொல்லலாமா? ( ‘அபுசி-தொபசி’-29)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி- வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்).
(அரசியல்-புத்தகம்-சினிமா-தொலைக்காட்சி-பத்திரிகை-சிரிப்பு)

அரசியல் 
தெலங்கானா அரசியல் என்னவாகுமோ என்று காங்கிரஸ் மட்டுமல்ல, பி.ஜே.பி.யும் கவலையுடன் இருக்கிறது. தெலங்கானா உருவானால் அது சீமாந்திராவில் உள்ள இவ்விரு கட்சிகளுக்கும் பலத்த அடி கொடுக்கும்என்பது உறுதி. இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைதான். தெலங்கானா உருவாவதை விடவும், ஹைதராபாத்தை தெலங்கானாவுக்கு விட்டுக் கொடுப்பதில் தான் சீமாந்திராக்காரர்கள் நொந்துபோகிறார்கள்.

சரியாக அறுபத்தோரு  வருடங்களுக்கு முன்னால், (1953)  இதே போன்றதொரு தலைநகர் பிரச்சினை தலைதூக்கியது. அந்த வருடம் தான் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டது. அப்போது, சென்னை நகரத்தை ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கவேண்டுமென்று தெலுங்கர்கள் சார்பில் காங்கிரஸ்காரர்கள் போராடினார்கள். அன்றைய தினம் அந்த ஒரு தலைவர் மட்டும் தமிழ்நாட்டில் இருந்திருக்காவிட்டால், சென்னைதான் ஆந்திராவின் தலைநகராக ஆகியிருக்கும். அந்தத் தலைவரை இன்று அனேகமாக எல்லாரும் மறந்துவிட்டார்கள். அவர் தான், ‘சிலம்புச் செல்வர்’ என்றும், ‘கிராமணியார்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்கள்.


 1953  ஜனவரி  3ஆம் தேதி, சென்னை நகரசபையில் இதற்கான தீர்மானம் கொண்டுவந்து, ம.பொ.சி. அவர்கள் ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையின் சிறு பகுதி இதோ:

சென்னைத் தமிழர்கள் சார்பாக மட்டுமல்லாமல், நகரிலுள்ள 14 லட்சம் பிரஜைகள் (‘குடிமக்கள்’) சார்பிலும் இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கிறேன்.(‘முன்மொழிகிறேன்’). சென்னையைப் பற்றியப் பிரச்சினை, ஆந்திரருக்கும் தமிழருக்கும் நடக்கும் மொழிச் சண்டையன்று; ஆதிக்கப் புத்திக்கும் நியாய உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டமாகும்......

காங்கிரசின் கொள்கைவழி ஆந்திரப் பிரிவினை பற்றி, பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கையை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆந்திரரைப் போன்றே தமிழரும் தனி மாகாணம் கோருகின்றனர். ஆந்திர மாகாணம் பிரிவது தமிழ் மாகாணம் அமைவதற்கான ஆரம்ப வேலையென்று நான் எண்ணுகிறேன். ஆகவே ஆந்திரப் பிரிவினையை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நான் வரவேற்கிறேன்.

ஆந்திர மாகாணத்தின் தலைநகரம் பற்றி, ஆந்திரத் தலைவர்களிடையே அபிப்பிராய ஒற்றுமையில்லை. மேலும், ராயலசீமை மக்கள் சென்னையில்லாத ஆந்திரப் பிரிவினையில் திருப்தியடையவில்லை. ஆகவே, அண்டை நாடான தமிழ்நாட்டின் தலைநகரைப் பறிப்பதில், ஆந்திரத் தலைவர்கள் முனைந்திருக்கின்றனர். ஆம், தர்மத்தை முன்னிட்டோ, நியாயத்தை முன்னிட்டோ ஆந்திரத் தலைவர்கள் சென்னையைக் கேட்கவில்லை. தேவையை முன்னிட்டும், ராயலசீமையாரை திருப்தி செய்விப்பதற்காகவும் சென்னையைக் கேட்கின்றனர்.

சென்னை, சந்தேகத்துக்கிடமில்லாமல் தமிழ்நாட்டின் உட்பகுதியாக இருக்கிறது. சென்னை நகரின் வடக்கேயும் தமிழ் நிலம்; தெற்கேயும் முழுத் தமிழ்நாடு; கிழக்கே வங்காளக் குடாக் கடல். இந்த நாற்பாங்கெல்லைக்கு நடுவே இருக்கிறது சென்னை நகரம். அப்படியிருக்க சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்கவேண்டுமென்று கேட்பது அரசியலுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாத ஆதிக்கக் கூச்சலாகும்.....

சென்னை நகரை, தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டால் இங்கு வாழும் தமிழர்களின் கதி என்னவாகும்? நான் சென்னையின் பூர்வகுடிமகன்; நான் தமிழன்; சென்னை உள்ளிட்ட தமிழ்நாடே என் தாய்நாடு. அப்படியிருக்க சென்னை நகரை தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவிட்டால், அண்டையிலுள்ள தமிழ்நாட்டிற்கு நான் அந்நியமாகி விடுகின்றேன். காவிரிக்கரையின் கலாச்சாரமும் எனக்கு அந்நியமாகிவிடும். அந்தக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு கதம்பக் கலாச்சாரத்துக்கு நானும் சென்னைத் தமிழர்களும் அடிமைப்பட்டுப் போவோம். அந்த அபாயத்துக்கு நான் இரையாக வேண்டுமா? அந்த அநியாயத்திற்கு நான் ஆதரவு கொடுக்க வேண்டுமா? ஒரு போதும் முடியாது. ஆந்திரர்களின் நியாயமற்றக் கோரிக்கை எங்கள் நெஞ்சைப் புண்ணாக்கி இருக்கிறது. வேதனையை பொறுத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாமென்று ஆந்திரத் தலைவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இந்தத் தீர்மானம், ஆந்திரர்களைத் தாக்குவதல்ல; அவர்களின் தாக்குதலிலிருந்து சென்னை நகருக்குத் தற்காப்புத் தருவது! உரிமை, உண்மை இரண்டுங்கலந்த தீர்மானம் இது.

ஆந்திரநாட்டில் சென்னையைப் போன்ற பட்டினம் எதுவும் இல்லையாம் ஆகவே, ஆந்திரத் தலைநகரை, தற்காலிகமாக இங்கு வைத்துக் கொள்ள இடந்தர வேண்டுமென்று ஆந்திரத் தலைவர்கள் கேட்கின்றார்கள்.

தற்காலிகமாகக் கூட ஆந்திர அரசாங்கம் சென்னையில் இருக்கக்கூடாது என்று ஆந்திரக் கம்யூனிஸ்ட்டுகள்  தீர்மானித்திருக்கிறார்கள். வேறு விஷயங்களில், நான் கம்யூனிஸ்ட்டுகளோடு கருத்து வேற்றுமை கொண்டவனாயினும், இந்த விஷயத்தில் ஆந்திரக் கம்யூனிஸ்ட்டுகளின் துணிவையும் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன்.

புதிதாக அமையும் ஒரு அரசாங்கத்திற்கு, முதல் தரமான தலைநகர் கிடைக்க முடியாது. அசாம் தனி மாகாணமாக ஆனபோது மூன்றாந்தரமான இடத்தில்தான் அதன் தலைநகரம் ஏற்பட்டது; ஒரிசா பிரிந்து தனி ராஜ்யமானபோது மூன்றாந்தரமான கட்டாக்கில்தான் அதன் தலைநகரம் அமைக்கப்பட்டது. அவசர முகாம்கள் போட்டே அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டன; ஒரிசா பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் புவனேஸ்வர் அதன் நிரந்தரத் தலைநகராயிற்று! ஏன், சென்னை நகரையே எடுத்துக் கொள்ளுங்கள்! மாகாண அரசாங்கம் சென்னையில் அமைந்தபோது இன்று காணும் வளம் அன்று இருக்கவில்லை! அரசாங்கம் அமைந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆன பிறகுதான், ஆண்டுக்கு ஆண்டு திட்டமிட்டு வளர்த்த பிறகுதான், இன்றுள்ள வளமான சென்னையைக் காண முடிகிறது. உண்மை இதுவாக, ஆந்திரம் அமையும்போதே அதற்குச் சென்னையைப் போன்ற முதல் தரமான தலைநகர் வேண்டுமென்று கேட்பது அரசியல் ஞானமற்ற, அனுபவ அறிவற்றக் கோரிக்கையாகும். நமது ஆந்திரத் தலைவர்கள், அவசரத்தில் வரலாற்று உண்மைகளைக் கூட மறந்து விடுகின்றனரே!

நான் ஆந்திரனாக இருந்தாலும் சென்னை நகரில் தற்காலிக இடம் கேட்பதை முழுமூச்சுடன் எதிர்த்திருப்பேன். ஏனென்றால், அது ஆந்திர மக்களின் சுயமரியாதையையே அவமானப்படுத்துவதாகும்.....

தற்காலிகமாக இடங் கொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்புறம் எப்போது, எப்படி அவர்களை சென்னையிலிருந்து வெளியேற்றுவது? இது, சட்டரீதியான சிக்கல். வெளியேற மறுத்தால், அல்லது தாமதித்தால் இரண்டு அரசாங்கங்களிடையேயும் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்த நிலையில், ஆந்திரர்- தமிழர் உறவு கெட்டுவிடும்; பகைமை முற்றிவிடும்; ஆகவே, உறவு கெடாமல் இருப்பதற்காக தற்காலிகமாகவும் இடங் கொடுக்கக்கூடாது என்பது எனது தீர்மானத்தின் குறிக்கோள். ஆந்திர நாட்டில், மக்களிடையே அசைக்கமுடியாத செல்வாக்கு பெற்ற ஒரு தலைவர் இல்லை. எந்த அரசியல்கட்சிக்கும் அங்கு நிலையான செல்வாக்கில்லை. இது, ஆந்திர நாட்டிற்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டந்தான். இந்த நிலையில், எந்தத் தலைவரின், அல்லது எந்தக் கட்சியின் வாக்குறுதியை நம்பி நாம் சென்னையில் இடங் கொடுப்பது!

இறுதியாக எனது வேண்டுகோள் இதுதான்!

ஆந்திரர்களே! நீங்கள் பிரிந்து போக விரும்புகிறீர்கள்; தாராளமாக வாழுங்கள்; எங்களையும் வாழவிடுங்கள்.

தமிழ்மக்களில் எவரும் எந்த நாடுகளிலும் ஆந்திரருக்கு விரோதமாக எதையும் செய்ததில்லை. இனிதும் செய்யப் போவதில்லை. பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்திற்குப் பிறகு, எங்கள் தமிழ் மக்கள் ஆந்திர நாட்டில் சிக்கி அல்லல்பட்டார்கள்; ஆந்திர வெறியர்களால் அடிக்கப்பட்டார்கள். அவர்கள் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எங்கள் சகோதரர்களுக்கு நேர்ந்த அந்தத் துன்பங்களைக் கேட்டு எங்கள் நெஞ்சு கொதித்தது. ஆயினும் சகித்துக் கொண்டோம்; ஆந்திரரும் எங்களைப் போன்றே இந்தியர்கள் என்ற காரணத்தால். எங்கள் சகிப்புத் தன்மையை மேலும் சோதிக்கவேண்டாமென்று ஆந்திரத்தலைவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்....

கடைசி ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை, ஆந்திரர்கள் சென்னையை அடைய முடியாது; தமிழ்நாட்டிலிருந்து அதைத் துண்டிக்கவும் முடியாது.

(நன்றி: ‘இளந்தமிழன்’ மாத இதழ்,மார்ச் 2011,  பக்.27-32.) (இந்த இதழை, மூத்த பதிவர், புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள் இல்லத்தில் கண்டெடுத்தேன். அவருக்கு என் சிறப்பு நன்றிகள்!)

புத்தகம்

காதலித்துவிட்டு, விரைவில் திரும்புவேன் என்று சொல்லித் தன் நாட்டிற்குச் சென்று விடுகிறான், காதலன். இவளோ, எப்போது வருவான் அவன் என்று கலங்கி நிற்கிறாள். சங்க இலக்கியங்களில் அகத்துறை நூல்களில் இதுபோல எண்ணற்ற காட்சிகள் உண்டு.

அண்மையில் முடிந்த புத்தகக் கண்காட்சியில் ‘குறிஞ்சிச் சுவை’ என்று ஒரு சிறிய நூலைத் தற்செயலாகப்  பார்த்தேன். அதன் ஆசிரியர் பெயர் கேட்டால் வியந்து போவீர்கள், அவ்வளவு நீ...ள...ம். ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா. தமிழில் தோய்ந்தெழுந்த புலவர். ஐங்குறுநூறு என்னும் சங்க நூலிலிருந்து, சில குறிஞ்சித்திணைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சுவையை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நூல். மீண்டும் என்னை மாணவப் பருவத்திற்குக் கொண்டுசென்ற நூல். (வெளியிட்டவர்கள்: ஜமாலிய்யா பதிப்பகம், மதுரஸதுல் ஹஸநைன் ஃபீ ஜாமிஆ யாஸின் அறபுக் கல்லூரி, சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குளத்துப்பட்டி அஞ்சல், மணப்பாறை ரோடு, திருச்சி-620009. Ph. 0431-2914554; 9952689099.) (பக்.92, ரூ.60).


ஒரு கேள்வி: யாராவது பதில் சொல்லுங்களேன்: அந்தக் காலத்தில் பூலாங்குளம் மாயவநாதன் என்றொரு திரைக் கவிஞர் இருந்தார். (வாலி அவர்கள் மரணமடைந்த சமயம் இவரும் மறைந்தார்.) ‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இவரது  ‘தண்ணிலவு தேனிரைக்க, தாழைமரம் நீர்தெளிக்க’ என்ற இனிமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். திருமணத்திற்குச் சிலநாட்கள் முன்பு, இதே பாடல், எனக்கு மனைவியாகப் போகிறவருக்கும்  மிகவும் பிடிக்கும் என்று அறிந்து மகிழ்ந்துபோனேன். (இப்படிச் சொல்வதால், திருமணத்திற்குப் பின் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறவேண்டியவனாகிறேன்.) அந்தப் பூலாங்குளம் தான் இந்தப் பூலாங்குளத்துப்பட்டியா?

“அசோக மரத்தின் பவளம் போன்ற செந்நிற எழில் தளிர்களை, செந்நிறத் தலையுடைய  பெண்குரங்கின் குறும்புத்தனமுள்ள குட்டி உண்ணுவதான  மலைவளத்தை உடைய நாட்டுக்குத் தலைவனே,   நீ பிரிந்து செல்வாய் என்றால், தலைவி, என்னைவிடக் கண்கலங்குவாள்” என்கிறாள், தோழி. அதாவது, தன் தோழியான தலைவியின் மேல் இவள் வைத்த அன்பானது, அவளுடைய காதலன் பிரிந்துபோய்விடுவானோ என்று கலங்கவைக்கிறது. அப்படி என்றால், அந்தத் தலைவியின் துக்கம் எவ்வளவு தீவிரமானதாயிருக்கும்- என்பது கருத்து.

அத்தச் செயலைத் துப்புற ழொண்டளிர்
புன்றலை மந்தி வன்பறழாரும்
நன்மலை நாட, நீ செலின்,
நின்னயந் துறைவி யென்னினுங் கலிழ்மே.(273)

அடுத்துவரும் பாடலைக் கவனியுங்கள். இதில் தோழி பேசவில்லை. தலைவியே பேசுகிறாள். (தலைவன் பிரிந்து சென்றுவிட்டான்.) “எப்படி, வலிமிக்க புலியின் ஒலிகேட்டு ஆண் குரங்கு (‘கடுவன்’) அஞ்சி விரைந்தோடி உடனடியாய் மலையின் உயர்ந்த, பக்கவாட்டிலுள்ள,  மலைகளில் பாய்ந்து பற்றிக்கொள்ளுமோ, அத்தகைய மலைவளம் உடைய நாட்டின் தலைவன், என்னை விட்டுவிட்டுப் போய்விட்டான். போகும்போது, என் மென்தோளின் எழிலையும், என் (விழிகளிலிருந்து) துயிலையும் எடுத்துச் சென்றுவிட்டான்” என்கிறாள், தோழியிடம்.

அதாவது, புலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்) தான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி, (என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக் கேட்டதும் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள். காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம் அந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்! என்னே நம் தமிழ்ப் பண்பாடு!

மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்
குன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மென்தோள் கவினும் பாயலும் கொண்டே. (274)

இவர் மாதிரி சங்கத்தமிழ்ப் பாக்களை நமக்கு அறிமுகம் செய்வித்துத் தொண்டாற்றும் இஸ்லாமியப் புலவர்கள் இன்னும் எத்தனை பேரோ! வாழ்க அவர்தம் தமிழ்த்தொண்டு!

சினிமா

“தமிழில் படம் தயாரித்ததற்காக வெட்கப்படுகிறேன்! கண்ணீர் விடுகிறேன்!”
என்கிறார் ஒரு தயாரிப்பாளர். அவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர் என்பது தான் நமக்கு வேதனையை அதிகப்படுத்துகிறது. ‘அவனுக்கென்றொரு மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அவர். முழுதும் படிக்க:

தொலைக்காட்சி :

இளையராஜாவின் இளையமைந்தரும் நூற்றுக்கு மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளவருமான யுவன் ஷங்க்கர் ராஜா, திடீரென்று தான் முஸ்லீமாக மாறிவிட்டதாக அறிவித்திருக்கிறாராம். இதுபற்றிய ஈழத்தமிழர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை இங்குத் தருகிறேன்: (யுவனின் முதல் மனைவி ஓர் ஈழத்தமிழராம்.)

யுவன் சங்கர் இனிமேல் தப்பு (Duff) மட்டும் தான் வாசிப்பாரா?

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் இஸ்லாத்துக்கு  மாறியது புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்களுக்கு  மிகவும்  அதிர்ச்சியைக்  கொடுத்திருக்கும் விடயமாகும். இசையமைப்பாளர்  இளையராஜாவுக்கும்  அவரது மகனுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த அபிமானம்  உண்டு,  எந்த மதத்துக்கும் மதம் மாற எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம் இருந்தாலும் கூடஅவரது  மகன் இஸ்லாத்துக்கு  மதம் மாறியது,  ஈழத் தமிழர்களுக்கும் 
அவருக்குமிடையே  ஒரு  நிரந்தர  இடைவெளியை  ஏற்படுத்தி விட்டது போல் தெரிகிறது. இஸ்லாமை தமது மதமாகக் கொண்ட ஈழத்தமிழர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. 

இசையமைப்பாளர் திரு. இளையராஜா கனடாவுக்கு வருகை தந்த போது கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தி, கனடாத் தமிழர்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராகிய செல்வி. ராதிகா சிற்சபேசன் அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். கனடாவின் கொடியை அவர் மீது போர்த்தியது தவறாக இருந்தாலும் கூட, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் அவருக்கு எந்தளவுக்கு அன்பும், மரியாதையும் உண்டு என்பதை அது காட்டுகிறது. 
தமிழ்நாட்டில் எப்படி இருந்தாலும், ஈழத்தில் முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்களும்,  அவர்களின் அரசியல்வாதிகளும் ஒரு போதும் ஈழத் தமிழர்களுடன் ஒத்துழைத்ததில்லை.  இன்றும் சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின்  நலன்களுக் கெதிராகத்தான் இயங்குகிறார்கள். தமிழ்நாட்டு முஸ்லீம்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த  ஈழத் தமிழர்களைத் தவிர ஏனைய ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாகத்தான் 
அடையாளப் படுத்துகிறார்கள்  என்ற உண்மை தெரியாது......

 தமிழ்நாட்டு முஸ்லீம்கள், இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக 
கொல்லப்பட்ட போது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் எதையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, .... இலங்கை அரசுக்கு ஆதரவாக, முஸ்லீம்களுக்கு  மத்தி(யி)ல் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். அதனால்  இனிமேலும் புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்கள்  யுவன் சங்கரை  ஆதரிக்க  வேண்டுமா என்றகேள்வி எழுவது தவிர்க்க முடியாதது(என் கேள்வி: இதனால் யுவனுக்கு என்ன நஷ்டம்?)

அது ஒருபுறமிருக்க, இசை(Music), சங்கீதம் என்பனவற்றுக்கு இஸ்லாத்தில் 
அனுமதி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். அந்த விடயத்தில் 
இணையத்திலுள்ள காணொளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் 
போது அது உண்மை போல்தான் தெரிகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்,  சூஃபி இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவராக  இருக்கலாம்ஏனென்றால் தர்கா வழிபாடு, 
ஞானிகளை நம்புவது எல்லாம், தீவிர வாத வஹாபிய இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதுஉண்மையில் இஸ்லாத்தில் இசை, ஹராமா இல்லையா என்ற விடயம் ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்த விடயத்தில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் கருத்தையறிய அவரது 
காணொளிகளைத் தேடினேன்.  கிடைக்கவில்லை. 

புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகர்  Dr. Zakir Naik இன் கருத்துப்படி, தப்பு அல்லது-Duff (Tambourine) மேளத்தைத் தவிர, வேறு இசைக்கருவிகளை இசைப்பது ஹராம்,அதாவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அப்படியாயின் யுவன்சங்கர் இனிமேல் தப்பு   (Tambourine) வாத்தியத்தை மட்டும் தான் 
வாசிப்பாரா/அடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. 

(பாவம், ஈழத்தமிழர்கள்! இது யுவன் என்ற தனி மனிதனின் முடிவு என்று விலகிப்போய்விடலாமே, ஏன் செய்யவில்லை? தமிழ்மீதும் தமிழ் இசைமீதும் அவர்கள் வைத்த அன்பும் பற்றுமல்லவா இப்படிப் பேசவைக்கிறது! யார்மீது நம்பிக்கை வைத்தாலும், யார்மீது அன்பு செலுத்தினாலும்  அவர்களால் கைவிடப்படுகிறார்களோ ஈழத்தமிழர்கள்?)

முழுவதும் படிக்கவும், இக்கட்டுரைக்கு வந்த எதிர்த்தரப்பின் மறுமொழிகளைக் காணவும் சொடுக்கவும்:  http://viyaasan.blogspot.in/2014/02/duff.html )
பத்திரிகை

இந்த மாதம் அமுதசுரபியில் நான் ரசித்த கேள்வி-பதில்

கேள்வி: புதிது புதிதாக ஏராளமான சிறுபத்திரிகைகள் வருகின்றனவே, அவற்றைப் பற்றி? (ஆர்.கலைவாணி, பொள்ளாச்சி)

அமுதசுரபி ஆசிரியர்- திருப்பூர் கிருஷ்ணன் பதில்:
நண்பர்களை எழுத்தாளர்களாக ஆக்குவதற்காகப் பத்திரிகை நடத்தக் கூடாது. எழுத்தாளர்களை நண்பர்களாக்கிக்கொண்டு பத்திரிகை நடத்தவேண்டும். எழுதத் தெரியாத தங்கள் நண்பர்களின் நாலாந்தரப் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் போக்கைப் பல சிற்றிதழ்களில் காண முடிகிறது. நா.பா.வின் தீபம், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா போன்ற பழைய இதழ்களை ஊன்றிக் கவனித்தால் சிறுபத்திரிகைகளை எப்படி நடத்தவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சிரிப்பு

92 வருடமாகியும் சில விஷயங்கள் மாறவேயில்லை!

1922 ஆம் வருடம், ரீடர்ஸ் டைஜெஸ்ட் தனது முதல் இதழை வெளியிட்டது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்டுரையின் தலைப்பு: “எப்படிப்பட்ட கணவர் நீங்கள்?”

அதில், தம்முடைய பொருட்கள் வீட்டுக்குள் எங்கெங்கே கிடக்கும் என்பதைக் கூட கணவர்களால் ஏன் கண்டுபிடித்துக்கொள்ள முடிவதில்லை என்று அங்கலாய்க்கிறாள் ஒரு மனைவி.

“ஏன் தெரியுமா? அவர்களெல்லாம் ஆண்கள்!” என்று பதில் சொன்னாளாம்,  இன்னொரு மனைவி.

(நன்றி: ரீடர்ஸ் டைஜெஸ்ட் –பிப்ரவரி  2014 பக். 95)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa