(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
கடைசியாக NDTV நடத்திய கருத்துக்கணிப்பில்
நரேந்திர மோடி அநேகமாக 259 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறக்கூடும் என்றும்,
சுயேச்சைகள் 17 இடங்களில் ஜெயிக்கக்கூடும் என்றும் தெளிவாகியுள்ளது. இரண்டையும்
கூட்டினால் மோடிக்கு வேண்டிய அறுதிப் பெரும்பான்மையான 273 இடங்கள் எளிதாகக்
கிடைத்துவிடும். எனவே, பிரதமர் பதவிமேல் ஆசை கொண்டிருந்த ஜெ.யின் கனவு நிச்சயமாகத்
தகர்ந்துபோவது மட்டுமல்ல, அஇஅதிமுக ஆதரவில்தான் மோடி அரசு பதவியேற்கமுடியும் என்ற
அடுத்த எதிர்பார்ப்பும் நிறைவேறப்போவதில்லை.
ஜெ.யின் மூன்றாவது அனுமானமான,
காங்கிரசுக்கு அடுத்தபடியாக ‘தனிப்பெரும்’ குழுவாக அஇஅதிமுக இருக்கும் என்பதும்
தகர்ந்துபோகலாம். ஏனெனில், ஜெ.யை விட, மம்தா அம்மையாருக்கு அதிக இடங்கள்
கிடைக்கும் என்று NDTV
கணிப்பு
கூறுகிறது.
மேற்படி விவாதத்தில் பிரணாய் ராய்
கூறியபடி, தேர்தல் நெருங்க நெருங்க, எந்தக்
கட்சியையும் சாராத ‘ஊசலாடும்’ வாக்காளர்களில் சுமார் 1% பேர், அதிகம் வெற்றி
பெறக்கூடும் என்று கருதப்படும் கட்சிக்கு ஆதரவாகத் திரும்பும் சாத்தியக்கூறு
இருக்கிறதாம். ஆகவே, மோடி சுமார் 300 இடங்களில் வெல்வதும் கூட சாத்தியமாகலாம்
என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், எவ்வளவு இடங்களில் அவர்கள் ஜெயிக்கிறார்கள்
என்பதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. உலக அரங்கில் முதுகெலும்பில்லாத அரசாக
ஏளனமாகப் பார்க்கப்படும் சோனியா-மன்மோகன் அரசுக்கு மாற்றாக இனி வரப்போகும் எந்த
அரசும், தனிப் பெரும்பான்மையுடன் வரமுடிந்தால், அதுவே அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகச் சரியான சமிக்ஞையை
அனுப்புவதாக அமையும். ரூபாயின் மதிப்பு பலப்படுவதோடு, உறுதியான பொருளாதாரச்
சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கும் வழிவகுக்கும். நாட்டில் நிலவும் POLICY PARALYSIS என்னும் ‘கொள்கை முடக்க நோய்’ விரைவில்
கட்டுப்படுத்தப்படுவதற்கும் பாதை அமையும்.
புத்தகம்
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ‘HISTORICAL
RAMA’ என்ற தலைப்பில் சென்னை திநகர் தக்கர்பாபா
பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சியை 05-04-2014 சனிக்கிழமை
மாலை கேட்டேன்/கண்டேன். பத்ரி சேஷாத்ரியும் நண்பர்களும் மாதம்தோறும் முதல்
சனிக்கிழமையன்று இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்களாம்.

இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10
ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்
வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்!
(5114 + 2014 = 7128).
இந்த ஆராய்ச்சிக்கு வானவியல் மென்பொருள் மிகவும்
பயன்பட்டது என்றார் ஹரி. இராமாயணத்தில் கூறப்பட்ட வானவியல் சான்றுகளை, மேற்படி
மென்பொருள்மூலம் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதால் கிடைத்த தகவல்கள் இவை:
- நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன்,
சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது, கி.மு.
5077 அக்டோபர் 7 ஆம் தேதி.
- வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076
ஏப்ரல் 03ஆம் தேதி.
- ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி:
கி.மு. 5076 செப்டம்பர் 12.
- சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (‘கிஷ்கிந்தா’)
புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.
- அது ராவணன் கோட்டையை அடைந்தது:
கி.மு. 5076 அக்டோபர் 12.
நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன்
உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற்காகக் கட்டப்பட்ட பாலம் (‘ராமசேது’) எத்தகைய தொழில்நுட்பத்துடன்
வடிவமைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாகும்.
இன்னும் பல செய்திகளைப் பற்றிச் சுருக்கமாகத்தான்
பேசமுடிந்தது ஹரியால். நேரமின்மைதான் காரணம். எனவே தனது புத்தகங்களைப் படித்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார். HISTORICAL RAAMA என்ற
பெயரிலேயே புத்தகம் வந்துள்ளது. பார்க்கவும்:
அதுபற்றியும், இன்னும் அதிகத் தகவல்களுக்கும் நீங்கள் பார்க்கவேண்டிய அவரது இணையதளம்: www.bharathgyan.com
(தன் மனைவி வந்திருந்தால் இன்னும் சில தகவல்களைச் சிறப்பாகத் தந்திருப்பார் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார் ஹரி.)
ஒருநல்ல நிகழ்ச்சிக்குக் காரணமாயிருந்த பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி. என்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்து ரசித்த நண்பர் ஜனார்த்தனன் – விமலா ஸ்ரீராம் தம்பதிக்கும் நன்றி.

(திருமதி விமலா ஸ்ரீராம், இந்திரா
பார்த்தசாரதியின் ‘சுதந்திர தாகம்’ நாவலை INTO THE HEAVEN OF FREEDOM என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
கிழக்கு பதிப்பகத்தின் NHM வெளியீடு.
பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ நாவலையும் அவர் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்.)
சினிமா
முன்பெல்லாம் எஸ்.எஸ்.வாசனும், ஏ.வி.எம்.மும் தான்
படம் எடுக்க வருவார்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இன்று படம்
எடுக்கும் கருவிகளும் அவற்றைக் கையாளும் திறமும் எளியவர்களுக்கும் கைவந்திருக்கிறது.
எனவே, குறும்படம் என்ற பெயரில் குறைந்த செலவில் படம் எடுத்து, தம்மை
வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது.
அண்மையில் இம்மாதிரியான இரண்டு குறும்படங்களைப்
பார்த்தேன். ஒன்று, ‘மகாமுடி’ - MAHAMUDI;
இன்னொன்று: PAROLE. – பரோல்.
‘மகாமுடி’ என்பது கேரளத்தின் மாகாபலிச் சக்கரவர்த்தியின்
கதை. ‘பரோல்’ என்பது சமூக உளவியல்
சார்ந்த சிந்தனையைக் கிளறும் சிறுகதை. இரண்டையுமே எழுதி, உருவாக்கி, நடித்தும், இயக்கியும் இருப்பவர் யார் தெரியுமா? நம் வலைப்பதிவர்களுக்கு
நன்கு அறிமுகமான திருவாளர். துளசிதரன் தில்லையகத்து அவர்கள்! (http://thillaiakathuchronicles.blogspot.com)
பள்ளியில் மாணவர்களுக்குப் பாடமாக
நடத்துவதற்குத்தான், இப்படங்களைத் தம் சொந்த செலவில் தயாரித்து, வெளியிட்டிருக்கிறார்,
துளசிதரன். எத்தகைய இலட்சியவாதி பாருங்கள்!
‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்பது
எல்லோர் கண்களையுமே குருடாக்கிவிடும்’ என்று மகாத்மா காந்தி கூறிய கருத்தே, ‘பரோல்’ குறும்படத்தின் அடிநாதம். உடற்குறை உள்ளவர்களுக்கு ( PHYSICALLY CHALLENGED) நாம் சிகிச்சை யளிக்கத் தயாராக இருக்கிறோம்; உணர்வுக்குறை உள்ளவர்களுக்கு ( EMOTIONALLY CHALLENGED) அப்படிச் செய்கிறோமா? என்று கேட்கிறார் துளசிதரன்.
ஒரு சிறுமியைப் பலவந்தப்படுத்திக் கொன்றுவிடுகிறான்
ஒரு மாணவன். அது தெரிந்து ஆக்ரோஷத்துடன் அவனைக் கொன்றுபோடுகிறார் சிறுமியின் தந்தை. அதனால் ஜெயிலுக்குப் போகிறார். நிம்மதியில்லை. ஜெயிலில் அவருடன் இருப்பவன்
சொல்கிறான்: ‘நாம் கொலைகாரர்கள். திரும்பவும் வெளியே போனால் ஒருவரும் சேர்க்கமாட்டார்கள்.
ஒதுக்கிவிடுவார்கள். நமக்குள்ள ஒரே வழி,
தற்கொலை செய்துகொண்டு உலகைவிட்டே போவதுதான்.’
இவர் பரோலில் வருகிறார். எல்லோரும் இவரைக் கண்டு
ஒதுங்குகிறார்கள். தனிமைப்படுத்தப்படுகிறார். சமூகம் இவரை வெறுக்கிறது. யாருக்கும்
தெரியாமல், ஒரு மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள
முயல்கிறார். அப்போது அவரை ஓடிப்போய்த் தடுக்கிறார், கொல்லப்பட்ட மாணவனின் தந்தை. ‘உன் உயிரை நீக்கிக்கொள்வதால்
எந்தப் பயனும் இல்லை. திருந்தி வாழவேண்டும்’ என்கிறார். இக்கதாபாத்திரத்தில் வருபவர்தான், துளசிதரன்.
அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (அவர் மனைவியும், மகளும் கூட!) அது
மட்டுமன்றி, படத்தில் நடிக்கும் அனைவரிடமிருந்தும் நல்ல நடிப்பை வெளிக்கொணரும்
முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள், தில்லையகத்து துளசிதரன் அவர்களே!
தொலைக்காட்சி :
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (06-04-2014
ஞாயிறு) விஜய் டிவியில் ‘நீயா நானா’ பார்த்தேன். அதுவும் தற்செயலாகத்தான்.
இல்லையெனில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே T-20 கிரிக்கெட் இறுதிப் பந்தயம் டாக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ‘நீயா நானா’வை யார் பார்க்கப் போகிறார்கள்!
![]() |
கோபிநாத் -திருமணத்தில் |
நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கேள்விகளில் சில:
கேள்வி (1): தனியாக இருப்பதை விரும்புகிறீர்களா, உங்கள்
பிள்ளை/பெண்களுடன் வாழ்வதை விரும்புகிறீர்களா?
விடை: பிள்ளை/பெண்களுடன் சேர்ந்து வாழ்வதையே
விரும்புகிறோம். ஆனால், வேலை நிமித்தம் அவர்கள் வெளியே போய்விடுகிறார்களே! எனவே
தனியாக வாழ்வது தவிர்க்க முடியாமல் போகிறது.
கேள்வி (2): நீங்கள் உங்கள் குழந்தைகளை எந்தவிதமான அன்பும்
கரிசனமும் காட்டி வளர்த்தீர்களோ, அதே மாதிரி அன்பையும் கரிசனத்தையும் உங்கள்
பிள்ளைகள்/பெண்கள் உங்களிடம் இந்த வயதில் காட்டுகிறார்களா?
விடை: நிச்சயமாக இல்லை.
(ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண்மணி
மிகத்தெளிவாகச் சொன்னார்: ‘நாங்கள் அவர்களுக்குக் காட்டிய அன்பையும் கரிசனத்தையும்
அவர்கள, தங்கள் குழந்தைகளிடம் நிச்சயம் காட்டுகிறார்கள். சந்தேகமேயில்லை. ஆனால்,
எங்களிடம்தான் காட்டுவதில்லை.’)
கேள்வி (3): பேரக் குழந்தைகளை வளர்க்கும் பணிக்காக உங்களை,
உங்கள் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதை இன்பமாகப் பார்க்கிறீர்களா,
துன்பமாகப் பார்க்கிறீர்களா?
விடை: குறுகிய காலம் என்றால் அது இன்பமே. பேரன்களும்,
கொள்ளுப் பேரன்களும் சூழ்ந்திருக்கும் வாழ்க்கை மிகவும் இன்பமானதே. ஆனால்,
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பணியே நமக்கு முதன்மையான பணியாய்
இருந்துவிட்டால், வயதான காலத்தில் அது ஒரு சுமையாகத்தான் அமைந்துவிடுகிறது.
(உதாரணமாக: குழந்தையைத் தூக்கிக்கொள்ளவும், ஓடும் குழந்தையைத் துரத்திப்
பிடிக்கவும் உடலில் வலிமை இல்லாமல் போதல்.)
கேள்வி (4): அறுபது வயதுக்கு முன்பு, அறுபது வயதுக்குப்
பின்பு – என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விடை: அறுபது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவோம்
ஆதலால், ஐந்துமணிக்கே எழுந்து அடுப்பு பற்றவைக்கவேண்டியதில்லை. செய்தித்தாளை
முழுமையாகப் படிக்கலாம். காலைவேளையிலும் டிவி பார்க்கலாம். நினைத்த இடத்திற்குச்
சென்று வரலாம். டென்ஷன் குறைவு. வயதானவர்கள் என்றால் மக்கள் பொதுவாக மரியாதை
கொடுக்கிறார்கள்.
(இந்த இடத்தில், 77 வயதான பாரதிமணி ஒரு ஜோக்
அடித்தார். எப்போதும் கைத்தடி வைத்திருக்கும் அவரைக் கண்டால் இளம்பெண்கள் ஓடிவந்து
கைபிடித்துச் சாலையைக் கடக்க உதவுகிறார்களாம்.
‘அவர்களின் கையை விடுவதற்கே மனம் வருவதில்லை’ என்று சிரித்தார் அவர்.)
கேள்வி (5): வயதானவர்களுக்கு வரும் நோய்களை எப்படி
எதிர்கொள்கிறீர்கள்?
விடை: கூடியவரையில், செலவு அதிகம் வைக்காத அக்குப்பஞ்சர்,
யோகா முதலியவற்றை மேற்கொள்கிறோம். ஆனால், இதயநோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட
நோய்கள், கை கால்களை முடக்கும் ஆர்த்ரைட்டிஸ், மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் எங்களை இயங்கவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, சுயபச்சாதாபம்
கொள்ளவும் வைக்கின்றன. இதனால் ஓரிடத்திலேயே அடைந்துகிடப்பது தவிர்க்கமுடியாத
விஷயமாகிறது.
(ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில்
தொண்ணூறு சதம்பேர் நடுத்தர, மேல்-நடுத்தர வர்க்கத்தினராக இருந்தபடியால், மேற்படி
நோய்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி தங்களுக்கு இருப்பது இறைவன்
கொடுத்த வரம் என்றனர். தம் குழந்தைகளும் போதுமான அளவுக்கு நிதிஉதவி செய்வதாகக்
கூறினார். ஆனால், தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பயன்படவேண்டிய பணத்தை,
வயதான தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பது குற்ற உணர்ச்சியை
ஊட்டுவதாகத் தெரிவித்தனர்.)
கேள்வி (6): தனிமையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அறுபது
வயதுக்குப் பிறகு புதிதாக ஏதேனும் கற்றுக்கொண்டீர்களா?
விடை: சிலர், கீபோர்டு கற்றுக்கொண்டனர். சிலர் கார்
ஓட்டக் கற்றுக்கொண்டனர். சிலர் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்
கற்றுக்கொண்டனர். சிலர், ஒத்த கருத்துடைய சங்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
பாரதிமணி, தான், அறுபது வயதுக்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்ததாகக் கூறினார்.
கேள்வி (7): உங்களிடம் உள்ள சொத்து – வீடு, பணம் முதலியன –
பற்றிய உங்கள் பார்வை என்ன?
விடை: வயதானவர்களின் சொத்துக்கள் சாகும்வரையில் அவர்கள்
பெயரிலேயே இருப்பதுதான் நல்லது. (சோம. வள்ளியப்பன் இதைத் தீவிரமாக ஆதரித்தார்.) ஆனால்,
தன் பிள்ளை, பெண்களுக்கு இன்னின்ன சொத்து தரப்படும் என்பதை முன்கூட்டியே
அறிவித்துவிடுவது நல்லது. (அதாவது உயில் எழுதி வைத்துவிடுதல்.)
![]() |
பி.ஏ.கிருஷ்ணன் - எழுத்தாளர் -(படம்: நன்றி: இணையம்) |
எனவே, ‘தனிமையை வெற்றி கொள்ளுதல்’
என்பதுதான் அறுபது வயதுக்குப் பிறகு மனிதன் எதிர்கொள்ளும் தீவிரமான சவால் என்று
தெரிந்தது.
‘நம் நாட்டில், பெரும்பாலானவர்களிடம், அறுபது
வயதுக்குப் பிறகு எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய திட்டமிடல் இல்லவே இல்லை
என்பது அபாயகரமானதாகும்’ என்று சொல்லி விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் கோபிநாத்.
திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது, கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோமே, என்ன
ஆயிற்றோ என்று. இந்தியா தோற்றுப்போயிருந்தது. பலநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ‘நீயா
நானா’வைப் பார்த்த திருப்தியில் இருந்த எனக்கு, இத்தோல்வி பெரிதாகப் படவில்லை. வாழ்த்துக்கள்,
கோபிநாத்!
பத்திரிகை
2000களின் ஆரம்பத்தில் பெங்களூரில் இருந்தேன். அப்போதுதான் 'டைம்ஸ் ஆப். இந்தியா' தனது பெங்களூர் பதிப்பைத் தொடங்கியிருந்தது. இந்தியப் பத்திரிகைகளிலேயே அதிக பணபலம் உடைய டைம்ஸ், PREDATORY MARKETING என்ற உத்தியைப் பயன்படுத்த முனைந்தது. அதாவது, அன்று, டெக்கன் ஹெரால்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து -இவையெல்லாம் இரண்டரை முதல் மூன்று ரூபாய் விலையில் வந்துகொண்டிருக்கையில், டைம்ஸ், தன் விலையை வெறும் ஒரு ரூபாயாகக் குறைத்தது. எதிர்பார்த்தபடியே விற்பனை கிறுகிறுவென்று கூடியது. வாசகர்கள் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்று நம்பிய மற்ற மூன்று பத்திரிகைகளும் விற்காமல் தேங்கின. வேறு வழியின்றி அவையும் தங்கள் விலையைக் குறைத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஓராண்டுக்குமேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தங்கள் வழக்கமான விலைக்கு மீண்டும் தாவினார்கள். ஆனால் அதற்குள் டைம்ஸ், பெங்களூரில் அதிக விற்பனையாகும் இதழ் என்ற நிலையை எட்டிவிட்டது. இன்றுவரை அதுதான் 'லீடிங்.'
சென்னையில் அதுபோல் தனது பதிப்பைத் தொடங்கியவுடன் டைம்ஸ் ஆப் இந்தியா இன்னொரு புதிய உத்தியையும் கடைபிடித்தது. வீடுவீடாகச் சென்று 'ஆண்டுச் சந்தா வெறும் 299 ரூபாய்' என்று வசூலிக்கத் தொடங்கினார்கள். கடந்த மூன்று வருடங்களாக நான் அவர்களின் வலையில் விழாமல் கழன்றுகொண்டே வந்தேன். காரணம், டைம்ஸில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கும். நல்ல வெளிச்சம் இல்லாத நிலையில் படிக்கவே முடியாது. காகிதம் மிகவும் திராபையான காகிதமாக இருக்கும். செய்திகளை எடுத்து வழங்குவதிலும் (PRESENTATION), எந்தப் பக்கத்தில் எந்தவகையான செய்திகளை அச்சிடுவது என்பதில் ஒரு தொடர்ச்சி (CONSISTENCY) இல்லாமலும் இருக்கும். ஆனால் சென்ற வாரம் அந்த '299 ரூபாய்க்கு ஒரு வருடச் சந்தா' வியாதிக்கு நானும் இரையானேன்.
இரண்டு காரணங்கள்: ஒன்று, அந்த விற்பனையாளருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியிருந்தது. இரண்டு, பத்திரிகையைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அப்படியே வாங்கிவைத்துக்கொண்டு, பழைய பேப்பர்காரரிடம் போட்டாலும் மாதம் இருபது ரூபாய் திரும்பக் கிடைத்துவிடும். அதாவது, மாதம் ஒன்றுக்கு நிகரச் செலவு வெறும் ஐந்து ரூபாய்க்கும் குறைவு. (இந்த இரண்டாவது தான் வலிமையான காரணம். இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எனது குடியிருப்பிலுள்ள ஒரு நண்பர்.) இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியாகும் பத்திரிகைகளில் நேர்மை, நீதி, நியாயம் என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
சிரிப்பு:
"காங்கிரசுக்கு இனி வசந்த காலம்தான்...."
கரூரில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சரும், இத்தேர்தலில் போட்டியிட முன்வராதவருமான ஜி.கே.வாசன் பேச்சு. (தமிழ் இந்து - 6-4-2014 பக்கம் 7)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால்,
கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’
அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa
Email: chellappay@yahoo.com