பதிவு 08/2018
தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்
அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட
வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனின் புதியதொரு கவிதை தொகுப்பு.
தன் பதின்மூன்றாவது வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட
எம்.எஸ்.பி.முருகேசன், வெளிச்சம் பெற்றது அவரது 19ஆம் வயதில் குமுதத்தில் வெளியான ‘வெளிச்சம்
விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலமே. அப்போதே அவருக்குள்ளிருந்து ‘வையவன்’
பிறந்துவிட்டார். மூன்று கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் தளர்வின்றி எழுதிக்கொண்டிருக்கும்
வையவன், தற்காலக் கணினி யுகத்திற்கேற்பத்
தன்னை மாற்றிக்கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் அவர் கணினியைத் தவிர வேறெதிலும்
எழுதுவதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ‘மணல்வெளி மான்கள்’ என்ற
நாவலின் விமர்சனக் கூட்டம் சென்னை டேக் சென்ட்டரில் நடைபெற்றபோதுதான் நேரடியாக அவருடன்
அறிமுகமானேன். (அதற்கு முன்னதாக அவரைக் கல்கியில் தொடர்ந்து எழுதும் நாவலாசிரியராகத்தான்
தெரியும். என்னுடைய வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பதால் அவர்மீது சிறப்பான
ஈடுபாடும் உண்டு.)
அவருடைய ‘ஜங்ஷனில் ஒரு மேம்பாலம்’ , மற்றும் ‘ஜமுனா’ என்ற
இரண்டு நாவல்களையும் மீண்டும் படிக்கவேண்டுமென்று துடிக்கிறேன். என்ன செய்வது,
அவரிடமே அந்தப் பிரதிகள் இல்லை. நூலகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். (உங்களிடம் இருந்தால் எனக்குத் தெரிவிப்பீர்களா?)
ஒரு பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் இப்படியா இருப்பீர்கள் என்று அவரைச் செல்லமாகக்
கண்டித்தேன். ‘ஆசைமுகம் மறந்து போச்சே- இதை ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்ற பாரதியார்
பாட்டைப் பாடினார் வையவன். பலமுறை வீடு மாற்றநேர்ந்ததால் புத்தகங்கள் சுமையாகக்
கருதப்பட்டு, விடைகொடுக்கப்பட்டதை வலியோடு சொன்னார். விடுங்கள், மின்புத்தகமாக ஆக்கிவிடலாம் என்று
ஆறுதல் சொன்னேன். அதற்கும் யாராவது ஒரிஜினல் பிரதியைக் கொடுத்து உதவவேண்டுமே!
(எனக்காக அவர் எடுத்துக்கொண்ட இலக்கிய முயற்சிகள் சிலவற்றைப் பற்றிப் பின்னொருநாளில்
எழுதுவேன். அவரது நெடிய இலக்கிய வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் குறித்தும்
பின்னால் எழுத முயலுவேன்.)
(சிறப்புத் தகவல்: சொந்தமாகக் கணிப்பொறியும் சுயவெளியீட்டு
மென்பொருளும் அவர் வசமுள்ளதால், இப்போதெல்லாம் தன்னை அணுகும் எழுத்தாளர்களுக்குச்
சில நாட்களிலேயே அச்சுப் புத்தகம் வெளியிட்டுக் கொடுக்கிறார் வையவன். மிக மிகக்
குறைந்த செலவில்.)
அடையாறு காந்திநகரில் அவர் வசிப்பதால் இப்போதெல்லாம்
அடிக்கடி அவரைச் சந்திக்க முடிகிறது. அப்படியொரு பொன் காலைப் பொழுதில், அவரே அண்மையில்
வெளியிட்ட தனது கவிதைத்தொகுதியை எனக்குக் கொடுத்தார் வையவன். புத்தகத்தின் அட்டை
பச்சை பசேல் என்று கண்ணைக் கவரும்விதமாக அமைந்திருந்தது.

விநாயகம்: Your days are numbered.
அண்ணா: My steps
are measured.
முதல் பார்வையில் வையவனின் தலைப்பிலுள்ள ‘தேதி
குறிக்கப்பட்ட’ என்ற சொற்கள், அவர் இயற்கையைப் பார்த்து ‘Your days are
numbered’ என்று சொல்வதாக அமைந்துவிட்டதோ என்று தோன்றியது. ஆனால் சுற்றுச்சூழல் மட்டுமே அவரின் கவிதைகளின்
கருப்பொருளாக இல்லை. சமுதாயத்தின் எல்லா விளிம்புகளையும் தொடுகின்ற செய்திகளை அவர்
கவிதையில் தொட்டிருக்கிறார் என்பது நூலை முற்றாகப் படித்தபிறகு புரிந்தது.
என்னைக் கவர்ந்த சில கவிதைகளை இங்கே எடுத்துக்காட்டப்
போகிறேன்.
ஆயுதங்கள்
பெண்களுக்கு விழிகளே ஆயுதம்
அல்லவா! அந்த வலிமை மிக்க விழிகளை ‘நீ
கொசு வலையா, மீன் வலையா’ என்று அப்துல் ரகுமான் கேட்டதை என்னால் தாள முடியவில்லை.
நல்லவேளை வையவன் அவற்றின் பெருமையை இதோ மீட்டெடுக்கிறார் தன் வரிகளில்:
அவள் கண்கள் என்னை
விழுங்க முயன்ற ஒரு கணம்
ஒரே கணம்
நீச்சல் மறந்த
தத்தளிப்பில்
நான் தடுமாறினேன்.
படகிலிருந்து
பற்றிக்கொள்ள
உயிர்க்கயிறு வீசியதுபோல்
அவள் உதட்டில் சிறு
சுழிப்பு
மீண்டு விட்டேன்
பின் எனது கண்கள்
அவளை விழுங்க விரிந்தன
அவள் விழுந்து விழுந்து
சிரித்தபோது வலை
என் மேல் இறுகியது
விடுபடவே முடியாதவாறு
ஆயுதங்களும் அவற்றை
எதிர்க்க எழும்
முனைப்புகளும் போல.
ஆயுதமின்றிக்
காதலுமில்லை.
அடடே, இவரும் பெண்டிரின் விழிகளை வலைக்கு ஒப்பிடுகிறாரே!
போகட்டும், பெண்களால் எதைத்தான் ஆயுதமாக்க முடியாது? இரண்டு சொட்டுக் கண்ணீரையே
ஆயுதமாக்கி சாம்ராஜ்யங்களையே அவர்கள் கவிழ்க்கவில்லையா?
விழிகள் என்னும் குளத்தில் நீச்சல் மறந்த இவனை
விழவைக்கிறாள். பிறகு தன் சிரிப்பையே உயிர்க்கயிறாக அவனுக்கு வழங்கி அவனை
எழவைக்கிறாள். என்ன அருமையான உருவகம்! (இந்த நேரத்தில்தானா அவருக்கு வயது
எழுபதுக்குமேல் என்று என் மனம் நினைவுபடுத்த வேண்டும்?)
நீ எவளாகவாவது இரு
பெண்ணியம் பற்றி மாநாடு நடத்திப் பீற்றிக்கொள்ளும்
ஆண்வர்க்கத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக்காட்டும் ஒரு கவிதையை அடுத்து நாம் பார்க்கலாம்:
நீ எவளாகவாவது
இருந்துவிட்டுப் போ.
பாடு, ஆடு, நடி,
நாட்டியமாடு, கையில்
அதிகாரக்கோல் பிடித்து
எங்கெங்கே உன்னால்
ஆட்டிப் படைக்க முடியுமோ
செய், நேர்வதற்குப்
பொறுப்பேற்றுக் கொள்.
பெண்ணுரிமைக்கொடி
பிடித்துப் போராடு.
சிறைக்குப் போ.
கவலை இல்லை.
என் தீனித் தட்டில்
இரை வந்து விழவேண்டும்.
என் உடை வெளுப்பாக
மடிப்புக் கலையாமல்
இருந்துவிட வேண்டும்
எப்போது நான் அழைத்தாலும்
படுக்க வந்து சேர்.
நீயும் நானும் சேர்ந்து
பொரித்த குஞ்சுகளுக்கு
இரை முக்கியம். கவனம்.
உனக்கும் எனக்குமான
ஒப்பந்தமல்ல இது.
சமுதாய விதி..
விலங்கென்று கருதினால்
தரித்துக்கொண்டு
வெளியேறு.
சந்தித்துக்கொள் விளைவை.
சுருக்கமாய் நீ பெண்.
நான் ஆண்.
போராடுகிறாயா? சரி. போ.
செய்.
சர்வதேசப் பெண்கள்
தினத்தில்
சிந்தக் காத்திருக்கிறது
முதலைக் கண்ணீர்.
அசப்பில் பார்த்தால் #MeToo வில் சிக்குபவர்களின் கொக்கரிப்பை அல்லவா எழுதியிருக்கிறார்!
கண்டு முடித்துவிடு காண
விரும்பும் கனவுகளை
உலகத்தரத்தில் அமைந்த ஒரு
கவிதையை இனிக் காணலாம்:
நேற்றை நோக்கிப்
பாய்ந்தோடுகிறது இந்த இன்று
நொடியையும் நிமிடத்தையும்
அடித்து முடுக்கி
எச்சரித்தபடி
விக்கிரமாதித்யனை
விரட்டி விரட்டி வரும்
சாலிவாகனன் சவாரி போல்
நாளை துரத்தி வருகிறது
பின்னால்.
இந்தக் கணம் இறந்து
மறுகணம் ஒன்று
உதிப்பதற்குள்
கண்டு முடித்து விடு
காண விரும்பும் கனவுகளை
ஜபமாலை நகர்வதுபோல்
உருளும் காலத்தின்
மறுசுற்று
திரும்பி வருமோ வராதோ
அறுபதைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்தக் கவிதையில்
அருமையான செய்தி இருப்பதாகவே படுகிறது. ஆம், ஐயா, நிறைவேறாத என் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு
நான் இன்னும் விரைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.
கானகம் கருவுற்றிருக்கிறது
சுற்றுச் சூழல் சார்ந்த
சிறப்பான கவிதை இது.
சற்று நிறுத்தி வையுங்கள்
யானை வேட்டியையும்
மரக் கடத்தல்களையும்.
காதல் தாபம் தணிக்க
பிளாஸ்டிக் பொட்டலங்களோடு
கானாற்றங்கரைகளுக்குச்
செல்லும் காதலர்களே
உங்களுக்கும்
சேர்த்துதான்
இந்த அறிவிப்பு.
கானகம்
கருவுற்றிருக்கிறது.
கானகத்தின் கருமூலத்தில்
குடியேறி யிருப்பவள்
வேறு யாருமல்ல
யுகங்களின் தொட்டிலில்
தவழ்ந்து தலைமுறைகள்
பல கண்ட அன்னை.
கவனமா யிருங்கள்.
அவள் பகவனைத் தேடித்
திரியும் ஆதி.
காவலிருங்கள்
கருவுற்றவளுக்கு.
மீறினால் தீய்ந்து
விடுவீர்கள்.
தன்னுடைய பகவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள் வள்ளுவனின் ஆதி.
அவளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள், அழிந்து போவீர்கள் என்று எச்சரிக்கிறார் கவிஞர்
வையவன்.
மலையின் மேலொரு பட்டணம்
ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி
என்று பல மலைகளைக் கண்டவர் வையவன். அன்று மலைகளாக இருந்தவை இன்று பட்டணங்களாக
மாறிக்கொண்டிருப்பதை எண்ணி நாம்
வருந்துகிறோம். இவர் அன்றே வருந்தியிருக்கிறார். எந்த மலையைக் குறிப்பாக
உணர்த்துகிறார் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலென்ன, அவர் சொல்வது சத்தியம்தானே!
மலையின் மேலொரு பட்டணம்.
மூங்கில் வனம் அழித்து
காட்டுமரம் வெட்டி, மேடு
பள்ளம் நிரவி
மேகப் போர்வை போர்த்திய
சலவைக்கல் மாளிகை எழுப்பி
வெயில் தாங்காத
வெள்ளையருக்குக்
கைகட்டிச் சேவகம்
செய்யவும்
துரைசானிமாருக்குப்
பல்லைக் காட்டிப்
பணிவிடைகள் புரியவும்
அடிமைகள் எழுப்பிய
பட்டணம்.
இன்று சுதேசிச் சீமான்கள்
கூறுபோட்டு விற்றுவிட்டு
கறுப்புப் பணமாக்கிக்
குளிர்கால வாசத்திற்கொரு
கொள்ளை மூலதனமாக்கிய
பட்டணம்.
ஏழைகள் எட்டிப்பார்க்கிறார்கள்
எப்போதாவது வந்துபோகும்
வெயிலை.
விட்டுவிடுங்கள் சற்று
குளிர்காணட்டும்
அவர்களது வாழ்க்கை
வெயில்.
தாய்ப்பால்
பச்சைக் குழந்தையை வீட்டில்
விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் இளம் தாய், பாலால் கனத்து வலிக்கும் தன் மார்பைத்
தடவியபடியே பேருந்திற்குக் காத்திருக்கிறாள். உணர்ச்சிமிக்க அந்தக் கவிதையோடு இந்தக்
கட்டுரையை முடிக்கலாமா?
வேலைக்குப் போகும்
இளம்தாய் கண்ணெதிரில்
‘தாய்ப்பால் முக்கியம்’
சுவரொட்டிக்குப் பசை
பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
வலி பொறுக்க முடியாது
முலைக் காம்பில்
விம்மிக் கசிந்து
துளிர்க்கும்
உயிர் ஊற்றின் உபாதையை
மேலாக்கைச் சரிசெய்வது
போல் மார்பு தடவி
சமாதானம் செய்துகொண்டே
எங்கோ ஏங்கி அழும்
குழந்தையிடம் மன்னிப்புக்
கேட்கிறாள் மனசுக்குள்,
பஸ் போய்விடுமே என்று
பாதியில் உதறி
வந்ததற்காக.
அரசாங்கம் கடமை
யாற்றுகிறது.
மாதச் சம்பளம் மணி
பார்த்துக்
கொண்டிருக்கிறது.
மரக்கிளையில் ஏணை மாட்டித்
தொங்கவிட முடியாது
மத்தியதர வர்க்கம்.
வையவன் அவர்கள் ஆங்கில
இலக்கியத்திலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனது ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு
ஒன்றையும் அவர் இப்போது வெளியிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
(c) இராய செல்லப்பா