பதிவு 04/2018
இதுவும் ஒரு கொலுபொம்மை -1/2
பிள்ளையார் கோவிலில் புதிதாக ஒரு பெண்ணிடம்
பேசிக்கொண்டிருந்தாள் என் மனைவி. கையில் அர்ச்சனை தட்டோடு வரிசையில் நின்றிருந்தாள்
அந்தப் பெண்.
‘சவிதா, இந்த முறையாவது நவராத்திரிக்கு எங்கள் வீட்டிற்கு
வருவாயா, இல்லை, ஆஸ்திரேலியா போனேன், ஹங்கேரி போனேன் என்று சாக்கு சொல்வாயா?’
என்று மென்முறுவலோடு கேட்டாள் என்னவள்.
‘நிச்சயம் வருவேன் மாமி!’ என்று சவிதாவும் புன்னகையுடன்
பதிலளித்தாள்: ‘கையில் இருந்த பிராஜெக்ட் முடிந்துவிட்டது. எனவே இன்னும் மூன்று
மாதங்களாவது வெளிநாட்டுப் பயணம் கிடையாது. போன வருடம் உங்கள் வீட்டுக் கொலுவை
முகநூலில் பார்த்தேன். அம்மம்மா...எவ்வளவு பொம்மைகள் என்று அதிசயப்பட்டேன். இந்த
வருடம் நேரில் பார்த்தே தீருவது என்று இருந்தேன். அதற்கேற்றாற்போல் பிராஜெக்ட்டும்
முடிந்துவிட்டது’ என்றாள்.
அதற்குள் வரிசை அர்ச்சகரை நெருங்கிவிட்டது. அர்ச்சனை தட்டை அவளிடமிருந்து
வாங்கிக்கொண்ட அர்ச்சகர், ‘பேரு
நட்சத்திரம் சொல்லும்மா’ என்றார்.
‘பார்த்திபன், மகம் நட்சத்திரம்’ என்றாள் சவிதா.
‘ஒங்க பேர் நட்சத்திரம் ?’ என்று கேள்விக்குறியோடு அவளை
நோக்கினார் அர்ச்சகர்.
‘இல்லை, அவர் பேர் மட்டும் போதும். அவருக்கு இன்று
பிறந்தநாள்’ என்றாள் சவிதா புன்னகையுடன். அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்தபடி
உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் தீபாராதனை. கண்களை மூடி கைகூப்பி வணங்கினாள்
அவள்.
பின்னால் இருந்த இரண்டு பெண்கள் தங்களுக்குள்
குசுகுசுத்தார்கள்: ‘அது யாருடி, பார்த்திபன்? பேரப் பார்த்தா இவங்க ஜாதி மாதிரி
இல்லையே? அவன் பிறந்தநாளுக்கு இவ எதுக்கு
அர்ச்சனை பண்றா?’
‘அடி போடி, பேக்கு! அவளோட டீம் லீடரா இருப்பான். இல்லேன்னா,
கூட வேல செஞ்ச பையனா இருப்பான்..’ சொல்லிவிட்டுக் கேலியாகச்
சிரித்துக்கொண்டார்கள்.
கற்பூரத்தட்டு இவர்கள் அருகில் வரவும் அவசரமாகச் சிரிப்பை
நிறுத்திவிட்டு கற்பூரத்தைக் கண்களில்
ஒற்றிக்கொண்டனர் இருவரும்.
என் மனைவி என்னை நோக்கிப் பொருள் பொதிந்த பார்வையைச் செலுத்தினாள்.
அப்படியானால் வீட்டிற்கு வந்ததும் ஏதோ இரகசியம் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். சவிதாவைப்
பற்றியா, பார்த்திபனைப் பற்றியா?
கற்பூரத்தட்டில் பத்துரூபாய் போட்டுவிட்டு நகர்ந்தேன்.
***
ஏழுபடிகள் கொண்ட கொலுப்படியை ஒழுங்காக ‘ஃபிட்டிங்’ செய்து
முடித்து நல்லபெயர் வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல்
வந்திறங்கியது தலையில் ஓர் இடி.
‘எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?’ என்று கடுமையாகப் பாய்ந்தது சொல்வேல்,
மனைவியிடமிருந்து. பொம்மைப் பெட்டிகளைப் பிரித்து ஒவ்வொன்றாக வெளியில்
எடுத்துக்கொண்டிருந்தாள் அவள். இன்னும் இரண்டுநாளில் கொலு ஆரம்பித்துவிடும்.
அதற்குள் பொம்மைகளை அடுக்கியாகவேண்டுமே!
இம்மாதிரி சமயங்களில் பிரச்சனையை எப்படி அணுகவேண்டும் என்று
எனக்கா தெரியாது? அவள் முதுகருகில் சென்று என் வெம்மையான மூச்சு அவள்மீது படும்
அளவில் நின்றுகொண்டு, ‘என் பிளட் பிரஷரைத்
தானே கேட்கிறாய்?’ என்றேன் அப்பாவியாக முகத்தை வைத்தபடி.
‘பேச்சை டைவர்ட் பண்ண வேண்டாம். எங்கே, என் முகத்தை நேரில்
பார்த்துப் பேசுங்கள்: அந்த சவிதாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தீர்களே,
நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இதற்குமுன் பெண்களையே பார்த்ததில்லையா நீங்கள் எல்லாரும்?’
என்று யுத்தத்திற்குத் தயாரானாள் என் மனைவி.
‘எல்லாரும் என்றால் யார் யார்?’
‘எல்லாம் ஒங்க ஆம்பிளை ஜன்மங்களைத்தான் சொல்றேன்.
ஒங்களுக்கெல்லாம் வீட்டுல ஒரு பொண்டாட்டி இல்லை? பிறகு ஏன் மற்றவர் வீட்டுப்
பெண்களை வெறித்து வெறித்துப் பார்க்கிறீர்கள்? இனிமே இப்படி நடந்தா ரெண்டு
கண்ணையும் நோண்டி எடுத்துடுவேன்.’
அப்பாடா என்று ஆனது எனக்கு. குற்றம் எது என்றும் தண்டனை என்ன
என்றும் சொல்லியாகிவிட்டது. இனி
விஷயத்துக்கு வந்துவிடுவாள். ‘சாரி, அந்த சவிதாவைப் பற்றிச் சொல்ல வந்ததைச்
சொல்லிவிடேன்’ என்றபடி அவள் கூந்தலை
லேசாகத் தடவினேன்.
விசுக்கென்று கையை விலக்கினாள். ‘விடுங்கள். இந்த ஆம்பிளைங்களே
இப்படித்தான். தலையைத் தலையைத் தடவுவார்கள், தங்கள் காரியம் முடிந்துவிட்டால்
தலைமறைவாகப் போய்விடுவார்கள்’ என்றாள். குரலில் சற்றே சீற்றம் இருந்தது.
‘ஓஹோ, அவன் பேர் தான் பார்த்திபனா?’ என்றேன். சடக்கென்று
விலகினாள். ‘அவ்ளோ தூரம் ஒங்க மனசுல இருக்காளா அவள்? பார்த்திபன் யாராயிருந்தால்
ஒங்களுக்கென்ன? வேணும்னா நம்பர் தரேன், பேசித் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே!’
என்றாள். ‘ஒங்களோடு வெட்டிப்பேச்சு பேசுறதுக்கு நேரமில்லை. இன்னும் பத்து
பெட்டிகளைத் தெறக்கணும். எதுல எந்த பொம்மை இருக்குன்னே ஞாபகம் வரமாட்டேங்குது’
என்று காரியத்தில் இறங்கினாள் அவள்.
அடிப்பாவி, சஸ்பென்சை உடைக்காமல் போகிறாயே என்று மனதிற்குள்
நினைத்துக்கொண்டேன். ‘பிளீஸ், பிளீஸ், சவிதா மேட்டரைக் கொஞ்சம் விளக்கமாகச்
சொல்லேன். யார் அந்தப் பார்த்திபன்?’ என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.
‘சொல்கிறேன். ஆனால் ஒரு டீல். இங்க இருக்கிற எல்லாப்
பொம்மைகளையும் விடிவதற்குள் எடுத்துக் கொலுப்படிகளில் அடுக்கியாகவேண்டும். அதற்கு
நீங்கள் உதவுவீர்களா இல்லையா?’ என்றாள்.
‘இங்கே பார், கல்யாணமான இத்தனை வருடங்களில் நான்
உதவி செய்யாமல்தான் நீ கொலுப் பொம்மைகளை அடுக்கினாயா? இப்போது மட்டும் ஏன்
சந்தேகம்?’ என்று சரண்டர் ஆனேன்.
அதற்குப் பதில் சொல்லாமல், ‘கதை பேச இது நேரமில்லை. இந்தப்
பொம்மையை உச்சியில் இருக்கும் படியில் வையுங்கள். வெயிட்டான பொம்மை. கெட்டியாகப் பிடியுங்கள்’ என்று பேச்சை
மாற்றினாள். வேலையென்று வந்துவிட்டால் வெள்ளைக்காரி அவள். சொன்னபடி கேட்பதைத்தவிர வேறு வழியில்லை.
விடியற்காலை மூன்றுமணி. ஓரளவுக்கு எல்லாப் பொம்மைகளையும்
அததற்கான படிகளில் நிற்கவைத்தாகிவிட்டது. நவராத்திரிக்கு இன்னும் ஒருநாள் முழுதாக
இருக்கிறது. விடிந்ததும் சரிப்படுத்திக்கொள்ளலாம். இன்னும் சீரியல் லைட்
போடவேண்டும். மண்ணைப் பரப்பித் தோட்டம் போடவேண்டும்....
‘வந்து படுங்கள்’ என்றவள், ‘கை கால் முகம் கழுவிக்கொண்டு
படுங்கள்’ என்று உத்தரவிட்டாள். குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் நுழைந்தாள். இரவில் எவ்வளவு
நேரமானாலும் சரி, குளிக்காமல் படுக்கும் வழக்கம் அவளுக்கு இல்லை.
வந்து படுத்தாள். முகத்தில் கைவைத்துக்கொண்டு , ‘இப்போதாவது
சொல்லிவிடேன். யார் அந்தப் பார்த்திபன்? அவளுடைய ஆள் தானே?’ என்றேன். ‘ஆள்’ என்பதை
அழுத்தமாகச் சொன்னேன்.
மெல்ல என் பக்கமாகத் திரும்பி என் முகத்தைத் தன் கைகளில்
ஏந்திக்கொண்டவள், ‘அவளோட ஆள் இல்லை.... ஆனால் ஆள் மாதிரி..’என்று
சிரித்தாள். பிறகு, ‘படுங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது’ என்று விளக்கை
அணைத்தாள்.
(அடுத்த இதழில்
முடியும்.)
(c) இராய செல்லப்பா, சென்னை
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆகா சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போட்டுவிட்டீர்களே
நீக்குசஸ்பென்ஸ் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையே !
நீக்குஅடுத்த இதழில் தான் முடியுமாம்!..
பதிலளிநீக்குஎன்ன இது?.. அக்கப்போராகி விட்டது!..
கோபித்துக்கொள்ளாதீர்கள் நண்பரே! இது எந்திரன் 2 சீசன்!
நீக்குஎன்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.... தொடர்கதை ஆசிரியர்கள்தான் சஸ்பென்ஸ் வைத்து, அடுத்த வாரம் வரும்போது புஸ் என்று ஆக்கிவிடுவார்கள். பார்ப்போம். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று....
பதிலளிநீக்குவலைப்பதிவு எழுதுபவர்கள் தொடர்கதை ஆசிரியர்களாக ஆகக்கூடாது என்னும் நல்லெண்ணம் கொண்ட நண்பரே!உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் வீணாகும் என்றுதான் தோன்றுகிறது...பொறுங்கள்.
நீக்குஅப்படில்லாம் இல்லை செல்லப்பா சார்... அது சரி... இப்போல்லாம் யார் தொடர்கதை படிக்கறாங்க. அந்தப் பொறுமை போய் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதே.
நீக்குதிருச்சியில் இருண்டவரை கொலு எங்கள் வீட்டிலும் அல்லோலகல்லோலப்படும் பெங்களூர் வந்தபின் பேருக்கு கொலு வைத்திருந்தோம் இப்போது அதுவுமில்லை சாமிக் குததமா
பதிலளிநீக்குமுயன்றால் முடியாததுண்டா தலைவரே! ஒரு நாலு பொம்மைகளை வைத்தாவது கொலு வைக்கலாமே! ப்ளாக் எழுதும்போது விஷயம் கிடைக்கவில்லை என்றால் ஏதேதோ ஜோக்குகளைப் போட்டு நிரவல்செய்வதுபோல!
நீக்குசெல்லப்பா சார். ஏதோ டேபிளையும் பாத்திரங்களையும் மாற்றிவைப்பதுபோல் சிம்பிளாச் சொல்லிட்டிங்க. இது ஒரு ப்ராசஸ். அதுக்குன்னு புது புது டிரெஸ் வாங்கணும் (கணவன் பாக்கெட்டுக்குச் செலவு), அப்புறம் வித வித நகைகள்லாம் லாக்கர்லேர்ந்து எடுத்து வரணும் (பின்னே... வரும் விருந்தினர்கள் முன்னால் டாலடிக்கவேண்டாமா?). அப்புறம் இன்றைய மெனு என்று தயார் செய்யணும். கணவன் வண்டி ஓட்டிக்கொண்டு, மனைவியை எல்லோரையும் அழைக்க கூட்டிச் செல்லணும், பிறகு ஒவ்வொரு வீடுகளுக்கும் தானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு சென்று, உள்ளே நுழைந்ததும், என்ன செய்வது என்று துணிக்கடைக்குப் போன கணவன் முழிப்பதுபோல முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கணும்.... நமக்கு இரவுச் சாப்பாடு உண்டா, மனைவி இங்க கொடுக்கற சுண்டல் சாப்பிட்டுட்டு எனக்குப் பசியில்லை என்று சிம்பிளாச் சொன்னா, நாம என்ன செய்யறது, நமக்கு ரொம்பக் குறைவாகத்தானே சுண்டல் கொடுத்தார்கள் என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்கணும்.....
நீக்குஆனா நீங்க ரொம்ப சிம்பிள்னு சொல்லிட்டீங்க...
நெல்லைத் தமிழரே! நீங்கள் இந்த பெங்களூர்த் தமிழரின் (GMB) அருமை பெருமைகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஸார் எள் என்று சொல்வதற்குள் அம்மையார் எண்ணெயாக நிற்பவர் என்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.....!
நீக்குNice flow
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! மிக மூத்த எழுத்தாளரான தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நீக்குஅருமையான ஓட்டம். திடீரென்று அடுத்த இதழில் முடியும்... என ஆவலைத் தொடர வைத்துவிட்டீர்களே?
பதிலளிநீக்குஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகிர்வை நோக்கி...
பதிலளிநீக்குInteresting, waiting.
பதிலளிநீக்கு