வெள்ளி, நவம்பர் 20, 2015

அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 3

அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 3
இராய செல்லப்பா


அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 1
படிக்க இங்கே சொடுக்கவும்:  

அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் – 2
படிக்க இங்கே சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2015/11/2.html 

அமரர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சொன்னபடியே, நான் வகுப்பறைக்குச் சென்று அவர் சொன்ன கதையின் ஒரு பகுதியைச் சிறுவர்களுக்குக் கூறினேன். மீதியை அடுத்தநாள் கூறுவதாக உறுதியளித்தேன். அப்துல் கலாம் என்ற பெயர் இன்னமும் மாணவர்களைப் பெரிதும் ஈர்க்கும் பெயராக இருப்பதை அறிந்து வியந்துபோனேன்.

அன்று மாலை ஒரு பல்பொருள் அங்காடியில் (‘சூப்பர் மார்க்கட்’) சில பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தபோது பற்பசைப் பெட்டிகள் அடுக்கியிருந்த இடத்தில் இருந்து அப்துல் கலாமின் முகம் எனக்குத் தெரிந்தது. என்னை அழைப்பதுபோன்ற பாவனை அவர் முகத்தில் இருந்தது. ‘வணக்கம் ஐயா’ என்றேன். பெரிய பாரம் இறங்கிவிட்டதுபோல் இருந்தது. அவரை மீண்டும் கண்டுவிட்டேனே!

‘வணக்கம்’ என்றார் கலாம். ‘இடது கையை நீட்டு’ என்றார். நீட்டிய கையில் ஒரு ‘கிரெடிட் கார்டு’ அளவிலான  கார்டை வைத்து உள்ளங்கையில் அழுத்தினார். என்ன ஆச்சரியம், அது உள்ளங்கையின் உள்ளே விழுங்கப்பட்டுவிட்டது! அது மட்டுமல்ல, உள்ளங்கையில் ஒரு மொபைல்போனின் திரை மாதிரி வெளிச்சம் வரத்தொடங்கியது. அந்தத் திரையில் கலாமின் முகம் காட்சியளித்துப் பேசியது:

படம் -நன்றி: கல்கி 01-11-2015
‘இதோ பாருங்கள்! நான் எண்ணியபடி மூன்று விண்வெளிக் கப்பல்களைத் தயாரித்துவிட்டேன். அவற்றை ஊட்டியில் காடுகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருக்கிறேன். ஒன்று செவ்வாய் கிரகத்திற்கும், ஒன்று புளூட்டோ கிரகத்திற்கும் ஒன்று சந்திரனுக்கும் செல்லவேண்டும். அவற்றை இயக்கிச் செல்வதற்கு பைலட்டுகள் வேண்டும். நீங்கள்தான் எனக்கு உதவிசெய்யவேண்டும். இந்த மொபைல் திரையானது நான் எப்போது வேண்டுமானாலும் உங்களுடன் தொடர்பு கொள்ள உதவும். உள்ளங்கை அரிப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டால் நான் உங்களோடு பேச விரும்புகிறேன் என்று அர்த்தம். அப்போது உடனடியாக உள்ளங்கையின்மீது ஒரு விரலால் இரண்டுமுறை தட்டுங்கள். நான் தெரிவேன். ஆனால் நீங்களாக என்னைத் தொடர்பு கொள்ள இயலவே இயலாது. எனவே முயலவேண்டாம்” என்றார் கலாம்.

வியப்பின் உச்சத்தில் இருந்தேன் நான். இத்தனை விரைவாக மூன்று விண்வெளிக்கப்பல்களை அவரால் எப்படித் தயாரித்திருக்க முடியும்! அத்துடன் என்னுடன் பேசுவதற்கான உள்ளங்கை-திரையை எப்படி அவரால் கண்டுபிடிக்கமுடிந்தது?

“நேரத்தை வீணாக்காதீர் நண்பரே” என்றார் கலாம். “எனக்கு யமதருமன் வழங்கிய மூன்று வார காலத்திற்குள் எல்லாம் முடித்தாகவேண்டும். எனவே கவனமாகக் கேளுங்கள். இந்த விண்கலங்களை இயக்குவதற்கு மொத்தம் ஐந்து மாணவர்கள் எனக்கு வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் இருக்கலாம். ஆனால் எல்லாரும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாக இருக்கவேண்டும். சரியா?”

இதில் சங்கடம் இருப்பதாக எனக்குப் படவில்லை. அறிவியல் ஆய்வுக்காக ஐந்து மாணவர்களை வழங்க எந்தப் பள்ளிதான் முன்வராது?

“ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. அந்த ஐந்து பேரை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்களது பெயர்கள் ஒருக்கொன்று தொடர்புள்ளதாக இருக்கவேண்டும். அதாவது, முதலில் ஜெயராமன் என்ற மாணவரைத் தேர்ந்தெடுப்பதாக  வைத்துக்கொள்ளலாம். அடுத்த மாணவரின் பெயர் ‘ராம’ என்று துவங்கவேண்டும்- ராமதேவன்- என்பது போல. மூன்றாவது மாணவரின் பெயர்  ‘தேவ’ என்று தொடங்கவேண்டும். அது மட்டுமல்ல, ஐந்து பெரும் கணக்கில் கெட்டிக்காரர்களாக இருக்கவேண்டும். இம்மாதிரியான ஐந்து பேரை ஒரே பள்ளியில் நாளைக்குள் நீங்கள் கண்டுபிடித்தாகவேண்டும். செய்வீர்களா?’ என்றார் என் உள்ளங்கையில் இருந்த கலாம், சற்றே மிரட்டலான  தொனியில்.   

அப்போது பள்ளிகளுக்கு கணினிப் பாடங்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தார். அடுத்த கணம் உள்ளங்கையிலிருந்து கலாம் மறைந்துபோனார்! என் முகத்தில் கோபமும் குழப்பமும் கலந்து தோன்றியிருக்கவேண்டும். நண்பர் என்னவென்று விசாரித்தார்.  என் கவலையைச் சொன்னேன்.

“இவ்வளவுதானே, என்னுடன் வாருங்கள். என்னிடம் சென்னையில் உள்ள பதினேழாயிரம் பள்ளிகளின் மாணவர் பட்டியல் அடங்கிய தகவல்திரட்டு (Database) உள்ளது. உங்கள் தேவைக்காக ஒரு மென்பொருளை (software) உடனே எழுதிவிடுகிறேன். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் சொன்ன நிபந்தனைக்குட்பட்ட பெயர்களை ஐந்தைந்து மாணவர்கள் கொண்ட குழுவாக அது எடுத்துக் கொடுத்துவிடும்.. அதிலிருந்து ஏதாவது ஒரு குழுவை நீங்கள் கலாமிடம் கொடுங்கள்” என்றார் நண்பர்.

ஆயிரம் முறை அவருக்கு நன்றி கூறினேன். ‘இரவுக்குள் மின்னஞ்சல் வரும். கவலை வேண்டாம்” என்று உறுதியளித்தார் நண்பர்.
*****

அதிகாலையில் கண்விழித்தேன். வாசல் கதவைத் திறந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து குளிர்பெட்டியில் வைத்துவிட்டு, கணினிமுன் அமர்ந்தேன். கலாம் அவர்கள் கேட்ட ஐந்து மாணவர்களின் பெயர்களை நண்பர் அனுப்பியிருப்பார் என்று ஆவலுடன் மின்னஞ்சலைத் திறந்தேன். ஆம், அனுப்பியிருந்தார்- சிறு குறிப்புடன்: ‘பதினேழாயிரம் பள்ளிகளில் தேடியதில் இந்த ஒரே ஒரு குழுதான் கிடைத்தது’. அக்குழுவில் இருந்த ஐந்து மாணவர்களின் பெயர்கள் என்னென்ன தெரியுமா?

1 மாரி முத்து
2 முத்து கிருஷ்ணன்
3 கிருஷ்ண சாமி
4 சாமிக் கண்ணு
5 கண்ணுக் குட்டி

முதல் நான்கு பேரும் ஆண்கள். கண்ணுக்குட்டி என்பது பெண். ஐந்து பேரும் காலாண்டுத் தேர்வில், கணக்கில் தொண்ணூறுக்குமேல்  மதிப்பெண் பெற்றிருந்தார்கள்.  என் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்துல் கலாம் என்ற மாமனிதர் எனக்கு அளித்திருந்த கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சி.  

சரி, இந்தத் தகவலைக் கலாம் அவர்களுக்கு எப்படித் தெரிவிப்பது? கண்களை மூடிக்கொண்டு ‘கலாம் அவர்களே’ என்று மனதிற்குள்ளாகவே அழைத்தேன். என்ன ஆச்சரியம், எனது இடது உள்ளங்கை அரித்தது! அவசரமாகக் கண்களைத் திறந்து, விரலால் உள்ளங்கையை இரண்டுமுறை தட்டினேன். தனக்கே உரிய கூந்தல் அழகு மிளிர அவர் திரையில் தோன்றினார். ‘வணக்கம் நண்பா! நல்ல சேதி உண்டா?’ என்றார்.

‘ஆம் ஐயா! நீங்கள் கேட்ட ஐந்து மாணவர்கள் கிடைத்து விட்டார்கள். எல்லாரும் சென்னையில் உள்ள ....... பள்ளியைச் சேர்ந்தவர்கள். எல்லாருமே ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் படிக்கிறவர்கள். கணக்கில் புலிகள்’ என்று அவர்களின் பெயர்களைக் கூறினேன்.

‘மிக்க மகிழ்ச்சி. இந்த ஐந்து பேரையும் யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு அழைத்துவாருங்கள்’ என்றார் கலாம்.

இது என்னடா புதிய சிக்கல் என்று பயந்தேன். வீட்டிற்கோ, பள்ளிக்கோ தெரியாமல் ஐந்து மாணவர்களை-அதிலும் ஒருத்தி பெண்- எப்படி ஊட்டிக்குக் கடத்திக்கொண்டு போவது? அம்மாதிரி செயல்களில் எனக்குப் பழக்கம் இல்லையே! திருதிருவென்று விழித்தேன்.

உள்ளங்கையில் இருந்து கலாம் சிரித்தார். ‘நண்பா! இன்னும் இரண்டு நாளில் தீபாவளி வருகிறது. அன்றுமுதலே சென்னையில் பெரும் புயலோடு கூடிய மழை வரப்போகிறது என்று வானிலை ஆராய்ச்சி இயக்குனர் குமணன் கூறியிருக்கிறார் அல்லவா? அநேகமாக வீடுகளெல்லாம் தண்ணீரில் மிதக்கப் போகின்றன. அடுத்த பத்து நாட்களுக்கு மழை நிற்காது. ஆகவே இந்த மாணவர்கள் சென்னையைவிட்டு வெளியில் இருந்தால் பெற்றோர்கள் நிச்சயம் நிம்மதிதான் அடைவார்கள். எனவே, நீங்கள் இந்த ஐந்து பேரையும் தீபாவளி விருந்து முடிந்தவுடன் ஊட்டிக்கு அழைத்துவந்து விடுங்கள். ஒரு இன்னோவா காரில் வந்துவிடுங்கள். தாமதித்தால் நீங்களும் மழையில் அகப்பட்டுக்கொள்ள நேரலாம்..புரிகிறதா?’ என்றார்.

ஊட்டியில் ஒரு பள்ளியின் பெயரைச் சொல்லி ‘அங்கே வந்துவிடுங்கள். நான் காத்திருப்பேன்’ என்று கூறிவிட்டு மறைந்துபோனார்.

குமணன் சொன்னதைக் கேட்டு மழைவரும், புயல்வரும் என்று யாரும் நம்புவதில்லையே என்ற கவலை ஏற்பட்டது. ஆனால் அப்துல் கலாமே நம்புவதால் இந்த முறை உண்மையிலேயே மழையும் புயலும் வரக்கூடும் என்றுதான் தோன்றியது. ஆனாலும் அந்த அதிகாலையிலும் எனக்கு வேர்த்தது. எவ்வளவு பெரிய பொறுப்பை என் தலையில் சுமத்தி இருக்கிறார்!  
****
அந்த ஐந்து மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சரியாக எட்டு மணிக்குப் போனேன். ஒரு ஆசிரியரை நட்பாக்கிக் கொண்டேன். பகல் உணவு இடைவெளியில் ஐந்து மாணவர்களும் கணினி அறைக்கு வரும்படி ஏற்பாடு செய்துகொண்டேன். வந்தார்கள்.

மாரிமுத்து, சற்றே கனமான உடல் கொண்டவன். முத்துக்கிருஷ்ணன் ஒல்லியாக இருந்தான். கிருஷ்ணசாமி நல்ல உயரம். பார்ப்பதற்குத் தைரியசாலியாக இருந்தான்.  சாமிக்கண்ணுவின் முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை. கண்ணுக்குட்டி, அறிவுக்கொழுந்தாகக் காட்சியளித்தாள்.   

ஐந்து பேரிடமும் அப்துல் கலாம் சொன்ன செய்தியை விளக்கினேன். அவ்வளவுதான் உற்சாகத்தால் துள்ளிக் குதித்தார்கள். விண்வெளிக்கப்பலை இயக்கும் பொறுப்பு இவ்வளவு சிறுவயதில் தங்களுக்குக் கிடைக்கப்போவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. தீபாவளி அன்று ஊட்டிக்கு வரத் தயார் என்றார்கள். வீட்டிற்குத் தெரியாமல் வரவேண்டும் என்றபோதுதான் அவர்கள் முகத்தில் சற்றே கவலை தெரிந்தது. ஆனால் கண்ணுக்குட்டி ஒரு தீர்வைச் சொன்னாள்.

‘நீங்கள் நான்குபேரும் தீபாவளியன்று பகல் பன்னிரண்டு மணிக்கு என் வீட்டிற்கு வந்து விடுங்கள். சார், தன்னுடைய இன்னோவா காரில் வரட்டும். என் வீட்டில் பாட்டி மட்டும்தான் இருப்பார். தீபாவளியை முன்னிட்டு சினிமாவுக்குப் போகிறோம் என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு நாம் கிளம்பிவிடலாம்’ என்றாள் கண்ணுக் குட்டி. பொதுவாகவே பெண்கள் விரைந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் அல்லவா?

அவளின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விஷயம் ரகசியமாக இருக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும்  வற்புறுத்தினேன். வெளியில் தெரிந்துவிட்டால் போலீஸ் வரும் என்றும் பயமுறுத்திவைத்தேன். அதற்குள் அடுத்த வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி அடித்தது. கலைந்தோம்.
****
தீபாவளி வந்தது. முதல் நாளில் இருந்தே மழை தொடங்கிவிட்டது. குமணன் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி மழையோ பெருமழையோ வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். வழக்கம்போலவே யாரும் நம்பவில்லை. ஆனால் நிற்காமல் மழை வந்துகொண்டே இருந்தபோது, முதல்முறையாக அவரை நமபத் தொடங்கினார்கள்.

கண்ணுக் குட்டியின் வீட்டிற்குப் போய் ஐந்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு இன்னோவா காரில் ஊட்டிக்கு விரைந்தேன். நல்லவேளை ஊட்டியில் இன்னும் மழை தொடங்கவில்லை. கலாம் அவர்கள் சொன்ன ....பள்ளியின் வளாகத்தில் காரை நிறுத்தினேன். அது ஓர் உறைவிடப்பள்ளி. பெரும் பணக்காரர்களும் திரைஉலகத்தவர்களும் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பள்ளி. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே புகழ்பெற்ற பள்ளி.

பள்ளி அமைதியாக இருந்தது. தீபாவளிக்கு அனைவரும் தத்தம் ஊர்களுக்குச் சென்றுவிட்டிருந்ததால், பள்ளி வெறுமையாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் மரங்களும் பசுமையும்தான் தெரிந்தன. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. ஐந்து மாணவர்களும் உற்சாகத்துடனும் அதே சமயம் இனம்புரியாத குழப்பத்துடனும் இருந்தார்கள். அமரரான கலாம் எப்படி மீண்டும் வந்து தங்களோடு பேசுவாரோ என்று வியப்போடு காத்திருந்தார்கள்.

நீண்ட நேரம் பயணித்து வந்ததால் அனைவருக்கும் ஒரே பசி, தாகம். அருகில் இருந்த தேநீர்க்கடைக்குப் போனோம். அப்போது என் இடது உள்ளங்கை அரிக்க ஆரம்பித்தது. ஆகா, கலாம் வரப் போகிறார்! விரலால் இரண்டு தட்டு தட்டினேன். திரையில் புன்னகையோடு தெரிந்தார் கலாம். ‘வாழ்த்துக்கள் நண்பா, என் இளைய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு வந்ததற்கு நன்றி!’ என்றார்.

பிறகு மாரிமுத்துவையும் முத்துக்கிருஷ்ணனையும் அழைத்தார். இருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, ‘நீங்கள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப் போகிறீர்கள். சம்மதமா?’ என்று புன்சிரிப்புடன் கேட்டார். இறந்துபோனவர் எப்படி நம்மிடம் பேசுகிறார் என்ற பிரமிப்பு அடங்காதவர்களாய் இருவரும் ‘சம்மதம் சார்’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

பிறகு கிருஷ்ணசாமியையும் சாமிக்கண்ணுவையும் அழைத்தார். அவர்களும் அவரைக் கண்டு ஆச்சரியத்திலிருந்து மீளாதவர்களாக ‘வணக்கம் சார்’ என்றனர். பதில் வணக்கம் சொன்ன கலாம், ‘குழந்தைகளே, நீங்கள் இருவரும் புளூட்டோ கிரகத்திற்குச் செல்லவேண்டும். அது மிகவும் நீண்ட தூரமாகும். தயாரா?’ என்றார். ‘தயார் சார்!’ என்று உற்சாகமாகக் கத்தினார்கள் இருவரும்.

இப்போது மிஞ்சியிருந்தது, கண்ணுக்குட்டி மட்டுமே. ‘உனக்கு யார் இவ்வளவு அழகான பெயர் வைத்தார்கள்?’ என்று சிரித்துக்கொண்டே கேட்ட கலாம், ‘நீ போகவேண்டியது சந்திரனுக்கு. ஏற்கெனவே மனிதர்கள் அங்கு போயிருக்கிறார்கள். தெரியுமா?’ என்றார்.

‘தெரியும் சார். நீல் ஆர்ம்ஸ்டிராங் என்பவர்தான் முதலில் அங்கு காலடி எடுத்து வைத்தவர்’ என்றாள் கண்ணுக்குட்டி.

‘சபாஷ்! இனிமேல், உனக்கும் அதே புகழ் கிடைக்கப்போகிறது. தயாரா?’

‘இப்பவே தயார் சார்! எனக்கு நிலாவைப் பார்க்கவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆவல்’ என்றாள் அவள்.

கலாம் என்னைப் பார்த்து, ‘நண்பா! நீ இவர்களுக்குத் தேநீர் மட்டும் குடிக்கவை. வேறு ஏதேனும் சாப்பிட்டால் விண்கலத்தில் போகும்போது பிரச்சினைகள் வரும். அங்கு இவர்களுக்குச் சாப்பிட சிறப்பான ஏற்பாடுகள் உண்டு. கவலை வேண்டாம். தேநீர் அருந்தியவுடன், இவர்களை அதோ, அந்தக் காட்டின் உட்புறமாக அழைத்துக்கொண்டு வா. அங்கு தான் நமது மூன்று விண்கலங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

மாணவர்கள் ஐவரையும் பார்த்தேன். வாழக்கையில் இதுவரையில் காணாத திருப்தியும் உற்சாகமும் நிறைந்திருந்தது அவர்கள் முகத்தில். அப்துல் கலாம் என்ற ராக்கெட் விஞ்ஞானியை அவர்கள் அதுவரையில் சந்தித்ததில்லை. அமரரான  பின்பு அவராகவே வந்து அவர்களை அழைத்துப் பேசுகிறார் என்றால் அது சாதாரணமான விஷயமா? வீடு திரும்பியபின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இதைப் பகிர்ந்துகொண்டால் எவ்வளவு பேர் நம்புவார்கள் என்று சந்தேகம் கூடத் தோன்றியது அவர்களுக்கு.              

தேநீர் அருந்திக்கொண்டே கண்ணுக்குட்டி கேட்டாள்: ‘சார், நிலாவுக்குப் போய்விட்டுவர எவ்வளவு நாள் ஆகும்?’

உடனே மற்றவர்களும் கேட்கத் தொடங்கினார்கள்,’புளூட்டோவிற்கு எவ்வளவு நாள் ஆகும்?’ ‘செவ்வாய்க்கு எவ்வளவு நாள் ஆகும்?’ என்று.

என்னிடம் அதற்குச் சரியான பதில் இல்லை.  ஆனாலும் சமாளித்தேன். ‘கலாம் ஐயா அவர்களிடம்தான் கேட்கவேண்டும். ஆனால் அதிக நாட்கள் ஆகாது. பயப்படவேண்டாம்’ என்றேன்.

தேநீர் அருந்திவிட்டுக் காட்டுக்குள் புறப்பட்டோம். நுழைவாயிலில் சிறியதொரு கட்டிடம் இருந்தது. அங்கிருந்த காவலாளி, ‘வாருங்கள் ஐயா, உங்களுக்காக ஹெல்மெட் அணிந்த ஒரு பெரியவர் காத்திருக்கிறார்’ என்றார்.

கலாம் அவர்கள் என் உள்ளங்கையில் வராமல் நேராக வந்திருந்தது எங்கள் அனைவருக்கும் மிகுந்த பரவசத்தைத் தந்தது. ஹெல்மெட் அணிந்து விண்வெளி உடையில் இருந்தார். அந்த உடை மாணவர்களுக்கும் பரிச்சயமாகியிருந்தது. பொக்ரான் வெடிப்பின் போது அவர் அணிந்திருந்த மாதிரியான உடை. ஆனால் அவர் கால்களை மட்டும் எங்களால் காண முடியவில்லை. காற்றில் மிதந்து நிற்பவரைப் போல் காட்சியளித்தார். ஒரு டார்ச் லைட்டை அழுத்தி, அந்த வெளிச்சத்தில்  ‘அதோ பாருங்கள்’ என்று வெகு தூரத்தில் நின்றுகொண்டிருந்த மூன்று விண்வெளிக் கப்பல்களைக் காட்டினார் கலாம்.

ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நிலாவுக்குச் செல்லும் விண்கலம் மட்டும் ஏற்கெனவே நமக்குத் தெரிந்த  அப்போலோ-11 மூலம் அனுப்பிய விண்கலம் மாதிரியே இருந்தது. செவ்வாய்க்குச் செல்லும் விண்கலம் ஒரு முழுக்கோளமாக இருந்தது. புளூடோ விண்கலம் ஒரு கூம்பின் முனையில் கோளத்தை ஒட்டவைத்த மாதிரி இருந்தது.

கலாம் மூன்று குழுக்களையும் அழைத்தார். ‘கண்ணுக்குட்டி, நிலாவுக்குச் செல்லும் குழுவில் நீ ஒருத்தி மட்டும் இருக்கிறாய். பயமாக இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இல்லவே இல்லை சார், ரொம்பவும் திரில்லிங் ஆக இருக்கிறது ‘ என்றாள் அவள்.

‘உனது பயணம் இரண்டே நாளில் சந்திரனை அடைந்துவிடும்.  அங்கு ஒரு நாள் ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு நீ திரும்பிவிடலாம். விண்கலம் மீண்டும் இந்த இடத்திற்கே வந்துவிடும். அதற்குள் உங்கள் பெற்றோருக்கும் பள்ளிக்கும் நான் தகவல் அனுப்பிவிடுவேன். அனைவரும் வந்து உன்னை வரவேற்பார்கள். எல்லா தொலைக்காட்சியிலும் நீதான் நட்சத்திரமாக இருப்பாய்! சரியா?’ என்றார் கலாம். மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள் கண்ணுக்குட்டி.

‘அவளுக்குச் சொன்னதேதான் உங்களுக்கும். செவ்வாய்ப் பயணம் மட்டும் பத்துநாள் பிடிக்கும். புளூட்டோ பயணம் இருபதுநாளில் முடிந்துவிடும். இதற்கெல்லாம் சாதாரணமாகப் பல வருடங்கள் பிடிக்கும். ஆனால் எனது ஆராய்ச்சியின் விளைவாக இந்த விண்கலங்களின் வேகத்தை நான் மிகவும் அதிகப்படுத்தி இருக்கிறேன். அத்தகைய வேகத்தில் பயணிக்கும்போது ஏற்படும் வெப்பத்தினால் உருகிவிடாமல் இருக்கும்பொருட்டு முப்பது உலோகங்களின் கலவையால் இந்த விண்கலங்களை நான் தயாரித்திருக்கிறேன். அதற்கேற்ற உடைகளையும் விசேஷமாகத் தாயாரித்திருக்கிறேன். இது உலகில் வேறெந்த நாட்டினருக்கும் தெரியாத ரகசியம். அதனால் தான் உங்களை யாருக்கும் தெரியாமல் இங்கு வரவழைத்தேன்’ என்ற கலாம், அவர்களுக்கு விண்வெளி ஆடைகளை வழங்கினார். ஐந்துபேரும் அந்த ஆடைகளை அணிந்துகொண்டனர். அதன் பிறகு மூன்று ‘ரிமோட் கண்ட்ரோல்’ கருவிகளைக் காட்டினார்.

‘இந்த விண்கலங்களை எப்படி இயக்குவது என்று கவலை வேண்டாம். நீங்கள் விண்கலத்தில் ஏறி அமர்ந்து கொண்டால் போதும். இந்த ரிமோட் கண்ட்ரோலின் விசையை அழுத்தியவுடன் பதினைந்து நிமிடம் திரையில் உங்களுக்கு வேண்டிய தகவல்கள் தரப்படும். என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெப்படிச் செய்யவேண்டும், என்பது மிகவும் தெளிவாகச் சொல்லப்படும். அது மட்டுமல்ல, சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தாலொழிய, நீங்கள் ‘ஆட்டோமேடிக்’ என்ற விசையை அழுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். விண்கலம் தானாகவே திசையை அறிந்துகொண்டு  செல்லும். எப்போதாவது என்னைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றினால், ‘கே’ என்ற விசையை அழுத்தினால் நான் உடனே திரையில் தோன்றுவேன். பயப்பட வேண்டாம்’ என்றார் கலாம்.

‘அது மட்டுமல்ல, சூரியனின் உட்புறத்தில் ஏற்படும் மின் காந்தப்புயலோ, அல்லது இடைவிடாமல் வந்து விழும் விண்கற்களோ, அல்லது திடீரென்று உங்களைக் கடந்து செல்லும் வால்நட்சத்திரங்களோ உங்கள் பயணத்தை எந்த வகையிலும் நிறுத்த முடியாது. அதற்கு ஏற்றபடி நான் விண்கலத்தின் மென்பொருளை எழுதியிருக்கிறேன். அது மட்டுமல்ல, எனது ராடார் மூலம் உங்கள் நிலைமையை ஒவ்வொரு நிமிடமும் நான் கண்காணித்துக்கொண்டே இருப்பேன்’ என்று உறுதியளித்தார் கலாம்.

மூன்று  ரிமோட் கண்ட்ரோல்களையும் அங்கிருந்த மேஜைமேல் வைத்தார். யார் எதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு சிறிய ஸ்டிக்கரை அவற்றின்மேல் ஒட்டினார். அப்போது –

திடீரென்று எதோ நிகழ்ந்திருக்கவேண்டும். கலாம் தன் ஹெல்மெட்டை வேகமாகக் கழற்றினார். ‘அவசர வேலை வந்து விட்டது. நீங்கள் உங்களுக்குரிய ரிமோட் கண்ட்ரோல்களை எடுத்துக்கொண்டு ஐந்து பேரும் ஒரே வரிசையில் நின்று ‘ஒன், டூ, த்ரீ...’ என்று நூறு வரை எண்ணுங்கள். அதற்குள் நீங்கள் உங்களுக்குரிய விண்கலத்தின் உள்ளே அமர்ந்திருப்பீர்கள். அதன் பிறகு நான் சொன்னபடி செய்யுங்கள்’ என்று விரைவாகச் சொன்னவர், என்னைப் பார்த்து, ‘இவர்கள் இங்கிருந்து மறைந்தவுடன் உங்கள் இன்னோவா காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுங்கள். உங்களது உதவிக்கு மிகவும் நன்றி. பிற்பாடு எப்போதாவது உதவி தேவை என்றால் நானே தெரிவிக்கிறேன். இனிமேல் உங்கள் இடது உள்ளங்கையில் வந்து பேசமாட்டேன். வணக்கம்’ என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.

அவரை இனிக் காணமுடியாதே என்ற துக்கம் மாணவர்களின் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. ஆனால் அதைப் பற்றிப் பேச அவர்களுக்கு நேரமில்லை.

ஐந்து பேரும் ஒரே வரிசையில் நின்றனர்.  'ஒன், டூ, த்ரீ...’ என்று நூறு வரை எண்ணத்தொடங்கினர். ‘செவெண்ட்டி (70)’ எண்ணும்போது கண்ணுக்குட்டி காணாமல் போனாள். அடுத்த சில நொடிகளில் அவளது விண்கலம் மேலே கிளம்புவது தெரிந்தது. ‘நைண்ட்டி (90)’ வரும்போது செவ்வாய் செல்லும் விண்கலம் மாரிமுத்துவையும் முத்துக்கிருஷ்ணனையும் ஏற்றிக்கொண்டு கிளம்புவதும் எனக்குத் தெரிந்தது. ‘நைண்ட்டி த்ரீ(93)’ சொல்லும்போது புளூட்டோவிற்குச் செல்லவேண்டிய      கிருஷ்ணசாமியும் சாமிக்கண்ணுவும் மறைந்தார்கள். அவர்களின் விண்கலம் வெகுதூரத்தில் புள்ளியாக மறைவது தெரிந்தது.    

எனக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. அமரர் அப்துல் கலாம் அவர்களிடம் என்னென்னவோ கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். சொர்க்கம், நரகம் என்பதையெல்லாம் பற்றி என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. பிற கிரகங்களுக்கு மனிதர்களைக் குடிபெயர்த்துவதைவிட, நேரடியாகவே சொர்ரக்கத்திற்குக் குடிபெயர்த்துவிட்டால் எவ்வளவு தேவலை என்று நினைத்திருந்தேன். அதன் சாதக பாதகங்களைக் கலாம் அவர்கள் விளக்கியிருக்கக் கூடும். ஆனால் முடியாமல் போய்விட்டதே! அது மட்டுமின்றி, என்னோடு கலாம் அவர்கள் பேசியதையும், மூன்று விண்கலங்களில் மாணவர்கள் கிளம்பிச் சென்றதையும் எந்த ஊடகத்திலும் நான் வெளியிடவும் முடியாதே! இரகசியம் அல்லவா? எத்தகைய பெருமையை நான் இழந்துபோகிறேன்!    

சற்று நேரம் அங்கே நின்றுவிட்டு இன்னோவா கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தேன். என்ன இது, என்னுடைய காரைக் காணவில்லையே!  சுற்றுமுற்றும் பார்த்தேன். காரை யாராவது கிளப்பிச் சென்றிருந்தால் அதன் டயர் ஓடிய தடயமாவது இருக்கவேண்டுமே, அதுவும் இல்லை! யாரிடம் கேட்பது? பள்ளியில் யாருமே காணவில்லை. இனி இங்கிருந்து எப்படிப் போவது?

ஒன்றும் புரியாமல் மயங்கி விழுந்தேன்.

****
‘என்ன மிஸ்டர், இன்னும் எழுந்திருக்க மனம் இல்லையா?’ என்ற சூடான குரல் என் அருகில் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தேன். என் மனைவியின் குரலோ?

‘மன்னிக்க வேண்டும் சார்! என்னுடைய இன்னோவா காரைக் காணவில்லை. நீங்கள் பார்த்தீர்களா?’ என்று அழும் குரலில் கேட்டபடியே எழுந்திருக்க முயன்றேன்.

‘சாரா?’ என்று குழப்பத்துடன் கேட்டாள் என் மனைவி. ‘சாரும் இல்லை, மோரும் இல்லை. நான் உங்கள் மனைவி. அதுவாவது  புரிகிறதா? வேலை வெட்டி இல்லாமல் எட்டுமணி வரை தூங்கினால் இப்படித்தான் கனவுகள் வரும். உங்கள் இன்னோவா கார் எப்படிக் காணாமல் போகும்? உங்களிடம் இருப்பது ஓட்டை மாருதி கார் தானே! சரி சரி, எழுந்திருங்கள். அந்த....பள்ளியிலிருந்து போன் வந்தது. ஏதோ அப்துல் கலாம் கதையாம்.. அதைப் பாதியில் விட்டுவிட்டு வந்துவிட்டீர்களாமே, மாணவர்கள் மீதியைக் கேட்க வேண்டும் என்று தொந்தரவு செய்கிறார்களாம்... பதினோரு மணிக்கு உங்களை வரச் சொன்னார்கள்.. புரிகிறதா?’ என்று அவசரப்படுத்தினாள் மனைவி.

‘எனக்கே பாதிக்கதை தான் தெரியும். அந்த மூன்று விண்கலங்களும் இப்போது அண்டவெளியில் பறந்துகொண்டிருக்கும்...’ என்று நான் ஏதோ சொல்லமுயன்றேன்.

‘போதும் உங்கள் உளறல்.. சென்னை நகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு விண்கலம் கேட்கிறதா? எனக்கென்று எங்கிருந்துதான் வாய்த்தீர்களோ‘ என்று அடக்கினாள் அவள். தப்பிக்க வேறு வழியின்றிக் குளியலறைக்கு ஓடினேன்......

(முற்றும்)

© Y Chellappa    email: chellappay@yahoo.com14 கருத்துகள்:

 1. அடடா...! அதற்குள் முடிந்து விட்டதே என்று ஏக்கம் வந்து விட்டது...

  அபாரமான கற்பனை ஐயா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! பள்ளியில் சொன்ன அதே கதையை இங்கு சொல்லியிருக்கிறேன். இன்னும் நீட்டினால் நாவல் மாதிரி ஆகிவிடுமே!

   நீக்கு
  2. மிக்க நன்றி நண்பரே! பள்ளியில் சொன்ன அதே கதையை இங்கு சொல்லியிருக்கிறேன். இன்னும் நீட்டினால் நாவல் மாதிரி ஆகிவிடுமே!

   நீக்கு
 2. கற்பனை மிகையாகத்தோன்றினாலும் அதன்மூலமாகச் செய்தியைச் சொல்ல வந்தவிதம் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கற்பனை சார்! முடிவில் கனவு என்றுதான் இருக்கும் என்றாலும் உங்கள் கதை அருமை சார்! மாணவர்கள் மிகவும் ரசித்திருப்பார்களே அந்தக் கதையை! அருமை!

  பதிலளிநீக்கு
 4. ஒட்டு போட்டோம். சுற்றிக் கொண்டே இருந்தது. விழுந்ததா என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஓட்டு வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். நன்றி.

   நீக்கு
 5. அருமையானகதை ஐயா
  சிறுவர்களை மட்டுமின்றி அனைவரையுமே கவரும் கதை
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நண்பரே நல்ல சிந்தனையுடைய கதை இறுதியில் அதை கனவாக்கி சொன்னதெல்லாம் உண்மை என்பது போல் ஆக்கி விதம் அருமை வாழ்த்துகள் ரமணனை குமணனாக்கி பிரட்சினை இல்லாமல் தப்பித்து விட்டீர்கள் ஹாஹாஹா
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
 7. Iyya naan oru tv channel mega serial thayarikalam endru irrukiren thangalin karpanai thiranai kandu viyaunthu ponen thangalthan thaguntha kathai tharavendum. Kandippa sanmonam undu.

  பதிலளிநீக்கு
 8. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு