அப்துல் கலாமும் ஐந்து
சிறுவர்களும் - 2
இராய செல்லப்பா
அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும் - 1
படிக்க இங்கே சொடுக்கவும்:
http://chellappatamildiary.blogspot.com/2015/11/blog-post_10.html
‘உங்களுக்குக்
கதை வேண்டும் அல்லவா, நான் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்’
என்று சொல்லத் தொடங்கினார், அமரர் அப்துல்
கலாம்.
ஆனால் அதற்குள் நான் அவரிடமிருந்து
விளக்கம் பெறவேண்டிய சில சந்தேகங்கள் இருந்தன. முதலாவது, அவர் இப்போது எங்கே
இருக்கிறார் என்ற கேள்வி. இறந்தவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் என்னும் இரண்டு
உலகங்களில் ஒன்றில்தான் இறுதியாகத் தஞ்சம் புகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கலாம் அவர்கள் இந்த இரண்டில் எங்கே இருக்கிறார்? இரண்டாவது கேள்வி, அங்கிருந்து
எப்படி பூமிக்கு வந்தார்?
கலாம் சிரித்தார். “நண்பரே,
நான் பூமியில் இருந்தபோது எனக்கு இல்லாத ஒரு சக்தி இப்போது வந்துவிட்டிருக்கிறது. அதுதான்,
எதிரில் இருப்பவர்களின் மனத்தில் தோன்றும் எண்ணங்களை அவர்கள் சொல்லும்முன்பே
அறிந்துகொள்வது. இப்போது உங்கள் மனத்தில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் நான்
விடை சொல்லட்டுமா?” என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப்
போட்டது. என் மனத்தில் இருப்பதை நான் சொல்லாமலே இவரால் தெரிந்துகொள்ள முடிகிறதா? அது
ஆபத்தான நிலைமை அல்லவா? இருந்தாலும் என்ன சொல்லப்போகிறார் என்று பார்த்துவிடலாம்
என்ற எண்ணத்தில் “சொல்லுங்கள் ஐயா” என்றேன்.
“நான் இப்போது
சொர்க்கத்திலும் இல்லை, நரகத்திலும் இல்லை, தெரியுமா?”
அப்படியானால் இந்த
இரண்டையும் தவிர மூன்றாவதாக ஓர் உலகம் இருக்கிறதா? கூகுள் செய்து பார்க்கவேண்டும்
என்று எண்ணிக்கொண்டேன்.
“அது கூகுளில் வராது.
ஏனெனில் மூன்றாவதாக ஓர் உலகம் இல்லை! நான் இப்போது இருக்கும் இடம் ஒரு விசேஷமான
சூழ்நிலையில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தற்காலிகமாகத்தான். அதை
எனக்குப் பின்னால் யாருக்கும் தர யமதர்மன் முன்வரமாட்டான்..” என்றார் கலாம். “சரி
அதற்குமுன் நான் என் சொர்க்கத்திற்குப் போகவில்லை என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?”
ஆவலாகத்தான் இருந்தது
எனக்கு. தன் வாழ்நாளில் எறும்புக்கும் தீங்கு செய்து அறியாதவராயிற்றே, அவர்
சொர்க்கத்திற்கல்லவா போயிருக்க வேண்டும்!
கலாம் சொன்னதிலிருந்து
நான் அறிந்துகொண்டது இது:
கலாமைக் கண்டதும் யமதருமன்
சொன்னார், கலாம் அவர்களே, உங்களுக்காகச் சொர்க்கத்தில் அருமையான மாளிகை ஒன்றை
சித்திரகுப்தன் ஏற்பாடு செய்திருக்கிறான். வாருங்கள்..”
“அப்படியா, நான் ஏன்
சொர்க்கத்திற்குப் போகவேண்டும் என்று முதலில் தெரிந்தாகவேண்டும். அது பற்றிய
அலுவலகக் குறிப்புக்கள் இருக்கிறதா?” என்று கேட்டார் கலாம். குடியரசுத் தலைவராக
இருந்தவராயிற்றே, ஆதாரமான குறிப்புக்களைப் படிக்காமல் முடிவெடுப்பாரா?
யமதருமன் சிரித்தார். “கலாம்
அவர்களே, நீங்கள் அரவிந்தர் எழுதிய சாவித்திரி என்னும் காவியத்தில் மிகுந்த
ஈடுபாடு கொண்டவர் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அதில் மாண்டுபோன தன் கணவன்
சத்தியவானை மீட்பதற்காகச் சாவித்திரி என்னோடு நீண்டநேரம் வாதிட்டதையும் அதற்கு நான்
அளித்த பதில்களையும் அரவிந்தர் எழுதியுள்ள பாங்கினை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள்
என்றும் தகவல் உள்ளது. அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள் போலும். ஒன்றைத்
தெரிந்துகொள்ளுங்கள் கலாம் அவர்களே! பூமியில் உயிர்நீத்தவர்கள் யாராயிருந்தாலும்
சித்திரகுப்தனின் தீர்ப்பின்படி சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கப் பெறுவார்கள். இதற்கான
யமதருமனின் அரசியல் சட்ட ஆவணத்தை நீங்கள் பிறகு படிக்கலாம். இப்போது நான்
சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். சொர்க்கத்திற்கு
வாருங்கள். நேரமாகிறது” என்றான் யமதருமன்.
“ஹஹ்ஹஹ்ஹா..” என்று பெரிதாகச்
சிரித்தார் கலாம். “யமதருமன் அவர்களே! நான் பதவியில் இருந்தபோது, பிரதமர்
அலுவலகத்தில் இருந்து வரும் கோப்புகளில் கூட, உரிய காரணங்கள் இல்லையென்றால் கையொப்பம்
இடாமலே திருப்பியனுப்பி விடுவேன் தெரியுமா? ஆகவே, என்னோடு வாதாடவேண்டாம். எனக்கு
எவ்வளவோ பணிகள் பூமியில் பாக்கி யுள்ளன. திடீரென்று உங்கள் ஆட்கள் என்னை அழைத்து வந்துவிட்டார்கள்.
இதற்காகவே உங்கள்மீது நான் வழக்குத் தொடுக்கமுடியும். ஆனால் உங்களை நேரில்
சந்திக்கவேண்டும் என்று ‘சாவித்திரி’ படித்த நாளில் இருந்தே எனக்கும் பேராவல்
இருந்ததாலேயே சரியென்று அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன். இதற்குமேல் உங்களுக்கு
நான் சலுகை காட்ட முடியாது. ஆகவே, சொர்க்கம் பற்றிய குறிப்புக்களை எனக்கு உடனே
கொடுங்கள்” என்று உறுதியான குரலில் கூறினார் கலாம்.
யமதருமனுக்குத்
திக்கென்றது. இதுவரை அவனை எதிர்த்து இப்படிப் பேசியவர்கள் யாருமில்லை, சாவித்திரி
ஒருத்தியைத் தவிர. இவரோ ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். சரி,
போகட்டும் மேற்கொண்டு தகராறு வீண்டாம் என்று முடிவுசெய்து, “ஆவணங்கள் எதற்கு?
குறிப்புகள் எதற்கு? சொர்க்கம் என்றால் என்னவென்று நானே விளக்கம் தருகிறேன். போதுமா?”
என்றான்.
“இப்போதைக்குப் போதும்.
ஆனால் எழுத்துமூலமான குறிப்புகள் இன்னும் இரண்டொருநாளில் தந்துவிடவேண்டும். சரியா?”
என்று அவனை மடக்கினார் கலாம்.
சொர்க்கம் என்றால் என்ன
என்பதை யமதருமன் இவ்வாறு விளக்கினான்.
இறப்பதற்கு முன் நல்லன
செய்து பிற மனிதர்களின் அல்லது உயிரினங்களின் நல்லெண்ணத்தைப் பெற்றவர்கள் யாரோ
அவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இங்கு இரவு கிடையாது.
எப்போதும் வெளிச்சமே. அதனால் எப்போதும் உற்சாகமே. உறக்கம் என்பதே கிடையாது. இங்கு ‘காலம்,
நேரம்’ என்பது கிடையாது. அதனால்
கடிகாரங்கள் இல்லை. இங்கு வரும்போது உங்களுக்கு என்ன வயதோ அதே வயதில் நிரந்தரமாக
இருப்பீர்கள். இங்கு பசி எடுக்காது. தாகம் எடுக்காது. ஆசைகளே இருக்காது. ஏனெனில்
நினைத்த மாத்திரத்தில் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிடும். துன்பம்,
துயரம், துக்கம் போன்ற எதிர்மறை விஷயங்கள் இங்கு யாரையும் அணுகா. யாரும் உழைக்கவேண்டியதில்லை.
எதற்கும் அலைய வேண்டியதில்லை. சண்டையிட வேண்டியதில்லை. இனிமையான வாழ்வின் மொத்த
வடிவமே சொர்க்கம்... என்று சொன்னான் யமதருமன்.
“இதெல்லாம் எனக்கு
முக்கியமில்லை. நான் நாள்தோறும் பள்ளி அல்லது கல்லூரிச் சிறுவர்களோடு பேசியாகவேண்டும்.
இங்கு எவ்வளவு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன?” என்றார் கலாம்.
யமதருமன் சிரித்தான். “ஐயா
கலாம் அவர்களே, நீங்கள் பூமியை வைத்தே மீண்டும் மீண்டும் சிந்திக்கிறீர்களே! இது
சொர்க்கம். இங்கு அனைவருக்கும் நிரந்தரமான இளமை உண்டு. எனவே சிறுவர்கள் யாருமே கிடையாது.
அத்துடன் உங்களுக்குக் கல்வி வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் அது உங்களுக்கு
கிடைத்துவிடும். எனவே, தனியாகப் பள்ளிகளோ கல்லூரிகளோ கிடையாது” என்றான்.
கலாமுக்குக் குழப்பமாகப்
போய்விட்டது. ”என்னய்யா சொல்கிறீர்கள், பள்ளிகள் இல்லை, சிறுவர்கள் இல்லை,
ஆசிரியர்களும் இல்லை! சரி, இங்கு கம்ப்யூட்டர்கள் உண்டா? டிவி உண்டா? அலைபேசி
உண்டா?” என்று சரமாரியாகக் கேட்டார்.
யமதருமன் இப்போது
கடுப்பாகிவிட்டான். “கலாம் அவர்களே, பூமியில் இருக்கும் எந்தப் பொருளும் இங்கே
நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடும். கவலை வேண்டாம்” என்றான். “சீக்கிரம் வாருங்கள்,
சொர்க்கத்திற்குப் போகலாம்”.
கலாம் சுற்றுமுற்றும்
பார்த்தார். அவரை அழைத்துச் செல்ல விசேஷமான கார்கள் ஏதும் அங்கே
நின்றிருக்கவில்லை. டில்லியில் என்றால் கருப்பு நிறத்தில் நீளமான சுண்டெலி போன்ற
லிமூசின் தயாராக இருக்குமே! சரிதான், நினைத்த உடனே தான் போகவேண்டிய இடத்திற்குப்
போய்விடமுடியும் போலும், அதுதான் கார்கள் இல்லை.
ஒரு முடிவுக்கு வந்தவராக, “யமதருமன்
அவர்களே, நான் சொர்க்கத்திற்கு வரப்போவதில்லை” என்றார்.
“ஐயையோ, அப்படிச்
சொல்லாதீர்கள். எங்கள் அரசியல் சட்டப்படி உங்களுக்குச் சொர்க்கத்திலதான் இடம்
வழங்கியாகவேண்டும். அதை மாற்ற முடியாது” என்று தவித்தான் யமதருமன். அருகில் இருந்த
அவனது வாகனமான எருமையும் தலையை ஆட்டி ஆமாம் என்றது.
“மாட்டவே மாட்டேன். சிறுவர்களும்
பள்ளிகளும் இல்லாத உலகம் எனக்குத் தேவை இல்லை. ஆசைகளுக்கே இடமில்லாத உலகம்
எனக்குத் தேவை இல்லை. உறக்கத்திற்கு இடமில்லாத இந்த உலகத்தில் நான் யாரிடம் போய்க்
கனவு காணுங்கள் என்று அறிவுரை சொல்ல
முடியும்? வேண்டாம், இந்தச் சொர்க்கம் எனக்கு வேண்டாம்” என்றார் கலாம்.
அதற்குள் சித்திரகுப்தன்
அங்கே வந்துவிட்டான். யமதருமனைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, “கலாம் அவர்களே,
ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறீர்கள்? சீக்கிரம் வாருங்கள் எனக்கு நேரமாகிறது.
நான் கணக்கை முடித்துவிட்டு வீடு செல்ல வேண்டாமா? நீங்கள் மேலும் தாமதம் செய்தால்
எனக்குள்ள விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களை நரகத்தில் தள்ளிவிடுவேன். தெரிந்து கொள்ளுங்கள்” என்று மிரட்டினான்.
“நான் நரகத்திற்கே போகவும்
தயார். ஆனால் நரகத்தைப் பற்றிய ஆதாரமான குறிப்புகள் வேண்டும்” என்றார் கலாம்.
“குறிப்பு என்ன ஐயா
குறிப்பு? உங்களுக்கு நரகத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே?” என்று சொல்லத்
தொடங்கினான் சித்திரகுப்தன்.
நரகம் என்பதில் இன்பம்,
சுகம், ஆரோக்கியம் போன்றவைகளுக்கு இடமே இல்லை. வீடுகளோ மாளிகைகளோ இல்லை. வெட்ட
வெளியில்தான் வசிக்க வேண்டும். எப்போதும் இருட்டாகவே இருக்கும். ஒருவர் மற்றவரோடு
எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சண்டையிடலாம். யாரும் வந்து தடுக்க
மாட்டார்கள். உங்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்.
உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்குச் சலுகையாக நூறு மாடிகளைக் கொண்ட அடுக்கு வீடு
தரப்படலாம். அதில் 97-ஆவது மாடியில் உங்களுக்கு இருக்கை அமையும். ஆனால் அத்தனை மாடிகளையும் நீங்கள்
நடந்தேதான் ஏறவேண்டும். மின்தூக்கிகள்
திடீரென்று வேலை செய்வதை நிறுத்திவிடும். குடிதண்ணீர் வேண்டுமென்றால் அத்தனை
மாடிகளிலும் இறங்கித்தான் கிணற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுபோகவேண்டும். இங்கு
கணினிகள் இருக்கும். அவை சமயத்தில் வேலை செய்யாது. அலைபேசிகள் உண்டு. ஆனால் தொலைத்தொடர்பு
மட்டும் கிடைக்காது...
சித்திரகுப்தனைப் பார்த்து
இரக்கமான புன்னகையைச் சிந்தியபடியே சொன்னார் கலாம்: “நண்பரே! இதுதான் நரகமா? பூமியில்
இதைத்தான் சென்னை என்று நாங்கள்
அழைப்போம். அங்கு அன்றாடம் இதே நிலைதான்! எனவே அதேபோன்ற அமைப்பை உடைய நரகத்திற்கு
நான் ஏன் போகவேண்டும்? மாட்டேன், மாட்டவே மாட்டேன்” என்றார்.
யமதருமனுக்கும்
சித்திரகுப்தனுக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதற்குள் சொர்க்கத்தின்
கதவுகளைப் பூட்டும் நேரம் வந்துவிட்டதற்கு அடையாளமாக ஒரு சங்கொலி கேட்டது. “ஐயையோ,
எங்களை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிட்டீர்களே ஐயா! இனி நானே நினைத்தாலும் இன்று உங்களுக்குச்
சொர்க்கம் தர முடியாது. நரகத்தில் தான்
இடம் தரவேண்டும். ஆனால் அதையும் ஏற்க மறுக்கிறீர்களே! நாங்கள் என்னதான் செய்வது?”
என்றனர் இருவரும் ஒரே குரலில்.
கலகலவென்று சிரித்தார்
கலாம். “அப்படியானால் சாவித்திரிக்கு மூன்று வரங்களைக் கொடுத்தீர்களே அதுபோல்
எனக்கும் வரம் கொடுங்கள் யமதருமரே. அதன்
பிறகு நீங்கள் சொல்லும் இடத்திற்கு நான் போகத் தயார்” என்றார்.
“நிச்சயமாக?” என்றான்
சித்திரகுப்தன்.
“ஆம்:.
“சத்தியமாக?” என்றான்
சித்திரகுப்தன்.
“ஆம்”.
“யமதருமன் மீது ஆணையாக?”
“யமதருமன் மீது ஆணையாக.”
யமதருமன் முகத்தில்
இப்போதுதான் புன்னகை வந்தது. “நல்லது டாக்டர் அப்துல் கலாம் அவர்களே, உங்களுக்கு
என்ன வரம் வேண்டும்?” என்றான்.
கலாம் சுற்றுமுற்றும்
பார்த்தார். “நாம் பேசுவதை யாராவது ஒட்டுக் கேட்பார்களா?”
இல்லை என்று தலையாட்டினான்
அவன்.
“நான் பூமியில் இருந்தபோது
இந்தியாவிற்காக ராக்கெட் தயாரித்தேன். அதன் பயனாக செயற்கைக்கோள்கள் ஏராளமாக விட
முடிந்தது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல மங்கள்யான் என்ற விண்கலத்தைத் தயாரிக்க
முடிந்தது. ஆனால் பூமியெங்கும் தொடர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. சுத்தமான
காற்று கிடைப்பதில்லை. இதற்குத் தீர்வாக, பூமியில் உள்ளவர்களை வேற்று
கிரகங்களுக்குக் குடிபெயரச் செய்வதற்கு வழிசெய்தாக வேண்டும். அதற்கான திட்டங்களை
நான் தீட்டிக்கொண்டிருந்தபோது என்னை இங்கே அழைத்துவந்து விட்டீர்கள். எனவே...”
“எனவே என்ன செய்யவேண்டும்,
சீக்கிரம் சொல்லுங்கள். நரகத்தைப் பூட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான சாவி
என்னிடம் மட்டுமே உண்டு” என்றான் யமதருமன்.
“உடனடியாக நான் மூன்று
விண்கலங்களைத் தயாரித்தாக வேண்டும். ஒன்று செவ்வாய் கிரகத்திற்கும், ஒன்று
புளூட்டோ கிரகத்திற்கும் ஒன்று சந்திரனுக்கும் செல்லவேண்டும். ஆகவே, எனக்கு மூன்று
வாரங்கள் பூமிக்குச் சென்றுவர அனுமதி வேண்டும். இந்த ஒரு வரம் போதும்” என்றார்
கலாம்.
சாவித்திரியின் கதையை விலாவாரியாக
அரவிந்தர் எழுதி வைத்ததால் அல்லவா இவர் இப்படியெல்லாம் வரம் கேட்கிறார் என்று
அரவிந்தர்மேல் கோபம் வந்தது யமதருமனுக்கு. ஆனால் வேறு வழியில்லை. “சரி, சிவபெருமான்
எனக்கு வழங்கியுள்ள விசேஷ எமர்ஜென்சி அதிகாரத்தின்படி, உங்கள் பூத உடலைத் தற்காலிகமாகப் பூமிக்கு அனுப்பச்
சம்மதிக்கிறேன். ஆனால் உங்கள் கால்கள் யார் கண்ணுக்கும் தெரியாது. உங்களுக்குப்
பசி தாகம் நோய் போன்றவை வரவே வராது. சரியாக மூன்று வாரங்கள் ஆனதும் உங்களைத்
திரும்ப அழைத்துக் கொள்வேன். இப்போது செய்த மாதிரி அப்போது தகராறு செய்யக் கூடாது.
நேராக சொர்க்க வாசலுக்கு வந்துவிடவேண்டும்” என்றான் யமதருமன். “இப்போது கண்களை
மூடிக்கொள்ளுங்கள்” என்றான்.
“மிக்க நன்றி” என்று
அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார் கலாம்.
அடுத்த நிமிடம் இந்தப் பள்ளியின் வளாகத்தில் இருந்தார்!
*****
“என் கதை எப்படி
இருக்கிறது நண்பரே?” என்றார் கலாம். “இதை இன்று போய் வகுப்பறையில் சொல்லுங்கள்.
மீதிக்கதையை நாளை சொல்கிறேன்” என்று மறைந்தார். நான் திடுக்கிட்டுப்போய் எல்லாத்
திசைகளிலும் உற்று உற்றுப் பார்த்தேன். அவரைக் காணவே இல்லை! என்னுள் மிகப்பெரிய
கேள்வி எழுந்தது. ‘அவரை இனி எப்படிக் காண்பது?’
(மீதி அடுத்த பதிவில்).
© Y Chellappa email: chellappay@yahoo.com
அப்துல் கலாமும் ஐந்து
சிறுவர்களும் – 3
படிக்க இங்கே சொடுக்கவும்:
அருமை ஐயா அருமை
பதிலளிநீக்குகலாமின் பெருமையினை அற்புதமாய்
ஓங்கி ஒலிக்கும் கதை
நன்றி ஐயா
தம 1
தங்கள் ஆதரவிற்கு நன்றிகள் நண்பரே!
பதிலளிநீக்குஆஹா நாகளும் கலாமுடனும் எமதர்மனுடனும் இருந்தது போல் உள்ளது அய்யா..மிக்க நன்றி..
பதிலளிநீக்குஎமதருமன் இந்த பதிவோடு சரி. இனிமேல் வரமாட்டான்.
நீக்குஎமதருமன் இந்த பதிவோடு சரி. இனிமேல் வரமாட்டான்.
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குஆவலுடன் அடுத்த பகிர்வினை எதிர்ப்பார்த்து...
எந்த அதிகாரம்...? உங்களின் பதிலை எதிர்ப்பார்த்து :
பதிலளிநீக்குஇணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html
தங்கள் உயர்வான பதிவுகளுக்கு முன்னால் என்னுடையது எடுபடுமா நண்பரே! திருக்குறள் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது், ஆனால் திரைப்பட பாடல்கள்தாம் கைகொடுக்க மறுக்கின்றன...
நீக்கும்ம்ம் நரகத்தை விவரித்து வரும்போதே அது பூமிதான் என்று நினைத்து வரும்போது சென்னை என்று சொல்லிவிட்டீர்கள் சார். சென்னை மட்டும்தானா..? இந்தியா என்றும், ஆஃப்ரிக்க நாடுகள் என்றும் கூட சேர்த்துக் கொண்டிருக்கலாம். மற்ற அண்டர்டெவலப்டு நாடுகளைக் கூடச் சேர்த்துக் கொண்டிருக்கலாமோ...ஹஹஹ்
பதிலளிநீக்குகலாம்! மாபெரும் மனிதர். பாவம் அவரை அங்காவது சொர்கமும் வேண்டாம் நரகமும்வேண்டாம் நடுவில் இடைப்பட்ட பகுதியில் நல்லதாய் ஒரு உலகம் அமைக்கச் சொல்லுங்கள் அவரிடம்...
ரசிக்கின்றோம் சார் தொடர்கின்றோம்
நம்ம ஊரை விட்டுக்கொடுக்க முடியுங்களா? சென்னை தான் நரகம் என்று இந்தப் பன்னிரண்டு நாள் மழை நிரூபித்துவிட்டதே!
நீக்குஅருமை நண்பரே கதையில் பொருத்தமானவரை இணைத்துக்கொண்டு சென்றது சிறப்பான செயலே... விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்து சுவாரஸ்யம்.... தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
நன்றி நண்பரே!
நீக்குமிகவும் அருமையான கற்பனை. தொடரட்டும்.
பதிலளிநீக்குநான் மிகவும் ரஸித்த வரிகள்:
//இவரோ ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். சரி, போகட்டும் மேற்கொண்டு தகராறு வீண்டாம் என்று முடிவுசெய்து, “ஆவணங்கள் எதற்கு? குறிப்புகள் எதற்கு? சொர்க்கம் என்றால் என்னவென்று நானே விளக்கம் தருகிறேன். போதுமா?” என்றான்.
“இப்போதைக்குப் போதும். ஆனால் எழுத்துமூலமான குறிப்புகள் இன்னும் இரண்டொருநாளில் தந்துவிடவேண்டும். சரியா?” என்று அவனை மடக்கினார் கலாம்.//
//“நான் நரகத்திற்கே போகவும் தயார். ஆனால் நரகத்தைப் பற்றிய ஆதாரமான குறிப்புகள் வேண்டும்” என்றார் கலாம்.//
//“நல்லது டாக்டர் அப்துல் கலாம் அவர்களே, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்றான்.
கலாம் சுற்றுமுற்றும் பார்த்தார். “நாம் பேசுவதை யாராவது ஒட்டுக் கேட்பார்களா?”
இல்லை என்று தலையாட்டினான் அவன்.//
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குஒரு மாமனிதரின் சாதனையை, அழகான பதிவு மூலமாக வித்தியாசமான முறையில், அனைவருடைய மனதிலும் ஆழப்பதியும் வகையில் பதிந்த விதம் அருமை.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா!
நீக்கு