திங்கள், ஜனவரி 27, 2014

பால்யகால சகி- இனப்படுகொலை- கஸ்தூரியின் வினாவிடை ( ‘அபுசி-தொபசி’-26)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
தில்லியில், பதவிக்கு வந்தபிறகு கேஜ்ரிவால் நடத்தும் கூத்துக்களுக்குச் சற்றும் குறையாதது, சென்னையில், பதவிநீக்கப்பட்ட மு. க. அழகிரி நடத்தும் கூத்து. இவரால் தி.மு.க.வின் ஓட்டுவங்கிக்கு ஆபத்து வருமா என்பது தெரியவில்லை. நான் கேட்டவரையில், அழகிரி, தி.மு.க.வின் இருண்ட முகமாகத்தான் இருந்தார் என்றும், அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது, கட்சியின் நல்லதிர்ஷ்டமே என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவரைச் சுற்றியிருந்த அடியாட்கள் கூட்டமும் இப்போது மு.க.ஸ்டாலின் அருகே போய்விட்டதாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. அடியாட்கள் இல்லாமல் அழகிரியால் என்ன செய்யமுடியும் என்று மக்கள் கேட்கிறார்கள். அவர் அறிமுகப்படுத்திய ‘திருமங்கலம் ஃபார்முலா’ ஆளும்கட்சியால் மட்டுமே கடைபிடிக்கமுடியும். தி.மு.க. இன்று எதிர்க்கட்சிதானே! ஆகவே, அழகிரியின் விலக்கம், உண்மையில் கட்சியின் வாக்குவங்கியை மேலும் பலப்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது.

ஆனால், கருணாநிதியின் தமிழ் நினைத்தபடி விளையாடக் கூடியதாயிற்றே! “முந்திப் பிறந்தவனே வா! மு.க. அழைக்கிறேன் வா!” என்று கலைஞர், சில வாரங்களில் தன் பெயருள்ள தொலைக்காட்சியில்  பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தகம்
வைக்கம் முகமது பஷீரின் நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல், ‘பால்யகால சகி’. அதே பெயரில் தமிழாக்கம் குளச்சல் மு யூசுஃப். காலச்சுவடு வெளியீடு. புத்தகக் கண்காட்சியின் கடைசி நாளில் அவசரமாக வாங்கியது. எண்பது பக்கம், அறுபது ரூபாய்.


இது ஒரு சோகக்கதை.  1944இல் வெளியானது. இன்றைக்கு எழுபது வருடங்கள் முன்பு! மஜீத் என்ற இளைஞனுக்கும் சுகறா என்ற பெண்ணுக்குமான காதல். தகப்பனை எதிர்த்துக்கொள்ள இயலாத மஜீத், தன் காதலை எப்படிச் சொல்லுவான்? விஷயம் அறிந்த தந்தை அவனை வீட்டை விட்டு விரட்டுகிறார். எத்தனையோ வருடங்கள் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மீண்டும் வருகிறான். காதலியின் வீட்டில் காத்திருப்பார்களா? யாரோ ஒருவனுக்கு இரண்டாம்தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். ஆனால் அது மனதுக்குகந்த திருமணமில்லை.....

மஜீத் வருவான் என்று சுகறா நம்பிக்கையோடு காத்திருந்தாள். அவர்களின் சந்திப்பை பஷீர் இப்படி எழுதுகிறார். (பக்.60)

(சுகறா சொல்கிறாள்): “நான் தெனசரி (உங்க கடிதத்தை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்னைக்கு வரும், நாளைக்கு வரும்னு தெனசரி நெனைப்பேன்.”

“அப்புறம் எப்படி இந்தக் கல்யாணம் நடந்தது?” (என்கிறான் மஜீத்.)

“நான் சொன்னேனில்லையா, எங்கிட்ட ஆருமே கேக்கலேன்னு. மட்டுமில்லே, நான் ஒரு பாரமா எவ்வளவு நாளுதான் இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணாப் பெறந்தவ இல்லையா? ....கடைசியில் வீட்டெயும் தோட்டத்தெயும் பணயம் வெச்சு, பொன்னும், சாதனமும் வாங்கி கல்யாணம் கழிஞ்சது.”

“பெறகு , ஏன் இவ்வளவு மோசமா இருக்கே?”

சுகறா எதுவும் பேசவில்லை.

“சொல்லு, சொகறா, ஏன் இப்பிடி ஆயிட்டே?”

“மனவெசனந்தான்”

“ஏன் மனவெசனம்?”
 ......

“சொகறா.”

“ஓ..”

“சொல்லு.”

சுகறா வாய்விட்டழுதாள். பிறகு மெல்ல தன்னைத் தேற்றிக்கொண்டு அவளது கணவனைப் பற்றி சொன்னாள்:

“பெரிய  கோபக்காரரு. அவருக்கு வேற ஒரு பெஞ்சாதியும் அதுலே ரெண்டு குழந்தைகளும் உண்டு. நான் எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டு, கணக்குப் பாத்து என் பங்கெ பிரிச்சு வாங்கணும்னு தெனசரி சொல்லுவாரு. எனக்குத் தங்கச்சிங்க இல்லையா? நான் என்ன செய்ய முடியும்? மாட்டேன்னு சொல்லும்போதெல்லாம் என்னெ அடிப்பாரு. ஒரு நாளு என் அடிவயித்துலே மிதிச்சதிலே நான், குப்புற விழுந்துட்டேன். அன்னைக்கு ஒடைஞ்சதுதான் இந்தப் பல்லு, இன்னா.”

அவள் வாயைத் திறந்து காட்டினாள். வெள்ளை வரிசைகளின் இடையே ஒரு கறுப்பு இடைவெளி.

“சொகறா.”

“ஓ..!”

“பெறகு?”

“நான் அங்கெ போன பெறகு இதுவரெ பசிதீர எதுவும் சாப்பிட்டதில்லை. ஒரு நிமிசங்கூட மன சந்தோசமா இருந்ததில்லெ. நான் அங்கெ ஒரு பெஞ்சாதி இல்லெ. வேலைக்காரி! கூலிக்குக் கதம்பை அடிச்சுக்குடுத்து பணம் சம்பாதிக்கணும். கொறஞ்சுபோனா அடி கெடைக்கும். சாப்பிட ஒண்ணுமே தரமாட்டாங்க. நான் வீட்டுக்கு வெலக்கா இருந்தப்போ...”

“?...?”

“தொடர்ந்து நாலு நாளு.... பட்டினியாட்டு கெடந்ததுண்டு.”

‘பஷீரின் விசேஷ கலையனுபவம் என்னவென்று கேட்டால், அது உணர்வின் உச்சநிலை வெளிப்பாடு என்று தயக்கமில்லாமல் சொல்லமுடியும். துடிப்பான சிறுசிறு வார்த்தைகளால் சொல்லப்பட்ட மனித மனதின் துடிப்பை அதில் எப்போதுமே உணர முடியும்’ என்கிறார் முன்னுரை வழங்கிய எம்.பி.போள். ஆமோதிக்க வேண்டியதுதான்.

சினிமா & தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் நடைபெறும் ‘வினாவிடை’ நிகழ்ச்சி பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். நடிகை கஸ்தூரி அழகிய தமிழில், ஒரு சீரிய கல்வியாளருக்குரிய கம்பீரத்துடன், நேரத்தை வீணாக்காமல்,  அதே சமயம் சிரிப்பும் சுழிப்பும்  அளவோடு கலந்து, வழங்கும் அருமையான நிகழ்ச்சி. பதின்மூன்று வாரங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் இன்று.


நான்கு கல்லூரிகள், ஒவ்வொன்றிலும் மூன்று மாணவர்கள். சென்னை ஐ.ஐ.ட்டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பூ.சா.கோ. கல்லூரி, திண்டுக்கல் கல்லூரி ஆகியன இறுதிக்கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள்.
 
முதல் பரிசு வென்ற ஐ.ஐ.ட்டி. குழு
அற்புதமான கேள்விகள். சிந்தனையைக் கிளறும்படியான  format. கடைசியில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயைத் தட்டிக்கொண்டு போனவர்கள், சென்னை ஐ.ஐ.ட்டி. மாணவர்கள்தாம். (ஐ.ஐ.ட்டி. என்றாலே மனப்பாடத் திறமையும் நினைவாற்றலும்தானே அவர்களின் அடையாளங்கள்! என்றாலும் அவர்களும் கடினமாகப் போட்டியிட்டுத்தான் வெல்ல முடிந்தது.)
 
இரண்டாம் பரிசு வென்ற பூ.சா.கோ.கலைக் கல்லூரி, கோவை, குழு
இரண்டாவது பரிசு ஐம்பதாயிரம் ரூபாயை வென்றவர்கள், கோவை பூ.சா.கோ. கல்லூரி மாணவர்கள்.
 
வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா பல்கலைக் குழு

திறமையாக நடத்திய கஸ்தூரிக்கு எவ்வளவு பரிசு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வினாவிடை நிகழ்வு எப்போது என்றும் தெரியவில்லை. மாணவர்கள் ‘புதுயுக’த்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பத்திரிகை

எது இனப்படுகொலை? – கவிஞர் சேரன்  (‘காலச்சுவடு’ ஜனவரி 2014)

இனப்படுகொலை (Genocide) என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, ‘இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு’. இன்னொன்று, இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள்- என்கிறார் சேரன்.

"இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெல்ல இடம் பெற்று வருவது; மாற்று இனத்தவர்களின் குடியேற்றம், வெறுப்பு ஏற்படக்கூடிய வகையில் ‘மற்றவர்’களைப் பற்றிக் கல்வியிலும் பாடப் புத்தகங்களிலும் வரலாற்று எழுதலிலும் சித்திரிப்பது, திட்டமிட்ட ஒதுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும். இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983  நடந்தேறிய ஈழத்தமிழருக்கு எதிரான ‘கலவரங்கள்’ இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான்.
 
இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரசப் படையினர்மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை. ஜூன்1956 - டிசம்பர்2008 காலப்பகுதியில் இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான ‘கலவரங்களை’யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள் இடம்பெற்ற ஊர்களுக்கு நான் சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப் படுகொலைகள் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன். அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து  எட்டுமாதக் குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

இத்தகைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகியிருந்தாலும் ‘பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்ற வழமையான இலங்கை அரசின் உத்தியோகப் பூர்வமான அறிக்கையே வெளியாகும்.  1982இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடகநிலைமை பெருமளவுக்கு இதுதான்.”

மூன்றாவதாகவும் ஒரு அம்சத்தைச் சேரன் தருகிறார். “இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி (இன) மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம் (ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பாயம் 1994 இல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் இனப்படுகொலைக்கான கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப்படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியிருக்கிறது....ஈழ இனப்படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் தொடங்கியுள்ளன. இவற்றுள் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.”

சேரனின் முயற்சிக்கு அனைத்துலகத் தமிழ் மக்களும் துணையிருப்பார்கள் என்பது உறுதி. இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்ந்தபோது, அதன் எதிரொலியாகத் தில்லியில் சீக்கியர்கள் சிலநூறு பேர் கொல்லப்பட்டார்கள். சீக்கிய சமுதாயம் அதுபற்றி எண்ணற்ற வழக்குகளைத் தொடர்ந்து பலகோடி ரூபாய்களை இழப்பீடாகப் பெற்றும் இன்னும் விடாமல், சோனியாகாந்திமீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சென்ற ஆண்டு அவர் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றபோது அவரைக் கைதுசெய்ய வாரண்ட்டை அவருக்கு வழங்க முயற்சி மேற்கொண்டதை நாம் நினைவு கூற வேண்டும். சீக்கியர்களுக்கு உள்ள இன உணர்வு தமிழர்களாகிய நமக்கு  ஏன் இல்லை?

கலைமகள் –ஜனவரி 2014  - ஆண்டு ராசி பலன்

2014ஆம் ஆண்டின் பொதுப்பலன்களை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். தனுசு ராசிக்கு “தினமும் சுரைக்காய்ச் சித்தரை வணங்கினால் நல்ல திருப்பங்கள் ஏற்படும்” என்று இருக்கிறது. இவரைப் பற்றியும் வணங்கும் முறை பற்றியும் மேற்கொண்டு விவரங்கள் தேவை. யாராவது எழுதுங்களேன்! (அடியேன் ராசி தனுசு!)

சிரிப்பு
“நீங்க ரொம்ப லக்கி டாக்டர்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“நான் உடம்பு சரியாயிட்டா டிஸ்சார்ஜ் ஆகி போயிடுவேன். நீங்க எப்பவுமே நர்சுங்களோட இருக்கீங்களே.”

(நன்றி - தமிழ் இந்து -  26.01.2014 –   பக்கம் 12 – எழுதியவர்: பர்வீன் யூனுஸ். பாராட்டுக்கள்! இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களாமே!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
© Y.Chellappa


திங்கள், ஜனவரி 20, 2014

தாகூரின் காதல் பரிசும், எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை நினைவுகளும் ( ‘அபுசி-தொ பசி’- 24)

(புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவற்றுள் சில நூல்களைப் பற்றி இன்றும் தொடர்கிறேன்.)
எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை சில கவிதைகள், மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட! ரவீந்திரநாத் தாகூரின் ‘காதல் பரிசு’ மாதிரி.


தாகூருக்கு எத்தனையோ மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. (கனடாவிலிருந்து ஜெயபாரதன், 'திண்ணை'யில் தொடர்ந்து தன் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறார்.) என்றாலும், அந்த நாளில் வி.ஆர்.எம்.செட்டியார் அளித்த மொழிபெயர்ப்பு தான்  ‘classic’  எனலாம். அத்தகைய ஒரு மொழிபெயர்ப்புதான் இது. வி.ஆர்.எம்.செட்டியார் மேற்பார்வையில் சா.அருணாசலம் மொழிபெயர்த்திருக்கிறார்.

எல்லாமே கவிதைகள். அழகிய உரைநடையில் அமைந்த மொழிபெயர்ப்பு. உதாரணத்திற்கு சில பகுதிகள்:
***
என்னிடமிருந்ததைக் கொண்டு எனது தட்டை நிரப்பி உன்னிடம் கொடுத்துவிட்டேன். உனது திருவடிகளுக்கு நாளை நான் எதைக் கொணர்வேன் என அறியாது திகைக்கின்றேன். பூக்கும் காலத்திற்குப் பின், மலர்களை இழந்த வெறுங்கிளைகளோடு வானத்தை நோக்கி நிற்கும் மரம்போல், நான் நிற்கிறேன்.

ஆனால் எனது முன்னைய நிவேதனங்களில், முடிவற்ற கண்ணீர் வெள்ளத்திலே சாம்பி வாடாத மலர் ஒன்றுகூட இல்லையா?

வெறுங்கையனாய் நான் உன்னிடம் வேனிற்காலத்தில் விடைபெறும்போது, நீ அதை நினைந்து உனது கண்களால் எனக்கு ஆசி வழங்குவாயா? (பக்.22)
***
வாத்துக்கள் ஆர்ப்பரிக்கவும், புறாக்கள் சூரிய ஸ்நானம் செய்யவும், மாலைப் பொழுதிலே மீன் பிடிப்போரின் சிறிய மரக்கலங்கள் புல்பரந்த கரையின் ஓரமாக நிழலில் தங்கும் தனிமையான நீர்நிலைகளின் மணற்பாங்கான கரையையே நான் நேசித்தேன்.

மூங்கில் புதர்களின் ஓரத்தில் நிழல் பரவியதும் பெண்கள் பாத்திரங்களோடு, சுற்றிவரும் சந்துகளின் வழியாக வந்து தங்குவதுமான மரங்கள் அடர்ந்த கரையை நீ நேசித்தாய்.

இருகரைக்கும் ஒரே பாடலைப் பாடிக்கொண்டும், ஒரே ஆறுதான் நம்மிருவரிடையேயும் ஓடியது. விண்மீன்களை நோக்கியவண்ணம் தனிமையாக மணலில் படுத்துக்கொண்டு நான் அதைக் கேட்டேன்.

காலைக் கதிரவனின் ஒளியிலே, சரிவான கரையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு நீயும் அதைக் கேட்டாய். நான் கேட்ட சொற்களை நீ அறியாய். உன்னிடம் அது பேசிய மறைமொழி, எனக்கு என்றும் இரகசியமாகவே உள்ளது. (பக்.20)
***
வசந்த காலத்தில் ஒருநாள், நேரம் தவறி, குழந்தையின் மாறும் மனநிலையோடும், உனது குழலிசையோடும் மலர்களோடும், நீ தோன்றினாய். நீர்க்குமிழிகளாலும் அலைகளாலும் எனது காதல் செந்தாமரையை அலைத்து, என் நெஞ்சை வாட்டினாய். உன்னுடன் வாழ்வின் இரகசியத்தில் புகுமாறு, நீ என்னை அழைத்தாய். ஆனால் கோடைகாலத்தில் அசைந்தே முணுமுணுக்கும் இலைகளினூடே, நான் துயின்றேன். நான் எழுந்ததும் வானத்தில் மேகங்கள் திரண்டன. காய்ந்த சருகுகள் காற்றில் பறந்தன. மழையோசையின் அதிர்ச்சியிலே, உனது நெருங்கிவரும் காலடிகளைக் கேட்கிறேன். மரணத்தின் இரகசியத்தில் உன்னுடன் கலந்து சேருமாறு நினது அந்தரங்க அழைப்பையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் உன்னருகில் வந்து என் கரங்களை உன் கரங்களோடு பிணைத்து நிற்கும்போது, உனது விழிகள் கனல்கின்றன. உனது கூந்தலிலிருந்து நீர் சொட்டுகிறது.(பக்.46)

காதல் பரிசு – வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 64, ரூ.25.

எம்.ஆர்.ராதா

தமிழ் திரைப்பட உலகில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டாக்கி மறைந்தவர் எம்.ஆர்.ராதா.  1967இல் தி.மு.க. ஆட்சிக்குவரக் காரணமாயிருந்தவை இரண்டு: ஒன்று, இந்தி எதிர்ப்பு. இரண்டாவது, எம்.ஜி.ஆரை. எம்.ஆர்.ராதா சுட்டது. கையிலும் மார்பிலும் கட்டுக்களோடு எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்த படம் தான் சராசரிக்கும் கீழான மக்களின் நெஞ்சைத்தொட்டு அவர்மீதான அனுதாபத்தைத் திமுகவுக்கு வாக்குகளாக மாற்றியளித்தது என்றால் மறுப்பதற்கில்லை. அதே அலையில் தான் எம்.ஜி.ஆர். பின்னாளில் தனிக்கட்சி அமைக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்தது. எனவே எம்.ஜி.ஆர். மட்டுமின்றி, செல்வி ஜெயலலிதாவும் கைகூப்பிக் கும்பிடவேண்டியவர் எம்.ஆர்.ராதா.

இந்த வழக்கில் சிறைசென்று திரும்பியதும், வெளிவந்த நூல்தான், விந்தன் எழுதிய “நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்”.  அதில் ராதா கூறுகிறார்:

(பக்.158) ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்திலே எனக்கு ஈடுகொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னால மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்குமேல்  கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலேயே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்க மாட்டார். ‘நான் விரும்பறது உங்களுடைய நடிப்புக்கலையை; ஓசிப் பெட்ரோலை இல்லே’ன்னு சொல்லி விடுவார்...

(பக்.161) கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதைவிட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கறது அவருக்குப் புரிஞ்சுப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற ப்ரொட்யூசர் அவர் ஒருத்தர்தான்....

(பக்.166) (என் வழக்கைப் பற்றி) ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே நான் மனம் விட்டுச் சொல்லி விடணும்னு நினைக்கிறேன். அதாவது, நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு நினைவை இழந்தவன் நான்தான். அந்த நிலையிலே என்னையும் முதல்லே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. அங்கே நினைவு திரும்பி நான் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கீதா மட்டும் என் பக்கத்திலே இல்லே; அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே! அதிலே எனக்கு ஒரு திருப்தி.....

நம் காலத்தின் மறக்கமுடியாத அரசியல், சினிமா நினைவுகளை மறுபடியும் அசைபோட உதவும் நூல்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்- வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 168, ரூ.100.

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

© Y.Chellappa

வியாழன், ஜனவரி 16, 2014

சில எழுத்தாளர்கள் - சில ரகசியங்கள் - தருபவர்: க.நா.சு. ( ‘அபுசி-தொ பசி’- 23)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த பொக்கிஷமாகச் சொல்லவேண்டிய நூல், பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான க. நா. சுப்ரமணியத்தின் “இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற நூலாகும்.
க நா சு 
தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகப்படியான விமர்சனங்களைச் சந்தித்த விமர்சகர் க.நா.சு. மணிக்கொடி காலம் தொடங்கி நவீன இலக்கிய காலம் வரையில் நேரிடையான அனுபவம் உள்ளவர். சுயமான ஆக்கங்களால் மட்டுமன்றி, மொழிபெயர்ப்புகளாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால் அவருக்கே உரிய நையாண்டி துள்ளும் விமர்சனங்களால் தமக்குரிய புகழைப் பெறாமலே போனவர். 

சென்னையிலும் டில்லியிலுமாக வாழ்ந்தவர். புத்தகக்கடை நடத்திக்கொண்டே பத்திரிகையும் நடத்தியவர். உலக இலக்கியங்கள் பற்றி எழுத் முழுத்தகுதி பெற்ற ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் இவர் முதன்மையானவர்.

“இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற இந்த நூல், பல ஆண்டுகள் முன்பே வெளிவந்ததாகும். இருபத்தியொன்று இலக்கியாசிரியர்களின் வரலாற்றைக் கதை போல ஆற்றொழுக்காகக் கூறும் இந்நூலை இதுவரை எப்படிப் படிக்காமல் இருந்தேன் என்பது எனக்கே புரியாத விஷயம்.

இன்று நம்மிடையே இல்லாத சில தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும், க.நா.சு.வின் அற்புதமான தமிழ்நடையையும்  நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதற்காகவே சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன்:

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி: (பக்.26)

கல்கி, டி.கே.சி. நட்பு பிரசித்தமானது. அந்த மாதிரி ஒரு நட்பை இப்போது காண்பது அரிது. கல்கி பத்திரிகை ஆரம்பிக்க இருந்தபோது டி.கே.சி. என் நண்பர் விநாயகத்திற்கும் எனக்கும் கடிதம் எழுதி எங்கள் இருவரையும் முதல் சந்தாதாரர்களாகச் சேரச் சொன்னார். அந்தச் சமயத்தில் அவர் அரண்மனைக்காரன் தெருவில் ராமாயணம் பற்றி தொடர் பிரசங்கங்கள் செய்யும்போது, ஒரு சாயங்காலம் கைகேயி என்று ராமாயணத்தில் வரும்போதெல்லாம், தன்னையும் அறியாமலே, கல்கி, கல்கி என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது.

கல்கி பத்திரிகை நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் என்னை ஒரு நீதிபதியாக நியமித்து, வந்த 1500 சிறுகதைகளையும் சிதம்பரத்திற்கு என் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பகீரதன் என்பவர் (பின்னாளில் கங்கை, சத்தியகங்கை இதழ்களின் ஆசிரியர்) போட்மெயிலில் சிதம்பரம் வந்து, நடுநிசியில், என் வீட்டுக் கதவைத் தட்டி, “நான் தான் பகீரதன் – கொண்டு வந்து விட்டேன்!”  என்று கதை மூட்டையை என் வீட்டில் போட்டது நினைவிருக்கிறது. 

இந்தக் கதைகளை சிதம்பரம் போலீசார் – அது 1942-ல்- நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கிறேன் என்று என் வீட்டில் சோதனை செய்தபொழுது அலசி அலசிப் பார்த்தார்கள்....

பெருமளவில் தமிழர்களையும் தமிழையும் பாதித்த பத்திரிகாசிரியர் கல்கிதான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு முன் சுப்ரமணிய பாரதி ஒருவர்தான் அப்படி தமிழையும் தமிழர்களையும் பாதித்திருக்கிறார்!

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்: (பக்.21-22)

மாஸ்தி என்கிற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், விமர்சனம் என்றெல்லாம் எழுதிப் புகழ் பெற்றவர்; ஆனால், வீட்டில் தமிழ் பேசுகிறவர்....

பல இலக்கியக் கூட்டங்களில் ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பேசித் தான் சொல்ல வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி வாதாடுவதில் மிகவும் வல்லவர். பம்பாயில் நடந்த ஒரு அனைத்திந்திய இலக்கியாசிரியர் மாநாட்டில் பேச்சாளர்கள் அளவுக்கு மீறிப் பேசிப் பேசி, சாப்பாட்டு டயத்தையும் அரைமணிக்கு மேல் தாண்டி விட்டார்கள். அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாஸ்தி, “இத்தனை நேரம் நீங்கள் சொல்வதை நான் கேட்டாகி விட்டது. பசியோ, பசி இல்லையோ நான் சொல்வதை அரைமணி கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகுதான் கலைய வேண்டும்” என்று அவர் பேச ஆரம்பித்ததும், அரைமணி பசி தாகத்தையும் மறந்து விட்டு எல்லோரும் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு நினைவு இருக்கிறது.

கு.ப.ராஜகோபாலன்: (பக்.28)

நெல்லைநேசன் என்கிற பெயரில் பி.ஸ்ரீ. ஆச்சாரியா, சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி ‘அவர் ஒரு தமிழ் தேசியக்கவி; உலக மகாகவி என்று சொல்லுவதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை’ என்று எழுதிவிட்டார்.  அதைப் படித்துவிட்டு வ.ரா.விடம் “இப்படி எழுதியிருக்கிறாரே!” என்று குறை கூறப்போன ஒரு கோஷ்டி எழுத்தாளர்களையும் வ.ரா. கோபித்துக் கொண்டார். “அவர் இப்படிச் சொல்லிவிட்டார். சரி, அதைக் கேட்டுக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பாரதி உலக மகாகவிதான் என்று ஸ்தாபித்து எழுதமுடியுமானால் எழுதுங்களேன்” என்றார். இப்படி எழுதப்பட்டவைதான் ‘கண்ணன் என் கவி’ என்கிற நூலில் உள்ள பாரதி பற்றிய இலக்கியத்தரமான கு.ப.ரா.வின் விமர்சனக் கட்டுரைகள்.

பின்னர் வேறு யாரோ ஒருவர் பி.ஸ்ரீ.யின் (அக்)கட்டுரையை அந்தப் பத்திரிகாசிரியர் பிரசுரித்தது பற்றிக் குறை கூறியபோது கு.ப.ரா. “கருத்துச் சுதந்தரத்தைச் சொல்ல அவருக்கு உரிமையுண்டு. கருத்துக்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டால்தான் உண்மை தெரியவரும்” என்று சொன்னதை நான்  கேட்டிருக்கிறேன்.

“செக்ஸ் என்பது எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு அம்சம். கதை, நாவல் என்று உள்ளதை உள்ளபடி எழுத முயல்கிறவன் செக்ஸை மட்டும் தவிர்க்க முயன்றால் அவன் நல்ல இலக்கியாசிரியன் அல்ல என்றே நான் சொல்லுவேன்...செக்ஸில் ஆபாசம் இல்லை. இலக்கியத்தரமாக எழுத வராதபோது செக்ஸ் மட்டும் அல்ல, மற்ற விஷயங்களும் கூட ஆபாசமாகி விடுகின்றன” (என்கிறார் கு.ப.ரா.)

‘தாய்’ என்று அவர் எழுதிய ஒரு சிறுகதையை ‘அது மோசமாக இருக்கிறது’ என்று அன்றையப் பெரிய பத்திரிகைகள் வெளியிட மறுத்தன. கல்யாணமாகாமலே ஒரு குழந்தையைப் பெற்றுவிட்ட ஒரு பெண் தன் குழந்தையைத் தியாகம் செய்யவேண்டிய காலகட்டம் வந்தபோது, “நான் என் குழந்தையைத் தியாகம் செய்ய மாட்டேன். தகப்பனில்லாவிட்டால் என்ன? தாய் நான் இருக்கிறேனே!” என்று முடிவு செய்கிற கட்டம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்தக் கதையை நான் என் ‘சூறாவளி’யில் வெளியிட்டேன் என்பது எனக்கு இன்று நினைத்துப் பார்க்கும்போதுகூடப் பெருமையாக இருக்கிறது.

புதுமைப்பித்தன்: (பக்.12)

‘சூறாவளி’ என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது புதுமைப்பித்தன்தான். ‘மணிக்கொடி’ நின்றுபோன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே  பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. ‘தினமணி’யில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். சூறாவளியில் அந்நியச் செய்திகள் வாரா வாரம் எழுத  அவருக்கு நான் 50 ரூபாய் மாதத்துக்குத் தந்தேன். ஆனால், ஆறே மாதங்கள் தான் தர முடிந்தது....

தஞ்சாவூரில் நான் அய்யன்குளத்துக்கு எதிர் வீட்டில் மேலவீதியில் குடியிருந்தபோது, திருநெல்வேலி போத்தி கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.....

திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் ரகுநாதன் அவரின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர். அவர்தான் “மருந்துச் செலவுக்குக்கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை” என்று எனக்கு கார்டு எழுதி, அதை அடித்துவிட்டு, “இன்று புதுமைப்பித்தன் காலமானார்” என்று 1948-ல் எனக்கு எழுதினார்.

ஆர்.கே.நாராயணன்: (பக்.40)

ஆர்.கே.நாராயணன், காசு பணம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறுகதைத் தொகுப்புக்காக அவர் கதை ஒன்றை உபயோகித்துக்கொள்ள அனுமதி கேட்டபோது தனக்கு இத்தனை பணமாவது குறைந்தபட்சம் கொடுத்தால்தான் கதையை உபயோகித்து கொள்ளலாம் என்று எழுதி விட்டார். பிரசுராலயத்தார் ஒத்துக் கொள்ளாததால் அவர் கதை இல்லாமலேதான் என் தொகுப்பு வெளிவந்தது.

டெல்லியில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஒரு பெண்மணியை அறிமுகம் செய்துவைத்தார். நான் அந்தப் பெண்மணியின் முக்கியத்துவத்தைப் பற்றித் தவறாக நினைத்துவிடப்போகிறேன்  என்று அவர் போனபின், “அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்துகிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!” என்றார்.

ஆர்.ஷண்முகசுந்தரம்: (பக்.42)

பதினைந்து வருஷப் பழக்கத்தில் ஷண்முகசுந்தரத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு நிறையவே ரசமான விஷயங்கள் எனக்குத் தெரியும்...

பணம் கேட்டு யாரிடமிருந்தும் வாங்குவதை ஷண்முகசுந்தரம் ஒரு கலையாகப் பயின்று இருந்தார். தவறிப்போய்க்கூடத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று சொல்லிக் கேட்கமாட்டார். ஏனென்றால் திருப்பித் தந்துவிடுவது என்பது நடக்காத காரியம் என்று அவருக்குத் தெரியும். நான் இதை ஒரு குறையாகக் கூறவில்லை. இந்தக் கலையின் ஒரு பகுதியையாவது நான் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கும் ஏற்பட்டதுண்டு.

ஒரு சமயம் “ஒரு கில்ட் சங்கிலி கேட்கிறாள் குழந்தை. அதை வாங்கிக் கொடுக்காவிட்டால் அடுத்த வாரம் இருக்கிற பரீட்சைக்குப் படிக்காமல் போய்விடுவாள்” என்று என்னிடம் 15 ரூபாய் கேட்டார். பணத்தை இப்படி வீணடிப்பானேன் என்றதற்கு, “பரீட்சை முக்கியமா? பணம் முக்கியமா?” என்று கேட்ட அவருக்குப் பதில் சொல்ல முடியாமல், என் மனைவியிடம் 15 ரூபாய் கடன் வாங்கி அவருக்குக் கொடுத்தனுப்பினேன்.

தன தேவைகளுக்கு மத்தியிலே என் தேவைகளையும் மறந்துவிட மாட்டார். இப்படித்தான் அவர் சந்திக்கின்ற பல பிரசுராலயத்தாரிடம் சொல்லி (இன்ப நிலையம், வைரம், குயிலன்) என் நூல்கள் சிலவற்றையும் பதிப்பிக்க ஏற்பாடு செய்தார். ஒரு நாவலை முடித்துவிட்டு, முடிந்த கையோடு, “300 ரூபாய்க்கு வேலை முடிந்தது” என்று சொல்லிக்கொண்டு வருவார்... 

‘நாகம்மாள், ‘அறுவடை’, ‘சட்டி சுட்டது’ போன்ற நாவல்களை எழுதிய ஷண்முகசுந்தரத்தை மறந்துவிடுகிற தமிழர்கள் துரதிர்ஷ்டக்காரர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ச.து.சுப்பிரமணிய யோகி (பக்.44)

‘தமிழ்க்குமரி’ என்ற அற்புதமான கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார், ச.து.சு.யோகி..... வால்ட் விட்மனின் Leaves  of Grass  என்கிற கவிதை நூலின் பல பகுதிகளை ‘மனிதனைப் பாடுவேன்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து அற்புதமான இலக்கிய சேவை செய்திருக்கிறார்...

அவருக்குக் கவிதை, இலக்கியம், மாஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாம் கைவந்த கலைகள். திருமூலர் மரபில் 49-ஆவது தலைமுறையினராக வந்த சித்தர் என்று தன்னைக் கூறிக்கொள்வார்...

திருமூலர் திருமந்திரத்தில் அணுவைப் பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஆராய்ந்து சொல்லி சர்க்காருக்கு ஒரு தீஸிஸ் செய்து கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்...ஒரு விஞ்ஞான கூடம் ஏற்படுத்தித் தந்தால் திருமூலர் வழியில் அணுவைப் பிளந்து காட்ட இயலும் என்று அதற்குப் பத்து லட்சம் செலவாகும் என்று ஒரு திட்டம் வகுத்து விஞ்ஞான நிலையத்துக்கு அவர் எழுதிய யோசனைக்குப் பதில் வரவில்லை.

பி.எஸ்.ராமய்யா: (பக்.53)

தமிழில் சிறுகதைகள் எழுதிச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று செய்து காட்டியவர் பி.எஸ்.ராமய்யா. தினமணி கதிர், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வாரம் ஒரு கதையாக ஒரு ஆண்டு எழுதியிருக்கிறார். அதே போல ஆனந்த விகடனுக்கு வாரம் ஒரு கதையாக இரண்டு ஆண்டுகள் விடாப்பிடியாக எழுதியிருக்கிறார்.

‘ஆனந்த விகடன் பொன்விழாக் காலத்தில் உங்களைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லையே’ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் சரியான பதில். “கதைகள் எழுதியபோதே எனக்குப் பணம் தந்து கௌரவித்து விட்டார்களே!”

இவருடைய பல கதைகள் திரைப்படமாகியுள்ளன. 'போலீஸ்காரன் மகள்' அவற்றில் முக்கியமான வெற்றிப்படம்.
****
இந்த நூலை நீங்கள் படிக்காவிட்டால் தமிழ் இலக்கியவாதிகளில் சிறந்த பலபேரைப் பற்றிய, வேறு எங்கும் எவராலும் கூறமுடியாத சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் போவீர்கள் என்பது உறுதி.

“இலக்கியச் சிந்தனையாளர்கள்” – க.நா.சுப்பிரமணியம். (144 பக்கம், ரூ.90, பானு பதிப்பகம், திருச்சி -தொலைபேசி – 9842236935 - 2008  வெளியீடு.)

செவ்வாய், ஜனவரி 14, 2014

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் ( ‘அபுசி-தொ பசி’- 22)

சனாதனவாதிகளை எதிர்த்துச் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட முதல் தமிழ்க் கவிஞன் பாரதி. சாதி ஒழிப்பும் சமத்துவமும் அவனது கண்கள். அக்கிரகாரத்தில் இருந்தவர்கள் அவனது முற்போக்கு கொள்கைகளைப் புரிந்துகொள்ள இயலாத பழமையில் ஊறிப்போயிருந்த நிலையில், அதிரடியாக ஒரு ஹரிஜனத் தோழரான ரா.கனகலிங்கம் என்பவருக்குப் பூணூல் அணிவித்து அவரைப் பிராம்மணராக அறிவித்தார் பாரதியார். அந்த நிகழ்ச்சியைக் கனகலிங்கமே தனது நூலில் எப்படி விவரிக்கிறார் தெரியுமா?  சென்னை புத்தகப் பொருட்காட்சியில் வாங்கிய நூல்.

“என் குருநாதர் பாரதியார்” – ரா.கனகலிங்கம் (தையல் வெளியீடு, சென்னை தொலைபேசி:  044-26621530  பக்கம் 80, ரூ. 50,  2007)  

(பாரதியார் புதுவையில் வாழ்ந்து வருகையில்) ஒருநாள் என்னை நோக்கி, “உனக்கு உபநயனம் செய்ய நிச்சயித்திருக்கிறது. அதிகாலையில் எழுந்து நீராடிச் சுத்தமான உடையுடன் இங்கு வந்து சேர வேண்டும். சட்டையொன்றும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்றார். அப்படியே மறுதினம் காலை நான் பாரதியார் வீட்டை நோக்கிச் சென்றேன்.
உள்ளே போய்ப் பார்க்கையில் அங்கே பிராம்மணரும் பிராம்மணர் அல்லாதாரும் ஆகிய பாரதி நண்பர்கள் காணப்பட்டார்கள். அவர்களிடையே அறிஞர் வ.வே.சு.ஐயர் கம்பீரமாக வீற்றிருந்தார். திரு. ஸ்ரீநிவாசாச்சாரியார், திரு நாகசாமி ஐயர், குவளைக்கண்ணன் என்ற திரு கிருஷ்ணமாச்சாரியார், திரு கோவிந்தராஜுலு நாயுடு முதலானவர்களும் இருந்ததாக நினைவு.

(அவர்களை) மனதார நமஸ்கரித்தேன். அவர்களும் என்னை உற்று நோக்கி நமஸ்கரித்து, ‘வந்தே மாதரம்’ சொல்லி வாழ்த்தினார்கள். பாரதியார் சுறுசுறுப்பாகக் கூடத்திற்கும் சமையல் கட்டிற்கும் நடந்தவண்ணமா யிருந்தார்.

‘நாழிகையாகிறது, நடக்கட்டும்’ எனக் கணீரென்று ஒலித்தது வ.வே.சு.ஐயரின் குரல். ‘இதோ வந்துவிட்டேன்!’ என்று எதிரொலித்தது பாரதியாரின் வெண்கல மணிக்குரல். உடனேயே பாரதியார் பிரசன்னமாகிவிட்டார், குங்கும திலகமும் நெற்றியுமாக.

கூடத்தில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூவருடைய  படங்கள் மாட்டியிருந்தன. இம்மூன்று படங்களையும் பூக்களால் அலங்கரித்தார் பாரதியார். கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கத்திக்கும் குங்குமப் பொட்டு இட்டார். சற்று நேரம் தேவி பராசக்தியைத் தியானித்துப் பாடினார்.

பிறகு என்னிடம் வந்து கிழக்கு முகமாய் உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்ததும், அந்த வீர விழியால் ஒரு பார்வை பார்த்துவிட்டு குருநாதர், தம் திருக்கரத்தால் என் நெற்றியிலும், புறத்திலும், மார்பிலும் திருநீற்றுக் காப்பு இட்டார். பிறகு என்னை மண்டியிட்டு உட்காரச் சொன்னார். கையில் பூணூலை எடுத்துக்கொண்டு சூரிய வழிபாடு செய்து வெகுநேரம் ஜபம் செய்து முடித்ததும், எனக்குப் பூணூல் அணிவித்தார்.

நான் உடனே சாஷ்டாங்கமாக விழுந்து பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்தேன். குருநாதர் (பாரதியார்) என்னை ஆசீர்வதித்து, “இன்று முதல் நீ பிராம்மணன்!” என்று உரத்த குரலில் கோஷித்தார். “இனி யாராகிலும் என்ன ஜாதி என்று கேட்டால் –‘நான் பிராம்மணன்’- என்று தைரியமாகச் சொல்லு” என்றும் கட்டளையிட்டார்.
“அப்படி ஆய்விடலாமா என்று யாராவது கேட்கத் துணிந்தால், -‘அது எனக்குத் தெரியாது; என் குரு பாரதியாரைக் கேளுங்கள், அவர் உங்கள் ஐயத்தைத் தெளிவிப்பார்’- என்று  பதில் சொல்லிவிடு” என்பதும் எனக்குப் பாரதியார் இட்ட கட்டளை. இந்த உபநயனச் செய்தி ஊரெல்லாம் பரவிவிட்டது. புதுவை வாசிகளில் யாராவது ஒருவர் தம்மைக் கேள்வி கேட்க மாட்டாரா என்று பாரதியார் ஆவலாக எதிர்பார்த்திருந்தார். அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு பழைய வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த லட்சியங்களையும் வெளியிட்டு விவரிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒருவரும் பாரதியார் எதிர்பார்த்தபடி தலைகாட்டவில்லை. ஒரே ஒரு செட்டியார் மாத்திரம் – புதுவை ஈசுவரன் கோவில் தெருவில் வசித்து வந்த மணிலா வியாபாரி – ‘பாரதி புதுச்சேரியைக் கெடுக்க வந்திருக்கிறான்! கனகலிங்கத்திற்கு உபநயனம் செய்து பிராம்மணன் என்று சொல்லும்படி தூண்டி விடலாமா?’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அந்தச் செட்டியாரும் பகிரங்கமாகப் பாரதியாருடன் வாது செய்யத் துணியவில்லை. வீட்டுக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தார் என்றுதான் பாரதியார் கேள்விப்பட்டாராம். பாரதியாரே இதை என்னிடம் சொல்லிச் சிரித்தார்....
***** 
கனகலிங்கம் மேலும் கூறுகிறார்...

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் அளித்துவரும் இன்றைய தமிழகத்திலும், ‘இதயப்பிரவேசம்’ அளிக்கும் உயர்குலத்தினர் மிகச் சிலரேயாவர். இப்படியிருக்க, அந்த நாளிலேயே பாரதியார் தம் இதயக்கோவிலில் ஹரிஜனங்களைத் தாராளமாகப் பிரவேசிக்கச் செய்து, அத்தகைய பிரவேசத்தைத் தேச சேவையின் முக்கிய அம்சமாகவும் கருதினார். இதைக் குறித்து மணிக்கணக்கில் பேசலாம்...

ஒருநாள் நான் பாரதியார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், ‘உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியும்’ என்றேன். ‘அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய்வருவோம்’ என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். குருநாதர் இருந்தாற்போலிருந்து தோட்டி தம்பலா வீட்டுக்கு அழைக்கிறாரே என்றும், அவர் இதயம் வருந்தலாகாதே என்றும் எண்ணிக் கொண்டே, ‘சுவாமி, வாருங்கள், போய் வருவோம்!’ என்று பதில் சொன்னேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்குத் தம்பலா தலைவராக இருந்தார். அவருடைய சொந்தப் பெயர் எனக்குத் தெரியாது. பொதுவாக ஜனங்கள் அழைக்கும் பெயர்தான் தம்பலா. அவர் சாராயக்கடை, கஞ்சாக்கடை இவைகளைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906-ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘லெமேர்’ தேர்தலில் அவர் வோட்டர்களைப் பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில் புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பார்கள்.

புதுச்சேரி ‘புல்வார்க்’ பக்கத்தில் சுண்ணாம்புக் காளவாய் என்ற இடத்தில் தமக்குச் சொந்தமான ஒரு பெரிய மாடி வீட்டில் தம்பலா வசித்து வந்தார். பாரதியாரும் நானும் அங்கே சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணை ஒன்றில்  பாரதியார் உட்கார்ந்துகொண்டார். வீடு தாழிட்டிருந்தது. கதவைத் தட்டச் சொன்னார்.  தட்டியதும் உள்ளே தம்பலாவின் மனைவி, ‘என்ன செய்தி?’ என்று கேட்டால். ‘தம்பலா எங்கே?’ என்று நான் கேட்டதும், அவள், ‘அவர் கழனி வேலையாகப் போயிருக்கிறார். வருகிற சமயம்தான்’ என்றாள். அப்படி அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் தம்பலாவும் வந்து சேர்ந்தார்.

அவர் பாரதியாரைக் கண்டவுடன் வரவேற்றுத் தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார். கவிஞர் தமக்கு எதிராயிருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொன்னார். பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேளாமல் தோளில் போட்டிருந்த துண்டை விரித்துப்போட்டுத் தரையிலே உட்கார்ந்துகொண்டார். ‘நான் யார் தெரியுமா?’ என்று குருநாதர் கேட்டார். தம்பலா, ‘தெரியுங்கோ! நீங்கள் சுதேசிங்கோ!’ என்றார். ‘அப்படியானால் நீர் பரதேசியா?’ என்று பாரதியார்   பளிச்சென்று கேட்டார். தம்பலா ஒன்றும் பதில் சொல்லாமல் இவரைப் பக்தியுடன் நோக்கியவண்ணம் இருந்தார்.

கடைசியாகப் பாரதியார், “உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேசவேணும் என்ற அவா இருந்தது. இன்று பூர்த்தியாகிவிட்டது.நாங்கள் போய் வருகிறோம்” என்று எழுந்தார். அப்படிப் பிரிந்துவிட மனமில்லாதவர் போல் தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச தூரம் ரஸ்தா வரையில் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பினார்.

அப்போது பாரதியார் என்னை நோக்கி, “கனகலிங்கம்! தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்துகொண்டான், பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும் ஹிம்சிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சிநேகம்செய்ய மனமில்லாமல் இருந்தேன்!’ என்று சொன்னார்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கிவைப்பது தவறு என்று பாரதியார் கருதினார். கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகுவார்களானால், அவர்களைத் திருத்த முடியும்; ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ, அவர்களுக்கும்கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை.
***
சிறு புத்தகம்தான், ஆனால் பாரதியார் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் எவரும் தவறாமல் படிக்கவேண்டிய நூல் இது.

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

 © Y.Chellappa