திங்கள், அக்டோபர் 07, 2013

குறுந்தகட்டில் துடித்துக்கொண்டிருந்தது யார் இதயம்? ……. ‘அபுசி-தொபசி’ (5)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்

தமிழ் ‘ஹிந்து’வில் மொழிபெயர்ப்பு அபத்தங்கள்

தாமஸ் பிரீட்மன், நியூயார்க் டைம்ஸில் ‘பக்கநிரப்பி’யாகப் (COLUMNIST) பணியாற்றும் பேராசிரியர். (COLUMNIST என்பதற்கு ‘பக்கநிரப்பி’ என்ற அர்த்தமுள்ள மொழிபெயர்ப்பு, என்னுடையது. இவர்களின் பணி, எப்படியாவது பக்கங்களை நிரப்பியாகவேண்டும் என்பதே. வாசகர்கள் பொதுவாக  இவற்றின் உள்ளுறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை! ஆசிரியர்களும் கூட; அவர்கள் கவலை, யாரைக் கொண்டாவது பக்கங்களை நிரப்பியாகவேண்டும் என்பதே.)


தாமஸ் பிரீட்மனின் பக்கநிரப்பு ஒன்று தமிழ் ஹிந்துவில் அக்டோபர் ௩ (3)-ஆம் தேதி “ஈரான் தலைமைக்கு ஏன் இந்த மனமாற்றம்?” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தற்செயலாக இதன் ஆங்கில மூலத்தை நியூயார்க் டைம்ஸில் - செப்டம்பர் ௨௯-(29) இதழில்- படிக்க நேர்ந்தது. தமிழில் வந்த மொழிபெயர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. (படத்தில்  பாருங்கள்.)ஆங்கில மூலம் இது:
Geopolitics is all about leverage: who’s got it and who doesn’t. Today, the negotiating table is tilted our way. That is to Obama’s credit. We should offer Iranians a deal that accedes to their desire for civilian nuclear power and thus affirms their scientific prowess — remember that Iran’s 1979 revolution was as much a nationalist rebellion against a regime installed by the West as a religious revolution, so having a nuclear program has broad nationalist appeal there — while insisting on a foolproof inspection regime. We can accept that deal, but can they? I don’t know. But if we put it on the table and make it public, so the Iranian people also get a vote — not just the pragmatists and hard-liners in the regime — you’ll see some real politics break out there, and it won’t merely be about the quality of Iran’s nuclear program but about the quality of life in Iran.

வலு மிகுந்தவருக்குத் தேவைப்படும் சலுகையைக் கொடுத்து அல்லது அவர் இடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு தாங்களும் பலன் அடைவதே புத்திசாலித்தனம்” என்ற வரிகள் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கின்றன. ஆங்கில மூலத்தில் இருக்கிறதா பாருங்கள்! இல்லவே இல்லை! பின் எப்படி  மொழிபெயர்ப்பாளர்  தன் சொந்தச் சரக்கை நுழைத்துவிட்டிருக்கிறார்? இது அவரின் அதிகப்பிரசங்கித்தனத்தைக் காட்டுவது மட்டுமல்ல, தாமஸ் பிரீட்மனின் புகழுக்கும் களங்கம் விளைப்பதாகும். ஏனெனில் தாமஸ் எப்போதும் இதுபோன்ற தீவிரமான கருத்துக்களைச் சொன்னது கிடையாது. நிச்சயமாக இந்தக் கட்டுரையில் இல்லை.

இனிமேலாவது தமிழ் ஹிந்து கவனமாக இருக்குமா?

புத்தகம்

தனது karanthaiJayakumar.blogspot.com வலைத்தளத்தில் கனமான பதிவுகளை வெளியிடும் எழுத்தாளர், கரந்தை ஜெயக்குமார். தஞ்சையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கரந்தை தமிழ்ச் சங்கத்துடன் மூன்று முடிச்சு போட்டவர். அவருடைய சில புத்தகங்கள் கைக்கு வந்தன. ஒன்று, ‘கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள்’ என்பது. தனது வலையில் வெளியிட்டிருந்த ‘மருத்துவமும் மனிதநேயமும்’, ‘கணிதத்தின் நிழலில்’, ‘நாகத்தி’, ‘எம்ஜிஆர் நினைவு இல்லத்தில்’ ஆகிய ஐந்து கட்டுரைகளும், கரந்தை தமிழ்ச் சங்கம் தொடர்பான ஒரு கட்டுரையும் அடங்கியுள்ள தொகுப்பு இது. (பிரேமா நூலாலயம், தஞ்சாவூர் வெளியீடு. ௧௧௬ (116) பக்கம் - ரூ.௬௦ (60). முதல் பதிப்பு அக்டோபர் ௨௦௧௨ -2012.)

தனது மகளுக்கு இதயத்தில் துளையிருப்பதாகத தவறாக ஆராயப்பட்டு, அதன் காரணமாக உடனடியாக பெருத்த பொருட்செலவில் அறுவைசிகிச்சை செய்யவேண்டி வந்த நிகழ்வை ‘மருத்துவமும் மனிதநேயமும்’ என்ற கட்டுரையில் ஜெயக்குமார் உருக்கமாக எழுதுகிறார். அறுவை சிகிச்சை மேடைக்குக் கொண்டுபோன பிறகுதான், அந்தப் பெண்ணுக்கு இதயத்தில் துளையே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது! முதலில் துளை இருப்பதாகச் சொன்னவரும் ஒரு மருத்துவர் தான். அதை உறுதிப்படுத்தியவரும் ஒரு மருத்துவர் தான். லண்டனுக்கு அனுப்பியதில் அந்த நிழற்படங்களைப் பார்த்து ஆமோதித்தவரும் ஒரு  மருத்தவர் தான்! இப்போது துளையில்லை, அறுவை சிகிச்சை வேண்டாம் என்று சொல்பவரும் ஒரு மருத்துவர் தான். என்னே மருத்துவர்தம் மாண்பு! என்னே அவர்தம் தொழில் நேர்மை! நீடூழி வாழ்க! 

ஜெயக்குமார் எழுதுகிறார்:

“இந்நிகழ்வு நடைபெற்று இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்று நினைத்தாலும் நெஞ்சம் கனப்பதை உணர முடிகிறது.

“பகலில் விழித்திருக்கையிலும், இரவில் உறங்கும்போதும் கூட, ஓர் எதிர்மறை எண்ணம் மின்னலாய்த் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை. சென்னைக்குச் செல்லாமல் வேறொரு ஊரிலுள்ள மருத்துவமனையில் என் மகளைச் சேர்த்திருப்பேனேயானால் என்ன நடந்திருக்கும் என்னும் நினைவு என்னை வாட்டி வதைக்கின்றது. நெஞ்சைக் கீறி நெஞ்சக எலும்புகளை அறுத்துப் பிரித்துப் பார்த்தபிறகு அல்லவா, இதயத்தில் துளை இல்லை என்பது தெரிந்திருக்கும்? யார் செய்த தவறுக்கு யார் தண்டனையை அனுபவிப்பது?

“லண்டன் மருத்துவ மனையில் ஏன் மகளின் ஸ்கேன் படக்காட்சிகளை மின்னஞ்சலில் பார்த்து இதயத்தில் துளை இருப்பது உண்மை தான் என்று கூறினாரே, அப்படியானால் அக்குறுந்தகட்டில் துடித்துக்கொண்டிருந்தது யார் இதயம்?”

(கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு விடை ஏதய்யா?)

சினிமா

அது அவர் பிறந்த வருடம். அவ்வருடம் மொத்தம் முப்பத்தியாறு தமிழ்ப் படங்கள் வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றில் ஐந்து படங்கள் தான் அவருக்கு நினைவில் இருக்கிறது (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, நான் வளர்த்த தங்கை, திகம்பர சாமியார்.) இந்த ஐந்தும் கூட, அவருக்குப் பத்து வயது ஆன பிறகு தான் பார்க்க முடிந்ததாம், அதுவும் வருடத்திற்கு ஒரு படம் வீதம்.....

பராசக்தி வெளிவந்தபோது அவருக்கு இரண்டு வயதாம். அப்படத்தைப் பார்க்கமுடிந்தபோதோ அவருக்குப் பன்னிரண்டு வயதாம்.

இந்திய சினிமாவுக்கு நூறு வயதாகிவிட்டதாமே! தமிழ் சினிமாவுக்கு? ‘அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த படங்களை எடுங்கள், அது தான் முக்கியம்’ என்கிறார் அவர். அது சரி, அவர் பெயர் என்ன?  (மன்னிக்கவேண்டும், அடக்கம் தடுக்கிறது.)

தொலைக்காட்சி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்டுவந்த மூன்று பெரிய தீவிரவாதிகள் ஆந்திராவின் புத்தூரில் பிடிபட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் கூட சிக்கியிருக்கிறார்கள்.

போலிஸ் பக்ருத்தின்
 
தெலுங்கானா பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரத்தின் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திருப்பதி கோயிலைத் தகர்க்கும் திட்டத்துடன் இவர்கள் புத்தூரில் பதுங்கியிருந்தார்கள் என்று தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் மாற்றி மாற்றி செய்தி கொடுக்கின்றன.

இவ்வளவு நாள், புத்தூர்க்காரர்கள் மற்றவர்களின் நொறுங்கிய எலும்புகளுக்குக் கட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களின் எலும்புகளையே நொறுக்க வெளிநாட்டு சக்திகள் வந்திறங்கி வேலை செய்கின்றன! Poetic Justice என்பது இது தானோ?

At last, தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட கொலைவழக்குகளில் காவல்துறை மும்முரமாக கவனம் செலுத்தி விசாரிக்கக்கூடும் என்று இனியாவது மக்கள் நம்பத் துவங்கலாம் என்று தோன்றுகிறது. 

பத்திரிகை

வள்ளலார்’ என்று அன்புடன் அழைக்கப்படும் வடலூர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் ௧௮௨௩ (1823) அக்டோபர் ஐந்தாம் தேதி பிறந்தவர். அதாவது ௧௯௦ (190)வருடங்களுக்கு முன்பு.

சிறு வயதில் விழுப்புரம் அருகிலுள்ள கருங்குழி என்ற கிராமத்தில் அவர் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் இரவு அவர் எழுதிக்கொண்டிருந்தபோது, விளக்கு எண்ணெய் இல்லாமல் மங்கத்தொடங்கியது. அருகிலிருந்த சொம்பிலிருந்து எண்ணெயை விளக்கில் ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் அணையாமல் எரிந்தது. காலையில் பார்த்தபோதுதான் தெரிந்ததாம், சொம்பில் இருந்தது எண்ணெய் அல்ல, தண்ணீர் தான் என்று!

சமரச சன்மார்க்க நெறியை ஏற்படுத்திய வள்ளலார், இறைவனை ஒளி வடிவமாகவே வணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ௧௮௬௭ (1867)-இல் வடலூரில் ‘சத்தியதருமசாலை’யை ஏற்படுத்தினார். வந்தவர்க்கெல்லாம் இல்லை என்னாது உணவு வழங்குவதே இச்சபையின் நோக்கம். இன்றளவும் அன்பர்களின் நன்கொடையால், தடையின்றி அன்னம் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இங்கு வந்துபோகும் பக்தகோடிகளுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே தமிழக அரசு வடலூரை ஓர் ஆன்மிகத்தலமாக அறிவித்து, அதன்மூலம் பிற வசதிகள் கிட்டும்படி செய்யவேண்டும் என்று ஒரு கட்டுரை அக்டோபர் 4 வெள்ளி அன்று தமிழ் ஹிந்துவில் பிரசுரமாயிற்று.

இது பரவாயில்லை, அதற்கடுத்தநாள்- அதாவது அக்டோபர் 5ஆம் தேதி அதே பத்திரிகையில் இன்னொரு வேண்டுகோள் வந்துள்ளது. என்னவென்றால், சென்னை பாரிமுனையை அடுத்த ஏழுகிணறு வீராசாமிப்பிள்ளை தெரு,  39ஆம் இலக்க வீட்டில், எந்தத் திண்ணையில் வள்ளலார் தம் இளம்வயதில் படுத்து உறங்கினாரோ, அது இப்போது கழிவறையாக மாற்றப்பட்டுவிட்டதாம்.மகத்துவம் வாய்ந்த அந்தத் திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்” என்று முடிகிறது அந்தக் கட்டுரை. இந்த கொஞ்சம் ஓவராக இல்லை? 190 வருடங்களுக்கு முன் ஒருவர் பயன்படுத்திய திண்ணையை இன்றைக்கும் வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று “ஆதங்கப்படும்” உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?

இக்கழிவறையை  அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்த வீட்டின் அண்மைய உரிமையாளர் ஸ்ரீபதி சொல்லியிருப்பது, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடும்.

சிரிப்பு

பேரில் தான் ‘கல்யாணம்’ உள்ளதே தவிர, வாழ்க்கையில் பல பேருடைய கல்யாணத்துக்கு மொய் வைத்ததைத் தவிர பெரிதாய் எதுவும் செய்ததில்லை. முப்பத்தி ஐந்து வயது, உச்சி நடுமண்டையில் சூரிய உதயம் போல சொட்டை, மீசை நரைக்க ஆரம்பித்துவிட்டதினால், டை அடிக்க சோம்பேறித்தனப்பட்டு, மீசையை எடுத்துவிட்டிருந்தான். இன்றைய தேதி வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை....ஏன் என்றும் தெரியவில்லை. பொண்ணு கிடைக்கிற நேரத்தில் எல்லாம் ‘மாசம் ஒரு இருபதாயிரம் சம்பாதிக்கிறப்ப தான் கல்யாணம்னு சொல்லி தட்டிவிட்டுக்கிட்டிருந்தான். இப்போ எல்லாம் இருக்கு, நல்ல சம்பளம், தனி பிளாட், கார், இத்யாதின்னு...ஆனா கல்யாணம் மட்டும் ம்ஹூம்.....

சரி, காதலிக்கலாம்னு பார்த்தா...அவனுக்கு ஒண்ணும் செட்டாகும்னு தோணல... ஆபீசுல கூட க்ளோரியான்னு ஒருத்தி ரொம்ப நாளா இழைந்து இழைந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளின் பர்சனல் பிரச்சினைகளை, ஏன் அவளுடைய மென்சஸ் பிராப்ளத்தை கூட சொல்லி யிருக்கிறாள். பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கிறாள். கல்யாணத்துக்கு ஜாதி பற்றி பிரச்சினையில்லை. அவளிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஒரு நாள் அவனிடம் வந்து, “உங்க கிட்ட பேசிக்கிட்டிருந்தா என் அப்பாகிட்ட பேசிக்கிட்டிருந்த மாதிரி இருக்கு” என்றாள்....  (சங்கர் நாராயண் என்கிற ‘கேபிள் சங்கர்’ எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ என்ற நூலிலிருந்து-பக்கம் 16-17. சென்னை கேகேநகர் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும். ரூ.50.)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

8 கருத்துகள்:

 1. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் "மருத்துவமும் மனிதநேயமும்" - இன்று நினைத்தாலும் மனம் பதறித் தான் போகிறது...

  லெமன் ட்ரீயும் படித்ததில்லை... அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. நிறையவே அதிர்ச்சிகள் - சில லேசானவை, சில கடுமையானவை.
  தமிழாக்கத் தரம் பற்றி எனக்குத் தெரியாததில்லை. எனவே அதிக அதிர்ச்சியில்லை. இருந்தாலும் இப்படி அபத்தமாகவா...
  ஜெயக்குமார் எழுதியதுதான் பெருத்த அதிர்ச்சி. அவருடைய மகள் நலமும் வளமும் பெற்று வாழட்டும்.
  மூன்றாவது அதிர்ச்சி - ஆந்திரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்து. இதேபோல அல்லது இதைவட பயங்கரமாகச் சித்திரிக்கப்பட்டவர்கள் பலர் சில ஆண்டுகளுக்குப் பிறகுநிரபராதிகளாக வெளியே வந்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 3. வேதனையும்விறுவிறுப்பும்கலந்த கலவைகள் அருமை

  Typed with Panini Keypad

  பதிலளிநீக்கு
 4. நன்றி,திரு தனபாலன் அவர்களே,கவியாழி அவர்களே! திரு ஷாஜகான் அவர்களே, உங்களுடன் நானும் பொறுத்திருப்பேன். நீதி வென்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே!நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஐயா. எனது நூல் பற்றியும், எனது மகள் பற்றியும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஐயா.
  இராமலிங்க அடிகள் படுத்துறங்கிய இடத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்கு உரியது ஐயா. மனித மனத்தில் கழிவுகளை அகற்றத் தோன்றிய மகான் படுத்துறங்கிய இடத்தில், மனிதக் கழிவுகள்.. கொடுமை ஐயா.
  மகான்களின் மகத்துவம் அறியா மனிதர்கள் பெருகிவிட்டனர்

  பதிலளிநீக்கு
 6. உரிய நேரத்தில் உணரப்படாத பெருமைகள், திண்ணையிலிருந்து இறங்கிப்போய்விடுகின்றன!

  பதிலளிநீக்கு
 7. மொழிபெயர்ப்பாளர் (நியூயார்க் டைம்ஸ்) மொழிபெயர்ப்புப் பொருண்மையின் தன்மையை மனதில் கொண்டு, அவ்வாறு சேர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் தாங்கள் சுட்டிக்காட்டியபடி வேறுபாட்டை உணரமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 8. தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். விஷயம் என்னவென்றால், 'ஹிந்து' என்றாலே நாம் எப்போதும் பிழையில்லாத, முழுக்க முழுக்கச் சரியான தகவல்களையே எதிர்பார்த்துப் பழகிவிட்டோம் அல்லவா, அந்த ஆதங்கத்தில் தான் எழுதிவிட்டேன்- முதல் நாள் 'திருவிளையாடல்' படத்தின் தருமி-இறைவன்-நக்கீரன்- உரையாடலைப் பார்த்த விளைவாகவும் இருக்கலாம்!

  பதிலளிநீக்கு