திங்கள், ஜனவரி 05, 2015

பதிவு 2/2015 நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

பதிவு 2/2015

நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

நாரத்தங்காயை நறுக்கி உப்பிட்டு நிழலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். கன்னங்கரேலென்று ஆகிவிடும்.  இரண்டுவருடம் ஆனாலும் கெடாது. தயிர்ச்சோற்றுடன்  சாப்பிட்டால் விண்ணோர் அமுதமும் அதற்கு ஈடாகாது.

சாகித்ய அகாதெமிக்காக முனைவர் இரா.மோகன் தொகுத்தளித்த ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ என்ற நூலைச் சென்ற வருடம் (2014) சென்னை புத்தகக் காண்காட்சியில் வாங்கினேன். இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது. பழைய நாரத்தங்காய் ஊறுகாயை விடவும் சுவையான தொகுப்பு.

தமிழில் வெளியான  ஹைக்கூ கவிதை நூல்களில் நூறைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கவிதைகளைப் பொறுக்கியெடுத்து ஆயிரம் ஹைக்கூ கொண்ட இந்நூலைத் தொகுத்திருக்கிறார், மோகன். (144 பக்கம்  விலை ரூ.90.)   வெளியீடு: சாகித்ய அகாதெமி. (சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்).

நூறு கவிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகிறது இந்நூல். ஆயிரம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் (நன்றியில்லாத) திருப்பணியை விடவும், மோகன் வழங்கியிருக்கும் அற்புதமான முன்னுரை மதிப்பு மிக்கது. ஹைக்கூ வின் தமிழ்நாட்டு நுழைவின் சரித்திரத்தை அவர் இப்படித் தருகிறார்:   

“1916இல் ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவியரசர் பாரதியார். 1968ஆம் ஆண்டில் ‘நடை’ முதல் இதழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி.மணி. 1970ஆம் வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்கு ‘சிந்தர்’ எனப் பெயர் சூட்டி, தமிழில் சோதனை முயற்சியாகச் சில ஹைக்கூ கவிதைகளையும் முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் –‘வாமனக் கவிதைகள்’, ‘மின்மினிக் கவிதைகள்’ என்ற பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தவர் – கவிக்கோ அப்துல் ரகுமான்; ‘ஜப்பானிய ஹைக்கூ’ (1987), ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற இரு நூல்களை வெளியிட்டு ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் முனைவர் தி.லீலாவதி; 1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டில்  ‘ஜப்பானிய ஹைய்கு வடிவக் கவிதைகள்’ என்ற அறிமுகக் குறிப்போடும், ‘வாசல் ஓர வாசகம்’ என்ற பதினான்கு பக்க ஆய்வு முன்னுரையோடும் ‘சூரியப் பிறைகள்’ என்னும் தொகுப்பினை வெளியிட்டவர் முன்னணிக் கவிஞர் தமிழன்பன்; 1988-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கூடைக்குள் தேசம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகத் தமிழில் ஹைக்கூ வடிவக் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் சு.முரளிதரன். இன்று தமிழில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன....”   

“ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் இயற்கையின் தரிசனமும், தத்துவப் பார்வையும், படிமப் பாங்கும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதலிடம் பெற்றுள்ளன...சுருங்கக் கூறின், அங்கதம், முரண், நகை ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்த ‘திரிவேணி சங்கமம்’ ஆகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் காட்சியளிக்கின்றன....”

தமிழ் தெரிந்த அனைவர் கையிலும் இருக்கவேண்டிய முக்கியமான நூல் இது. ஆசிரியர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்கு இனிமையான ஹைகூக்கள் ஆயிரம் ஒரே இடத்தில் வேறெங்கே கிடைக்கும்? இந்த அருமையான தொகுப்பை நமக்கு வழங்கிய முனைவர் இரா மோகனுக்கு நமது வாழ்த்துக்கள்!

இனி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆயிரத்திலிருந்து சில ஹைகூக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:   


ஒரு கன்னத்தில் அறைந்தான்
மறு கன்னத்தைக் காட்டினேன்
அங்கும் அறைந்தான்.
-கழனியூரன் (‘நட்சத்திர விழிகள்’ – 1990)

படித்துப் படித்துப்
பட்டம் வாங்கினோம்
எரியாத ஈரவிறகு.
-துறவி (‘சிறகுகளின் சுவடுகள்’-1993)

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்...
கலர் டிவியோடு!
-மு.முருகேஷ் (‘விரல் நுனியில் வானம்’-1993)

தென்றல் வீசுகிறது
அனுபவிக்க இயலவில்லை
நாளை இண்டர்வியூ.
-ஆர்.வி.பதி (‘ஹைக்கூ கவிதைகள்’-1994)

கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச் சாவி.
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

பெண் பிறக்கட்டும்
குடும்பத்தோடு பிரார்த்தனை-
பிரசவ வலியில் பசு!
-நவதிலக் (‘பூக்கள் பறிப்பதற்கில்லை’ – 1994)

கார்காலம் வந்தது
பனிக்காலம் வந்தது
நல்ல காலம்?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

எதிலும் சந்தேகம்
போலியோ சொட்டு மருந்து
போலியோ?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

இறுக்கிக் கட்டுங்கள்
இடுப்பு வேட்டியை
போகுமிடம் சட்டசபை!
-கவிமுகில் (‘சூரியத் துளிகள்’ -1998)

பெண்பார்க்கும் படலம்
வீடு கடத்தப்பட்டாள்
அழகான தங்கை!
-பாரதி மணியன் (‘ஹைக்கூ 50’ – 1999)

ஓய்வெடுத்தன
பறவைகள்
உழைப்பாளர் சிலைமேல்
-ந.முத்து (‘எடை குறைவாய்...’ -1999)

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை...
மாரியாத்தா கூழுக்கு!
-கா.ந.கல்யாணசுந்தரம் (‘மனித நேயத் துளிகள்’ – 1999)

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா!
-பால பாரதி (‘இதயத்தில் இன்னும்’ -2000)


தொலைந்த மோதிரத்தை
தேடினாள் சகுந்தலை
அடகு வைக்க.
-வண்ணை சிவா (‘ஒற்றைக் கல் சிற்பம்’ -2002)

பெண் உரிமை பற்றி
முழக்கமிட்டாள்
கணவன் அனுமதியுடன்.
-சோலை இசைக்குயில் (‘சூரியனுக்கு வெட்கமில்லை’ -2002)

இரவெல்லாம் குளித்தும்
கறை போகவில்லை
குளத்தில் நிலா.
-இளந்தென்றல் (‘ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலம்’ – 2003)

நிறையப் பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை.
-ஆலா (‘உயிர் வேலி’ – 2003)

நெடுநேரமாய்ப் பேசும் நண்பன்
போகையில் கேட்பானோ...
கடன்!
-இரா.அ.தென்றல் நிலவன் (‘முதல் ரோஜா’ – 2003)

இரவுப் பேருந்துப் பயணம்
தூங்கவேயில்லை
சில்லறை பாக்கி.
-சு. சேகர் (‘முள்ளின் முகவரி’ – 2003)

சக்கையாய்ப் பிழிகிறான்
சாறு விற்பவன்
பாவம், கரும்பு.
-சி.கே.சந்திர மோகன் (‘அல்வாத் துண்டுகளும் சில அணுகுண்டுகளும்’-2004)

கோயிலில்
பக்தர்கள் கூட்டம்
நெரிசலில் கோரிக்கைகள்.
-ராஜசேகர் (‘நதியில் சிறகுகள்’ – 2004)

வீடு நிறையப் பொருள்
பெட்டி நிறையப் பணம்
அயல்நாட்டில் கணவன்.
-மரியா தெரசா (‘துளிப்பா தோப்பு’ – 2004)

இறந்த அப்பா
இன்னும் வழிகாட்டுகிறார்
அலமாரியில் புத்தகங்கள்.
-கம்பம் மாயவன் (‘மின்மினியின் வெளிச்சத்தில்’ -2005)

மகனின் கடிதத்தில்
என்றென்றும் அன்புடன்
காப்பகத்தில் தாய்.
-கன்னிக்கோவில் இராஜா (‘தொப்புள் கொடி’ – 2005)

கோட்டு சூட்டுடன்
திருஷ்டிப் பொம்மை
கோவணத்தில் தொழிலாளி.
-வெ.கலிவரதன் (‘ஒத்திகை’ – 2006)

நாற்காலியைத்
தூக்கியெறிந்து சண்டை
நாற்காலிக்காக.
-சி.விநாயக மூர்த்தி (‘புன்னகை மின்னல்’ -2007)

பேராசிரியர் இரா மோகன், 1972இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக அடியெடுத்துவைத்து, படிப்படியாக முன்னேறி பேராசிரியர் ஆனார். ஆட்சிக் குழு உறுப்பினராகவும் ஆனார். அண்மையில் ஓய்வு பெற்றவர். இதுவரை 88 நூல்களை வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

(மேற்கோள் கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்!)

-இராய செல்லப்பா, சென்னை.
(c)  Y Chellappa               
email: chellappay@yahoo.com

வியாழன், ஜனவரி 01, 2015

பதிவு 01/2015 இன்று புதிதாய்ப் பிறந்தேன்....

பதிவு எண்  01/2015

இன்று புதிதாய்ப் பிறந்தேன்....

வணக்கம் நண்பர்களே!

சிறிதுகாலம் எனது பதிவுகளுக்கு இடைவேளை தர நேரிட்டுவிட்டது. ‘ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை?’ என்ற கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டன. இலக்கிய கூட்டங்களுக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில், பிற பதிவர்களுடனான தொடர்பே விட்டுப் போனதுபோல் ஓர் உணர்வு. எல்லாவற்றிற்கும் ஒரு கால் தான் காரணம். ஆம்! வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதனால் இரண்டு மாதங்கள் காலை ஊன்றிக்கொண்டு மடிக்கணினியில் எழுத முடியாத நிலை. பயணங்களும் இதனால் தடைபட்டன. முக்கியமாக, மதுரையில் நடைபெற்ற பதிவர் மாநாட்டுக்குப போகமுடியாமல் போனது. (இப்போது முழுமையாக நலம் பெற்றுவிட்டேன்).


இருந்தபோதிலும், ஒரு முக்கியமான ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்து முடித்துவிட்டேன். முன்னூற்று அறுபதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட AT  THE HELM   என்ற  Dr.V. KRISHNAMURTHY அவர்களின் சுயசரிதைதான் அது. BHEL,  MARUTI UDYOG, STEEL AUTHORITY OF INDIA போன்ற நிறுவனங்களின் சிகரங்களில் இருந்து கோலோச்சியவர் அவர். (தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை). எனது முந்தைய பதிவு காண்க: 5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்: http://chellappatamildiary.blogspot.com/2014/05/5-2.html

நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முக்கர்ஜி எழுதிய THE DRAMATIC DECADE என்ற புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் புத்தகம் டில்லியில் இருந்து சென்னையில் ஒரு கூரியருக்கு வந்துசேர்ந்து பதினைந்து நாட்கள் ஆனபிறகுதான் நேற்று என்னிடம் வந்தது. முன்பதிவு திட்டம் என்பதால் கடைகளிலும் முன்னதாக வாங்க முடியாத நிலை. (கடைகளில் விலை ரூ.595, அமேசானில் விலை ரூ.399 தான்). படிக்க ஆரம்பித்துவிட்டேன். விரைவில் அதைப் பற்றிய தனிப் பதிவு வெளியாகும். 

அவசரமாக ஒரு தகவல்: முக்கர்ஜி அவர்கள் பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில்தான் சேர்ந்தாராம். ஒன்று முதல் நான்கு வகுப்புகள் அவர் படிக்கவில்லையாம்! மரம் ஏறுவதிலும், மாடுகளைத் துரத்திக்கொண்டு ஓடுவதிலும், விளையாடுவதிலும்தான் அந்தக் காலத்தைக் கழித்தாராம்! பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடி பின்னியெடுத்துவிடுவார்களாம். ஆனால் இவர் மசியவில்லையாம். அந்த அனுபவம்தான் பின்னாளில்  அரசியல் கருத்துவேறுபாடுகளைக் களையும் சமாதானத் தூதுவராக இவர் அனுப்பப்பட்டதற்குக் காரணமோ? (‘ரொம்ப நல்லவன்யா! எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்’ என்ற வடிவேலுவின் வசனம் நினைவுக்கு வருகிறது).
  
 கடந்த ஆண்டின் சுவடுகள்...

பதிப்பாளர், நண்பர், கவிஞர், அகநாழிகை பொன் வாசுதேவன் மூலம் 2014 ஜனவரியில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ வெளிவந்தது. அதிலுள்ள ஒரு சிறுகதைக்குக் ‘கலைமகள்’ பரிசு கிடைத்தது. அதே கதையை எனது நண்பரும் தமிழ்-கன்னட இருமொழி அறிஞருமான புதுடில்லி உதயம் ஸ்ரீனிவாசன் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். (திருக்குறளை அவர் கன்னடத்தில்  மொழிபெயர்த்தவர். அது சில மாதங்களுக்கு முன்பு செம்மொழி ஆய்வு நிலையத்தின்வழியாக வெளியானது என்பது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி.  அவரது  அலைபேசி எண் 9899969903).


2014 மே-ஜுன் மாதங்களில் அமெரிக்கப் பயணம். முப்பதே நாள். முதல்முறையாக கலிபோர்னியா சென்றேன் (மனைவியுடன்). ஸாண்டியாகோ நகரில் கால்டெக் பல்கலைக்கழகத்தைக் கண்டேன். 



லாஸ் ஏஞ்சலிஸ் நகரை வேகமாகச் சுற்றிப்பார்த்தேன். ஹாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்த்தேன். இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த பெவர்லி ஹில்ஸ், சன்ஸெட் புலிவார்டு, மன்ஹாட்டன் பீச் இங்கெல்லாம் சுற்றிப் பார்த்தேன். எக்கச்சக்கமான வாகனங்கள். போக்குவரத்து நெரிசல்மிக்க நகரம். 

நியூ ஜெர்சியில் இதுவரை நான் பார்க்காமல் இருந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கும் இப்போது போனேன். அங்கிருந்த ஒரு மரப் பெஞ்சில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன். ஐன்ஸ்டீன் ஒருகாலத்தில் அமர்ந்த இருக்கையாக இருக்கலாம். 

அவர் இருந்த வீட்டையும், அவருக்காகவே அமைக்கப்பட்ட லெக்சர் ஹாலையும் பார்த்தேன். பெறற்கரிய வாய்ப்பு. என் மாணவப் பருவத்தில் அவருடைய 'தியரி ஆப் ரிலேடிவிட்டி' யில் ஆராய்ச்சிக்கான (பிஎச்டி) வாய்ப்பு கிடைத்தும், குடும்பச் சூழ்நிலையால்  அதைத் தொடரமுடியாமல் போய்விட்ட வருத்தம் இதனால் ஓரளவு தீர்ந்தது எனலாம். 

2014-இல் பதிவுலக நண்பர் துளசிதரன் (பாலக்காடு)  மூலம் அவரது குறும்படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது. பாலக்காட்டின் ‘சைலண்ட் வேலி’ யைச் சுற்றிப் பார்த்தேன். அங்கும் இப்போது சில்வண்டுகள் குடிவந்துவிட்டதால், சைலன்ஸ் மிஸ்ஸிங். (திருமதி துளசிதரனும் திருமதி கீதா அம்மையாரும் அரிய விருந்தளித்ததைக் குறிப்பிடவேண்டும்).

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..

கடந்த ஆண்டு (2014) ஜனவரித் திங்கள் முதல் நாளில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். தமிழக முதல்வராக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று இருவரும் பதவியில் இல்லை.... ‘மாறுவதைப் புரிந்துகொண்டால் மனதில் மயக்கமில்லை’ என்பார் கண்ணதாசன். 

இனி வாரந்தோறும் தவறாமல் எழுதுவேன்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).

செவ்வாய், நவம்பர் 18, 2014

(பதிவு 110) மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி – துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்


மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி – துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்

எங்கள் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களின் கனவில் காந்திஜி வந்து பத்து கேள்விகளைக் கேட்டதாகவும், அதற்கு அவருடைய பத்து பதிவுலக நண்பர்கள் பதில் தரவேண்டும் என்று கில்லர்ஜி கட்டளையிட்டதாகவும், அதில் தானும் ஒருவர் என்றும் நண்பர் துளசிதரன் தெரிவித்திருக்கிறார். ‘யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்’ என்பதில் பெரிதும் நாட்டமுள்ள துளசிதரன், தன் பங்குக்குப் பத்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அதே சவாலை விடுத்திருக்கிறார். அந்தப் பத்தில் அடியேனும் ஒருவன்!  

கேள்விகள் காந்தியைப் பற்றியதாக இல்லாவிடினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கிவைத்து, இன்னும் முழுமையாகப் படிக்கப்படாத, ‘மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள்’ என்ற ஆறு தொகுதி நூல்களைத் தூசுதட்டி எடுத்தேன். எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் மகாத்மா! மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கிறது, காந்தியின் எழுத்துக்களைப் படிக்கும் அனுபவம். அதற்காகவே கில்லர்ஜிக்கும் துளசிதரனுக்கும் ஒரு கும்பிடு!


இனி, முதல் கேள்விக்குப் போகலாமா?

(1)நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

மறுபிறவி பற்றி மகாத்மா காந்தியின் கருத்து என்ன என்று தெரிந்துகொள்வோமா?

1909 அக்டோபர் முதல் தேதியன்று காந்தி, லண்டனில் விக்டோரியா தெரு, எண் 4-இல் இருந்த வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தபோது  லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதத்தில்  இப்படிக் குறிப்பிடுகிறார்:

“நீங்கள் ஹிந்து பத்திரிகைக்கு எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தின் பிரதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள் எழுதிய ஒரிஜினலா என்று தெரியவில்லை. எனவே அதன் பிரதியை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உறுதி செய்யக் கோருகிறேன். மேலும் ஏதேனும் சேர்க்கவேண்டுமென்றாலும் சேர்த்து எழுதி அனுப்பினால் எங்கள் பத்திரிகையில் வெளியிடுவேன்.... 

மேற்படி கடிதத்தில் ‘மறுபிறவி’ என்ற கொள்கையை நீங்கள் மறுத்துப் பேசியிருப்பதாகப் படுகிறது. மறுபிறவி என்பதை இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரிதும் நம்பிக்கையோடு போற்றிவருகிறார்கள் (என்பதை நீங்கள் அறிவீர்கள்.) சொல்லப்போனால் அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவபூர்வமான உண்மை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மனித வாழ்க்கையின் பல விசித்திரங்களை மறுபிறவி என்ற கோட்பாடு எளிதாக விளக்கி விடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் பகுதியில் தங்கள் உரிமைக்காகச் சிறை சென்ற மக்கள், இந்த நம்பிக்கையால்தான் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். 

எனவே, உங்கள் கடிதத்தில் நீங்கள் மறுபிறவியை மறுப்பதுபோல் எழுதியுள்ள பகுதியைத் தயவுசெய்து மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இப்படிச் சொல்வதனால், மறுபிறவி என்ற கோட்பாட்டை உங்கள்மேல் நான் திணிப்பதாகக் கொள்ளவேண்டாம்....  “

இந்தக் கடிதத்திற்கு அதேவாரம் லியோ டால்ஸ்டாய் பதில் எழுகிறார், யாஸ்னயா போல்னயா நகரில் இருந்து: “....... நீங்கள் விரும்பினால் மறுபிறவி பற்றிய எனது கருத்துக்களை நீக்கிவிட்டு அக்கடிதத்தைப் பதிப்பிக்கலாம் என்று உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்...... எனது எழுத்துக்களைப் பதிப்பிக்க எனக்கு ராயல்டி எதுவும் தரவேண்டாம்... மறுபிறவி என்ற கோட்பாட்டை விட இறைவன்’ என்பதும் ‘அன்பு’ என்பதுமே நிரந்தரமானவை என்றும், ஆத்மா அழிவதேயில்லை என்றும் மக்கள் நம்புவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஆழமான ஈடுபாடும் ஒழுக்கமும் உண்டாவதற்கு இன்னும் வலிமையான காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்...”

(‘Tolstoy and Gandhi’ – pp 59-63)

மகாத்மா காந்தியைப் போல் எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை உண்டு. ஏனெனில், அறுபதைக் கடந்த நிலையிலும் எண்ணிய பலவற்றை இன்னும் சாதிக்க முடியாத கவலை மிகவுண்டு. அவற்றை இந்தப் பிறவியில் இல்லாது போனால், அடுத்த பிறவியிலாவது சாதிக்க முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி தரக்கூடியது வேறென்ன இருக்க முடியும்? ஆனால் சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாகவேண்டும்:

-மீண்டும் மனிதனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ஆண்மகனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் தமிழனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ‘கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி’ப் பிறத்தல் சாத்தியமா?
-மீண்டும் அதே பெற்றோர்களுக்குப் பிறக்க வேண்டுமா?
-மிக முக்கியமாக, மீண்டும் அதே வாழ்க்கைத்துணைதான் வாய்க்குமா?

இப்படிப் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே, அடுத்த பிறவியில் எங்கு பிறக்கலாம் என்பதை நான் முடிவு செய்ய முடியும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். பதில் தெரிந்தவர்கள் விரைந்து தெரிவிக்க வேண்டுகிறேன். அதற்குள் கில்லர்ஜியின் பத்தாவது கேள்வியையும் பார்த்துவிடலாமா?

(10) நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய்; உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது; ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்....?

ஆகா, என்னே கில்லர்ஜியின் சதித் திட்டம்! அடுத்த பிறவியில் நான் என்னவாகப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு தனக்கும் அதே பிறவி வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு எனது முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறாரோ என்று சந்தேகப்படுகிறேன். தொலையட்டும்- கெடுவான் கேடு நினைப்பான்!

மனிதப் பிறவி இல்லாமல் போனால் வேறு என்னவாகப் பிறக்கலாம் என்று இதுவரை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. இப்போது செய்யவேண்டியதாகிறது. 

தினத்தந்தியில் ‘சிந்துபாத்’ கதை – கன்னித்தீவு-  வந்த புதிதில் – ஏன், இன்றும் கூட – ஆர்வமாக சலூன்களுக்குப் போய் அக்கதையைப் படித்த தலைமுறை அல்லவா எங்கள் தலைமுறை! அது திடீரென்று நினைவுக்கு வந்தது. அக்கதையில் இளம் வயதில் எங்களைக் கவர்ந்த பாத்திரம் ஒன்று உண்டு – அது தான், கடற்கன்னி! ஆழ்கடலில் திடீரென்று கூட்டம் கூட்டமாக வந்து கடற்கன்னிகள் நீர்விளையாட்டு ஆடுவார்களாம். ஆனால் அவர்களை யாராலும் பிடிக்க முடியாதாம்! இடுப்புவரை இளம் பெண்ணாகவும், இடுப்புக்குக் கீழே மீனாகவும் இருப்பார்களாம்!

அதுபோன்ற கடற்கன்னிகளை அவ்வப்பொழுது மாலுமிகள் பார்த்ததாக தினத்தந்தியில் (மட்டும்!) செய்திகள் வரும். இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை.

ஆகவே, கில்லர்ஜி அவர்களே, துளசிதரன் அவர்களே, மானிடப் பிறவி இல்லாத பட்சத்தில், நான் ஒரு கடற்கன்னியாகப் பிறக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். இது எப்படியிருக்கு?
 கடற்கன்னி - நன்றி: இணையம்

(இங்கும் ஒரு கேள்வி எழுகிறது. கடற்கன்னிகள் மட்டும்தான் இருப்பார்களா? அவர்களது ஆண்பாலான கடற்கண்ணன்கள் இருக்கமாட்டார்களா? அவர்களைப் பற்றி  யாரும் சொன்னதில்லையே, ஏன்?)

(கடற்கன்னிகளைப் பற்றி மகாத்மாவின் நூல்களில் எந்தக் குறிப்பும் அகப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)

(c) Y. Chellappa 


(கில்லர்ஜியின் மற்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதிலை எதிர்பார்க்கலாம்.)