புதன், ஏப்ரல் 24, 2019

நூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’


நூல் விமர்சனம்:

ஆர் வி ராஜன்  எழுதிய  ‘துணிவே என் துணை’

-       இராய செல்லப்பா

(23-4-2019 அன்று சென்னை அடையாறு காந்திநகர் நூலகத்தில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில் ஆற்றிய உரை)

***

நண்பர்களே, நாம் எவ்வளவோ  வாழ்க்கை வரலாற்று நூல்களைப்  படித்திருக்கிறோம். மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ முதல் கலைஞர் கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ வரை,  வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வந்திருக்கின்றன.

பொதுவெளியில் பெரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்கள் தான் வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் கல்வியின் பரவலால், நமக்கு அருகே வாழும் சாதாரண மனிதன் கூட எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களிடையே தோன்றிய பிறகு, அந்த ஆர்வத்திற்குத்  தீனி போடுவதற்காக வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் எல்லாத்  தரப்பு மக்களிடமிருந்தும் தோன்ற ஆரம்பித்தன. எனவே எளிய மனிதர்களும் சுய வரலாற்று நூல்களை எழுத ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை கட்டுரைகள் என்று சொன்னாலே அது யாரோ ஒரு மனிதனின் செயல்பாட்டை பற்றியதாகவே இருக்கும். அதாவது அவருடைய தொழிலின் வரலாறு. தன்னுடைய தொழிலை அவர் எப்போது தொடங்கினார், அவருடன் பணியாற்றியவர்கள் யார் யார், மூலதனம் வழங்கியவர்கள் யார், இந்தத்  தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு வெற்றி கண்டார் என்பதுதான் கட்டுரையின் கருப்பொருளாக இருக்கும். தமிழ்ப் பத்திரிகைகளில் இத்தகைய கட்டுரைகள் அதிகம் வருவதில்லை. பெண்கள் பத்திரிகைகளை மட்டும் விதிவிலக்காகக்  கொள்ளலாம். அவற்றில் ஒரு சாதாரணப் பெண்மணி வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழிலை எவ்வாறு வெற்றிகரமாக நடத்திச்  செல்வந்தர் ஆனார் என்பது போன்ற கட்டுரைகள் அதிகம் வருகின்றன. உண்மையில்  இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் தான் சமுதாயத்திற்குப்   பயன்படுபவை ஆகும். ஆனால் இதே அளவுக்கு ஆண்களின் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் தமிழ்ப்  பத்திரிகைகளில் வருகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஒன்று,  நீங்கள் ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும், அல்லது உங்களைச் சுற்றி ஒரு பிரச்சினை கிளம்ப வேண்டும், அதுவும் நீங்கள் சினிமாவிலோ அரசியலிலோ இருக்க வேண்டும்; அப்போதுதான், நீங்கள் யார், நீங்கள் இந்த நிலைமைக்கு எப்படி வந்தீர்கள், என்ன படித்தீர்கள், உங்களுடைய செல்வநிலை எப்படி என்பது பற்றி பத்திரிகைகள் கவனம் செலுத்தும். அதிலும் உங்களின் இருண்ட பகுதிகளை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்ட முனையும்.

ஆனால் அறுபதைக் கடந்த  ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, ஒரு சாதாரண நிலையில் இருந்த தன்னால் இதுவரை எப்படி முன்னேற முடிந்தது என்பதை எழுத்து வடிவில் கொடுத்தால், தன்னைப் போன்ற பலருக்கு வாழ்வில் முன்னேறுவதற்கு அது பயன்படுமே என்று கருதினால், அது  நம்முடைய அதிர்ஷ்டமே. அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் ஆர். வி. ராஜன் அவர்களை நாம் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

****
முதலில் ராஜன் அவர்களுடைய பன்முகத்தன்மையைக்  குறிப்பிட்டாக வேண்டும்.

ஆங்கிலத்தில் அவர் சிறந்த கட்டுரையாளர், சொற்பொழிவாளர். வாரம்தோறும்  அடையாறு டைம்ஸில் எழுதிவருபவர்.   அவருடைய துணைவியார் திருமதி பிரபா ராஜன் அவர்கள் தமிழில் சிறந்த சிறுகதையாசிரியர். அவர் அமரரான போது அவர் பெயரால் ‘பிரபா ராஜன் அறக்கட்டளை’யை நிறுவி அதன் மூலமாக கலைமகள், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்களோடு இணைந்து ஏராளமான எழுத்தாளர்களுக்குப்  பரிசுகளை வழங்கி வருகிறார் ராஜன்.

கடந்த ஐந்து வருடங்களாகத்  ‘தமிழ்ப்  புத்தக நண்பர்கள் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி,  மாதம் தோறும் ஒரு சிறந்த தமிழ்ப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் TAG அமைப்பின் நான்கு  தூண்களில் ஒருவராக விளங்கி வருபவர் ராஜன் என்பது சென்னையில் உள்ள தீவிர இலக்கிய அன்பர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்.


ராஜன் அவர்களின் செயல்பாட்டுத் துறை விளம்பரத்துறை ஆகும். அதிலும் கிராமப்புற மார்க்கெட்டிங் துறையில் அவர் சரித்திரம் படைத்தவராகக் கருதப்படுகிறார். அவர் தன் வாழ்நாளில் விவசாயம் செய்திருக்க மாட்டார். ஆனால் எந்த நிலத்துக்கு, எந்தப் பயிருக்கு, எவ்வளவு ஏக்கருக்கு, எவ்வளவு உரம் இடவேண்டும் என்பது விவசாயிகளை விட இவருக்கு நன்றாக தெரியும். கோட்டு சூட் அணிந்து கொண்டு மாதக்கடைசியில் செலவுக்கு நண்பர்களிடம் கைமாத்து கேட்கும்  நகரத்தானை விட, மேலாடை இல்லாமல் வியர்வையில் நனையும் இடையாடை மட்டுமே உடுத்திய கிராமத்தவரிடம் அதிக பண வசதி உண்டு என்பதைத்  தன் விளம்பர ஆற்றலின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் ராஜன்.

உலகப்  புத்தக தினம் கொண்டாடும் இந்த வேளையில் ஆர்வி ராஜன் அவர்களின் ‘துணிவே என் துணை’ என்ற இந்த நூலைப் பேச எடுத்துக் கொள்வதில்  நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு அமரர் சாருகேசி அவர்களால் அழகிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.

****

புதுக்கோட்டை அருகில் உள்ள நெற்குப்பை என்ற கிராமத்தில் பிறந்தவர் ராஜன்.  இவருடைய தாயார் எட்டு குழந்தைகளில் மூத்தவர். இவருடைய தந்தை ஒன்பது குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தவர். (இப்போது மாதிரி அப்போது தேர்தல்கள்  அடிக்கடி  நடந்திருந்தால் ராஜனின் குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்! ஒவ்வொரு வேட்பாளரும் இவர்கள் குடும்பத்தை எவ்வளவு கனமாக கவனித்திருப்பார்கள்!)

ராஜனின் தாய் தந்தை தங்கள் குடும்ப வாழ்க்கையை பரோடாவில் தொடங்கியிருந்தாலும், பிறகு பம்பாய்க்கு இடம்பெயர்ந்தார்கள். மூன்று மாதக்  குழந்தையாக பம்பாய் நகரில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்  அடுத்த 25 ஆண்டுகள் தன் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டது அங்கேதான்.

இந்தப்  புத்தகத்தை நான் முதலில் ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலுமாக மூன்று நான்கு முறைகள் படித்துவிட்டேன். தன வாழ்க்கையில் இதுவரை நிகழ்ந்த குறைந்தபட்சம் ஆயிரம் நிகழ்ச்சிகளையாவது  இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (சந்தேகம் இருப்பவர்கள் சரியாக எண்ணிப் பார்த்து கூறினால் திருத்திக் கொள்ள தயார்.)

நேரத்தின் அருமை கருதி புத்தகத்தின் சுவையான பகுதிகளை மட்டும் கூறி அமைகிறேன்.

***
தன்னுடைய நான்கு அல்லது ஐந்தாவது வயதிலேயே இந்திய சுதந்திரப்  போராட்டத்தில் ராஜன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் பிறந்தது 1942இல். வெளிநாட்டுப் பொருள்களை எல்லாம் இவருடைய கட்டடத்துக்கு வெளியே அப்போது எரித்துக் கொண்டிருந்தார்கள். தேச பக்தி உணர்வு மேலிட்ட  ராஜன் அவர்கள், தன்னுடைய தந்தை அலுவலகத்திற்குப் போகும் போது அணியும் தொப்பியைத்  தூக்கி அந்த நெருப்பில் போட்டு விட்டார். அவ்வளவு இளம் வயதில் துணிச்சலாக இவர் புரிந்த தேசீய உணர்வுள்ள காரியத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு என்னவோ தந்தை கொடுத்த பலமான அறைதான்!

*****
கூட்டுக் குடித்தனங்களுக்குப்  பிரபலமானது நம்முடைய திருவல்லிக்கேணி. அதுபோல பம்பாயில் மாதுங்கா பகுதியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு மாடி வீடுகள் பிரபலம். அதை சால் என்று  கூறுவார்கள்.  ஒரு சாலில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடித்தனங்கள் இருக்குமாம்.

சால் குடியிருப்பில் ஒரே ஒரு அறைதான் இருக்கும். ஓரத்தில் சமையல். அதுவே சாப்பிட. உட்கார, படுக்க என்று சகலத்துக்கும். கட்டில் போட்டால் இடம் போய்விடும் என்று குடியிருப்பில் யாரிடமும் கட்டிலே இருக்காது. பாயும் தலையணையும் தான். குடும்பம் பெரிதானால் இடப்பற்றாக்குறை காரணமாக வளர்ந்த பையன்கள் இரவில் வெளியேதான் படுக்க வேண்டும்.எங்கே படுக்க இடம் கிடைக்கும் என்று பையன்கள் தேடிக்கொண்டு அலைவார்கள். அது, இரண்டு கட்டடங்களுக்கு இடையே இருக்கும் காலி இடமாகவோ, மொட்டை மாடி ஆகவோ,  அல்லது எல்லாருக்கும் பொதுவான நடைபாதையாகவோ  இருக்கும். பையன்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு படுக்கை, தலையணை, பெட்ஷீட் மற்றுமொரு கைத்தடியும் இருக்கும். கைத்தடி எதற்கு என்றால் இரவில் பையன்கள் மீது பாய்ந்து வருகிற நாய்களையும் பூனைகளையும் எலிகளையும் விரட்டுவதற்காக!

சால் குடியிருப்பில் ஏகப்பட்ட குழந்தைகள். ஏகப்பட்ட சண்டைகள். விடலைப் பருவக் காதல்கள். அதற்கான ஏராளமான வாய்ப்புகள். சுவையான இளமைக்காலத்தில் பம்பாயில் இருந்திருக்கிறார் ராஜன்.

ஒரு முறை தன்னுடைய வங்காளித்  தோழியை தேநீர் அருந்துவதற்காக வீட்டிற்கு அழைத்திருக்கிறார். உடனே சாலில்  இருந்த எல்லாக்  குடித்தனக்காரர்களும் கூட்டமாக வந்து,   அந்தப்  பெண்ணை ஆராயத் தொடங்கி விட்டார்களாம். அவளைத்தான் ராஜன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ  என்று ஆர்வத்துடனும்,  கவலையுடனும்  கேட்கத்  தொடங்கி விட்டார்களாம். ராஜனின் வாழ்வில் அது ஒரு நிலாக்காலம்!

******
ஆனால் ராஜன் உண்மையிலேயே ஒரு பெண்ணைக்  காதலித்து இருக்கிறார். ஆனால், அது பாவம், ஒரு தலை ராகம் ஆகவே நின்றுவிட்டது என்று வருத்தப்படுகிறார். ஒருவேளை அவர் இளம் வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிந்தது தான் காரணமாக இருக்குமோ? ஏனென்றால் கண்ணாடி அணிந்த ஆண்களை இளம் பெண்கள் காதலிப்பது குறைவாம். ஆனால் கண்ணாடி அணிந்த பெண்களைக்  காதலிக்கும் ஆண்கள் அதிகமாம். ஒரு ஆராய்ச்சியில் படித்த நினைவு.

*****
ராஜனின் தாயார்  கடின உழைப்பாளி. நூலின் இந்த பகுதி மிகவும் முக்கியமானது என்பதால் ராஜனின் வார்த்தைகளிலேயே அதைக் கூறுகிறேன்:

“அம்மா வேலைகளை எல்லாம் முடித்து விட்டுப்  பிற்பகல் 3 மணிக்குத்  தான் சாப்பிட்டு கொஞ்சம் கண்ணயர்ந்தாள். அதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. பல நாட்களில் அதுவும் முடியாது. ஏனென்றால் மூன்று மணிக்குத் தான் நாங்கள் எல்லாம் பள்ளியிலிருந்து திரும்புவோம். பகலிலே இப்படி என்றால் இரவு தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். கைச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அம்மா தைத்த ஜாக்கெட்டுகளை காஜா எடுத்து பட்டன் வைக்கிற கடைகளுக்கு எடுத்துக் கொண்டு போவதும், யார் வீட்டில் எதைக் கொடுப்பது என்பதும், கணக்கு வைத்துக் கொள்வதும் என் வேலை. நான் என் டிராயர் பனியன் எல்லாம் தைக்க கற்றுக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு உடம்பு மோசமானதால் அப்பா இந்தக் காரியங்களுக்குத் தடைவிதித்து விட்டார்…….

“அந்தக்  காலத்தில் பாக்கெட் மணி சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பழைய பேப்பரில் இருந்து கவர் செய்து பழக் கடைக்காரர்களிடம் விற்பேன். 12 கவர் கொடுத்தால் இரண்டு அணா கிடைக்கும். எங்கள் குடியிருப்புகளில் இருக்கும் சாரதா பவன் என்ற உடுப்பி ஹோட்டலில் சுடச்சுட தோசை வாங்கி சாப்பிடுவேன். அந்தக் காலத்தில் அது ஒரு ஆடம்பரமே. ஆனால் எனக்குப்  பிடித்த தக்காளி ஆம்லெட் வேண்டுமானால் 24 கவர் கொடுத்தால்தான் கிடைக்கும். ஆனால் இதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் நடந்த விஷயம். மாதக்கடைசியில் பழைய பேப்பர் எடைக்குப் போடும்பொழுது அப்பா கண்டுபிடித்து விட்டார். அத்துடன் இதுவும் போச்சு.” 

****
எல்லாப் பதின் பருவ  மாணவர்களையும் போலவே ராஜனுக்கும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் கிரிக்கெட் மட்டையும் பந்தும் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் பள்ளிக்கு மாதச் சம்பளம் எட்டு ரூபாய் கட்டுவதற்கே குடும்பம் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்த போது மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் முதல் வகுப்பைத் தவறவிட்டார் ராஜன். அதனால் நல்ல கல்லூரியில் சேரும் மதிப்பெண்கள் இல்லாமல் போயிற்று. ஆனாலும் விடுமுறை நாளில் குறைத்து 125 ரூபாய் சேகரித்து வைத்திருந்தார். ஆனால் அதுவும் கல்லூரிக்குப்  போதுமானதாக இல்லை. அப்போது ஒரு நல்ல வாய்ப்பாக நைலான் சேலைகளுக்கு வண்ண டிசைன்களை பதித்துக்  கொடுக்கும் வேலை மாதத்திற்கு 50 ரூபாய் என்று இவருக்குக்  கிடைத்தது. திறமையாக இவர் பணி செய்ததால் இரண்டாவது மாதம் சம்பளம் 75 ரூபாயாக ஆயிற்று. இதை அம்மாவிடம் அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாகக்  கொடுத்துவைத்தார். எப்படியாவது கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக.

கல்லூரியில் வணிகவியல் படித்தார் ராஜன். முதல் வருடப்  பாடங்களில் ஒன்றான ‘மார்க்கெட்டிங் அண்ட் அட்வைர்டைசிங்’ பாடத்தில் முதலாவதாக வந்தார். ஆனால் அப்போது விளம்பரத்துறை அவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல விளம்பரத் துறையில் ஒருவன் இருக்க வேண்டுமானால் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கொள்கை அக்காலத்தில் இருந்ததாம். எனவே நீ விளம்பரம் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறுவது கடினம் என்று அவருடைய ஆரம்பகால வழிகாட்டியாகக்  கருதப்பட்ட சுக்லா என்பவர் கூறினாராம்.

சுக்லா  வெற்றிகரமான விளம்பரத் துறை நிபுணர். அவர் ஓய்வு பெறும் நாளில் அவருடைய வெற்றிக்கு காரணம் என்ன என்று  ராஜன் கேட்டபொழுது அவர் இரண்டு ஆலோசனைகள் கூறினாராம். இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதியும், இந்தப்  புத்தகத்தில் இருந்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதும்  இந்த இரண்டு ஆலோசனைகள்தான்.

“ஒன்று, உன்னுடைய நிறை குறைகளை பட்டியல் போட்டுக் கொள். உன்னுடைய நெருங்கிய மனிதர்களிடம் இதைக் காட்டு. அவர்கள் ஆலோசனையின் பேரில் குறைகளைக் குறைப்பதற்கும், நிறைகளை அதிகப்படுத்துவதற்கும் நீ கற்றுக் கொள்ள வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் நீ தொடர்ந்து செய்ய வேண்டும்.

இரண்டு, ஒருவன் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறான், எவ்வளவு செலவு செய்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடாதே. செல்வத்தை சேமிக்கும் போதும் அதை அனுபவிக்கும் போதும் வாழ்வின் சில உன்னதங்களை,  குறிப்பாக, மனித உறவுகளை இழக்கும் துர்பாக்கிய நிலையை அவன் அடைந்திருக்கலாம்.”

***
ராஜன் குறிப்பிடுகிறார்: “நான் இந்த ஆலோசனைகளை என் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்தேன். எனக்குத் தெரிந்த இளைய சமூகத்தினர் அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொண்டேன். 67வது வயதில் ஆங்கிலத்தில் என் வாழ்க்கை சரிதத்தை எழுதும்போது, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களை விட நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.”

நண்பர்களே, நமது இளைஞர்களுக்கு ‘ரோல் மாடல்கள்’ அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ, இயக்குனர்களோ அல்லர். பத்து விரல்களை மட்டுமே மூலதனமாகக்  கொண்டு, மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தை அரவணைத்துக் கொண்டு, அனைவருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகித்து, ஒரு கணமும் கூட வறுமையோ வாழ்க்கையின் துன்பங்களோ  தன்னைக் கீழே இழுத்து விடாமல் எப்போதும் மேல்நோக்கியே சிந்தித்து, வாழ்க்கையின் ஒரு கண்ணியமான அந்தஸ்துக்கு, முயற்சியுள்ள எவனும் முன்னேற முடியும் என்று நிரூபித்துள்ள ராஜன் போன்றவர்களே அத்தகைய ரோல் மாடல்களாக வேண்டும்.

அருமையானதொரு  புத்தகத்தை உலகப் புத்தக தினத்தில் நான் பேசுமாறு அமைந்தது என் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய  தருணம் ஆகும். இதற்காக ஆர் வி ராஜன் அவர்களுக்கும் திரு வையவன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-       இராய செல்லப்பா

****

9 கருத்துகள்:

 1. Very selective introduction which leads to read the whole book.It is a rare book and your view proves the good readership within you. வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களை விட நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது. A rare outlook seems self justifying.But makes us ponder over what is வெற்றிகரமான வாழ்க்கை
  Congrats

  பதிலளிநீக்கு
 2. அருமையான விமர்சனம் ஐயா
  வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் வாங்கிப் படிப்பேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. சால் குடியிருப்பு விவரங்கள் சுவாரஸ்யம்.

  வெற்றி பெற்ற மனிதர்களின் சரிதைகள் பயனுள்ளவை. அவர் சொல்லி இருக்கும் (சுக்லா சொன்ன) இரண்டு அறிவுரைகளில் முதலாவது என்னைப்பொறுத்தவரை டாப்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல ஆற்றொழுக்கான நடையில் உரையைத் தயாரித்திருக்கிறீர்கள்.
  கோர்வையாகப் படித்து மகிழ்ந்தேன்.
  நண்பர் வையவனுடன் மீண்டும் தொடர்பைத் தொடர வேண்டும். அவர் அளவுக்கு எனக்கு வேகம் பத்தாது என்பதால் செயல்படும் தயக்கங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 5. அருமையான மதிப்புரை. நூலை வாசிக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 7. (இப்போது மாதிரி அப்போது தேர்தல்கள் அடிக்கடி நடந்திருந்தால் ராஜனின் குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்! ஒவ்வொரு வேட்பாளரும் இவர்கள் குடும்பத்தை எவ்வளவு கனமாக கவனித்திருப்பார்கள்!)//

  ஹா ஹா ஹா ரசித்தேன் சார்.

  அருமையான புத்தகம். இப்படி வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் கண்டிப்பாகப் பயனுள்ளது ரோல் மாடல்கள் தான். சுக்லா அவர்கள் சொன்னதில் முதலாவது அறிவுரை மிக மிகச் சிறப்பு.

  நான் அடிக்கடி நினைப்பது, பலரும் வாழ்க்கை வெற்றி என்று சொல்கின்றனரே. வாழ்க்கையைல் வெற்றி என்றால் எது? என்ன அளவுகோல் என்றெல்லாம் எனக்குக் கேள்வி எழுந்ததுண்டு. நான் நினைப்பது, வெற்றி தோல்வி என்பதை விட மனதிற்கு நிறைவாக வாழ்வது என்பதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என்று. அதை இவரும் சொல்லியிருக்கிறாரே!!!
  //வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களை விட நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.//

  அருமையான வரிகள் சார். இதுதான் ஒருவரை மமதை கொள்ளாமல் இருக்கச் செய்வது.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. https://www.scientificjudgment.com/ இப்போது மாதிரி அப்போது தேர்தல்கள் அடிக்கடி நடந்திருந்தால் ராஜனின் குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்! ஒவ்வொரு வேட்பாளரும் இவர்கள் குடும்பத்தை எவ்வளவு கனமாக கவனித்திருப்பார்கள் ... ஹஹா அதுமட்டுமல்ல பொங்கலுக்கு 1000 ரூவா கெடச்சிருக்கும் .. ஜஸ்ட் மிஸ் ...

  பதிலளிநீக்கு