பதிவு 02/2018
இரவுக்கு ஆயிரம் புண்கள் -2
இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர்
என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
அதுவரையில் அவரை நான் பார்த்ததில்லை. வயது சுமார் இருபது
இருக்கலாம் என்று தோன்றியது. அதை உறுதி செய்வதுபோல், மெலிந்த தேகம். அதிக
உயரமில்லை. ஆனால் அவருக்கு வயது முப்பதுக்குச் சற்றே அதிகம் என்று பின்னால்தான்
தெரிந்தது. அது இங்கு முக்கியமில்லை. அவருடைய பெயர் கூட முக்கியமில்லை. திருவாளர் ‘ந’
என்று வைத்துக்கொள்ளலாம்.
‘நான் ஒரு பட்டிமன்றத்தில் பேச வேண்டும். அது பற்றிய சில
குறிப்புகளைத் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
தன்னைப் பற்றியோ தனது கல்வித் தகுதி பற்றியோ, பட்டிமன்ற
அனுபவம் பற்றியோ எதுவும் கூறாமல், எடுத்த எடுப்பில் ஒரு புதிய மனிதரிடம்
இப்படிப்பட்ட உதவியைக் கேட்கும் தன்மை என்னுள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தார், அவருடன்
வந்திருந்த ஒரு பெண்மணி. அவர் எனது குடியிருப்பில் அண்மையில் குடியேறிய ஒரு குடும்பத்தின் விருந்தினர்.
‘இவருக்கு அதிகம் படிப்பில்லை. பேச்சும் சில நேரம் திணறுவதுண்டு.
ஆனால் படிக்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் உண்டு. அதற்காகத்தான் கிராமத்தில்
இருந்து அழைத்துவந்திருக்கிறோம். நல்ல
மனம் படைத்த ஒருவர் தனது அலுவலகத்தில் இவரைப் பணியில் அமர்த்திக்கொள்ள எண்ணம்
கொண்டிருக்கிறார்....’ என்று சொல்லிக்கொண்டே போனார் அந்தப் பெண்மணி.
‘ஆம் ஐயா! எனக்கு இலக்கியத்தில் நாட்டம் உண்டு. அதிலும்
சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர், ராஜா போன்றவர்களின் பட்டிமன்றப் பேச்சுக்களைக்
கேட்கும்போது அவர்களைப் போல நானும் ஒருநாள் சிறந்த பேச்சாளனாக வேண்டும் என்ற
பேராசை உண்டாகிறது. படிப்பு என்பது எனக்குக் கடினமாகத் தோன்றினாலும், பேசும் கலையை
எளிதில் பயின்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது. எனக்கு
உதவுவீர்களா?’ என்று கோரினார் ‘ந’.
அவரிடம் உடனடியாக நான் கண்ட நல்ல அம்சம், அவர் கையில்
இருந்த மடிக்கணினியே. அவரது வீட்டில் யாரோ ஒரு மாணவருக்கு அம்மா அரசு இலவசமாக
வழங்கிய மடிக்கணினி அது. அதில் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் எழுதமுடிந்தது அவரால்.
‘இந்தக் கணினியில் தமிழில் எழுதுவது எப்படி என்பதை
உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது எனக்குச் சொல்லித் தருவார்களா?’ என்று
ஏக்கத்துடன் கேட்டார்.
‘ஓரளவுக்கு என்னால் சொல்லித்தர இயலும்’ என்று உறுதியளித்தேன்.
Google Input Language Tamil என்று google செய்வது எப்படி என்று காண்பித்தேன். எப்படிக்
கணினித் திரையின் வலது கீழ்ப்பக்க மூலையில் ENG என்று இருந்தால் ஆங்கிலத்திலும், ‘த’
என்று இருந்தால் தமிழிலும் எம்எஸ் வேர்டு கோப்பில் அடிக்க முடியும் என்று
காண்பித்தேன். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, அல்லது ஆங்கிலத்தில் இருந்து
தமிழுக்கோ மாறவேண்டி நேர்ந்தால் Control –ஐ அழுத்திக்கொண்டு G –யையும் அழுத்தவேண்டும் என்பதையும் செய்து
காண்பித்தேன்.
வேர்ட் ஃபைல்-களுக்குப் பெயரிடுவது எப்படி, ஒரு ஃபைலின்
பெயரை மாற்றுவது எப்படி, இரண்டு ஃபைல்களை இணைப்பது எப்படி என்பதுவரையான பயிற்சியை
அவருக்குக் கொடுத்தேன். உடனே புரிந்துகொண்டார்.
‘விருப்பம் போல எதையாவது அடியுங்கள்’ என்று இரண்டு ஃபைல்களை
உண்டாக்கிக் கொடுத்தேன். மிகுந்த ஆர்வத்துடன் தமிழில் அடிக்கத் தொடங்கினார்.
மறுநாள் காலை இந்த விஷயங்கள் அவருக்கு அத்துப்படி யாகிவிட்டன.
இப்போது அவர் சொன்ன சேதி என்னவென்றால், பொதிகை டிவி-யில் கம்பராமாயணம் பற்றிய தலைப்பில் பட்டிமன்றம்
ஒன்று நடக்க இருப்பதாகவும், கிராமத்துப் பேச்சாளர் என்ற வகையில் தன்னை அதில் பேசச்
சொல்லி அனுமதித்திருப்பதாகவும், அதற்காகத் தன்னை எப்படியாவது
தயார்ப்படுத்திக்கொள்ள நான் உதவ வேண்டும் என்றும் கோரினார். தலைப்பின் முழு விவரம்
மாலைதான் கிடைக்கும் என்றும், ‘கம்ப ராமாயணத்தில் வலியுறுத்தப்படுவது ‘குடும்ப ஒற்றுமையா
அல்லது சமூக ஒற்றுமையா’ என்று தகவல்
கிடைத்ததாகவும் கூறினார்.
தமிழ் எழுத்தாளனுக்குச் சோதனைகள் வருவது ஆச்சரியமில்லை.
ஆனால் இம்மாதிரிச் சோதனையை நான் அதுவரையில் சந்தித்ததில்லை.
‘தம்பி, நீங்கள் கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறீர்களா?’
என்றேன்.
‘இல்லை ஐயா, ஆனால் கொடுத்தால் படித்துக் காட்டுவேன்’ என்றார்
தெம்பாக.
1966-70 ஆண்டுகளில் தினமணி
சார்பில் ‘தினமணி கதிர்’ என்ற வாரப் பத்திரிகையை சாவி அவர்கள் ஆசிரியராக இருந்து
நடத்தினார். இப்போது விகடன், கல்கி வருகிறதே அதே மாதிரியான பெரிய அளவில். புஷ்பா
தங்கதுரை, பல சிவப்பு விளக்குக் கதைகளையும், ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற
நாவலையும், ‘ஸ்ரீ வேணுகோபாலன்’ என்ற இன்னொரு
புனைபெயரில் ‘திருவரங்க உலா’ என்ற அழகிய காவியத்தையும் அதில்தான் எழுதினர்.
அப்போது அமரர், திருமுருக
கிருபானந்த வாரியார் அவர்கள், ‘கம்பன் கவிநயம்’ என்ற பெயரில் சுமார் ஐம்பது
வாரங்களுக்குமேல் கம்பராமாயணத்தை
ஆராய்ந்து அதே தினமணி கதிரில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனந்த விகடனில் ‘பி.ஸ்ரீ.’ அவர்கள் 1950-இன் இறுதிகளில் ‘சித்திர ராமாயணம்’ என்ற
பெயரில் பல வாரங்கள் எழுதியதை இராணிப்பேட்டையில்
பக்கத்து வீட்டுக்காரரிடம் கெஞ்சி இரவல் வாங்கித்தான் கம்பனை நான்
அறிந்துகொண்டிருந்தேன். வாரியாரின் எழுத்தில் கம்பனை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும்
அறிந்துகொள்ள முடிந்தது.
நல்வினைப்பயன் காரணமாக, வாரியாரின் அந்தக் கட்டுரைகள்
புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, அதே பெயரில், அவருடைய சொந்தப் பதிப்பகமான ‘திருப்புகழமிர்தம்
காரியாலய’த்தால் 1984இல் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை, எனது நண்பர் திரு ஜனார்த்தனன்
அவர்களின் தாயார் திருமதி கோமதி அம்மாள் அவர்கள் (வயது 93) இவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்திருந்து, ‘இனி
நான் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் இதை நீ வைத்துக்கொள்’ என்று
அன்போடும் ஆசியோடும் சில மாதங்கள் முன்புதான் என்னிடம் கொடுத்தார்கள். மூப்பின்
காரணமாக அவரால் இப்போதெல்லாம் எழுந்து நடமாட முடிவதில்லை. அடிக்கடி சென்று அவரை
நான் சந்தித்து வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த நூல் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
‘தம்பி, உனது ஆர்வம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால்,
கம்பராமாயணம் என்பது ஆழமான கடல் போன்றது. அதில் நீந்திக் குளிக்க வேண்டுமானால்
ஆண்டுகள் பல ஆகலாம். காக்கையைப் போல வெறும் தலையை முழுக்குப் போடுவதானாலும் அதுவே
பல மாதப் பயிற்சிக்குப் பிறகுதான் கைவரும். எனவே உன்னை எப்படித்
தயார்ப்படுத்துவது? நீதான் ஆலோசனை கூறவேண்டும்’ என்றேன்.
கம்பன் கவிநயம் நூலைக் கொடுத்து, அதில் முக்கியமான சுமார்
இருபது பாடல்களைச் சொல்லி, அதைக் கணினியில் எழுதிக்கொள்ளுமாறு கூறினேன். அந்தப் பாடல்களை எப்படியாவது மனப்பாடம்
செய்துகொள்வது நல்லது என்றேன். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ‘குகனோடும் ஐவரானோம்’
என்ற பாடலையும், குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும்
‘நீர்க்கோல வாழ்வை நச்சி....உயிர்கொடாது அங்குப் போகேன்’ என்ற கும்பகர்ணன்
கூற்றாக வரும் பாடலையும், மற்றும் பொதுவாகவே அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்
பாடல்களான
’எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’,
‘தோள் கண்டார் தோளே கண்டார்’,
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’,
‘மன்னவன் பணி அன்றாகில்
நும்பணி மறுப்பனோ?’,
‘கவியெனக் கிடந்த கோதாவரியினை..’,
‘யார் கொலோ இச் சொல்லின் செல்வன்?’
‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம்’,
‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’
-போன்ற சில பாடல்களைக் கூறி,
ஒவ்வொன்றின் கருத்தையும் விளக்கினேன்.
முழுப் பாடல்களையும் மனப்பாடம் செய்வது உடனே
இயலாது என்பதால், இந்த மேற்கோள்களை மட்டுமாவது அவருடைய பேச்சில் அங்கங்கே
கொண்டுவந்தால் சிறப்பு என்று கூறினேன்.
எல்லாம் புரிந்த மகிழ்ச்சியில் அவர் புன்முறுவல் பூத்தார்.
சில நாட்கள் கழித்து அந்தப் பெண்மணி வந்தார். ‘அவர் பட்டிமன்றத்திற்கு நன்றாகத் தயார்
செய்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆர்வம் வியப்பூட்டுகிறது’ என்றார்.
அப்போதுதான் அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை என்
கவனத்திற்குக் கொண்டுவந்தார் அந்தப் பெண்மணி. சில மாதங்களுக்கு முன்பு எங்கள்
குடியிருப்பில் நிகழ்ந்த சபரிமலை செல்வோருக்கான இருமுடிப் பூசையின்போது, தானே
இட்டுக்கட்டிய பாடல்களை, தானே ராகம் இசைத்துப் பாடினார் அவர் என்றே சேதிதான் அது. ஆம்,
நினைவுக்கு வந்துவிட்டது! நெடுநேரம் பாடினார். நல்ல அர்த்தமுள்ள வரிகள். குரலும்
நன்கு எடுப்பாகவும் ஆன்மிக நாட்டத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது. குறைந்தது
இரண்டுமணி நேரமாவது பாடியிருப்பார் அந்த இளைஞர்.
இன்னும் சில நாட்கள் கழிந்தபின் அந்த இளம் நண்பர் வந்தார். பட்டிமன்றம்
நடைபெற்றதாம். முதல் பேச்சு என்பதால் சற்றே இலக்கண பூர்வமான பேச்சாகப் பேச
ஆரம்பித்ததாகவும், நிகழ்ச்சியின் நெறியாளர், ‘பரவாயில்லை, உங்கள் வழக்கமான பேச்சு
மொழியிலேயே பேசலாம், தவறில்லை. அதிகம் சிரமப்படாமல் பேசுங்கள்’ என்று
உற்சாகப்படுத்தினாராம்.
‘நீங்கள் கொடுத்த குறிப்புகள்தாம் எனக்கு மிகவும் பயன்பட்டன.
வாரியாரின் அந்தப் புத்தகத்தை நானே வைத்துக்கொள்ளட்டுமா? கம்ப ராமாயணத்தை முழுதும்
படிக்க அது எனக்கு உதவும் அல்லவா?’ என்றார்.
தன் நன்றியின் விளக்கமாக என்னைக் காலில் விழுந்து வணங்கினார்.
வாழ்த்தினேன். ‘புத்தகத்திற்கு முப்பத்து நான்கு வயதாகிறது. தொட்டாலே பக்கங்கள்
முறிந்துபோகும் நிலையில் உள்ளது. இருந்தாலும் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல
நல்ல நூல்களை விரைவில் கண்டுபிடித்துத் தருகிறேன். அதே சமயம், நீங்கள் படிப்பதைக் கணினியில்
தமிழில் எழுதிக் காட்டவேண்டும் என்ற எனது வேண்டுகோளை மறந்துவிடவேண்டாம்’ என்றேன்.
சரியென்றார்.
****
அந்தப் பட்டிமன்ற நிகழ்ச்சி எப்போது பொதிகையில் வெளியாகும்
என்று கேட்டேன். 28-5-2018 ஞாயிறு காலை 11 மணி முதல் 12 வரையான நேரத்தில் வரும்
என்றார். கட்டாயம் பாருங்கள் என்றார். நானும் மற்றும் எனது குடியிருப்பில் இருந்த
அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தோம் அந்த இருபத்தெட்டாம் தேதிக்காக. அந்த இளம்
நண்பர் நரசிம்மனின் பேச்சைக் கேட்பதற்காக மட்டுமல்ல, கம்பனின் கவிநயம்
காதில் விழுமே என்ற ஆசைக்காகவும்தான்.
****
இதற்கு இடைப்பட்ட சில நாட்களில்தான் நாங்கள் கொடைக்கானல்
பயணம் செல்ல நேரிட்டது. (அதைத்தான் போன பதிவில் படித்தீர்களே!)
கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து, மீனாட்சி அம்மனின்
தரிசனம் பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.
எங்கள் குடியிருப்பு செங்கல்பட்டிற்கும் தாம்பரத்திற்கும்
இடையில் சற்றே உள்ளடங்கிய பகுதியில் உள்ளது. வந்து சேரும்போது இரவு மணி எட்டரை போலாகியிருந்தது.
பகல் நேரத்துக் கசப்பான அனுபவங்கள் இரவு நேரத்தில்
முள்ளாகக் குத்திப் புண்ணாக வலிக்கும் அல்லவா? அதையே நான் ‘இரவுக்கு ஆயிரம்
புண்கள்’ என்று சொன்னேன்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வை-ஃபை தொடர்பு கிட்டியதால்,
எங்கள் அலைபேசிகள் வாட்ஸ்-அப் தகவல்களைக் கடகடவென்று இழுத்துக்கொண்டுவந்து போட்டன.
எங்கள் குடியிருப்பில் இருந்து சுமார் பதினெட்டு
கிலோமீட்டர் தொலைவில் இருந்த கூடுவாஞ்சேரி என்ற நகரைக் கடக்கும்போது, மோட்டார் சைக்கிளில்
சென்ற இளைஞர் ஒருவரை, அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்த பஸ் ஒன்று கீழே தள்ளி
நசுக்கியதுடன், சிறிது தூரம் வரை இழுத்துச் சென்று போட்டதாக ஒரு தகவல் எங்களுக்கு
வரும் என்றோ, அந்த நபரின் பெயர் நரசிம்மன் என்றோ, தனது முதலாவது பட்டிமன்றப்
பேச்சைக் கேட்காமலேயே அவரது உயிர் அகால மரணமடைந்தது என்றோ எப்படி நாங்கள்
எதிர்பார்த்திருக்க முடியும்?
அந்தப் பெண்மணி ஓடிவந்து அழுதார். ‘என் தம்பியைப் போன்று
அவனை எண்ணினேன். நன்றாகப் படிக்க வைக்கவும், வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை
விரைவில் அவன் அடையும்படி செய்யவும் சில திட்டங்களோடு இருந்தேன். விதி இப்படி
விளையாடி விட்டதே’ என்று கதறினார்.
இன்றுதான் அந்த இருபத்தெட்டாம் தேதி. காலை பத்து மணிக்கே பொதிகை டிவி-யில் schedule செய்துவிட்டுப் பட்டிமன்றத்திற்காகக்
காத்திருந்தோம். அறிவிப்பில் ‘பட்டிமன்றம் ‘ என்று இருந்தது. ஆனால், மன்-கி-பாத் வந்தது.
கழிப்பறையின் அவசியம் வந்தது. ‘பொதிகை-சமூகத்தின் மகிழ்ச்சி’ என்ற powerpoint slide
முப்பது தடவைக்குமேல் வந்தது. குழந்தைகளின் நிகழ்ச்சி ஒன்று வந்தது. ‘பொதிகை-சமூகத்தின் மகிழ்ச்சி’ கடைசியாகப்
பன்னிரண்டு மணிக்கு வந்தது. ஏன் பட்டிமன்றம் வரவில்லை என்று எந்த விளக்கமும்
இல்லை.
ஒருவேளை, அதற்குச் சில நாட்கள் முன்னதாகவே வந்திருக்குமோ? அல்லது
அடுத்த ஞாயிறு அன்று வருமோ? யாரைக் கேட்பது? ஒரு காலத்தில் ஏ.நடராசன் போன்ற
திறமைசாலிகளும் அங்கே இயக்குனர் பதவியில் இருந்தது நினைவுக்கு வந்தது.
நரசிம்மா, என் இளைய நண்பனே, எங்களை மன்னித்துவிடு. உனது
பட்டிமன்றப் பேச்சை நாங்களும் கேட்கவில்லை. நீயும் கேட்கவில்லை. இனி யார்
கேட்டால்தான் என்ன?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இரண்டே வரிகளைக் கொண்ட
திருக்குறளைப் படிக்காமல், தமிழில் மிக அதிக வரிகளைக் கொண்ட கம்பராமாயணத்தை நீ படிக்க
முன்வந்தாயே, அந்தத் துணிச்சலும், சான்றோர் நிறைந்த அவையில் உன்னாலும் பேச
முடியும் என்று நீ கொண்ட தன்னம்பிக்கையும், அதற்காகப் பயிற்சி மேற்கொண்ட உனது
முயற்சிகளும் நிச்சயம் பலரால் பேசப்படட்டும். உன் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு
வழிகாட்டுவதாக அது அமையட்டும்.
அத்துடன், இரு சக்கர வாகனத்தில், ஹெல்மட் அணியாமல் அசட்டுத் துணிச்சலோடு
பயணிப்பவர்களுக்கு அபாய அறிவிப்பாக உனது
மரணம் இருக்கட்டும். (நீ ஹெல்மட் அணிந்திருந்தாயா என்று யாரிடம் கேட்பது?)
வாழ்வின் மிகச்சிறிய பகுதியை மட்டுமே அனுபவித்து மறைந்த
உனக்கு நான் வேறெப்படிப் பிரியாவிடை தருவது? உனது ஆன்மா சாந்தி அடைவதாக என்று
இறைவனிடம் வேண்டுகிறேன்.
-இராய செல்லப்பா
சென்னை
படித்து முடித்ததும் மனம் கனத்தலையும் கண்கலங்குதலையும் தவிர்க்க இயலவில்லை.அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்
பதிலளிநீக்கு"இரு சக்கர வாகனத்தில், ஹெல்மட் அணியாமல் அசட்டுத் துணிச்சலோடு பயணிப்பவர்களுக்கு அபாய அறிவிப்பாக உனது மரணம் இருக்கட்டும்." என்ற எச்சரிக்கை எல்லோர் காதிலும் எட்ட வேண்டும்.
பதிலளிநீக்குமனதைக் கனக்க வைத்து விட்டார் அமரர் நரசிம்மன். நெகிழ்த்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குசார் ரொம்ப ஸ்வாரஸ்யமாகப் படித்து வந்தால் கடைசியில் இப்படி அழ வைத்துவிட்டீர்களே....சத்தியமாக....மனதைக் கலங்கடித்துவிட்டது...அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று வழக்கமாகச் சொல்வதுதான் ஆனால் அவரது ஆன்மா இங்குதான் சுற்றிக் கொண்டிருக்குமோ பொதிகையில் தன் குரலைக் கேட்க!?.
பதிலளிநீக்குகீதா
மிகச் சிறந்த பதிவு, எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்பது மீண்டுமொருமுறை பரிமாற பட்டுள்ளது....
பதிலளிநீக்குமிகவும் வருத்தப்படுகிறேன்...
பதிலளிநீக்குமுன்னுக்கு வந்து பெரிய சொற்பாளராகமாறுவார் என்ற ஆசை கூடவே ஓடிவந்தது. விதி ஒன்றும் கூடவே ஓடிவருவது பரிதாபம். வருத்தத்துடன்
பதிலளிநீக்குகம்பராமாயணத்தைப் பற்றி அதிகப் புரிதல் இல்லாத முப்பது வயது இளைஞரை பொதிகைத் தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் பேச தயார்படுத்தியவிதம் வியப்பளித்தது. மடிக்கணனியில் தமிழில் தட்டச்சு செய்ய உதவியது மற்ற இளைஞர்களுக்குத் தூண்டுகோலாகும். என்னதான் இருந்தாலும் செல்வன் ஏ.நரசிம்மனுக்கு நேர்ந்த அகால மரணம் நெஞ்சைக் கணக்கச் செய்துவிட்டது. இளைஞர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற செய்தியுடன் பதிவை நிறைவடைகிறது. ஏ.நரசிம்மனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமனதை வேதனையில் ஆழ்த்தி விட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஒரு விபத்து ஒருவரின் வாழ்க்கையைப் (அவரைச் சுற்றியுள்ளவர்களின்) புரட்டிப் போட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போது மனதில் துயரமும், பயமும் வருகிறது.
பதிலளிநீக்குஇருந்தாலும், 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையோடுதானே அவர், தம் வாழ்வைக் கடத்தியிருக்கிறார். என்னால் முடியாது என்று எண்ணவில்லையே. அந்த எண்ணத்தின்படி அவர் நன்றாகவே வாழ்ந்திருக்கிறார்.
என்னவோ... நீங்கள் அவர் வாழ்வில் வரணும், உதவி செய்யணும் என்று இருந்திருக்கு. பாருங்கள் விதி எப்படி வேலை செய்கிறது. அவர் தொலைக்காட்சியில் பேசும் நிகழ்ச்சியை நீங்கள் அவருடன் சேர்ந்து பார்த்திருந்தால் இருவருக்கும் ஒரு திருப்தி வந்திருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் நெல்லைதமிழன். செல்லப்பா சாரைச் சந்தித்து ராமாயணம் படிக்க வைத்து வாரியாரின் புத்தகத்தையும் அவரிடமிருந்து பெற வைத்து என்று அவரது ஆர்வமும் சாருடனான அதுவும் திடீரென்று ஏற்பட்ட முன்பின் அறிமுகமில்லாமல் என்று இந்த நிகழ்வுகள் எல்லாம் எதையோ சொல்கின்றனதான். அவருக்கு மரணம் நேரக்கூடாத வகையில் நிகழ்ந்தது என்றாலும் நல்ல ப்ராப்தி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான் இறுதித் தருணங்களில் ராமாயணம் படிக்க வைத்தது போலும் அவரது விதி.
நீக்குதுளசிதரன்
மனதைக் கலங்கடித்த நிகழ்வு சார். அவர் இறப்பதற்கு முன் உங்களைக் கண்டு கம்பராமாயணம் எல்லாம் அறிந்து வாசித்து அது அவருக்கும் கிடைத்த பாக்கியம் உங்களுக்கும் கிடைத்த புண்ணியம். ஆனால் பாவம் அவரது பேச்சை அவர் கேட்க முடியாமல் ஆனது வருத்தம்...கடைசி தருணங்களில் ராமாயணம் படித்தது அவரைப் படிக்க வைத்தது எதையோ சொல்கிறதோ?
பதிலளிநீக்குதுளசிதரன்
விடை தெரியாத வினாக்கள் பலவுண்டு..
பதிலளிநீக்குஅவற்றுள் இதுவும் ஒன்று போலிருக்கின்றது...
இறை நிழலில் இன்புற்றிருக்கட்டும்..
அவருக்கு தன்னால் பேச முடியும் என்னும் எண்ணத்தை கொடுதிருக்கிறீர்கள் அனுபவம்புதிது
பதிலளிநீக்குஎன்ன வாழ்க்கை இது. கம்பனைப் படித்த வேகத்தில் கடவுளிடம் சென்று விட்டார். தங்களது உதவி மிக அரியது. புண்ணியம் அனைத்தும் உங்களுக்கு. உழைத்துக் கற்றுக்கொண்ட ஆத்மாவுக்கும் உயர் பதவியை அளித்துவிட்டது.
பதிலளிநீக்குஅவர் ஆத்மா இன்னும் தூர்தர்ஷன் பக்கம் காத்திருக்குமோ.
ஆழ்ந்த இரங்கல் தான் சொல்ல முடியும்.
Sir, we all miss him....
பதிலளிநீக்குHe was wearing helmet at that time...but he didn't have time to have u in his life....
மிகவும் சோகமான முடிவு....பஸ்சின் அசுரவேகத்திற்கு முன்னால் மெல்லிய ஹெல்மெட் எவ்வாறு தாக்குப் பிடிக்க முடியும்?
நீக்குI was dreaming about him that one day he would reach his goal...when I introduced him to u....but never expected this...from his side...
நீக்குமனதை உருக வைத்துவிட்டீர்கள். சாதிக்க வேண்டியவரின் முடிவு வேதனையைத் தந்தது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅடடா! அந்த இளைஞரின் ஆன்மா நற்கதி அடையட்டும். அடுத்தபிறவியிலாவது அவர் ஆசைகள் நிறைவேறட்டும்.
பதிலளிநீக்குA very touching incident moves everybody.Ultimately it is He who decides. Hope he is under His eternal care.
பதிலளிநீக்குஎன்ன.... உங்களை ரொம்ப நாளா ஆளைக் காணவே இல்லையே... புத்தக வெளியீடு நடந்ததா?
பதிலளிநீக்குThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
பதிலளிநீக்குGST Tax Consultant in Chennai
GST Tax Consultant in Chennai Sales Tax
GST Tax Consultant in TNagar
GST Tax Consultants in Chennai
GST Tax Filing Auditors in Chennai
GST Tax Filing in Chennai
GST Tax returns Consultant in Bangalore
GST Tax returns Consultant in Chennai
GST Tax returns Consultant in TNagar
Import Export code registration Consultant in Chennai
முடிவு நகைச்சுவையாக இருக்கும் என்று படித்தால் இறுதியல் கண்களில் கண்ணீரை சுமக்க வைத்து விட்டீர்கள் ... அந்த ஆன்மா கம்பனை போல் வள்ளுவனை போல் இறவா புகழில் ஜீவிக்கட்டும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
பதிலளிநீக்கு