வியாழன், அக்டோபர் 03, 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி -2024

அன்பு நண்பர்களே, 

சில மாதங்கள் முன்பு, என் தாயார்  ஸ்வர்ணாம்பாள் யக்யஸ்வாமி அவர்கள் நினைவாக இலக்கிய விருதுகள் ஏற்பாடு செய்யவிருப்பதாகச் சென்னையில் ஒரு நிகழ்வில்  அறிவித்திருந்தேன்.  ஆனால்  உடனே நான் அமெரிக்கா செல்லவேண்டி நேர்ந்ததால்  மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இப்போது அத்திட்டம் உருவம் பெற்று விட்டது. 

படிபடியாகப் பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  முதல் முயற்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான  தமிழ்ச்  சிறுகதைப் போட்டி நடத்த வேண்டும் என்று முடிவாகியுள்ளது. 

இந்த ஆண்டிற்கான மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000 (ஐம்பதாயிரம்) ஆகும்.  இது, ஒரு சிறுகதைக்கு ரூ.5000 வீதம் 10 கதைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். 

என் அன்புத் தாயார் 14-9-1993 அன்று  சென்னையில் ஒருவாரம் உடல்நலம் குன்றியபின்  இயற்கை மரணம் எய்தினார். அவருடைய ஆசியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். 

********************************************************************* 

**********************************************************************


அதிகப்படியான விவரங்கள் பின்வருமாறு:

1. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு சிறுகதைகள் அனுப்பலாம். மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். கடைசித் தேதி: 30-11-2024.  

2. கூடுமானவரையில் ஒற்றுப்பிழைகளின்றி இருக்குமாறு சரிபார்த்து அனுப்பவும்.  

3. கருத்தில் புதுமை இருப்பது அனைவருக்கும் பிடிக்கும்தானே!  யார் மனதையும் புண்படுத்தாதவண்ணம் இருப்பதும் அவசியம் அல்லவா? 

4. வட்டார வழக்குச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் அதிகம் கலவாத மொழிநடையையே உலகளாவிய தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

5. உலகின் எந்தப் பகுதியிலிருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப்  புலம்பெயர்ந்தவர்களும் கலந்துகொள்ளுமாறு  அன்போடு வேண்டுகிறோம். அந்தந்தப் பகுதிகளின் சமுதாயப் பின்னணியைக் களமாகக் கொண்ட எழுத்துக்கள்  தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படுகின்றன. 

6. வயதோ, பாலினமோ  தடையில்லை.  கல்லூரி மாணவர்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மூத்த எழுத்தாளர்களும், ஏற்கெனவே பிற பரிசுகளை வென்றவர்களும் கலந்துகொண்டு எம்மைக் கௌரவப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். 

7. சிறந்த நடுவர்களைக் கொண்டு கதைத்தேர்வு நடைபெறும்.  

8. பரிசுக்குத் தேர்வுபெற்றவர்களுடன் நேரடியாகவோ, ஜூம் வழியாகவோ, மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பேட்டி  நடத்தப்பட்டு, அதன் கட்டுரையாக்கமும்  அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும். 

9. சிறுகதைத் தொகுப்பின் பத்துப் பிரதிகள் பரிசு பெற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். 

9. சிறந்த முறையில் பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெறும். சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பரிசுகள் வழங்கப்படும்.    

10. ஏதேனும் ஐயம் இருப்பின், award.swarnatrust@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். 

வலைப்பதிவு நண்பர்கள், இந்த அறிவிப்பைத் தங்கள் தளங்களில் பகிர்ந்துகொண்டு தங்கள் வாசகர்களிடம் கொண்டுசெல்ல வேண்டுகிறோம். 

(இது முழுக்க முழுக்க எனது சொந்த வருமானத்திலிருந்து நடத்தப்படுவதாகும். யாரிடமிருந்தும் நன்கொடை பெறுவதில்லை.) 

-  இராய செல்லப்பா நியூஜெர்சி

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5 (கடைசிப் பகுதி)

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5

 (குறுநாவலின் கடைசிப் பகுதி)

 -இராய செல்லப்பா 


இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்


(12)

பதினோரு மணிக்குப்  பொன் ஃபைனான்ஸின் கிளைமேலாளர்கள் வந்தபோது  தன் சூத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.

 தன்னோடு வங்கியிலிருந்து விருப்ப ய்வுபெற்று  சென்னையில் வசிக்கும் சுமார் இருநூறு பேரை முறையாகச் சந்திக்கவேண்டும்.  ஓய்வுப்பலனாக ஒவ்வொருவரும் குறைந்தது முப்பதிலிருந்து ஐம்பது லட்சம் வரை பெற்றவர்கள். ஆக மொத்தம்  60 கோடி முதல் 100 கோடி வரை அவர்களிடம் இருக்கும்.  பெரும்பாலும் அவை, மற்ற வங்கிகளில் குறைந்த வட்டிக்கு பிக்சட் டெபாசிட்டுகளாக இருக்கலாம். அதில் நாலில்  ஒருபங்கை பொன் ஃபைனான்சுக்குத் திருப்பினாலே  15 முதல் 25  கோடி சேர்ந்துவிடும். இதுதான் பொன்னியின் திட்டம். 

அடுத்த முப்பது நாட்களுக்குள் ஒவ்வொரு கிளைமேலாளரும் இவர்களிடமிருந்து மட்டும் குறைந்தது ஐந்து கோடியாவது டெபாசிட் திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தாள். இவர்களின் டெபாசிட்டுக்கு அரை சதவீதம் கூடுதல்  வட்டியும்,  ஒருவேலை அவர்களுக்கு நகைக்கடன் தேவைப்படுமானால் வட்டியில்  அரை சதவீதம் தள்ளுபடியும் கொடுப்பதாக, அதிகம் விளம்பரப்படுத்தாமல் தெரிவிக்கச் சொன்னாள். கிளைமேலாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப புதிய போனஸ் திட்டத்தையும் அறிவித்தாள்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே மாதத்தில் நாற்பது கோடி ரூபாய்போல புதிய முதலீடு கிடைத்துவிட்டது! திட்டமிட்டபடி ‘ஐயா’ வின் பணம் இப்போது அவருக்குக் கொடுக்கப்படப் போகிறது. ஆனால் அதற்குள்?

 (12)

 மலர்வண்ணன் தன் ஆபீசுக்கு வருவாரென்று வாசு கனவிலும் நினைத்ததில்லை.

 “ரொம்ப அவசரம். ‘ஐயா’ வோட பணத்தைத் திரும்பக்  கொடுத்துவிட்டீர்களா?”  என்றார் மலர்.

 “இன்னும் இல்லை, என்ன விஷயம்?” என்றான் வாசு திகைப்புடன்.

“கொடுத்துவிடாதீர்கள். அவர் எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கப்போகிறார். அதனால் அவருக்கு உதவிசெய்தால் நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிரியாகி விடுவீர்கள்.”

வாசு சிரித்தான். “இது என்ன தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா மலர்வண்ணன்? அவருடைய டெபாசிட்டை அவர் திருப்பிக் கேட்கிறார். நாங்கள் ஒரு நிதி நிறுவனம். கொடுக்காமல் இருக்க முடியுமா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் வாசு! உங்களை விடப்  பெரிய ஃபைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் கொடுக்க மறுத்துவிட்டார்களே, அது எப்படி?”

பொன்னி தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவரிடம் காட்டினாள். “அவர் பணம் அவருடைய வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. மன்னிக்கவும்” என்று கூறிவிட்டுத்   தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

"காபி குடிக்கிறீர்களா மலர்வண்ணன்? இங்கு உங்கள் தோட்டத்து டீ கிடைப்பதில்லை” என்று சிரித்தான் வாசு. கறுப்புப்பணத்தைக் கையாளும் பினாமிக்கு எவ்வளவு துரோக புத்தி!

ஆவேசத்துடன் எழுந்த மலர்வண்ணன், “உங்கள் கம்பெனியை உண்டு இல்லை என்று ஆக்குகிறேனா இல்லையா பாருங்கள்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.

வாசுவும் பொன்னியும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் கம்பெனியில் எந்த விதமான குளறுபடிகளும் கிடையாது. நகைக் கடன்களிலும் எந்தக் குறைபாடும் கிடையாது என்று தணிக்கை அறிக்கையும் உள்ளது. டெபாசிட்டர்களுக்கு உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது கிடையாது. லாப நஷ்டக் கணக்கிலும் ஒரு ரூபாய் கூட பொய்க்கணக்கு எழுதியது கிடையாது.

 “ஆனாலும் நாம் இப்போது பயப்படத்தான் வேண்டும்” என்றாள் பொன்னி. “நாம் இருவரும் சாதாரணக் குடும்பங்களில் இருந்து கிளம்பி வந்து, இந்தக் கம்பெனியை உருவாக்கி நல்ல பெயரோடு வளர்த்திருக்கிறோம். இவர்கள் நினைத்தால் இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக நமக்கு எத்தனையோ வழிகளில் கெட்ட  பெயரை உண்டாக்க முடியும். அதனால் …”

“அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அதற்கு என்னுடைய பழைய வங்கியின் சேர்மனை உடனே சந்திக்கவேண்டும்.  அவரிடம்  பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் அவரிடம் அப்பாயிண்மெண்ட்  ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றாள் பொன்னி. 

பிறகு தன் மயிலாப்பூர் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வியை அழைத்து “உடனே கிளம்பு. அந்த எடிட்டரிடம் பேசு. நம்மைப்பற்றித் தவறான தகவல் வராமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்” என்று அவளிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தாள். 

(13)

 பிரபல பொருளாதார நாளேட்டின் விருது பொன் ஃபைனான்சுக்குக் கிடைத்தபோது முதலில் வந்த வாழ்த்துச்செய்தியே பொன்னியின் பழைய வங்கியின் சேர்மனிடம் இருந்துதான். “இன்னும் சில வாரங்களில் உங்களைச்  சந்திக்க விரும்புகிறேன்” என்றும் சொன்னார். அந்தச் சந்திப்புதான் இன்று  நிகழப்போகிறது.

“வாங்க வாங்க மிஸ் பொன்னி! மிஸ்டர் வாசு!” என்று எழுந்து நின்று வரவேற்றார் பிரதீப்குமார். சேர்மன்.  “எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது எங்களுக்கு மிகுந்த பெருமை யளிக்கிறது” என்று பாராட்டினார்.

 “ஒரு காலத்தில் நகைக்கடன் கொடுக்கும் வங்கிகள் என்றாலே ரிசர்வ் பேங்க்கில் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இப்போது அதையே  வீட்டுக்கடன், வாகனக்கடன் மாதிரி ஒரு முக்கியமான கடன் துறையாக அங்கீகரித்துவிட்டார்கள். அதற்கான காரணங்களில் உங்கள் அணுகுமுறையும் ஒன்று” என்றார் அவர்.

 பொன்னியும் வாசுவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு பொன்னி தன் கையிலிருந்த ஃபைலை சேர்மனிடம் கொடுத்தாள். அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தங்களைப் பற்றி அவதூறு கிளப்ப முற்படுவதை அதில் சுட்டிக்காட்டி இருந்தாள்.

 சேர்மன் அதை படித்துவிட்டு கலகலவென்று சிரித்தார்.  “நாங்கள் மகாராஷ்டிராவில் பார்க்காத அரசியல் தலையீடா!  நமக்குள்ள கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் எந்த அவதூறுக்கும் அஞ்சவேண்டியதில்லை. எதற்கும் உங்களுக்கு விருது கொடுத்த பத்திரிகையின் காதில் இந்த விஷயத்தைச் சொல்லிவைப்பது நல்லது” என்றார்.

“எங்கள் சார்பாக தமிழ்ச்செல்வி அந்த எடிட்டரிடம் இப்போது அதைத்தான்  பேசிக்கொண்டிருப்பாள்” என்றாள் பொன்னி.

 “சரி, இப்போது இந்தக் கடிதத்தைப் படியுங்கள். இது சுவாரஸ்யமானது” என்று அவளிடம்  ஒரு கடிதத்தை நீட்டினார் சேர்மன். அதைப் படித்த பொன்னியும் வாசுவும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போனார்கள்.

 “பொன்னி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டு உற்சாகமடைகிறோம். நாங்களே நகைக்கடன் வழங்கும் துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக இருந்தோம். ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் நிறுவனத்தில் முதல் தவணையாக 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய விரும்புகிறோம். இது உங்களுக்கு ஏற்புடையதென்றால் எங்கள்  எக்சிகியூடிவ் டைரக்டரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்றது அக்கடிதம்.

 பொன்னி உற்சாக மிகுதியால் எழுந்து நின்றாள். “உங்கள் ஆஃபரை  ‘இன்-ப்ரின்சிபிள்’ ஆக இப்போதே ஒப்புக்கொள்கிறோம். அதிகாரபூர்வ பதிலை  நாளை அனுப்புகிறோம்” என்றாள் வாசுவைப் பார்த்துக்கொண்டே.

 (14)

 மறுநாள் இந்தியாவின் எல்லாப் பொருளாதார நாளேடுகளிலும்  பொன்னி-வாசுவின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் வெளிவந்தன. “இந்தியாவின் பிரபல தனியார் வங்கி, பொன்னி ஃபைனான்சில் 500 கோடி முதலீடு” என்ற தலைப்பில் மேற்படி வங்கியின் முன்னாள் ஊழியரான பொன்னி, எவ்வாறு விருப்ப ஒய்வு பெற்றபின் ஒரு தங்கநகைக் கடன் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார் என்று மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டன. 

 இவர்களுக்கு விருது கொடுத்த நாளேடு மட்டும், ‘அரசியல் தலையீடு இல்லாதவரை இம்மாதிரி புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நன்றாக வளரமுடியும்’ என்று பொடிவைத்து எழுதியது.

அடுத்த சில வாரங்களில் அந்த வங்கி வேகமாகச் செயல்பட்டது. தாங்கள் செய்யப்போகும் 500 கோடி முதலீட்டுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

முதல் நிபந்தனை, வாசுவிடமிருந்து பொன்னி, அந்த நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்கவேண்டும். இரண்டாவது நிபந்தனை, வாசு, ராஜினாமா செய்துவிட்டு, மும்பையில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேர்ந்து, வட இந்தியாவை இலக்காக வைத்து, தங்கநகைக் கடன் நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் சேர்மனாக இருக்கவேண்டும்.

 இரண்டாவது நிபந்தனை சாந்திக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரண்யாவையும் பாலுவையும் அழைத்துக்கொண்டு மும்பைக்குச் செல்வதென்று அவள் மனதளவில் தயாராகிவிட்டாள். 

“நல்ல பள்ளிக்கூடமாகப் பாருங்கள். வீடும் பக்கத்திலேயே இருந்தால் நல்லது” என்று நாணத்தோடு புன்னகைத்தாள் சாந்தி.

“வேறு வழி?” என்று அவளுடைய வலதுகரத்தைப் பற்றினான் வாசு.

“என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றாள் பொன்னி, கண்களில் ஆனந்தக்கண்ணீர் மின்ன.

அப்போது அவளுடைய அலைபேசி ஒலித்தது. ‘ஐயா’வின் குரல்!

“வணக்கம் சார்! நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். உங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று மலர்ச்சியோடு சொன்னாள் பொன்னி. “அல்லது மலர்வண்ணனை அனுப்பிவைக்கிறீர்களா?”

“அந்த துரோகியின் பெயரைச் சொல்லாதீர்கள்! நானே வருகிறேன்” என்று போனை வைத்தார் ‘ஐயா.’

வாசுவைப்பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள் பொன்னி.

 **** முற்றும் ****    

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 4

 வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 4

(குறுநாவல்)

  -இராய செல்லப்பா 


  இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 3  " படிக்க இங்கே சொடுக்கவும்.

(8)


நாட்கள் வேகமாக நகர்ந்தன. 
ஐயா வாக்களித்தபடி முப்பது கோடி ரூபாய் முதலீடு வந்துசேர்ந்தது. பொன் ஃபைனான்ஸ் இப்போது பத்துக் கிளைகளைக் கொண்டதாக வளர்ந்தது. தங்கள் பழைய வங்கியின் செல்வாக்கான வாடிக்கையாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கொண்டுவந்துவிட்டார்கள் கிளை மேலாளர்கள். அதனால் டெபாசிட் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தது. மீதமுள்ள கையிருப்பை எப்படி லாபகரமாகப் பயன்படுத்துவது என்றுதான் வாசு யோசிக்கவேண்டி இருந்தது.

மலர்வண்ணன் அடிக்கடி போன்செய்து மேற்கொண்டு நிதி வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் வாசு உறுதியாக மறுத்துவிட்டான். அரசியல்வாதிகளின் தொடர்பை ஓரளவுக்குமேல் வளர்ப்பது கம்பெனியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நினைத்தான்.

இதைப்போல விளம்பரம் செய்தார்களா பொன்னி பைனான்ஸ்?


ஆனால்,  மே - ஜூன் கல்வி மாதங்கள் வந்தபோது கடனுக்காகக் கூட்டம் அலைமோதியது. எல்கேஜி வகுப்புக்கே ஐம்பதாயிரம், லட்சம் என்று கட்டணம் வாங்கும்போது, மத்தியதர குடும்பத்தினரின் முதல் புகலிடம் நகைக்கடன் தானே! மக்களிடம் இவ்வளவு தங்கம் இருக்கிறதா என்று மலைக்கும்  அளவுக்கு தினந்தோறும் நகைக்கடனுக்கு கிராக்கி ஏற்பட்டது.   கையிருப்பு மூலதனம் வேகமாகக் குறைந்து நிதி நிலைமை நெருக்கடிக்கு உள்ளானது. சில தினங்களில் ஆடிப்போய்விட்டான் வாசு. அவன் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.

 பொன்னிதான் அவனுக்கு தைரியம் கொடுத்தாள். தன் பழைய வங்கியிடம் பேசினாள்.  உரிய ஆவணங்களையும் தங்கள் வரவுசெலவு கணக்குகளையும், எதிர்காலத் திட்டங்களையும் காட்டினாள். அதுவரை அடைந்த லாபத்தையும், எதிர்காலத்தில் வரக்கூடிய லாபத்தையும்  விளக்கிக் கூறினாள். தங்கள் கம்பெனிக்கு, ரிசர்வ் பேங்கின் விதிகளுக்கு உட்பட்டு, ஓவர்டிராப்ட் என்னும் தொடர்-கடன் கேட்டாள் பொன்னி.

இருபது வருடங்களுக்குமேல் தங்கள் வங்கியில் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றிய அவளையும் அவளுடைய கம்பெனியின் ஆஸ்திகளையும் நம்பிக் கடன் கொடுப்பதில் வங்கிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஐந்துகோடி கிடைத்தது. 

 தீபாவளி சீசன் வரையில் இனி கவலையில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது. எனவே, முன்பே நினைத்தபடி சாந்தியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்குச் சுற்றுப்பயணம் போனாள் பொன்னி. அவர்கள் மூவருக்கும் அதுதான் முதல் ஊட்டிப் பயணம்.

 சரண்யாவுக்கு குஷியோ குஷி. பாலுவுக்கோ அந்தக் குளிர் அற்புதமாக இருந்தது. “ஒரு மாதம் இங்கேயே இருக்கலாமா பெரியம்மா?” என்று ஏக்கத்துடன் கேட்டான். “ஆசை, ஆசை” என்று அவனைக் கிண்டல் செய்தாள் சரண்யா. “பள்ளிக்கூடம் போகாமல் தப்பிக்கப் பார்க்கிறான்!” என்று அவன் கன்னத்தில் மெதுவாகக் கிள்ளினாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பொன்னிக்கு வாழ்வில் தான் இழந்தது ஏராளம் என்று புலப்பட்டது. ஹும், காலம் கடந்துவிட்டது…. சாந்தியின் குழந்தைகள்தான் இனி தன் குழந்தைகள். 

 சாந்திக்கும் தான் இழந்துவிட்ட வாழ்க்கையைப் பற்றிய நினைவலைகள் எழுந்தன. சில வருடங்களே வாழ்ந்து மறைந்த கணவரின் முகம் முன்பெல்லாம்  கனவில் வருவதுண்டு. ஆனால் அதன்  பின்னணியில்  இன்ப நினைவு ஒன்றுகூட இல்லை. வறுமை, நோய், தொழிலில்  தோல்வி, மீண்டும் அதிக வறுமை, அடிக்கடி வீடு மாறல், பள்ளி மாறல். …இப்படித்தான்.

பொன் ஃபைனான்ஸ் தொடங்கியபின் வாசு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தன்னிடம் தனியாக ஏதாவது பேசமாட்டானா என்று மனம் ஏங்கும். நூலிழையில் தவறிப்போன பந்தம் தான் என்றாலும் இப்போது தொடர நினைப்பது  சரியா என்று அதே மனம் கேட்கவும் செய்யும். இரண்டு வளர்ந்த குழந்தைகளுடன் ஒரு கைம்பெண்ணை நேசிக்க, மணமாகாத ஒருவனால் முடியுமா என்று இன்னொரு பெரிய கேள்வியும் மனதில் விஸ்வரூபம் எடுக்கும். அதற்குப் பதில் சொல்லத்  தெரியாமல் விசும்புவாள்.

 ஊட்டிக் குளிரில் வாசுவின் முகம் அவளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்றிச் சித்திரவதை செய்தது. அதே சமயம் பொன்னியின் நிலையையும் எண்ணினாள். வாசுவும் அவளும் நெருக்கமாகப் பழகும் நிலையில் ஒருவேளை அவனுக்குப் பொன்னிமீது பற்றுதல் வந்திருக்குமோ என்றும் மனதின் ஓரத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் பொன்னியின் வயதின் மீதும்  மனஉறுதி மீதும் அவளுக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை.

மனதை இறுக்கி மூடிக்கொண்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள் சாந்தி.

(9)

அந்த ஆண்டு சிறப்பாக இயங்கும் தனியார் நிதி நிறுவங்களுக்கான விருதை  ‘பொன் ஃபைனான்சு’க்கு வழங்குவதாகப் பிரபல பொருளாதார நாளேடு அறிவித்தபோது, தான் பிறந்த பலனை எய்தியதாகவே கருதினாள்  பொன்னி.  வாசு என்ற ஒருவனைச் சந்திக்காமல் போயிருந்தால் இந்தப் பெருமை கிடைத்திருக்குமா என்று யோசித்தாள். கண்ணியமானவன். நேர்மையானவன். விடாமுயற்சி கொண்டவன்.

“வாசு, இந்த வெற்றிக்கு முழுமுதல் காரணம் நீங்கள்தான்” என்று பாராட்டினாள். 

“நிச்சயமாக இல்லை. அனுபவமும், மன உறுதியும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கையும் கொண்ட நீங்கள்தான் காரணம்” என்று அவளைப் பாராட்டினான் வாசு. 

விருது வழங்கும் விழா முடிந்து அன்றிரவு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்தின்போது ‘ஐயா’வை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

 அறுபதைக் கடந்தவர். ஆளும்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவர். பலமுறை முயன்றும் இன்னும் எம்எல்ஏ சீட் கிடைக்கவில்லை. என்றாலும் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. பல நிதி நிறுவனங்களின் சிஈஓ-க்கள் அவரைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

 மலர்வண்ணனும் இருந்தார். வாசுவையும் பொன்னியையும் ‘ஐயா’வுக்கு அறிமுகப்படுத்தினார். “வணக்கம்மா” என்று முதலில் பொன்னியை நெருங்கிப் பேசியவர், பிறகே வாசுவுக்குக் கை கொடுத்தார். கொஞ்சம் ஆரஞ்சு ரசம் மட்டும் அருந்திவிட்டு, “இன்னொரு நிகழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் மலரிடம் கேளுங்கள். செய்வார்” என்று கிளம்பினார். 

அன்று மாலை தொலைக்காட்சியில் ‘ஐயா’வின் மாவட்டத்தில் நடக்கவிருந்த ஓர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.  சில நிமிடங்களில் மலர்வண்ணனிடமிருந்து வாசுவுக்கு போன் வந்தது. “ஐயா உங்களிடம் பேசவேண்டுமாம். தூங்கிவிடாதீர்கள்” என்றார். வாசு விளக்கைப் போட்டுவிட்டுக் காத்திருந்தான்.

‘ஐயா’வின் போன் வந்தபோது நள்ளிரவு கடந்துவிட்டது.  அது வாசுவின் நிம்மதியைச் சீரழித்து நித்திரையைச் சீர்குலைத்தது. உடனே பொன்னியிடம் பேசத்  துடித்தான். ஆனால் அவளாவது கொஞ்சம் தூங்கட்டுமே என்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான். 

(10) 

விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் பொன்னியின் வீட்டு அழைப்புமணியை அழுத்தினான் வாசு. 

வழக்கமாகத் தரைத்தளத்தில் படுத்திருக்கும்  சாந்திதான் எழுந்து வாசல் கதவைத் திறப்பாள். இன்றோ அவளும் குழந்தைகளும் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பொன்னிதான் திறந்தாள்.

நிச்சயம் பெரிய சிக்கலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் வாசு இவ்வளவு காலையில் ஏன் வரவேண்டும்?

‘உள்ளே வாருங்கள்’ என்று சைகையாலேயே அவனை அழைத்து உட்காரவைத்துவிட்டு மாடிக்குப் போனாள் பொன்னி. சிலநிமிடம் கழித்து சூடான காபியுடன் இறங்கிவந்தாள்.

“முதலில் காபி, பிறகு பேச்சு” என்றாள்.

 பொன்னியின் அருகாமையே தனக்கு பலத்தைக் கொடுப்பதாக உணர்ந்தான் வாசு. காபியை மெல்லக் குடித்தான். அவளும் குடிக்கட்டும் என்று காத்திருந்தான். பிறகு நடந்ததைச் சொன்னான்.

‘ஐயா’ கட்சி மாறப்போகிறாராம். வரும் இடைத்தேர்தலில் இன்னொரு கட்சி சார்பில் நிற்கப் போகிறாராம். தேர்தல் செலவுக்குப் பணம் வேண்டுமாம். தான் பொன் ஃபைனான்சில் போட்ட முப்பது கோடியும் உடனே வேண்டுமாம்.

அது மட்டுமன்றி, தன் சொத்துக்களை அடமானமாக வைத்துக்கொண்டு ஐம்பது கோடி உடனடியாகத் தர முடியுமா என்றும் கேட்டாராம்.

“பணத்துக்கு எங்கே போவது?” என்று திகைப்புடன் கேட்டான் வாசு.

இப்படியொரு சூழல் ஏற்படும் என்று பொன்னியால் நம்பமுடியவில்லை. ஆனால் ஏற்பட்டுவிட்டதே!

“ஐயா முக்கியமான புள்ளி. அவர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரட்டும். போட்ட டெபாசிட்டை அவர் கேட்கும்போது கொடுத்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் கம்பெனியின் மானம், மரியாதை  போய்விடும். அப்புறம் இழுத்து மூடவேண்டியதுதான்” என்றான் வாசு. 

பொன்னிக்குப் புரிந்தது. “இதற்கா இவ்வளவு சோகம்?  ரொம்ப சிம்பிளான சொல்யூஷன் இருக்கிறதே” என்றாள் புன்முறுவலுடன்.

வாசு ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஆமாம்! முப்பது கோடி ரூபாய் உடனே டெபாசிட் செய்யக்கூடிய புதிய ஆசாமி ஒருவரை நாம் கண்டுபிடிக்கவேண்டும். அவ்வளவுதானே” என்று இன்னும் பலமாகச் சிரித்தாள் அவள்.

 “வெறுத்துப்போய் நிற்கிறேன். விளையாடுகிறீர்களே!”

பொன்னி எழுந்து நின்றாள். “மன்னிக்கவேண்டும் வாசு! நமது பிரச்சினை முப்பது கோடி ரூபாய் வேண்டும் என்பதுதானே! அதை இப்படிப் பாருங்களேன் -  ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் போடும் முப்பது பேர் வேண்டும்; அல்லது, ஆளுக்கு 50 லட்சம் போடும் 60 பேர் வேண்டும்; அல்லது, ஆளுக்கு 25 லட்சம் போடும் 120 பேர் வேண்டும்- சரிதானே?”

வாசுவுக்கு அவளுடைய பகுத்தறியும் திறன் பிரமிப்பூட்டியது. மிகப் பெரிய சிக்கலை எவ்வளவு எளிதாக உடைத்துப் போடுகிறாள்!  அவனும் எழுந்து நின்றான்.

“அதாவது அந்த 120 பேரைக் கண்டுபிடித்துவிட்டால் நம் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? ஆனால் எப்படி அவர்களை உடனடியாகக் கண்டுபிடிப்பது?”

பொன்னி மீண்டும் சிரித்தாள். “சென்னை நகரின் ஜனத்தொகை எத்தனை லட்சம்? அதில் வெறும் 120 பேரை உங்களால் உடனே கண்டுபிடிக்க முடியாதா?”

வாசு வெறுப்பின் உச்சிக்கே போய்விட்டான். “பேசுவது சுலபம் பொன்னி! காரியம் கைகூட வேண்டாமா?”

“கூட வைக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் இரண்டுமாதம் இருக்கிறது.  முதலில் ஐயாவிடம் பேசுங்கள். வாரம் ஐந்து கோடி வீதம் கொடுப்பதாகச் சொல்லுங்கள். அவரால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அத்துடன் ஆளும்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போவதால் அவருடைய செல்வாக்கு இனிமேல் பூஜ்யம்தான்” என்று உறுதியான குரலில் சொன்னாள் பொன்னி.

“இன்று காலை பதினோரு மணிக்கு நம் கிளைமேலாளர்களை அழைத்துப் பேசலாம். என்னிடம் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது பலிக்காமல் போகாது”  என்று அவனை சஸ்பென்ஸில் இருக்கவைத்துவிட்டு மீண்டும் மாடிக்குப் போனாள்.

(11)

அரைமணி கழித்து இறங்கிவந்தவள், பொன்னி இல்லை, சாந்தி! கையில் இட்டிலி, சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி இருந்தன. சரண்யா ஒரு பெரிய எவர்சில்வர் தட்டையும், பாலு ஒரு பெரிய எவர்சில்வர் தம்ளரில் குடிநீரும் கொண்டுவந்தார்கள்.

“நான் குளிக்காமல் சாப்பிடுவதில்லையே!” என்று தயங்கினான் வாசு.

“நாங்களும் குளிக்காமல் தானே பரிமாறுகிறோம்” என்று சிரித்தாள் சாந்தி. குழந்தைகளும் சிரித்தார்கள். அந்தக் கூட்டுச் சிரிப்பில் தன் கவலையெல்லாம் பறந்துவிட்டதுபோல் உணர்ந்தான் வாசு.

நேரம் ஆயிற்று. பொன்னி இறங்கிவருவதாகத் தெரியவில்லை. சாந்தி தான்  மீண்டும் வந்தாள்,  காபியுடன்.

“வந்தவுடன் காபி குடித்துவிட்டேனே” என்று தயங்கினான் வாசு.  

“இது நான் போட்ட காபி. வேண்டுமா வேண்டாமா?” என்று சற்றே அதட்டலாகக் கேட்டாள் சாந்தி. அந்த அதட்டல் அவனுக்குப் புதுமையாக இருந்தது.

“வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றான் விளையாட்டாக.

“நானே குடித்துவிடுவேன்” என்று சிரித்தாள்.

“சரி, வேண்டும் என்றால்?”

ஒருகணம் அவனை ஆழமாகப் பார்த்த சாந்தி, “பாதி மட்டும்தான் குடிப்பேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள். அவள் முகத்தில் நாணம் பூத்திருந்தது.

(தொடரும்) 

(அடுத்த பகுதியுடன் முடிவடையும்)



இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 5  " படிக்க இங்கே சொடுக்கவும்.

புதன், ஜனவரி 31, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3

 வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3 

(குறுநாவல்)

-இராய செல்லப்பா

 இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 2  " படிக்க இங்கே சொடுக்கவும்.

(5)

அன்று மாலை வங்கியின் குவார்ட்டர்ஸைக்  காலிசெய்துவிட்டுத் தன்  வீட்டுக்கே வந்துவிட்டாள் பொன்னி. சரண்யாவும் பாலுவும் “பெரியம்மா” என்று ஆசையோடு கட்டிக்கொண்டார்கள். சாந்தி வடை பாயசத்துடன் விருந்து தயாரித்தாள்.  


“வாசுவையும் அழைக்கலாமா சாந்தி?” என்று பொன்னி கேட்டபோது, நாணத்தை  மறைத்தவளாக, “உம்” என்றாள் சாந்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். 

 வாசு புதிய காரில் வந்தான். “இது உங்களுக்கான கார், பொன்னி” என்று புன்முறுவல் பூத்தான். காரைக் கண்டதும் குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! 

 பகலுணவு முடிந்ததும் பொன்னியும் வாசுவும் மாடிக்குச் சென்றார்கள். தான் தொடங்கப்போகும் புதிய கம்பெனிக்கான ‘ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’டை அவளுக்கு விரிவாகச் சொன்னான் வாசு.  ‘ரிசர்வ் பேங்க் பர்மிஷன் வாங்கிவிட்டேன்’ என்று சான்றிதழைக் காட்டினான். மற்றும் பல பேப்பர்களில்  

அவளிடம் கையெழுத்து வாங்கினான்.

எங்கெங்கு கிளைகள் திறக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். முதல் மாதம் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, அண்ணா நகர் ஆகிய நான்கு கிளைகள்.  அதற்கு மேலாளர்களாகத் தன்னுடன் ஏற்கெனவே பணிபுரிந்து இப்போது வீஆர்எஸ் வாங்கிய நான்குபேரைத் தேர்ந்தெடுத்தாள் பொன்னி. அவர்களும் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்கள்.

 மயிலாப்பூர் கிளைக்குத் தமிழ்ச்செல்வி,  தி.நகருக்கு லலிதா, வேளச்சேரிக்கு  மகேஸ்வரன்,  அண்ணா நகருக்கு கோவிந்தராஜன்.

 நகை மதிப்பீடு செய்பவர்களுக்குத்தான் மிகவும் டிமாண்ட். ஒரே ஒருவர்தான் கிடைத்தார். பெயர் நவநீத கிருஷ்ணன். பொன்னியின் வங்கியில் ஐந்தாண்டு அனுபவமுள்ளவர். நேர்மையின் மறுவடிவம். “பொண்ணுக்குக்  கல்யாணம் பாத்துக்கிட்டிருக்கேன். அதனால ஃபீஸ் கொஞ்சம் சேர்த்துக் குடுங்கம்மா” என்றார் பணிவாக.

அலுவலகத்திற்கு ஏற்கெனவே அடையாறில் இடம் பார்த்திருந்தான் வாசு.

“கம்பெனியின் பெயர் - பொன் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் “ என்றான்.  “இதில் பொன் என்பது தங்கத்தைக் குறிப்பது; உங்கள் பெயரை அல்ல” என்று சிரித்தான். அவனது குறும்பை ரசித்தவாறே பொன்னியும் சேர்ந்து சிரித்தாள். கம்பெனி தொடங்குவதற்கு நல்லநாள் பார்த்து முடிவுசெய்தபின் வாசு கிளம்பினான்.

(6)

சென்னைக்கு இந்தியாவின் தங்க நகரம் என்று பெயர் உண்டு. தங்க நகைகளின் சில்லறை விற்பனை இங்குதான் அதிகம். அதிலும் ‘அட்சய திருதியை’ என்ற பண்டிகை நாளில்  குடும்பப் பெண்களை,  ஒரு கிராம் தங்கமாவது வாங்க வைத்துவிடும் சாதனையைப் பல்லாண்டுகளாக  வர்த்தகர்களும் சோதிடர்களும் பத்திரிகைகளும் இணைந்து நிகழ்த்தியிருந்தார்கள்.

 அதன் ஒரு பகுதியாக, பழைய தங்கத்தின் பேரில் கடன் வாங்கிப் புதிய தங்கம் வாங்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது. அதையே தங்கள் கம்பெனியின் விளம்பர உத்தியாகப் பயன்படுத்திக்கொண்டான் வாசு.  

 எப்படியென்றால், தங்கள் நான்கு கிளைகளையும் அட்சய திருதியைக்கு முன்பே திறந்துவிட்டான். நகரத்தின் முக்கிய நகைக்கடைகளுடன் பேசி,  அவர்களுடைய விளம்பரத்தில்  “நகைக்கடன் வேண்டுமா? பொன் ஃபைனான்ஸை அணுகுங்கள்” என்ற வாசகமுள்ள சிறு கட்டம் இடம்பெறுமாறு ஒப்பந்தம் செய்துகொண்டான். நகைக்கடன் பெறுபவர்களுக்கு, மேற்படிக் கடைகளின் ‘டோக்கன்’கள் விநியோகிக்கப்பட்டன. அந்த டோக்கனைக் காட்டினால் அட்சய திருதியை அன்று கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

 இந்த உத்தியால் ‘பொன் ஃபைனான்ஸ்’ கம்பெனியின் நகைக்கடன் வழங்கும் வேகம் அதிகரித்தது. சென்னையிலுள்ள நகைக்கடைகளுக்கும் விற்பனை அதிகரித்தது.

அதே சமயம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் செல்வாக்குள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு விளம்பரமும் செய்தான் வாசு. இந்தப் பொறுப்பைத் தானே ஏற்று நடத்தினாள் பொன்னி. குறுகிய காலத்தில் பொன் ஃபைனான்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.

 மூன்று மாதம் கழித்து, கம்பெனியின் வரவு செலவு கணக்கை ஆடிட் செய்தபோது, தாங்கள் திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதைக் கண்டு வாசுவும் பொன்னியும் திருப்தியடைந்தார்கள்.

 ஆனால் கம்பெனியின் அஸ்திவாரமே, சரியான தரமுள்ள தங்கம்தான் என்பதால், நகை மதிப்பீட்டாளரின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். அதற்காக ஒரு துப்பறிவாளரையும் நியமித்தார்கள்.

மேலும், ஒரு கிளையில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை இன்னொரு கிளையின் மேலாளரைக் கொண்டு முன்னறிவிப்பின்றி ஆடிட் செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள் பொன்னி.  அடகுவைக்கப்பட்ட நகைகள் எல்லாவற்றையும் தலைமை அலுவலகத்தில்,  பலகோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்  உள்ள விசேஷமான பெட்டகத்தில் வைத்து அதற்கென்றே ஒரு தரமான பாதுகாப்பு ஏஜென்சியின் காவலர்களை 24 மணிநேரமும் நியமித்தாள். விரைவில் ரிசர்வ் பேங்க் அதிகாரிகளும் வந்து ஆவணங்களையும் நடைமுறைகளையும் சரிபார்த்து ‘திருப்திகரம்’ என்று தங்கள் ஆடிட் ரிப்போர்ட்டை வழங்கினார்கள்.

 பொன்னிக்குத் தன் வாழ்நாளின் வசந்தகாலம் இதுதான் என்று தோன்றியது. இத்தனை ஆண்டுகள் வங்கிப் பணியில் கடிகாரத்தின் அடிமையாக இருந்தவளுக்கு இப்போதுதான் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்துவதிலுள்ள அதிகாரமும் கௌரவமும் பிடிபட ஆரம்பித்தன. சமூகத்தில் அவளுக்கென்று புதிய அந்தஸ்து ஏற்பட்டது. அதில் முக்கியப் பங்கு வாசுவுடையது என்பதை அவள் மனம் மறுக்கவில்லை.  

“இரண்டு நாள் ஊட்டிக்குப் போய் ஓய்வெடுக்கலாமா என்று பார்க்கிறேன்” என்றான் வாசு. பொன்னி பொய்க் கோபத்துடன் எரிந்து விழுந்தாள்.

“மிஸ்டர் வாசு! நகைக் கடன் வழங்கும் கேரளாக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு கிளைகளை வைத்திருக்கிறார்கள். நீங்களோ நான்கு கிளைகளுக்கே ஓய்வெடுக்கவேண்டும் என்கிறீர்களே! ரொம்பத்தான் உழைத்துவிட்டீர்கள்!”

வாசு எழுந்து அவளருகில் வந்தான். “சிஈஓ  மேடம்! நான் ஓய்வு என்றது சும்மா! உண்மையான காரணம் இதுதான்” என்று ஒரு விஷயத்தை அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாகக் கூறினான். “இது நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா?” 

சனிக்கிழமை காலை அவர்கள் ஊட்டியில் இருந்தார்கள்.

சாந்தியிடமிருந்து போன் வந்தது. “ஊட்டி ரொம்பக் குளிராக இருக்கிறதா?” என்று கேட்டாள் சாந்தி.  டவர் சரியாகக் கிடைக்காததால் பொன்னியின் பதில் அவளுக்குத்  தெளிவாகக் கேட்கவில்லை. “ஸ்பீக்கர் போட்டுப் பேசு” என்றாள்.

பொன்னி ஸ்பீக்கரில் பேசினாள். “குளிர் எனக்கு ஆகாதுதான், என்ன செய்வது!  தொழில் என்று வந்துவிட்டால் வாய்ப்பு வரும்போது உடனே பற்றிக்கொள்ள வேண்டுமல்லவா என்கிறார் வாசு! அடுத்த முறை ஊட்டி வரும்போது நீயும் குழந்தைகளும் கட்டாயம் வரவேண்டும்” என்றாள்.

“ஆமாம் அக்கா! நீயே பார்த்து ஏற்பாடு செய்!” என்ற சாந்தி, “அது சரி, அந்த ஆள் எந்த ஓட்டலில் தங்கி இருக்கிறார்?” என்று கேட்டாள். அவள் குரலில் பொதிந்திருந்த ஆர்வம்  பொன்னிக்குப் புரிந்தது. அது வாசுவுக்கும் கேட்டது. ‘சாந்தியின் குரல்தானே?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

“யார், வாசுவைக் கேட்கிறாயா சாந்தி? இதே ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்” என்றாள் பொன்னி.

“அப்படியா? நீ வேறு ரூம், அவர் வேறு ரூம் தானே?”

“இல்லையே, இருவரும் ஒரே ரூமில் தான் இருக்கிறோம்” என்றான் வாசு ஸ்பீக்கரின் அருகில் வந்து.

"என்னது?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் சாந்தி. அடுத்த நிமிடம் அவள் கையிலிருந்து போன் கீழே விழும் ஓசை பலமாகக் கேட்டது பொன்னிக்கு.  

(7)

பாரம்பரியமிக்க தேயிலைத் தோட்டம் அது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவரின் பொறுப்பில் இருந்து, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பல கைகள் மாறி, இப்போது பிரபல அரசியல்வாதியிடம் வந்திருக்கிறது. அவருடைய பினாமியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் வாசுவும் பொன்னியும்.

“வாங்க சார், வாங்கம்மா, வணக்கம்” என்று வரவேற்றார் மலர்வண்ணன். ஊட்டியின் காலைப் பொழுதின் குளுமை பொன்னி அணிந்திருந்த  ஸ்வெட்டரை ஊடுருவி அவள் மனதுவரை பாய்ந்தது. “ஓ, எவ்ளோ ஜில்லுன்னு இருக்கு” என்று குழந்தைபோல் குதூகலித்தாள். அதே சமயம், சரண்யாவும் பாலுவும் இருந்தால் எப்படி அனுபவித்து ரசிப்பார்கள் என்ற எண்ணமும் தோன்றியது. அடுத்தமுறை அவர்களோடு குடும்பமாக வரவேண்டும்.

உரிமையாளர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த விசேஷமான காட்டேஜில் வெதுவெதுப்பு ஊட்டப்பட்ட அறையில் வசதியான இருக்கைகளில் அவர்கள்     

உட்கார்ந்துகொண்டார்கள். ஆவிபறக்கும் தேநீர் வந்தது.

“இது எங்கள் தோட்டத்தில் விளைந்த தேநீர்” என்று பெருமையாகச் சொன்னார் மலர்வண்ணன். “ஆவணப்படி நான்தான் இத்தோட்டத்தின் உரிமையாளன். ஆனால் உண்மையில் இதன் சொந்தக்காரர் இவர்தான்” என்று சுவரில் மாட்டியிருந்த ஓர் பிரபல அரசியல் தலைவரின் புகைப்படத்தைக் காட்டினார். ‘இவரா?’ என்று திகைத்தாள் பொன்னி. எம்எல்ஏ கூட ல்லாத ஒருவரிடம் இவ்வளவு சொத்தா!

அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவராக, “இதைப்போல நாற்பது மடங்கு காபித் தோட்டமும் அவருக்கு இருக்கிறது,  கர்நாடகாவில்!” என்று சிரித்தார் மலர்வண்ணன். 

அவர்களின் அலைபேசிகளை வாங்கி இன்னொரு அறையில் பீரோவில் வைத்துப் பூட்டினார் மலர்வண்ணன். “ஒரு பாதுகாப்புக்காகத்தான்” என்று சிரித்தார். மூவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டார்கள்.

“மிஸ்டர் வாசு! உங்கள் பொன் ஃபைனான்ஸ் கம்பெனி நன்றாக நடப்பதாக ஐயாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்களிடம் அவர் பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்புகிறார். அதற்கான டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பற்றி எங்கள் ஆடிட்டர் பேசுவார். உங்களுக்குத் சரியென்று பட்டால் மேற்கொண்டு பேசலாம். விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம். விஷயம் நமக்குள் இருக்கவேண்டும்” என்றார் மலர்வண்ணன்.

ஆடிட்டர் பேசினார். முதலீடு செய்வதற்கு அரசியல்வாதிகளிடம் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எப்போது அந்தப் பணம் அவர்களுக்குத் தேவைப்படும் என்று தெரியாது. அதனால், போட்ட பணத்தை ஒரே வாரத்தில் திருப்பித்தரும் சக்தி உங்களுக்கு உண்டா என்று கேட்டார். முப்பது கோடிவரை ஏற்றுக்கொள்வதாக வாசு சொன்னான்.

 ஆடிட்டருக்கு ஏமாற்றமாக இருந்தது. நூறு கோடியாவது எடுத்துக்கொள்ள முடியாதா என்றார். கையிலுள்ள பணத்தைப் பத்திரமான இடத்திற்கு மாற்றவேண்டிய  கவலை அவருக்கு.

 “நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் வழங்குவதே எங்கள் நோக்கம். அதில்தான்  போட்ட பணம் திரும்பிவரும். எனவே நூறு கோடி, இருநூறு கோடி என்றெல்லாம் எங்களால் பற்றுவரவு செய்யமுடியாது. மன்னிக்கவேண்டும்” என்றான் வாசு.

“எதற்கும் ஐயாவிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு முடிவெடுங்களேன். இதோ அவரை கனெக்ட் செய்கிறேன்” என்றார் ஆடிட்டர். 

 அடுத்து ஐயாவே பேசினார். “வணக்கம் தம்பி! இப்பத்தான் தொழில் ஆரம்பிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லா வளரணும் தம்பி. என்னோட வாழ்த்துக்கள். சீக்கிரம் என்னோட தொகுதில ரெண்டு கிளை ஆரம்பிங்க. மலர் கிட்ட சொன்னா நம்ப ஆபீஸ் காம்ப்ளெக்சே ரெண்டு மூணு காட்டுவாரு. மேனேஜர் போஸ்ட்டுக்கும்  நம்ப பசங்க  நாலஞ்சு பேர் இருக்காங்க. எவ்ளோ இன்வெஸ்ட்மெண்ட் வேணும்னாலும் பண்ணலாம். தைரியமா நடங்க. நான் இருக்கேன். வெச்சிடட்டுமா?”  

 ஊட்டியில் இருந்த புகழ்பெற்ற ஓட்டலில் இருந்து காலைச் சிற்றுண்டி வந்தது. மலைத்தேனும் நீலகிரித் தைலமும் உள்ளூர் சாக்லேட்டும் இரண்டு கூடை நிறையப் பழங்களும் பச்சைக் காய்கறிகளுமாகக் காரில் கொண்டுவந்து வைத்தார் மலர்வண்ணன்.

 “இதே காரில் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை போகலாம். நம்ப வண்டிதான்” என்று வழியனுப்பினார்.  

(தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்.

திங்கள், ஜனவரி 29, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2


வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2
 

-இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 1  " படிக்க இங்கே சொடுக்கவும்.

 (3)

 அட்டைப்பெட்டியைப் பிரித்தாள் பொன்னி.

“மெரீனாக் கடற்கரையில் ஔவையார்  சிலையருகில் நாளை மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாமா? - வாசு” என்றது அட்டைப்பெட்டியின் உள்ளிருந்த சிறிய கடிதம். 

வாசுவுக்கு இப்போது என்ன வயதிருக்கும் என்று யோசித்தாள் பொன்னி.  நாற்பத்தைந்துக்குக் குறையாது. தன்னை விடச் சின்னவன்தான். எந்த ஊரில் என்ன வேலையில் இருக்கிறானோ? குழந்தைகள் எத்தனை? மனைவி என்ன செய்கிறாள்?

 சரியாக ஆறுமணிக்கு உழைப்பாளர் சிலையருகே அவள்  ஆட்டோவிலிருந்து இறங்கியபோது வாசு அங்கே நின்றுகொண்டிருந்தான். அதே தோற்றம். பழைய வாசுவேதான். வயதினால் முகம் மட்டும் முற்றியிருந்தது. 


படத்துக்கும் கதைக்கும் தொட்ர்பில்ல்லை!

 “மிஸ்டர் வாசு, உங்களை அன்று ஒரே ஒருமுறை பார்த்ததுதான். சாந்தியாவது பலமுறை பார்த்திருக்கிறாள். எத்தனை வருடம் ஆயிற்று! காரணம்  சொல்லாமல் மாலையில் கடற்கரைக்கு வா என்று ஒரு பெண்ணை அழைப்பது முறையா?” என்று சீறினாள் பொன்னி. அவனைவிட்டுச் சற்று தூரத்திலேயே நின்றாள். கடற்காற்றில் அவள் கேசம் இழை இழையாகப் பறக்க ஆரம்பித்தது. அதை ஒருகையால் அழுத்திக்கொண்டாள்.

“ஹ் ஹ் ஹா” என்று சிரித்தான் வாசு. ஒப்பனைகள் ஏதுமில்லை. மாலையில் களைப்பாக வீடு திரும்பும் சராசரி ஊழியனைப்போலவே இருந்தான். “உண்மையைச் சொல்லட்டுமா? நீங்கள் இங்கு வருவீர்கள் என்று நான் நம்பவேயில்லை” என்றான்.

“நானே கூடத்தான் நம்பவில்லை. பிறகு என் வந்தேன் தெரியுமா?” என்று அவனை ஏறிட்டாள் பொன்னி, நிஜமான கோபத்துடன்.

 வாசு கலகலவென்று சிரித்தான். “தெரியுமே! உங்களைபோலவே நானும் இன்னும் மணமாகாதவன் என்பதால் தானே?”

 “சீ !” என்றவள், “உங்களுக்கு எப்படியோ, எனக்கு, இந்த வயதில் திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய கூரியர் சாந்தியின் கையில் கிடைத்துவிட்டது. அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அதனால்தான் உங்களைப் பற்றி முழுசாகத் தெரிந்துகொண்டு அவளிடம் சொல்லவேண்டும் என்று  வந்திருக்கிறேன்” என்றாள்.

 வாசுவுக்குத் தன் தவறு புரிந்தது.  “மன்னித்துவிடுங்கள் பொன்னி!” என்றான். பிறகு பேச ஆரம்பித்தான்.

(4)

 சாந்தியைப் பெண்பார்க்க வந்தபோது, வாசு ஒரு நடுத்தரக் குடும்பத்தின்  ஒரே பிள்ளை. பி காம்,  சிஏ (இண்ட்டர்) படித்து  ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக இருந்தான். தற்செயலாக அவன் தந்தையின் நண்பர் கொடுத்த தகவலின்பேரில் பெண்பார்ப்பு நடந்தது.

 சாந்தியை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பெற்றோர்களோ மேலும்  வசதியான இடமாகப் பார்க்கலாமே என்று தாமதித்தார்கள். ஆனால் பழியை ஜாதகத்தின்மேல் போட்டார்கள். அவன் துருவித் துருவிக் கேட்டதில், பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாள் அம்மா.  

“பெண் என்ன சொன்னாளாம்?” என்று கேட்க அவனுக்கு நாணமாக இருந்தது. சில மாதங்களில் அவன் மும்பையில்  இன்னொரு நிதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். என்றாலும் சாந்தியின் அப்பாவியான முகம் அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

இரண்டுமுறை சென்னைக்கு வந்தபோது சாந்தியைச் சந்திக்க முயற்சி செய்தான். அவள் முகம்கொடுத்துப் பேசவில்லை. மூன்றாவது முறை அவளைப் பார்த்தபோது அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

 முதலில் பார்க்கும் பெண்ணையே மணந்துகொள்வது  என்ற தன் இலட்சியம் நிறைவேறாததில் வாசு மனம் தளர்ந்துவிட்டான். கவனத்தைப் படிப்பில் செலுத்தி சிஏ முடித்தான். இரண்டே வருடத்தில் ஒரு தனியார் பங்குச்சந்தை முகவரின் கம்பெனியில் ஆடிட்டராகச் சேர்ந்தான்.

“சில ஆண்டுகள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், பிறகு கனடாவிலும் இருந்தேன். வங்கிகள் மட்டுமின்றி, மருந்துக் கம்பெனிகள்,  பார்மா, ஐடி, விமானத்துறை என்று     வெவ்வேறு துறைகளில் அனுபவம் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளாகச் சுதந்திரமான ஆலோசகராக இருக்கிறேன். இந்த இரண்டு வருடங்களாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லும் பொறுப்பு கிடைத்தது. அப்போதுதான் உங்களைப் பார்த்தேன்…” என்று நிறுத்தினான் வாசு.

 பொன்னிக்குத் தூக்கிவாரிப்போட்டது. “நான் எப்போது ரிசர்வ் பேங்குக்குப் போனேன்?” என்று தன் மூளையைக் கசக்கிக்கொண்டாள்.

வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில், முற்றிலும் ஆபத்து இல்லாததும், இந்திய மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதுமான  தங்க நகைக்கடன்களை வங்கிகள் இன்னும் அதிக ஊக்கத்துடன் வழங்கவேண்டும்  என்பதற்காக, சில முக்கிய வங்கிகளை ரிசர்வ் பேங்க் பேச அழைத்தது. அவளது ஜிஎம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி அது. கடைசி நேரத்தில் அவர் வரமுடியாமல், பொன்னியைக் கலந்துகொள்ளச் சொன்னார்.

 “அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஆணித்தரமாகச் சொன்ன சில கருத்துக்களை டெபுடி கவர்னரே மிகவும் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் உங்களைப் பற்றி  நன்றாக விசாரித்துத் தெரிந்துகொண்டேன்”  என்றான் வாசு.

“ஆனால் என்னுடைய மொபைல் நம்பரை மட்டும் தெரிந்துகொள்ளவில்லை. இல்லையா?” என்று கேலியாகக் கேட்டாள்  பொன்னி.

 “அதற்குக் காரணம் உண்டு. உங்கள் வங்கி இன்னொரு பெரிய வங்கியில் ‘மெர்ஜ்’ ஆவதால் நீங்கள் வீஆர்எஸ் பெறுவதாகத் தெரிந்தது. அப்போது மொபைல் நம்பரும் மாறக்கூடும் அல்லவா? நேரில் வாங்கிக் கொள்ள நினைத்தேன்”   என்றான் வாசு.

 “சரி, என்னைப் பற்றி வேறு என்னென்ன விசாரித்தீர்கள்? யார் யாரிடம்?”

 அவள் சற்றே இறங்கிவருவதுபோல் தோன்றியது. “அதை விட, ஏன் விசாரித்தீர்கள் என்று கேட்க மாட்டீர்களா?” என்று கொக்கி போட்டான் வாசு.

ஒரு சிறுவன் ‘தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்’ என்று அவர்கள் இருந்த பக்கமே நின்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். இரண்டு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அவனை விரட்டினான் வாசு. சுண்டலைக் கொறித்தபடி, “ஏனாம்?” என்றாள் பொன்னி.

 “நடந்துகொண்டே பேசலாம். இன்னும் அரைமணிக்குள் நான் வீட்டில் இருக்கவேண்டும்” என்று அவசரப்படுத்தினாள். 

 “எனக்கு நாடு நாடாகப் போய் ஆலோசனை சொல்லும் தொழில் அலுத்துவிட்டது. சொந்தமாகத் தொழில்செய்ய  முடிவுசெய்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் என்னோடு பங்குதாரராகச் சேர்வதற்கு நீங்கள்தான் சரியானவர் என்று தோன்றியது. காரணம், அந்தத் தொழிலுக்கான எல்லாத்  தகுதிகளும் உங்களுக்கு உண்டு..”

“போர் அடிக்காதீர்கள் வாசு! ஆனாலும் பரவாயில்லை. ரொமான்டிக்காக ஏதும் பேசிவிடுவீர்களோ என்று பயந்தேன். சரி, அது  என்ன தொழில்  என்று சட்டென்று சொல்லுங்கள்” என்று மீதமிருந்த சுண்டலை ஒரே வாயாகப் போட்டுக்கொண்டவள், பச்சை மிளகாயைக் கடித்துவிட்டதால் “சூ..” என்று அலறினாள். “மிளகாய்..மிளகாய்” என்று குழறினாள்.

“கவலைப் படாதீர்கள். சூடாக ஒரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் சரியாகிவிடும். இங்க வாப்பா” என்று பஜ்ஜி விற்பவனை அழைத்தான் வாசு, சிரித்துக்கொண்டே.

அவனை அடிக்க வருவதுபோல் கையை ஓங்கினாள் பொன்னி.

“நீங்கள் ஒரு வங்கியில் மேலாளராக இருந்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறீர்கள். தங்க நகைக்கடன் கொடுப்பதில் உங்கள் வங்கி கவனமும் எச்சரிக்கையும் கொண்டதாக விளங்குகிறது. நகை மதிப்பீடு செய்யும் பயிற்சியில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றிருக்கிறீர்கள். கஸ்டமர் சர்வீஸில் நீங்கள் சூப்பர் என்று சேர்மனிடமே பாராட்டு பெற்றிருக்கிறீர்கள்…  முக்கியமாக, உங்கள் பெயரிலேயே பொன் இருக்கிறது..” 

“போதும், போதும். நானும் சொந்தத் தொழில் செய்யத்தான் நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அறிவுக்கு வேலை இல்லாத நகைக்கடன் தொழிலில் நான் ஏன் இறங்கவேண்டும்? அதுவும் எனக்கு அதிகம் தெரியாத உங்களுடன்?” என்று குரலை உயர்த்தினாள் பொன்னி.

 சடக்கென்று அவளுடைய கைகளைப்  பற்றிக்கொண்டான் வாசு. “என்ன மேடம் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாடு முழுவதும் கேரளாக் கம்பெனிகள் எவ்வளவு மும்முரமாக நகைக்கடன் கொடுக்கின்றன? பார்க்கவில்லையா? முதலுக்கு மோசமில்லாத தொழில். அதிலும்  நான் மேனேஜிங் டைரக்டர், நீங்கள் சி ஈ ஓ. உங்கள் சம்பளம் இரண்டு லட்சம். அத்துடன் நிகரலாபத்தில் 2 சதம் போனஸ். கார் உண்டு.  ஹெட் ஆபீசில் அமர்ந்துகொண்டு சூபர்வைஸ் செய்தால் போதும். பத்து கிளைகளை ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கான திறமையுள்ள மேலாளர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நாணயமான நகை மதிப்பீட்டாளர் இரண்டு பேர் வேண்டும். அவர்களும் உங்கள்மூலம் தான் தேர்வாக வேண்டும். உங்களுக்கு என்ன ரிஸ்க் இதில்?”

அவனிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்ட பொன்னி, தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறான் என்று அவனை மனதிற்குள் பாராட்டினாள்.  “மற்றதை நாளை போனில் பேசலாம். எதற்கும் சாந்தியிடம் விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்” என்று தன் அலைபேசி எண்ணைக்   கொடுத்தாள்.

முகம் மலர்ந்த வாசு, “காத்திருக்கிறேன் பொன்னி! உங்களுக்காக! எவ்வளவு நாள் வேண்டுமானலும்!” என்றான்.  

முகத்தில் இலேசான வெறுப்பைக் காட்டியபடி, “வாசு, ஒரு முக்கிய விஷயம்: எனக்குத் திருமணம் என்ற ஒன்று இந்தப் பிறவியில் கிடையாது. ஆகவே நீங்கள் காத்திருக்கவும் வேண்டாம். வீண் கற்பனைகளும் வேண்டாம். அத்துடன் என்னைவிட வயதில் சிறியவர் நீங்கள். புரிந்ததா?” என்று ஆட்டோவில் ஏறினாள் பொன்னி.

 (தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 3  " படிக்க இங்கே சொடுக்கவும்.

சனி, ஜனவரி 27, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு-1

 

வண்ணம் கொண்ட வெண்ணிலவு-1 

(குறுநாவல்)

-        இராய செல்லப்பா

(1)

 “அம்மா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே, அது உண்மையா?” என்று ஆவலும் திகைப்புமாகக் கேட்டபடி உள்ளே நுழைந்தாள் சரண்யா. பள்ளிக்கூடப் பையைக் கழற்றிவிட்டு, லஞ்ச்பாக்ஸை எடுத்தவள்,  மௌனமாக நின்ற சாந்தியைப் பார்த்து மறுபடியும் கேட்டாள். “நிஜமா அம்மா?”

 சாந்திக்கு நெஞ்சை அடைத்தது. ஆமாம், இந்த வீட்டைச்  சீக்கிரம்  காலிசெய்ய வேண்டும் என்று சொல்லிவிடலாம்தான். அதன்பிறகு எங்கு போவதென்று  கேட்டால் தன்னிடம் பதில் இல்லையே!  பேசாமல் போர்ன்வீட்டா கலப்பதில் முனைந்தாள்.

 ‘என் ஸ்கூலுக்கு இந்த வீடுதான் பக்கம். மாற்றவேண்டாம்’ என்று சரண்யா  அடம் பிடிக்கலாம்.  பாலு இன்னும் வரவில்லை. அக்காவைப் பார்த்து அவனும் புரண்டுபுரண்டு அழுவான். இவள் ஐந்தாவது, அவன் இரண்டாவது படிக்கிறார்கள். நன்றாகப் பழகிவிட்டது இந்த வீடு.

pic courtesy-IndiaMart ad

“என்ன சொன்னாங்க உன் பிரெண்ட்ஸ்?” என்று பொதுவாகக் கேட்டு சரண்யாவை உற்றுப்பார்த்தாள் சாந்தி.

 போர்ன்வீட்டா குடிப்பதைப் பாதியில் நிறுத்திய சரண்யாவுக்குக்  குரல் கம்மியது. “நாம்ப ஏழைகளாம். பெரியம்மா தயவுல வாழறமாம். வேலைல இருந்து ரிட்டையர் ஆகி,  பெரியம்மாவே இந்த வீட்டுக்கு வரப்போறாங்களாம். அதனால் நாம்ப காலி பண்ணிட்டு டவுனை விட்டு ரொம்ப தூரமா ஏதாச்சும் ஹவுசிங்போர்டு பிளாட்டுக்குப் போயிடுவமாம். சொரூபாவும் சந்திராவும்  சொல்றாங்க.”

வெறுமையாகச் சிரித்தாள் சாந்தி. “இது ஒனக்குத் தெரிஞ்ச விஷயம் தானே, சரணு! அப்பா திடீர்னு இறந்து போனப்ப  ஒங்க பெரியம்மா தானே நமக்கு சப்போர்ட்டா இருந்து, அவளோட வீட்டை நமக்கு வாடகையில்லாம குடுத்தா! இப்ப பேங்க்கிலிருந்து விஆர்எஸ் வாங்கிக்கப் போறாளாம்.  அப்படீன்னா அவ குவார்ட்டர்ஸைக் காலி  பண்ணியாகணும் இல்லையா?  இங்க தான வருவா?” என்றவள், “பொன்னினு எங்க அக்காவுக்குச்  சும்மா பேர் வெக்கல, அவ மனசெல்லாம் பொன்னு தான்! நிச்சயம் நம்பளைத் தவிக்க விட மாட்டா. நீ கவலைப்படாம ஹோம்வொர்க் பண்ணு. பாலு கிட்ட ஏதாச்சும் சொல்லி அவன் மூடையும் கெடுத்துறாதே” என்று சரண்யாவின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.

அதற்குள் உள்ளே நுழைந்துவிட்ட பாலு, தன் ஸ்கூல்பையைக் கழற்றாமலே அவள் அருகில் ஓடிவந்து, “அம்மா, எனக்கு?” என்றான்.   அவனுக்கும் நெற்றியில் முத்தமிட்டாள் சாந்தி. “எனக்குப்  பால் மட்டும்தான், போர்ன்வீட்டா வேண்டாம்” என்று கூவிக்கொண்டே தன் அறைக்குப் போனான் பாலு.

 அவன் போனபிறகு அம்மாவின் அருகில் வந்த சரண்யா, “எப்பம்மா பெரியம்மா வீஆர்எஸ்-ல போறாங்க?” என்று காதுக்குள் கேட்டாள். சாந்திக்குத் தெரியவில்லை. பொன்னியிடம் கேட்கலாம். வீஆர்எஸ் பணத்தில் கடன் கேட்பதற்கு அடிபோடுவதாக அவள் நினைத்துவிட்டால்?

“இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கறேன்.”

இரவு சுமார் எட்டுமணி. கதவில் ‘டொக், டொக்’ என்று யாரோ தட்டினார்கள். கூரியர்! ஒரு சிறிய அட்டைப்பெட்டி! முகவரியில் ‘செல்வி பொன்னி அவர்களுக்கு’ என்று இருந்தது.

 சாந்தியின் மனம் குற்ற உணர்ச்சியால் துணுக்குற்றது. பத்து வயது சிறியவளான தான், திருமதி ஆகி, இரண்டு குழந்தைகளைப் பெற்று, கைம்பெண்ணாகவும் ஆகிவிட்டேன். பொன்னியோ திருமணமே வேண்டாமென்று செல்வியாகவே இருந்துவிட்டு இப்போது பணியிலிருந்தும் ஓய்வுபெறப்போகிறாள். நாளைக்கு அவளுக்கு யார் துணை?

 அட்டைப்பெட்டியைக் கையில் வாங்கிப்பார்த்த சரண்யா, “அம்மா, அனுப்பியவர் பெயர் ‘வாசு’ன்னு போட்டிருக்கும்மா!” என்றாள்.

திகைத்துப் போன சாந்தி, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “சரி, உள்ளே கொண்டுபோய் வை. பத்திரமாகப் பெரியம்மாவிடம் கொடுக்கவேண்டும்” என்றாள். 

 (2)

 அந்த வங்கிக்கிளை  அன்று பரபரப்பாக இருந்தது. மேலாளர் பொன்னி விருப்ப ஓய்வு பெறப்போகிறாள்.

 அந்த வங்கியை வேறொரு பெரிய வங்கியுடன் இணைப்பதாக அரசு முடிவெடுத்தவுடனேயே ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பல அதிகாரிகளும் விருப்ப ஓய்வுக்கு மனதளவில் தயாராகிவிட்டார்கள்.

 காரணம், வங்கிகள் இணைக்கப்பட்டவுடன், இவர்களுடைய  கிளைகள் சீரமைக்கப்படலாம். ‘சீரமைத்தல்’ என்றால் சிறிய வங்கியின் பாதி ஊழியர்களைப்  பெரிய வங்கியின் பிற மாநிலக் கிளைகளுக்கு மாற்றிவிடுதல். அதில் மறைந்திருந்த உத்தி என்னவோ இவர்களைத் துன்புறுத்தி விருப்ப ஒய்வு பெறச் செய்வதுதான்.   

பொன்னிக்கு அத்தகைய அச்சம் இல்லை. அவள் தன்னுடைய வங்கியில் சாதனை மேலாளராகத் திகழ்ந்தவள். ஆனால் சொந்தமாகத் தொழில் புரியவேண்டும் என்ற ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருந்தது. அதே சமயம் ஆண் துணையின்றி ‘செல்வி’யாகவே ஐம்பது வயதை எட்டிவிட்டவளுக்கு என்ன தொழில்செய்வது, எங்கே, எப்போது தொடங்குவது என்ற புரிதல்  ஏற்படாமல் இருந்தது. 

 வங்கிகளின் இணைப்பினால் வீஆர்எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டபோது முதல் ஆளாக மனு கொடுத்தாள். வழக்கமான பென்ஷனுடன், கிராஜுவிட்டி இருபது லட்சமும், எதிர்காலச் சம்பளமாகப்  பதினைந்து  லட்சமும் கிடைக்கும் என்று தெரிந்தது. கையில் மொத்தமாகப் பணம் வரட்டும், பிறகு என்ன தொழில் என்று தீர்மானிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

 இன்று அந்த வங்கியில் அவளுக்குக் கடைசி நாள். 

வங்கியில் அவளுக்கு மிகவும் நெருக்கமான தோழி என்றால் அது ஷோபனாதான். அவள் கணவர் பிரபலமான ஜெராக்ஸ் கடையை நடத்திவந்தார். நல்ல வருமானம். ஆனால் இவள் வீஆர்எஸ் எடுத்தால் வரும் பணம் மொத்தமாகக் கணவரின்  பிசினஸில் முடங்கிவிடும். பிறகு ஐந்துக்கும் பத்துக்கும் அவர் கையையே நம்பியிருக்க வேண்டும். ஆகவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

 “உனக்கென்னம்மா, கணவனா, பிள்ளையா  குட்டியா? உனக்கு நீயே ராணி! எல்லாருக்கும் அப்படி வாய்க்குமா?” என்றாள் ஷோபனா.

 தேவிகா மட்டும் கவலைப்பட்டாள். துபாயில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாகச் சொல்லி அவளை மணந்துகொண்டவன், அங்கு ஒரு சாதாரண ஓட்டலில் சப்ளையர் என்று தெரிந்தவுடன், அடுத்த விமானத்தில் ஏறி ஊருக்கு வந்துவிட்டவள் தேவிகா.

 “பொன்னி, இத்தனைநாள் தனியாவே இருந்துட்டே. அதனால ஆம்பளைகளைப் பத்தி ஒனக்கு அதிகம் தெரியாது. கையில பணம் இருக்குன்னு தெரிஞ்சா ஒன்னையே சுத்துவானுங்க. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரித்தாள் தேவிகா.  

 உடன்பணிபுரிபவர்கள் அந்த அலுவலக சம்பிரதாயப்படி ஆளுக்கு ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தார்கள். அதில் ஸ்வீட், காரம், காபி போக மீதிப்பணத்தில் பொன்னிக்கு ஒரு மொபைல் போன் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது.

 அப்போதுதான் அங்கு வந்தாள் சாந்தி, கூரியரில் வந்த அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு.

‘வாசு’ என்ற பெயரைப் பார்த்ததும் பொன்னியும் சாந்தியும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டார்கள். “அவனாக  இருக்குமோ?” என்றாள் சாந்தி.

“அவனாகத்தான் இருக்கவேண்டும். வேறு எந்த வாசு தடியனும் எனக்குத் தெரியாது” என்றாள் பொன்னி.

“இத்தனை வருஷம் கழித்து இப்போது ஏன்  வருகிறான்? எனக்கென்னவோ பயமாக இருக்கிறது” என்றாள் சாந்தி.

தேவிகாவுக்குப் புரிந்துவிட்டது. “பார்த்தாயா, பொன்னி! உன் கைக்குப்  பெரிய தொகை வரப்போவதை உன் பழைய நண்பன் மோப்பம் பிடித்துவிட்டான்” என்று சிரித்தாள் பலமாக.

 “ஒரு திருத்தம். வாசு என்னுடைய நண்பன் அல்ல. சாந்தியுடைய நண்பன்!” என்றாள் பொன்னி வெறுப்புடன். “இல்லையா சாந்தி?”

 “மண்ணாங்கட்டி! ஏதோ வந்தான், பெண் பார்த்துவிட்டுப் போனான். ஜாதகம் சரியில்லை என்று கடிதம் வந்தது. அவனா எனக்கு நண்பன்? கழிசடை!” என்றாள்  சாந்தி கோபத்துடன்.

 வாசுவைப் பற்றி தேவிகாவுக்குத் தெரியும். “பாவம்டி, வாசுமேல ஒரு தப்பும் இல்லை. நீ ஏழைன்னு அவங்கப்பா தட்டிக் கழிச்சிட்டாரு. அதுக்கு அப்பறமும் அவன் எவ்ளோ தடவை உன்னோட பேசறதுக்கு முயற்சி பண்ணினான்  இல்லையா?  நீதான் பிடிகொடுக்கல..”

ஷோபனா இடைமறித்தாள். “ஒருவேளை வாசுவுக்கு இவ  சரின்னு சொல்லியிருந்தா இப்படி வெறும் கழுத்தா நிக்கவேண்டி இருக்காதோ என்னவோ!”    

சாந்திக்கு இதைப்பற்றி மேற்கொண்டு விவாதம் வேண்டாம் என்று தோன்றியது. “பொன்னி, சரண்யாவும் பாலுவும் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறாங்க. நீ எப்ப வீட்டைக் காலி பண்ணைச் சொல்வியோன்னு பயந்துகிட்டே இருக்காங்க."  

 “எதுக்கடி நீ காலி பண்ணணும், முட்டாள்?” என்றாள் பொன்னி அவளை ஆழமாகப் பார்த்துக்கொண்டே. “மாடியில் ஒரே ஒரு ரூம் எனக்குப் போதும். மற்றதெல்லாம் உங்களுக்குத்தான். ரெண்டுபேர் படிப்பும் முடியுற வரைக்கும் என்னோடயே இருங்கள். நான் குவார்ட்டர்ஸைக் காலிபண்ணிட்டு நாளைக்கே வந்துடறேன்.”  

சாந்தியின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்கும் ஒரு ஸ்வீட் காரம் காபி நீட்டினாள் ஷோபனா. ஆனால் அதைத் தின்ன விடாமல் வாசுவைப் பற்றி அவள் சொன்ன கருத்து சாந்தியின் மனதில் ஈட்டி போல் குத்தி நின்றது. வாசுவின் வருகையால் தனக்கு என்னெவெல்லாம் நிகழுமோ என்று நினைத்தபோது குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடி அமையவேண்டுமே என்ற பயமும் மேலோங்கியது.

(தொடரும்) 

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு-2  " படிக்க இங்கே சொடுக்கவும்.