வெள்ளி, மே 30, 2014

ஏழைக்குப் பெயர் எதற்கு? (நியூஜெர்சி மடல் – 1)

ஏழைக்குப் பெயர் எதற்கு? (நியூஜெர்சி மடல் – 1)
மே 28 , 2014 புதன்கிழமை   சென்னை

இரவு  8.45 க்குக் கிளம்ப வேண்டிய ஏர்-இந்தியா விமானத்திற்கு மூன்றுமணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்பதால் அதற்கும் அரைமணி முன்னதாக- அதாவது மாலை  5.15 க்கே நுழைந்துவிட்டோம். சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்ட பின் நாங்கள் செய்யும் முதல் வெளிநாட்டுப் பயணம்.

அமெரிக்கா செல்லும் பயணிகள் ஒவ்வொருவரும் தலா இரண்டு சுமைபெட்டிகள் (‘லக்கேஜ்’) கொண்டு செல்லலாம். ஆனால் ஒவ்வொன்றிலும்  23  கிலோ எடைக்குமேல் இருக்கக்கூடாது. இதைத்தவிர, எட்டு கிலோவுக்கு மிகாமல் எடையுள்ள ஒரு கைபெட்டியும் ( hand baggage) கொண்டுவரலாம். தவிர, ஒரு மடிக்கணினியும் , மேலங்கியாக ஒரு ‘கோட்டு’ம் கொண்டுவர அனுமதி உண்டு.

விமான நிலையத்தின் வெளியில் இருந்து இரண்டு சுமைநடத்தி( ‘டிராலி’) களைத் தள்ளிக்கொண்டு  வந்தார்கள் என் பேரனும் பேத்தியும். நாங்கள் மாலை நேரத்திலேயே வந்துவிட்டதால் இவை எளிதில் கிடைத்தன. இரவு ஆக ஆகக் கூட்டம் சேர்ந்துவிடுமாதலால் சுமைநடத்திகளைப்  பிடிப்பதே பெரும்பாடாகிவிடும்.  

நிலையத்தினுள் பயணிகளைத் தவிர மற்றவர்கள் நுழைய அனுமதியில்லை என்பதால், மகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விடை கொடுத்துவிட்டு, நானும் (என்) மனைவியும் ஆளுக்கொரு சுமைகடைத்தியில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு விமான ஏற்றச்சீட்டு (‘போர்டிங் பாஸ்’) வழங்கும் இடத்திற்குச் சென்றோம்.

சுமைபெட்டிகளை  எடைபார்த்தபோது, ஒரு பெட்டி  23.6 கிலோவும் இன்னொன்று  21.5 கிலோவும் இருந்தன. அதாவது ஒன்று  0.6  அதிகமாகவும், இன்னொன்று 1.5 கிலோ குறைவாகவும் இருந்தது. வீட்டிலிருந்த எடையளவியில் ( weighing scale) சரிபார்த்துத்தான் கொண்டுவந்தோம். இத்தகைய சிறுபிழைகள் சஜகமே. மொத்தத்தில் இரண்டு பெட்டிகளையும் கூட்டினால் அனுமதிக்கப்பட்ட  46 கிலோவுக்குள்தான் இருந்தது. பிற விமானங்களில் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இது ஏர்-இந்தியா அல்லவா?   ‘எடை அதிகமான பெட்டியிலிருந்து கொஞ்சம் பொருளை அடுத்த பெட்டிக்கு மாற்றிக்கொண்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு  அந்த ஊழியர் சென்றுவிட்டார்.

அப்போது உதவிக்கரமாக இரண்டு பேர் அங்கே வந்தார்கள். ‘கஸ்டமர் சர்வீஸ்’ என்று கையில் முத்திரை அட்டை அணிந்திருந்தார்கள். சுமைநடத்தியை ஒரு ஓரமாகக் கொண்டுபோய் பெட்டிகளை இறக்கித் திறந்து சில பொருட்களை இடம் மாற்றி மீண்டும் மூடி, அந்த ஊழியரின் இருக்கையருகே கொண்டுசெல்ல அவர்கள் மிகவும் உதவினார்கள். பிறகு யாருக்கும் தெரியாமல் கைநீட்டினார்கள். என் மனைவி மிகவும் மகிழ்ந்தவராக அவர்களுக்குத் தலா நூறுரூபாய் கொடுத்தார். (எங்களிடம் வேறு நோட்டுக்கள் இல்லை என்பதும் காரணம். இருந்தால் ஐம்பது, ஐம்பது கொடுத்திருக்களாம்.)

உடனே ஏற்றச்சீட்டு வழங்கப்பட்டு காரியம் முடிந்தது.

ஏன் கேள்வி என்னவென்றால், விமான நிலையத்தினுள் இம்மாதிரி கையில் முத்திரை தரித்த நபர்கள் நடமாடுகிறார்களே, அவர்கள் யார்? அவர்கள், விமான நிலைய ஊழியர்கள் அல்லவென்று தெளிவாகத்தெரிந்தது. பயணிகளுக்கு உதவி செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதும், பயனுள்ள உதவியைத்தான் அவர்கள் புரிகிறார்கள் என்பதும் தெரிந்தது. அப்படியானால் அவர்களுக்குச் சம்பளம் தருவது யார்? சம்பளம் பெறுபவர்கள் என்றால், அவர்கள், பயணிகளிடம் காசு கேட்பது ஏன்? ‘டிப்ஸ்’ எனப்படும் இனாம் வழங்குதல் உலகில் எல்லா ஊர்களிலுமே இருப்பதுதானே, அதை அவர்கள் கம்பீரமாகக் கேட்டுப் பெறலாமே! (சரவணபவன் ஓட்டலில் சப்ளையர்கள் மாதிரி.) ஏன் அச்சத்துடன் கேட்கவேண்டும்?  அல்லது, அவர்கள் பயணிகளிடம் எதுவும் பெறக்கூடாது என்பது விமான நிலையத்தின் கொள்கையானால், அதை எங்கேயாவது எழுத்துமூலமாகத் தெரிவிக்க வேண்டாமா?

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் போது இவர்கள் கையாளும் இன்னொரு தந்திரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பயணிகள் வெளியேறும்போது கொண்டுசெல்லும் சுமைநடத்திகள், வெளியிலேயே விடப்படுமல்லவா? அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகச் சாய்த்து நீண்ட ரயில் மாதிரி அடுக்கி, அவ்வப்பொழுது  உள்ளே கொண்டுவைக்கும் பணி இவர்களுடையது. ஆனால் செய்ய மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று விமானங்கள் வந்து இறங்கிய பிறகுதான், நிறைய கூட்டம் சேர்ந்த பிறகுதான், ‘எனக்கு இருபது ரூபாய் கொடுங்கள், சுமைநடத்தி கொண்டு வருகிறேன்’ என்ற அவர்களின் பேரத்தை ஒப்புக்கொண்டபிறகுதான், சுமைநடத்திகள் கிடைக்கும். அதுவும் முனகியபடியே, நமக்கு எதோ ஒரு பெரிய சலுகையைச் செய்துவிட்டமாதிரியான தோரணையில் கொண்டுவருவார்கள். யாரிடமும் புகார் சொல்ல முடியாது. இருக்கைகளில் யாராவது இருந்தால்தானே!  நடு இரவிலும், புலர்காலைக்கு முன்பாகவும் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் பயணிகள், குறிப்பாகத் தனியே வரும் வயதானவர்களும் இந்தியாவிற்கு முதல்பயணமாக வருபவர்களும் படும் வேதனை சொல்லிமாளாது.      
***
மே  29,  2014- நுவார்க்

காலை மணி 7.55 க்குத் தரையிறங்கியது எங்கள் விமானம். நுவார்க் விமான நிலையம். (நியூஜெர்சிக்கு அருகில் இருப்பதால் இந்தியர்கள் இவ்விமான நிலையத்தை விரும்புவார்கள். பயணநேரம் மிச்சப்படும்.) வெளியில் வெப்பநிலை வெறும் நாற்பது டிகிரி பாரன்ஹைட்தான். (முதல்நாள் சென்னையில் அதுவே நூற்றுப்பத்து டிகிரி!) இறங்குதளத்தின் குளிர்சாதனங்களால் கூட எங்கள் முகத்தில் வந்து அறையும் குளிரைத் தடுக்க முடியவில்லை.

குடியேற்றப் பதிவுகளை முடித்துக்கொண்டு, சுமைபெட்டிகளைத் தேடி, மூன்றாம் எண் கொணரிபட்டை ( conveyor belt)  அருகில் சென்றோம். பெட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வந்துகொண்டிருந்தன. எனவே அதற்குள் சுமைநடத்திகளை எடுத்துவரலாம் என்று போனேன்.
இங்கு சுமைநடத்திகள் ஒன்றோடொன்று சங்கிலித்தொடர் மாதிரி இணைக்கப்பட்டிருக்கும். ஐந்து டாலர் நோட்டை அதற்குரிய துளையில் செலுத்தினால் மட்டுமே ஒரு சுமைநடத்தி விடுவிக்கப்பட்டு நம் கையில் வரும். எங்கள் இருவருக்கும் தலா ஒன்று தேவை என்பதால் பத்து டாலர் நோட்டுடன் சென்றேன். அப்போதுதான் அவரைக் கண்டேன்.

சற்று ஏழ்மையான தோற்றம். சுமார் நாற்பது வயதிருக்கும். நிறம் வெள்ளைவெளேர் என்று இருந்தாலும் அவர் அமெரிக்கராக இருப்பதற்கில்லை என்று தெளிவாகக் காட்டியது, தன் அருகில் அவரைப் போலவே இருந்த இன்னொருவருடன் நடத்திய  பேச்சு. அவர் அருகில், நீளமான சுமைநடத்தி ஒன்று இருந்தது. நம் ஊரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்குமே, ஒரே நேரத்தில் இருபது பெட்டிகளைக்கூட ஏற்றலாமே, அம்மாதிரியானது. கடந்த நான்கு அமெரிக்கப் பயணங்களில் அதைப் பார்த்ததில்லை. அருகில் சென்று ‘இந்த சுமைநடத்தி கிடைக்குமா? எவ்வளவு தர வேண்டும்?’ என்றேன்.

அவர் முகத்தில் சற்றே மலர்ச்சி தெரிந்தது. ‘இதற்குப் பத்து டாலர்’ என்றார். சரியான தொகைதான். வழக்கமான இரண்டு சுமைநடத்திகளுக்குப் பதில் இது ஒன்று போதுமே எனக்கு. ‘சரி, நகருங்கள், எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன். அவர் சற்றே தயங்கி, ‘இல்லை, நானே எடுத்துக்கொண்டு வருகிறேன்’ என்றார். ‘இதற்குப் பத்து டாலர்; எனக்கு நீங்கள் எது கொடுத்தாலும் சரி’ என்று பணிவாகச் சொன்னார்.

நமது இந்திய வழக்கங்களில் ஒன்று ‘யாத்ராதானம்’ என்பது. அதாவது, வெளியூருக்குப் புறப்படும் முன்பு யாராவது ஏழைகளுக்கு ஒரு தொகையோ, பண்டமோ, துணியோ தானமாக வழங்குவது. அப்படி வாங்கிக்கொள்பவர் நம்மை வாழ்த்துவாரல்லவா, அந்த வாழ்த்துதல் நம்மைப் பயணத்தின்போது காக்கும் என்பது நம்பிக்கை.
சென்னையில் இப்போதெல்லாம் கொடுப்பதற்கு ஆளிருக்கிறார்கள். வாங்கிக்கொள்ளத்தான் ஆளில்லை. உதாரணமாக,  பழைய துணிகள் இப்போதெல்லாம் கிழிவதே இல்லை. சாயம் போவதும் இல்லை. ஆனால் பார்ப்பதற்கு மட்டும் பழையதாகிவிடுகின்றன. முன்பெல்லாம் அவற்றைக் கேட்டு வாங்கிக்கொள்ள ஆளிருந்தார்கள். இப்போது புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  இலவசங்களாலும், (முன்னாள்  அன்னை) சோனியாவின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தாலும் ஏழ்மை பெரிதும் மறைந்துவிட்ட நிலையில், அதற்கு ஆளில்லை. ‘உதவும் கரங்கள்’ மாதிரியான நிறுவனங்கள் கூட இப்போது பழைய துணிகளை ஏற்பதில்லையாம்.

எனவே, சென்னையில் கொடுக்க முடியாததை, இந்த நபருக்கு எனது யாத்ராதானமாகக் கொடுப்பது என்று முடிவெடுத்தேன். ‘சரி, வாருங்கள்’ என்றேன். வந்தார். சும்மா பார்த்துக்கொண்டு நிற்காமல், ஓடிக்கொண்டே இருக்கும் கொணரிபட்டையின் அருகில் வந்து எமது பெட்டிகளைத் தாவிப்பிடித்து, சுமைநடத்தியில் ஏற்றிக்கொண்டு, வெளிவரை வந்து, தரையில் இறக்கிவைத்தார். இருபதுடாலர் நான் கொடுத்தபோது அவர் முகத்தில் தெரிந்த நன்றிதான் என்னே!

இதற்கிடையில் அவரோடு பேச நேரம் இருந்தது. ‘நீங்கள் எந்த நாட்டுக்காரர்?’ என்றேன். ஒரு தென்கிழக்காசிய நாட்டின் பெயரைச் சொன்னார்.

அடிக்கடி புரட்சிகளும் ஊழல்களும் நடக்கும் நாடு என்பதால் ஏழைகளுக்கு வாழ வழியில்லாத நிலையில், அமெரிக்கக் கனவுகளுடன் கப்பலேறியவர்களில்  அவரும் ஒருவர். விசா இல்லாமல் வந்ததால் உரிய வேலை கிடைக்கவில்லை. ஒரு சிற்றுண்டிச்சாலையில் சில வருடங்கள், ஒரு பெட்ரோல் நிலையத்தில் சில மாதங்கள், காய்கறித்தோட்டத்தில் சில வருடங்கள் என்று காலம் கழிந்ததாம். இடையில் சில மாதங்கள் பட்டினி கிடந்தாராம். அப்போது தன் ‘பாஸ்போர்ட்’டை விற்றுத்தான் சாப்பிடமுடிந்ததாம்.  எனக்குப் பகீரென்றது. எனது பாஸ்போர்ட்டை ஆறு பிரதிகள் எடுத்து ஒவ்வொரு பெட்டியின் உள்ளும் திணித்துவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதை நினைத்துக்கொண்டேன்.

‘அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே ‘விட்டு விடுவார்கள். அந்த ஊர் எல்லையை விட்டு ஓடிப்போகச் சொல்வார்கள். அவ்வளவே. இங்கெல்லாம் சின்னஞ்சிறு  வேலைகளைச் செய்வதற்கு ஆள் கிடைப்பதில்லையே’ என்றார். ‘நானே இன்னும் சில நாட்கள்தான் இங்கிருப்பேன். வேறு ஊருக்குப் போய்விடுவேன். இங்கு வருமானம் சரியில்லை. ஒரு நாளைக்கு ஐம்பது டாலர் கிடைப்பதே கடினம். போட்டி அதிகம்’ என்றார்.

‘உங்கள் குடும்பம் எங்கே இருக்கிறது?’

‘மனைவி துபாயில் வேலைசெய்கிறாள். குழந்தைகள் இல்லை’

இவரால் அமெரிக்காவை விட்டுப் போகவே முடியாது. பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் இல்லை என்றால் எப்படி வெளியே போவது? மீறி முயற்சித்தால்  எஞ்சிய வாழ்நாளைச் சிறையில் கழிக்கவேண்டியதுதான்!
‘அப்படியென்றால் உங்கள் எதிர்காலம்தான் என்ன?’ என்றேன் கவலையுடன்.

கலகலவென்று சிரித்தார். ‘ஒன்றும் பயமில்லை ஐயா! எங்களைப் போன்ற முறையாகக் குடியேறாத மக்களுக்கும் குடியுரிமை வழங்க ஒபாமா முயற்சித்து வருகிறார். இன்றில்லாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்தாவது கிடைத்துவிடும். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்’ என்றார்.

‘ஒபாமாவுக்குப் பிறகு? ஒருவேளை உங்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டால்?’

மீண்டும் சிரித்தார் அவர். ‘உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றித் தெரியாது. ஐயா! உழைக்கத் தயாராய் இருப்பவர்களை அமெரிக்காவிலிருந்து யாரும் எப்போதும் வெளியேற்றமாட்டார்கள்!’ என்றார்.

அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகே அனலாய்க் கொதிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க விசாவுக்காகத் தவமிருப்பதன் ரகசியம் இதுதானோ?

நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டேன். ‘உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?’ என்றேன். 

கையசைத்தபடி நகரும் முன் அவர் சொன்ன வார்த்தை சிந்திக்கவைத்தது:
‘ஏழைக்குப் பெயர் எதற்கு?’
*****
 © Y Chellappa

26 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிஞர் (ஐயா)

    பயண அனுபவத்தை நன்றாக சொல்லி விட்டு இறுதியில் உங்களை மட்டுமல்ல என்னையும் சிந்திக்கவைத்துள்ளது.. ஏழைக்குப் பெயர் எதற்கு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா31 மே, 2014 அன்று AM 7:23

    வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஆங்கில வார்த்தைகளை நீங்கள் தமிழ்ப் படுத்தி இருப்பதை ரசித்து படித்தேன் !
    உழைக்கத் தெரிந்தவர்களை உதாசீனம் செய்யாத நாடு என்பதால் தான் வல்லரசாய் திகழ்கிறதோ ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. உழைப்பு எந்த உருவில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிற நாடு அமெரிக்கா
    ஏழைக்குப் பெயர் எதற்கு
    மனதைக் கனக்கச் செய்தன ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை முறை வந்து போனாலும் இம்மாதிரியான சில அடிப்படை பண்புகள் அமெரிக்காவில் அழியாத வண்ணம் இருப்பதைக் காணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  5. பெயரில்லா31 மே, 2014 அன்று AM 8:39

    It is hard to get into U.S, but once you are in, then there won't be any problem to stay there. There are lot of people here with out a valid visa. Immigration lawers will help you to stay legally and help you to get the visa.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் , அப்படித்தான் தெரிகிறது . தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  6. // வாங்கிக்கொள்ளத்தான் ஆளில்லை. // செழிப்பு...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைச் சுற்றி உள்ள பலரும் நம்மை விட வசதியாகவே இருக்கிறார்கள். அதை வெளிப்படையாக காட்டுவதில்லை, அவ்வளவே.

      நீக்கு
  7. The Terminal திரைப்படத்தைக் காணத் தவறாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன்.Jurassic Park தயாரித்த அதே இயக்குனர் படம். அமெரிக்காவில் நுழைந்த போது கதாநாயகனின் நாடு புரட்சிக்கு உள்ளாகி அரசுக்குரிய அங்கீகாரம் இழக்கிறது. இவன் நாடற்றவனாகிறான். இறந்து போன தகப்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வந்தவன், விமான நிலையத்தில் கைதியாக நிற்கிறான். அமெரிக்கா பற்றி ஒன்றரை மணி நேரத்திற்குள் ஏராளமான விஷயம் இப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

      நீக்கு
  8. தமிழ்ப்படுத்திய வார்த்தைகள் ரசிக்கவைத்தன..
    சிறப்பான முயற்சி..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் பாடமாக அமையும் என்பதற்கு தங்களுடைய பதிவு உதாரணம். இவ்வாறான பண்பைப் பற்றிப் பேசும்போது நான் பொதுவாக இங்கிலாந்தைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் புதிய கருத்தினை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கட்டுரையில் நிறைய தமிழ் சொற்றொடர்களை பயன்படுத்தி இருப்பது மகிழ்வைதந்தது.
    அமெரிக்கா போன்ற நாடுகளின் விமானத் தளங்களில் அகதிகளாக பலர் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு நல்லதொரு வாழ்வை அமெரிக்க அரசு செய்து தரவேண்டும்.

    நிறைவான பயணக் கட்டுரை!.

    பதிலளிநீக்கு
  11. இதுபோல இன்னும் நிறைய கட்டுரைகளை படிக்க விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு
  12. அருமையான கட்டுரை சார்! பல புதிய தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள முடிந்தது! எல்லாவற்றையும் குறித்துக் கொண்டோம்! மிக்க நன்றி!

    //மீண்டும் சிரித்தார் அவர். ‘உங்களுக்கு அமெரிக்காவைப் பற்றித் தெரியாது. ஐயா! உழைக்கத் தயாராய் இருப்பவர்களை அமெரிக்காவிலிருந்து யாரும் எப்போதும் வெளியேற்றமாட்டார்கள்!’ என்றார்.

    அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகே அனலாய்க் கொதிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க விசாவுக்காகத் தவமிருப்பதன் ரகசியம் இதுதானோ?//

    அருமையான சத்தியமான வார்த்தைகள்! தங்கள் அனுபவம், அந்தப் புதிய மனிதருடனான ஒரு அகதியாக வாழும் மனிதருடனான அனுபவம் நல்ல ஒரு அனுபவம் இல்லையா சார்?!! அந்த மனிதருக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை! அதுவும் பயமில்லாமல் வாழும் தைரியமும், நம்பிக்கையும் மிகவும் ஆச்சரியமூட்டியது! ஒரு வேளை இது போன்ற சூழல்கள், அகதியாக வாழ் வேண்டிய எப்படியாவது வாழ வேண்டிய சூழல் ஒரு மனிதனை வாழ்க்கையின் எந்த விளிம்பிற்கும் கொண்டு சென்றுவிடும் போல! அவர் பாஸ்போர்ட்டை விற்று வாழ்கின்றார்....தாங்கள் தங்களது பாஸ்போர்ட்டின் நகலை எல்லா பெட்டிகளுக்குள்ளும் வைத்துக் கொண்டது வாழ்வின் இரு துருவங்களைக் காட்டுகின்றது.

    ‘ஏழைக்குப் பெயர் எதற்கு?’ நெற்றிப் பொட்டில் சரியான ஒரு அறை விழுந்தது போல இருக்கின்றது!

    இந்த பதிலுக்கு ஒரு நல்ல எதிர் பதிலாக இருக்கின்றது சார் அரும்புகள் மலரட்டும்- பாண்டியனின் கவிதை "எவன் வைத்த பெயர்"








    பதிலளிநீக்கு
  13. ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழாக்கங்கள் அருமை ஐயா.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. ஏழைகள் எப்பொழுதும் எங்கும் ஏழைகளே,அது அமெரிக்காவிலானாலும் கூட/அரசின் எந்தத்திட்டங்களாலும் அப்படியெல்லாம் அவர்கள் அபரிதகரமாய் முன்னேற்றிவிடவில்லை.

    பதிலளிநீக்கு
  15. ஒரளவு பயனடைந்திருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. இந்தியா என்றால் இப்படிதான் இருக்கும் என்கிற மனநிலையை மாற்றவேண்டும்..
    பின்னர் ஒரு சந்தேகம் ஒருவேளை கஸ்டமர் கேர் ஊழியர்கள் பெறும் டிப்ஸ் லாபத்திற்காக அதிகாரிகள் பெட்டிகளின் எடையை நிரவல் செய்ய சொல்லியிருக்கலாம்..

    இந்தமாதிரி பணியாற்றும் ஊழியர்களுக்கு சரியான மனிதவளப் பயிற்சி வழங்கப் படவேண்டும்..

    பணத்தை பெற்றுக் கொண்டும் முக்கி முனகி அவர்கள் உதவுவதையும் தெள்ளென காட்டியிருக்கிரீர்கள்
    http://www.malartharu.org/2014/06/actor-named-vimal.html

    பதிலளிநீக்கு
  17. Touching reply, "yelzhaikku peyar etharkku" Sir, he may be poor financely but he has wise thoughts.

    பதிலளிநீக்கு