நியூஜெர்சி மடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியூஜெர்சி மடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 31, 2014

5 பிரதமர்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழர்! (நியூஜெர்சி மடல் – 2)


(நியூஜெர்சி மடல் – 2)

மே 30 , 2014  வெள்ளிக்கிழமை, நியூஜெர்சி

இன்று குளிர் குறைந்து, வெயில் வந்திருக்கிறது. என்றாலும் வெந்நீர்தான் குடித்தேன். சளி பிடித்துவிடுமோ என்ற தயக்கமே காரணம். நாளை கலிபோர்னியா செல்லவேண்டும். விமானத்தில் அமர்ந்து மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தால் எப்படி?


டிவியில் ஏதோ ஒரு சானலில் SITUATION ROOM   என்ற ஆவணப்படம் வந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின்  மயாமி (MIAMI) நகரத்தின் சிறைச்சாலையில்,  'உள்ளிருப்போர்' –அதாவது கைதிகள் – எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் கருப்பொருள். சிறை அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்று பேட்டி காணப்படுகிறது. உயர்ந்தபட்சத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு விசேஷமான பாதுகாப்பு வழங்கப்படுவது பற்றிய விவரங்கள் இடையிடையே வருகின்றன. ஓர் ஆயுள்தண்டனை கைதிக்கு இடுப்பில் ஒட்டியாணம்போல்  சங்கிலியால் பிணைத்து அதன் இன்னொருமுனை வலதுபாதத்தில் சென்று முடிகிறது. தொளதொளப்பான காவிநிற பைஜாமாவில் அவரைப் பார்க்கும்போது உள்ளே அணிவிக்கப்பட்டுள்ள சங்கிலிகள் தெரியவில்லை.


சிறைச்சாலை, சுத்தமென்றால் அவ்வளவு சுத்தம். சென்னையிலுள்ள  அப்போலோ அல்லது மியாட் மருத்துவமனைகளின் ஆப்பரேஷன் தியேட்டர்களை விடச் சுத்தம்  என்றாலும் மிகையில்லை. ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட படுக்கைகள், நம்மூரின் சில அதிகப் பணம் வாங்கும் உறைவிடப்பள்ளிகளின் படுக்கை அமைப்பை நினைவூட்டியது. வழங்கப்படும் உணவும், உணவருந்துகூடமும் மிகத் தூய்மையான சூழ்நிலையைக் காட்டுகின்றன. கைதிகளின் ஆரோக்கியம் மலைப்பூட்டுகிறது.


இப்படியெல்லாம் வசதிசெய்து கொடுத்தால் எந்தக் கைதிக்குத்தான் சிறைச்சாலையை விட்டுச்செல்ல மனம் வரும்? 
****
கிழக்கிலிருந்து மேற்குநோக்கிப் பயணித்து வந்ததால் நேரம் மிச்சப்படுகிறது. அதாவது, சென்னையில் இப்போது சனிக்கிழமை மாலை ஐந்து மணி ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். நியூஜெர்சியில் இப்போதுதான் சனிக்கிழமை காலை ஏழரை மணி ஆகிறது. அதாவது, சென்னையில் இருப்பவர்களைவிட, இங்கிருப்பவர்களுக்கு உழைப்பதற்கும் அனுபவிப்பதற்கும் ஒன்பதரை மணிநேரம் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த வித்தியாசத்தால்தான் அமெரிக்கர்கள் சில விஷயங்களில் நம்மைவிட முன்னேறி இருக்கிறார்களோ?
****
‘இன்டர்நேஷனல் ரோமிங்’ எனது அலைபேசியில் இருப்பதால், இங்கே வந்திறங்கியவுடனே ஓர் அழைப்பு வந்தது, இந்தியாவிலிருந்து. மூன்று நிமிடம் பேசினேன்.  240 ரூபாய்   ஆயிற்று! உடனே ஏர்டெல்லிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி: ‘ட்டி-மொபைலுடன் தொடர்புகொள்ளுங்கள். இனிமேல் இந்தியாவிலிருந்து வரும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு  30 ரூபாயும், நீங்கள் இந்தியாவிற்குச் செய்யும் அழைப்புகளுக்கு   40 ரூபாயும்தான் வசூலிக்கப்படும்’.  ஆனால் அதற்கு அவசியமில்லை என்றார்கள் குழந்தைகள். அவர்களுடைய அலைபேசியிலிருந்து இன்னும் குறைந்த கட்டணத்தில் பேசிவிடமுடியுமாம். மால்தூசியன் கொள்கையைப் பொய்யாக்கிவிடுகிறார்கள் குழந்தைகள்!
****
மே 31 , 2014  சனிக்கிழமை, நியூஜெர்சிஇன்று மாலை கலிபோர்னிய பயணம். நியூஜெர்சி / நியூயார்க்கிலிருந்து ஐந்துமணிக்கும் அதிகமான விமானப் பயணம். மொத்தம் ஆறுநாள் பயணம். சென்னையிலிருந்து வந்த துணிமணிகள் இஸ்திரி கலையாமல் இருப்பதால் அதிக வேலையில்லை. இன்று குளிர் குறைவுதான். கனமான மேலங்கிகள் தேவையில்லை.
****
சென்னையில் விமான நிலையத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில்  AT THE HELM  என்ற புத்தகம் வாங்கினேன். இந்த வாரம்தான் வந்ததாம்.  BHEL, MARUT UDYOG, STEEL AUTHORITY OF INDIA  என்னும் மூன்று மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அற்புதமாக நிர்வகித்து, ஐந்து பிரதமர்களின் பெருமதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவரும், மத்திய அரசில் தொழில்துறை செயலாளராகப் பணிபுரிந்தவருமான டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சுயசரிதைதான் அது.


‘வி.கே.’ என்று பரவலாக அழைக்கப்படும் அவருக்கு வயது  90.(பழைய தஞ்சை மாவட்டத்தின் கருவேலி கிராமத்தில் இவர் பிறந்த தேதி  1925ஜனவரி  14. பொங்கல் தினமோ?)  இப்போதும் பதவியில் இருக்கிறார்:  Chairman of the National Manufacturing Competitiveness Council. ஒரு கேபினெட் மந்திரியின் அந்தஸ்துள்ளது. இதற்குமுன் அவர் திட்டக் கமிஷனில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.


சாதாரணமாக அரசு ஊழியர்கள் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ஆண்டுகள்தான் பதவியில் இருக்க முடியும். வி.கே. அவர்கள் அறுபது ஆண்டுகள் இருந்திருக்கிறார்/ இருக்கிறார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் முதலிய மூன்று விருதுகளைப் பெற்றவர்.  IIM –Ahmedabad, IIM-Bangalore, IIT-Delhi  இவற்றின் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.


(இவருடைய மூத்த சகோதர் திரு வைத்தியநாதனும், ‘கல்கி’ சதாசிவமும் தான் பங்குதாரர்களாக இருந்து ‘கல்கி’ வார இதழை நடத்தியவர்கள். இப்போது வைத்தியநாதன் அவர்கள் சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.)


நம் காலத்தின் வெற்றிகரமான தமிழர்களில் வி.கே. அவர்கள் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. இந்த நூலில் இருப்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் அறுபதாண்டு காலத் தொழில் வளர்ச்சியின் சரித்திரம். கூடவே சில அரசியல் உண்மைகளும் உண்டு.


ஜூன் இறுதியில், அமெரிக்காவிலிருந்து வருவதற்குள் இந்த நூலைப் படித்து முடித்துவிடுவேன். பிறிதொருநாளில் முழுதான விமர்சனம் வரும்.


 2002 ஆம் ஆண்டு அப்துல் கலாம் வி.கே. யிடம் கேட்டாராம்: உங்கள் நிர்வாகத்துறை சாதனைகளைப் பற்றி ஏன் இன்னும் ஒரு நூல் எழுதவில்லை என்று. (அப்போது கலாம் அரசியலுக்கு வந்திராத நேரம்.) அதே போன்ற கேள்வியைக் கேட்ட இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த கல்வியாளர் திரு ஆர். சீத்தாராமன் அவர்கள். வி.கே. யின் ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது நூல் வந்திருக்கிறது. அப்துல் கலாம் படிக்கலாம். ஆனால் சீத்தாராமன்? அவர்  அமரராகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. (சீத்தாராமன், எனது மாமனார்.)

(வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ், விலை 599 ரூபாய்.)

 © Y Chellappa