சனி, ஜூன் 20, 2020

பொன்னித் தீவு-19 (நிறைவுப்பகுதி)

பொன்னித் தீவு-19

      -இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்     

  முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

(19) நெக்லஸ்.நெக்லஸ்

வாசுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையின் உரிமையாளரோ,   அல்லது வாடிக்கையாளர்கள் யாராவதோ பாம்பைப்  பார்த்து விட்டால் போதும், உடனே தாவிப் பிடித்து, நாலு காசு பார்த்து விடலாம். ஆனால் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. நேரம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அந்தப் பாம்பு அசையாமல் அதே இடத்தில் இருந்ததே ஆச்சரியம்தான்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக ஆப்பிள் பழங்கள் இருந்த இடத்திற்குப் போன வாசு, யாரும் கவனிக்காத விதமாக, தலையைக் கீழே குனிந்து கொண்டு “ஐயோ, பாம்பு! பாம்பு!”  என்று அலறினான். அத்துடன் ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கருவேப்பிலைக் குவியலின் மீது யாரும் அறியாதபடி வீசினான்.

அவ்வளவுதான், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடலானார்கள். அதுதான் சாக்கு என்று வாசு ஓடிச்சென்று தன்னுடைய பாம்பைத் தானே கெட்டியாகப் பிடித்து வெளியே எடுத்தான். அதற்குள் கடை உரிமையாளர் ஓடி வந்தார். வாசுவின் கையில் பாம்பைப் பார்த்தவுடன் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது.

"யாரப்பா நீ?  உனக்கு பாம்பு பிடிக்கத் தெரியுமா? சரி சரி, உடனே வெளியே போ" என்று பின்வாசல் வழியாக அவனை முன்னே தள்ளிக்கொண்டு, தான் பின்னே போனார். பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது போதாதா வாசுவுக்கு?

கடவுள்தான் காப்பாற்றினார் என்று மிகுந்த சந்தோஷத்துடன் “ரொம்ப நன்றிங்க! நல்லவேளை நான் ஆப்பிள் வாங்க வந்தேன். இந்தப் பாம்பைப்  பிடிச்சேன். இல்லாவிட்டால் எந்தக் குழந்தையை  இது கடித்திருக்குமோ, என்ன ஆகியிருக்குமோ?" என்று மிகவும் கவலை கொண்டவன் போலப் பேசிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.

ஒரு முள் புதரில் பதுக்கி வைத்திருந்த தன் பாம்புக் கூடையை எடுத்து அப்பாம்பை அதில் அடைத்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தன் தாயிடம்,"அம்மா பாம்புக்கு மாஸ்க் போட மாட்டாங்களா?"  என்றான்.

***

கையில் மாம்பழங்களுடன் செம்பகமும் அகிலாவும் யமுனா வீட்டினுள் நுழைந்தார்கள். பாம்பு களேபரத்தில் தனக்கு வேண்டிய கறிவேப்பிலையை எடுக்க மறந்த ஆச்சி, தன் பங்குக்குச் சில மாதுளம் பழங்களை வாங்கி வந்திருந்தார். செல்வம் அனைவரையும் வரவேற்றான். ராஜா வாசலிலேயே நின்று கொண்டான்.

வாய் பேச முடியாத செம்பகம், தன் முக பாவத்தின் மூலமும் சைகையின்  மூலமும் யமுனா கருவுற்றிருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகத்  தெரிவித்தாள்.

அகிலா தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக யமுனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். "அக்கா, நீங்கள் அம்மா வீட்டுக்குச் செங்கல்பட்டுக்குப் போகும்வரையில் உங்களை வாரம் ஒருமுறை நான் வந்து கவனித்துக் கொள்வேன்" என்றாள்.

"ரொம்ப நன்றி அகிலா" என்றான் செல்வம்.

கொஞ்ச நேரத்தில் சந்திரனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். தன்னை எதற்காக அகிலா  வரச்சொன்னாள் என்று அவனுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆச்சியும் இருப்பதைப் பார்த்தவுடன் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் இருந்தது. அதேசமயம், நெக்லஸ் விஷயத்தில் தனக்கு எந்த இலாபமும் ஏற்படவில்லை என்பதால் பழி சுமக்கும் வேலையும் தனக்கு இருக்காது என்று நம்பினான்.

அவனை விடவும் அகிலாவின் நெஞ்சம்தான் குற்ற உணர்வால் குறுகுறுத்துக்கொண்டிருந்தது. யமுனாவின் நெக்லஸை பாரஸ்மல்லிடம் விற்றவள் அவள்தானே! இப்போது பணம் தன்னிடம் இருக்கிறது; ஆனால் அந்த நெக்லஸை பாரஸ்மல் யாருக்கோ விற்றுவிட்டாராமே!

அகிலா எழுந்து உள்ளே போனாள். அனைவருக்கும் யமுனா காபி தயாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோளில் கை வைத்து, "அக்கா ஒரு விஷயம் உங்களிடம் பேச வேண்டும், வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று குசுகுசுத்த குரலில் கூறினாள்.

பெரிய பாத்திரத்தில் டிகாக்ஷனில் பாலைக் கலந்து சர்க்கரை போட்டு ஆற்ற ஆரம்பித்த யமுனா, அகிலாவை உற்றுப்பார்த்தாள்.

"அக்கா,  உங்கள் நெக்லஸ்  தொலைந்து விட்டதாமே, உண்மையா?" என்று கேட்டாள்.

யமுனாவின் முகத்தில் சற்றுமுன்வரை இருந்த மகிழ்ச்சி மறைந்து ஆழமானதொரு வருத்தம் படரத்தொடங்கியது. ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.

அதற்குள் அங்கு வந்த செல்வம், "இவள் போய் போலீசில் புகார் வேறு செய்திருக்கிறாள். அவர்கள் என் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக என் மாமனார் வந்து விஷயத்தை முடித்து வைத்தார்" என்றான்.

முழு கடப்பாரையைச் சோற்றில் வைத்து விழுங்கும் திறமைசாலியான ஆச்சி, "அப்படியில்லை செல்வம்! புஷ்பா வந்தபோது நான்தான் அவளிடம் பேசி, கொடுப்பதைக் கொடுத்து விஷயத்தை முடித்தேன்" என்றார். யமுனாவும் ஆம் என்று தலையசைத்தாள்.

"அப்படியா ஆச்சியம்மா?" என்று கிண்டலாகக் கேட்டான் சந்திரன்.

ஒருவேளை,  தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று ஆச்சிக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்வதற்காக, "அது ஒரு பெரிய கதை! நீ படிக்கிற பையன், உனக்கு  ஏன் அதெல்லாம்?" என்று கண்டித்தார்.

யமுனா அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். தானும் காப்பி  டம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

அகிலாவும் செம்பகமும் தன்னிடம் மாம்பழங்களைக் கொடுத்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி தெரிவித்தாள்.

ஆனால் ராஜா, "மேடம் அதற்குள்ளாகவே நன்றி சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

செம்பகமும் சைகையால் அதையே சொன்னாள். அவள் கையில் சிறிய துணிப்பை இருந்தது.

அகிலாவும் யமுனாவைப் பார்த்து,"ஆமாம் அக்கா, எனக்காகவும் நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். ஒரு விஷயம் இருக்கிறது" என்று தன் கைப்பையைக் காட்டினாள்.

செல்வம் ஆச்சரியத்துடன் அகிலாவையும் செம்பகத்தையும் மாறிமாறிப் பார்த்தான்.

அகிலா முந்திக் கொண்டாள். "செல்வம் சார்! தொலைந்துபோன நெக்லஸைக்  கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அது பணமாக மாறி விட்டது" என்று தன் கைப்பையிலிருந்து ரப்பர் பேண்ட் போட்ட ரூபாய் நோட்டுக் கற்றையை வெளியே எடுத்தாள்.

உடனே ராஜா, "அது எப்படி முடியும்? அந்த நெக்லஸ் கொஞ்சமும் அலுங்காமல் நசுங்காமல் என்னிடம் இருக்கிறதே!" என்றான்.

யமுனாவும் செல்வமும் சந்தோஷ மிகுதியால் இவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு கேட்க முற்பட்டார்கள். ஆனால் ஆச்சியோ, தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் உணர்ந்தவராக, சந்திரனைக் கூப்பிட்டு, "ஒரு பத்து நிமிடம் என் வீட்டுக்கு வந்து போயேன்! சுவர்க் கடிகாரத்திற்கு பேட்டரி மாற்ற வேண்டும்" என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்.

யமுனாவின் நெக்லஸ் ராஜாவிடம் இருப்பதான செய்தியைக் கேட்டதும் அகிலாவுக்குப் புல்லரித்தது. "ராஜா நீங்கள் சொல்வது உண்மையா? பாரஸ்மல் லிடமா வாங்கினீர்கள்?" என்றாள் மகிழ்ச்சியுடன்.

ராஜா விஷயத்தை விளக்கினான். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் புரிந்த சேவைக்காகத் தன் கம்பெனி கொடுத்த பரிசுத் தொகையில் அந்த நெக்லஸை வாங்கி, செம்பகத்தின் ஒரே நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியதைச் சொன்னான்.

செம்பகம் ஒரு பேப்பரை எடுத்து "ஆமாம் அகிலா! யமுனா அக்காவின் நெக்லஸைத் தான் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்" என்று எழுதிக்காட்டினாள்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது அகிலாவுக்கு. தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக் கற்றையை ராஜாவிடம் கொடுத்தாள்.

"ராஜா, தயவுசெய்து இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நெக்லசை என்னிடம் கொடுங்கள். மேற்கொண்டு பணம் தேவை என்றாலும் நான் தந்து விடுகிறேன். இது யமுனாவுக்குச் சேரவேண்டியது" என்று பணிவோடு கூறினாள்.

ராஜாவும் செம்பகமும் சிரித்தார்கள். "நாங்களும் அதற்காகத்தான் வந்திருக்கிறோம். இதை மிஸ்டர் செல்வம் ஒரு மார்வாடி இடம் அடகு வைத்திருந்தார். பிறகு அவருக்கே விற்றுவிட்டார். அதைத்தான் நான் பணம் கொடுத்து வாங்கி வந்தேன். இது செல்வம் வீட்டு நெக்லஸ் தான்" என்றான்.

"ஆனால் இந்த நெக்லஸைத் திருப்பிக் கொடுப்பதற்காக எங்களுக்குப் பணம் எதுவும் வேண்டாம்" என்று அவன் சொன்னதும் அகிலா ஆச்சரியத்துடன் யமுனாவைப் பார்த்தாள்.

தனக்குத் தெரியாமல்  நெக்லஸை அடகு வைக்கும் அளவுக்குத் தன் கணவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்திருக்க முடியும் என்று யமுனா திகைத்தாள். இது ஒன்று மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது நகைகளையும் அடகு வைத்து இருக்கிறானா என்று அவநம்பிக்கை எழுந்தது.

செல்வம் துடித்துப் போனான். "மிஸ்டர் ராஜா! வார்த்தையை அளந்து பேசுங்கள். நான் எதற்கு என் வீட்டு நகையையே திருடி அடமானம் வைக்க வேண்டும்? என்ன உளறல் இது?" என்று அவனை அடிக்கவே போய்விட்டான்.

உடனடியாக அவன் அருகில் வந்து சமாதானப்படுத்தினாள் அகிலா. "இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!" என்று கூறி நிறுத்தினாள்.

அப்போது சந்திரனும் ஆச்சியும் வந்து சேர்ந்தார்கள்.

நிச்சயம் தன்னுடைய பெயரைத்தான் சொல்லப் போகிறாள் என்று ஆச்சி நடுநடுங்கி விட்டார். நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. சந்திரனும் அச்சத்தில் ஆழ்ந்தான்.

"மனிதனும் மிருகமும் சேர்ந்த செய்த காரியம் இது" என்று சிரித்தாள் அகிலா.

"ஆமாம் யமுனா! மொட்டைமாடியில் நானும் சந்திரனும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குரங்குப் பட்டாளம் நிறைய வீடுகளில் இருந்து பல சாமான்களை அள்ளிக்கொண்டு வந்து போட்டது. அதில் இந்த நெக்லசும் ஒன்று. அதனால் இதை யாருடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? யார் வேண்டுமானாலும் தங்களுடையது என்று கூறலாமே! ஆகவே உண்மையைக்  கண்டுபிடிக்கும் வரை என்னிடமே இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டேன்" என்று அகிலா முடித்தவுடன் ஆச்சி மறுஉயிர்  பெற்றவர் போலத் தெம்புடன் நெற்றியைத் துடைத்துக் கொண்டார். சந்திரனும் அதுபோலவே உணர்ந்தான். எப்படியும் அகிலா தன்னை காட்டிக் கொடுக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.

அதன் பிறகு நடந்ததை எல்லாம் வரிசையாகச் சொன்னாள் அகிலா. ஓர்  ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்துவதற்காக நகையை வைத்து பணம் பெற்றதையும், தகப்பனாரிடம் இருந்து பணம் வந்தவுடன் அதை மீட்டு விடலாம் என்று இருந்ததையும் ஆனால் மேற்கொண்டு செலவு ஏற்பட்டபோது நகையை விற்றுவிட நேரிட்டதையும் வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அந்தப் பெண் தொழிலாளிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவுகளை ராஜாவின் கம்பெனி முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதால், அந்தப் பணத்தை இப்போது யமுனாவுக்குக் கொடுப்பதற்காகவே இங்கு வந்ததாகவும் அகிலா கூறினாள்.

செல்வத்துக்கு மட்டுமல்ல ராஜாவுக்கும் இந்த விஷயம் இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. ஒரு திருட்டுப் பழியைத் தன்மேல் சுமந்துகொண்டு அகிலா மனத்தாலும் தொழில் திறமையாலும் மீராபாய்க்கு  ஆண் குழந்தை நலமாகப் பிறப்பதற்குக் காரணமாக இருந்ததை எண்ணும்போது அவனுக்கும் செம்பகத்திற்கும் கண்கள் பனித்தன.

"ஆனால் இந்த நெக்லஸை உங்கள் பணத்திற்கு நாங்கள் விற்பதாயில்லை. அப்படித்தானே செம்பகம்?" என்று மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் ராஜா. அவளும் ஆமாம் என்பதுபோல் மலர்ச்சியோடு சிரித்தாள்.

தன்மேல் வரவிருந்த பழி எப்படியோ விலகிப் போனதை அறிந்த ஆச்சி, நெக்லஸ் விஷயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்று துடித்தார். 

"ஏன் அப்படிச் சொல்கிறாய் செம்பகம்? உன் கணவர் எவ்வளவு ரூபாய்க்கு இந்த நெக்லஸை மார்வாடியிடம் இருந்து வாங்கினாரோ,  அந்தப் பணத்தை அகிலாவிடம் இருந்து நீ வாங்கிக் கொள்ள வேண்டும் தானே! அதில் என்ன சிக்கல்?" என்றார் ஆச்சி.

"சிக்கல் இதுதான் ஆச்சியம்மா! இந்த நெக்லஸை யமுனா அக்காவுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரிசாக அளிக்கப்போவதாகச் செம்பகம் முடிவு செய்திருக்கிறாள்" என்று ராஜா சொன்னவுடன் அங்கிருந்த அனைவர் முகத்திலும் நம்ப முடியாத ஆச்சர்யம் தோன்றியது.

யமுனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னுடைய நெக்லஸ் தன்னிடம் வந்து சேர்ந்தால் போதும் என்று தோன்றியது. தன்  கணவன்மீது  எந்தக் குற்றமும் இல்லை என்பதே அவளுக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. 

ராஜா கூறினான்: "செல்வம் சார்! நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்போதும் மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள். இந்தக்  கொரோனா காலத்தில் எங்கள் கம்பெனியில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நான் செய்த மனப்பூர்வமான சேவைக்காக கம்பெனி எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறது. அதில்தான் இந்த நெக்லசை வாங்கினேன்.

"ஆனால் இந்த நெக்லஸ் வந்த சில நாட்களிலேயே கடவுள் எங்களுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்துவிட்டார். ஆகவேதான் அந்த இரண்டாவது பரிசை நாங்கள் வைத்துக்கொண்டு,  முதல் பரிசை யமுனா அக்காவிற்கே கொடுத்து விடுவது என்று முடிவு செய்தோம்" என்றான்.

யமுனா, செம்பகத்தின் நல்ல மனதை அப்போதுதான் புரிந்து கொண்டவளாக, அருகில் வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். "செம்பகம், அந்த இரண்டாவது பரிசு என்னவென்று சொல்ல மாட்டாயா?" என்றாள்.

"போங்க அக்கா" என்று சொல்வதுபோல் செம்பகத்தின் உதடுகள் அசைந்தன. முகத்தில் நாணம் படர்ந்தது. உடனே அதைப் புரிந்துகொண்ட ஆச்சி, "அப்படியா விஷயம்? கள்ளி! நீ உண்டா யிருப்பதைச் சொல்லவே இல்லையே!" என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினார்.

செம்பகம் தன் பையிலிருந்து நெக்லஸை எடுத்து யமுனாவிடம் கொடுத்தாள். அவள் அதை செல்வத்திடம் கொடுத்தாள்.

அகிலா முடியவே முடியாது என்பது போல் தலையை ஆட்டினாள். "இந்தப் பணம் அந்த நெக்லசுக்கான விலை. இதை  ராஜா பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்" என்று அவன் கையில் திணித்தாள்.

"ஆமாம் ராஜா! உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது. கடவுள் உனக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தில் புது நெக்லஸ் வாங்கிச் செம்பகத்துக்குப் போடு!" என்று முடித்து வைத்தார் ஆச்சி.

குடியிருப்பு சங்கத்தின் செயலாளரான ஹரிகோபால் செல்வத்தோடு பேசுவதற்காக வந்தவர், இதுவரை நடந்த சுவாரசியமான உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தார்.  "ராஜா செல்வம் நீங்கள் இரண்டு பேரும் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் நாளை வியாழக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு போய் ஒரு வடை மாலை சாத்தி விடுங்கள். இல்லையென்றால் இந்த நெக்லஸை ஞாபகம் வைத்துக்கொண்டு மறுபடியும் அந்த ஆஞ்சநேயர் நம் குடியிருப்பில் ஏதாவது விளையாட ஆரம்பித்து விடுவார்" என்றார்.

எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

செல்வம் தன் கையாலேயே நெக்லஸை யமுனாவுக்கு அணிவித்தான். "இனிமேலாவது ஜாக்கிரதையாக இரு" என்றான்.

சந்திரன் சற்றே சத்தமாக "யாராவது உடனே ஐந்நூறு ரூபாய் கொடுங்கள்" என்றான். "நாளைக்கு வடைமாலை என்றால் இன்று போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டாமா?"

செம்பகம் கருவுற்றிருப்பதை அறிந்த வக்கீல் மாமிக்கு அளவற்ற சந்தோஷம். அகிலாவைப் பார்த்து, "நீ எம்பிபிஎஸ் முடிப்பதற்குள்ளேயே கைராசியான டாக்டர் ஆகிவிடுவாய் போலிருக்கிறதே! வாரம் ஒரு முறை யமுனாவைப் பார்க்க வரும்போது செம்பகத்தையும் பார்த்துவிடவேண்டும், சரியா?" என்றார்.

அகிலாவின் முகத்தில் சம்மதப்  புன்னகை மிளிர்ந்தது.

(முற்றும்)

26 கருத்துகள்:

  1. கடகடவென்று முடிச்சுகளை அவிழ்த்து அழகாக சரியாக இணைத்து அதற்குள் முடித்து விட்டீர்களே... நிறைவு.

    பதிலளிநீக்கு
  2. முடிவுப் பகுதி அல்ல, நிறைவுப்பகுதி. மிகவும் நிறைவாக இருந்தது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சிக்கு அவப்பெயர் வராமல் முடிக்கவேண்டுமே என்று தவித்தது எனக்கலவா தெரியும்! தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நனறி ஐயா!

      நீக்கு
    2. தங்கள் விருப்பப்படியே 'நிறைவுப் பகுதி' என்று மாற்றிவிட்டேன். நன்றி.

      நீக்கு
  3. சுபம்... சிறப்பான முடிவு. ஆச்சியையும் காப்பாற்றிவிட்டீர்களே!

    சிறப்பான தொடர்கதை. விறுவிறுப்பு குறையாமல் தொடர்ந்ததற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வாசிப்புக்கும் கருத்துரைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. நிறைவான பகுதி. விரைவில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா...அனைவரையும் ஒரு சேர இணைத்து சந்தோசமாக முடித்தது பழைய திரைப்படங்களை பார்த்தபோது ஏற்பட்டத் திருப்தியைத் தந்தது.வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவகையில் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது! பழமையில் தான் எத்தனை புதுமை! தங்கள் தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி!

      நீக்கு
  6. ஹை சுபம் போட்டிவிட்டீர்கள்! எப்படியோ ஆச்சியை வில்லியாக்காமல் காப்பாற்றிவிட்டீர்கள்! ஆச்சியும் உணர்ந்திருப்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சிக்கு அந்தக் குடியிருப்பில் செல்வாக்கு இருப்பதை ஓரிடத்தில் எழுதியிருந்தேனே! எனவே அவர்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டி இருந்தது. (இன்னொரு காரணம்: பெண்களை ஏன் எதிர்க்கவேண்டும்?)

      நீக்கு
  7. ஒரு நெக்லஸ் காணாமல் போனதில் பல விஷயங்களைக் கதையில் சொல்லியிருக்கீங்க. யார் யாராக இருக்கும் என்று யூகித்து கடைசியில் கதையில் கூட யார் மனதும் நோகாமல் முடித்தது நன்றாக இருக்கிறது சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே இப்படி முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எல்லாம் ஆஞ்சநேயசுவாமியின் உபயம்!

      நீக்கு
  8. தங்கள் விரிவான மதிப்பீட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  9. கதை கற்பனைச் சம்பவம்போல் இல்லாமல் காலப்போக்கில் அன்றாடம் நடக்கும் உண்மைச் சம்பவங்களைக் கையாண்ட விதம் பாராட்டுக்குரிய ஒன்று.யாருக்கும் தொல்லைகள் இல்லாமல் இருக்க அரவிந்த் அன்னை முன் தியானம் கடவுள் நம்பிக்கைக்கும்,வாழ்க்கைக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.கல்லூரி நிர்வாகம் குறித்து கூட எழுதி இருக்கலாம்.கன்னித்தீவு போல் தொடரும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. இருப்பினும் கதையின் முடிவு பாராட்டத்தக்கது.வாழ்க வளர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! வலைப்பதிவில் ஒரு தொடர்கதை எழுதுவது மிகவும் சவாலான செயல். ஏனெனில், Facebook, Twitter, WhatsApp களில் நேரத்தைச் செலவழித்தபிறகு மக்களிடம் வலைப்பதிவுகளைப் படிப்பதற்கு நேரமோ, உடலாற்றலோ இருப்பதில்லையே!

      19 அத்தியாயங்கள் வரை சுமார் ஐன்னூறு வாசகர்கள் விடாமல் படித்திருப்பது எனக்கே வியப்பாக இருக்கிறது. உங்கள் விருப்பபடியே 'பொன்னித்தீவு' இரண்டாம் சீசன் விரைவில் ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி.

      நீக்கு
  10. பார்க்கப் போனால் காணாமல் போன ஒரு நெக்லஸைச் சுற்றித் தான் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நெக்லஸே கதை அல்ல. நெக்லஸ் சும்மாக்கானும் எடுத்தாண்ட ஒரு வஸ்து என்ற அளவிலேயே என் வாசிப்பில் உணர்ந்தேன். அந்த நெக்லஸை வைத்துக் கொண்டு பூ சுற்றுகிற (காதில் அல்ல; உண்மை நிகழ்வுகளைப் போலவே) விஷயங்கள் எத்தனை எத்தனை?.. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏதோ ஒரு விஷயம் செல்லப்பா சாரிடம் மாட்டிக் கொள்ளும். கதையை விட அப்படி மாட்டிக் கொள்கிற விஷயமே எனக்குப் பெரிதாகப் போகும்.
    அதைப் படித்து ரசிப்பதற்காகவே கதையைப் படித்தேன் என்றும் சொல்லலாம்.

    சொல்லப்போனால் என்றைக்குமே எழுதுகிற கதை எனக்குப் பெரிசாகத் தெரியாது.
    என் கதை உள்பட எனக்கு அப்படித்தான். கதை என்ற பெயரில் கடுகளவு விஷயம் ஒன்றை பொத்தி வைத்துக் கொண்டு அது ஒரு கதை என்று கொஞ்சம் கூட யாரும் உணர்ந்து விடாதபடிக்கு அதைச்சுற்றி ஸ்வெட்டர் பின்னுகிற மாதிரி வெவ்வேறு விஷயங்களை கோர்த்து வாங்கி முன்னால் பின்னால் திருப்பி வேண்டுகிற இடத்தில் முடிச்சுப் போட்டு கடைசியில் உதறி மடிச்சுக் கொடுத்து 'இதான் ஐயா, கதை' என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறோமே, சத்தியமாக அதான் கதை. இந்த மாதிரியான கதை நெசவில் செல்லப்பா சார் கில்லாடியாகத் தெரிகிறார்.

    19 அத்தியாயங்களும் எழுத்துக் கடலில் மூழ்கி மூச்சடக்கி எடுத்துத் தந்த முத்துக்கள்!..

    வாழ்த்துக்கள், ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூத்த எழுத்தாளரான தங்களின் மதிப்பீடு மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றிகள் ஐயா!

      நீக்கு
  11. மிக அருமையான கதை. நாட்டு நடப்பை அப்படியே புட்டு புட்டு, நடு நடுவே ஊடாக சொன்னீர்கள்.

    எவ்வளவு பாத்திரங்கள். ஆப்பப்பா.எல்லாவற்றையும் கையாண்ட விதம் மிக அருமை.

    நீங்கள் குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதலாமே!

    இவ்வளவு ஏன்? சினிமாவிற்கே கதை, வசனம் எழுதலாம்.

    பணிவுடன் ,

    S PARASURAMAN. ANNA NAGAR.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி பரசுராமன்! பத்திரிகைகளுக்கு அனுப்பினால் ஆறுமாதங்களாவது ஆகும், வெளியிடுவார்களா இல்லையா என்று தெரிவதற்கு! அவ்வள்வு காலம் யார் பொறுப்பது? அதனால்தான்...!

      நீக்கு
  12. கதையில் பல முடிச்சுகள், அத்தனையையும் சிடுக்கு விழாமல் அழகாக அவிழ்த்து விட்டீர்கள். பாரட்டுகள்!

    பதிலளிநீக்கு