வியாழன், ஆகஸ்ட் 01, 2013

150 பக்க நூலுக்கு பாரதியாரின் 57 பக்க முன்னுரை



இந்தியாவின் ஆன்மிகப் பொக்கிஷமாகவும் வேதங்களின் சாரம்சமாகவும் கருதப்படுவது பகவத்கீதை.

ஆதிசங்கரரில் தொடங்கி, விவேகானந்தரும், ராமகிருஷ்ணமடத் துறவியர் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அரசியல் போராட்ட வீரர்களாக விளங்கிய பால கங்காதர திலகரும், மகான் அரவிந்தரும்,  நம் காலத்தில் தமிழ்வாணனும், கண்ணதாசனும் உரை எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக அமைந்தது பாரதியாரின் உரை. கையடக்கப் பதிப்பாகப் பலர் வெளியிட்டிருக்கிறார்கள். என் கையில் இருப்பது சாருப்ரபா (நக்கீரன்) வெளியீடு. விலை பத்து ரூபாய்.
பகவத் கீதை, மகாபாரதப் போர்முனையில் அர்ச்சுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் போதித்த வாழ்க்கைத் தத்துவம் நிரம்பிய, கவிதை வடிவில் அமைந்த,  சொற்பொழிவின் தொகுப்பாகும்.  கடந்த ஐம்பதாண்டுகளில் பகவத்கீதையை உலகெங்கும் பரப்பிய பெருமை ஸ்வாமி சித்பவானந்தா, ஸ்வாமி சின்மயானந்தா, மஹரிஷி மஹேஷ் யோகி, ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தின் பக்திவேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா   போன்றவர்களைச் சாரும்.

இது ஞானம் போதிக்கும் நூலா, கடமையைப் போதிக்கும் கர்மநூலா, கடவுளர் மீது பற்றுதலைப் போதிக்கும் பக்தி நூலா என்று ஐயம் தொடர்ந்து நிலவுவதால், ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் யாராவது ஒரு மேன்மையாளர் இச்சர்ச்சைகளைத் தொடர்ந்து நடத்தி, பகவத்கீதையின் மேல் மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்து வருகிறார்கள்.

பகவத்கீதை, மேலாண்மைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லும் அற்புதமான நூல் என்றும் பல அறிஞர்கள் தடிமனான புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தமிழர்களைப் பொறுத்தவரை, இந்து மதத்தை இகழ்வதைப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகக் கருதுபவர்கள் பல ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததாலும், அவர்களை அண்டிப்பிழைத்துக் காலத்தை ஓட்ட வேண்டியவர்களாகப் பல அறிஞர்கள் தங்களைக் காட்டிக்கொண்டு சுய லாபமடைய முற்பட்டுவிட்டதாலும், கல்வித்துறையானது, கலை-இலக்கியம்-சரித்திரம்-அறிவியல்- என்பவைகளை ஆதரிப்பதை விட்டு அறவே விலகி, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையே ஊக்குவிக்க முனைவதாலும், இந்து மதம் பற்றிய அற்புதமான தமிழ் நூல்களே கூட இக்கால இளைஞர்களிடம் சரியான முறையில் இன்னும் சென்றடையவில்லை என்பதை அறிவோம். எனவே பகவத்கீதையைப் பற்றி எத்தகைய கவனிப்பு இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரையிலான பதிப்புகளில் திருக்குறள் கிடைக்கிறது. எனினும் எவ்வளவு வீடுகளில் திருக்குறள் இன்று இருக்கிறது? வைத்திருப்பவர்களில் எவ்வளவு பேர் தங்கள் குழந்தைகளிடம் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள்? வாய்விட்டுப் படிக்கும் பழக்கமே இல்லாத ஒரு மௌனக் கல்வி தான் இன்று நிலவுகிறது. தமிழைப் பள்ளிகளில் படிக்காமலே போவது ஒருவிதம் என்றால், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழ் இலக்கியங்களைப் பற்றித் தெரியாமல் வளருவது எத்தகைய சோதனையான காலம்! கணியன் பூங்குன்றனைப் பற்றி இருபத்தைந்து வயதுக்குக் குறைந்த தமிழர்களுக்கு எவ்வளவு தெரியும்? இதில் பகவத்கீதையைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள்?

நம் ஊரில் சில அரசியல்வாதிகள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றபிறகு, உறுதிமொழி (‘பதவிப்பிரமாணம்’) எடுத்துக்கொள்ளும்போது “கடவுளின் பெயரால்” என்று சொல்லிக்கொள்ள முன்வருவதில்லை. ஆனால், அனைத்து மதங்களுக்கும்   சுதந்திரம் வழங்கியுள்ள அமெரிக்க நாட்டில், ஜனாதிபதியாக வருபவர்கள், தத்தம் குடும்பத்து  பைபிளைத் தொட்டுக்கொண்டு ‘கடவுளின் பெயரால்’ தான் உறுதிமொழி எடுக்கிறார்கள். தான் ஒரு கிறித்துவன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்கள் வெட்கப்படுவதில்லை. அரை கிறித்துவர்- அரை முஸ்லிம் என்ற நிலையிலும், ஒபாமா பைபிளின் பெயரால் தான் உறுதிமொழி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துவாகப் பிறந்தவர்கள் இதுவரை பகவத்கீதையைப் பற்றித் தெரியாமல் இருந்தால், இனியாவது தெரிந்துகொள்ள முயல்வது வாழ்வின் உயர்ந்த நோக்கங்களுக்கு உதவியாக இருக்கும். அதற்குப் பாரதியாரின் கையடக்க உரை நூல் பெரிதும் துணை புரியும்.
****

பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றின் பெயரும் ‘யோகம்’ என்று முடியும். இந்தப் பதினெட்டு அத்தியாயங்களுக்கும் எளிய தமிழில் பாரதியார் எழுதியுள்ள உரை 150 பக்கம் வருகிறது. ஆனால் அதர்கு அரியதொரு முன்னுரையை அவர் எழுதியிருக்கிறார். அது மட்டும் 57 பக்கம் வருகிறது! முன்னுரையை மட்டும் படித்துவிட்டுப் பின்னால் வரும் பகவத்கீதையைப் படிக்காமலே விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுமளவுக்கு உரிய எடுத்துக்காட்டுக்களுடனும் அரிய விளக்கங்களுடனும் எழுதியிருக்கிறார் பாரதியார். அவரது கவிதைகள் அடைந்த புகழை, அவரது உரை நடை எழுத்துக்கள் அடையவில்லை என்பதால், இந்த முன்னுரையும் இதுவரை அதிகம் பேரைச் சென்று சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் எனது பணியில் இன்று இந்த முன்னுரையின் சில முக்கிய பகுதிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.                                           
****
(முன்னுரையின் 5ஆம் பகுதி இது)

பகவத்கீதை கர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கிறார்கள். அதாவது ‘மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே’ அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமாக மோட்ச சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள் கருதலாயினர்.  அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும் பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும் திரும்பத் திரும்பத் ‘தொழில் செய்; தொழில் செய்; தொழிலை விட்டு விடாதே; தொழில் செய்’ என்று போதிக்கிறான். இதனின்றும், அதனை வெறுமே தொழில்நூல் என்று பலர் கணித்துவிட்டார்கள். 
இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று; அதனை என்ன நிலையிலிருந்து என்ன மாதிரியாகச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிகமிக முக்கியமாகக் கொள்ளத்தக்கது.

பற்று நீக்கித் தொழில் செய்; பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இது தான் முக்கியமான பாடம். தொழில் தான் நீ செய்து தீர வேண்டியதாயிற்றே! நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே! எனவே, அதை மீண்டும் மீண்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வகைகளில் மாட்டிக்கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே, அவற்றால் பந்தப்படாதே, தளைப்படாதே – இது தான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுக்களையும் களைந்துவிட்டு, மனச்சோர்வுக்கும், கவலைக்கும், கலக்கத்துக்கும், பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. ‘ஸம்சயாத்மா விநச்யதி’ – ஐயமுற்றோன் அழிவான் என்று கண்ணபிரான் சொல்லுகிறான்.

‘ஆத்மாவுக்கு நாசத்தை விளைப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், கோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.’ இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தை பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல். கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தை கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும், காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
(பகுதி 6இல் இருந்து)

பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச்சாபம்; நலியும் நரகமும் நைந்தன; நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை; கலியும் கெடும், கண்டு கொண்மின்’ என்று நம்மாழ்வார் திருவாய்மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு பக்தி தான் சாதனம். பக்தியாவது, ‘ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்’ என்ற உறுதியான நம்பிக்கை.
‘வையகத்துக்கில்லை மனமே, உனக்கு நலம்
செய்யக்கருதி இது செப்புவேன் – பொய்யில்லை;
எல்லாம் அளிக்கும் இறை நமையும் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்’. (குறிப்பு: இது பாரதியின் கவிதை)

இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறான்.

‘எல்லா ரகசியங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ரகசியமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீண்டுமொருமுறை சொல்லுகிறேன்; கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டமானவன் ஆதலால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்’. (கீதை 18ஆம் அத்தியாயம் 64ஆம் சுலோகம்.)
‘எல்லாக் கடமைகளையும் பரித்தியாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன். துயரப்படாதே.’ (கீதை 18ஆம் அத்தியாயம் 66ஆம் சுலோகம்.)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கைகளையும் தூக்கிவிடுவது போல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவரும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது எவ்வித பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புக்களும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண் புக வேண்டும் என்று ஸ்ரீ ராமானுஜாசாரியார் உபதேசம் புரிந்தனர்.
பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலுரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டிருக்கிறது. இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக் கொண்ட பிறகுதான், கண்ணபிரான் அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெற, துச்சாதனன் கை சோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தை பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்,

மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை
விட்டங் கைத்தலை
வைத்தவளச் சங்கெடுத்தான் வாழ்வு’

என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லி யிருக்கிறார்.’உண்மையாகிய வெண்சங்கைத் தரித்தவன், பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்து முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவனாகிய திருமாலுக்கு வாழ்விடம்’ (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே’

என்ற நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரம பக்தியின் இலக்கணத்தைக் குறிப்பனவாம். ‘தம்மை ஒரு கற்றூணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை’ என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.
இனி, ‘இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல்’ அவசியம் என்கையில் , அப்போது கடவுளை நம்புவது எதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சம் தீர்த்துக் காப்பான் என்று எதிர்பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும் வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் – எல்லாம் கடவுள் செயலாகையாலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத்கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுளின் துணை எதன் பொருட்டு? ‘நம்மைக் கற்றூணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலினுள் வீழ்த்தினால் நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்துவிடுதல் பொருந்துமன்றி, அப்போது நமச்சிவாய, நமச்சிவாய என்று கூவி நம்மைக் காத்துகொள்ள ஏன் முயல வேண்டும்?’ என்று சிலர் ஆட்சேபிக்கலாம். இத ஆட்சேபம் தவறானது. எங்ஙனமெனில்; சொல்லுகிறேன்.

முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை-தீமைகளை சமமாகக் கருதி, நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனம் சோர்ந்து கடவுளின் நம்பிக்கையை இழந்துவிடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகுகிறான்.
அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மைவிட்டு நழுவி விடுகின்றன. இந்த உலகத்திலேயே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்திய ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும் எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருத வேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய வினைகளையெல்லாம் அறவே மறந்துபோய் பித்தனாய்விட வேண்டுமென்பது கருத்தன்று...........
ஞானாக்னிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே’ – ஞானத்தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். வாயிலாலேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின்.

அவனன்றி ஓரணுவும் அசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்ய வல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுதும் நம்பி விட்டோமாதலின்.
‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’. இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் – எல்லாம் தானேயாகி நிற்பான்.

அவனை நம்பினோர் செய்யத்தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல்; எதற்கும் கவலைப்படாதிருத்தல்; எதனினும் ஐயுறவு பூணாதிருத்தல்.
‘ஸம்சயாத்மா விநச்யதி’ – ஐயமுடையோன் அழிவான். நம்பினவன் மோட்சமடைவான்.
****
© Y.Chellappa
Email: chellappay@gmail.com

12 கருத்துகள்:

  1. முன்னுரையின் சில பகுதிகளை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா...

    முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. Chellappa YagyaswamyJuly 31, 2013 at 7:25 AM
    என்னமாக் கலக்கறீங்க போங்க. ஒங்க அசராத ஒழைப்புக்கு வாழ்த்துக்கள்.

    இதுவல்லவோ தமிழ்... மன்னிக்கவும் ஐயே... சே... ஐயா.... மனதில் எதுவும் வைத்துக் கொள்(ல்)வதில்லை

    இதுவல்லவோ டமிழ்...!

    வாழ்க... வளர்க... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வையகத்துக்கில்லை மனமே, உனக்கு நலம்
    செய்யக்கருதி இது செப்புவேன் – பொய்யில்லை;
    எல்லாம் அளிக்கும் இறை நமையும் காக்குமென்ற
    சொல்லால் அழியும் துயர்’.
    பாரதியின் பாடலைத் தந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. //அவனை நம்பினோர் செய்யத்தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல்; எதற்கும் கவலைப்படாதிருத்தல்; எதனினும் ஐயுறவு பூணாதிருத்தல்.// இதுதான் உண்மையான சரணாகதி. ஸ்ரீவேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே!.. அந்த நிலை அடைந்தவர்க்கு அல்லல் ஏதும் கிடையாது!.. மிக உயர்ந்த விஷயம் எளிமையான விளக்கம். நன்றி ஐயா!..

    பதிலளிநீக்கு
  5. மிகத் தீவிரமான முயற்சி. நல்லதொரு பதிவு!
    வாழ்த்துகள் சார்!.

    பதிலளிநீக்கு
  6. இதுவரை பகவத்கீதை படிக்காதவர்கள் தங்களது கட்டுரையைப் படித்தபின் பகவத்கீதையைப் படிக்க ஆரம்பித்துவிடுவர். திருக்குறள் போல ஒவ்வொருவர் இல்ல நூலகத்திலும் பகவத்கீதை இடம்பெறவேண்டும் என்பது என்னுடைய அவாவும்கூட. எனது இல்ல நூலகத்தில் பகவத்கீதை உள்ளது.

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    கீதையின் சொற்களைக் கேட்டுவந்தால் வாழ்கையெனும்
    பாதை மணக்கும் படா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன் பிரான்சு

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வருகை தமிழ் போல இனிக்கிறது. நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  9. அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றி.

    டிடி போகாத இடமே இல்லை போலிருக்கு! :))))

    பதிலளிநீக்கு
  10. பற்று நீக்கித் தொழில் செய்; பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இது தான் முக்கியமான பாடம். //

    பாரதியாரின் முன்னுரை மணி மகுடத்தை அறியத்தந்தமைக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு