செவ்வாய், அக்டோபர் 16, 2018

உசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்


பதிவு 06/2018
உசிலம்பட்டி ரவுடியும் மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்

ஒருநாள் புதன்கிழமை. உசிலம்பட்டியில் வாரச்சந்தை. பயங்கரமான கூட்டம். பேருந்து நிலையத்திற்குப் பின்பக்கம்தான் சந்தை திடல். போலீஸ் கான்ஸ்டேபிள் இருளப்பன் (PC474)  பேருந்து நிலையைப் பணியில் இருந்தார். நல்லவர். மத்தியானம் சுமார் ஒருமணி. ஈ.கே.குருசாமி என்ற ரவுடி. மிகவும் கொடியவன். உசிலம்பட்டியில் பணியாற்றிய ஒரு சிறந்த சப்-இன்ஸ்பெக்டரை நடுவீதியில் வைத்து செருப்பால் அடித்துவிட்டு ஓடிவிட்டானாம். எனவே அவன் பெயரில் அந்தக் காவல் நிலையத்தில் ‘ரவுடி ஷீட்’ திறக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் சில மாதங்களில் அருகிலுள்ள ‘ஏழுமலை’ என்ற ஊருக்கு இடம் மாறிவிட்டான்.

அவனுக்கு இரண்டு மனைவிகளாம். அக்காளையும் தங்கையையும் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டான். இருவரும்  ஆசிரியைகள். அதே ஊரில் வெவேறு பள்ளிகளில் பணிபுரிந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல்தேதியன்று அந்தந்தப் பள்ளிக்குச் சென்று சம்பளப் பணத்தைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டு சென்று கண்டபடி குடிப்பது, ரவுடித்தனம் செய்வது அவன் தொழில். எட்டாம் வகுப்புவரை படித்தவன். முன்னாள் இராணுவத்தினனும் ஆவான். அரசியலிலும் கொஞ்சம் செல்வாக்கு உடையவன்.


அன்றும் வழக்கம்போல் மனைவிகளிடம்  பணம் பறிக்கச் சென்றுள்ளான். மனைவிமார்கள் கெட்டிக்காரத்தனமாகத் தங்கள் தந்தையை அன்று வரவழைத்து அவரிடம் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். விஷயம் தெரிந்த குருசாமி, மாமனாரைத் தேடி அடுத்த பஸ்ஸைப் பிடித்து உசிலம்பட்டி வந்துள்ளான். அவர் உசிலம்பட்டியில் போலீஸ் இன்ஃபார்மராக இருந்தவர்.  ஆட்டந்துறை என்று பெயர். உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தான் குருசாமி.

மனைவிகளின் சம்பளத்தைத் தன்னிடம் தரும்படி கேட்டான். அவர் மறுக்கவே, தனது குடைக்கம்பியால்  அவரை அடித்து ரத்தகாயம் ஏற்படுத்திப் பணத்தைப் பிடுங்க முயற்சித்தான். அப்போது பேருந்து நிலையப் பணியில் இருந்த காவலர் இருளப்பன் பக்குவமாய்ப் பேசி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தார்.

‘பஸ் ஸ்டாண்டில் என்னடா கலாட்டா?’  என்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ரவுடி குருசாமியின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அவனது கூலிங் கிளாஸ் கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான், குருசாமி அவரைப் பார்த்து முறைத்துவிட்டு, ‘ஸார், நான் ஒருமாதிரிப் பட்டவன். என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  என்ன துணிவிருந்தால் என்மீது கை வைப்பீர்கள்?’ என்றான்.

உடனே அருகில் இருந்த காவலர் இருளப்பன், சப்-இன்ஸ்பெக்டரைத் தனியே அழைத்து, ‘எஜமான், இவனை அடிக்காதீர்கள். இவன்தான் அந்த எஜமானை (அதாவது சப்-இன்ஸ்பெக்டரை) செருப்பால் அடித்தவன். கேஸ் போடுங்கள். அடிக்கவேண்டாம். நானே பக்குவமாகப் பேசித்தான் அழைத்துவந்தேன்’ என்றார்.

(ஒரு நிமிடம் யோசித்த சப்-இன்ஸ்பெக்டர்) தனது உதவி சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ‘இந்த வழக்கை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார். அப்பாவி பொதுமக்களென்றால் புரட்டி எடுத்துவிடும் வழக்கமுள்ள அந்த  உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் ஃபிக்ரிடோ. ஆங்கிலோ-இந்தியர். கடும் கோபக்காரர். அவரோ, ‘ரைட்டர்! எஃப்.ஐ.ஆர். போட்டு இதை என்னவென்று பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.    

பயிற்சி எஸ்.ஐ. ஆக அங்கே இருந்தவர் திருக்குறள் பெருமாள். அவர் என்ன செய்தார் தெரியுமா? அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

நான் அங்கே இருந்தவன், இருளப்பனைப் பார்த்து, ‘என்னடா! எல்லாரும் ஓடுகிறார்கள். ரத்த காயத்துடன் ஆட்டந்துறை நிற்கிறார்.  சப்-இன்ஸ்பெக்டர் எல்லாரும் ஓடிவிட்டார்கள்’ என்றேன். அவர் விஷயத்தைச் சொல்லவே, லத்திக் கம்பை எடுத்து குருசாமியைக் கண்டபடி அடி(த்து) நொறுக்கினேன்.  ‘உனக்கென்னடா மீசை’ என்று அவனுடைய மீசையைப் பிடுங்கினேன். நான்கு மிதிமிதித்துத் தூக்கி லாக்கப்பினுள் எறிந்தேன்.  

பிறகு ஆட்டந்துறையிடம் புகார் பெற்று, தலைமை காவலர்கள் உதவியுடன்,  IPC Sec 324 இல் F.I.R. பதிவு செய்தேன்.  ஆட்டந்துறையை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினேன்.

மறுநாள் குருசாமியைக் கைவிலங்கிட்டு சங்கிலியில் கட்டித் தெருத்தெருவாக இழுத்தேன். உசிலம்பட்டி நகரமே, ‘நமது எஜமானுக்கு (அதாவது எஸ்.ஐ.க்கு) இவ்வளவு கோபம் வருமா என்று வியப்பில் ஆழ்ந்தது.

அவனைச் சங்கிலியில் கட்டி வீதிவீதியாக இழுத்தபடி திருமங்கலத்திற்கு நீதிமன்றக் காவலுக்குப் பேருந்தில் கூட்டிச்சென்றேன். அப்போது அவன் அருகில் அமர்ந்து, ‘குருசாமி! உனக்கும் எனக்கும் முன் பகை கிடையாது. எனது குடும்பத்தினர் அனைவரும் ராணுவத்தில்தான் உள்ளார்கள். உனக்குத் திறமையும், பலமும் இருந்தால் அதை மனைவிகளிடமும், மாமனாரிடமுமா காட்டுவது?  வள்ளுவர்,  ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை –என்கிறார்.  நீ ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவன் என்று எண்ணுகிறேன். தேவர் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. நீ ஒரு சப்-இன்ஸ்பெக்டரைத்  துன்புறுத்தி இருக்கிறாய். நானாக இருந்தால் உன்னை எப்போதோ சுட்டுக் கொன்றிருப்பேன்’ என்று பல அறிவுரைகள் கூறி அவனை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட்டேன்.

செய்தி ஆய்வாளருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் (டி.எஸ்.பி.) தெரிந்து, உடனே ஆய்வாளர் நிலையம் வந்து என்னை அழைத்து விசாரித்தார். ‘பெருமாள் சின்னப் பையன். FIR எல்லாம் சரியா என்று பார்த்து அவனுக்குத் தேவையான அறிவுரைகள் கொடுங்கள்’ என்று டி.எஸ்.பி. ஆய்வாளரிடம் கூறினார். ஆய்வாளர், ‘நீ எப்படி அப்பா இப்படி அடித்தாய்?’ என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். நான் சிரித்துக்கொண்டே, ‘ஸார்! கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் –என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட கொடியவனைத் தண்டிக்காவிட்டால் காவல்துறையில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும் ஸார்!’ என்றேன்.

‘Very good. You have done a good thing. But be careful. Because he is a very bad element. He has got some political background also’ என்றார். நானும் ‘தேங்க்யூ ஸார்! அவ்வாறே செய்கிறேன்’ என்றேன்.

பிறகு, விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கை யார் தாக்கல் செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. எஸ்.ஐ. சிறிது(ம்) விருப்பம் இல்லாமல் இருந்தார். பிறகு ஆய்வாளர், டி.எஸ்.பி., அரசு வழக்கறிஞர் எல்லாரும் கலந்து (பேசி), ‘பெருமாளும் எஸ்.ஐ. தானே! எனவே பெருமாளே குற்றப் பத்திரிக்கை போடட்டும்’ என்றார்கள். நான் தயார் என்று நானே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தேன்.
***
இந்த வழக்கில் ரவுடி குருசாமிக்குத் தக்க தண்டனை கிடைத்தது. அவனது கொட்டம் அடங்கிவிட்டது. அவனால் பாதிக்கப்பட்டிருந்த ‘அந்த’ எஸ்.ஐ. (உடனே) பெருமாளுக்கு போன் செய்து, ‘என் மானம் மரியாதை மட்டுமல்லாமல் நமது காவல் துறையின் மானம் மரியாதையையும் காப்பற்றிவிட்டீர்கள்’ என்று பாராட்டினார்.
***
யார் இந்தத் திருக்குறள் பெருமாள்? அவருடைய பெயருக்குமுன்  ஏன் ‘திருக்குறள்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது?  வாழ்நாள் முழுதும் அவர் திருக்குறளோடு சொந்தம் கொண்டாடினாரா? போலீஸ் துறையில் அவர் முன்னேற முடிந்ததா? இப்போது எங்கே இருக்கிறார்?

கடைசிக் கேள்விக்குப் பதில்: எங்கள் குடியிருப்பில் அண்மையில் அவர் குடியேறியிருக்கிறார்.  வயது எழுபத்தெட்டு.

மற்ற கேள்விகளுக்கான பதிலை ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார் பெருமாள். ‘காவல் பணியில் ....கடமையும், களிப்பும், கசப்பும்’ என்ற பெயரில் தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகான தமிழில் கிட்டத்தட்ட ஒரு வரலாற்று ஆவணமாகவே  வடித்துவிட்டார்.  



இராசபாளையம் அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அழகுக் கோனார் – மீனாட்சியம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் பெருமாள். இளமையிலேயே  பேச்சுத்திறமையில் சிறந்து விளங்கிய இவரைப் பெருந்தலைவர் காமராஜர் அரசியலுக்கு வரும்படி அழைத்தும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் அரசியலில் முன்னேற இயலாது என்று அவரிடமே தெரிவித்து, பின்னர் காவல்துறையில் பயிற்சி எஸ்.ஐ. ஆக நுழைந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றினார். கடைசியாக புதுக்கோட்டையில் Addl. S.P  ஆக உயர்ந்து ஓய்வுபெற்றார்.

துபாயில் தன் மகன் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது பேத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் நேர்மை ததும்புகிறது. தான் செய்த விதிமீறல்களையும் விடாமல் பதிவுசெய்திருக்கிறார். உயர் அதிகாரிகளின் தவறுகளையும் இங்கிதமின்மையையும் எடுத்துக்காட்டி காவல்துறையில் சேரும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். இந்த நூலிலிருந்து சில சுவையான பகுதிகளைக் கீழே தருகிறேன்:
***
எனது 36  ஆண்டு கால காவல்பணியில் எத்தனையோ குற்றவாளிகளைக் கடுமையாக அடித்திருப்பேன். மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டிருப்பேன். ஆனால் வள்ளுவர் காட்டிய ‘பிறன்மனை நோக்கா பேராண்மை’யை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். (சினிமாக் கவிஞர்கள் கவனிக்க!) அதுபோன்று கள்ளுண்ணாமையையும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். அந்த வகையில் நான் அண்ணல்  காந்தியடிகளுக்குச் சமம் என்று கூட எண்ணுவேன். அவர்கள் குன்றின் மேலிட்ட விளக்கு. நான் குடமிட்ட விளக்கு. காந்தியடிகள் காவல் துறையில் பணியாற்றவில்லை. எனவே குற்றவாளிகளை அடிக்கும் வாய்ப்பை அவர்கள் பெறவில்லை. நான் காவல்துறையில் பணியாற்றியதால் வேறு வழியில்லை. அடித்திருக்கிறேன். (பக்கம்  204)
***  
ஒரு நண்பர் ‘நீங்கள் பொய் வழக்கே போட்டதில்லையா?’ என்று கேட்டார். போட்டிருக்கிறேன். நான் எஸ்.ஐ. ஆகப் பணியாற்றியபோது  காட்டில் மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை அடையாளம் தெரிந்த ஒருவன் பலவந்தமாகக் கற்பழித்துவிட்டான். அந்தப் பெண் இதை வெளியில் சொல்ல நாணி, புகார் கொடுக்க மறுத்தாள். செய்தி தெரிந்தவுடன் அந்தக் கொடியவனைப் பிடித்துவந்து நன்றாக அடித்து அவன்மீது கஞ்சா, சாராயம் வழக்குகள் போட்டேன். இது பொய் வழக்குத்தானே! (பக்கம் 205)
***
வேலூர் காவல்துறை பயிற்சிக் கல்லூரி, கோட்டைக்குள் இருந்தது. பிரம்மாண்டமான கோட்டைதான். ஆனால்  பயிற்சி எஸ்.ஐ.க்களான நாங்கள்தான் எடுபிடிகள். ஏவலர்களும் கோட்டை காவலர்களும் நாங்கள்தான். அன்றாடம்  சுத்தம் செய்யப்படவேண்டிய உலர்ந்த கழிப்பறைகள். மாடுகள் குளிக்கும் குளிப்பறைகள் போன்ற குளிப்பறைகள். மனிதனையே தூக்கிச் செல்லும் அளவுக்குச் சக்தி வாய்ந்த கொசுக்கள் நிறைந்த அறைகள். ஏனென்றால்  அது கோட்டை. அதைச் சுற்றிலும் ஆழமான பாதாளச் சாக்கடைத் தண்ணீர் வந்து பாயும் அகழிகள். அந்த அகழிகளில் பல கொசுப் பண்ணைகள். அங்கு வளரும் கொசுக்களுக்குப் பயிற்சியில் இருக்கும் காவலர்களும்  எஸ்.ஐ.க்களும்தான் ரத்ததானம் செய்யவேண்டும். (பக்கம் 6)
***
என்னிடம் எத்தனையோ நல்ல பழக்கங்கள் உண்டு, திருக்குறள் படித்ததால். அதில் முக்கியமானது நான் பணியாற்றிய காவல் நிலையங்களில் எல்லாம் காவல் துறைக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதிப் போட்டிருப்பேன்.எனவே போடி நகரக் காவல் நிலையத்திலும் எனது ஆசனத்திற்கு மேலே, பல குறள்களை எழுதிப் போட்டிருந்தேன். ‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்ற குறளை(யும்) எழுதிப் போட்டிருந்தேன். (பக்கம் 43)
***
நான் உத்தமபாளையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் இருந்த இந்திப் பலகையை உடைத்தார்கள். அச்சமயம் உத்தமபாளையம் சர்க்கிளுக்கு உட்பட்ட கூடலூரில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள்  (ஆக மூன்றுபேரை) எரித்துக் கொன்றுவிட்டார்கள். எனவே மாணவர்களை மிகவும் ஜாக்கிரதையாக நடத்தும்படி எனக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு. மாணவர்கள் சைக்கிளில் விளக்கு இல்லாமலும் இரண்டு பேர்கள், மூன்று பேர்களாகவும் சவாரி செய்து அட்டகாசம் செய்வார்கள். அவர்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தேன். அதற்கும் திருக்குறளைப் பயன்படுத்தினேன்.

(அப்படி அட்டகாசம் செய்யும்) மாணவர்களை நிறுத்தி, ‘ஏனப்பா இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்பேன். அவர்கள், ‘ஸார்! இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம்’ என்பார்கள். நான், ‘சரி. நாம் எல்லாம் பச்சைத் தமிழர்கள். இந்தியை எதிர்க்கிறோம். நீங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். மகிழ்ச்சி. தமிழ் மறை, உலகப் பொதுமறை திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு பத்து குறள்கள் – எந்த அதிகாரத்தில் இருந்தாலும் பரவாயில்லை – சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்பேன். அவர்களால் சொல்ல முடியாது. ‘ஏனப்பா, தமிழனாகப் பிறந்து தமிழனாகவே வளர்ந்து, இந்தி என்னும் செந்தீயை எதிர்த்து வாழும் நீங்கள் பத்து குறள்களைப் படிக்காதது தவறல்லவா? எனவே திருக்குறளைப் படிக்காததற்கு உங்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறேன். அபராதம் ரு.10  அல்லது 5 கட்டிவிடுங்கள்’ என்பேன். கெஞ்சிக் கூத்தாடிவிட்டு நீதிமன்றத்தில் வந்து அபராதம் கட்டுவார்கள்.

அதிலிருந்து என்னைப் பார்த்தாலே, ‘டே! அந்தத் திருக்குறள் நிற்கிறான். திருக்குறள் சொல்லச் சொல்வான். சொல்லாவிட்டால் ஃபைன் கட்டவேண்டும்’ என்று சொல்லி ஓடிவிடுவார்கள். ஆக மாணவர்கள் எனக்கு இட்ட பெயர்தான் ‘திருக்குறள்’ பெருமாள். (பக்கம் 65)
***
திருக்குறள் வாழ்வியல் நூல். அது படித்தால் மட்டும் போதாது.அதைப் பின்பற்றி நடந்தால் காவல் துறையில் உள்ளவர்கள் வெற்றிகரமான காவல்துறை அதிகாரிகளாக இருக்கமுடியும்  என்பது எனது ஆழமான கருத்தாகும். எனவேதான் நான் காவல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் இருந்தபோது ஏனைய சட்ட நூல்களுடன் திருக்குறளையும் ஒரு பாடமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். (பக்கம் 88)
***
‘தொண்டுசெய்வீர் தமிழுக்கு – துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ –என்றார் பாரதிதாசன். தமது காவல் துறையில் திருக்குறளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது மட்டுமன்றி, தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகிய தமிழில் ஆவணப்படுத்தியும் இருக்கிறார் திருக்குறள் பெருமாள்.

காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

‘காவல் பணியில்...கடமையும், களிப்பும், கசப்பும்’:
வெளியீடு: ‘காவ்யா’, 81, கே.கே.ரோடு, வெங்கட்டாபுரம், அம்பத்தூர், சென்னை-600053.  தொலைபேசி: 044-42105680   விலை ரூ.200/-
***

வெள்ளி, அக்டோபர் 12, 2018

இதுவும் ஒரு கொலுபொம்மை -2/2


பதிவு 05/2018
இதுவும் ஒரு கொலுபொம்மை -2/2

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
இரண்டு நாட்கள் கழிந்தபின்...

மூன்றாம் மாடி பால்கனியிலிருந்து தரையை நோக்கி யாரையோ அழைத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி. காலை பதினொன்றரை மணி.
காய்கறி வண்டிக்காரி, இஸ்திரி போடும் பெண் இருவரும் அவளோடு உரையாடலில் இருந்தது தெரிந்தது.

‘மாமி, குட் மாணிங்’ என்றாள் இஸ்திரிப் பெண் சிந்தாமணி. காய்கறிப் பெண் கற்பகம் ‘வணக்கம் அம்மா’ என்றாள்.  தமிழில் பி.ஏ. படித்தவள்.

‘நீங்க ரெண்டுபேரும் எப்பவந்து வெத்தல பாக்கு வாங்கிக்கப் போறீங்க? நவராத்திரி ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆச்சே, ஆளையே காணோமேன்னு பாத்தேன்’ என்றாள் விஜி.
எங்கள் வீட்டு கொலு- 12-10-2018
இருவரும் வேகமாகத் தலையை ஆட்டினார்கள். ‘இன்னிக்குத்தான் வரணும்னு இருந்தேன் மாமி, இப்ப வரலாமா? சாயந்திரம் எனக்கு வேலை இருக்கு’ என்றாள் சிந்தாமணி. ‘நானும் அதே!’ என்றாள் கற்பகம்.

‘இப்பவே வாங்களேன்’ என்று அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, பெரிய தாம்பாளத்தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமப்  பொட்டலங்களை வரிசையாக அடுக்கி, தலா ஒரு ஆப்பிளையும் வைத்தாள். பிறகு மயிலாப்பூர் விஜயா ஸ்டோர்ஸில் வாங்கிய  ஜெர்மன் வெள்ளியிலான மயில்பொம்மை ஒன்றையும் ஆளுக்கு ஒன்று என்று எடுத்துவைத்தாள்.  இவை எல்லாவற்றையும் போட்டுக்கொள்வதற்கு ஆளுக்கொரு பிளாஸ்டிக் பையையும் தயாராக வைத்துக்கொண்டாள்.

சிந்தாமணியும் கற்பகமும் வந்தனர். சிந்தாமணி பிறந்ததுமுதல் அனுப்பக்கொட்டாம்பட்டி என்னும் கிராமத்தைத் தவிர வேறெந்த பெரிய ஊரையும் பார்த்திராதவள். திருமணமானபின் கணவனோடு சென்னைக்குக் குடித்தனம் வந்தவள். நவராத்திரி கொலுவை இப்போதுதான் பார்க்கிறாள். பிரமித்துப் போனாள்.

‘எப்படி மாமி, இவ்ளோ பொம்மைங்கள வாங்கினீங்க? ரொம்ப செலவாகியிருக்குமே! லட்ச ரூபாய் ஆகியிருக்குமா?’ என்று வெகுளியாகக் கேட்டாள்.

கற்பகம் அவளைத் தலையில் செல்லமாகத் தட்டினாள். ‘போடி, முட்டாள்! எல்லாம் ஒரு முப்பதாயிரம் ரூபாய்தான் இருக்கும்’ என்றாள். பி.ஏ. படித்தவளாயிற்றே!

சிந்தாமணிக்கு வெட்கமாகப் போயிற்று. ‘அய்யையோ, நான் வெறுமே  ஒரு லட்சம்னு நெனச்சேன். ஆனா முப்பாதாயிரம் வரையில ஆச்சா? அவ்ளோ ஆகுமா?’ என்றாள் இன்னும் வெகுளியாக. லட்சத்தை விட முப்பதாயிரம் பெரியதென்று அவளுக்கு  மனதில் பதிந்தது எப்படி என்று தெரியவில்லை.

என் மனைவி சிரித்தாள். கற்பகமும் சேர்ந்து சிரித்தாள். ‘சிந்தாமணி, ஒனக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு எதுவரைக்கும் தெரியும்?’ என்றாள். ‘சரி விடு, ஒன்னோட ரெண்டு கையிலயும் சேர்த்தா எவ்வளோ விரல் இருக்கும்?’ என்று கேள்வியை மாற்றினாள்.

சடக்கென்று பதில் வந்தது சிந்தாமணியிடமிருந்து. ‘ஒம்பது!’

இதுகூடத் தெரியாமல் இவள் எப்படித் தொழில்செய்யவந்தாள் என்று என்னவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘எங்கே ஒன் கையைக் காட்டு’ என்று அவளது இரண்டு  கைகளையும் பற்றினாள். ஆமாம், மொத்தம் ஒன்பது விரல்கள்தாம் இருந்தன! பிறக்கும்போதே இடதுகையில்  சுண்டுவிரல் இல்லையாம்.

‘அடடா’ என்று நொந்துபோனார்கள் இவளும், கற்பகமும். மேற்கொண்டு சிந்தாமணியை வருத்தப்படுத்த வேண்டாம் என்று விஷயத்தை மாற்றினாள் விஜி.

‘ஏண்டி சிந்தாமணி, கணக்கெல்லாம் போகட்டும். நீ செய்யறது ஒனக்கே நல்லா இருக்கா?’ என்றதும் சிந்தாமணிக்குப் புரியவில்லை. ‘ஏன் மாமி அப்டி சொல்றீங்க?’ என்று குழப்பத்தோடு கேட்டாள். ஒருவேளை இஸ்திரிக்குக் கொடுத்த புடவைகளில் ஏதாவது ஒன்று தவறிவிட்டதா, இல்லை, பட்டுப் புடவை இழை பிரிந்துவிட்டதா, இல்லை ஐயாவின் வெள்ளைச் சட்டையில் கறையேதும்  படிந்துவிட்டதா? கற்பகமும் வியப்போடுதான் இவளைப் பார்த்தாள்.

‘பின்னே என்னடி, அந்த சவிதா இருக்கிறாளே, அவளைப் பற்றி உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றியா? அவ வீட்டுக்கு நீதானே இஸ்திரி போடறே?’ என்றவள், கற்பகத்தையும் விடவில்லை. ‘நீ மட்டும் என்னவாம்? ஒன்கிட்டதானே அவள் காய்கறி வாங்கறா? நீயும் அவளப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே’ என்று குற்றம் சாட்டினாள்.

சிந்தாமணிக்கு இப்போதுதான் குழப்பம் தெளிந்தது. ‘போங்க மாமி, நான் இந்த ஊருக்குப் புதுசு இல்லிங்களா, யாருகிட்ட  எதைப் பேசணும்னு இன்னும் புரிபடல மாமி. அதுக்குள்ளே எனக்கு மாலைமுரசுன்னு பேரு வெச்சிட்டாங்க. அதனால் இப்பல்லாம் நான் பேசறதே இல்லீங்க’ என்றாள். கற்பகம்  சற்றே நாணத்துடன் ‘எனக்கு தினத்தந்தின்னு பேரு மாமி. ஆனா அந்த சவிதாம்மாவப் பத்தி எனக்கு ஒண்ணும் புதுசா வெசயம் கெடைக்கல மாமி’ என்றாள்.

ஏதோ சுருக்கென்று தைத்தது என் மனைவிக்கு. ‘புதுசா இல்லேன்னா, பழைய வெஷயம் எதுவோ இருக்குன்னுதான அர்த்தம்? அது என்னன்னு சொல்லுடி’ என்றாள்.

கற்பகம் முகத்தில் சற்றே பயத்தை வரவழைத்துக்கொண்டு, ‘மாமி, நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க!’ என்றாள். ‘அந்த சவிதாம்மா வீட்டுல ஒரு வாரமா யாரோ ஒரு ஆம்பிளக் குரல் கேட்குதாம். ஆனா அந்த ஆள் வெளிய வந்து யாரும் பார்க்கலியாம்.’

அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்தது. ‘மாமி, மெயின்ட்டனன்ஸ் ஆளுங்க வந்து செக் பண்ணுவாங்க. நாங்க போகணும்’ என்று நினைவுபடுத்தினார்கள். ‘இதோ வந்துட்டேன்’ என்று இவள் எழுந்தாள். 

தாம்பாளத்தட்டை அவர்களிடம் நீட்டினாள். சுண்டலை மட்டும் சிறிய பொட்டலமாகக் கட்டிக்கொடுத்தாள்.  ‘மாமி, நம்ப காலனியில ஒங்கவீட்டு கொலுவை அடிச்சிக்க ஆளே இல்ல மாமி’ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
****
எழுபத்துமூன்றாவது பிளாக்கில் இருந்து கோமளா கிருஷ்ணன் வந்தாள். தன் வயதில் இருபதைக் குறைத்துக் காட்டுவதை  வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவள். ஆங்கிலத்தில் எம்.ஏ. சுயதம்பட்டம் மட்டுமின்றி ஊர்வம்பிலும் கெட்டிக்காரி. ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே வம்புபேசுவாள். அதனால் அவளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் என்றும் ஒரு  பெயர் உண்டு. 
  
‘ஹவ் ஆர் யூ விஜி?’ என்றவளிடம் வேண்டுமென்றே ‘அது ஒண்ணுதான் கொறைச்சல்’ என்று வரவேற்றாள் என் மனைவி.

அது போதுமே கோமளாவிற்கு! படபடவென்று கொட்டிவிட்டாள். ‘ஓ அந்த சவிதா விஷயமா? உங்களிடம்தான் முதலில் சொல்லவேண்டுமென்று இருந்தேன். ஆனால் யமுனா டீச்சர் எப்படியோ என் வாயிலிருந்து விஷயத்தைக் கறந்து விட்டாள். வெரி ஸாரி.’

கோமளா எப்போதுமே இப்படித்தான். அவசரமாகப் பேசுவாள். அவசரமாகக் கிளம்பிவிடுவாள்.  அதனால் அவளுக்கு முதலில் தாம்பூலம் கொடுத்தாள் விஜி. பிறகு பேச்சுக் கொடுத்தாள். ‘யமுனா டீச்சரிடம் நீங்கள் சொன்னதை ஒருவரி மாற்றாமல் என்னிடம் சொல்லவேண்டும், சரியா?’

தாம்பூல சாமான்களைப் பையில் வைத்தபடி சிரித்தாள் கோமளா. ‘அதொண்ணும் பெரிய விஷயமில்லை விஜி! அவள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறதாம். அதை வெளியில் விடுவதே இல்லையாம். ஒரு வாரம்போல இருக்குமாம். ஜாடையை வைத்துப் பார்த்தால் அவளுடைய குழந்தை மாதிரியே இருக்கிறதாம். ஆனால் அதைப் பற்றிமட்டும் யாரிடமும் பேசுவதில்லையாம்’ என்று கோமளா சொல்லிமுடித்துவிட்டு, ‘வரட்டுமா, இன்னும் சில வீடுகளுக்குப் போகவேண்டும். நவராத்திரி அல்லவா?’ என்று நடையைக் கட்டினாள்.
****
நாலைந்து நாளாகவே கொலுப்படியை ‘செட்டப்’ செய்ததிலும், பொம்மைகளை ஒன்பது படிகளிலும் அடுக்கிவைத்ததிலும், சோர்ந்து போயிருந்த விஜி என்னை அழைத்து, யாராவது வந்தால் தன்னை எழுப்புமாறு கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்தபடியே சற்று கண்ணயர்ந்தாள்.

மாலை ஆறுமணிக்குமேல்தான்  விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். எல்லாமே தாய்க்குலம்தான். சபரிமலையில்தான் ஜெயித்துவிட்டோமே, கேவலம் கொலுபார்ப்பதற்காவது ஆண்களை அழைத்துக்கொண்டு போவோமே என்ற அகன்ற மனம் ஒருவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. வந்தவர்களில் விஜிக்கு முக்கியமான ஒருத்தி,  சுந்தரி என்ற சமையல்பெண். அவளைச் ‘செவப்பு’ சுந்தரி என்றுதான் குடியிருப்பில் அழைப்பார்கள். (ஏனென்றால் இன்னொரு சுந்தரி- சற்றே மாநிறம் கொண்டவள்- சமையல் பணியில் இருந்தாள். அவள் ‘கருப்பு’ சுந்தரியாம்.) அந்தச் செவப்பு சுந்தரி,   விஜியிடம் சற்றே மறைவிடத்திற்குப் போய் இரகசியமாக ஏதோ சொல்லிவிட்டுப்  போனாள். அதை கேட்டதும் விஜிக்கு முகத்தில் இரண்டாயிரம் வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்ததை நான் கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அப்படி என்னதான் சொல்லியிருப்பாள்?
*****
சொன்னபடியே சவிதா எங்கள் நவராத்திரி கொலுவைப் பார்க்க வந்துவிட்டாள். இரவு எட்டுமணி யிருக்கும். இருங்கள், அவளோடு ஒரு ஆணும் இருந்தான். வயது என்ன தெரியுமா? இரண்டே இரண்டு!

விஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சவிதாவைப் பற்றி எல்லாரும் வம்புபேசிக் களித்திருந்த சமயம், அவளே ஒரு பையனோடு வந்தது துணிச்சலான செயலாகப் பட்டது.

‘வாம்மா சவிதா! யாருடி இந்தக் குட்டிப் பையன்?’ என்றாள் விஜி. ‘எங்கிட்ட வாடா கண்ணா’ என்று அவனை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டினாள். குழந்தை வேற்றுமுகம் என்பதால் வரமறுத்து ‘அம்மா’ என்று சவிதாவை இறுகக் கட்டிக்கொண்டது.    

விஜிக்குத் திகைப்பாக இருந்தது.  அந்தக் குழந்தைக்கு இவள் அம்மாவா? எப்போது இவள் கர்ப்பமானாள்?  அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவாள். ஆனால் ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது விடுமுறையில் இந்தியா வந்துவிடுவாளே! எப்போது பார்த்தாலும் டயட்டில் இருப்பவள்போல் ஒல்லியாகத்தானே இருந்தாள்! வயிறு வீங்கிப் பார்த்ததில்லையே! இந்தக் குழந்தையை எப்போது பிரசவித்திருக்கமுடியும்? அப்படியே இருந்தாலும் ஒரு குழந்தையை இரண்டுவருடங்கள் யாருக்கும் தெரியாமல் எப்படி மறைத்துவைத்திருக்க முடியும்?

‘உட்கார் சவிதா, உன் பிள்ளை உன்னைப்போலவே நல்ல கலராக இருக்கிறான்! என்ன பெயர் வைத்திருக்கிறாய்?’ என்று குழந்தையின் கன்னத்தில் தட்டினாள். குழந்தை மீண்டும் எச்சரிக்கை உணர்ச்சியோடு, ‘அம்மா..’ என்று சவிதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

‘பார்த்திபன் என்று பெயர். மகம் நட்சத்திரம். சிம்ம ராசி’ என்றாள் சவிதா மகிழ்ச்சியோடு. ‘இல்லேடா கண்ணா?’ என்று அவனைக் கொஞ்சினாள். குழந்தை பதிலுக்கு அவளை ஆசையோடு முத்தமிட்டது.

சுண்டலை பிளாஸ்டிக் கப்புகளில் நிரப்பும் பணியில் தீவிரமாக இருந்த என்னிடம், உள்ளே வந்த விஜி, மெல்லிய குரலில், ‘என்னங்க இது, ஒண்ணுமே புரியலே! இவளை அந்தக் குழந்தை அம்மான்னு கூப்பிடுது. ஆனா செவப்பு சுந்தரி வேற மாதிரியில்லே சொன்னா?’  என்றாள்.

‘வேற மாதிரின்னா?’

‘அந்த அசிங்கத்த ஏன் கேட்கிறீங்க! இந்தப் பையன் சவிதாவுக்குக் கூடப் பிறந்த தம்பி ஆகணுமாம்!  அறுவது வயசு அம்மாவுக்குப் பொறந்திருக்கான் இந்தப் புள்ளை! வெவஸ்தை கெட்ட ஜென்மங்க’ என்று விஜி சொன்னதும் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உண்மையில் சவிதாவின் அம்மாவை இந்தக் குடியிருப்பில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  வெளிநாட்டில் இருந்ததாகக் கேள்வி.

மகனா, தம்பியா?

இந்த சஸ்பென்சை உடைக்காதவரையில் விஜி தூங்கப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். அதனால் மெதுவாக அவளுக்கு ஆலோசனை சொன்னேன். ‘சவிதாவிடமே இலைமறை காய்மறையாய்க் கேட்டுவிடலாமே!’  

என்னைப் பார்த்து முறைத்தாள் விஜி. ‘ஏன் நேரடியாகவே கேட்கலாமே!’ என்றாள்.

தாம்பூலமும் சுண்டலும் கைமாறிக்கொண்டிருக்கும்போது மெல்லப் பேச்சுக் கொடுத்தேன் சவிதாவிடம். ‘இப்போது பிராஜக்ட் எல்லாம் எப்படிப் போகிறது? ஆர்ட்டிஃபீஷியல் இண்ட்டலிஜென்ஸ்  தான் இப்போது டிமாண்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே!’ என்றேன்.

அதைப் பற்றி விளக்கம் கொடுத்தாள். கணினித் துறையில் ஐந்தாண்டுக்குமேல் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிலேயே இன்னொரு புதியதுறையைக் கற்றுக்கொள்வதில் அதிக சிரமம் இருக்காது என்றாள்.  யாருக்கும் வேலை பறிபோகாது என்றாள். போனாலும் அது ஒருசில மாதங்களுக்குத்தான் என்றாள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நூற்றுப்பன்னிரண்டாவது பிளாக்கிலிருந்து தாயம்மா பாட்டி வந்தார். வயது எண்பதுக்குமேல் இருக்கும். அவருடைய கண்ணுக்கு அதைப்போல இரண்டுமடங்கு ஆயுள் என்பார்கள். யாரையும் ஊடுருவிப் பார்த்து ரகசியங்களைக் கண்டுபிடித்துவிடுவதில் கில்லாடி.

சவிதாவையும் குழந்தை பார்த்திபனையும் பார்த்த தாயம்மா, ‘ஏண்டி பொண்ணு, இந்தப் பையனைப் பார்த்தா ஒன் ஜாடையாவே இருக்கானே, ஒருவேளை ஒன்னோட தம்பியோ?’ என்றாள்.

விஜியும் நானும் சவிதா என்ன சொல்லப்போகிறாளோ என்று தீர்க்கமாக நோக்கினோம்.

கலகலவென்று சிரித்தாள் சவிதா. ‘அப்படியும் வைத்துக்கொள்ளலாம் பாட்டி!’ என்றாள்.

இதுதான் சமயம் என்று நான் ‘தயவு செய்து புரியும்படியாகச் சொல்லுங்கள் சவிதா! இந்தப் பார்த்திபன் உங்கள் மகனாக இருந்தால் தம்பியாக இருக்கமுடியாது. தம்பியாக இருந்தால் மகனாக இருக்கமுடியாது. ஆனால் இவன் உங்களை அம்மா என்று அழைக்கிறானே!  இது என்ன புதிர்?’ என்றேன்.

‘அது பெரிய கதை அங்க்கிள்! ‘ என்று தொடங்கினாள் சவிதா.

சவிதாவின் அக்கா சாரதா ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். சவிதாவின் அம்மாவும் அவளுக்குத் துணையாக அங்குதான் வசிக்கிறாள். சாரதாவுக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை.  எவ்வளவோ டாக்டர்களிடம் பார்த்தும் பயனில்லை. கடைசியில் சோதனைக்குழாய் முறையில் கருத்தரிக்க முயற்சிசெய்தால் வெற்றி கிடைக்கும் என்றார்களாம். ஆனால் அதிலும் சிக்கல் வந்ததால், வாடகைத்தாய் முறையில் கருத்தரிக்க ஏற்பாடுசெய்யுமாறு  ஆலோசனை தரப்பட்டதாம். சவிதாவின் தாயே தன் மகளின் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்க முன்வந்தாளாம். அப்படிப் பிறந்தவன்தான் இந்தப் பார்த்திபன்.

‘என் அம்மா வயிற்றில் பிறந்ததால் இவன் எனக்குத் தம்பி முறைதானே! அதே சமயம் என் அக்காவிற்குப் பிறந்ததால் இவன் என்னை அம்மா என்று அழைப்பதும் சரிதானே! சித்தி என்று அழைக்க இவனுக்கு இன்னும் வார்த்தை வரவில்லை’ என்று சிரித்தாள் சவிதா.

இன்று இரவு விஜி நன்றாகத் தூங்குவாள் என்பது உறுதி.

(c) இராய செல்லப்பா, சென்னை 
**** 

ஞாயிறு, அக்டோபர் 07, 2018

இதுவும் ஒரு கொலுபொம்மை -1/2


பதிவு 04/2018
இதுவும் ஒரு கொலுபொம்மை -1/2

பிள்ளையார் கோவிலில் புதிதாக ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள் என் மனைவி. கையில் அர்ச்சனை தட்டோடு வரிசையில் நின்றிருந்தாள் அந்தப் பெண்.

‘சவிதா, இந்த முறையாவது நவராத்திரிக்கு எங்கள் வீட்டிற்கு வருவாயா, இல்லை, ஆஸ்திரேலியா போனேன், ஹங்கேரி போனேன் என்று சாக்கு சொல்வாயா?’ என்று மென்முறுவலோடு கேட்டாள் என்னவள்.

‘நிச்சயம் வருவேன் மாமி!’ என்று சவிதாவும் புன்னகையுடன் பதிலளித்தாள்: ‘கையில் இருந்த பிராஜெக்ட் முடிந்துவிட்டது. எனவே இன்னும் மூன்று மாதங்களாவது வெளிநாட்டுப் பயணம் கிடையாது. போன வருடம் உங்கள் வீட்டுக் கொலுவை முகநூலில் பார்த்தேன். அம்மம்மா...எவ்வளவு பொம்மைகள் என்று அதிசயப்பட்டேன். இந்த வருடம் நேரில் பார்த்தே தீருவது என்று இருந்தேன். அதற்கேற்றாற்போல் பிராஜெக்ட்டும் முடிந்துவிட்டது’ என்றாள்.



அதற்குள் வரிசை அர்ச்சகரை நெருங்கிவிட்டது. அர்ச்சனை தட்டை அவளிடமிருந்து  வாங்கிக்கொண்ட அர்ச்சகர், ‘பேரு நட்சத்திரம் சொல்லும்மா’ என்றார்.

‘பார்த்திபன், மகம் நட்சத்திரம்’ என்றாள் சவிதா.

‘ஒங்க பேர் நட்சத்திரம் ?’ என்று கேள்விக்குறியோடு அவளை நோக்கினார் அர்ச்சகர்.

‘இல்லை, அவர் பேர் மட்டும் போதும். அவருக்கு இன்று பிறந்தநாள்’ என்றாள் சவிதா புன்னகையுடன். அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்தபடி உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் தீபாராதனை. கண்களை மூடி கைகூப்பி வணங்கினாள் அவள்.

பின்னால் இருந்த இரண்டு பெண்கள் தங்களுக்குள் குசுகுசுத்தார்கள்: ‘அது யாருடி, பார்த்திபன்? பேரப் பார்த்தா இவங்க ஜாதி மாதிரி இல்லையே? அவன் பிறந்தநாளுக்கு  இவ எதுக்கு அர்ச்சனை பண்றா?’

‘அடி போடி, பேக்கு! அவளோட டீம் லீடரா இருப்பான். இல்லேன்னா,  கூட வேல செஞ்ச  பையனா இருப்பான்..’ சொல்லிவிட்டுக் கேலியாகச் சிரித்துக்கொண்டார்கள்.

கற்பூரத்தட்டு இவர்கள் அருகில் வரவும் அவசரமாகச் சிரிப்பை நிறுத்திவிட்டு கற்பூரத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டனர் இருவரும்.

என் மனைவி என்னை நோக்கிப் பொருள் பொதிந்த பார்வையைச் செலுத்தினாள். அப்படியானால் வீட்டிற்கு வந்ததும் ஏதோ இரகசியம் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். சவிதாவைப் பற்றியா, பார்த்திபனைப் பற்றியா?

கற்பூரத்தட்டில் பத்துரூபாய் போட்டுவிட்டு நகர்ந்தேன்.
***
ஏழுபடிகள் கொண்ட கொலுப்படியை ஒழுங்காக ‘ஃபிட்டிங்’ செய்து முடித்து நல்லபெயர் வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல் வந்திறங்கியது தலையில் ஓர் இடி.

‘எவ்வளவு நெஞ்சழுத்தம் உங்களுக்கு?’ என்று  கடுமையாகப் பாய்ந்தது சொல்வேல், மனைவியிடமிருந்து. பொம்மைப் பெட்டிகளைப் பிரித்து ஒவ்வொன்றாக வெளியில் எடுத்துக்கொண்டிருந்தாள் அவள். இன்னும் இரண்டுநாளில் கொலு ஆரம்பித்துவிடும். அதற்குள் பொம்மைகளை அடுக்கியாகவேண்டுமே!

இம்மாதிரி சமயங்களில் பிரச்சனையை எப்படி அணுகவேண்டும் என்று எனக்கா தெரியாது? அவள் முதுகருகில் சென்று என் வெம்மையான மூச்சு அவள்மீது படும் அளவில் நின்றுகொண்டு, ‘என் பிளட்  பிரஷரைத் தானே கேட்கிறாய்?’ என்றேன் அப்பாவியாக முகத்தை வைத்தபடி.

‘பேச்சை டைவர்ட் பண்ண வேண்டாம். எங்கே, என் முகத்தை நேரில் பார்த்துப் பேசுங்கள்: அந்த சவிதாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தீர்களே, நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இதற்குமுன் பெண்களையே பார்த்ததில்லையா நீங்கள் எல்லாரும்?’ என்று யுத்தத்திற்குத் தயாரானாள் என் மனைவி.

‘எல்லாரும் என்றால் யார் யார்?’

‘எல்லாம் ஒங்க ஆம்பிளை ஜன்மங்களைத்தான் சொல்றேன். ஒங்களுக்கெல்லாம் வீட்டுல ஒரு பொண்டாட்டி இல்லை? பிறகு ஏன் மற்றவர் வீட்டுப் பெண்களை வெறித்து வெறித்துப் பார்க்கிறீர்கள்? இனிமே இப்படி நடந்தா ரெண்டு கண்ணையும் நோண்டி எடுத்துடுவேன்.’

அப்பாடா என்று ஆனது எனக்கு. குற்றம் எது என்றும் தண்டனை என்ன என்றும் சொல்லியாகிவிட்டது. இனி விஷயத்துக்கு வந்துவிடுவாள். ‘சாரி, அந்த சவிதாவைப் பற்றிச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடேன்’ என்றபடி  அவள் கூந்தலை லேசாகத் தடவினேன்.

விசுக்கென்று கையை விலக்கினாள். ‘விடுங்கள். இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். தலையைத் தலையைத் தடவுவார்கள், தங்கள் காரியம் முடிந்துவிட்டால் தலைமறைவாகப் போய்விடுவார்கள்’ என்றாள். குரலில்  சற்றே சீற்றம் இருந்தது.    

‘ஓஹோ, அவன் பேர் தான் பார்த்திபனா?’ என்றேன். சடக்கென்று விலகினாள். ‘அவ்ளோ தூரம் ஒங்க மனசுல இருக்காளா அவள்? பார்த்திபன் யாராயிருந்தால் ஒங்களுக்கென்ன? வேணும்னா நம்பர் தரேன், பேசித் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே!’ என்றாள். ‘ஒங்களோடு வெட்டிப்பேச்சு பேசுறதுக்கு நேரமில்லை. இன்னும் பத்து பெட்டிகளைத் தெறக்கணும். எதுல எந்த பொம்மை இருக்குன்னே ஞாபகம் வரமாட்டேங்குது’ என்று காரியத்தில் இறங்கினாள் அவள்.

அடிப்பாவி, சஸ்பென்சை உடைக்காமல் போகிறாயே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ‘பிளீஸ், பிளீஸ், சவிதா மேட்டரைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன். யார் அந்தப் பார்த்திபன்?’ என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டேன்.

‘சொல்கிறேன். ஆனால் ஒரு டீல். இங்க இருக்கிற எல்லாப் பொம்மைகளையும் விடிவதற்குள் எடுத்துக் கொலுப்படிகளில் அடுக்கியாகவேண்டும். அதற்கு நீங்கள் உதவுவீர்களா இல்லையா?’ என்றாள்.

‘இங்கே பார், கல்யாணமான இத்தனை வருடங்களில் நான் உதவி செய்யாமல்தான் நீ கொலுப் பொம்மைகளை அடுக்கினாயா? இப்போது மட்டும் ஏன் சந்தேகம்?’ என்று சரண்டர் ஆனேன்.

அதற்குப் பதில் சொல்லாமல், ‘கதை பேச இது நேரமில்லை. இந்தப் பொம்மையை உச்சியில் இருக்கும் படியில் வையுங்கள். வெயிட்டான பொம்மை. கெட்டியாகப் பிடியுங்கள்’ என்று பேச்சை மாற்றினாள். வேலையென்று வந்துவிட்டால் வெள்ளைக்காரி  அவள். சொன்னபடி கேட்பதைத்தவிர வேறு வழியில்லை.

விடியற்காலை மூன்றுமணி. ஓரளவுக்கு எல்லாப் பொம்மைகளையும் அததற்கான படிகளில் நிற்கவைத்தாகிவிட்டது. நவராத்திரிக்கு இன்னும் ஒருநாள் முழுதாக இருக்கிறது. விடிந்ததும் சரிப்படுத்திக்கொள்ளலாம். இன்னும் சீரியல் லைட் போடவேண்டும். மண்ணைப் பரப்பித் தோட்டம் போடவேண்டும்....

‘வந்து படுங்கள்’ என்றவள், ‘கை கால் முகம் கழுவிக்கொண்டு படுங்கள்’ என்று உத்தரவிட்டாள். குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் நுழைந்தாள். இரவில் எவ்வளவு நேரமானாலும் சரி, குளிக்காமல் படுக்கும் வழக்கம் அவளுக்கு இல்லை.
வந்து படுத்தாள். முகத்தில் கைவைத்துக்கொண்டு , ‘இப்போதாவது சொல்லிவிடேன். யார் அந்தப் பார்த்திபன்? அவளுடைய ஆள் தானே?’ என்றேன். ‘ஆள்’ என்பதை அழுத்தமாகச் சொன்னேன்.

மெல்ல என் பக்கமாகத் திரும்பி என் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டவள், ‘அவளோட ஆள் இல்லை.... ஆனால் ஆள் மாதிரி..’என்று சிரித்தாள். பிறகு, ‘படுங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது’ என்று விளக்கை அணைத்தாள்.

 (அடுத்த இதழில் முடியும்.)

(c) இராய செல்லப்பா, சென்னை
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்


ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

கோலமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி


பதிவு 03/2018

கோலமாவு கோகிலாவின் ஏழாவது நாய்க்குட்டி

உத்தமர் குடியிருப்பு’ - நூறு குடும்பங்களைக் கொண்டது.  மினி-இந்தியா எனலாம். எதை எடுத்துக்கொண்டாலும் நூறு பேருக்கும் நூறு விதமான கருத்து இருக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் அவர்களிடம் ஒற்றுமை இருந்தது. எக்காரணத்தை முன்னிட்டும் விடிந்ததும் கோகிலாவின் முகத்தில் விழித்துவிடக் கூடாது என்ற ஒற்றுமை. விழித்தால் நிச்சயம் ஏதாவது தீமை உண்டாகுமாம். ஆனால் அவளை நான் இதுவரை பார்த்ததில்லை. என் மனைவியும் கூட. 
ஐயோ  பாவம்! இவ்வளவு நாளாக வலைப்பதிவு எழுதாத குற்ற உணர்வு
முகத்தில் தெரிவதைப் பாருங்கள்!

பணியில் இடமாற்றம் வந்ததால் அந்தக் குடியிருப்பில் நான் வாடகைக்கு வரவேண்டியதாயிற்று.  நான்கு மாடிக் கட்டிடம். அதில் நான் இருந்தது முதல் மாடி. வழக்கம்போல இம்மாதிரிக் குடியிருப்புகளில் லிப்ட் வேலை செய்யாது என்பது தெரிந்ததே. அதனால் எனக்குமேல் குடியிருந்தவர்களில் பலர் வாரத்தில் ஒருநாளாவது படிகளில் ஏறித்தான் தங்கள் இல்லங்களை அடையமுடியும். அப்போதெல்லாம் என் வீட்டுக்கதவு திறந்திருந்தால் சற்றே எட்டிப் பார்த்துக்கொண்டு போவார்கள். தெரிந்தமுகமாக இருந்தால், ‘வாங்க ஸார்’ என்று அழைப்பேன். நடுத்தர வயதுப் பெண்ணாக இருந்தால் ‘வீட்டில் ஸார் சௌக்கியமா? பார்த்து நாளாயிற்றே !’ என்பேன். சிலபேர் வெட்கப்படுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ம்ம்..’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டு கடந்துபோவார்கள். அந்த ‘ம்ம்..’ கவர்ச்சியாக இருந்ததாக  தற்செயலாக அன்று என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பன் கருதினான்.

சில பெண்கள் இதுதான் சாக்கென்று ‘வணக்கம் ஸார்! மாமி வீட்டில் இல்லையா?’ என்றபடி வாசலில் நின்றுகொண்டு ஏதோ பேச முன்வருவார்கள். வீட்டின் உள்ளிருந்து ‘அவள்’ வந்து மேற்கொண்டு பேச்சைத் தொடருவாள்.  மற்றப்படி நானாக அவர்களிடம் அதிகம் பேசமாட்டேன். காரணம் உங்களுக்கே தெரியும்.

ஆனால் ஒருநாள் காலை ஆறுமணி அளவில் மஞ்சள் சேலையும், பூப்போட்ட மஞ்சள் ரவிக்கையும், கழுத்தில் மின்னும் மஞ்சள் தாலிக்கயிறும், மஞ்சள் ஹவாய் செருப்பும் அணிந்த மஞ்சள் நிறமான ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி, கையில் ஒரு மஞ்சள் நிறப் பையுடன் படியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘இந்தப் புதுமுகம் யாராயிருக்கலாம்?’ என்று யோசித்தபடியே ‘டைம்ஸ்’ தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அவளுடைய பையிலிருந்து மஞ்சள் நிறச் சாமந்தி மாலையொன்று எட்டிப் பார்த்ததைச் சொல்லாமல் விட்டால் நீங்கள் கோபிக்கக்கூடும். அவள் தானாகவே என் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

வரவேற்பறையில் நான் பனியன்போடாமல் கையில் பேப்பரோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் அவள் வேண்டுமென்றே அழைப்புமணியை வேகமாக அழுத்தினாள். அது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைக்கும்  வகையில் சத்தமிட்டது.  கோபத்தோடு எழுந்து நின்றேன் நான்.

‘இங்கே நான் உட்கார்ந்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? எதற்காக மணியடிக்கவேண்டும்?’ என்றேன்.

அவள் நான் இருப்பதையே அங்கீகரிக்க விரும்பாதவள்போல் உள்ளேயிருந்து பெண்மணிகள் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கும்விதமாகக் கண்பார்வையை என்னைவிட்டு அகற்றினாள். ‘அக்கா’ என்று அழைத்தாள். 

அழைப்புமணியின் ஓசையில் அசராத என் மனைவி பாவனா, அக்கா என்ற அழைப்பைக் கேட்டதும் துணுக்குற்று ஓடிவந்தாள். ‘யாருடி அது, என்னை அக்கான்னு கூப்பிடறது?’

மஞ்சள் பெண் மிகவும் பவ்வியமாக, ‘நான்தான் அக்கா’ என்றாள். ‘என்னைத் தெரியாதா ஒங்களுக்கு? நான்தான் கோகிலா. கோலமாவு கோகிலா’ என்றாள். இரண்டுபேருக்கும் நடுவில் எதுவும் சொல்லத்தெரியாமல் நான் நின்றேன். இவள்தான் கோகிலாவா? 

தன்னைவிட இளமையான பெண்களைக் கண்டால் பொதுவாகவே இல்லத்தரசிகளுக்குப் பொறாமை உண்டாவது இயல்புதானே! அதிலும் இவள் எல்லாம் மஞ்சளாக இருக்கிறாள். இந்தக் குடியிருப்பில் வசிப்பவளா, அல்லது கோலமாவு விற்பவளா?

‘இந்தாம்மா, எனக்குக் கோலமாவு வேண்டாம். நான் அரிசிமாவில்தான் கோலம் போடுவது வழக்கம். அதிருக்கட்டும். நான் உன்னைப் பார்த்ததே இல்லையே!’ என்றாள் பாவனா.

அதிரடியாக உள்ளே நுழைந்தாள் கோகிலா. ‘என்னக்கா நீங்க, என்னயத் தெரியாதுன்னு சொல்றீங்க! தெனமும் ரெண்டுவேளையும் நம்ப குடியிருப்புல இருக்கிற பிள்ளையார் கோவில்ல நான்தான் கோலம் போடறேன்னு தெரியாதுங்களா? அதனாலதான் என்னைக் கோலமாவு கோகிலான்னு சொல்வாங்க’ என்றவள், நான் எழுந்ததும் காலியான நாற்காலியில் விசுக்கென்று உட்கார்ந்தாள். தன் கையிலிருந்த மஞ்சள் பையை அருகிலிருந்த டீபாயின்மீது வைத்தாள். 

‘என்னடி விஷயம், சீக்கிரம் சொல்லு. அடுப்புல கூட்டு வேகுது. அடிப் பிடிச்சிக்கும்’ என்று அவளை விரட்டுவதுபோல் முன்னால் நின்றாள் பாவனா.

கோகிலா அசரவில்லை. என்னைப் பார்த்து, ‘ஏன் ஸார், ஒங்க வீட்டுக்கு யாராவது வந்தா தண்ணி கூடக் குடுக்க மாட்டீங்களா?’ என்றாள்.     பாவனா என்னை உற்றுப் பார்த்தாள். ஓடிப்போய் ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து டீபாயில் வைத்தேன். கோகிலா ஒரே நொடியில் குடித்து முடித்தாள்.

‘அக்கா, நான் வந்த காரியம் என்னன்னு சொல்லட்டுமா?’ என்றாள்.

‘இருடி, அடுப்பைப் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று உள்ளேபோய் வந்தாள் பாவனா. ‘சொல்லு, என்ன விஷயம்?’

கோகிலா டக்கென்று எழுந்து வாசல் கதவைச் சாத்தித் தாளிட்டாள். ‘நல்ல விஷயம் சொல்லப்போறேன். யாருக்கும் தெரியக்கூடாது’ என்றவள், தன் மஞ்சள் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தாள். குழந்தைகள் விளையாடும் நாய்க்குட்டி பொம்மை மாதிரி ஒன்று. பாவனாவிடம் கொடுத்தாள்.

‘எனக்கு எதுக்கடி இந்த பொம்மை’ என்றபடி அதை வாங்கிய பாவனா, துள்ளிக் குதித்தாள். ‘பொம்மைன்னு நினைத்தேன். இது உயிருள்ள நாய்க்குட்டி! எவ்வளவு அழகா இருக்கு பாருங்க’ என்று என்னிடம் காட்டினாள்.

ஆம், அழகான நாய்க்குட்டிதான். அதுவும் மஞ்சள்நிறமாகவே இருந்தது. தன் அழகான கண்களைத் திறந்தும் மூடியும் கால்களை அசைத்தும் அது காண்பவர்களைக் கவருவதாக இருந்தது. 

கோகிலா பேசினாள். ‘அக்கா, இத நான் குடுத்தேன்னு யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. பிரச்சினை ஆயிடும். ஏன்னா இது ஏழாவது நாய்க்குட்டி’ என்றாள்.

பாவனாவுக்குச் சற்றே எரிச்சல் வந்தது. எத்தனையாவதா இருந்தா என்ன, நானா வேணும்னு கேட்டேன்? இதுவரை இவளைப் பார்த்ததே இல்லை நான்.

‘அக்கா, ஒங்களுக்கு நாய்க்குட்டிகளைப் பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு நெனைக்கிறேன். அதான் இப்படிப் பேசறீங்க. பொதுவா ஆறு குட்டிதான் போடும் நாய்கள். செலது பத்து கூடப் போடும். ஆனால் அதுல நாலஞ்ச தாயே சாப்பிட்டுடும். பிரசவிச்ச ஒடனே அதுக்கு அவ்ளோ பசியெடுக்குமாம். அதனால ஏழாவது நாய்க்குட்டி உயிரோட கெடைக்கறது அபூர்வம்னு பெரியவங்க சொல்வாங்க. அப்படிக் கெடச்சா அந்த நாய்க்குட்டியை வளர்க்கிறவங்க வீட்டுல ஒரே வருஷத்துல ஆண் குழந்தை பொறக்குமாம். எங்க பாட்டி சொல்வாங்க’ என்ற கோகிலா, என் மனைவியின் முகத்தைப் புன்முறுவலோடு பார்த்தாள். ‘ஒங்களுக்கு வேண்டாம்னா வேறே யாருக்காவது கொடுத்துவிடட்டுமா?’

அவள் வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தவளாக, ‘நான் எங்கேடி வேண்டான்னு சொன்னேன்?’ என்று குதூகலத்துடன் துள்ளினாள் பாவனா. திருமணமாகி ஐந்து வருடம் ஆகியும் எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. ‘ஆனா நீ சொல்றதை எப்படி நம்பமுடியும்னு தெரியலே’ என்றவள் என் பக்கம் திரும்பி, ‘ஏங்க, இத நாம்பளே வச்சிக்கலாமா? அதிர்ஷ்டம் வருதான்னுதான் பார்ப்போமே, என்ன சொல்றீங்க?’ என்றாள். 

‘ஆஹா! அப்படியே செய்யேன்’ என்றேன் பெருமிதமாக. பாவனாவுக்கு மகிழ்ச்சி. கோகிலாவிடம் ‘சரி, இதுக்காக ஒனக்கு எவ்ளோ தரணும்? ஏங்க, பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே, பர்ஸ எடுத்துக்கிட்டு வாங்க’ என்றாள் என்னைப் பார்த்து.

நாய் வளர்ப்பது பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இருக்கவில்லை. விலை கொடுத்து ஒரு தலைவலியை வாங்குவதாகவே தோன்றியது. ஆனால் ஆண் குழந்தை பிறக்குமாமே!  பொறுத்திருந்து பார்க்கலாமே என்று தோன்றியது. மேலும் மனைவியின் ஆசைகளை மறுக்கும் துணிச்சலுள்ள கணவர்கள் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆகவில்லையே! 

ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.

கோபத்தோடு தன் பையை எடுத்துக்கொண்டு எழுந்தாள் கோகிலா. ‘அதைக்  குடுங்க அக்கா!  பொருளோட மதிப்பே தெரியலே ஒங்களுக்கு’ என்று நாய்க்குட்டியைப் பிடுங்க வந்தாள்.

பாவனாவின் கோபம் என்மீது திரும்பியது. தன் கையில் இருப்பது நாய்க்குட்டியாகவே தெரியவில்லை அவளுக்கு. தனக்கு இவ்வளவு நாளாகப் பிறக்காத குழந்தையே அது என்று நம்புகிறாள் போல் தெரிந்தது. ‘இந்தாங்க, அவளுக்கு ஐந்நூறு ரூபாய் குடுத்துடுங்க’ என்று உத்தரவிட்டாள்.

‘நீங்க நல்ல இருப்பீங்கம்மா. சீக்கிரமா ஒங்க வீட்டுல ஒரு ஆம்பிளைப் பிள்ளை பொறக்கலேன்னா என் பேரு கோலமாவு கோகிலா இல்லே’ என்று சபதமிட்டுவிட்டுக் கிளம்பினாள். போகையில் என்னை அற்பமாகப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை வீசத் தவறவில்லை.

லிப்ட்வரை போனவள் வேகமாகத் திரும்பிவந்து ‘ஸார், இதை யாருக்கும் சொல்லிடாதீங்க. ஏன்னா முப்பத்திரண்டாம் நம்பர் மாமி ரொம்பநாளா கேட்டுக்கிட்டிருந்தாங்க. அவங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் கொழந்தையே இல்லை பாருங்க! என்னமோ ஒங்களுக்குக் கொடுக்கணும்னு எனக்குத் தோணிச்சி. அதான்..’ என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஒருமாதிரியாகச் சிரித்தாள். ‘நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களாமே? என்னயப் பத்தியும் எழுதுவீங்களா?’ என்று கேட்டவள் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்தாள்.

அன்று மாலை நாற்பதாம் நம்பர் மாமி கையில் மைசூர்பாக்குடன் வந்தார். ‘எல்லாம் நல்ல விஷயம்தான். சீக்கிரம் எங்கள் வீட்டில் ஒரு பேரக் குழந்தை வரப்போகிறது’ என்றார். பாவனாவுக்கு ஆனந்தமான ஆனந்தம். மாமியின் பெண் சித்ராவும் இவளும் உயிருக்குயிரான  சினேகிதிகள். 

‘அப்படியா? ரொம்ப சந்தோஷம். நான் இப்பவே சித்ராவோட பேசறேன்’ என்று அலைபேசியை எடுத்தாள்.

‘சாயந்திரமா பேசுடி. ஏன்னா அவ இப்ப டாக்டர் கிட்ட போயிருக்கா’ என்றார் மாமி.

பாவனாவுக்கு இன்னும் அதிக சந்தோஷம். ‘அப்டியா? அவ்ளோ சீக்கிரமா? எப்ப மாமி டியூ டேட்?’ 

கலகலவென்று சிரித்தார் மாமி. ‘வெட்டரினரி டாக்டர் கிட்ட போயிருக்கா! நமக்கு வேண்டிய ஒருத்தர்கிட்ட இருந்து அதிர்ஷ்டமான ஏழாவது நாய்க்குட்டின்னு ஒரு நாய்க்குட்டியை வாங்கினோம். கொஞ்சம் விலை அதிகம்தான். மூவாயிரம் ரூபாய்! ஆனால் அந்தக் குட்டி வீட்டில இருந்தா அதே வருஷம் ஆண் கொழந்தை பிறக்குமாம். எப்டியோ, நல்லது நடந்தா சரி. அதை எடுத்துக்கிட்டுப் போய் மெடிக்கல் செக்-அப் பண்றதுக்குத்தான் போயிருக்கா சித்ரா’ என்றார் மாமி.

பாவனாவுக்குத் துணுக்கென்றது. ‘யார் கிட்ட வாங்கினீங்க மாமி?’ என்றாள் திகைப்புடன். 

‘சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்டி. அப்புறம் சொல்றேன். இப்ப என்ன அவசரம்?’ என்று நகர்ந்தார் அந்த மாமி.

நீங்களே சொல்லுங்க ஸார், ஒரு நாய்க்குட்டி எத்தனைமுறை ஏழாவது குட்டி போடும்?

(c) இராய செல்லப்பா, சென்னை