ஞாயிறு, மே 12, 2019

கு. அழகிரிசாமி -யின் சிறுகதைகள்

கு. அழகிரிசாமி - யின் சிறுகதைகள்

-      இராய செல்லப்பா

(11-5-2019 சென்னை குவிகம்  இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய தலைமை உரை)

தமிழ் மொழியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கு அழகிரிசாமி. 1923 செப்டம்பர் 23இல் பிறந்து 1970 ஜூலை 5 ஆம் நாள் மறைந்தார். அதாவது 47 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தவர். இவர் மறைந்த ஐம்பதாம் ஆண்டு இது.

கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்தவர் அழகிரிசாமி. அதே ஊரைச் சேர்ந்த பின்னாளில் பிரபலமான இன்னொரு எழுத்தாளரை உங்களுக்கு தெரிந்திருக்கும்: கி ராஜநாராயணன். ஆம் அவரும் இவரும் சமகாலத்தவர்கள். நண்பர்களும் கூட. ‘நாங்கள் இரண்டு பேரும் ஒரே தெருவின் புழுதியில் கட்டிப் புரண்டவர்கள்’ என்கிறார் கி.ரா. புதுமைப்பித்தன், வல்லிக் கண்ணன், தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரும் இவருடைய சமகாலத்தவர்களே.


அக்காலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு சில மாணவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். தன் இருபதாவது வயதில் 'உறக்கம் கொள்ளுமா'  என்ற முதல் சிறுகதையை ஆனந்தபோதினி மாத இதழில் எழுதினார்.

ரஷ்ய இலக்கியங்களோடு இவருக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு. மாக்சிம் கார்க்கியின் நாவல்களை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவரே.

அக்காலத்தில் கழுதை மேய்த்தாலும் அரசாங்கக் கழுதையை மேய்க்க வேண்டும்  என்ற பழமொழி வழக்கத்தில் இருந்தது. அதன்படி அழகிரிசாமி அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தார்.  வட்டாரத் தமிழைத்  தன்னுடைய எழுத்துக்களில் பத்திரப்படுத்தி வைத்த இவருக்கு அப்போது கிடைத்த உத்தியோகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வது! அவருடைய  பதவியின் பெயர்  ‘எழுத்தர்’ என்பது. ஆனால் எழுத்தராக இருப்பதைவிட எழுத்தை ஆளுபவராக  இருப்பதுதான் அவருக்கு விருப்பமாக இருந்த காரணத்தால், அந்தப் பதவியை விலக்கிவிட்டு ஆனந்தபோதினி அலுவலகத்தில் வந்து சேர்ந்தார். ஆனந்த போதினியின்  சக பத்திரிகையான பிரசண்ட விகடனில் உதவியாசிரியரானார்.
 
இராய செல்லப்பா, கடற்கரய் மற்றும் வாசகர்கள்  
பின்னர் தமிழ்மணி என்ற அரசியல் வார இதழிலும் அதன் பிறகு வை. கோவிந்தனின் ‘சக்தி’ மாத இதழிலும் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி.ஜ.ரங்கநாதன் (பின்னாளில் மஞ்சரியின் ஆசிரியரானவர்).

சக்தி இதழில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மலேசியா சென்றார் அழகிரிசாமி. அங்குதான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அங்கு ‘தமிழ் நேசன்’ இதழில் பணியாற்றினார். ஆனால் போதுமான ஒத்துழைப்பு இன்மையால் திரும்பவும் தமிழ்நாட்டுக்கே வந்தார். வந்தவுடன் சில ஆண்டுகள் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு சுமார் 5 ஆண்டுகள் நவசக்தி இதழில் இருந்தபோது ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற நாடகத்தை எழுதிப் பெயர் பெற்றார்.

பிறகு நவசக்தியில் இருந்தும் விலகி தனிப்பட இயங்கத் தொடங்கினார். அக்காலத்தில் அவர் கடிதம் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். அவருடைய  கடிதங்களை கி ராஜநாராயணன் தொகுத்து அழகிரிசாமியின் கடிதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
வெளியீடு-சாகித்ய அகாதெமி
விலை ரூ.550.

அழகிரிசாமி அவர்களின் சிறுகதைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்றான ‘அன்பளிப்பு’ என்ற தொகுப்பிற்கு சாகித்ய அகடமி விருது 1970இல் கிடைத்தது.ஆனால் அதை நேரில் சென்று பெற்றுக் கொள்ளமுடியாமல் போயிற்று. காரணம் அவரது மறைவிற்குப் பிறகுதான் விருது வந்தது

இவருடைய சிறந்த சிறுகதையாக 'ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை மேற்கோள் காட்டப்படுகிறது. ரஷ்ய மொழி உள்பட பல மொழிகளில்  இக்கதை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் முதல் தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது.

தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 2019 பிப்ரவரி 17-ஆம் தேதி இதழில் சாயாவனம் கந்தசாமி அவர்கள் எழுதும் போது அழகிரிசாமியின் இந்தக் கதையைக் குறிப்பிடுகிறார்.

அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிய இன்றைய உரையாடலுக்கு ராஜாக்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்றால் இல்லை, எல்லோரும் சாமானியர்களே.
வெளியீடு- சாகித்ய அகாதெமி 
விலை ரூ.50

நான்கு  புதினங்களும், இரண்டு சிறுவர் இலக்கிய தொகுப்புகளும்,  இரண்டு  நாடகங்களும், நான்கு கட்டுரைத் தொகுப்புகளும் அழகிரிசாமி அவர்களின் பெயரால் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புகளைப் பொருத்தவரையில் லெனினுடன் சில நாட்கள், அமெரிக்காவிலே, மற்றும் மாக்சிம் கார்க்கியின் பல நூல்கள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் திண்ணை  இணைய வார இதழில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் ஒரு வாசகரால் வழங்கப்பட்டிருந்தது. அதில் முதல் 13 ஆவது இடத்தில் அழகிரிசாமி யின் ‘ராஜா வந்திருக்கிறார்' இடம்பெற்றிருந்தது.  முதல் பன்னிரண்டில் இருந்த சிலர் :  கு ப ராஜகோபாலன், புதுமைப்பித்தன், அம்பை, மௌனி, தி ஜானகிராமன், பி எஸ் ராமையா முதலியவர்கள்.
கு.அழகிரிசாமி அவர்களின் புதல்வர் திரு இராமச்சந்திரன் எனக்கு மிகவும் பழக்கமானவர். பல இலக்கிய விழாக்களில் தவறாமல் அவரை நான் சந்திப்பது உண்டு. அப்படி ஏற்பட்ட பழக்கம் மிக நெருங்கிய பழக்கம் ஆகி விட்டது.
****
கு அழகிரிசாமி அவர்களின் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்  புத்தகவடிவில் கிடைக்கின்றன. இன்றைய நிகழ்வில் மதிப்பிற்குரிய கட்டுரையாளருமான கடற்கரய் அவர்கள் அக்கதைகளைப் பற்றியும் அழகிரிசாமியின் மற்ற எல்லா படைப்புகளைப் பற்றியும் தனது மதிப்பீட்டை உங்கள் முன் வைக்க இருக்கிறார்.

அதற்குமுன்னால் அவசரமாக அழகிரிசாமியின் ஒரு சில சிறுகதைகளைப்  பற்றிய அறிமுகத்தை நான் உங்களுக்குத் தராவிட்டால் இந்த நிகழ்வுக்கு நான் நியாயம் செய்தவனாகமாட்டேன். கடற்கரய்  அவர்கள் என்னைப் பொருத்தருளலாம்.
கு. அழகிரிசாமியின் மைந்தர் ராமச்சந்திரன் இடது கோடியில்  

ஒரு மூத்த எழுத்தாளருக்கு நாம் காட்டும் மரியாதை, அவருடைய எழுத்தைத் தேடிப்பிடித்துப் படிப்பதே. ஆனால் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. காரணம் சம்பந்தப்பட்ட நூல்கள் இப்போது அச்சில் இல்லாமல் இருக்கலாம். அருகிலுள்ள நூலகங்களிலும் கிடைக்காமல் போகலாம். இதை மனதில் கொண்டு, அழகிரிசாமியின் கதைகளைப்  பற்றிப்  பேசும்போது அவருடைய வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறேன். என்னுடைய வார்த்தைகள் தடிமன் எழுத்தில் உள்ளவை.

(1) ‘தியாகம்’ சிறுகதை  


இது ஒரு மளிகைக் கடைக்காரரைப் பற்றிய கதை. கடைக்காரரின் குணாதிசயத்தை அழகிரிசாமி வர்ணிக்கும் விதமே இக்கதையைச் சுவையுள்ளதாக ஆக்குகிறது.

கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார்…. அன்று காலை 10.25 க்கு கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும்போது  முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ, ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து கொள்ள வேண்டும், அப்படி வைத்து கொண்டார். அந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு; பிரதானம் இல்லாத அம்சம் ஒரு மாதிரியான விறைப்பு. இந்த முகபாவத்தை கடையில் உட்கார்ந்து இருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டார். நண்பர்களோ அந்தஸ்து மிக்க வாடிக்கைகாரர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார்.


*****

பிறகு செட்டியார் முகத்தை திருப்பி, பெட்டியைத் திறந்து அங்கே கிடக்கும் சில்லறைக் காசுகளை கையால் துழாவி விட்டு கடைச் சிப்பந்திகளை – அந்த நான்குப் பேரையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தார். இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே கணம் தான் சாக்குக் கிடைத்து விட்டது ….

“ஏன்டா.தடிப்பயல்களே ! நீங்க என்ன பரதேசிகளா, சன்யாசிகளாடா!  எருமை மாட்டுப் பயல்கள் ! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போறப் பிச்சைக்காரப் பயல் கூட இப்படி சாம்பலை அள்ளி பூச மாட்டானேடா ? தரித்திரம் புடிச்ச பயல்களா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சிகளோ இல்லையோ யாவாரம் ஒண்ணுக்கு பாதியாய்ப் படுத்து போச்சு. இன்னும் மிச்சம் மீதியையும் படுக்க வெச்சிட்டு போகவாட இப்படி நெத்தியில அள்ளி பூசிட்டு வந்திருகீங்க, சாம்பலை!….”

****
(அன்று) பையன்கள் விபூதி பூசி வந்ததைக் கண்டுச் சீறி விழுந்ததைப் பார்த்தப் புதுப் பையன், மறு நாள் வெறும் நெற்றியோடு வந்து விட்டான். அவ்வளவு தான்: ” நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்கரானா? (கிறிஸ்துவனா?) என்னலே முழிக்கிற? உன் மூஞ்சியப் பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்?… நெத்தியை சுடுகாடு மாதிரி வெச்சுகிட்டு ….”

“போய் விபூதியை எடுத்துப் பூசு” என்று கணக்கு பிள்ளை அவனுக்குப் புத்தி சொன்னார். செட்டியார் திட்டுவதை உடனே நிறுத்தி விட்டார்.
****
செட்டியாரின் நண்பர், சண்முகம் பிள்ளை. தாம் வெகு நாட்களாகக் கேட்க நினைத்ததை அன்று அப்பட்டமாக கேட்கத் துணிந்தார்:

“இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும் உங்களைப்பத்தி பெருமையா பேசிக்கிறாங்க. கடைப் பையன்களுக்கு உங்கள போல சம்பளம் குடுக்கறவங்க இல்லையன்னும் எனக்கு தெரியும், எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா,ஏன் இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப் பையன்களை திட்டிகிட்டே இருக்கீங்க? எப்போ வந்து பார்த்தாலும், எவனையாவது நிப்பாட்டி வெச்சுகிட்டு பொரியரீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்ல?”

“அண்ணாச்சி, அன்பாதரவா இல்லையன நான் திட்டுவனா ? அதைக் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க. பயகளை நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லில கடைய விட்டு வெளியே ஏத்திபுட்டு மறு சோலி பார்க்க மாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்துல ஒருத்தனை நான் வேலைய விட்டுப் போகச் சொல்லியிருக்கேனா? பயக விருத்திக்கு வரணும்னு தானே தொண்டத் தண்ணி வத்த வெச்சுகிட்டு இருக்கேன்? கத்தி கத்தி என் உசிரும் போகுது “

“ஏன் கத்தணும் ? நல்லபடியா ஒரு சொல் சொன்னாப் பத்தாதா?”

“அப்டியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரி தான் ! நல்லபடியாக சொன்னாப் பயகளுக்கு திமிர் இல்ல ஏறி போகும்? ஒடம்பு வளையுமா? அந்த காலத்திலே நான் கடைப் பையனா இருந்தப்போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டிருக்கணும்…. ஹும், அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான் பேசியிருக்க மாட்டேன்; பேசவும் தெரியாது.”

“அப்ப்பேர்ப்பட்டமுதலாளியா அவரு!”

“என்னங்கறீங்க? என்ன பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன்,பாட்டன் – அத்தனை பேரையும் சேர்த்து கேவலமா பேசுவாரு. புளுத்த நாய் குறுக்கேப் போகாது. ஒரு நாள் என் மூஞ்சில அஞ்சு பலப் படிய தூக்கி வீசிட்டாரு. தலையக் குனிஞ்சேனோ, தப்பிச்சேனோ ! அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைன்னு வெச்சு, யாவரம் பண்ணி, இவ்வவளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாம நிர்வாகம் பண்ணிட்டு வரேன்…”

சண்முகம்பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனாலும் அப்பறம் சிரித்து கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு ”செட்டியாரையா உங்க மேல தப்பில்ல ; உங்க முதலாளிய சொல்லணும். உங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு”

****

(2) சுயரூபம் – சிறுகதை


இக்கதையில் நெடுஞ்சாலை உணவகம் நடத்தும் ஒருவரின் செயல்பாட்டைப்  புலப்படுத்துகிறார் அழகிரிசாமி.

மங்கம்மாள் சாலை என்பது இந்நாள் டிரங்க் ரோடாகும். சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் செல்லும் அந்தச் சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் ஒரு விலக்குப் பாதை பிரிகிறது. அரை மைலுக்கு மேற்கில் இருக்கும் வேப்பங்குளத்துக்குச் செல்லும் அந்தப் பாதையும் மங்கம்மாள் சாலையும் சந்திக்கும் இடத்தில், முருகேசம் பிள்ளையின் பலகாரக்கடை என்ற ஒற்றைத் தனிக்குடிசை ஒன்று இருக்கிறது.

பஸ்ஸுக்காகப் புளியமரத்து நிழலில் வந்து காத்திருக்கும் பிரயாணிகளையும், தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் செல்லும் மாட்டு வண்டிகளையும் மற்றும் பாதசாரிகளையும் நம்பி அவ்விடத்தில் இருபது வருஷங்களுக்கு முன் நிறுவப்பட்ட அந்தக் கடை, முருகேசம் பிள்ளைக்கு ஐந்நூறு ஏக்கம் புன்செய் நிலத்தையும், சிமிண்டுத் தளம் போட்ட ஓர் ஓட்டுவீட்டையும் சம்பாதித்துக் கொடுத்ததுமல்லாமல், அவருடைய மூன்று பெண்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்திருக்கிறது.

***
பஸ் வந்தது. அதிலிருந்து ஒரே ஒரு பிரயாணி மட்டும் இறங்கினான். அவனை வரவேற்றுச்  சாப்பிட அழைத்தார் பிள்ளை. அவன் ‘பசி இல்லை’ என்று சொல்லி அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றான். அகப்பட்டுக்கொண்டால் அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ கணக்காகிவிடும் என்று அவனுக்குப் பயம். ஆனால் பிள்ளையா விடுகிறவர்? ஓடிப்போய் அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

“கையை விடுமையா! பசிச்சா வரமாட்டான், மனுஷன்? கடன்காரன் மாதிரி வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறீரே!” என்று கோபமாகச் சொல்லி, கையையும் உதறிவிட்டு அவன் ஊரைப் பார்த்து நடந்தான்.

பாவம், வியாபாரம் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது!
****

(3) அன்பளிப்பு – சிறுகதை


ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் எழுத்தாளர் கூறுவதாக அமைந்த கதை. அழகிரிசாமியின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும்  ஒன்றாகக் கருதப்படுகிறது.

*****

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என் பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில் நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டின் ஒரு பகுதியிலே தான் எங்கள் குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும் சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது, பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது – இப்படிப் பொழுது போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும் புத்தகங்கள் சிலவற்றை எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம் கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள் அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத் தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப் புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப் புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள் தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு திரும்பினால் ஒரே கலாட்டாதான்.
***
சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு” என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும், என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன.
******
சாரங்கன் என்ற பையன் வயதில் சிறியவன். அவனுக்கு இந்த எழுத்தாளருடன் இருந்த நட்புதான் எவ்வளவு புதிரானது! அவனுடைய உளவியலை அழகிரிசாமி வெளிப்படுத்தும் விதத்தில்தான் இக்கதை சிறப்புப் பெறுகிறது.
*****
சாரங்கன் அவரை அழைக்கிறான்.  “எங்கள் வீட்டுக்குப் போவோமா?”

”உங்கள் வீட்டுக்கா?”

“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல  வில்லையா?”

“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”

“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து இழுத்தான்.

அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின் வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம் வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி? போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும் பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள் பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான் எப்படிப் போவது?
………..

நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல் மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.

சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான் பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு “வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.

……………………………….
இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என் கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச் சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன் வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார், அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர் விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.

சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று விட்டது.

“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”

சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும் சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய் வைக்கப் போனான் சாரங்கன்.

’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள் என்னைக் கஷ்டப்படுத்துவதனாலாவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.

சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என் முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான். …….. பிறகு அவன் வலது கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.

அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம் பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.

"“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”
****

(4) ராஜா வந்திருக்கிறார் – சிறுகதை


ஏழ்மையின் பரிதாப நிலையையும் அதைப்  பொருட்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளையும், தங்களிடம் இல்லாதபோதும் இருப்பதில் சிறிதளவையாவது தங்களைவிட ஏழ்மையானவர்களோடு பங்கிட்டுக் கொள்ளும் பண்பாட்டையும் அந்தநாளில் சிறப்பாக வெளிப்படுத்திய கதை இது.

அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் படப் போட்டியை ஆரம்பித்து விட்டார்கள்.

ராமசாமி தன் புத்தகத்தை முதலிலிருந்து ஒவ்வொரு தாளாகத் திருப்புவான்; படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி, ”இதோ, இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு" என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான்; பிறகு, இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும்; உடனே, அந்தப் படத்துக்கு அடுத்தவன் பதில் படம் காட்ட வேண்டும். இவ்விதமாக பதிலுக்குப் பதில் படம் காட்டிய வண்ணம் புத்தகம் முழுவதையும் புரட்டுவார்கள். எவன் புத்தகத்தில் அதிகப் படங்கள் இருக்கின்றனவோ, அவன் ஜெயித்து விடுவான்; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன், "உனக்குப் படம் காட்ட முடியல்லே! தோத்துப் போயிட்டியே!" என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது.

வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில், சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள்.

ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும்; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்துவிட்டது. செல்லையா தோற்றுப் போய்விட்டான். பக்கத்தில் நின்ற பிள்ளைகள் அவனைக் கேலி செய்தார்கள். தங்கள் அண்ணன் தோற்றுப் போனதைக் கண்டு, தம்பையாவுக்கும் மங்கம்மாளுக்கும் சொல்லமுடியாத வருத்தம்.

அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே, படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது. ‘எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா?’ என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி, "எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா?" என்று கேட்டான்.

****
இந்தப் போட்டி இத்துடன் முடியவில்லை. அடுத்த சில நாளில் தீபாவளி வருகிறது. ஓர் ஏழைக் குடுமபம் தீபாவளிக்குத் துணி எடுக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் அழகிரிசாமி.
****

(குழந்தைகள்) பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்துப் பார்த்தனர். மறுநாள் விடிந்த பிறகு ஆரம்பமாகும் தீபாவளி, குழந்தைகளுக்கு அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒரே குதூகலம்! ஒவ்வொரு துணியாக எடுத்து, ‘இது யாருக்கு இது யாருக்கு’ என்று இனம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும், இரண்டு கால் சட்டைகளும், ஒரு பாவாடையும், ஒரு பச்சை நிறமான சட்டையும், ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன.

துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டு யாரைச் சேருவது என்று தெரியவில்லை உடனே செல்லையா கேட்டான்: "துண்டு யாருக்கும்மா?"

"ஐயாவுக்கு" என்றாள் தாயம்மாள்.

"அப்படின்னா உனக்கு?" என்று மங்கம்மாள் கேட்டாள்.

தாயம்மாள் சிரித்துக்கொண்டு, "எனக்குத் தான் ரெண்டு சீலை இருக்கே இன்னும் எதுக்கு? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா?"

"ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம்?" என்றாள் மங்கம்மா.

"வாயாடி! வாயாடி! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே!. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது?" என்று சொல்லிவிட்டு, மங்கம்மாளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் தாய்.
***
இரவு அனைவரும் தூங்கப்போகிறார்கள். மண்தரையில் தான் படுக்கை.
****
தம்பையா, அண்ணனைப் பார்த்து, "துணைக்கு வர்ரயா?" என்று கூப்பிட்டான். இருட்டானதால் வீட்டு முற்றத்துக்குப் போய் ஒன்றுக்குப் போய்விட்டுவர அவனுக்கு பயம். செல்லையா துணைக்குப் போனான். இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது……...

அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் கிடையாது, தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று, பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால்  மூன்று எச்சில் இலைகள். கிராமத்தில் வெண்கலக் கும்பாவில் சாப்பிடாமல், இலை போட்டுச் சாப்பிடுகிற வீடு ராமசாமியின் வீடுதான். அந்த வீட்டின் வாசலிலிருந்துதான் அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கறி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.

****
இந்தக் குழந்தைகள் அந்த ஏழைச் சிறுவனைத் துரத்துகிறார்கள். அவன் போக மறுக்கிறான். அழுகிறான். கடைசியில் அவர்களின் அம்மா வந்து விசாரிக்கிறாள்.
****

"நீ சாப்பிட்டாயா?" என்று தாயம்மாள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

"அவன் எச்சியைச் சாப்பிடுறான், அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம்!" என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். "இந்தா தம்பையா! இனிமே அப்படிச் சொல்லாதே!" என்று அதட்டிவிட்டு, "நீ யாரப்பா? உனக்கு எந்த ஊரு?" என்று தாயம்மாள் சிறுவனை விசாரித்தாள்.

"விளாத்திகுளம்" என்றான் சிறுவன்.

அவனுக்குத் தாய் தகப்பன் இல்லை. உடன்பிறந்தவர்களும் இல்லை. கழுகுமலையில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அத்தை வீட்டிற்குப் போவதற்காக அவன் அந்த வழியாக வந்திருக்கிறான்.

அவன் விளாத்தி குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மைல்  பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான். மறுநாள் விடிந்த பிறகு, எட்டு மைல் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால், அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வைத்துக் கொள்ளுவாளா, விரட்டி விடுவாளா என்பது அவனுக்குத் தெரியாது. அத்தையையும் அவன் பார்த்ததில்லை. எப்படியோ, ஒரு வழியில் அவனுக்கு அவள் அத்தை என்றும், ‘அங்கே போ’ என்றும் யாரோ சொல்ல, அதை நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான்.

"உன் பேரு என்ன?" என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள்.

"ராஜா" என்றான் சிறுவன்.

அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்குப் படுக்கையை எடுத்து விரித்தாள். மண் தரை ஈரச் சதசதப்புடன் இருந்ததால், வெறும் ஓலைப்பாயை விரித்துப் படுப்பதற்கு இயலாமல் இருந்தது. அதனால், கிழிந்து போய்க் கிடந்த மூன்று கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து, அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் மங்கம்மாளும் படுத்துக் கொண்டார்கள்.
 ****

அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஓலைக் கூரையில் விழுவது, ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப்  பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும், வேட்டுச் சப்தத்தைக் கேட்டுப் பயந்து நாய்கள் குரைக்கும் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

தாயம்மாள் எழுந்து விளக்கை ஏற்றினாள். …. ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள்.  ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை.
"அரப்புக் காந்தும்; நான் மாட்டேன்." என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா.

"அரப்புப் போடல்லே; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும்"

"ஊஹும்."

"தம்பி, சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ, உனக்குக் காந்தும் படியாக நான் தேய்ப்பனா? – வா, எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் தீபாவளியோடே பீடை எல்லாம் விட்டுப்போகும். குளிக்காம இருக்கக்கூடாதப்பா" – இப்படி வெகுநேரம் கெஞ்சிய பிறகுதான் அவன் வேறு வழி இல்லாமல் சம்மதித்தான். 

ராஜா எழுந்து வந்து மணையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா!…" என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள்……

‘யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."

அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். ……….புதுத் துணிகளுக்கு மஞ்சள் வைத்துச் செல்லையாவும் உடுத்துக் கொண்டான்; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள்.

அவன் கௌபீனத்தோடு நின்றான்.

தாயம்மாளுக்குப் ‘பகீர்’ என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக் கொடுப்பதா, கொடுக்காமல் இருப்பதா? அவள் மனதுக்குள்ளே வேதனை மிக்க போராட்டம். மாதக் கணக்கில் ஒரு ரூபாய்த் துண்டு இல்லாமல் அவளுடைய கணவன் பட்ட கஷ்டத்தையும், வீதிவழிப் போவதற்குக் கூசியதையும், "ஒரு துண்டு வாங்க வழியில்லையே!" என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில், ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல், மெளனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா.

தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜாவோ வெகுநேரமாகக் கண்கொட்டாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.

"என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ" என்று மனக் கசப்புடன் சொல்வது போலச் சொன்னாள் தாயம்மாள். ஆனால், அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை.

அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து, தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள்; அப்புறம் ஏதோ ரகசியத்தைச் சொல்லுவதுபோலச் சொன்னாள்.

"பாவம்! அவனுக்கு அந்தத் துண்டைக்குடு அம்மா!"

கொடுக்கப்பட்டது.

அப்புறம் மங்கம்மாள் வீதிக்கு ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும், வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும், அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தான்; மங்கம்மாளும் அவனைப் பார்த்து நடந்தாள். இருவரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டனர். சந்தித்த மாத்திரத்தில், மிகவும் சந்தோஷத்துடன் ராமசாமி சொன்னான்…

"எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்!"

ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால், அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது  நடந்த போட்டிதான் அவள்  ஞாபகத்தில் இருந்தது. அவன் சொன்னதற்குப் பதில் சொல்லி அவனுடைய ‘பெருமை’யை மட்டம் தட்டவேண்டும் என்று அவள் மனம் துடித்தது.

அதனால் ஒரு அரை அடி முன்னால் நகர்ந்து வந்து நின்றாள். யாதொரு திகைப்பும், தயக்கமும் இல்லாமல் ராமசாமியைப் பார்த்து, ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு, மிக மிக ஏளனமாகச் சொன்னாள்.

"ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு."

*****

அழகிரிசாமி வட்டார மொழியில் எழுதினார் என்றால் கூட கி. ராஜ நாராயணன் மாதிரியோ  நாஞ்சில்நாடன் மாதிரியோ இல்லாமல்  எல்லா தரப்பு மக்களுக்கும்  புரியும் வகையிலான சொல்லாக்கங்களையே பெரிதும் பயன்படுத்தினார் என்பது சாயாவனம் கந்தசாமியின் கருத்து.

திறமை உள்ள இலக்கியவாதிகள் ஐம்பது வயதிலேயே மறைந்து போவது தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு. ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் இறவாத இலக்கியங்களை அவர்களால் படைக்க முடிந்திருப்பது தமிழின் பாக்கியமே. அதற்கு சாட்சியாக நிற்கிறார் கு. அழகிரிசாமி.
******

புதன், ஏப்ரல் 24, 2019

நூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’


நூல் விமர்சனம்:

ஆர் வி ராஜன்  எழுதிய  ‘துணிவே என் துணை’

-       இராய செல்லப்பா

(23-4-2019 அன்று சென்னை அடையாறு காந்திநகர் நூலகத்தில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில் ஆற்றிய உரை)

***

நண்பர்களே, நாம் எவ்வளவோ  வாழ்க்கை வரலாற்று நூல்களைப்  படித்திருக்கிறோம். மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ முதல் கலைஞர் கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ வரை,  வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வந்திருக்கின்றன.

பொதுவெளியில் பெரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்கள் தான் வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் கல்வியின் பரவலால், நமக்கு அருகே வாழும் சாதாரண மனிதன் கூட எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களிடையே தோன்றிய பிறகு, அந்த ஆர்வத்திற்குத்  தீனி போடுவதற்காக வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் எல்லாத்  தரப்பு மக்களிடமிருந்தும் தோன்ற ஆரம்பித்தன. எனவே எளிய மனிதர்களும் சுய வரலாற்று நூல்களை எழுத ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை கட்டுரைகள் என்று சொன்னாலே அது யாரோ ஒரு மனிதனின் செயல்பாட்டை பற்றியதாகவே இருக்கும். அதாவது அவருடைய தொழிலின் வரலாறு. தன்னுடைய தொழிலை அவர் எப்போது தொடங்கினார், அவருடன் பணியாற்றியவர்கள் யார் யார், மூலதனம் வழங்கியவர்கள் யார், இந்தத்  தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு வெற்றி கண்டார் என்பதுதான் கட்டுரையின் கருப்பொருளாக இருக்கும். தமிழ்ப் பத்திரிகைகளில் இத்தகைய கட்டுரைகள் அதிகம் வருவதில்லை. பெண்கள் பத்திரிகைகளை மட்டும் விதிவிலக்காகக்  கொள்ளலாம். அவற்றில் ஒரு சாதாரணப் பெண்மணி வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழிலை எவ்வாறு வெற்றிகரமாக நடத்திச்  செல்வந்தர் ஆனார் என்பது போன்ற கட்டுரைகள் அதிகம் வருகின்றன. உண்மையில்  இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் தான் சமுதாயத்திற்குப்   பயன்படுபவை ஆகும். ஆனால் இதே அளவுக்கு ஆண்களின் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் தமிழ்ப்  பத்திரிகைகளில் வருகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஒன்று,  நீங்கள் ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும், அல்லது உங்களைச் சுற்றி ஒரு பிரச்சினை கிளம்ப வேண்டும், அதுவும் நீங்கள் சினிமாவிலோ அரசியலிலோ இருக்க வேண்டும்; அப்போதுதான், நீங்கள் யார், நீங்கள் இந்த நிலைமைக்கு எப்படி வந்தீர்கள், என்ன படித்தீர்கள், உங்களுடைய செல்வநிலை எப்படி என்பது பற்றி பத்திரிகைகள் கவனம் செலுத்தும். அதிலும் உங்களின் இருண்ட பகுதிகளை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்ட முனையும்.

ஆனால் அறுபதைக் கடந்த  ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, ஒரு சாதாரண நிலையில் இருந்த தன்னால் இதுவரை எப்படி முன்னேற முடிந்தது என்பதை எழுத்து வடிவில் கொடுத்தால், தன்னைப் போன்ற பலருக்கு வாழ்வில் முன்னேறுவதற்கு அது பயன்படுமே என்று கருதினால், அது  நம்முடைய அதிர்ஷ்டமே. அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் ஆர். வி. ராஜன் அவர்களை நாம் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

****
முதலில் ராஜன் அவர்களுடைய பன்முகத்தன்மையைக்  குறிப்பிட்டாக வேண்டும்.

ஆங்கிலத்தில் அவர் சிறந்த கட்டுரையாளர், சொற்பொழிவாளர். வாரம்தோறும்  அடையாறு டைம்ஸில் எழுதிவருபவர்.   அவருடைய துணைவியார் திருமதி பிரபா ராஜன் அவர்கள் தமிழில் சிறந்த சிறுகதையாசிரியர். அவர் அமரரான போது அவர் பெயரால் ‘பிரபா ராஜன் அறக்கட்டளை’யை நிறுவி அதன் மூலமாக கலைமகள், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்களோடு இணைந்து ஏராளமான எழுத்தாளர்களுக்குப்  பரிசுகளை வழங்கி வருகிறார் ராஜன்.

கடந்த ஐந்து வருடங்களாகத்  ‘தமிழ்ப்  புத்தக நண்பர்கள் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி,  மாதம் தோறும் ஒரு சிறந்த தமிழ்ப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் TAG அமைப்பின் நான்கு  தூண்களில் ஒருவராக விளங்கி வருபவர் ராஜன் என்பது சென்னையில் உள்ள தீவிர இலக்கிய அன்பர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்.


ராஜன் அவர்களின் செயல்பாட்டுத் துறை விளம்பரத்துறை ஆகும். அதிலும் கிராமப்புற மார்க்கெட்டிங் துறையில் அவர் சரித்திரம் படைத்தவராகக் கருதப்படுகிறார். அவர் தன் வாழ்நாளில் விவசாயம் செய்திருக்க மாட்டார். ஆனால் எந்த நிலத்துக்கு, எந்தப் பயிருக்கு, எவ்வளவு ஏக்கருக்கு, எவ்வளவு உரம் இடவேண்டும் என்பது விவசாயிகளை விட இவருக்கு நன்றாக தெரியும். கோட்டு சூட் அணிந்து கொண்டு மாதக்கடைசியில் செலவுக்கு நண்பர்களிடம் கைமாத்து கேட்கும்  நகரத்தானை விட, மேலாடை இல்லாமல் வியர்வையில் நனையும் இடையாடை மட்டுமே உடுத்திய கிராமத்தவரிடம் அதிக பண வசதி உண்டு என்பதைத்  தன் விளம்பர ஆற்றலின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் ராஜன்.

உலகப்  புத்தக தினம் கொண்டாடும் இந்த வேளையில் ஆர்வி ராஜன் அவர்களின் ‘துணிவே என் துணை’ என்ற இந்த நூலைப் பேச எடுத்துக் கொள்வதில்  நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு அமரர் சாருகேசி அவர்களால் அழகிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.

****

புதுக்கோட்டை அருகில் உள்ள நெற்குப்பை என்ற கிராமத்தில் பிறந்தவர் ராஜன்.  இவருடைய தாயார் எட்டு குழந்தைகளில் மூத்தவர். இவருடைய தந்தை ஒன்பது குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தவர். (இப்போது மாதிரி அப்போது தேர்தல்கள்  அடிக்கடி  நடந்திருந்தால் ராஜனின் குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்! ஒவ்வொரு வேட்பாளரும் இவர்கள் குடும்பத்தை எவ்வளவு கனமாக கவனித்திருப்பார்கள்!)

ராஜனின் தாய் தந்தை தங்கள் குடும்ப வாழ்க்கையை பரோடாவில் தொடங்கியிருந்தாலும், பிறகு பம்பாய்க்கு இடம்பெயர்ந்தார்கள். மூன்று மாதக்  குழந்தையாக பம்பாய் நகரில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்  அடுத்த 25 ஆண்டுகள் தன் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டது அங்கேதான்.

இந்தப்  புத்தகத்தை நான் முதலில் ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலுமாக மூன்று நான்கு முறைகள் படித்துவிட்டேன். தன வாழ்க்கையில் இதுவரை நிகழ்ந்த குறைந்தபட்சம் ஆயிரம் நிகழ்ச்சிகளையாவது  இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (சந்தேகம் இருப்பவர்கள் சரியாக எண்ணிப் பார்த்து கூறினால் திருத்திக் கொள்ள தயார்.)

நேரத்தின் அருமை கருதி புத்தகத்தின் சுவையான பகுதிகளை மட்டும் கூறி அமைகிறேன்.

***
தன்னுடைய நான்கு அல்லது ஐந்தாவது வயதிலேயே இந்திய சுதந்திரப்  போராட்டத்தில் ராஜன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் பிறந்தது 1942இல். வெளிநாட்டுப் பொருள்களை எல்லாம் இவருடைய கட்டடத்துக்கு வெளியே அப்போது எரித்துக் கொண்டிருந்தார்கள். தேச பக்தி உணர்வு மேலிட்ட  ராஜன் அவர்கள், தன்னுடைய தந்தை அலுவலகத்திற்குப் போகும் போது அணியும் தொப்பியைத்  தூக்கி அந்த நெருப்பில் போட்டு விட்டார். அவ்வளவு இளம் வயதில் துணிச்சலாக இவர் புரிந்த தேசீய உணர்வுள்ள காரியத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு என்னவோ தந்தை கொடுத்த பலமான அறைதான்!

*****
கூட்டுக் குடித்தனங்களுக்குப்  பிரபலமானது நம்முடைய திருவல்லிக்கேணி. அதுபோல பம்பாயில் மாதுங்கா பகுதியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு மாடி வீடுகள் பிரபலம். அதை சால் என்று  கூறுவார்கள்.  ஒரு சாலில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடித்தனங்கள் இருக்குமாம்.

சால் குடியிருப்பில் ஒரே ஒரு அறைதான் இருக்கும். ஓரத்தில் சமையல். அதுவே சாப்பிட. உட்கார, படுக்க என்று சகலத்துக்கும். கட்டில் போட்டால் இடம் போய்விடும் என்று குடியிருப்பில் யாரிடமும் கட்டிலே இருக்காது. பாயும் தலையணையும் தான். குடும்பம் பெரிதானால் இடப்பற்றாக்குறை காரணமாக வளர்ந்த பையன்கள் இரவில் வெளியேதான் படுக்க வேண்டும்.எங்கே படுக்க இடம் கிடைக்கும் என்று பையன்கள் தேடிக்கொண்டு அலைவார்கள். அது, இரண்டு கட்டடங்களுக்கு இடையே இருக்கும் காலி இடமாகவோ, மொட்டை மாடி ஆகவோ,  அல்லது எல்லாருக்கும் பொதுவான நடைபாதையாகவோ  இருக்கும். பையன்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு படுக்கை, தலையணை, பெட்ஷீட் மற்றுமொரு கைத்தடியும் இருக்கும். கைத்தடி எதற்கு என்றால் இரவில் பையன்கள் மீது பாய்ந்து வருகிற நாய்களையும் பூனைகளையும் எலிகளையும் விரட்டுவதற்காக!

சால் குடியிருப்பில் ஏகப்பட்ட குழந்தைகள். ஏகப்பட்ட சண்டைகள். விடலைப் பருவக் காதல்கள். அதற்கான ஏராளமான வாய்ப்புகள். சுவையான இளமைக்காலத்தில் பம்பாயில் இருந்திருக்கிறார் ராஜன்.

ஒரு முறை தன்னுடைய வங்காளித்  தோழியை தேநீர் அருந்துவதற்காக வீட்டிற்கு அழைத்திருக்கிறார். உடனே சாலில்  இருந்த எல்லாக்  குடித்தனக்காரர்களும் கூட்டமாக வந்து,   அந்தப்  பெண்ணை ஆராயத் தொடங்கி விட்டார்களாம். அவளைத்தான் ராஜன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ  என்று ஆர்வத்துடனும்,  கவலையுடனும்  கேட்கத்  தொடங்கி விட்டார்களாம். ராஜனின் வாழ்வில் அது ஒரு நிலாக்காலம்!

******
ஆனால் ராஜன் உண்மையிலேயே ஒரு பெண்ணைக்  காதலித்து இருக்கிறார். ஆனால், அது பாவம், ஒரு தலை ராகம் ஆகவே நின்றுவிட்டது என்று வருத்தப்படுகிறார். ஒருவேளை அவர் இளம் வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிந்தது தான் காரணமாக இருக்குமோ? ஏனென்றால் கண்ணாடி அணிந்த ஆண்களை இளம் பெண்கள் காதலிப்பது குறைவாம். ஆனால் கண்ணாடி அணிந்த பெண்களைக்  காதலிக்கும் ஆண்கள் அதிகமாம். ஒரு ஆராய்ச்சியில் படித்த நினைவு.

*****
ராஜனின் தாயார்  கடின உழைப்பாளி. நூலின் இந்த பகுதி மிகவும் முக்கியமானது என்பதால் ராஜனின் வார்த்தைகளிலேயே அதைக் கூறுகிறேன்:

“அம்மா வேலைகளை எல்லாம் முடித்து விட்டுப்  பிற்பகல் 3 மணிக்குத்  தான் சாப்பிட்டு கொஞ்சம் கண்ணயர்ந்தாள். அதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. பல நாட்களில் அதுவும் முடியாது. ஏனென்றால் மூன்று மணிக்குத் தான் நாங்கள் எல்லாம் பள்ளியிலிருந்து திரும்புவோம். பகலிலே இப்படி என்றால் இரவு தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். கைச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அம்மா தைத்த ஜாக்கெட்டுகளை காஜா எடுத்து பட்டன் வைக்கிற கடைகளுக்கு எடுத்துக் கொண்டு போவதும், யார் வீட்டில் எதைக் கொடுப்பது என்பதும், கணக்கு வைத்துக் கொள்வதும் என் வேலை. நான் என் டிராயர் பனியன் எல்லாம் தைக்க கற்றுக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு உடம்பு மோசமானதால் அப்பா இந்தக் காரியங்களுக்குத் தடைவிதித்து விட்டார்…….

“அந்தக்  காலத்தில் பாக்கெட் மணி சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பழைய பேப்பரில் இருந்து கவர் செய்து பழக் கடைக்காரர்களிடம் விற்பேன். 12 கவர் கொடுத்தால் இரண்டு அணா கிடைக்கும். எங்கள் குடியிருப்புகளில் இருக்கும் சாரதா பவன் என்ற உடுப்பி ஹோட்டலில் சுடச்சுட தோசை வாங்கி சாப்பிடுவேன். அந்தக் காலத்தில் அது ஒரு ஆடம்பரமே. ஆனால் எனக்குப்  பிடித்த தக்காளி ஆம்லெட் வேண்டுமானால் 24 கவர் கொடுத்தால்தான் கிடைக்கும். ஆனால் இதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் நடந்த விஷயம். மாதக்கடைசியில் பழைய பேப்பர் எடைக்குப் போடும்பொழுது அப்பா கண்டுபிடித்து விட்டார். அத்துடன் இதுவும் போச்சு.” 

****
எல்லாப் பதின் பருவ  மாணவர்களையும் போலவே ராஜனுக்கும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் கிரிக்கெட் மட்டையும் பந்தும் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் பள்ளிக்கு மாதச் சம்பளம் எட்டு ரூபாய் கட்டுவதற்கே குடும்பம் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்த போது மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் முதல் வகுப்பைத் தவறவிட்டார் ராஜன். அதனால் நல்ல கல்லூரியில் சேரும் மதிப்பெண்கள் இல்லாமல் போயிற்று. ஆனாலும் விடுமுறை நாளில் குறைத்து 125 ரூபாய் சேகரித்து வைத்திருந்தார். ஆனால் அதுவும் கல்லூரிக்குப்  போதுமானதாக இல்லை. அப்போது ஒரு நல்ல வாய்ப்பாக நைலான் சேலைகளுக்கு வண்ண டிசைன்களை பதித்துக்  கொடுக்கும் வேலை மாதத்திற்கு 50 ரூபாய் என்று இவருக்குக்  கிடைத்தது. திறமையாக இவர் பணி செய்ததால் இரண்டாவது மாதம் சம்பளம் 75 ரூபாயாக ஆயிற்று. இதை அம்மாவிடம் அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாகக்  கொடுத்துவைத்தார். எப்படியாவது கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக.

கல்லூரியில் வணிகவியல் படித்தார் ராஜன். முதல் வருடப்  பாடங்களில் ஒன்றான ‘மார்க்கெட்டிங் அண்ட் அட்வைர்டைசிங்’ பாடத்தில் முதலாவதாக வந்தார். ஆனால் அப்போது விளம்பரத்துறை அவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல விளம்பரத் துறையில் ஒருவன் இருக்க வேண்டுமானால் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கொள்கை அக்காலத்தில் இருந்ததாம். எனவே நீ விளம்பரம் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறுவது கடினம் என்று அவருடைய ஆரம்பகால வழிகாட்டியாகக்  கருதப்பட்ட சுக்லா என்பவர் கூறினாராம்.

சுக்லா  வெற்றிகரமான விளம்பரத் துறை நிபுணர். அவர் ஓய்வு பெறும் நாளில் அவருடைய வெற்றிக்கு காரணம் என்ன என்று  ராஜன் கேட்டபொழுது அவர் இரண்டு ஆலோசனைகள் கூறினாராம். இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதியும், இந்தப்  புத்தகத்தில் இருந்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதும்  இந்த இரண்டு ஆலோசனைகள்தான்.

“ஒன்று, உன்னுடைய நிறை குறைகளை பட்டியல் போட்டுக் கொள். உன்னுடைய நெருங்கிய மனிதர்களிடம் இதைக் காட்டு. அவர்கள் ஆலோசனையின் பேரில் குறைகளைக் குறைப்பதற்கும், நிறைகளை அதிகப்படுத்துவதற்கும் நீ கற்றுக் கொள்ள வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் நீ தொடர்ந்து செய்ய வேண்டும்.

இரண்டு, ஒருவன் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறான், எவ்வளவு செலவு செய்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடாதே. செல்வத்தை சேமிக்கும் போதும் அதை அனுபவிக்கும் போதும் வாழ்வின் சில உன்னதங்களை,  குறிப்பாக, மனித உறவுகளை இழக்கும் துர்பாக்கிய நிலையை அவன் அடைந்திருக்கலாம்.”

***
ராஜன் குறிப்பிடுகிறார்: “நான் இந்த ஆலோசனைகளை என் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்தேன். எனக்குத் தெரிந்த இளைய சமூகத்தினர் அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொண்டேன். 67வது வயதில் ஆங்கிலத்தில் என் வாழ்க்கை சரிதத்தை எழுதும்போது, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களை விட நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.”

நண்பர்களே, நமது இளைஞர்களுக்கு ‘ரோல் மாடல்கள்’ அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ, இயக்குனர்களோ அல்லர். பத்து விரல்களை மட்டுமே மூலதனமாகக்  கொண்டு, மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தை அரவணைத்துக் கொண்டு, அனைவருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகித்து, ஒரு கணமும் கூட வறுமையோ வாழ்க்கையின் துன்பங்களோ  தன்னைக் கீழே இழுத்து விடாமல் எப்போதும் மேல்நோக்கியே சிந்தித்து, வாழ்க்கையின் ஒரு கண்ணியமான அந்தஸ்துக்கு, முயற்சியுள்ள எவனும் முன்னேற முடியும் என்று நிரூபித்துள்ள ராஜன் போன்றவர்களே அத்தகைய ரோல் மாடல்களாக வேண்டும்.

அருமையானதொரு  புத்தகத்தை உலகப் புத்தக தினத்தில் நான் பேசுமாறு அமைந்தது என் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய  தருணம் ஆகும். இதற்காக ஆர் வி ராஜன் அவர்களுக்கும் திரு வையவன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-       இராய செல்லப்பா

****

திங்கள், ஏப்ரல் 15, 2019

கோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி


கோவையில் அணைந்த தலைநகர் விளக்கு -
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
(18-4-1942 - 06-4-2019)

-இராய செல்லப்பா

1989இன் ஆரம்ப மாதங்களில் ஒருநாள்.

சென்னை இந்திரா நகர் கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நான் (அமரர்) ‘அமுதசுரபி’ விக்ரமன் தலைமையில் இருந்த அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். (அமரர்) வாசவன் அப்போது அதனுடைய செயலாளர். இந்தாண்டு புதுடில்லியில் நமது எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு நடக்கப்போகிறது என்று ஆர்வத்தோடு தெரிவித்தார் வாசவன். புதுடில்லியில் ஏ.ஆர்.ராஜாமணி என்ற எழுத்தாளர் இருக்கிறார், எல்லாத் தமிழ் பத்திரிகைகளுக்கும் அவரே  டில்லி நிருபராகவும் .இருக்கிறார், அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார் என்றார் வாசவன்.

நான் அதுவரை டில்லிக்குப் போனதில்லை. என் மனைவியின் உறவினர்கள் பலர் டில்லியில் வசித்துவந்தபோதும், எங்களைப் பலமுறை அவர்கள் அழைத்தபோதும் டில்லிக்குப் போகும் பாக்கியம் அதுவரை கிட்டவில்லை. சரி, இந்த எழுத்தாளர் மாநாட்டைச் சாக்காக வைத்துப் போய்வரலாம்  என்று கருதி,  எப்பொழுது ரயில் கட்டணம் அனுப்ப வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ரயில் கட்டணம் சங்கமே ஏற்பாடு செய்யும்  என்றும்  பிரதிநிதித்துவக் கட்டணம் மட்டும் இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் இருக்கும்,  அதை மட்டும் பிற்பாடு  நீங்கள் செலுத்தினால் போதும், இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்றார் வாசவன்.

சிலநாள் கழித்து விக்ரமன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். ஏ.ஆர்.ராஜாமணி தனி ஒருவராக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வது கடினம் என்றும் எனவே ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்ற டில்லி எழுத்தாளர் ஒருவரும் உதவிக்கு முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தில்லித் தமிழ் கல்விக் கழகப் பள்ளி ஒன்றில் அவர் ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த எழுத்தாளர் என்றும், டில்லித் தமிழ்ச் சங்கத்தில் செல்வாக்கு மிக்கவர் என்றும் விக்ரமன் கூறினார்.
 
2016-Sri Anandam Krishnamurthy writing. At Coimbatore Swarnalayam
‘ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரை முதன்முதலில் கேட்டது அப்போதுதான். எழுத்தாளர் மாநாடு ஆண்டு இறுதியில் தான் நடைபெறக்கூடும்  என்று தெரிந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வருடம் (1989)  மே மாதத்தில் எனக்கு வங்கியில் புதுடில்லி மண்டல அலுவலகத்திற்கு மாற்றல் தரப்பட்டு, உடனே சென்று சேர வேண்டியதாயிற்று. அடுத்த வாரத்தில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேரடியாகச் சந்தித்தேன்.

‘லஜ்பத் நகர் 2- இ- 98’ என்ற முகவரியில் முதல் மாடியில் குடியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் என்ற அமைப்பில் இயங்கி வந்த ஐந்து பள்ளிகளில் ஒன்றான மந்திர் மார்க் பள்ளியில் அவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதும், ஆனந்தம் என்பது அவருடைய மனைவியின் பெயர் என்பதும், அந்த ஆனந்தம் அவர்களும் அதே கல்விக்கழகத்தின் இன்னொரு பள்ளியான லோதி காலனியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்தது.

நடுத்தர உயரம். சற்றே பூசினாற் போன்ற சரீரம். பெரும்பாலும் கதர் சட்டை கதர் பேண்ட் , அதற்குமேல் கதர் ஓவர்கோட்டு. எப்போதும் புன்சிரிப்பு. எப்போதும் சுறுசுறுப்பு. இதுதான் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வடிவமைப்பு.
 
Photo taken on 7-2-2019,  two months before his death on 6-4-2019.
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லம் தில்லிக்கு வரும் தமிழர்களுக்கெல்லாம் வேடந்தாங்கல் என்று சில நாட்களிலேயே எனக்குத்  தெரிந்து விட்டது.  ஏனென்றால் எழுத்தாளர் மாநாட்டுக்கு வரவிருந்த கிட்டத்தட்ட நூறு எழுத்தாளர்களில் ஐம்பது பேராவது ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி முகவரிக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதி, தனிப்பட்ட கவனிப்பைக் கோரியிருந்தார்கள்.  அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் தெரிந்தவராக இருந்திருக்கிறார்.

எதிர்பார்த்தபடியே அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு புதுடில்லியில் கோலாகலமாக நடந்தேறியது. இரண்டு நாள் மாநாடு.  கவியரங்கத்தில் என்னுடைய கவிதையும் இடம் பெற்றது. புதுடில்லி நகர்மன்றத்தின் சார்பில் தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. பிறகு தில்லித் தமிழ்ச் சங்கத்திலும் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இரண்டு நாள் விழாவாக இருந்தபோதிலும் சென்னையிலிருந்து வந்த சுமார் 100 குடும்பங்கள் மூன்று நாட்கள் அளவிற்கு மந்திர் மார்க் பள்ளியில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களது உணவுச் செலவில் பெரும்பகுதியைக் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளே ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகழின் உச்சியில் இருந்தார். இவருடைய பெயரும் அதே எஸ். கிருஷ்ணமூர்த்தி என்று இருந்ததால் வித்தியாசம் தெரிவதற்காக இவரை ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்க ஆரம்பித்து, அதுவே தீபம் நா பார்த்தசாரதி அவர்களின் ஆமோதிப்பு டன் இவரது நிரந்தரப்  புனைபெயர் ஆகிவிட்டது.

1942 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆடுதுறையில் பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தங்க மெடல் பரிசு பெற்றவர். 1961இல் டெல்லிக்கு வந்தார். அவருடைய திருமதி ஆகவிருந்த ஆனந்தம் அவர்கள் அதற்குச் சில ஆண்டுகள் முன்பே டில்லியில் இருந்த தன் சகோதரர் வீட்டிற்கு வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் 1963இல். லக்ஷ்மிபாய் நகரிலிருந்த தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பள்ளியில் இருவரும் ஆசிரியராகக் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அமர்ந்தார்கள்.  (அப்போது அதே பள்ளியில் ஆசிரியராக இவர்களோடு பணியாற்றியவர் ஒரு பார்த்தசாரதி. அவரும் ஓர் எழுத்தாளர். பத்திரிகையாளர் சாவி அவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவரும் தன் மனைவியின் பெயரை சேர்த்துக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி என்ற பெயரில் பின்னாளில் பிரபலமானார்.)

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி சிறந்த தமிழ்ப் புலமையோடு இசைப் புலமையும் கொண்டவர். பாரதியார் பாடல்களை அவர் கம்பீரமாகப் பாடுவதைக்  கேட்டு வியந்திருக்கிறேன். சிறந்த நாடக நடிகர். தட்சிண பாரத நாடக சபா (DBNS) சார்பில் சிறந்த நாடகங்களைச் சென்னையில் இருந்து கேட்டுவாங்கி டில்லியில் அரங்கேற்றி அவற்றில்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘மழை’, ‘நந்தனார் கதை’ ஆகிய நாடகங்களில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் அபார நடிப்பை மெச்சாதவர்கள் இல்லை.

டில்லி என்பது அறிவுஜீவிகளின் நகரம். அறிவுஜீவிகள் என்றாலே ஒருவரோடொருவர் முரண்பாடு கொள்பவர்கள் என்றுதானே அர்த்தம்! ஆனால் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னோடு முரண்பட்டவர்களோடும்  பேதம் பாராட்டாமல் பழகியவர். தில்லியில் இயங்கிய பிற நாடகக்  குழுக்களோடு நல்ல நட்புறவு கொண்டிருந்ததோடு  அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்தவர்.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் (அமரர்)  ‘தீபம்’ நா பார்த்தசாரதி அவர்களுக்கும் இருந்த நட்புறவு மிகவும் குறிப்பிடத் தகுந்தது. டில்லிக்கு வரும்போதெல்லாம் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி  வீட்டில்தான் அவர் தங்குவார். திருமதி ஆனந்தம் அவர்களின் விருந்தோம்பலில் திக்குமுக்காடுவார். (எத்தனையோ நாட்கள் அதுபோன்ற விருந்தோம்பலை நானும் அனுபவித்த துண்டு.) அவர் வந்தது தெரிந்து அவருக்கு மிக நெருக்கமான டில்லி நண்பர்களும் வந்து விடுவார்கள். அன்று இரவுப் பொழுது மிகவும் களைகட்டிவிடும்.

நா.பா. அவர்களின் ஊக்குவிப்பின் காரணமாகவே ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். அவை ‘தீபம்’ இதழிலும் பலமுறை வெளிவந்தன. ‘தீபம் சிறுகதைத்தொகுப்பு’ வெளிவந்தபோது அதில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘ஆறாவது விரல்’ என்ற கதை இடம்பெற்றிருந்தது. ‘கலைமகள்’,  ‘அமுதசுரபி’,  ‘தினமணி கதிர்’ இதழ்களிலும் அவருடைய கட்டுரைகள், கதைகள் வெளியாகியுள்ளன.

தமிழ் இலக்கிய உலகம் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சிறப்பாக அங்கீகரித்ததன் அடையாளமாக 1980இல் அவருக்கு கிடைத்த ‘இலக்கியச் சிந்தனை’ விருதைக் கூறலாம். 1989 எழுத்தாளர் மாநாட்டை டில்லியில் சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்காக அதற்கு அடுத்த வருடம் சென்னையில் எழுத்தாளர் சங்கம் அவருக்குச் சிறப்புச் செய்தது.

*****
தில்லித் தமிழர் வட்டாரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பண்பாளர் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்பதை நன்றியுடன் நினைவுகூர்வேன்.  தில்லியின் பாரம்பரியம் மிகுந்த தமிழ்ச் சங்கத்தின் செயலர், எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மாதம் ஒருமுறையாவது தில்லித் தமிழ்ச் சங்கத்தில் என்னுடைய கவியரங்கம் நடைபெறுவதற்கு வழிகாட்டியவர் அவர்.  தில்லி இலக்கிய விழாக்கள் பலவற்றில் என்னை நடுவராக அமர்த்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையான குறுநாவல் ஆசிரியர். அவருடைய இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு ஒன்றை ‘ஓசையிடும் மௌனங்கள்’ என்ற பெயரில் தீபம் எஸ். திருமலை வழியாகப் புத்தகமாக வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக, ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பல நூல்களை தீபம் திருமலை அவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள்.

*****

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ், இந்தி, ஆங்கிலம் இந்த மூன்று மொழிகளில் எந்த ஒன்றிலிருந்தும் மற்ற இரண்டுக்கு அவரால் எளிதில் மொழிபெயர்க்க முடிந்தது. அதனால் நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற பதிப்பாளர்களின் நூல்கள் பலவற்றை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். தனியார் பதிப்பாளர்களுக்காகச்  சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றையும்,  தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி ஒன்றையும் அவர் தொகுத்துத் தந்திருக்கிறார். 

அனைத்திந்திய வானொலிக்கும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நீடித்த ஒன்றாகும். மத்தியஅரசின் தகவல் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆங்கில மற்றும் இந்தி விளம்பர நிகழ்ச்சிகளை அழகிய தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அதில் திருமதி ஆனந்தம் அவர்களும் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற விழாக்களின்போது அவை பற்றிய வானொலி நிகழ்ச்சிகளைப்  பலமுறை தொகுத்தளித்திருக்கிறார். பள்ளி மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட இசை நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் எண்ணற்றவை அவரால் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பொதிகைத் தொலைக்காட்சி (சென்னை தூர்தர்ஷன்) தொடர்கள்  சிலவற்றில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

****
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கையெழுத்து மணி மணியாக அச்சிட்டது போல அற்புதமாக இருக்கும். அந்தக் கையெழுத்தின் அழகுக்காகவே தில்லியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தும் யாரும் அதற்கான அழைப்பிதழை அவரிடமே    எழுதி வாங்குவது வழக்கம். அழைப்பிதழ்களை உருவாக்குவதற்கென்றே பல வண்ண மைக் குப்பிகளும், இறகுப் பேனாக்களும் அவர் வீட்டின் வரவேற்பறையில் தயாராக இருக்கும். தூக்கத்தில் எழுப்பினாலும் கூட எழுந்து உட்கார்ந்து கொண்டு அழகான அழைப்பிதழை அவர் வடிவமைத்துக் கொடுத்து விடுவார் என்பதை ஒரு முறை கண்டிருக்கிறேன். பின்னாளில் திருக்குறளைக்  கன்னடத்தில் மொழி பெயர்த்த எனது  டில்லி நண்பர் திரு எஸ் ஸ்ரீனிவாசன் அவர்கள் நடத்திய ‘உதயம்’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை, பலமுறை ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது என்பதை அக்காலத்திய டில்லி நண்பர்கள் அறிவார்கள்.
Photo taken while he was writing a certain story.  See the beauty of his hand even at the age of 75!

****
நா. பா. அவர்களையும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சம்பந்தப்படுத்திய ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வருடம் டில்லி வந்திருந்தபொழுது அந்த வருடம் சாகித்ய அகாடமி பரிசுக்குரிய  தமிழ் நூலைத் தேர்ந்தெடுக்கும் இறுதிக் கட்டப் பொறுப்பில் நா.பா. இருந்தார். ஒரு பெண் எழுத்தாளருக்குதான்  அந்த வருடம் வழங்குவது என்று குழுவினர் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருந்தார்களாம். அந்த நிலையில்,  லக்ஷ்மி அல்லது வாஸந்தி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக முடிவாயிற்றாம். வாஸந்தி டெல்லியில் வசித்த எழுத்தாளர். இந்திரா காந்தியின் படுகொலையை ஒட்டி டில்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் மீதான விரும்பத்தகாத வன்முறையைப் பற்றி அவர் எழுதிய நாவல் குஷ்வந்த் சிங்கின் கவனத்தைப் பெற்று சர்வதேச அளவில் பிரபலமாகி இருந்த நேரம். தமிழிலும் எல்லா முக்கிய இதழ்களிலும் அவர் எழுதிக் கொண்டிருந்தார். அதே சமயம் லக்ஷ்மி அவர்கள் வாஸந்தியை விட  சீனியர். ஏராளமான தொடர் கதைகளை எழுதி மிகச்சிறந்த குடும்பக்கதை  எழுத்தாளர் என்று பெயர் பெற்றிருந்தவர். இந்த இருவரில் ஒருவரைத்  தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்ததாம். கடைசியில் நா.பா.வே  ஒரு வழி கண்டுபிடித்தார். அதாவது லக்ஷ்மியோடு ஒப்பிடும்போது வாஸந்தி வயதில் மிகவும் இளையவர். எனவே அவர் இன்னும் சில ஆண்டுகள் பொறுக்கலாம் என்றும்  லக்ஷ்மிக்கு அந்த வருடம் சாகித்ய அகாடமி வழங்கி விடலாம் என்றும்  முடிவாயிற்றாம். ஆம்,  அப்போதெல்லாம் வயதான இலக்கியவாதிகளுக்கு எல்லா மொழிகளிலுமே  கௌரவம் தரப்பட்டிருந்தது.

****
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் மாலை நேரத்து நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நானும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் லோதி காலனி வழியாகக்  காலாற நடப்பதுண்டு. ஒருமுறை பாரதிய ஞான பீடம் தேர்வுக்குழுவினர் தன்னை ஆலோசனைக்கு அழைத்ததையும், பிற மொழிகளில் இல்லாத அளவுக்குத்  தமிழ் மொழியில் எழுத்தாளர்களுக்கிடையே இனம் சார்ந்த மாச்சரியங்கள் அதிகம் நிலவியதாகத் தேர்வுக்குழுவினர் குறிப்பிட்டதையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். கேரளா,  கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேசியக் கட்சி ஆட்சியில் இருப்பதும், ஆட்சியாளர்களோடு எழுத்தாளர்கள் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதும், எழுத்தாளர்களிடையே தேவையற்ற பொறாமை உணர்வு இல்லாதிருப்பதும் அந்த இரு மொழிகளிலும் அதிக இலக்கிய விருதுகள் கிடைக்க ஏதுவாக இருந்ததை அவர் வருத்தத்தோடு  தெரிவித்தார். 

****
லோதி காலனியில் இருந்த பாரதி சிலை அடியில் செப்டம்பர் பதினொன்று அல்லது டிசம்பர் பதினொன்று அன்று பாரதியைப் பற்றிய கவியரங்கமோ அல்லது  பாரதியின் வசனங்களிலேயே பாஞ்சாலி சபதம் நாடகத்தை ஆளுக்கொரு  பாத்திரம் ஏற்று நடிப்பதோ வருடம் தவறாமல் நடைபெறும். தில்லியில் இருந்த இன்னொரு மாபெரும் தமிழ் ஆர்வலரான  கணினித்துறை அறிஞர், ‘பாரதி-200’ பாலசுப்பிரமணியன் அவர்களும் இதே போன்ற நிகழ்ச்சிகளைத் தனியாகவும் தமிழ்ச் சங்கத்துடன் சேர்ந்தும் நடத்துவதுண்டு. பங்கு பெறும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து ஏதோ ஒரு உணவைத் தன் பங்காகக் கொண்டு வருவார்கள். (கலியாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக நான் இருந்ததால் என் பங்குக்கு ‘சிப்ஸ்’ மூன்று கிலோ வாங்கிவரும்படி ஆலோசனை கூறப்படும். அதுவே கடைசியில் போதாமல் ஆகிவிடும்!).  பனியும்  இளவெயிலும் கலந்து மேனி சிலிர்க்கும் அந்த இயற்கைச் சூழ்நிலையில் எல்லா உணவையும் ஒன்றாக்கிச் சாப்பிட அமரும்பொழுது அருகில் இருந்த டாக்டர் கரன் சிங் அவர்களின் இல்லத்தில் இருந்து சூடான தேநீர் வந்து சேரும். சில சமயம் அவரே வந்து பாரதியைப் பற்றி உரை நிகழ்த்திவிட்டுத் தன்  கையாலேயே தேநீரை விநியோகிப்பார். (பாண்டிச்சேரி ஆரோவில் அமைப்பின் தலைவராகப் பலகாலம் அவர் இருந்ததால், அவருக்குப் பாரதி-அரவிந்தர் என்றால் மிகவும் பரிச்சயம் இருந்தது.)  வீதி நாடகங்களுக்குப்  புகழ்பெற்ற புதுடில்லியில், பாஞ்சாலி சபதம் நாடக நடிப்பு கவித்துவமாக அமைந்திருப்பதை, மொழி தெரியாமலேயே இந்தி பேசுவோரும் பஞ்சாபி பேசுவோரும் காரை நிறுத்தி இறங்கிவந்து, நின்று கவனித்துக் கடந்து போவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்.

***

பணி மூப்பு அடைவதற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்று விட்டார்  ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி. அவர் மனைவி முழுமையாகப் பணியாற்றிய பிறகே ஓய்வு பெற்றார். வாழ்நாளில் பெரும் பகுதியை லஜ்பத் நகர் வாடகை வீட்டிலேயே கழித்த தம்பதியர், பின்னர் பட்பர்கஞ்சில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீட்டில் குடிபுகுந்த பிறகும் நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். தில்லியில் இருந்து நான் மாற்றல் ஆன பிறகும் எங்கள் தொடர்பு அறுபடவில்லை. ஆனால் மின்தூக்கி இல்லாத மூன்றாவது தளத்தில் அவரைச் சந்திப்பதற்கு ஏறி இறங்குவது   அனைவருக்குமே  சிரமமாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏறி இறங்குவதற்குச் சற்றும் அஞ்சாத கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வுக்குப் பிறகும் பத்திரிகைத் துறையை விடாமல், ஒரு வெளிநாட்டுப்  பத்திரிகைக்கு  அன்றாடத் தமிழ்ச் செய்திகளைச் சுருக்கித் தரும் பணியில் பல ஆண்டுகள் இருந்தார்.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு இரண்டு பெண்கள். ஒருவர் மலேசியாவிலும்  ஒருவர் சென்னையிலும் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ்வதே  பிடித்தமாக இருந்ததால், கோவையில்  ஸ்வர்ணாலயம் என்ற முதியோர் இல்லத்தில் வசதியான ஒரு இல்லத்தை அமைத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள் ஆனந்தம்  கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

***
இந்த மாதம் ஏப்ரல் ஆறாம் தேதி பகல் ஒன்றரை மணிக்கு எனக்கு ஒரு தகவல் வந்தது. ‘எங்கள் தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று இரவு முதலே பலமுறை இதயத்தில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக இன்று காலை மாரடைப்பினால் மரணம் அடைந்தார்’ என்பதுதான் அச்செய்தி. அவரது இளையமகள் அனுப்பியிருந்தார். (இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழிந்தால் - ஏப்ரல் 18 வந்தால் அவருக்கு 77 முடிந்து 78 ஆரம்பம்.) உடனடியாகத்  திருமதி ஆனந்தம் அவர்களைத் தொடர்புகொண்டேன். கடந்த சில நாட்களாகத்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்றும்,  மருத்துவமனையிலிருந்து உடல் இப்பொழுது தங்கள் (முதியோர்) இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார். இரண்டு பெண்களும் அருகில் இருப்பதாகவும் மலேசிய மருமகன் மட்டும் இரவில் வந்து சேரக் கூடும் என்றும் தெரிவித்தார். நானும்  இரவுக்குள் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு அவசரம் அவசரமாக என் மனைவியோடு காரில் கிளம்பினேன். ஆனால் செங்கல்பட்டைத் தாண்டிய சற்று நேரத்தில் திருமதி ஆனந்தம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. தாங்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் உடலை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்து விட்டதால் மருத்துவமனை நபர்கள் மாலை ஐந்தரை க்குள் வந்து உடலை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று தெரிவித்தார். வேறு எந்தவிதமான மதச் சடங்குகளும் செய்ய வழி இல்லாததால், எனது பயணத்தைத்  தவிர்த்து விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்கள் உடலை மருத்துவமனைக்கு வழங்கி விடுவது பல ஆண்டுகளுக்கு முன்பே டில்லியில் பிரபலமாக இருந்தது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த பெரியவர் சேஷாத்ரி என்பவர் அம்மாதிரி தன் உடலை தானம் செய்துவிட்டு இருந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர் வீடு சென்ற எனக்கு அவரது உடல் கூட இல்லாத வெறுமைதான் காட்சி தந்தது நினைவுக்கு வந்தது. விதியும் அறிவியலும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இறந்தவரின் கடைசி முக தரிசனம் கூட எனக்கு இல்லாமல் போயிற்று.
May 1992 - Sri Krishnamurthy bidding me farewell. On the dais, with me, is (late) Dr. Mrs. Indirani Manian

1992இல் மூன்றாண்டு வங்கிப் பணிக்கு பிறகு சென்னைக்கு மாற்றலாகி நான் வந்தபோது தமிழ்ச் சங்கம் சார்பில் எனக்குப் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தனது அன்பின் அடையாளமாக எனக்கு கிருஷ்ணர் விக்கிரகத்தைப் பரிசாக அளித்தார் அமரர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். என்றென்றும் அவர் நினைவாக அந்த கிருஷ்ணர் விக்ரகம் என் வரவேற்பறையில் திகழும் என்பது உறுதி.

-இராய செல்லப்பா (15-4-2019)

****