புதன், ஏப்ரல் 24, 2019

நூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’


நூல் விமர்சனம்:

ஆர் வி ராஜன்  எழுதிய  ‘துணிவே என் துணை’

-       இராய செல்லப்பா

(23-4-2019 அன்று சென்னை அடையாறு காந்திநகர் நூலகத்தில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில் ஆற்றிய உரை)

***

நண்பர்களே, நாம் எவ்வளவோ  வாழ்க்கை வரலாற்று நூல்களைப்  படித்திருக்கிறோம். மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ முதல் கலைஞர் கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ வரை,  வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வந்திருக்கின்றன.

பொதுவெளியில் பெரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்கள் தான் வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் கல்வியின் பரவலால், நமக்கு அருகே வாழும் சாதாரண மனிதன் கூட எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களிடையே தோன்றிய பிறகு, அந்த ஆர்வத்திற்குத்  தீனி போடுவதற்காக வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் எல்லாத்  தரப்பு மக்களிடமிருந்தும் தோன்ற ஆரம்பித்தன. எனவே எளிய மனிதர்களும் சுய வரலாற்று நூல்களை எழுத ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை கட்டுரைகள் என்று சொன்னாலே அது யாரோ ஒரு மனிதனின் செயல்பாட்டை பற்றியதாகவே இருக்கும். அதாவது அவருடைய தொழிலின் வரலாறு. தன்னுடைய தொழிலை அவர் எப்போது தொடங்கினார், அவருடன் பணியாற்றியவர்கள் யார் யார், மூலதனம் வழங்கியவர்கள் யார், இந்தத்  தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் என்ன, அவற்றை எவ்வாறு வெற்றி கண்டார் என்பதுதான் கட்டுரையின் கருப்பொருளாக இருக்கும். தமிழ்ப் பத்திரிகைகளில் இத்தகைய கட்டுரைகள் அதிகம் வருவதில்லை. பெண்கள் பத்திரிகைகளை மட்டும் விதிவிலக்காகக்  கொள்ளலாம். அவற்றில் ஒரு சாதாரணப் பெண்மணி வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழிலை எவ்வாறு வெற்றிகரமாக நடத்திச்  செல்வந்தர் ஆனார் என்பது போன்ற கட்டுரைகள் அதிகம் வருகின்றன. உண்மையில்  இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் தான் சமுதாயத்திற்குப்   பயன்படுபவை ஆகும். ஆனால் இதே அளவுக்கு ஆண்களின் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் தமிழ்ப்  பத்திரிகைகளில் வருகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஒன்று,  நீங்கள் ஒரு பிரச்சினையை கிளப்ப வேண்டும், அல்லது உங்களைச் சுற்றி ஒரு பிரச்சினை கிளம்ப வேண்டும், அதுவும் நீங்கள் சினிமாவிலோ அரசியலிலோ இருக்க வேண்டும்; அப்போதுதான், நீங்கள் யார், நீங்கள் இந்த நிலைமைக்கு எப்படி வந்தீர்கள், என்ன படித்தீர்கள், உங்களுடைய செல்வநிலை எப்படி என்பது பற்றி பத்திரிகைகள் கவனம் செலுத்தும். அதிலும் உங்களின் இருண்ட பகுதிகளை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்ட முனையும்.

ஆனால் அறுபதைக் கடந்த  ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, ஒரு சாதாரண நிலையில் இருந்த தன்னால் இதுவரை எப்படி முன்னேற முடிந்தது என்பதை எழுத்து வடிவில் கொடுத்தால், தன்னைப் போன்ற பலருக்கு வாழ்வில் முன்னேறுவதற்கு அது பயன்படுமே என்று கருதினால், அது  நம்முடைய அதிர்ஷ்டமே. அப்படிப்பட்டவர்களில் முக்கியமான இடத்தில் ஆர். வி. ராஜன் அவர்களை நாம் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

****
முதலில் ராஜன் அவர்களுடைய பன்முகத்தன்மையைக்  குறிப்பிட்டாக வேண்டும்.

ஆங்கிலத்தில் அவர் சிறந்த கட்டுரையாளர், சொற்பொழிவாளர். வாரம்தோறும்  அடையாறு டைம்ஸில் எழுதிவருபவர்.   அவருடைய துணைவியார் திருமதி பிரபா ராஜன் அவர்கள் தமிழில் சிறந்த சிறுகதையாசிரியர். அவர் அமரரான போது அவர் பெயரால் ‘பிரபா ராஜன் அறக்கட்டளை’யை நிறுவி அதன் மூலமாக கலைமகள், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்களோடு இணைந்து ஏராளமான எழுத்தாளர்களுக்குப்  பரிசுகளை வழங்கி வருகிறார் ராஜன்.

கடந்த ஐந்து வருடங்களாகத்  ‘தமிழ்ப்  புத்தக நண்பர்கள் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி,  மாதம் தோறும் ஒரு சிறந்த தமிழ்ப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் TAG அமைப்பின் நான்கு  தூண்களில் ஒருவராக விளங்கி வருபவர் ராஜன் என்பது சென்னையில் உள்ள தீவிர இலக்கிய அன்பர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்.


ராஜன் அவர்களின் செயல்பாட்டுத் துறை விளம்பரத்துறை ஆகும். அதிலும் கிராமப்புற மார்க்கெட்டிங் துறையில் அவர் சரித்திரம் படைத்தவராகக் கருதப்படுகிறார். அவர் தன் வாழ்நாளில் விவசாயம் செய்திருக்க மாட்டார். ஆனால் எந்த நிலத்துக்கு, எந்தப் பயிருக்கு, எவ்வளவு ஏக்கருக்கு, எவ்வளவு உரம் இடவேண்டும் என்பது விவசாயிகளை விட இவருக்கு நன்றாக தெரியும். கோட்டு சூட் அணிந்து கொண்டு மாதக்கடைசியில் செலவுக்கு நண்பர்களிடம் கைமாத்து கேட்கும்  நகரத்தானை விட, மேலாடை இல்லாமல் வியர்வையில் நனையும் இடையாடை மட்டுமே உடுத்திய கிராமத்தவரிடம் அதிக பண வசதி உண்டு என்பதைத்  தன் விளம்பர ஆற்றலின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் ராஜன்.

உலகப்  புத்தக தினம் கொண்டாடும் இந்த வேளையில் ஆர்வி ராஜன் அவர்களின் ‘துணிவே என் துணை’ என்ற இந்த நூலைப் பேச எடுத்துக் கொள்வதில்  நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு அமரர் சாருகேசி அவர்களால் அழகிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.

****

புதுக்கோட்டை அருகில் உள்ள நெற்குப்பை என்ற கிராமத்தில் பிறந்தவர் ராஜன்.  இவருடைய தாயார் எட்டு குழந்தைகளில் மூத்தவர். இவருடைய தந்தை ஒன்பது குழந்தைகளில் எட்டாவதாகப் பிறந்தவர். (இப்போது மாதிரி அப்போது தேர்தல்கள்  அடிக்கடி  நடந்திருந்தால் ராஜனின் குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்! ஒவ்வொரு வேட்பாளரும் இவர்கள் குடும்பத்தை எவ்வளவு கனமாக கவனித்திருப்பார்கள்!)

ராஜனின் தாய் தந்தை தங்கள் குடும்ப வாழ்க்கையை பரோடாவில் தொடங்கியிருந்தாலும், பிறகு பம்பாய்க்கு இடம்பெயர்ந்தார்கள். மூன்று மாதக்  குழந்தையாக பம்பாய் நகரில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்  அடுத்த 25 ஆண்டுகள் தன் தொழிலை நிலைப்படுத்திக் கொண்டது அங்கேதான்.

இந்தப்  புத்தகத்தை நான் முதலில் ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலுமாக மூன்று நான்கு முறைகள் படித்துவிட்டேன். தன வாழ்க்கையில் இதுவரை நிகழ்ந்த குறைந்தபட்சம் ஆயிரம் நிகழ்ச்சிகளையாவது  இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (சந்தேகம் இருப்பவர்கள் சரியாக எண்ணிப் பார்த்து கூறினால் திருத்திக் கொள்ள தயார்.)

நேரத்தின் அருமை கருதி புத்தகத்தின் சுவையான பகுதிகளை மட்டும் கூறி அமைகிறேன்.

***
தன்னுடைய நான்கு அல்லது ஐந்தாவது வயதிலேயே இந்திய சுதந்திரப்  போராட்டத்தில் ராஜன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் பிறந்தது 1942இல். வெளிநாட்டுப் பொருள்களை எல்லாம் இவருடைய கட்டடத்துக்கு வெளியே அப்போது எரித்துக் கொண்டிருந்தார்கள். தேச பக்தி உணர்வு மேலிட்ட  ராஜன் அவர்கள், தன்னுடைய தந்தை அலுவலகத்திற்குப் போகும் போது அணியும் தொப்பியைத்  தூக்கி அந்த நெருப்பில் போட்டு விட்டார். அவ்வளவு இளம் வயதில் துணிச்சலாக இவர் புரிந்த தேசீய உணர்வுள்ள காரியத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு என்னவோ தந்தை கொடுத்த பலமான அறைதான்!

*****
கூட்டுக் குடித்தனங்களுக்குப்  பிரபலமானது நம்முடைய திருவல்லிக்கேணி. அதுபோல பம்பாயில் மாதுங்கா பகுதியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கு மாடி வீடுகள் பிரபலம். அதை சால் என்று  கூறுவார்கள்.  ஒரு சாலில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடித்தனங்கள் இருக்குமாம்.

சால் குடியிருப்பில் ஒரே ஒரு அறைதான் இருக்கும். ஓரத்தில் சமையல். அதுவே சாப்பிட. உட்கார, படுக்க என்று சகலத்துக்கும். கட்டில் போட்டால் இடம் போய்விடும் என்று குடியிருப்பில் யாரிடமும் கட்டிலே இருக்காது. பாயும் தலையணையும் தான். குடும்பம் பெரிதானால் இடப்பற்றாக்குறை காரணமாக வளர்ந்த பையன்கள் இரவில் வெளியேதான் படுக்க வேண்டும்.எங்கே படுக்க இடம் கிடைக்கும் என்று பையன்கள் தேடிக்கொண்டு அலைவார்கள். அது, இரண்டு கட்டடங்களுக்கு இடையே இருக்கும் காலி இடமாகவோ, மொட்டை மாடி ஆகவோ,  அல்லது எல்லாருக்கும் பொதுவான நடைபாதையாகவோ  இருக்கும். பையன்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு படுக்கை, தலையணை, பெட்ஷீட் மற்றுமொரு கைத்தடியும் இருக்கும். கைத்தடி எதற்கு என்றால் இரவில் பையன்கள் மீது பாய்ந்து வருகிற நாய்களையும் பூனைகளையும் எலிகளையும் விரட்டுவதற்காக!

சால் குடியிருப்பில் ஏகப்பட்ட குழந்தைகள். ஏகப்பட்ட சண்டைகள். விடலைப் பருவக் காதல்கள். அதற்கான ஏராளமான வாய்ப்புகள். சுவையான இளமைக்காலத்தில் பம்பாயில் இருந்திருக்கிறார் ராஜன்.

ஒரு முறை தன்னுடைய வங்காளித்  தோழியை தேநீர் அருந்துவதற்காக வீட்டிற்கு அழைத்திருக்கிறார். உடனே சாலில்  இருந்த எல்லாக்  குடித்தனக்காரர்களும் கூட்டமாக வந்து,   அந்தப்  பெண்ணை ஆராயத் தொடங்கி விட்டார்களாம். அவளைத்தான் ராஜன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ  என்று ஆர்வத்துடனும்,  கவலையுடனும்  கேட்கத்  தொடங்கி விட்டார்களாம். ராஜனின் வாழ்வில் அது ஒரு நிலாக்காலம்!

******
ஆனால் ராஜன் உண்மையிலேயே ஒரு பெண்ணைக்  காதலித்து இருக்கிறார். ஆனால், அது பாவம், ஒரு தலை ராகம் ஆகவே நின்றுவிட்டது என்று வருத்தப்படுகிறார். ஒருவேளை அவர் இளம் வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணிந்தது தான் காரணமாக இருக்குமோ? ஏனென்றால் கண்ணாடி அணிந்த ஆண்களை இளம் பெண்கள் காதலிப்பது குறைவாம். ஆனால் கண்ணாடி அணிந்த பெண்களைக்  காதலிக்கும் ஆண்கள் அதிகமாம். ஒரு ஆராய்ச்சியில் படித்த நினைவு.

*****
ராஜனின் தாயார்  கடின உழைப்பாளி. நூலின் இந்த பகுதி மிகவும் முக்கியமானது என்பதால் ராஜனின் வார்த்தைகளிலேயே அதைக் கூறுகிறேன்:

“அம்மா வேலைகளை எல்லாம் முடித்து விட்டுப்  பிற்பகல் 3 மணிக்குத்  தான் சாப்பிட்டு கொஞ்சம் கண்ணயர்ந்தாள். அதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. பல நாட்களில் அதுவும் முடியாது. ஏனென்றால் மூன்று மணிக்குத் தான் நாங்கள் எல்லாம் பள்ளியிலிருந்து திரும்புவோம். பகலிலே இப்படி என்றால் இரவு தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். கைச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அம்மா தைத்த ஜாக்கெட்டுகளை காஜா எடுத்து பட்டன் வைக்கிற கடைகளுக்கு எடுத்துக் கொண்டு போவதும், யார் வீட்டில் எதைக் கொடுப்பது என்பதும், கணக்கு வைத்துக் கொள்வதும் என் வேலை. நான் என் டிராயர் பனியன் எல்லாம் தைக்க கற்றுக் கொண்டேன். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு உடம்பு மோசமானதால் அப்பா இந்தக் காரியங்களுக்குத் தடைவிதித்து விட்டார்…….

“அந்தக்  காலத்தில் பாக்கெட் மணி சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பழைய பேப்பரில் இருந்து கவர் செய்து பழக் கடைக்காரர்களிடம் விற்பேன். 12 கவர் கொடுத்தால் இரண்டு அணா கிடைக்கும். எங்கள் குடியிருப்புகளில் இருக்கும் சாரதா பவன் என்ற உடுப்பி ஹோட்டலில் சுடச்சுட தோசை வாங்கி சாப்பிடுவேன். அந்தக் காலத்தில் அது ஒரு ஆடம்பரமே. ஆனால் எனக்குப்  பிடித்த தக்காளி ஆம்லெட் வேண்டுமானால் 24 கவர் கொடுத்தால்தான் கிடைக்கும். ஆனால் இதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் நடந்த விஷயம். மாதக்கடைசியில் பழைய பேப்பர் எடைக்குப் போடும்பொழுது அப்பா கண்டுபிடித்து விட்டார். அத்துடன் இதுவும் போச்சு.” 

****
எல்லாப் பதின் பருவ  மாணவர்களையும் போலவே ராஜனுக்கும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் கிரிக்கெட் மட்டையும் பந்தும் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் பள்ளிக்கு மாதச் சம்பளம் எட்டு ரூபாய் கட்டுவதற்கே குடும்பம் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்த போது மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் முதல் வகுப்பைத் தவறவிட்டார் ராஜன். அதனால் நல்ல கல்லூரியில் சேரும் மதிப்பெண்கள் இல்லாமல் போயிற்று. ஆனாலும் விடுமுறை நாளில் குறைத்து 125 ரூபாய் சேகரித்து வைத்திருந்தார். ஆனால் அதுவும் கல்லூரிக்குப்  போதுமானதாக இல்லை. அப்போது ஒரு நல்ல வாய்ப்பாக நைலான் சேலைகளுக்கு வண்ண டிசைன்களை பதித்துக்  கொடுக்கும் வேலை மாதத்திற்கு 50 ரூபாய் என்று இவருக்குக்  கிடைத்தது. திறமையாக இவர் பணி செய்ததால் இரண்டாவது மாதம் சம்பளம் 75 ரூபாயாக ஆயிற்று. இதை அம்மாவிடம் அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாகக்  கொடுத்துவைத்தார். எப்படியாவது கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக.

கல்லூரியில் வணிகவியல் படித்தார் ராஜன். முதல் வருடப்  பாடங்களில் ஒன்றான ‘மார்க்கெட்டிங் அண்ட் அட்வைர்டைசிங்’ பாடத்தில் முதலாவதாக வந்தார். ஆனால் அப்போது விளம்பரத்துறை அவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல விளம்பரத் துறையில் ஒருவன் இருக்க வேண்டுமானால் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கொள்கை அக்காலத்தில் இருந்ததாம். எனவே நீ விளம்பரம் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறுவது கடினம் என்று அவருடைய ஆரம்பகால வழிகாட்டியாகக்  கருதப்பட்ட சுக்லா என்பவர் கூறினாராம்.

சுக்லா  வெற்றிகரமான விளம்பரத் துறை நிபுணர். அவர் ஓய்வு பெறும் நாளில் அவருடைய வெற்றிக்கு காரணம் என்ன என்று  ராஜன் கேட்டபொழுது அவர் இரண்டு ஆலோசனைகள் கூறினாராம். இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதியும், இந்தப்  புத்தகத்தில் இருந்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதும்  இந்த இரண்டு ஆலோசனைகள்தான்.

“ஒன்று, உன்னுடைய நிறை குறைகளை பட்டியல் போட்டுக் கொள். உன்னுடைய நெருங்கிய மனிதர்களிடம் இதைக் காட்டு. அவர்கள் ஆலோசனையின் பேரில் குறைகளைக் குறைப்பதற்கும், நிறைகளை அதிகப்படுத்துவதற்கும் நீ கற்றுக் கொள்ள வேண்டும். இதை வாழ்நாள் முழுவதும் நீ தொடர்ந்து செய்ய வேண்டும்.

இரண்டு, ஒருவன் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறான், எவ்வளவு செலவு செய்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடாதே. செல்வத்தை சேமிக்கும் போதும் அதை அனுபவிக்கும் போதும் வாழ்வின் சில உன்னதங்களை,  குறிப்பாக, மனித உறவுகளை இழக்கும் துர்பாக்கிய நிலையை அவன் அடைந்திருக்கலாம்.”

***
ராஜன் குறிப்பிடுகிறார்: “நான் இந்த ஆலோசனைகளை என் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்தேன். எனக்குத் தெரிந்த இளைய சமூகத்தினர் அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொண்டேன். 67வது வயதில் ஆங்கிலத்தில் என் வாழ்க்கை சரிதத்தை எழுதும்போது, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களை விட நான் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது.”

நண்பர்களே, நமது இளைஞர்களுக்கு ‘ரோல் மாடல்கள்’ அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ, இயக்குனர்களோ அல்லர். பத்து விரல்களை மட்டுமே மூலதனமாகக்  கொண்டு, மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தை அரவணைத்துக் கொண்டு, அனைவருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகித்து, ஒரு கணமும் கூட வறுமையோ வாழ்க்கையின் துன்பங்களோ  தன்னைக் கீழே இழுத்து விடாமல் எப்போதும் மேல்நோக்கியே சிந்தித்து, வாழ்க்கையின் ஒரு கண்ணியமான அந்தஸ்துக்கு, முயற்சியுள்ள எவனும் முன்னேற முடியும் என்று நிரூபித்துள்ள ராஜன் போன்றவர்களே அத்தகைய ரோல் மாடல்களாக வேண்டும்.

அருமையானதொரு  புத்தகத்தை உலகப் புத்தக தினத்தில் நான் பேசுமாறு அமைந்தது என் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய  தருணம் ஆகும். இதற்காக ஆர் வி ராஜன் அவர்களுக்கும் திரு வையவன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-       இராய செல்லப்பா

****

திங்கள், ஏப்ரல் 15, 2019

கோவையில் அணைந்த தலைநகர் விளக்கு - ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி


கோவையில் அணைந்த தலைநகர் விளக்கு -
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி
(18-4-1942 - 06-4-2019)

-இராய செல்லப்பா

1989இன் ஆரம்ப மாதங்களில் ஒருநாள்.

சென்னை இந்திரா நகர் கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நான் (அமரர்) ‘அமுதசுரபி’ விக்ரமன் தலைமையில் இருந்த அனைத்திந்தியத்  தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். (அமரர்) வாசவன் அப்போது அதனுடைய செயலாளர். இந்தாண்டு புதுடில்லியில் நமது எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு நடக்கப்போகிறது என்று ஆர்வத்தோடு தெரிவித்தார் வாசவன். புதுடில்லியில் ஏ.ஆர்.ராஜாமணி என்ற எழுத்தாளர் இருக்கிறார், எல்லாத் தமிழ் பத்திரிகைகளுக்கும் அவரே  டில்லி நிருபராகவும் .இருக்கிறார், அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார் என்றார் வாசவன்.

நான் அதுவரை டில்லிக்குப் போனதில்லை. என் மனைவியின் உறவினர்கள் பலர் டில்லியில் வசித்துவந்தபோதும், எங்களைப் பலமுறை அவர்கள் அழைத்தபோதும் டில்லிக்குப் போகும் பாக்கியம் அதுவரை கிட்டவில்லை. சரி, இந்த எழுத்தாளர் மாநாட்டைச் சாக்காக வைத்துப் போய்வரலாம்  என்று கருதி,  எப்பொழுது ரயில் கட்டணம் அனுப்ப வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ரயில் கட்டணம் சங்கமே ஏற்பாடு செய்யும்  என்றும்  பிரதிநிதித்துவக் கட்டணம் மட்டும் இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் இருக்கும்,  அதை மட்டும் பிற்பாடு  நீங்கள் செலுத்தினால் போதும், இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்றார் வாசவன்.

சிலநாள் கழித்து விக்ரமன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். ஏ.ஆர்.ராஜாமணி தனி ஒருவராக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வது கடினம் என்றும் எனவே ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்ற டில்லி எழுத்தாளர் ஒருவரும் உதவிக்கு முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தில்லித் தமிழ் கல்விக் கழகப் பள்ளி ஒன்றில் அவர் ஆசிரியராக இருப்பதாகவும், சிறந்த எழுத்தாளர் என்றும், டில்லித் தமிழ்ச் சங்கத்தில் செல்வாக்கு மிக்கவர் என்றும் விக்ரமன் கூறினார்.
 
2016-Sri Anandam Krishnamurthy writing. At Coimbatore Swarnalayam
‘ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரை முதன்முதலில் கேட்டது அப்போதுதான். எழுத்தாளர் மாநாடு ஆண்டு இறுதியில் தான் நடைபெறக்கூடும்  என்று தெரிந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வருடம் (1989)  மே மாதத்தில் எனக்கு வங்கியில் புதுடில்லி மண்டல அலுவலகத்திற்கு மாற்றல் தரப்பட்டு, உடனே சென்று சேர வேண்டியதாயிற்று. அடுத்த வாரத்தில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேரடியாகச் சந்தித்தேன்.

‘லஜ்பத் நகர் 2- இ- 98’ என்ற முகவரியில் முதல் மாடியில் குடியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் என்ற அமைப்பில் இயங்கி வந்த ஐந்து பள்ளிகளில் ஒன்றான மந்திர் மார்க் பள்ளியில் அவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதும், ஆனந்தம் என்பது அவருடைய மனைவியின் பெயர் என்பதும், அந்த ஆனந்தம் அவர்களும் அதே கல்விக்கழகத்தின் இன்னொரு பள்ளியான லோதி காலனியில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்தது.

நடுத்தர உயரம். சற்றே பூசினாற் போன்ற சரீரம். பெரும்பாலும் கதர் சட்டை கதர் பேண்ட் , அதற்குமேல் கதர் ஓவர்கோட்டு. எப்போதும் புன்சிரிப்பு. எப்போதும் சுறுசுறுப்பு. இதுதான் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வடிவமைப்பு.
 
Photo taken on 7-2-2019,  two months before his death on 6-4-2019.
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லம் தில்லிக்கு வரும் தமிழர்களுக்கெல்லாம் வேடந்தாங்கல் என்று சில நாட்களிலேயே எனக்குத்  தெரிந்து விட்டது.  ஏனென்றால் எழுத்தாளர் மாநாட்டுக்கு வரவிருந்த கிட்டத்தட்ட நூறு எழுத்தாளர்களில் ஐம்பது பேராவது ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி முகவரிக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதி, தனிப்பட்ட கவனிப்பைக் கோரியிருந்தார்கள்.  அந்த அளவுக்கு அவர் ஏற்கனவே தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் தெரிந்தவராக இருந்திருக்கிறார்.

எதிர்பார்த்தபடியே அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு புதுடில்லியில் கோலாகலமாக நடந்தேறியது. இரண்டு நாள் மாநாடு.  கவியரங்கத்தில் என்னுடைய கவிதையும் இடம் பெற்றது. புதுடில்லி நகர்மன்றத்தின் சார்பில் தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான வரவேற்பும் ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. பிறகு தில்லித் தமிழ்ச் சங்கத்திலும் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இரண்டு நாள் விழாவாக இருந்தபோதிலும் சென்னையிலிருந்து வந்த சுமார் 100 குடும்பங்கள் மூன்று நாட்கள் அளவிற்கு மந்திர் மார்க் பள்ளியில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களது உணவுச் செலவில் பெரும்பகுதியைக் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளே ஏற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகழின் உச்சியில் இருந்தார். இவருடைய பெயரும் அதே எஸ். கிருஷ்ணமூர்த்தி என்று இருந்ததால் வித்தியாசம் தெரிவதற்காக இவரை ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்க ஆரம்பித்து, அதுவே தீபம் நா பார்த்தசாரதி அவர்களின் ஆமோதிப்பு டன் இவரது நிரந்தரப்  புனைபெயர் ஆகிவிட்டது.

1942 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆடுதுறையில் பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தங்க மெடல் பரிசு பெற்றவர். 1961இல் டெல்லிக்கு வந்தார். அவருடைய திருமதி ஆகவிருந்த ஆனந்தம் அவர்கள் அதற்குச் சில ஆண்டுகள் முன்பே டில்லியில் இருந்த தன் சகோதரர் வீட்டிற்கு வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் 1963இல். லக்ஷ்மிபாய் நகரிலிருந்த தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பள்ளியில் இருவரும் ஆசிரியராகக் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அமர்ந்தார்கள்.  (அப்போது அதே பள்ளியில் ஆசிரியராக இவர்களோடு பணியாற்றியவர் ஒரு பார்த்தசாரதி. அவரும் ஓர் எழுத்தாளர். பத்திரிகையாளர் சாவி அவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவரும் தன் மனைவியின் பெயரை சேர்த்துக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி என்ற பெயரில் பின்னாளில் பிரபலமானார்.)

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி சிறந்த தமிழ்ப் புலமையோடு இசைப் புலமையும் கொண்டவர். பாரதியார் பாடல்களை அவர் கம்பீரமாகப் பாடுவதைக்  கேட்டு வியந்திருக்கிறேன். சிறந்த நாடக நடிகர். தட்சிண பாரத நாடக சபா (DBNS) சார்பில் சிறந்த நாடகங்களைச் சென்னையில் இருந்து கேட்டுவாங்கி டில்லியில் அரங்கேற்றி அவற்றில்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்’, ‘மழை’, ‘நந்தனார் கதை’ ஆகிய நாடகங்களில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் அபார நடிப்பை மெச்சாதவர்கள் இல்லை.

டில்லி என்பது அறிவுஜீவிகளின் நகரம். அறிவுஜீவிகள் என்றாலே ஒருவரோடொருவர் முரண்பாடு கொள்பவர்கள் என்றுதானே அர்த்தம்! ஆனால் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னோடு முரண்பட்டவர்களோடும்  பேதம் பாராட்டாமல் பழகியவர். தில்லியில் இயங்கிய பிற நாடகக்  குழுக்களோடு நல்ல நட்புறவு கொண்டிருந்ததோடு  அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்தவர்.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் (அமரர்)  ‘தீபம்’ நா பார்த்தசாரதி அவர்களுக்கும் இருந்த நட்புறவு மிகவும் குறிப்பிடத் தகுந்தது. டில்லிக்கு வரும்போதெல்லாம் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி  வீட்டில்தான் அவர் தங்குவார். திருமதி ஆனந்தம் அவர்களின் விருந்தோம்பலில் திக்குமுக்காடுவார். (எத்தனையோ நாட்கள் அதுபோன்ற விருந்தோம்பலை நானும் அனுபவித்த துண்டு.) அவர் வந்தது தெரிந்து அவருக்கு மிக நெருக்கமான டில்லி நண்பர்களும் வந்து விடுவார்கள். அன்று இரவுப் பொழுது மிகவும் களைகட்டிவிடும்.

நா.பா. அவர்களின் ஊக்குவிப்பின் காரணமாகவே ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். அவை ‘தீபம்’ இதழிலும் பலமுறை வெளிவந்தன. ‘தீபம் சிறுகதைத்தொகுப்பு’ வெளிவந்தபோது அதில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘ஆறாவது விரல்’ என்ற கதை இடம்பெற்றிருந்தது. ‘கலைமகள்’,  ‘அமுதசுரபி’,  ‘தினமணி கதிர்’ இதழ்களிலும் அவருடைய கட்டுரைகள், கதைகள் வெளியாகியுள்ளன.

தமிழ் இலக்கிய உலகம் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சிறப்பாக அங்கீகரித்ததன் அடையாளமாக 1980இல் அவருக்கு கிடைத்த ‘இலக்கியச் சிந்தனை’ விருதைக் கூறலாம். 1989 எழுத்தாளர் மாநாட்டை டில்லியில் சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்காக அதற்கு அடுத்த வருடம் சென்னையில் எழுத்தாளர் சங்கம் அவருக்குச் சிறப்புச் செய்தது.

*****
தில்லித் தமிழர் வட்டாரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பண்பாளர் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி என்பதை நன்றியுடன் நினைவுகூர்வேன்.  தில்லியின் பாரம்பரியம் மிகுந்த தமிழ்ச் சங்கத்தின் செயலர், எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மாதம் ஒருமுறையாவது தில்லித் தமிழ்ச் சங்கத்தில் என்னுடைய கவியரங்கம் நடைபெறுவதற்கு வழிகாட்டியவர் அவர்.  தில்லி இலக்கிய விழாக்கள் பலவற்றில் என்னை நடுவராக அமர்த்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையான குறுநாவல் ஆசிரியர். அவருடைய இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு ஒன்றை ‘ஓசையிடும் மௌனங்கள்’ என்ற பெயரில் தீபம் எஸ். திருமலை வழியாகப் புத்தகமாக வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக, ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பல நூல்களை தீபம் திருமலை அவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள்.

*****

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ், இந்தி, ஆங்கிலம் இந்த மூன்று மொழிகளில் எந்த ஒன்றிலிருந்தும் மற்ற இரண்டுக்கு அவரால் எளிதில் மொழிபெயர்க்க முடிந்தது. அதனால் நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற பதிப்பாளர்களின் நூல்கள் பலவற்றை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். தனியார் பதிப்பாளர்களுக்காகச்  சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றையும்,  தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி ஒன்றையும் அவர் தொகுத்துத் தந்திருக்கிறார். 

அனைத்திந்திய வானொலிக்கும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நீடித்த ஒன்றாகும். மத்தியஅரசின் தகவல் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆங்கில மற்றும் இந்தி விளம்பர நிகழ்ச்சிகளை அழகிய தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அதில் திருமதி ஆனந்தம் அவர்களும் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற விழாக்களின்போது அவை பற்றிய வானொலி நிகழ்ச்சிகளைப்  பலமுறை தொகுத்தளித்திருக்கிறார். பள்ளி மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட இசை நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் எண்ணற்றவை அவரால் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பொதிகைத் தொலைக்காட்சி (சென்னை தூர்தர்ஷன்) தொடர்கள்  சிலவற்றில் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

****
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கையெழுத்து மணி மணியாக அச்சிட்டது போல அற்புதமாக இருக்கும். அந்தக் கையெழுத்தின் அழகுக்காகவே தில்லியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தும் யாரும் அதற்கான அழைப்பிதழை அவரிடமே    எழுதி வாங்குவது வழக்கம். அழைப்பிதழ்களை உருவாக்குவதற்கென்றே பல வண்ண மைக் குப்பிகளும், இறகுப் பேனாக்களும் அவர் வீட்டின் வரவேற்பறையில் தயாராக இருக்கும். தூக்கத்தில் எழுப்பினாலும் கூட எழுந்து உட்கார்ந்து கொண்டு அழகான அழைப்பிதழை அவர் வடிவமைத்துக் கொடுத்து விடுவார் என்பதை ஒரு முறை கண்டிருக்கிறேன். பின்னாளில் திருக்குறளைக்  கன்னடத்தில் மொழி பெயர்த்த எனது  டில்லி நண்பர் திரு எஸ் ஸ்ரீனிவாசன் அவர்கள் நடத்திய ‘உதயம்’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை, பலமுறை ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது என்பதை அக்காலத்திய டில்லி நண்பர்கள் அறிவார்கள்.
Photo taken while he was writing a certain story.  See the beauty of his hand even at the age of 75!

****
நா. பா. அவர்களையும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சம்பந்தப்படுத்திய ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வருடம் டில்லி வந்திருந்தபொழுது அந்த வருடம் சாகித்ய அகாடமி பரிசுக்குரிய  தமிழ் நூலைத் தேர்ந்தெடுக்கும் இறுதிக் கட்டப் பொறுப்பில் நா.பா. இருந்தார். ஒரு பெண் எழுத்தாளருக்குதான்  அந்த வருடம் வழங்குவது என்று குழுவினர் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருந்தார்களாம். அந்த நிலையில்,  லக்ஷ்மி அல்லது வாஸந்தி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதாக முடிவாயிற்றாம். வாஸந்தி டெல்லியில் வசித்த எழுத்தாளர். இந்திரா காந்தியின் படுகொலையை ஒட்டி டில்லியில் நடைபெற்ற சீக்கியர்கள் மீதான விரும்பத்தகாத வன்முறையைப் பற்றி அவர் எழுதிய நாவல் குஷ்வந்த் சிங்கின் கவனத்தைப் பெற்று சர்வதேச அளவில் பிரபலமாகி இருந்த நேரம். தமிழிலும் எல்லா முக்கிய இதழ்களிலும் அவர் எழுதிக் கொண்டிருந்தார். அதே சமயம் லக்ஷ்மி அவர்கள் வாஸந்தியை விட  சீனியர். ஏராளமான தொடர் கதைகளை எழுதி மிகச்சிறந்த குடும்பக்கதை  எழுத்தாளர் என்று பெயர் பெற்றிருந்தவர். இந்த இருவரில் ஒருவரைத்  தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்ததாம். கடைசியில் நா.பா.வே  ஒரு வழி கண்டுபிடித்தார். அதாவது லக்ஷ்மியோடு ஒப்பிடும்போது வாஸந்தி வயதில் மிகவும் இளையவர். எனவே அவர் இன்னும் சில ஆண்டுகள் பொறுக்கலாம் என்றும்  லக்ஷ்மிக்கு அந்த வருடம் சாகித்ய அகாடமி வழங்கி விடலாம் என்றும்  முடிவாயிற்றாம். ஆம்,  அப்போதெல்லாம் வயதான இலக்கியவாதிகளுக்கு எல்லா மொழிகளிலுமே  கௌரவம் தரப்பட்டிருந்தது.

****
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் மாலை நேரத்து நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நானும் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் லோதி காலனி வழியாகக்  காலாற நடப்பதுண்டு. ஒருமுறை பாரதிய ஞான பீடம் தேர்வுக்குழுவினர் தன்னை ஆலோசனைக்கு அழைத்ததையும், பிற மொழிகளில் இல்லாத அளவுக்குத்  தமிழ் மொழியில் எழுத்தாளர்களுக்கிடையே இனம் சார்ந்த மாச்சரியங்கள் அதிகம் நிலவியதாகத் தேர்வுக்குழுவினர் குறிப்பிட்டதையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். கேரளா,  கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேசியக் கட்சி ஆட்சியில் இருப்பதும், ஆட்சியாளர்களோடு எழுத்தாளர்கள் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதும், எழுத்தாளர்களிடையே தேவையற்ற பொறாமை உணர்வு இல்லாதிருப்பதும் அந்த இரு மொழிகளிலும் அதிக இலக்கிய விருதுகள் கிடைக்க ஏதுவாக இருந்ததை அவர் வருத்தத்தோடு  தெரிவித்தார். 

****
லோதி காலனியில் இருந்த பாரதி சிலை அடியில் செப்டம்பர் பதினொன்று அல்லது டிசம்பர் பதினொன்று அன்று பாரதியைப் பற்றிய கவியரங்கமோ அல்லது  பாரதியின் வசனங்களிலேயே பாஞ்சாலி சபதம் நாடகத்தை ஆளுக்கொரு  பாத்திரம் ஏற்று நடிப்பதோ வருடம் தவறாமல் நடைபெறும். தில்லியில் இருந்த இன்னொரு மாபெரும் தமிழ் ஆர்வலரான  கணினித்துறை அறிஞர், ‘பாரதி-200’ பாலசுப்பிரமணியன் அவர்களும் இதே போன்ற நிகழ்ச்சிகளைத் தனியாகவும் தமிழ்ச் சங்கத்துடன் சேர்ந்தும் நடத்துவதுண்டு. பங்கு பெறும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து ஏதோ ஒரு உணவைத் தன் பங்காகக் கொண்டு வருவார்கள். (கலியாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக நான் இருந்ததால் என் பங்குக்கு ‘சிப்ஸ்’ மூன்று கிலோ வாங்கிவரும்படி ஆலோசனை கூறப்படும். அதுவே கடைசியில் போதாமல் ஆகிவிடும்!).  பனியும்  இளவெயிலும் கலந்து மேனி சிலிர்க்கும் அந்த இயற்கைச் சூழ்நிலையில் எல்லா உணவையும் ஒன்றாக்கிச் சாப்பிட அமரும்பொழுது அருகில் இருந்த டாக்டர் கரன் சிங் அவர்களின் இல்லத்தில் இருந்து சூடான தேநீர் வந்து சேரும். சில சமயம் அவரே வந்து பாரதியைப் பற்றி உரை நிகழ்த்திவிட்டுத் தன்  கையாலேயே தேநீரை விநியோகிப்பார். (பாண்டிச்சேரி ஆரோவில் அமைப்பின் தலைவராகப் பலகாலம் அவர் இருந்ததால், அவருக்குப் பாரதி-அரவிந்தர் என்றால் மிகவும் பரிச்சயம் இருந்தது.)  வீதி நாடகங்களுக்குப்  புகழ்பெற்ற புதுடில்லியில், பாஞ்சாலி சபதம் நாடக நடிப்பு கவித்துவமாக அமைந்திருப்பதை, மொழி தெரியாமலேயே இந்தி பேசுவோரும் பஞ்சாபி பேசுவோரும் காரை நிறுத்தி இறங்கிவந்து, நின்று கவனித்துக் கடந்து போவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்.

***

பணி மூப்பு அடைவதற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்று விட்டார்  ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி. அவர் மனைவி முழுமையாகப் பணியாற்றிய பிறகே ஓய்வு பெற்றார். வாழ்நாளில் பெரும் பகுதியை லஜ்பத் நகர் வாடகை வீட்டிலேயே கழித்த தம்பதியர், பின்னர் பட்பர்கஞ்சில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்த வீட்டில் குடிபுகுந்த பிறகும் நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். தில்லியில் இருந்து நான் மாற்றல் ஆன பிறகும் எங்கள் தொடர்பு அறுபடவில்லை. ஆனால் மின்தூக்கி இல்லாத மூன்றாவது தளத்தில் அவரைச் சந்திப்பதற்கு ஏறி இறங்குவது   அனைவருக்குமே  சிரமமாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏறி இறங்குவதற்குச் சற்றும் அஞ்சாத கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வுக்குப் பிறகும் பத்திரிகைத் துறையை விடாமல், ஒரு வெளிநாட்டுப்  பத்திரிகைக்கு  அன்றாடத் தமிழ்ச் செய்திகளைச் சுருக்கித் தரும் பணியில் பல ஆண்டுகள் இருந்தார்.

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு இரண்டு பெண்கள். ஒருவர் மலேசியாவிலும்  ஒருவர் சென்னையிலும் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ்வதே  பிடித்தமாக இருந்ததால், கோவையில்  ஸ்வர்ணாலயம் என்ற முதியோர் இல்லத்தில் வசதியான ஒரு இல்லத்தை அமைத்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள் ஆனந்தம்  கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்.

***
இந்த மாதம் ஏப்ரல் ஆறாம் தேதி பகல் ஒன்றரை மணிக்கு எனக்கு ஒரு தகவல் வந்தது. ‘எங்கள் தகப்பனார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று இரவு முதலே பலமுறை இதயத்தில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக இன்று காலை மாரடைப்பினால் மரணம் அடைந்தார்’ என்பதுதான் அச்செய்தி. அவரது இளையமகள் அனுப்பியிருந்தார். (இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழிந்தால் - ஏப்ரல் 18 வந்தால் அவருக்கு 77 முடிந்து 78 ஆரம்பம்.) உடனடியாகத்  திருமதி ஆனந்தம் அவர்களைத் தொடர்புகொண்டேன். கடந்த சில நாட்களாகத்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்றும்,  மருத்துவமனையிலிருந்து உடல் இப்பொழுது தங்கள் (முதியோர்) இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார். இரண்டு பெண்களும் அருகில் இருப்பதாகவும் மலேசிய மருமகன் மட்டும் இரவில் வந்து சேரக் கூடும் என்றும் தெரிவித்தார். நானும்  இரவுக்குள் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு அவசரம் அவசரமாக என் மனைவியோடு காரில் கிளம்பினேன். ஆனால் செங்கல்பட்டைத் தாண்டிய சற்று நேரத்தில் திருமதி ஆனந்தம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. தாங்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் உடலை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்து விட்டதால் மருத்துவமனை நபர்கள் மாலை ஐந்தரை க்குள் வந்து உடலை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று தெரிவித்தார். வேறு எந்தவிதமான மதச் சடங்குகளும் செய்ய வழி இல்லாததால், எனது பயணத்தைத்  தவிர்த்து விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்கள் உடலை மருத்துவமனைக்கு வழங்கி விடுவது பல ஆண்டுகளுக்கு முன்பே டில்லியில் பிரபலமாக இருந்தது. தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த பெரியவர் சேஷாத்ரி என்பவர் அம்மாதிரி தன் உடலை தானம் செய்துவிட்டு இருந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர் வீடு சென்ற எனக்கு அவரது உடல் கூட இல்லாத வெறுமைதான் காட்சி தந்தது நினைவுக்கு வந்தது. விதியும் அறிவியலும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. இறந்தவரின் கடைசி முக தரிசனம் கூட எனக்கு இல்லாமல் போயிற்று.
May 1992 - Sri Krishnamurthy bidding me farewell. On the dais, with me, is (late) Dr. Mrs. Indirani Manian

1992இல் மூன்றாண்டு வங்கிப் பணிக்கு பிறகு சென்னைக்கு மாற்றலாகி நான் வந்தபோது தமிழ்ச் சங்கம் சார்பில் எனக்குப் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தனது அன்பின் அடையாளமாக எனக்கு கிருஷ்ணர் விக்கிரகத்தைப் பரிசாக அளித்தார் அமரர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். என்றென்றும் அவர் நினைவாக அந்த கிருஷ்ணர் விக்ரகம் என் வரவேற்பறையில் திகழும் என்பது உறுதி.

-இராய செல்லப்பா (15-4-2019)

****