திங்கள், மே 28, 2018

இரவுக்கு ஆயிரம் புண்கள் -2


பதிவு 02/2018

இரவுக்கு ஆயிரம் புண்கள் -2

இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.

அதுவரையில் அவரை நான் பார்த்ததில்லை. வயது சுமார் இருபது இருக்கலாம் என்று தோன்றியது. அதை உறுதி செய்வதுபோல், மெலிந்த தேகம். அதிக உயரமில்லை. ஆனால் அவருக்கு வயது முப்பதுக்குச் சற்றே அதிகம் என்று பின்னால்தான் தெரிந்தது. அது இங்கு முக்கியமில்லை. அவருடைய பெயர் கூட முக்கியமில்லை. திருவாளர் ‘ந’ என்று வைத்துக்கொள்ளலாம்.

‘நான் ஒரு பட்டிமன்றத்தில் பேச வேண்டும். அது பற்றிய சில குறிப்புகளைத் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

தன்னைப் பற்றியோ தனது கல்வித் தகுதி பற்றியோ, பட்டிமன்ற அனுபவம் பற்றியோ எதுவும் கூறாமல், எடுத்த எடுப்பில் ஒரு புதிய மனிதரிடம் இப்படிப்பட்ட உதவியைக் கேட்கும் தன்மை என்னுள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  

அந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தார், அவருடன் வந்திருந்த ஒரு பெண்மணி. அவர் எனது குடியிருப்பில் அண்மையில் குடியேறிய ஒரு குடும்பத்தின் விருந்தினர்.

‘இவருக்கு அதிகம் படிப்பில்லை. பேச்சும் சில நேரம் திணறுவதுண்டு. ஆனால் படிக்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் உண்டு. அதற்காகத்தான் கிராமத்தில் இருந்து அழைத்துவந்திருக்கிறோம்.  நல்ல மனம் படைத்த ஒருவர் தனது அலுவலகத்தில் இவரைப் பணியில் அமர்த்திக்கொள்ள எண்ணம் கொண்டிருக்கிறார்....’ என்று சொல்லிக்கொண்டே போனார் அந்தப் பெண்மணி.

‘ஆம் ஐயா! எனக்கு இலக்கியத்தில் நாட்டம் உண்டு. அதிலும் சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர், ராஜா போன்றவர்களின் பட்டிமன்றப் பேச்சுக்களைக் கேட்கும்போது அவர்களைப் போல நானும் ஒருநாள் சிறந்த பேச்சாளனாக வேண்டும் என்ற பேராசை உண்டாகிறது. படிப்பு என்பது எனக்குக் கடினமாகத் தோன்றினாலும், பேசும் கலையை எளிதில் பயின்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது. எனக்கு உதவுவீர்களா?’ என்று கோரினார் ‘ந’.

அவரிடம் உடனடியாக நான் கண்ட நல்ல அம்சம், அவர் கையில் இருந்த மடிக்கணினியே. அவரது வீட்டில் யாரோ ஒரு மாணவருக்கு அம்மா அரசு இலவசமாக வழங்கிய மடிக்கணினி அது. அதில் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் எழுதமுடிந்தது அவரால்.

‘இந்தக் கணினியில் தமிழில் எழுதுவது எப்படி என்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது எனக்குச் சொல்லித் தருவார்களா?’ என்று ஏக்கத்துடன் கேட்டார்.

‘ஓரளவுக்கு என்னால் சொல்லித்தர இயலும்’ என்று உறுதியளித்தேன். Google Input Language Tamil என்று google  செய்வது எப்படி என்று காண்பித்தேன். எப்படிக் கணினித் திரையின் வலது கீழ்ப்பக்க மூலையில் ENG என்று இருந்தால் ஆங்கிலத்திலும், ‘த’ என்று இருந்தால் தமிழிலும் எம்எஸ் வேர்டு கோப்பில் அடிக்க முடியும் என்று காண்பித்தேன். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, அல்லது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறவேண்டி நேர்ந்தால் Control –ஐ அழுத்திக்கொண்டு  G –யையும் அழுத்தவேண்டும் என்பதையும் செய்து காண்பித்தேன்.

வேர்ட் ஃபைல்-களுக்குப் பெயரிடுவது எப்படி, ஒரு ஃபைலின் பெயரை மாற்றுவது எப்படி, இரண்டு ஃபைல்களை இணைப்பது எப்படி என்பதுவரையான பயிற்சியை அவருக்குக் கொடுத்தேன். உடனே புரிந்துகொண்டார்.

‘விருப்பம் போல எதையாவது அடியுங்கள்’ என்று இரண்டு ஃபைல்களை உண்டாக்கிக் கொடுத்தேன். மிகுந்த ஆர்வத்துடன் தமிழில் அடிக்கத் தொடங்கினார். மறுநாள் காலை இந்த விஷயங்கள் அவருக்கு அத்துப்படி யாகிவிட்டன.

இப்போது அவர் சொன்ன சேதி என்னவென்றால், பொதிகை டிவி-யில் கம்பராமாயணம் பற்றிய தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று நடக்க இருப்பதாகவும், கிராமத்துப் பேச்சாளர் என்ற வகையில் தன்னை அதில் பேசச் சொல்லி அனுமதித்திருப்பதாகவும், அதற்காகத் தன்னை எப்படியாவது தயார்ப்படுத்திக்கொள்ள நான் உதவ வேண்டும் என்றும் கோரினார். தலைப்பின் முழு விவரம் மாலைதான் கிடைக்கும் என்றும், ‘கம்ப ராமாயணத்தில் வலியுறுத்தப்படுவது ‘குடும்ப ஒற்றுமையா அல்லது சமூக ஒற்றுமையா’  என்று தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

தமிழ் எழுத்தாளனுக்குச் சோதனைகள் வருவது ஆச்சரியமில்லை. ஆனால் இம்மாதிரிச் சோதனையை நான் அதுவரையில் சந்தித்ததில்லை.

‘தம்பி, நீங்கள் கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறீர்களா?’ என்றேன்.

‘இல்லை ஐயா, ஆனால் கொடுத்தால் படித்துக் காட்டுவேன்’ என்றார் தெம்பாக.

1966-70 ஆண்டுகளில் தினமணி சார்பில் ‘தினமணி கதிர்’ என்ற வாரப் பத்திரிகையை சாவி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்தினார். இப்போது விகடன், கல்கி வருகிறதே அதே மாதிரியான பெரிய அளவில். புஷ்பா தங்கதுரை, பல சிவப்பு விளக்குக் கதைகளையும், ‘ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற நாவலையும்,  ‘ஸ்ரீ வேணுகோபாலன்’ என்ற இன்னொரு புனைபெயரில் ‘திருவரங்க உலா’ என்ற அழகிய காவியத்தையும்  அதில்தான் எழுதினர். 

அப்போது அமரர், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், ‘கம்பன் கவிநயம்’ என்ற பெயரில் சுமார் ஐம்பது வாரங்களுக்குமேல்  கம்பராமாயணத்தை ஆராய்ந்து அதே தினமணி கதிரில் எழுதிக்கொண்டிருந்தார்.  ஆனந்த விகடனில் ‘பி.ஸ்ரீ.’ அவர்கள் 1950-இன் இறுதிகளில் ‘சித்திர ராமாயணம்’ என்ற பெயரில் பல வாரங்கள் எழுதியதை இராணிப்பேட்டையில்  பக்கத்து வீட்டுக்காரரிடம் கெஞ்சி இரவல் வாங்கித்தான் கம்பனை நான் அறிந்துகொண்டிருந்தேன். வாரியாரின் எழுத்தில் கம்பனை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அறிந்துகொள்ள முடிந்தது.

நல்வினைப்பயன் காரணமாக, வாரியாரின் அந்தக் கட்டுரைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, அதே பெயரில், அவருடைய சொந்தப் பதிப்பகமான ‘திருப்புகழமிர்தம் காரியாலய’த்தால் 1984இல்  வெளியிடப்பட்டிருந்தது.  அந்த நூலை, எனது நண்பர் திரு ஜனார்த்தனன் அவர்களின் தாயார் திருமதி கோமதி அம்மாள் அவர்கள் (வயது 93) இவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்திருந்து, ‘இனி நான் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் இதை நீ வைத்துக்கொள்’ என்று அன்போடும் ஆசியோடும் சில மாதங்கள் முன்புதான் என்னிடம் கொடுத்தார்கள். மூப்பின் காரணமாக அவரால் இப்போதெல்லாம் எழுந்து நடமாட முடிவதில்லை. அடிக்கடி சென்று அவரை நான் சந்தித்து வருவது வழக்கமாக இருக்கிறது.  அந்த நூல் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.        

‘தம்பி, உனது ஆர்வம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால், கம்பராமாயணம் என்பது ஆழமான கடல் போன்றது. அதில் நீந்திக் குளிக்க வேண்டுமானால் ஆண்டுகள் பல ஆகலாம். காக்கையைப் போல வெறும் தலையை முழுக்குப் போடுவதானாலும் அதுவே பல மாதப் பயிற்சிக்குப் பிறகுதான் கைவரும். எனவே உன்னை எப்படித் தயார்ப்படுத்துவது? நீதான் ஆலோசனை கூறவேண்டும்’ என்றேன்.

கம்பன் கவிநயம் நூலைக் கொடுத்து, அதில் முக்கியமான சுமார் இருபது பாடல்களைச் சொல்லி, அதைக் கணினியில் எழுதிக்கொள்ளுமாறு கூறினேன். அந்தப் பாடல்களை எப்படியாவது மனப்பாடம் செய்துகொள்வது நல்லது என்றேன். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ‘குகனோடும் ஐவரானோம்’ என்ற பாடலையும், குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும்  ‘நீர்க்கோல வாழ்வை நச்சி....உயிர்கொடாது அங்குப் போகேன்’ என்ற கும்பகர்ணன் கூற்றாக வரும் பாடலையும், மற்றும் பொதுவாகவே அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பாடல்களான

’எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’,  
‘தோள் கண்டார் தோளே கண்டார்’,  
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’,
‘மன்னவன் பணி அன்றாகில்  நும்பணி மறுப்பனோ?’,
‘கவியெனக்  கிடந்த கோதாவரியினை..’,
‘யார் கொலோ இச் சொல்லின் செல்வன்?’   
‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம்’,
‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’

-போன்ற சில பாடல்களைக் கூறி, ஒவ்வொன்றின் கருத்தையும் விளக்கினேன். 

முழுப் பாடல்களையும் மனப்பாடம் செய்வது உடனே இயலாது என்பதால், இந்த மேற்கோள்களை மட்டுமாவது அவருடைய பேச்சில் அங்கங்கே கொண்டுவந்தால் சிறப்பு என்று கூறினேன்.

எல்லாம் புரிந்த மகிழ்ச்சியில் அவர் புன்முறுவல் பூத்தார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண்மணி வந்தார். ‘அவர் பட்டிமன்றத்திற்கு நன்றாகத் தயார் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆர்வம் வியப்பூட்டுகிறது’ என்றார்.


அப்போதுதான் அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை என் கவனத்திற்குக் கொண்டுவந்தார் அந்தப் பெண்மணி. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்பில் நிகழ்ந்த சபரிமலை செல்வோருக்கான இருமுடிப் பூசையின்போது, தானே இட்டுக்கட்டிய பாடல்களை, தானே ராகம் இசைத்துப் பாடினார் அவர் என்றே சேதிதான் அது. ஆம், நினைவுக்கு வந்துவிட்டது! நெடுநேரம் பாடினார். நல்ல அர்த்தமுள்ள வரிகள். குரலும் நன்கு எடுப்பாகவும் ஆன்மிக நாட்டத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது. குறைந்தது இரண்டுமணி நேரமாவது பாடியிருப்பார் அந்த இளைஞர்.

இன்னும் சில நாட்கள் கழிந்தபின்  அந்த இளம் நண்பர் வந்தார். பட்டிமன்றம் நடைபெற்றதாம். முதல் பேச்சு என்பதால் சற்றே இலக்கண பூர்வமான பேச்சாகப் பேச ஆரம்பித்ததாகவும், நிகழ்ச்சியின் நெறியாளர், ‘பரவாயில்லை, உங்கள் வழக்கமான பேச்சு மொழியிலேயே பேசலாம், தவறில்லை. அதிகம் சிரமப்படாமல் பேசுங்கள்’ என்று உற்சாகப்படுத்தினாராம்.

‘நீங்கள் கொடுத்த குறிப்புகள்தாம் எனக்கு மிகவும் பயன்பட்டன. வாரியாரின் அந்தப் புத்தகத்தை நானே வைத்துக்கொள்ளட்டுமா? கம்ப ராமாயணத்தை முழுதும் படிக்க அது எனக்கு உதவும் அல்லவா?’ என்றார்.

தன் நன்றியின் விளக்கமாக என்னைக் காலில் விழுந்து வணங்கினார். வாழ்த்தினேன். ‘புத்தகத்திற்கு முப்பத்து நான்கு வயதாகிறது. தொட்டாலே பக்கங்கள் முறிந்துபோகும் நிலையில் உள்ளது. இருந்தாலும் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல நல்ல நூல்களை விரைவில் கண்டுபிடித்துத் தருகிறேன். அதே சமயம், நீங்கள் படிப்பதைக் கணினியில் தமிழில் எழுதிக் காட்டவேண்டும் என்ற எனது வேண்டுகோளை மறந்துவிடவேண்டாம்’ என்றேன். சரியென்றார்.
****
அந்தப் பட்டிமன்ற நிகழ்ச்சி எப்போது பொதிகையில் வெளியாகும் என்று கேட்டேன். 28-5-2018 ஞாயிறு  காலை 11 மணி முதல் 12 வரையான நேரத்தில் வரும் என்றார். கட்டாயம் பாருங்கள் என்றார். நானும் மற்றும் எனது குடியிருப்பில் இருந்த அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தோம் அந்த இருபத்தெட்டாம் தேதிக்காக. அந்த இளம் நண்பர் நரசிம்மனின் பேச்சைக் கேட்பதற்காக மட்டுமல்ல, கம்பனின் கவிநயம் காதில் விழுமே என்ற ஆசைக்காகவும்தான்.
****
இதற்கு இடைப்பட்ட சில நாட்களில்தான் நாங்கள் கொடைக்கானல் பயணம் செல்ல நேரிட்டது. (அதைத்தான் போன பதிவில் படித்தீர்களே!)
கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து, மீனாட்சி அம்மனின் தரிசனம் பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

எங்கள் குடியிருப்பு செங்கல்பட்டிற்கும் தாம்பரத்திற்கும் இடையில் சற்றே உள்ளடங்கிய பகுதியில் உள்ளது. வந்து சேரும்போது இரவு மணி எட்டரை போலாகியிருந்தது.

பகல் நேரத்துக் கசப்பான அனுபவங்கள் இரவு நேரத்தில் முள்ளாகக் குத்திப் புண்ணாக வலிக்கும் அல்லவா? அதையே நான் ‘இரவுக்கு ஆயிரம் புண்கள்’ என்று சொன்னேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் வை-ஃபை தொடர்பு கிட்டியதால், எங்கள் அலைபேசிகள் வாட்ஸ்-அப் தகவல்களைக் கடகடவென்று இழுத்துக்கொண்டுவந்து போட்டன.

எங்கள் குடியிருப்பில் இருந்து சுமார் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கூடுவாஞ்சேரி  என்ற நகரைக் கடக்கும்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவரை, அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்த பஸ் ஒன்று கீழே தள்ளி நசுக்கியதுடன், சிறிது தூரம் வரை இழுத்துச் சென்று போட்டதாக ஒரு தகவல் எங்களுக்கு வரும் என்றோ, அந்த நபரின் பெயர் நரசிம்மன் என்றோ, தனது முதலாவது பட்டிமன்றப் பேச்சைக் கேட்காமலேயே அவரது உயிர் அகால மரணமடைந்தது என்றோ எப்படி நாங்கள் எதிர்பார்த்திருக்க முடியும்?

அந்தப் பெண்மணி ஓடிவந்து அழுதார். ‘என் தம்பியைப் போன்று அவனை எண்ணினேன். நன்றாகப் படிக்க வைக்கவும், வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தை விரைவில் அவன் அடையும்படி செய்யவும் சில திட்டங்களோடு இருந்தேன். விதி இப்படி விளையாடி விட்டதே’ என்று கதறினார்.

‘கண்ணிலே நீரெதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு’ என்ற கண்ணதாசனின் வரிகள் எங்கள் கண்ணீரில் மின்னின.


இன்றுதான் அந்த இருபத்தெட்டாம் தேதி. காலை பத்து மணிக்கே  பொதிகை டிவி-யில்  schedule செய்துவிட்டுப் பட்டிமன்றத்திற்காகக் காத்திருந்தோம். அறிவிப்பில் ‘பட்டிமன்றம் ‘ என்று இருந்தது. ஆனால், மன்-கி-பாத் வந்தது. கழிப்பறையின் அவசியம் வந்தது. ‘பொதிகை-சமூகத்தின் மகிழ்ச்சி’ என்ற powerpoint slide முப்பது தடவைக்குமேல் வந்தது. குழந்தைகளின் நிகழ்ச்சி ஒன்று வந்தது.  ‘பொதிகை-சமூகத்தின் மகிழ்ச்சி’ கடைசியாகப் பன்னிரண்டு மணிக்கு வந்தது. ஏன் பட்டிமன்றம் வரவில்லை என்று எந்த விளக்கமும் இல்லை.

ஒருவேளை, அதற்குச் சில நாட்கள் முன்னதாகவே வந்திருக்குமோ? அல்லது அடுத்த ஞாயிறு அன்று வருமோ? யாரைக் கேட்பது? ஒரு காலத்தில் ஏ.நடராசன் போன்ற திறமைசாலிகளும் அங்கே இயக்குனர் பதவியில் இருந்தது நினைவுக்கு வந்தது.

நரசிம்மா, என் இளைய நண்பனே, எங்களை மன்னித்துவிடு. உனது பட்டிமன்றப் பேச்சை நாங்களும் கேட்கவில்லை. நீயும் கேட்கவில்லை. இனி யார் கேட்டால்தான் என்ன?

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இரண்டே வரிகளைக் கொண்ட திருக்குறளைப் படிக்காமல், தமிழில் மிக அதிக வரிகளைக் கொண்ட கம்பராமாயணத்தை நீ படிக்க முன்வந்தாயே, அந்தத் துணிச்சலும், சான்றோர் நிறைந்த அவையில் உன்னாலும் பேச முடியும் என்று நீ கொண்ட தன்னம்பிக்கையும், அதற்காகப் பயிற்சி மேற்கொண்ட உனது முயற்சிகளும் நிச்சயம் பலரால் பேசப்படட்டும். உன் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக அது அமையட்டும்.

அத்துடன், இரு சக்கர வாகனத்தில், ஹெல்மட்  அணியாமல் அசட்டுத் துணிச்சலோடு பயணிப்பவர்களுக்கு  அபாய அறிவிப்பாக உனது மரணம் இருக்கட்டும். (நீ ஹெல்மட் அணிந்திருந்தாயா என்று யாரிடம் கேட்பது?)

வாழ்வின் மிகச்சிறிய பகுதியை மட்டுமே அனுபவித்து மறைந்த உனக்கு நான் வேறெப்படிப் பிரியாவிடை தருவது? உனது ஆன்மா சாந்தி அடைவதாக என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

-இராய செல்லப்பா  சென்னை      

வியாழன், மே 24, 2018

இரவுக்கு ஆயிரம் புண்கள் -1


 பதிவு 01/2018
இரவுக்கு ஆயிரம் புண்கள் -1

கொடைக்கானலுக்கு  அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது குறித்துப் பல வருடங்களாக ஆராய்ந்ததில்,‘கோடைக் கனல்’ என்பதின் திரிபு தான் அது என்று தெரிந்தது. கோடையின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வழியாக இருந்த மலைப்பகுதி என்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணியாக அந்தப் பெயரில் அழைத்திருக்கவேண்டும். ஆனால், தஞ்சாவூரை ‘டேஞ்சூர்’ என்றும் வத்தலக்குண்டை ‘பட்லகுண்டு’ என்றும் ஆக்கியவர்கள்தாம்  கோடைக்கனலைக் கொடைக்கானல் என்று ஆக்கிவிட்டிருக்கவேண்டும்.  (நான் அதை ‘கோகா’ என்று சுருக்கமாக இங்குக் குறிப்பிடுவேன் என்பதை அறிக.)

2010 இன் மே மாதத்தில் சில நாட்கள் கோகா-வுக்குச் சென்றிருந்தோம். ஒரே மழை. ஏரியில் படகுப் பயணம் செய்ய முடியமாலும்  பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமலும் போயிற்று. வெள்ளி அருவி என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் அழகான இயற்கைச் சூழல். நமது வலைப்பதிவில் வெளியிடும் பொருட்டு, அருவியின் பின்னணியில் என்னை மட்டும் தனியாகப் படமெடுக்கச் சொன்னால், என்னைச் சுற்றியிருந்தவர்கள் யார் யாரோ, அவர்கள் முழுமையாகவும், நான் மட்டும் அரைப்பகுதியாகவும் தெரியும்படி மிகுந்த முயற்சிக்குப்பின்  இளைய நண்பர் ஒருவர் படம்பிடித்துக்கொடுத்தார். கோகா- வுக்குள் நுழையும்போது எடுத்த படம் அது. பரவாயில்லை, திரும்பிச் செல்லும்போது வேறொருவரை விட்டு நல்லதாகப் படம் பிடித்துக்கொள்ளலாம் என்று எண்ணினால், திரும்பும் நேரம் நல்ல மழை. மு.க.ஸ்டாலினும்  முதல்வர் கனவும் மாதிரி, அல்லது ராகுல் காந்தியும் பிரதமர் கனவும் மாதிரி ஆகிவிட்டது. அதற்காகவேனும் மீண்டும் கோகா-விற்குப் போகவேண்டும் என்னும் ஆசை இருந்துகொண்டே இருந்தது. இந்த 2018 மே-யில் பலித்துவிட்டது.       

2010 மே மாதத்தில் எடுத்த படம்
மூன்று இரவுகள் மூன்றேமுக்கால் பகல்கள் –என்ற தொகுப்பில் பல பள்ளம் மேடுகளைக் கடந்து கண்காணாத இடத்தில் இருந்த ஒரு அழகான ஓட்டலில் இணையத்தின்மூலம் இடப்பதிவு செய்து கிளம்பினோம்.  காலை உணவு இலவசம் என்றார்கள். வழக்கம்போல் ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்டோம். ஐந்து மணிக்கே சூரியன் நன்றாக வரத்தொடங்கிவிட்டானே! ஆனால் தேநீர் கிடைக்கவே ஏழுமணி ஆனது. ஒன்பது மணிக்குமேல்தான் சூடான இட்டளி, வடை, பூரி, பொங்கல் கிடைத்தது.

2018 மே 15 - வெள்ளி அருவியின் பின்னணியுடன்
இருங்கள், இட்லி என்பதை இட்டளி என்று   எழுதினால் காரணம் கேட்காமல் விடுவீர்களா?  என்னுடைய இளங்கலை வகுப்பில் பாடம் எடுத்த ஓர் இளம் ஆசிரியரின் விளக்கத்தினால் வந்த வினை (1967-70) அது. அதாவது, வீட்டிற்கு விருந்தினர் வந்தால், தமிழர்கள் இட்லி தான் செய்து தருவார்களாம். அது சங்ககாலத்தில் மிகவும் பிரபலமாம். ‘இட்டு’ அளிப்பதால் அது ‘இட்டளி’ என்று பெயர் பெற்றதாம். அதுவே நாளடைவில் திரிந்து வடவர்களால் ‘இட்லி’ என்று அழைக்கப்படலாயிற்றாம். எனவே பச்சைத்தமிழர்கள், இனிமேலாவது  இட்டளி என்ற பழந்தமிழ்ப்பெயரைப் பிரபலப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்வது வழக்கம்.  அவருடைய நினைவு திடீரென்று வந்தது. பிரபலப்படுத்திவிட்டேன். அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

விடுங்கள்.  வழக்கம் போல, குறிஞ்சி ஆண்டவர் கோயில், குழந்தை வேலப்பர் கோயில், ஏரியில் படகுப்பயணம், பிரையன்ட் பூங்காவில் பாதிக்குமேல் ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ பலகையோடு மூடப்பட்டிருந்த வசதிகள், பூங்காவில் பூக்களோடு பூக்களாகப் பூவையர்கள் பூப்பந்து விளையாட்டு, என்று வழக்கமான நிகழ்வுகள்தாம். வேறில்லை.


2018 மே 13 -பிரையண்ட் பூங்கா 
‘டால்பின் நோஸ்’ என்ற முனைக்குச் செல்லக் கிளம்பினோம். ‘பெரிய வண்டிகள் செல்ல வேண்டாம்’ என்று சில அறிவிப்புப் பலகைகள் கெஞ்சின. எது பெரிய வண்டி என்று தெரியவில்லை. எங்களுடையது ‘இன்னோவா’- அது ‘பெரிய’ வண்டியில்லை என்பது ஓட்டுனரின் வாதம். எப்படியோ இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் சரிந்துகொண்டே போனோம். பிறகு நிறுத்தினோம். அவ்வளவுதானாம். அங்கிருந்து செங்குத்தான, கரடுமுரடான, மனிதர்கள் செல்ல முடியாத கால் வைத்தால் வழுக்கும் ஒரு பகுதியில் இறங்கி இரண்டு கிலோமீட்டர்கள் நடக்கவேண்டுமாம். அதன்பிறகு தான் டால்பின் நோஸ் வரும் என்று ஊரில் இருந்த சில தேநீர்க்கடைகாரர்கள் சொன்னார்கள். மற்றப்படி, சுற்றுலாத்துறை என்று ஒன்று இருக்குமே அதன் அறிவிப்புகள் எங்கும் காணோம். தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டே பெரிய மலைசார் சுற்றுலா இடங்கள் ஊட்டியும் கோகா-வும் தான். ஊட்டி ஒரளவு பரவாயில்லை. கோகா- இந்த அளவுக்கு மோசமாகத்தான்  இருந்தாகவேண்டும் என்று அந்தத்துறை ஏன் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. 

பில்லர் ராக் என்பதைப் பார்த்தோம். ‘மெக்கனாஸ் கோல்ட்’ படத்தில் வருமே, அசையும் மலைகள், அதுபோலிருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.  ஆனால், தூண் போல நின்ற அந்த இரண்டு உயரக் கற்களின் மீதும் பனித்திரை மூடியும் விலகியும் கண்ணாமூச்சி காட்டி, படமெடுப்பதில் சிரமப்படுத்தியதைச் சொல்லியாகவேண்டும். மோலியர் பாயிண்ட் என்பதைப் பார்க்க டிக்கட் வாங்குமிடத்தில் நிறையக் கூட்டம் இருந்ததால், அடுத்த முறைக்கு ஒத்திவைத்தோம். ‘ஹோம்-மேட் சாக்கலேட்’ என்று கருப்பும் வெள்ளையுமாக நாமக்கட்டி அளவுக்குத் திடமான பொருட்களை வாங்கிக்கொண்டோம். இல்லையென்றால் அது தெய்வக்குற்றம் ஆகலாம் என்றார்கள். பத்து வருடம் முன்பு வாங்கியதையே மூன்று நான்கு வருடங்கள் குளிர்பெட்டியில் வைத்திருந்து வெளிமாநில விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தீர்த்தது நினைவுக்கு வந்தது. இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமோ?

கோடை விடுமுறை என்பதாலும், நாங்கள் சனி-ஞாயிறுகளில் சென்றிருந்ததாலும், நடமாடிய நேரத்தை விடவும், காரில் இருந்தபடியே பயணித்த நேரமே அதிகம். வேறு வழி? முன்னும் பின்னும் எதிருமாக நூற்றுக் கணக்கான  கார்கள்.  நல்ல வேளை மழைத்துளி ஒன்று கூட விழவில்லை. மழைவந்தால் நகரமே நாறிப்போயிருக்கும்.

படகுப்பயணம் போனோம். டிக்கட்  வழங்கும் கொட்டடிகள் (‘கவுண்ட்டர்’) ஒன்றுக்கொன்று நேர் எதிர்த்திசையில், ஏரியின் எதிரெதிர்ப் பக்கங்களில் அமைந்துள்ளன (என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டோம். அறிவிப்புப் பலகைகள் இல்லை.)  எங்களுக்கு முன்னால் சுமார் ஐம்பதுபேர் வரிசையில் இருந்தார்கள். எங்களுக்குப் பின்னால் இன்னும் இருபதுபேர் இருக்கலாம். காலை ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கலாம்.  எங்களுக்கு முன்னால் டிக்கெட் வாங்கியவர்கள் கும்பலாகப் படகுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கட் வழங்க ஒருவரும் வரவில்லை. கவுண்ட்டர் திறக்கப்படவே இல்லை. அங்கே பலூன் விற்பவர்களும் கரும்புச் சாறு விற்பவர்களும், ‘அவர் சாப்பிடப் போயிருக்கிறார், ஒரு மணி நேரம் காத்திருங்கள்’ என்று தெரிவித்தார்கள். கரும்புச் சாறு அல்லது ஐஸ்க்ரீம் வேண்டுமா என்றார்கள். அல்லது மாங்காய்ச் சுண்டலும் கிடைக்கும் என்றார்கள்.  

வெகுநேரம் காத்திருந்த பிறகு, எதிர்த்திசையில் உற்றுப்பார்த்தால் அங்கே பெரிய கும்பல் தெரிந்தது. அங்கிருந்தும் படகுகள் கிளம்புவது தெரிந்தது. அரைமணி நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தோம். ஐந்து பேர் பயணிக்கும் படகுக்கு, இருபது நிமிடம் செல்வதற்கு  ரூ.330 என்றார்கள். இருபது நிமிடம் போதாது, நாற்பது நிமிடம் வேண்டும் என்றேன்.  அதற்கு ரூ.660 ஆகும். ஆனால், இன்று கூட்டம் அதிகம் என்பதால் இருபது நிமிடம்தான் தரமுடியும் என்றார்கள். 

படகில் ஏறிக்கொண்டோம். ஓட்டுனர் அருமையாகச் செலுத்தினார். ஏரியின் ஓரத்தில் அல்லிக்கொடிகளை நீண்ட தண்டோடு பற்றி இழுத்துக் கொடுத்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை முடிப்பதற்கு ஆன காலத்தை விடவும் நீளமாக இருந்தது அல்லித்தண்டு.     

இருபது நிமிடம் ஆகிக் கொண்டிருந்தது. இன்னும் இருபது நிமிடம் போகலாமா என்றேன். நீங்கள் விரும்பினால் போகலாம் என்றார். அவர்கள் முடியாது என்றார்களே என்றேன். அது அப்படித்தான் என்று சிரித்தார். முன்னூற்று முப்பது ரூபாயை என்னிடமே கொடுத்துவிடுங்கள், ரசீது கிடையாது என்றார். அவர்களிடம் கொடுத்தாலும் ரசீது தரமாட்டார்கள் என்றார். சிரிப்பில் பவ்வியம் இருந்தது. எவ்வளவு குழந்தைகள் என்றேன். நான்கு என்றார். எல்லாருக்கும் ஆதார் கிடைத்து விட்டது என்றார் பெருமிதத்துடன். சரி என்று பணத்தைக் கொடுத்தேன். எப்படியும் சீசனில் ஒருநாளைக்கு இரண்டாயிரம் தேறும். பெரிய குடும்பம். போகட்டும்.

கரி அடுப்பில் சுட்ட மக்காச்சோளம் அடடா, எவ்வளவு சுவை தெரியுமா? உணவுக்காக சைவ ஓட்டல்களைத் தேடிக்கொண்டு வெகுநேரம் திரிந்தது பற்றியெல்லாம் எழுதவேண்டாமே!

திரும்பிவரும்போது மலை எங்கும் பலாப்பழங்கள் குவிந்துகிடந்தன. முழுப்பழம் வாங்கவேண்டும் என்றார்கள் காரில் இருந்தவர்கள். கிலோ இருபது ரூபாய் என்று வாங்கினோம். இதையே பண்ருட்டியில் நாலில் ஒரு பங்கு விலைக்கு வாங்கலாம் என்றார் காரில் இருந்த ஒரு பெண்மணி. பெயர் விஜி என்கிற விஜயலட்சுமி.  எனக்கும் அது நினைவுக்கு வந்தது.  ஆனால் அது அந்தக் காலம். 

1976 இல் மே மாதம் 24ஆம் தேதிக்கு முன்னால் அவரை நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  என்னை அவரும். அந்தப் பலாப்பழத்தைக் கைகளில் நல்லெண்ணெய் வெள்ளம்போலத் தடவிக்கொண்டு, கூடுமானவரை சுளைகள் முழுதாக வரும்படி முயன்று வெளியெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அந்தச்சுளைகளைச் சுவைத்தபடி தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எல்லாச் சுளைகளும் எடுத்து முடித்தபிறகு, குப்பைகளை அழகாக ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்தார். வீட்டின் பிற குப்பைகளோடு சேர்த்துவைத்துவிட்டுக் கைகழுவப் போகிறார் என்று எண்ணினால்... நேரே என்னிடம் வந்தார்.

‘என்ன எழுதுகிறீர்கள்?’ என்றார். குரலில் கொஞ்சம் கோபம், கொஞ்சம்  எரிச்சல், அல்லது கோடை வெயில் தந்த புழுக்கத்தின் தவிப்பு இருந்ததைப்  புரிந்துகொண்டேன்.

‘ஒன்றுமில்லை. இரவுக்கு ஆயிரம் புண்கள் என்ற தலைப்பில் எழுத உட்கார்ந்தேன். சரி, அதை அடுத்த பதிவில் போட்டு விடலாம், சூட்டோடு சூடாக, கொடைக்கானல் போய்வந்ததைப் பற்றி எழுதிவிடலாமே என்று தோன்றியது. வலைப்பதிவின் பக்கம் வந்தே ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது. வாசகர்கள் கோபத்தோடு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?’ என்றேன் பணிவுடன்.

அந்தப் பணிவில் சற்றே மகிழ்ந்தவராக, ‘நல்லது. இனிமேலாவது ஒழுங்காக வாரம் ஒருமுறையாவது எழுதுங்கள். இல்லையென்றால் உங்களை நான் தான் எழுதவிடாமல் தடுக்கிறேன் என்று எனக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்’ என்றவர், ‘அத்துடன் மறக்காமல் உங்களோடு நாற்பத்திரண்டு வருடம் நான் குப்பை கொட்டி ஆயிற்று என்பதையும் எழுதி விடுங்கள். இல்லையென்றால் வாசகிகள் என்மீது கோபம் கொள்ளப்போகிறார்கள்’ என்று கூறிவிட்டுக் கை கழுவப் போனார் விஜி.
இன்று காலை, எங்கள் குடியிருப்பிலுள்ள பிள்ளையார் கோயிலில் வழிபட்டுவந்த பிறகு எடுத்த படம் (2018 மே 24)  
ஆம், இன்று (மே 24, 2018) எங்களின் 42ஆவது திருமண நாள்! அன்புள்ள விஜி, உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி! நம் குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நமது அன்பு ஆசிகள்!  

-இராய செல்லப்பா  சென்னை