சனி, டிசம்பர் 30, 2017

டிசம்பரை மறக்கலாமா?

பதிவு எண் 45/2017

டிசம்பரை மறக்கலாமா?

எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் கடைசி இரண்டு மூன்று நாட்கள் இருக்கின்றனவே, அவைதாம் மிக முக்கியமானவை. எங்கு பார்த்தாலும் டிசம்பர் ஆஃபர்கள் – கார் வாங்கினால் இன்ஷூரன்ஸ் இலவசம், ஃபேன் வாங்கினால் எல்இடி பல்ப் இலவசம், வீடு வாங்கினால், அடுத்த ஒருவருடத்திற்கு இஎம்ஐ இல்லை...என்பதுபோல.

கொஞ்ச நாட்களாக நான் வலைப்பதிவு எதுவும் எழுதவில்லை. வேறு வேலைகள் -அவையும் இலக்கிய வேலைகளே- எனது நேரத்தைத் திருடிக்கொண்டதே காரணம். என்மீது அன்பும் நட்பும் கொண்ட பதிவர்கள் இதனால் என்மீது கோபம் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அதனால், டிசம்பர் முடிவதற்குள் ஒரு பதிவை எழுதிவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

டிசம்பரின் இறுதி நாட்களில் டிசம்பரைப் பற்றி எழுதுவதுதானே பொருத்தமாக இருக்கும்! அதனால் கடந்த சில வருடங்களின் டிசம்பர் இறுதி நாட்களில் என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய, அல்லது மிகச் சிறிய, அல்லது மிகச் சிறந்த, அல்லது மிக மோசமான விஷயங்களைப் பற்றி எழுதிவிடப்போகிறேன். இதற்கு ஆதாரமாக என்னுடைய  கடந்த ..ஆண்டுகளின் டயரிகளைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.   

2014 டிசம்பர்

27-ஆம் தேதி: நீண்ட நாட்களாகப் புதிய சோஃபா செட் வாங்கவேண்டுமென்று எண்ணம் இருந்தது. ஆனால் எண்ணம் விருப்பமாக மாறவில்லை. இன்றோ அது நிறைவேற்றியாகவேண்டிய கட்டாயக் கடமையாக மாறிவிட்டது. ஆகவே வாங்கியே விட்டேன்.

அந்த ஒன்று மட்டும்தான் வாங்கவேண்டுமென்று போனாலும், கடையில் பார்க்கும்போது வேறுசில பொருட்களும் கண்ணை இழுக்க ஆரம்பித்ததால், கண்ணாடியாலான டைனிங் டேபிளும் அதற்கான ஆறு நாற்காலிகளும் வாங்கும்படி ஆயிற்று. கையில் தூக்க எளிதாக இருக்குமாறு எடை குறைவான நாற்காலிகளோடு அது ஒரே செட்டாக அமைந்ததால் விரும்பி வாங்கினோம்.

அருகிலேயே ஒரு அழகான டிவி ஸ்டாண்டு இருந்தது. நல்ல விலைதான். எனவே அதையும் வாங்கினோம். இந்த மூன்றையும் வாங்கியதற்காக ஒரு மர பீரோவும், ஸ்டடி-டேபிளும் இலவசமாகக் கொடுத்தார்கள்.

பணமில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வழக்கம் நம்மிடையே வந்துவிட்டதால், பொருட்களின் விலையைக் கடன் அட்டை மூலம் செலுத்தினேன். இன்னும் ஒருமாதத்திற்குக் கவலை இல்லை.  

ஆனால் பொருட்கள் ஒவ்வொன்றாகத்தான் வந்துசேர்ந்தன. அதிலும், டைனிங் டேபிள், அங்கம் அங்கமாகக் காகிதப் பெட்டியில் வந்தது. அதை விசேஷமான கோந்தினால் ஒட்டி இணைக்கவேண்டும்; அது இன்னும் கொரியாவிலிருந்து வரவில்லையாம். ஆகவே ஒருவாரம் பொறுக்கவேண்டுமாம். ஆனால் ஒருவாரம் அல்ல, ஒருமாதமே ஆகியது. அப்படியும், ஒட்டிய கோந்து சில மாதங்களில் விலகிவிட, கடையிலிருந்து சரியான பதில் கிடைக்காமல்போக, இல்லத்தரசியின் தினசரி வசைபாடல்களைப் பொறுக்கமுடியாமல் ஃபெவிபாண்ட் வாங்கிவந்து அவளிடம் கொடுக்க, எனது சிறிய உதவியோடு, அவளே அதை ஒட்டி மீண்டும் இணைத்தாள். என்றாலும் அது ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணி மாதிரியே எந்த நேரமும் கழன்றுவிடும் நிலையில்தான் இருக்கிறது. தொலையட்டும்.

28-ஆம் தேதி: இண்டேன் கேஸ் வந்தது. விலை ரூ.404.50 என்று பில்லில் இருந்தது. ஆனால் கேஸ் கொண்டுவரும் பையன், மாடி ஏறும்போதே அம்மா, நானூற்று ஐம்பது கொடுங்கள் என்று சற்றே அதிகாரத் தோரணையில் சொல்லிக்கொண்டே வந்ததால்,  ரூ. 450  கொடுத்துவிடுங்கள் என்று சமையல் அறையில் இருந்து உத்தரவு வந்தது. பர்ஸை எடுப்பதற்குள், பொங்கல் இனாம் ஐம்பது ரூபாய் சேர்த்து ஐந்நூறாகக் கொடுங்கள் என்று இன்னொரு உத்தரவு வந்தது. 

ஏனோ தெரியவில்லை, இல்லத்தரசிகளுக்கு  இந்த கேஸ் பையன்கள்மீது அபாரமான பிரியம். அந்தப் பையன்களும் அவளைப் பார்த்தே பேசுவார்கள். நாம் அருகில் இருப்பதையே தெரியாதமாதிரி நடந்துகொள்வார்கள். (உங்கள் வீட்டில் எப்படி?)  வேறு வழியின்றி: கேஸ் வந்தது. ரூ.500 மொத்த செலவு என்று டயரியில் எழுதியிருந்தது. மொத்த-ச்-செலவு என்று இடையில் ச் வந்திருக்கவேண்டும். டயரி எழுதும்போது ஒற்றுப்பிழைகளை நான் கவனிப்பதில்லை. (நீங்கள்?)

அன்றே காய்கறிகள் – ரூ.194.10’ என்றும் ஒரு பதிவும் இருக்கிறது அது முக்கியமில்லை, விடுங்கள்.

29-ஆம் தேதி: வீட்டுவரி வாங்குவதற்கு அதிகாரிகள் வந்து மெயிண்ட்டனன்ஸ் அலுவலகத்தில் காத்திருந்தார்கள். காசு வேண்டாம், காசோலைதான் வேண்டும் என்றார்கள். நான் காசோலை பயன்படுத்தி வெகுநாட்கள் ஆகிவிட்டன. நெட்பேங்கிங்தான் எல்லாமே. எப்படியோ தேடி எடுத்து ஒரு காசோலையைக் கொடுத்தேன். அது என் கணக்கில் வந்து பற்றுவைப்பதற்கு இரண்டு மாதங்கள் ஆயின. பஞ்சாயத்தில் ஆள் இல்லையாம்! 

அது சரி, இந்த வீட்டு வரி எதற்காக வாங்குகிறீர்கள் என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு அந்த அதிகாரியிடம் கேட்டேன். எனக்குத் தெரியாதுங்க. அம்மா சொல்லுவாங்க, நான் வந்து வாங்குவேன். அவ்வளவுதான் என்று அவரும் உண்மையிலேயே அப்பாவித்தனமான பதிலைச் சொன்னார். அம்மா என்று அவர் சொன்னது அந்த அம்மாவோ, சின்னம்மாவோ அல்ல. பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவரும் ஒரு அம்மாதான்!    

30-ஆம் தேதி:  திடீரென்று ஃபிரிட்ஜ் ரிப்பேர் ஆகிவிட்டது. ஏழு வருடங்கள் முன்பு மங்களூரில் வாங்கிய பொருள். அளவில் சிறிதாகையால் அதை மாற்றிவிட்டுப் பெரியது வாங்கவேண்டுமென்று வீட்டில் அவ்வப்போது முழக்கங்கள் எழும். இன்று ரிப்பேர் ஆகிவிட்டது. மெக்கானிக் வந்து பார்த்துவிட்டு, டிசம்பர் ஆஃபரில் பரிமாற்றம் செய்துகொள்வது நல்லது. அதை விட்டால் ஐந்நூறு ரூபாய் கூடப் போறாது என்று ஆலோசனை சொன்னார். அது போதாதா! புதிய ஃபிரிட்ஜ் வந்தே விட்டது. இன்றே டெலிவரி ஆகிவிட்டதில் அம்மையாருக்கு மிகவும் மகிழ்ச்சி.

இருங்கள், அந்தக் கடைக்கு எதிரிலேயே நல்ல ஓட்டல் இருந்தது. விடுவோமா? டிபன் @ சங்கீதா – ரூ.795 + 50 TIPS’ என்று டயரியில் இருந்தது.

31-ஆம் தேதி: எங்கள் குடியிருப்பில் இரவு பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டினார்கள். பெரிய கேக். சுமார் ஆயிரம் பேருக்குத் துண்டு போடவேண்டுமே!

ஜனவரி 01, 2015: வியாழக்கிழமை: இன்று வைகுண்ட ஏகாதசி: ஆகவே காலை நாலு மணிக்கே கிளம்பி மகாபலிபுரம் நிலமங்கை தாயார்- ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பைக் கண்டுகளித்தேன். அதற்கு நண்பர் ஆராவமுதனுக்கு நன்றி தெரிவித்தாகவேண்டும்.

2015 டிசம்பர்       

29- 31 வரை: மகனும் மருமகளும் சிலநாள் விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர். அப்போதுதானா சுடுநீர்க் கலம் (வாட்டர் ஹீட்டர் -அல்லது கீசர்) திடீரென்று தன் செயலை நிறுத்திக்கொள்ளவேண்டும்!  மெக்கானிக் வந்து கழற்றி எடுத்துக்கொண்டு போனார். இரண்டுநாள் ஆகும் என்றார். (அது வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று.) உடனடித் தீர்வாக, புதிய சுடுநீர்க்கலம் வாங்கினேன். வீட்டில் மூன்று குளியலறைகள் உண்டு. சுடுநீர்க்கலமோ ஒன்றே ஒன்றுதான். சரி, அது ரிப்பேர் ஆகிவந்தால் இன்னொரு குளியலறைக்கு ஆயிற்று என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

2016  டிசம்பர்

13-ஆம் தேதி: வார்தா புயல் சென்னையைக் கடந்தது. எங்கள் குடியிருப்பில் ஏராளமான பூமரங்கள் வேரோடு சரிந்தன.
பத்துக்கும் மேற்பட்ட  மரமல்லி மரங்கள் சரிந்தன 

17 -ஆம் தேதி: காலை   9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் நியூயார்க் நகருக்கு நானும் மனைவியும் பயணமானோம். சென்று சேரும் போது நல்ல குளிர். அடுத்த ஐந்தரை மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
நியூயார்க்கில் ஒரு மான்...

இந்த வருடம் 2017 டிசம்பர்

24-ஆம் தேதி: அமெரிக்கா சென்றிருந்த நண்பர் நாக.வேணுகோபாலன் சென்னை திரும்பிவிட்டார். இன்று வந்திருந்தார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சங்கடங்களைப் பகிர்ந்துகொண்டோம். இன்னொரு டில்லி நண்பரான உதயம் சீனிவாசன் சென்னை வந்திருக்கிறார். நாங்கள் மூவரும் ஒன்றாகச் சந்திக்கவேண்டும். சிலநாட்களில் நடக்கலாம்.

31-ஆம் தேதி: இன்று இரவு அறம் என்ற திரைப்படம் எங்கள் குடியிருப்பில் திரையிடப் போகிறார்கள் என்று தெரிகிறது. டென் மைனஸ் ஒன் தாரா நடித்த படமாம். ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த  ERIN BROCKOVICH மாதிரி இருக்கும் என்று கருதுகிறேன்.

நள்ளிரவில் கேக் வெட்டுவது நடைபெறும் என்றும் தெரிகிறது.

-இராய செல்லப்பா (சென்னையில் இருந்து)

32 கருத்துகள்:

  1. //எது வருகிறதோ இல்லையோ, //

    ஏன்? மற்ற மாதங்களும் வந்த பிறகுதானே டிசம்பர் வருகிறது?!!!!

    (வரவு) செலவுக் கணக்கு ரெகுலராக எழுதுவீர்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணம் ஆனா பிறகு தான் கணக்கு எழுதத் தொடங்கினேன். துரதிர்ஷ்டம் என்னவென்றால், எப்போது கணக்கு எழுதினாலும் மாதக் கடைசியில் துண்டு விழுந்துவிடுகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் நிலைமை பரவாயில்லை. இருந்தாலும் கணக்கு எழுதுவது தவறுவதில்லை.
      நன்றி நண்பரே!

      நீக்கு
    2. திருமணம் 'ஆன' ...என்று வரவேண்டும். 'ஆனா' என்று வந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும்.

      நீக்கு
  2. மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது... இன்னுமொரு மாற்றம் இப்போது!

    நான் கேட்க நினைத்த வரவு செலவு கணக்கு பற்றி ஸ்ரீராம் கேட்டு விட்டார்.

    வார்தா புயல் - கோரத் தாண்டவம் நினைவுக்கு வந்தது. மரங்கள், மனிதர்கள், விலங்குகள் என நிறையவே சேதம். இயற்கை மீண்டும் மீண்டும் தனது சக்தியை நிரூபிக்கிறது - நாம் தான் உணர மறுக்கிறோமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இயற்கையை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம், மாமியார-மாமனாரை மறந்துவிடுவது போல.

      நீக்கு
  3. திறந்து கிடந்த தங்களது டைரியை படித்தேன், இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, படித்ததோடு இருக்கட்டும். அந்த விவரங்களை எந்த நீதிமன்றத்திலும் எனக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கிறேன். மற்றபடி, தாங்கள் நலம்தானே!

      நீக்கு
  4. 1957ல் இருந்து தொடச்சியாக ஆறு ஏழு ஆண்டுகல டயரி எழுதி வந்தேன் பின் ஏனோ நின்று விட்டது பல விஷயங்கள் நினைவுக்கு வராவிட்டால் அப்போதைய டயரியைப்பார்ப்பேன் எனக்கு வருட முதலில் பொருட்கள் வாங்கும் பழகம் இல்லை ஆனால் என் பிறந்தநாள் மண நாள் அன்று தேவையான பொருட்கள் வாங்குவேன் நான்வீடு கட்டத் துவங்கியது கார் வாங்கினதுடிவி வாங்கினது எல்லாம் அந்த நாட்களில்தான் டயரி எழுதுவதும் சிறந்த பழக்கமே ஆனல் வரவு செலவு கணக்கு பார்க்க அல்ல என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவு செலவு கணக்கு என்பதே ஒரு வரலாறுதானே ஐயா! வரலாற்றை மறக்கலாமா?

      நீக்கு
  5. முன்னொரு காலத்தில் நானும் தான் டைரி எழுதினேன்!..
    எழுதி எழுதி என்னத்துக்கு ஆச்சு!?..

    வாழ்க நலம் யாவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைரியும் வெங்காயமும் ஒன்று. 'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது' (கண்ணதாசன்). ஆனால் பிரித்துப் பார்த்தால் டைரியில் எவ்வளவோ கதைகள் நினைவுக்கு வருமே! நலம் விசாரிப்புக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நீக்கு
  6. கடந்த கால நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொணர்தல் சற்று சிரமமே. இருந்தாலும் நீங்கள் நினைவாகப் பதிந்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றும் பாடமாக அமைந்துள்ளதை உணரமுடிகிறது. இந்த ஆண்டில் உங்களது பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடரும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வருடம் முழுவதும் அதிக பதிவுகள் இடாமல் ஆனால் மொத்த நிகழ்வுகளையும் ஒரே பதிவில் எழுதிவிட்டிர்கள் இப்படி ஞாபகம் வைச்சு செழுதுவதுமட்டுமல்ல அதை மிக சுருக்கமாக அழகாக எழுதி செல்லவும் திறமை வேண்டும் அது உங்களிடத்தில் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  8. சிறந்த தொகுப்பு - தாங்கள்
    எண்ணுவதெல்லாம் இனிதே இடம்பெறும்!

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனிய நண்பரே! புத்தாண்டில் எல்லா வளமும் உமக்கு எய்துவதாக!

      நீக்கு
  9. இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள் ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே! இப்புத்தாண்டில் பதவி உயர்வும் பண உயர்வும் பெற்று, தமிழின் உயர்வுக்கான பணியை மேலும் தீவிரப்படுத்த எனது வாழ்த்துக்கள்!

      நீக்கு
  10. "கொஞ்ச நாட்களாக நான் வலைப்பதிவு எதுவும் எழுதவில்லை" - நீங்கள் ஏதோ மிகப் பெரிய வேலையில் (வடமொழியிலிருந்து தமிழ்ப்படுத்துவது) ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேனே (குருவியார் சேதி). அதனால்தான் வலையுலகில் எழுத இவ்வளவு தாமதம் என்று தோன்றியது. உங்கள் முயற்சியைப் பற்றியும் எழுதலாமே.

    2015ல் - ‘டிபன் @ சங்கீதா – ரூ.795 + 50 TIPS’ - குளிர்சாதனப் பெட்டி மெக்கானிக்கும் இன்னும் ஒருவரும் சேர்ந்துகொண்டார்களா அல்லது எனக்க்த்தான் சமீபத்தைய விலை உயர்வுகள் தெரியவில்லையா?

    தினமும் நாட்குறிப்பு எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. அதேபோல் கணக்கும் எழுதுகிறீர்கள். நல்ல வழக்கம்.

    இன்று இரவு, குறைந்த நபர்கள் வருகையால், நிறைந்த அளவு கேக் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. எனது முயற்சியின் பலன் இன்னும் பதினைந்து நாட்களில் புத்தக வடிவில் வந்துவிடும் என்று பதிப்பாளர் உறுதி கூறியிருக்கிறார். அதற்காகக் காத்திருக்கிறேன்.

      அன்று எங்களுடன் மேலும் இருவர் உணவருந்தினார்கள் என்பதைச்
      சொல்லிவிடுகிறேன். சரியா?

      இன்று இரவு 'அறம்' படம் பார்த்தபின், கேக் கிடைக்கலாம். விவரம் தெரியப்படுத்தாமல போய்விடுவேன்?

      எங்கிருந்தாலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும். நன்றி.

      நீக்கு

      நீக்கு
  11. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  12. எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு 2018 வாழ்த்துகள். சுவாரஸ்யமான டிசம்பர் டைரி. (புத்தாண்டு பரபரப்பில், கடைக்காரர்கள் தள்ளி விடும் பொருட்களே அதிகம்.) தங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இந்த வருடத்தில் இன்னும் இடுகை போடவில்லையே. புத்தக வேலை முடிந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில நாளில் ஆரம்பித்துவிடுவேன். புத்தக வேலைகள் முடிந்தன. நன்றி!
      -இராய செல்லப்பா சென்னை

      நீக்கு
  14. "சிகரம் பேசுகிறது" புத்தகம் திரு ஜி.கண்ணன் மூலம் வந்திருக்கிறது. படிக்கவில்லை. படித்ததும் சொல்கிறேன். முன்னுரையில் உங்கள் பெயர் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. கண்ணன் என் உறவினர் தான். அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தது, தமிழகம் தந்த மாபெரும் நிர்வாகிக்கு எனது எளிய தொண்டாகவே கருதுகிறேன். படித்துவிட்டு தங்கள் தளத்திலோ அல்லது நூலின் நாயகருக்கோ எழுதினால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்பது உறுதி.
      -இராய செல்லப்பா சென்னை

      நீக்கு
  15. ''என்றாலும் அது ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணி மாதிரியே எந்த நேரமும் கழன்றுவிடும் நிலையில்தான் இருக்கிறது''. ... ஹஹா இடை இடையே இப்படியான சிரிப்பு வெடிகளை கொளுத்திப்போட்டு எங்களை சிரிக்க வைத்து விடுகிறீர்கள் ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு