ஞாயிறு, ஜனவரி 01, 2017

மாறுவதேயில்லை சில விஷயங்கள்


பதிவு எண் ௦1/2017


ஆண்டுகள் உருண்டோடினாலும் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. 

பருவப் பெண்ணின் நாணம், விடலைப் பையனின் விஷமம், கருவுற்ற பெண்ணின் முகச்சோர்வு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனின் பெருமிதம், மனதாலோ செயலாலோ நேர்மறையாக  நம்மைப் பாதித்தவர்களின் இழப்பினால் வரும் துயரம் ....போன்ற உணர்வுகள் காலம் காலமாக மாறியதேயில்லை. இனியும் மாறாது.

அதேபோல், அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்களானாலும் சரி, நேரடியாகவே நமக்கு நல்லது செய்திருந்தாலும் சரி,  அவர்களின் மரணம் ஒரு சில மணித்துளிகளுக்கு  மேல் நம்மைப் பாதிப்பதில்லை. இன்னும் நல்லது செய்யாமல் போனார்களே என்ற அதிருப்தியே மேலோங்கி நிற்கும். சற்றே மர்மமான சூழ்நிலையில் அண்மையில் மறைந்துபோன ஓர்  அரசியல் தலைவரின் மரணமும் அப்படியே; கூடு புதைந்தவுடன் கூடாரம் நகர்ந்து விட்டது.  கிரீடம் இடம் மாறிவிட்டது. மறைந்தவரின் புகழ் மறக்கப்பட்டுவிட்டது. சராசரி மனிதர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு சில நாட்கள் தவம் கிடந்தார்களேயன்றி,  அம்மரணம் மனதைத் தொடாமலே போய்விட்டது.

இயற்கையும் ஒரு காரணம்-  வாராது வந்த வார்தாப் புயல்.  சென்னையில் தொடர்ந்து ஏழுநாட்கள் மின்சாரமோ, அலைபேசி கோபுரங்களோ, போக்குவரத்தோ இயங்காமல் முடங்கிப்போன நிலையில், இறந்தவர்களுக்காக எவ்வளவு நாள் துக்கம் காப்பது? காந்திக்கும், நேருவுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், எம்ஜியாருக்கும் ஏற்பட்ட  பின்-மரணத்துவ நிலைதான் இது.

சில விஷயங்கள் மாறுவதேயில்லை.... 

வானவில்லின் வண்ணம் தான் சாயம் போகுமோ?” என்றார்,  நா. முத்துக்குமார். அவரது மரணமும் அப்படியே: பாரதிக்கும் பட்டுக்கோட்டைக்கும் பிறகு அகால மரணமடைந்த அற்புதக் கவிஞர் வரிசையில் நா முத்துக்குமாருக்கு (வயது 41) நிச்சயமான இடம் உண்டு. அவருடைய முதல் பாடலான “எனக்குப் பிடித்த பாடல்” என்ற பாடலின் ஆழத்தை அண்மையில்தான் நான் அனுபவிக்கமுடிந்தது. பாலு மகேந்திராவின் ‘ஜூலி கணபதி’ என்ற படத்திற்காக எழுதப்பட்டது. 



ஸ்ரேயா கோஷல் பாடியது.  பாடலைப் படத்தில் சரியான  முறையில் பயன்படுத்தத் தவறியதற்காகவே  பாலு மகேந்திராவை நாடுகடத்தி யிருக்கவேண்டும்.  வைரமுத்துவின் முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது’க்குக் கிடைத்த வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைக்காமல் போனதற்கு பாலுமகேந்திராவின் மோசமான காட்சியமைப்பே காரணமாக இருக்கவேண்டும்.

விடுங்கள்...2016 ஆம் ஆண்டு முடிந்து விட்டது;   2017 இதோ பிறந்துவிட்டது. அதனால் எல்லாம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  அதே சாலைகள், அதே பேருந்துகள், அதே மளிகைக்கடைகள், அதே பேப்பர் பையன், பால்பாக்கெட் போடும் அதே பெண்மணி, திடீர் திடீரென்று ஏதோ ஒரு கால்சென்ட்டரில் இருந்து வரும் அதே அழைப்பு,  அதே மேலதிகாரி, தேநீர் கொண்டுவரும் அதே பையன், அடிக்கடி இயங்காமல் போகும் அதே இணையத் தொடர்பு... அதே மனைவி (அல்லது கணவன்)...இவையெல்லாம் மாறவா போகின்றது?

இவையெல்லாம் நமக்குப் பழகிவிட்ட சங்கதிகள். மாறினால் தான் தொல்லை. கருவாட்டுக் கூடையருகில் அமர்ந்து பேருந்தில் பயணிப்பவனுக்கு, மல்லிகைப்பூக்காரி யருகில் அமர்ந்தால் வாந்தி வரும் என்பார்களே,  அது போன்ற நிலைமை. எனவே, வேறு வழியில்லை,

“வந்ததை வரவில் வைப்போம்,
சென்றதை  செலவில் வைப்போம்,
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய்க் கூடுவோம்”

என்ற கண்ணதாசனின் வரிகளோடு  இந்தப் புத்தாண்டை வரவேற்போம்! பிறகு வழக்கம்போல் நடக்கத் தொடங்குவோம்!

(பத்துநாள் முன்புதான் நியுஜெர்சி வந்தேன். ஓராண்டாக வலைத்தளத்தின் பக்கம்  வராமலே இருந்து விட்டேன். இனி அப்படி நேராது.  அடிக்கடி எழுதுவேன். இது தகவலா எச்சரிக்கையா என்று தெரியவில்லை..... என்ன செய்வது, வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதே யில்லையே! மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்துவிடுங்கள்.)
-      
-          - இராய செல்லப்பா (என்னும் செல்லப்பா யக்யஸ்வாமி)


இணைப்பு: 'எனக்குப் பிடித்த பாடல்' 
http://www.youtube.com/watch?v=bG7_FskQ1oM

23 கருத்துகள்:

  1. வருக அய்யா... மிகவும் மகிழ்ச்சி...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. எதார்த்தமான வரிகள். உலகம் அதன் போக்கில் எப்போதும் போல் போய்க் கொண்டுதான் இருக்கும். நீங்கள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் வலைப்பக்கம் உங்களுடைய பழைய பதிவுகள் உங்களை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான். என்னதான் புத்தாண்டு புத்தாண்டு என்று முழங்கினாலும் ஒரு ஒரத்தில் இதவும் இன்னொரு நாளே என்னும் நினைவு எழும்புவதை தவிர்க்க முடியவில்லை. எப்படி இருந்தாலும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Happy stay at New Jersey! Expecting more interesting blogs.

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. மிக்க நன்றி ஐயா! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சார்! யதார்த்தம் இதுதானே சார்! மாற்றம் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே மாறுவதில்லைதானே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவால் அகமகிழ்ந்தேன் நண்பரே! அனைவரும் நலமா? சிந்திப்போம். அதுவரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயராத எழுத்துப் போராளியே, தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வரவுக்கு நன்றி!

      நீக்கு
  7. ஒரு வருடம் கழித்து மீண்டும் வலைப்பக்கத்தில் ஒரு பதிவு.... வாழ்த்துகள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்கிறேன். கருத்துரை இடவில்லை, அவ்வளவே. தங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. தில்லி தமிழ்ச் சங்கத் தேர்தல்கள் நலமா?

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. நெடுநாளைக்குப் பின் உங்கள் பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுவோம், வாசிப்போம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. Yenakku ithu thagavalthan yennenil thangal ezhuthinmel Ulla nattam.ungal kudumthirkku yengalathu kudumbathin einiya puthandu vazhthukkal.

    பதிலளிநீக்கு