சனி, ஜூன் 24, 2017

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

பதிவு எண் 42/2017
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிர்காலம் உண்டா?

ஒருவழியாக NEET தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல் இருபத்தைந்து இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை என்று புலம்பல்கள் எழுந்துள்ளன. ஏன் முதல் நூறு இடங்களைப் பற்றி யாரும் எழுதவில்லை?

நீட் தேர்வு, CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெருமளவு வெற்றிபெற முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் இம்மாதிரி வாதங்கள் அனுதாபங்களைப் பெற்றுத்தருமே  அல்லாது  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதும் தெளிவே.

தமிழ்நாட்டில் எஞ்சினியரிங் படிப்பின் தரம்  ஆண்டுக்காண்டு தாழ்ந்துவருவதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். இதில் பல தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு ஈடுபடும் சதித்திட்டமே, ‘கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட்’ என்று போலியாக ஒன்றை நடத்திவிட்டு ஒரு சில மாணவர்களுக்கு ‘ஆஃபர் லெட்டர்’ என்று ஆறுபக்க அறிவிப்பை சில கம்பெனிகள் மூலமாக வழங்குவது. இப்படி  ‘ஆஃபர் லெட்டர்’ பெற்ற மாணவர்களில் வெறும் ஐந்துசதவிகித மாணவர்களே கடைசியில் வேலை பெறுகிறார்கள் என்று நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளோ இதையே மார்க்கெட்டிங் உத்தியாகப் பயன்படுத்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்து இறுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களில் சுமார் எழுபத்தைந்து சதம் பேருக்கு இன்றும் உரிய வேலை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.

இப்படி வேலை கிடைக்காதவர்களில் பாதிப்பேர்களாவது, வங்கிகளில் கடன்பெற்று கல்வி கற்றவர்களாக இருக்கலாம். இதெல்லாம் மல்லையா கடன் மாதிரி வாராக்கடன்களே. அல்லது, அந்தந்த மாணவர்களின் பெற்றோர்கள் முன்வந்து செலுத்தினால்தான் உண்டு.

தனியார் கல்லூரிகளில் பல, அரசியல்வாதிகளின் பொறுப்பில் இருப்பதால் அரசியல்ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் கல்விக்கடன் தரப்படும் நிலைமை உருவாகியுள்ளது. தன்னால் என்ஜினீயரிங் படிப்பு படிக்கமுடியுமா என்ற தெளிவோ, சுயபரிசோதனையோ இல்லாத மாணவன், மற்ற மாணவர்களைப் பார்த்து அதே மந்தையுணர்வில் தானும் என்ஜினீயரிங் வகுப்பில் சேர்ந்துவிடுகிறான். சேர்ந்த நாளில் இருந்தே தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகிறான். குறைந்த பட்ச ஆங்கிலமோ, குறைந்தபட்ச கணித அறிவோ இல்லாமல் அவனால் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?

எனவேதான், அவனை நம்பி லட்சங்களைச் செலவழிக்கும் பெற்றோர்களும், கல்விக்கடன் வழங்கும் வங்கிகளும் நிலைகுலைந்து நிற்கின்றன. இதற்கு யார் அடிப்படை காரணம்?

மூன்று பேர்தான் காரணம்.
1.   பெற்றோர்
2.   பெற்றோர்
3.   பெற்றோர்
ஆம், பெற்றோர் தான் காரணம்!

கீழே உள்ள இரண்டு செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம்; ஆனால் இன்னொருமுறையும் படிக்கலாம். தவறில்லை.
****
(தமிழ் இந்து - ஜூன் 20, 2017 நாளிதழில் வந்த செய்தி)
வெற்றி முகம்: சுதந்திரமாகப் படித்து ஐ.ஐ.டி.க்குள் நுழைந்தவர்!
-     ஜெ. கு. லிஸ்பன் குமார்

படிப்பில் சிறந்து விளங்கும் பிளஸ் டூ மாணவர்கள் பலரது கனவு, ஐ.ஐ.டி.யில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் பி.டெக். படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 11 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஆனால், இந்த இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் முட்டிமோதுகிறார்கள். ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே முன்னணி நிறுவனங்களிலும் பன்னாட்டு கம்பெனிகளிலும் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. அதனால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டி.

கனவை நிறைவேற்றும் வழி

தனியார் பயிற்சி மையங்களிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் நடப்புக் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் (ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த வாரம் வெளியானது. ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் 50,455 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் சென்னை மாணவர் அர்ஜுன் பரத் அகில இந்திய அளவில் 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

தமிழக அளவில் இவருக்குத்தான் முதலிடம். விஷயம் இதுவல்ல. அர்ஜுன் பரத், பள்ளி சென்று பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கவில்லை. இவர் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (National Institute of Open Schooling) வழியாகப் படித்தவர். வழக்கமாகப் பள்ளி சென்று படித்த மாணவர்களுடன் போட்டிபோட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அர்ஜுன்.

10-ம் வகுப்புவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்தேன். ஐ.ஐ.டி.யில் சேரும் கனவை நிறைவேற்ற வழி தேடினேன். அதன் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும். ஆகையால் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டம் பற்றித் தெரியவந்தது. அதன் பாடத்திட்டத்தில் 75 சதவீதம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். 2 ஆண்டுகளில் ஒரு புறம் பிளஸ் டூ முடித்துவிடலாம். இன்னொரு புறம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிவிடலாம் என்று திட்டமிட்டேன். எனது இந்தப் புதிய திட்டத்துக்குப் பெற்றோர் பெரிதும் ஊக்கம் அளித்ததோடு பக்கபலமாகவும் இருந்தனர் என்கிறார் அர்ஜுன்.

அதிக நேரம் கிடைத்தது

அவருடைய தந்தை என்.எஸ். பரத், மெர்ச்சன்ட்ஸ் நேவியில் கேப்டனாகப் பணிபுரிகிறார். தாயார் அமிர்தா, இல்லத்தரசி. வழக்கமான பள்ளியில் படிக்காமல் திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்தபோது, சக மாணவர்களோடு பழகும் வாய்ப்பு போன்ற சமூகத் தொடர்புகளை இழந்தாரா எனக் கேட்டபோது,
நிச்சயம் அது இழப்புதான். இருந்தாலும் நேரடி, செய்முறை உள்ளிட்ட வகுப்புக்குச் செல்லும்போது, என்னைப் போன்று வந்த மாணவர்களுடன் பேசிப் பழக முடிந்தது. தேசிய திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்ததன் காரணமாக எனக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயாராக அதிக நேரம் கிடைத்தது. பள்ளி சென்று படித்திருந்தால் இந்த அளவுக்குக் கூடுதல் நேரம் கிடைத்திருக்காது என்கிறார் அர்ஜுன்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகும்போதே நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அர்ஜுனுக்கு இருந்தது. ஆனால், அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்துத் தமிழக அளவில் முதல் மாணவராக வருவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. இனி சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார். 26-வது ரேங்க் பெற்றிருப்பதால் அவரது ஆசை எளிதாக நிறைவேறும்.

விருப்பப்படி படிக்கலாம்

அர்ஜுன் பரத்தைச் சாதனை மாணவர் ஆக்கிய தேசியத் திறந்தநிலைப் பள்ளி கல்வி நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி கூறுகையில்,
பொதுவாகவே திறந்தநிலைக் கல்வித் திட்டம் என்றாலே கல்வித் தரம் குறைவாக இருக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதேபோல பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள்தான் இதுபோன்று திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் சேருவார்கள் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். தேசியக் கல்வித் திட்டம் -2005 (National Curriculum Framework-2005) வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவான பாடத்திட்டம் இங்கே பின்பற்றப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையானது இது. தரமான கல்வியை விருப்பப்படி படிக்கும் முறைதான் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை. இதில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என்கிறார்.

சுதந்திரமான தேர்வு முறை

திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்திலும் தேர்வு எழுதும் வசதியும் (On Demand Exam-ODE) உண்டு. பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரண்டு பாடங்களையும் உள்ளடக்கியதுதான் இதில் பிளஸ் டூ பொதுத்தேர்வு.

சுயமாகப் பாடங்களைப் படிக்கக்கூடிய வகையிலான புத்தகங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதில் அனைத்துப் பாடங்களையும் ஒரே நேரத்தில் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாடமாகவோ இரண்டு பாடங்களாகவோகூட எழுதிக்கொள்ளலாம். தற்போது ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அர்ஜுன் 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் வந்தார். 10-ம் வகுப்புவரை பள்ளி மாணவராக இருந்த அவர், சுதந்திரமாகப் படிக்க விரும்புவதாகச் சொன்னார். தேசியத் திறந்தநிலைக் கல்வித் திட்டம் குறித்து அவரிடம் எடுத்துச்சொன்னோம். நம்பிக்கையோடு சேர்ந்து படித்தார் என்கிறார் ரவி.

தரமான பாடத்திட்டம், விருப்பமான பாடங்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு, விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக்கொள்ளும் வசதி இப்படிப் பல்வேறு வசதிகள் இருந்தும் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை குறித்துத் தமிழக மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரைதான் இதில் சேருகிறார்கள்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, அடுத்துப் பொறியியல் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்று கல்விச்சூழல் மாறிவரும் நிலையில், தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டமானது வருங்காலத்தில் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று உறுதிபடக் கூறுகிறார் ரவி.
*****
அடுத்த செய்தி நீட் தீர்வைப் பற்றியது. இதுவும் தமிழ் இந்துவில் வெளியானதே. (24 ஜூன் 2017).

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
-பாரதி ஆனந்த்

நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

படம்: தமிழ் இந்துவில் இருந்து

வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.

நீட் தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.

அதன் பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.
******
எனது கருத்து:

பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவர நாளாகலாம். அதுவரையில் மாணவர்களின் நலனுக்கு யார் பொறுப்பு? பெற்றோர்கள் மட்டுமே. சலுகைகளைக் கேட்டுப்பெறலாம. அது அரசியல்வாதிகள் செய்யும் வேலை. பெற்றோர்கள் செய்யவேண்டியது, ‘அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ அதற்கு எல்லாவிதமான போட்டித்தேர்வுகளுக்கும் தயாராக இருக்கும் நிலையில் நமது குழந்தைகளை நாம்தான் தயார்ப்படுத்தவேண்டும். நமது கடமையை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

அதே சமயம், நீட் தேர்வில் அல்லது IIT நுழைவுத்தேர்வில்  வெற்றிபெறாத குழந்தைகளை ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டவர்களைப் போல நாம் பார்க்கவேண்டியதில்லை. போட்டியிடும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் நூற்றுக்கு ஒருவரே இறுதியில் வெற்றிபெறக்கூடும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

இந்தவகையில், ஆந்திர மாணவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். IIT அல்லது MEDICAL தான் சேரவேண்டும் என்று மாணவன் விரும்பினால், அதற்காக, ப்ளஸ்-2 முடித்தபிறகு ஒரு வருடம் வேறு வேலைகள் செய்யாமல், வேறு படிப்புகளில் சேராமல், முழுக்க முழுக்க தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு அதன்பிறகே நுழைவுத்தேர்வை எதிர்க்கொள்கிறார்கள். அதற்குப் பெற்றோர்களும் முழு ஆதரவு அளிக்கிறார்கள். ஆகவேதான் எந்த அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இது நடப்பதில்லை. காரணம், இலவசங்களால் வளர்ந்த மாநிலம் இது. உழைப்பின்றி இலவசத்தின் மூலமாகவே எல்லாம் நடந்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கும் மாநிலம் இது. அப்படிப்பட்ட மனநிலையில் மக்களைத் தொடர்ந்து நிறுத்திவைத்தால் மட்டுமே தங்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று தமிழக அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். விளைவு, நமது மாணவர்களை வெற்றிக்கான உழைப்பைத் தொடர்ந்து வழங்கிடும் மனநிலையில் நாம் வைக்கவில்லை. அரசாங்க உத்தரவுகள் மூலம் எப்படியாவது விரும்பிய கல்லூரிகளில் இடம் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையைத்தான் நாம் உண்டாக்கிவிட்டோம். அதனால் நம் குழந்தைகளின் மன உளைச்சலுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் நாமே காரணமாகிவிட்டோம். 

ஸ்டேட் போர்டு-க்குப் பதில் CBSE கொண்டுவந்துவிடலாம். ஆனால் அதிலும் இலவசமும் சலுகைகளும் வேண்டும் என்று அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புவார்கள். அது நின்றால் மட்டுமே தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும். இல்லையென்றால், ஆந்திரா மாணவர்கள்தாம் எங்கும் முன்னணியில் இருப்பார்கள்!

இப்போதே தமிழ்நாட்டு வர்த்தக நிறுவனங்களில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் பிற மாநிலத்தவர்களே பணிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதை மாற்றுவதற்கான திறவுகோல் பெற்றோர்களாகிய நம்மிடமே உள்ளது. மாணவனின் இயல்புக்கு ஏற்புடைத்தான கல்விமுறையைத் தேர்ந்தெடுத்து, எப்படிப்பட்ட நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையையும் அறிவுக்கூர்மையையும் அவனுக்கு அமைத்துக்கொடுக்கும் பெரும்பணி நம்முடையது. அரசுடையது அல்ல. 

அதற்கு உதாரணமே இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஒரு மாணவனும் இரண்டு மாணவியரும். 

*****


புதன், மே 24, 2017

பட்டுப்பாய் கனவுகள்

பதிவு எண் 41/  2017
பட்டுப்பாய் கனவுகள்
-இராய செல்லப்பா

சீர்காழியிலிருந்து வரவழைப்பாராம் என் மாமனார். ஆனால் அது தயாராவதென்னவோ பத்தமடையில்தானாம். சீர்காழியில் அவர்களுடைய ஏஜென்ட்டு ஒருவர் மொத்தமாக ஆர்டர் பிடித்து அனுப்புவாராம். பத்தமடைக்காரர்கள் அதற்கேற்ப உடனடியாகத் தயார்செய்து ஒவ்வொன்றையும் ஈரம்போக உலரவைத்து பழுப்புநிறத்தாளில் சுற்றி லாரியில் அனுப்புவார்களாம். இவர் அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பஸ் மூலம் அனுப்புவாராம். அவரும் ஒரு பாய்தான்; ஆனால் bhai !  

‘பட்டுப்பாய்’ இல்லாமல் கல்யாணம் களைகட்டுமா?

சாதாரணமாகத் தயாராகும் கோரைப்பாய்களை விட இது மிகவும் நைசாக இருக்கும். ஓரங்களில் பட்டுத் துணியை  மடித்துத் தைத்திருப்பார்கள். தைக்கப் பயன்பட்ட நூலும் பட்டுநூலாகவே இருக்கும்.   மணமேடையில் மணமக்களை உட்காரவைக்கும் பாய் என்பதால் சிறப்பான கவனத்தோடு நெய்திருப்பார்கள். மணமகன், மணமகள் பெயர்களும், திருமணத்தேதியும் பெரிய எழுத்தில் நெய்திருப்பார்கள். மணமகன் பெயர் ஒரு வண்ணத்திலும், மணமகள் பெயர் இன்னொரு வண்ணத்திலும், திருமணத்தேதி இன்னொரு வண்ணத்திலும் இருப்பது வழக்கம். வேறு மாதிரியாகவும் இருக்கலாம். கொடுத்த ஆர்டர்படி செய்து கொடுப்பார்கள். எழுத்துக்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். தமிழ் எழுத்துக்களை நெய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் விலையும் கூடுதலாகும்.

வசதியான கட்டில் இருந்தாலும்,  முதல் இரவுக்குப் பட்டுப்பாய்தான் ஆகிவந்தது என்று தஞ்சாவூர்க்காரர்கள் நம்புவார்கள். ஆகவே என் மாமனார் மிகுந்த கவனத்தோடு ஆர்டர் கொடுப்பார். பாய் வந்து சேர்ந்தவுடன் அங்குலம் அங்குலமாகத் தடவிப் பார்த்து நெருடல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதிப்பாராம். (அவருக்குப் பத்துக்கு மேற்பட்ட சகோதரிகள்.)   ஒருமுறை மணமகனின் பெயரிலோ, அல்லது இனிஷியலிலோ  எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டதாம். அதற்காக டிரங்க்கால் புக் செய்து தயாரிப்பாளரை ஒரு பிடிபிடித்துவிட்டாராம். வாத்தியார் ஆயிற்றே! திருத்தப்பட்ட புதிய பாய் வந்துசேருவதற்குள் நிலைகொள்ளாமல் தவித்துப்போனாராம்.

எனது திருமணத்திற்கு வரவழைக்கப்பட்ட பட்டுப்பாயில் நல்லவேளையாக எந்தப் பிழையும் இல்லை. ‘சுத்தமாக வந்திருக்கிறது’ என்று என்னிடம் பெருமையாகச் சொன்னார் (திருமணத்திற்கு முன்பு). ஒரே தயாரிப்பாளரிடம்தான் இதுவரை பன்னிரண்டு திருமணங்களுக்குப் பாய் வாங்கினாராம். அவரிடம் வாங்கினால் ‘ஆகி’வரும் என்றார். அதற்குப் பொருள் என்னவென்று அப்போது தெரியவில்லை.

அந்தப் பாயை உண்மையிலேயே பட்டுப்புடைவையை விட கவனமாகக் கையாளுவார் என் மனைவி. சுருட்டிவைப்பதில் சற்றே அசிரத்தையாக இருந்தாலும் தொலைந்தேன். தனக்கே உரிய உவமைகளைச் சொல்லி வெருட்டுவார். ஆனால் என் முதல் மகள் பிறந்தவுடன் அவள் இந்தப்பாயைப் படுத்திய பாடு சொல்லிமாளாது. ஆனால் மகளைக் கோபிக்கும் வழக்கம் மனைவிகளுக்கு இல்லையே! மேலே போட்ட ரப்பர் ஷீட்டையும் மீறி ஈரமாகிவிடும் அந்தப் பாய். அதை நாசூக்காகக் கழுவி, நிழலில் உலர்த்தி எடுத்துவைக்கும் நளினம் அடடா..!

மூன்று குழந்தைகளை அந்தப் பட்டுப்பாய் பார்த்துவிட்டது. (இதுதான் ‘ஆகி’ வருதலோ?) ஆனால் அது அலுத்துக்கொண்டதே இல்லை. அதில் எப்போது படுத்தாலும் எனக்கு உடனே உறக்கம் வந்துவிடும். ஆரம்பத்தில் நல்ல நல்ல கனவுகளும் வருவதுண்டு. (பிற்பாடு நின்றுவிட்டது!)

எங்கள் சுக துக்கங்களில் தவறாமல் பங்கெடுத்துக்கொண்ட உற்ற துணை அது.

வேலைநிமித்தமாக நான் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்தபோதும் சென்னை வீட்டிலேயே அது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவ்வப்பொழுது அதை வெளியில் எடுத்துச் சற்றே வெயிலில் காட்டி மீண்டும் உள்ளேவைப்பது வழக்கமாகியது. 
  
  
இன்று அதற்கு வயதாகிவிட்டது. ஆனால் நைந்துபோகவில்லை. வண்ணம் மாறவில்லை. ஓரத்தில் தைக்கப்பட்ட பட்டுத்துணி மட்டும் நிறம் மாறியுள்ளது. கட்டில்களையே எல்லோரும் பயன்படுத்துவதால் இது சற்றே உயரமான பரணில் ஒதுங்கிவிட்டது. கடைசியாகப் பயன்படுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அதை எடுத்து வீச அவளுக்கு மனம் வரவில்லை. அதிலுள்ள எங்கள் இருவர் பெயரும் இன்னும் மெருகழியாமல் இருக்கிறதே!   ‘வயதாகிவிட்டால் என்னையும் எடுத்து வீசிவிடுவீர்களா?’ என்பாள். அந்த மாதிரி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதற்குக் காரணம் உண்டு.


நினைத்துப்பார்க்கிறேன். மல்லிகைப்பூ, ஊதுவத்தி மணத்தோடு தனக்கே உரிய மணத்தையும் பரப்பி, அந்த (முதல்) இரவுக்கு இனிமை ஊட்டிய  பட்டுப்பாய்க்கு இப்போது நாற்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன!  (மே 24 அன்று.) ‘எப்படித்தான் இவ்வளவு காலம் உங்களோடு குப்பை கொட்டினேனோ?’ என்று ஆச்சரியப்படுகிறாள் விஜி. பட்டுப்பாய் ஆச்சரியப்படுமா என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அது இன்னும் பணிசெய்யத் தயாராகவே இருக்கிறது.

சென்னைக்குப் போனவுடன் வெளியில் எடுத்துப் பார்க்கவேண்டும். முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தியும்!

© Y Chellappa


வியாழன், மே 18, 2017

நான் அவனில்லை!

பதிவு எண் 40/2017
நான் அவனில்லை!
இராய செல்லப்பா

(‘மனசு’ வலைத்தளத்திற்காக எழுதப்பட்டது)

மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வு பெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.
எழுத்தாளர்,  பேராசிரியர்
இந்திரா  பார்த்தசாரதி அவர்கள்

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பது போலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.
 
இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்:  இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா? என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன்.

தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
****
பல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. 

ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

"மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்... என்பதற்குள் அவர் இடைமறித்தார். இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டுமா? என்றார் அவர். 

அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும்,  ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!
*****
சென்னை அடையாறில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?'

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் - என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.
*****
வங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள்.

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...? இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்? 
*****
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா?

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.
கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

அமரர் அசோகமித்திரன் 
முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.
நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:
உங்கள் பெயர் என்ன?

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.
****
எந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது?

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை கே குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (www.pustaka.co.in) (மின்னூல் பதிப்பாளர்கள்).

1 ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3 சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4 காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6 அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை நாற்பது பதிவுகள் வெளியாகியுள்ளன.
*****
சரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன் 

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய படிப்புகளுக்குக் கொடுத்த நேரம்போக, இந்தப் படிப்புக்கு நேரம் மீதி இல்லாததால், முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். Python Language  - Harvard University ( edX course). இதைத்தொடர்ந்து 

(5) Big Data Analytics என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இதையே ‘மனசு’ தளத்திலும் படிக்கலாம். நன்றி குமார் அவர்களே!

*****
(c) Y Chellappa