திங்கள், மார்ச் 31, 2014

நரேந்திர மோடி எனக்குக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் (சிறப்பு ‘அபுசி-தொபசி’-38)

நரேந்திர மோடி கொடுத்த ஒரு கோடி ரூபாய்

நண்பர் ஜனார்த்தன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். ஒரே நேரத்தில் நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் பேசக்கூடியவர். ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். எனவே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதைப் பின்பற்றுபவர். அதே சமயம் எளிமையானவர். அனைவருக்கும் உதவவேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்.

நேற்று அவர், திடீரென்று, தனக்கு ஒரு கனவு வந்தது என்றார்.

கனவு எல்லோருக்கும்தான் வருகிறது, அதிலென்ன விசேஷம் என்றேன். ‘இது மாதிரிக் கனவு அடிக்கடி வரமுடியாது’ என்று சத்தியம் செய்தார். அது என்ன கனவு?
****
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், நடிகர்களும், பிறரும்  தங்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக நெடுநாட்களாகவே பேசப்பட்டு வருகிறதல்லவா? அது இப்போது முடிவுக்கு வருகிறது. நரேந்திர மோடி பிரதமராகிறார்.   முதல் காரியமாக சுவிட்சர்லாந்து போகிறார். இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தையெல்லாம் இப்போதே விடுவிக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமரைக் கட்டாயப்படுத்துகிறார்.  அவரோ, ‘ஒபாமாவை ஒருவார்த்தை கேட்டுவிடுகிறேனே’ என்று அசடு வழிந்தபின் வேறு வழியின்றி, நாட்டிலுள்ள வங்கித் தலைவர்களுக்கு உத்தரவிடுகிறார். ஒரே நாளில் மிகப்பெரிய தொகை இந்திய அரசின் வசம் வருகிறது. அதன் பிறகுதான் மோடி அங்கிருந்து டில்லி வருகிறார்.

நியுயார்க் சென்ட்ரல் பார்க்கில் நான்
இதற்கிடையில், அப்படிக்  கறுப்புப்பணம் போட்டு வைத்திருந்தவர்கள் எல்லாரும் அலறிப் புடைத்துக்கொண்டு அவரைக்காண வருகிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு பணம் போட்டுவைத்திருந்தோம் என்பதே மறந்துவிட்டது. என்ன பெயரில் போட்டோம் என்பதும் மறந்துவிட்டது. “நீங்களாகப் பார்த்து நாலில் ஒரு பங்கு கொடுத்தால் கூடப் போதும்” என்று கெஞ்சுகிறார்கள்.   சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தான் ஏழாயிரம் கோடி ரூபாய் போட்டு வைத்திருந்ததாகவும், மூன்று மனைவிகள் இருப்பதாகவும், அதனால் மூவாயிரம் கோடியாவது திருப்பிக் கொடுக்குமாறும் விண்ணப்பம் செய்துகொண்டார். செங்கல்பட்டு அருகில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர், தமது ஆயுட்கால முதலீடான ஐநூறு கோடியை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டார்.

நரேந்திர மோடிக்கு அதிர்ச்சி. எப்படிப்பட்டவர்களெல்லாம் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள்! உடனே ஓர் உத்தரவு போடுகிறார். ‘யார் யார் எவ்வளவு போட்டிருந்தார்கள் என்று கடிதம் கொடுக்கவேண்டும்; மூத்த அரசியல்வாதியான கலைஞரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கப்படும்’ என்கிறார். கலைஞரின் ஆலோசனையின்பேரில் ‘மன்னிப்புக் கேட்டால், மன்னித்துவிடலாம்’ 
என்றும், போட்டதில் பாதித்தொகை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் என்றும், மீதியுள்ள தொகை நாட்டு மக்களுக்குச் சரிசமமாகப் பிரித்துக்கொடுக்கப்படும் என்றும்   முடிவாகிறது. இந்த உயரிய ஆலோசனைக்காகக் கலைஞர் டிவி வளர்ச்சி நிதிக்கு 437 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 342 ரூபாய் 40 பைசா வழங்கும்படி மத்திய தணிக்கைக் குழு- சிஏஜி- உத்தரவிடுகிறது.
 
அர்னாப் கோஸ்வாமி
மன்னிப்புக்கடிதம் கொடுப்பவர்கள், தென்னாட்டவராயிருந்தால் டில்லியிலும், வடநாட்டவராயிருந்தால் சென்னையிலும் வந்து கொடுக்கவேண்டும் என்றும், அப்படி வருவதற்குத் தன் பேரன் மாறனின் ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் ‘அன்புச் சகோதரர்’ மோடிக்குக் கலைஞர் வேண்டுகோள் விடுக்கிறார்.  

‘மக்கள் இந்திய வங்கிகள் மூலமாகவா சுவிஸ் வங்கிகளுக்குப் பணம் அனுப்பினார்கள்? இல்லையே! ஆகவே, சுவிஸ் வங்கிகள், கொடுத்த பணத்தை, இந்திய வங்கிகள்மூலம் வரவு வைக்காமல், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றி புதிய கோணிப்பைகளில் கட்டி, கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்று தேர்தலில் போட்டியிடாத முன்னாள் நிதியமைச்சர் கூறியதை ஆதரித்து அர்னாப் கோஸ்வாமி ‘டைம்ஸ் நவ்’ டிவியில் விவாதம் நடத்தப்போவதாக அறிவித்தார். ‘கோணிப்பையால் பணத்திற்கு மதிப்பா, பணத்தால் கோணிப்பைக்கு மதிப்பா?’ என்ற தலைப்பில் பாலமன் சாப்பையா தலைமையில் நைஜீரியாவில் பட்டிமன்றம் நடத்த ‘மேரேஜ் கார்லண்டு’ குழுவினர் யோசிப்பதாகத் தகவல்.

ஏராளமான கோணிப்பைகள் வரவழைக்கப்பட்டு, பாதித்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. அதை மேற்பார்வையிட, லாலு பிரசாத் யாதவ், ஏ. ராசா, மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டில் உயர்பதவியில் இருந்த ஒருவர் ஆகியவர்களைக் கொண்ட ‘நேர்மையாளர் குழு’ வை உச்சநீதி மன்றம் நியமித்தது.

மீதமுள்ள தொகையைக் கணக்கிடுவது கடினமான பணியாக இருக்கவே, சந்திரபாபு நாயுடுவின்  அறிவுரையின்பேரில், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் காணிக்கைகளைக் கணக்கிடும் பணியிலுள்ள ஆயிரம் பணியாளர்களை வரவழைத்தனர். அவர்களின் இடைவிடாத முயற்சியால்,  எவ்வளவு தொகை மீதமுள்ளது என்று தெரியவந்தவுடன், உலகவங்கியின் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு  ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இவ்வளவு பெரிய தொகையை எப்படி மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது என்று.
 
அரவிந்த் கேஜ்ரிவால்
எடுக்கப்படும் முடிவு நேர்மையாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டார். இல்லையெனில் கல்கத்தாவில் ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் மாயாவதியுடன்  உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அந்தக் கூட்டத்திற்குக் குறைந்தது பத்தாயிரம் பேராவது கூடுவதற்கு அரவிந்த கேஜ்ரிவால் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூட்டச் செலவை மேற்கு வங்க அரசே  ஏற்கவேண்டும் என்றும் அவர் விதித்த நிபந்தனைகளை மம்தா பேனர்ஜி ஏற்க மறுத்துவிட்டார். தாம் ராமேஸ்வரம் யாத்திரை போவதால் இந்த விஷயத்தில் ஏதும் செய்வதற்கில்லை என்று கேஜ்ரிவால் கைவிரித்துவிட்டார். மீண்டும் முதலமைச்சரானால் அப்போது இந்தப் பிரச்சினைக்காக துணை ஜனாதிபதி வீட்டுமுன் தர்ணா செய்வதாக வாக்களித்தார். ஆனால் யாரும் முட்டை வீசக்கூடாது என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
 
சோனியாவுடன் நந்தன் நீலகேணி
கடைசியில் இப்படித் தீர்மானம் ஆயிற்று:

  1. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
  2. ஆதார் கார்டு  உள்ளவர்களுக்கு நந்தன் நீலகேணி  மூலம் தரப்படும். அதற்கு  0.0025% சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்.  (ஆனால் சேவை வரி கிடையாது.)
  3. மற்றவர்களுக்கு  ரேஷன் கடைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும். (அதற்கு சேவை வரி உண்டு.) இதற்காகப் புதிதாக ஒரு லட்சம் ரேஷன் கடைகள் திறக்கப்படும். ரேஷன் ஊழியர்கள் ஏதேனும் ‘அன்புத்தொகை’ எதிர்பார்த்தால் மறுக்கக்கூடாது.
 இந்த அறிவிப்பு வெளியானவுடனே, உலகிலுள்ள பொருளாதார நிபுணர்கள் எல்லாரும் இந்தியா வந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கவேண்டுமென்று சிபாரிசு செய்தனர். ‘பரிசுக்கு மயங்குபவரா மோடி? மக்கள் நலமன்றோ அவர் நாடி!‘ என்று கலைஞர், மயிலாப்பூர் மாங்கொல்லைப் பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.  பிறகு இதையே ஒரியா மொழியிலும் அவரே மொழிபெயர்த்துப் பேசினார்.

‘இந்தியாவிலேயே மிகப்பெரிய குடும்பம் என்னுடையது. பிரம்மச்சாரியான அப்துல் கலாமுக்கும் ஒரு கோடி, எனக்கும் ஒரு கோடி தானா?’ என்று முறையிட்டார் லல்லு பிரசாத் யாதவ்.

****
நண்பர் ஜனார்த்தன் சொன்ன இந்தக் கனவை எண்ணியபடியே நான் தூங்கியதில் அதன் தொடர்ச்சியாக ஒரு கனவு எனக்கு வந்தது.

என் வங்கிக் கணக்கில் ஒருகோடி ரூபாய் வரவு வந்ததை ‘நெட்-பாங்கிங்’ மூலம் அறிந்துகொள்கிறேன். அதை எப்படிச் செலவு செய்வது என்று யோசிக்கிறேன். சரி, இன்னொரு வீடு வாங்கிவிடலாம் என்று முடிவு செய்வதற்குள், நரேந்திர மோடி அரசு இன்னொரு புதிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

‘நாட்டில் இனி யாரும் புதிதாக வீடுகள் வாங்கக்கூடாது. ஏனெனில், DLF மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனி பங்களா இலவசமாக வழங்கப்படும்’ என்பதே அந்த அறிவிப்பு. இந்தத் திட்டத்தை பிரியங்க்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

சிறிது காலமாக வேலையில்லாமல் இருந்த தன் மருமகனுக்கு மோடி அரசு அளித்த பதவியால் மனம் மகிழ்ந்துபோன சோனியா காந்தி, மோடியால் வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் தன் சொந்த செலவில் இத்தாலியிலிருந்து ஏழு டன் சலவைக்கற்கள் இலவசமாக இறக்குமதி செய்து தரப்படும் என்று அறிவிக்கிறார்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும் தமிழக முதல்வர், தாம் வீதிதோறும் துவக்கவிருக்கும் ‘புரட்சிக் கழிப்பறை’களுக்கும் இத்தாலியிலிருந்து பளிங்குக்கற்கள் அனுப்பித்தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார். “செய்வீர்களா, செய்வீர்களா?” என்று அலைபேசியில் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே ‘ராங் நம்பர்’ என்று வெட்டிவிடுகிறார் சோனியா. மின்சாரமும் போய்விடுகிறது....
****
என்னடா இது ஏ-சி ஓடிக்கொண்டிருந்தது எப்போது நின்றது என்று திடுக்கிட்டு விழிக்கிறேன். ‘ஃபேனையாவது போடக்கூடாதா’ என்று கோபிக்கிறேன். யாருக்காவது நான் பேசுவது கேட்டால்தானே!

“ஒங்கப்பா இப்பல்லாம் எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்கிறார். அப்படி என்னதான் சொப்பனம் காண்பாரோ” என்று மகளிடம் கூகுள் சாட் செய்துகொண்டிருந்தார் என் நல்-பாதி.(BETTER-HALF.)
****
(‘அபுசிதொபசி’ தன் வழக்கமான பாணியில் வியாழக்கிழமை வெளியாகும்.)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

திங்கள், மார்ச் 24, 2014

விஜயகாந்த்தின் மனமாற்றமும் நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனையும் ( ‘அபுசி-தொபசி’-37)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  

1962 பொதுத் தேர்தலின்போது நான் பள்ளி மாணவன். தேன்கனிக்கோட்டையில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் வீதியெங்கும் வரிசையாக ஏராளமான மாட்டுவண்டிகள். ஒவ்வொன்றிலும் சுமார் ஆறரை அடி உயரமுள்ள காளைமாடுகள். முன்னூறு வண்டிகள் என்று ஞாபகம். வண்டிகளின் அணிவகுப்புக்குப் பின்னால்,  “உங்கள் ஓட்டு காங்கிரசுக்கே” என்று உற்சாக முழக்கமிட்டபடி ஏராளமான சைக்கிள்களில் இளைஞர்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று 
கேட்டேன். 
இவை புதிய காளைகள்
“பொதுத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டு சேகரிப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார்” என்றார், தாத்தா. “காங்கிரசின் தேர்தல் சின்னம், இரட்டைக் காளை என்பதால், காளைகள் பூட்டிய மாட்டுவண்டிகளில் வந்துபோகிறார்கள்” என்றார். அப்போது அந்தத் தொகுதியில் (ஓசூர்) போட்டியிட்டு வென்றவர், அமரர் ராஜாஜியின் குமாரர், நரசிம்மன் அவர்கள்.
 எம்.ஜி.ஆர்., மதியழகன், அண்ணாதுரை, ராஜாஜி, கருணாநிதி
(1967 புகைப்படம்)
இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் காங்கிரஸ் பேரியக்கம் இரண்டாகத் துண்டாடப்பட்டவுடன், அந்த இரண்டு காளைகளை யாருக்குத் தருவது என்று சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஏறின காளைகள். “A TALE OF TWO BULLOCKS” என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அந்த வழக்கை வருணித்தன. இறுதியில் இரட்டைக் காளைகளும் நிஜலிங்கப்பா/காமராசர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சிக்கே சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளேயே, ‘தன் கையே தனக்குதவி’ என்று நம்பிய இந்திரா காந்தி அம்மையார், தன் ‘கை’யையே தன் கட்சியின் சின்னமாக அறிவித்தார். ஸ்தாபன காங்கிரசும் தன் கட்சிக்கு ‘ராட்டை’ சின்னத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அத்துடன் இரண்டு காளைகளும் மறக்கப்பட்டுவிட்டன. 

எதற்குச் சொல்கிறேன் என்றால், ஓட்டு கேட்கவரும்போது மிகப்பெரும் படையுடன் வந்து மக்களைச் சந்திப்பது அப்போதெல்லாம் வழக்கமாக இருந்தது. பின்னாளில் சினிமாக் கவர்ச்சியோடு தேர்தலைச் சந்தித்த தி.மு.க.வோ, இன்னும் ஒருபடி மேலேபோய், வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போதே அத்தகைய  ரத, கஜ, துரக, பதாதிகளுடன், அட்டகாசம் செய்தபடி, போக்குவரத்தை நிறுத்தச் செய்யும் அளவுக்குச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டும் பட்டாசு வெடித்துக்கொண்டும் போகும் புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்துவைத்தது. தேர்தல் என்றாலே, அந்த ஒன்றிரண்டு மாதங்களில் வாடகைக் கார்களோ, ஆட்டோக்களோ, ஏன், வாடகை சைக்கிள்களோ கூட பொதுமக்களுக்குக் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.
அரசியல்வாதிகளை நடுநடுங்கவைத்த ட்டி.என்.சேஷன்
நல்ல வேளையாக, ட்டி.என்.சேஷன் என்ற தேர்தல் கமிஷனர் வந்தாலும் வந்தார், இந்த மாதிரி ‘புது கலாச்சாரம்’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனானப்பட்ட லல்லு பிரசாத் யாதவின் தொகுதியிலேயே அவர் தன் கண்டிப்பைக் காட்டி நேர்மையான தேர்தல் நடைபெற வைத்தார். பிறகு வந்த தேர்தல் கமிஷனர்களும் இன்றுவரை அவர் கிழித்த கோட்டைத் தாண்டவில்லை. அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இன்று சாலைகளில் எந்தத் தொந்தரவுமின்றி  நடமாட முடிகிறது.

நடிகை நந்திதாவுக்கு வந்த சோதனை:

உத்தரப் பிரதேசம், மீரட் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், நடிகை நந்திதா. தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு கலெக்டர் அலுவலகத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுதான் அவருக்கு அந்தச் சோதனை ஏற்பட்டது.

என்னதான் காங்கிரஸ், தோற்கப்போகும் கட்சி என்றாலும், நடிகை என்றால்  கூட்டம் வராமல் இருக்குமா?  நந்திதாவுடன் ஏராளமான ஆதரவாளர்கள் இருந்தனர். எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். உ.பி.யில் ஆள்வது காங்கிரசுக்கு எதிரான சமாஜ்வாடி கட்சி அல்லவா? வெறும் ஐந்து பேருக்குத்தான் அனுமதி என்று மற்றவர்களை வெளியே தள்ளிவிட்டார்கள் கலெக்டர் அலுவலகத்தினர். உள்ளே போன நந்திதாவுக்கு அதிர்ச்சி! அவருடைய வேட்பு மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் யாரிடம் கொடுத்திருந்தாரோ அந்த ஆதரவாளர் உள்ளே வர முடியாமல் வெளியிலேயே நின்றுவிட்டார்! பிறகென்ன, ‘இன்றுபோய் நாளை வா’ கதைதான்!

“போலீசார் வேண்டுமென்றே என்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து, கட்சி மேலிடத் தலைவர்களிடம் புகார் அளிப்பேன். மீண்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வேன்” என்றார் பதற்றத்தில் இருந்து மீளாத நந்திதா.


'காதலன்'
நந்திதாவின் முழுப்பெயர்: நந்திதா மொரார்ஜி. (ஆனால் இவருக்கும் அமரர் மொரார்ஜி தேசாய்க்கும் தொடர்பு கிடையாது.) நந்திதா, ரஜினியுடன் ‘பாட்சா’ படத்திலும், பிரபுதேவாவுடன் ‘காதலன்’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். அப்படங்களில் அவருடைய பெயரை ‘நக்மா’ என்று மாற்றிவிட்டிருந்தார்கள்! 

இதை நீங்கள் படித்து முடிப்பதற்குள் நக்மா தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டிருக்கலாம். ஊழல் எதுவும் செய்யாதவர், தமிழ்ப் படங்களில் நடித்துத் தமிழர்களுக்குக் களிப்பூட்டியவர் என்ற   காரணங்களுக்காகவே இவரை வெற்றி பெற வாழ்த்தலாமே!  

விஜயகாந்த்தின் மனமாற்றம்:
பா.ஜ.க.வை விட்டால் புகலிடம் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜயகாந்த் – என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ‘கூட்டத்தினரை அச்சுறுத்தும் சொற்களைப் பயன்படுத்தாமல், அவரின் சொற்பொழிவு அமைவதில்லை; வேட்பாளரின் பெயரையே சிலநேரம் மறந்துவிடுகிறார்; தற்பெருமை பேசுகிறார்’ என்று வேண்டாதவர்கள் அவரைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால், இப்போது அவரிடம் வரவேற்கத்தக்க மாற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை.  

தன்னையோ தன் பெருமைகளையோ முன்னிலைப்படுத்தாமல், “மோடி தான் பிரதமர். அவரால்தான் ஈழப் பிர்ச்சினை, மீனவர் பிரச்சினை  முதலியவற்றைத் தீர்க்க முடியும்” என்று விஜயகாந்த் மேடைகளில் பேச ஆரம்பித்திருக்கிறார். 2016இல் தமிழக முதல்வர் நான்தான் என்று அவர் இப்போது சொல்வதில்லை. (ராமதாசும் கூட!). தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் இது நல்ல விளைவை ஏற்படுத்தப்போகும் மனமாற்றமே.

புத்தகம்

காளிதாசர், எனக்கு மிகவும் பிடித்த ‘பண்பட்டமொழி’ (சமஸ்க்ருதம்) கவிஞர். அவரது சாகுந்தலம், மாளவிகா-அக்னிமித்ரம், குமார சம்பவம் காவியங்களைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கிறேன். (அக்காலத்து ‘அல்லயன்ஸ்’ வெளியீடு. இப்போதும் அந்தப் பதிப்பகம் இருக்கிறது-சென்னை மயிலாப்பூர் குளத்தின் எதிரே. ஆனால் அந்த நூல்கள் கிடைப்பதில்லை.) பின்னாளில் ரகுவம்சம் படித்தேன். ஆனால், அளவில் சிறியதான ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இப்போதுதான் படிக்க நேரம் வந்தது. ‘ருது சம்ஹாரம்’ என்பதன் மொழிபெயர்ப்பு, ‘பருவ காவியம்’ என்பதாகும். (பருவ காவியம் என்றவுடன் ஜொள்ளு வழிவதைத் தவிர்க்கவும்.) இது, வசந்தகாலம், கோடைகாலம், மழைக்காலம், பனிக்காலம் போன்ற ஆறு பருவகாலங்களை வருணிக்கும் காவியமாகும்.  ஆனால் காளிதாசன் தன் கட்டிளம் பருவத்தில் எழுதிய காவியம் என்பதால், இளமைக்கே உரிய ‘பருவ’ எழுத்துக்கள் அதிகம் இடம்பெற்ற நூல் இது.

மொத்தம் நூற்று நாற்பத்து நான்கு செய்யுட்கள் உள்ளன. இவை ஆறு பருவங்களின் பெயரால் அமைந்த ஆறு அதிகாரங்களில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு அதிகார முடிவிலும், “நண்பனே, உனக்கு இந்தப் பருவகாலம் நனமையைச் செய்வதாக!” என்று முடியும் இறுதிச் செய்யுளை அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளைவிட இயற்கை எழிலையே முதன்மையாக வருணிக்கும் சிறிய காவியம் இது. என்றாலும், காளிதாசன் என்றால் ‘காதல் கவிஞன்’ என்றுதானே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்! எனவே இன்றைய பதிவில் ருது சம்ஹாரத்தின் சில காதல் பதிவுகளை மட்டும்  பார்ப்போமா? (எச்சரிக்கை: எனது மொழிபெயர்ப்பு அவ்வளவு துல்லியமானதல்ல; ஆனால் எடுத்துக்கொண்ட செய்திக்கு இது போதும் என்று கருதுகிறேன்.)

கோடைப் பருவம்:
(1)    என் அன்பே! இதோ, கோடைப்பருவம் வந்துவிட்டது! கதிரவன் மிகவும் கடுமையாக இருக்கிறான். (எனவே) குளிர்ந்த நிலவை மக்கள் விரும்புகின்றனர். முப்பொழுதும், குளிர்ந்த நீர்நிலைகளில் மூழ்கிக் குளிப்பதை நாடுகின்றனர். பகல் முடிந்து இரவு மலரும் தருணமே மக்களுக்கு மகிழ்ச்சி தருவது. (கோடையின் தாக்கத்தால்) காதல் உணர்ச்சி சற்றே தணிந்துள்ள பருவம் இது.

(3)    நறுமணம் ஊட்டப்பெற்ற (வீட்டின்) மேல்தளங்களையும் (மொட்டை மாடிகளையும்), கிண்ணங்களில் ஊற்றப்பட்டு, காதலியருடன் சேர்ந்து பருகும்போது அவர்தம் மூச்சுக்காற்றால் அசையும் இனிய மதுவையும், யாழிலிருந்து ஒலிக்கும் இன்னிசையையும் (தம் காதல் உணர்வைத் தூண்டிடவேண்டி) மக்கள் நாடும் பருவம் இது.

'மகாகவி  காளிதாஸ்' - சிவாஜி கணேசன்

(4)    பட்டாடை மீது மேகலை அணிந்த இடையினராய், முத்துமாலை அணிந்து, சந்தானம் மணக்கும் மார்பகத்தினராய், (நறுமணப் பொடிகள் பூசிக்) குளித்தலால் நறுமணம் பூண்ட கூந்தலினராய் விளங்கும் பெண்களின் பேரெழில் ஒன்றே, காதலர்களின் கோடை வெம்மையைத் தணிக்கவல்லதாகிறது.
(5)    இப்பருவத்தில், தம் மென்பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பை அதிகமாகப் பூசிச் சிவக்க வைக்கின்றனர் பெண்டிர். கால்களில் சிலம்பொலிக்க அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் அன்னம் நடக்கும் ஓசையை ஒத்திருக்கிறது.

(6)    இத்தகைய இடையழகும் மார்பழகும் எவனுடைய மனத்தைத்தான் ஆசையுறச் செய்யாது?    
(7)    பருவப் பெண்கள், தடிப்பான ஆடைகளை நீக்கி மெல்லாடைகளை உடுத்துகின்றனர்.

(8)    (அவர்கள் பயன்படுத்தும்) சந்தன நீர் தெளித்த விசிறிகளிலிருந்து  எழும் இளங்காற்றும், முத்துமாலை அணிந்த அவர்தம் மார்புகளும், அவர்கள் வாசிக்கும் யாழின் இசையும், ஆண்களின் மனத்தில், உறங்குபவன் போல் அசைவற்றிருக்கும் காமனை எழுப்புகின்றன.

(9)    இரவு முழுவதும் (நிலவொளியால்) வெண்ணிறமான மாளிகையின்  மேல்தளத்தில், திறந்த வெளியில், சுகமாக உறங்குகின்ற (அப்பெண்களின்) முகங்களை, அவர்கள் அறியாதவாறு, ஏக்கத்துடன் (ஆர்வத்துடன்) வெகுநேரம் பார்த்துப் பார்த்து வெட்கமுற்றவன்போல் சந்திரனானவன், விடியற்காலையில் வெளிறிப்போய்க் காண்கிறான்.

(10) கோடை வெப்பத்தினால் தரை கடும் சூடாகிறது. புழுதி மண்டலம் காற்றில் எழுகிறது, காதலியரைப் பிரிந்து (அதனால் வெம்மையடைந்தவர்களாய்)      வேற்றூரில் வசிக்கும் காதலர்கள், இத்தரையைக் கண்கொண்டு காணவும் முடியாதவர்களாகிறார்கள்.

(12) நிலவு ததும்பும் முன்னிரவு, கேளிக்கைகளில் இயல்பாகவே நாட்டம் கொண்ட ஆண்கள் மனத்தில் காம உணர்வைத் தூண்டுவதுபோல், காமம் விரும்பிய பெண்டிர், தம் மனம்  கவர் செயல்களாலும், கடைக்கண் புன்னகையாலும் காமத்தைத் தூண்டுகின்றனர்.

இதன் பிறகு, இயற்கை வருணனைகள் வருகின்றன. (அதைப் பிறகு பார்க்கலாம்.) இனி, இந்த அதிகாரத்தின் கடைசிப் பாடல்:

(28) கடும் கோடையிலும் காடுபோல் தாமரை பூத்துள்ள  குளங்களில் நீர்  இருக்கும். பாதிரிப்பூக்கள் மணம்பரப்பிக் கோடையை இனிப்பாக்கும். நீரில் அமிழ்ந்த குளியல், சுகம் தரும். நிலவும், முத்துமாலைகளும், இதம் தரும். உள்ளம்கவர் பெண்டிர் உடனிருந்தால், கோடை முழுதும் மகிழ்ச்சி தரும். இன்னிசை மிதக்கும் மாளிகையின் மேல்தளத்தில் உறங்கும் (பேறு பெற்ற)  நண்பனே, உனக்கு இக்கோடைப் பருவம் இனிமையே செய்வதாகட்டும்!

LIFCO பதிப்பகத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கும். என்னிடம் இருக்கும் 1987ஆம் வருடப் பதிப்பின் விலை நான்கு ரூபாய். மொழிபெயர்த்தவர்: திரு. வேங்கடராகவாச்சாரியார் அவர்கள். சென்னை விவேகானந்தாக் கல்லூரியின் முன்னாள் பண்பட்டமொழி (சம்ஸ்க்ருத) பேராசிரியர்.

சினிமா

எழுத்தாளர் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் கன்னி முயற்சியான குக்கூ திரைப்படம் வெளியாகியுள்ளது. எல்லா விமர்சனங்களும் ஒரே கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ராஜு முருகன் மீது இருந்த ஆற்றாமையை வட்டியும் முதலுமாக அறுவடை செய்துவிட்டர்களோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இணையங்களில் வரும் பெரும்பாலான விமர்சனங்கள், குழு மனப்பான்மையுள்ளவர்களால் எழுதப்படுவது தெரிந்ததே. எனவே ‘ஹிந்து’ விமர்சனத்தைக் கவனிக்கலாம். (தமிழ் இந்து அல்ல, ஆங்கில ஹிந்து.) விமர்சனத்தின் சுருக்கம் இதுதான்:

“ஒருதலைக் காதல்,  முக்கோணக் காதல் என்று சிக்கல்கள் நிறைந்த கதைபோல ஆரம்பிக்கிறது இப்படம். காதலை எதிர்க்கும் அண்ணன், புகலிடம் கொடுக்கும் நண்பர்கள் என்று தொடர்கிறது. ஆனால் இதில் எந்த ஒன்றும் திரைக்குப் புதிதல்ல. பார்வையற்றவர்கள் நாயக நாயகி ஆவதும் புதிதல்ல. அவர்கள் ரயிலில் சந்திப்பதும் புதிதல்ல. ‘பழசாகிப்போன இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இன்னும் பழசாக்கிவிட்டார்கள். டைட்டில்கள் வரும் ஆரம்பக்காட்சி ஒன்றை மட்டுமே சிறப்பானதாகச் சொல்லமுடியும். மற்றக் காட்சிகளும் இதைப் போலவே இருந்திருக்கக்கூடுமானால்?...” என்று முடிகிறது விமர்சனம்.

நல்ல எழுத்தாளர்கள், நல்ல இயக்குனர்களாக இருக்கமுடிந்ததில்லை: உதாரணம்: கோவி.மணிசேகரனும் ஜெயகாந்தனும். இப்போது  ராஜு முருகனும். ஆனால் இவர் இளைஞர். காலம் இவருக்கு முன்னே இருக்கிறது. அனுபவம் என்னும் உளி இவரைச் செதுக்க அனுமதித்தால் இனிவரும் காலங்களில் நல்ல திரைப்படங்கள் இவர் மூலம் உருவாக முடியும். 
22-3-2014 விஜய் டிவியில் 'குக்கூ' பற்றிய நிகழ்ச்சியில்
கண்ணாடியுடன் ராஜு முருகன்
ஒன்றை மறக்கவேண்டாம்: எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி ஒரு படம் வெற்றி பெறவும் கூடும். ஏனெனில், படம் பார்ப்பவர்களில் பலர், விமர்சனங்களைப் படிக்கும் வழக்கம் கொண்டவர்களில்லை.

(அது சரி, திரைக்கதை இவ்வளவு பழசு என்பதை, சில கோடிகளை இறைத்துப் படமாக்கியிருக்கும் தயாரிப்பாளருக்குக் கூடவா முன்பே தெரியவில்லை? என்னடா இந்தத் தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!)

தொலைக்காட்சி : (அடுத்த இதழில் பார்க்கலாம்!)

பத்திரிகை

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துவிட்ட நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கேலி செய்து கருத்துப்படங்களும் கட்டுரைகளும் வந்துகொண்டே இருக்கின்றன பத்திரிகைகளில். சிதம்பரத்தைப் பற்றிய விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடு வெளியாக இன்னும் சில வருடங்களாவது ஆக வேண்டும். அவருடைய செயல்பாடுகளை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு, வங்கித் துறையில் உள்ளவர்களுக்கு உண்டு. அவ்வகையில், வங்கி அதிகாரியான எனக்கு அவரைப் பற்றிய, சீர்தூக்கிப் பார்த்தபின் புலப்படும் மதிப்பீடு இதுதான்:

(1) மாதச் சம்பளம் வாங்கும் அனைவரின் நன்றிக்கும் உரியவர், சிதம்பரம். இன்றுள்ள மிகக் குறைந்த வருமானவரிக் கட்டமைப்பைச் சாத்தியமாக்கியவர் அவரே. இதற்கு முன்னால், வருமானவரி செலுத்தியதுபோக மீதமிருந்த வருமானம்,   வங்கியில் காப்பி, டீ விநியோகம் செய்யும் வியாபாரியின் வருமானத்தைவிடக் குறைவானதாகும்.

(2) நாடு முழுவதும் பரவலாக வீட்டுக்கடன் வழங்கும் கொள்கையை அமுலாக்கியவர் அவரே. வீட்டுக் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்களை வழிக்குக் கொண்டுவர, வீடுகளை, நீதிமன்றத்துக்குப் போகாமலேயே, ஏலத்துக் கொண்டுவரும் சட்டத்தை இயற்றிட அவரே காரணம். இந்தச் சட்டம் மட்டும் வந்திராவிட்டால், எந்த வங்கியிலும் பொதுமக்கள் வீட்டுக்கடன் பெறுவது இயலாமல் போயிருக்கும்.

(3) நாடு தழுவிய அளவில், கல்விக்கடன் வழங்கும் கொள்கையை மிகுந்த முனைப்புடன் வங்கிகள் அமுலாக்கிடத் தூண்டுகோலாய் இருந்தவர் அவரே. அவர் மட்டும் இல்லாதிருந்தால், கடன்தொகைக்குப் பிணையாக சொத்துக்களையோ, பிற நபர்களின் ஜாமீனையோ, அடைமானம் தர வசதியற்ற லட்சக்கணக்கான மாணவர்கள்,  கல்லூரி வாசலையே மிதித்திருக்க முடியாது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் (என் மகன் உட்பட) வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயின்றிருக்க முடியாது. இதன் இன்னொரு முகமாக, போதுமான மாணவர்கள் இன்றிப் பல தொழிற்கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் அபாயம் நிகழ்ந்திருக்கும்.  

(4) இன்று அனைத்து வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. (கூட்டுறவு வங்கிகள் உள்பட.) இதற்கு அடிப்படையான காரணம் தொழிற்போட்டி. இதைத் தீவிரப்படுத்தியவர் சிதம்பரமே. தனியார் துறையில் வங்கிகள் தோன்றவும் தொழில்நுட்பத்தில் வளரவும் அவரே காரணம். எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யு.ட்டி.ஐ. வங்கி (இப்போது ஆக்சிஸ்), போன்ற வங்கிகள் வந்திருக்காவிட்டால், அரசுத் துறை வங்கிகளில் கணினி நுழைந்திருக்க முடியுமா? இன்று நாட்டிலேயே பரவலாக அதிக எண்ணிக்கையில் ஏ.ட்டி.எம்.கள் திறந்துள்ளதே ஸ்டேட் பேங்க், இது நடந்திருக்குமா?

(5) சென்ட்ரல் எக்சைஸ் போன்ற மறைமுக வரித்  துறைகளின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிரந்தரமாகக் கிடைத்துவந்த லஞ்சத்தை ஒரே கையெழுத்தின் மூலம் ஒழித்தவர் இவரே: அதாவது, மறைமுக வரிகளைப் பெருமளவுக்குக் குறைத்தார். முன்பெல்லாம் எந்தப் பொருளுக்கு எவ்வளவு சதம் வரி என்பது  வரித்துறை ஆடிட்டர்களுக்கு மட்டுமே தெரியும். தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இன்றோ, மிகச் சில இனங்களுக்கு மட்டுமே வரி என்பதால், தெளிவுநிலை (TRANSPARENCY) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த நன்மை புரிந்துள்ளது.

(6) கறுப்புப் பணத்தைப் பெருக்கி, வருமான வரி எய்ப்பு செய்து வந்த வியாபாரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான காரியங்களை முடுக்கிவிட்டவர் இவரே. வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணம் போட்டாலோ, எடுத்தாலோ பான்கார்டு வேண்டும் என்றும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் வரி செலுத்தவேண்டும் என்றும், பங்குச் சந்தையில் ஊழல் நிகழ்த்துவோரை ‘செபி’ மூலம்   தண்டிக்கவும் சட்டங்கள் கொண்டுவந்ததுடன், அவற்றை வன்மையாக அமுல்படுத்தவும் செய்தவர் இவரே. இணையத்தின் மூலம் வருமானவரி செலுத்திடவும், அதிகம் செலுத்திய வரியை, அதிகாரிகளுக்கு லஞ்சம் தராமலேயே வங்கிகள் மூலம்  NEFT வழியாகப் பெற்றிடவும் காரணகர்த்தர் இவரே. இதற்கு முன்னால், சென்னையில் வருமானவரியைத் திரும்பப் பெறவேண்டுமானால், அது முன்னூறு ரூபாயாக இருந்தாலும் அதற்கு இருநூறு ரூபாய் லஞ்சம் கேட்பது வழக்கம். (என் சொந்த அனுபவம்.) 
வருமான வரிக்கான அடிபடைச்சட்டவடிவம் ( CODE) ஒன்றையும் இவர் கொண்டுவந்துள்ளார். அது அமல்படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஏற்படும் வரி-மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே இருக்கும். பெரும்பாலான வரிகள், பல ஆண்டுகளுக்கு மாறாதவையாக இருக்கும். இது, நாட்டில் தொழிலும், வணிகமும், சேவைத்துறையும் நிலைத்து வளர மிகவும் அவசியமாகும். 

(7) இன்று, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களின் முக்கிய வருத்தமே, தங்களுடைய கருப்புப் பணத்தைப் பெருக்க முடியாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆட்டும்படியான கட்டமைப்பை உருவாக்கிவிட்டாரே என்பதுதான்.  இவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளும், சினிமாத்துறையினரும், வியாபாரிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களுமே. அதாவது, சிதம்பரத்தை எதிர்ப்பவர்களில், ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம், உயர் வட்டிவிகிதம், பற்றாக்குறை மூன்றையும்
எதிர்த்துத் தனியொரு மனிதனாகப் போராடினார்
ப.சிதம்பரம்
ஒவ்வொரு நிதியமைச்சரும் தன் கட்சிக்கும் பிரதம மந்திரிக்கும் உட்பட்டுத்தான் செயலாற்றவேண்டும். ஆனால் அந்தச் செயல்பாட்டிலும் தனது சுதந்திரத்தன்மையை நிலைநாட்டி, தனது துறையில் எண்ணற்ற சீர்திருத்தங்களைக் கொணர்ந்து, நாட்டிற்கு மிகப்பெரும் தொண்டு புரிந்தவர் சிதம்பரம் என்பதை நாளைய பொருளாதார வரலாறு உறுதி செய்யும். இந்தச் செயல்பாட்டில் அவர் தன்னைத் தீவிரப்படுத்திக்கொண்டதால், பொது மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகிப்போனார். அதனால் ஒரு கருணாநிதி போலவோ, வைகோ போலவோ, அவருக்கு மக்களுடன் தொடர்பில்லாமல் போனது. இன்று அரசியலிலிருந்து அவர் விலகவும் அதுவே காரணமாயிற்று.

ஆனால் நிலக்கரி மூலமோ, அலைக்கற்றை மூலமோ கொழுத்த கறுப்புப் பண மூட்டைகளைச் சம்பாதிக்கச் சிலர் முயன்றபோது, அதைத் தடுக்கும் வன்மையை அவர் பிரயோகித்துவிடாதபடி அவரது கைகள் கட்டப்பட்டுவிட்டதுதான், என்னைப் போலவே அவருக்கும் மீதமுள்ள வேதனையாக இருக்கும்.

சிரிப்பு

“இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்ததற்குத் தண்டனையாக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் என்னைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.....நாங்கள் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதத்துக்கு எதிராகத்தான் போரிட்டோம்.” – இலங்கை அதிபர் ராஜபக்சே பேச்சு. (நன்றி: தினமலர்-24.3.2014- சென்னை பதிப்பு- பக்.16 – மூன்றாம் பத்தி.)
கண் திறந்தபடி    செய்த பாவங்களுக்கு,
கண்மூடிப்  பிராயச்சித்தம்  வேண்டல்?  

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa
Email: chellappay@yahoo.com

வியாழன், மார்ச் 20, 2014

ஹேமமாலினியும் ஞாநி சங்கரனும் (‘அபுசி-தொபசி’-36)


(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவரும் ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டிப் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இதுவரை மத்தியில் பதவியில் இல்லாத அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் இயங்கும் நிலையில், மூன்று தலைமுறைகளாக ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோ இன்னும் வீதிக்கு வரவில்லை. மூத்த தலைவர்கள் பலர், இம்முறை தேர்தலில் போட்டியிட மறுத்துவருகிறார்கள். லாபம் அனுபவிக்கும்போது கூடிநின்றவர்கள், இனி காங்கிரஸ் மீளப்போவதில்லை’ என்று தெரிந்ததும்,  ‘அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை போல்’ கட்சியைவிட்டு விலகி நிற்கப் பார்க்கிறார்கள். ப.சிதம்பரம் கூடப் போட்டியிடப் போவதில்லை என்கிறார்கள்.

‘காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும்’ என்று மகாத்மா காந்தி கூறினார், (இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன்.) 2014 தேர்தலில் அது நடந்துவிடும் போலிருக்கிறது. மகாத்மாவின் கனவை நிறைவேற்றினோம் என்று சோனியாவும் ராகுலும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதற்குள் கேப்டனும் மருத்துவரும் தனித்தனியாகச் சில தொகுதிகளில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ‘மோடியின் கரத்தைப் பலப்படுத்துவோம்’ என்று விஜயகாந்த் வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால் மருத்துவரோ, மோடியின் பெயரை இன்னும் உச்சரிக்க ஆரம்பிக்கவில்லை. தனக்கும் விஜயகாந்த்துக்கும் உள்ள  ஆளுமை மோதலை அவரால் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. அதே சமயம் தருமபுரியில் அன்புமணியை ஜெயிக்கவைக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது. இல்லையெனில் கட்சி விரைவில் காணாமல் போகும் என்று பட்சி சொல்கிறது. ஆனால் தருமபுரி தொகுதி அவர் கட்சிக்குக்  கிடைப்பது உறுதியா என்று தெரியவில்லை.

வழக்கம்போல் பொறுமை காத்திருப்பவர் வை.கோ தான். என்ன செய்வது, அநாகரிகத்திற்கும் அவருக்கும் காத தூரமாயிற்றே! இந்த முறையாவது  அவர் கட்சி, போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கைகளும் உடைய கட்சி இன்று தமிழ்நாட்டில் ம.தி.மு.க.வை விட்டால் வேறேது?

ஸ்டாலின் – அழகிரி யுத்தம் தொடர்கிறது. தென்தமிழ்நாட்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களைத் தோற்கடிக்க அழகிரி வியூகம் வகுத்திருப்பதாகப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்த ஏழுபேரும் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் அழகிரியைத் தாக்கி எதுவும் பேசவேண்டாமென்று ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார் என்று இன்னொரு செய்தி கூறுகிறது. வேலூரில் முஸ்லிம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பணிபுரிய மாட்டோம் என்று துரைமுருகன் சார்பினர் அறிவித்திருக்கிறார்கள். இதேபோன்ற எதிர்ப்பு, வேறு சில தொகுதிகளிலும் தெரிகிறது. பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டு, பேச்சாலும் எழுத்தாலும் சினிமாவாலும் இளைஞர்களைக் கவர்ந்து சுமார் ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு கட்சி, கடைசியில் வெறும் ‘குடும்பக் கட்சி’ யாகப் பலவீனப்பட்டுப்போனதை நடுநிலையாளர்கள் வருத்தத்துடன் பார்க்கிறார்கள். தான் வளர்த்த கட்சியைத் தானே அழித்த பெருமை கலைஞருக்கு வந்துவிடும் அபாயம் தெரிகிறது.


சற்றுமுன் வந்த செய்தி: டில்லியிலிருந்து தாஜ்மகாலைப் பார்க்க ஆக்ரா போனால், வழியில் எதிர்ப்படும் நகரம் ம(த்)துரா. அங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தான் ஹேமமாலினி. தமிழச்சி! அவரது வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள். 

புத்தகம்
பிரபல ஆன்மிகப் பேச்சாளரான சுகி.சிவம், சிறந்த எழுத்தாளரும் கூட. தமிழ்நாட்டின் பிரபலமான எல்லாப் பத்திரிகைகளிலும் இவர் எழுதிவருகிறார். புத்தகக் கண்காட்சியில் இவரது நான்கு புத்தகங்கள் வாங்கினேன். கனவு மெய்ப்படும், ஏமாற்றாதே-ஏமாறாதே, ஊருக்கு நல்லது சொல்வேன், பெண்ணே நீ வாழ்க – என்பவையே அவை. (கவிதா பப்ளிகேஷன் சென்னை வெளியீடு.044-24364243/24322177. விலை ரூ.50 ஒவ்வொன்றும்.)


மனித மனம் அலைபாய்ந்துகொண்டே இருப்பது. நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், நடந்தாலும்  அது மட்டும் எங்கெங்கோ திரிந்துகொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்துவது சாதாரணமான விஷயமல்ல. சுகி.சிவத்தின் நூல்கள் அந்தப் பணியை அமைதியாகச் செய்கின்றன. சிக்கலில் ஆட்பட்டு, குழப்பத்தில் மூழ்கி,  தெளிவில்லாது தவிக்கும் நேரத்தில் இந்த நூல்களிலிருந்து எந்தக் கட்டுரையைப் படித்தாலும் மனம் விரைந்து தெளிவடைவதைக் காணலாம்.

‘கனவு மெய்ப்படும்’ என்பது, கல்கியில் பகவத்கீதையைப் பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் இது முழு ஆன்மிக நூல் அல்ல. நகைச்சுவை ததும்பும் குட்டிக்கதைகள் நிறைந்த கருத்துக் களஞ்சியம். உதாரணம்:

(பக்கம் 22 – 24): டவுன் பஸ்ஸில் போகவேண்டிய ஒருவர் கையில் சில்லறை இல்லை. ஐம்பது ரூபாய் நோட்டு மட்டும்தான். சில்லறை இல்லாமல் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினால் நல்லவருக்கே கோபம் வரும். ஐயாவுக்கு ஒரு யோசனை. பக்கத்தில் இருந்த பளபள ஓட்டலில் நுழைந்தார். ‘இன்றைய ஸ்பெஷலை’ நோட்டம் விட்டார். ஆஹா, கோதுமை அல்வா! வாங்கிச் சாப்பிட்டார். அருமை. பிறகு ஒரு வடை, காப்பி. பில்லும் சில்லறையும் கைமாறியது. பஸ்சுக்குச் சில்லறை பிரச்சினை தீர்ந்தது என்று கவலை போனது.

ஒரு வாரம் கழித்து அதே வழியாக வருகிறார். கையில் சில்லறை நிறையவே இருக்கிறது. இருந்தாலும் ஷோகேசில் இருந்த அல்வா அவரைப் பார்த்து கண்சிமிட்டியது.  “நான் அல்வா அல்லவா? நீ கொஞ்சம் உள்ளே வா!” என்று அழைப்பு விட்டது. சம்பாதித்து என்ன கண்டோம்! அல்வாவாவது சாப்பிடுவோம் என்று முடிவு செய்தார். அதன் பிறகு எப்போது அந்த வழியாகப் போனாலும் அல்வா அவருக்கு ஆசை காட்டியது.

அந்த அல்வாவுக்கு ஒரு விசேஷம். நாளாக நாளாக நன்றாக இருப்பது அதன் ஸ்பெஷாலிட்டி. கொஞ்ச நாள் போனதும் நண்பர்களிடம் அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார். ‘எப்ப இந்தப் பக்கம் போனாலும் அல்வா சாப்பிடாமல் நான் போனதே இல்லை!’

தமது பலவீனத்தைப் பெருமை போலப் பேச ஆரம்பித்தார்.


திரு கி.வா.ஜ. சொல்வார்: “முதல் நாள் அல்வாவை அவன் விழுங்கினான். அடுத்த நாள் முதல் அல்வா அவனை விழுங்க ஆரம்பித்தது!”

நான் அல்வா என்று நாசூக்காகச்சொன்னேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு பொருள் அல்வா போல் ஆட்டிவைக்கிறது.

ஆசை நமக்குள் கட்டுப்பட்டிருந்தால் குற்றம் இல்லை. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் முழுமையாக நாம் சிக்கிக் கொண்டால் யாராலுமே நம்மைக் காப்பாற்ற முடியாது.

கிருபானந்த வாரியார் இன்னும் நன்றாக விளக்குவார்: “நாம் காரிலே ஏறலாம்; கார் நம்ம மேலே ஏறக் கூடாது. 12-பி பஸ்ஸிலே நீ ஏறினால் தேனாம்பேட்டை போகலாம். 12-பி  உன் மேலே ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை போவாய்” என்பார். (கிருஷ்ணாம்பேட்டை என்பது சுடுகாடு.)

சினிமா
ஆஸ்கார் பரிசு பெறவேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆஸ்கார் வென்ற ஆங்கிலப் படங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடுகின்றனவா? இல்லவே இல்லை என்கிறது அவுட்லுக். ஒரு ஷாருக் கான் நடித்த இந்திப்படத்தைத் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு எந்த ஆஸ்கார் வென்ற படமும் இந்தியாவில் ஓடவில்லை என்று புள்ளிவிவரம் தருகிறது.

2014ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும் (கோடி ரூபாய்களில்):

GRAVITY: 31.2 , 12 YEARS A SLAVE: 2.1, AMRICAN HUSTLE:3.3, THE WOLF OF WALL STREET: 6.5, CAPTAIN PHILLIPS: 4.4.

2013ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும்:

LIFE OF PI: 62.1, SILVER LININGS PLAYBOOK: 2.5, DJANGO UNCHAINED: 2.6, ARGO: 2.0, ZERO DARK THIRTY: 1.7, LINCOLN: 1.3.

2012ஆம் வருடம் ஆஸ்கார் வென்ற படங்களும் இந்தியாவில் அவற்றின் வசூலும்:

MONEYBALL: 3.9, THE DESCENDANTS: 3.5, THE HELP: 1.0, HUGO: 0.9.

இத்துடன் கீழ்க்கண்ட ஹிந்திப் படங்களின் வசூலை ஒப்பிட்டுப்பாருங்களேன்:
ஜெய் ஹோ: 107 கோடி, தூம் 3: 261 கோடி, ஏக் தா டைகர்: 184 கோடி, பாடிகார்டு: 148 கோடி, தபாங்: 141 கோடி.  தமிழில் எந்திரனும் விஸ்வரூபமும் தலா 150 கோடிக்குமேல் வசூலானதாமே!

இதிலிருந்து என்ன தெரிகிறது? ‘சொர்க்கமே என்றாலும், நம்மூரு போலாகுமா?’

தொலைக்காட்சி
24 மணி நேர ஒளிபரப்புகள் வந்தாலும் வந்தன, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையே செய்தி சேகரிக்கும் போட்டி கடுமையாகி வருகிறது. செய்திகளே இல்லையா, கவலயில்லை, இல்லாத ஒன்றையே செய்தியாக்கி விடுகின்றன இவை. அதிலும் ஆங்கிலமொழி தொலைக்காட்சிகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. 
அர்னாப் கோஸ்வாமி- Times Now

டைம்ஸ் னௌ’ தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் காட்டுக் கூச்சல்கள் சகிக்கமுடிவதில்லை. விவாதத்திற்கு வரும் யாரையும் இவர் பேசவிடுவதேயில்லை. கற்பனையாக ஒரு நிலைப்பாட்டை முன்மொழிந்து, அதில் தான் எதிர்பார்க்கின்ற முடிவு வருகின்றவரை, இவர் விவாதம் புரிவோரின் வாயில் வார்த்தைகளைத் திணிக்கிறார்.  தன்னை எதிர்த்துப் பேசுவோரைப் பெரும்பாலும்  அசிங்கப்படுத்திவிடுகிறார். கண்ணியமில்லாத ‘டைம்ஸ் நௌ’ வை இனி  பார்ப்பதில்லை என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.
 ராஜ்தீப் சர்தேசாய்- CNN-IBN
‘சிஎன்என்-ஐபிஎன்’ னில் வருபவர் ராஜதீப் சர்தேசாய்.  ‘என்டிடிவி’யின் நிறுவனர், பிரன்னாய் ராயின் சீடர். ஆனால் இவரும் அர்னாப் கோஸ்வாமி மாதிரியே கத்த ஆரம்பித்திருக்கிறார். பிரன்னாய் ராயின் கண்ணியமான நடத்துகை இவரிடம் சற்றுக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இவர்களோடு ஒப்பிடுகையில், தமிழ்மொழி தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதத்தை மேற்கொண்டு நடத்தும் நல்ல காம்ப்பியர்கள் குறைவே. இருக்கிற சிலரும், தத்தம் சேனல்களின் முதலாளிகளின் லட்சியத்தின்படியே இயங்குகிறார்கள். எனவே விவாதம் புரிவோரின் கருத்துக்களும் அதேமாதிரி முதலாளியைச் சார்ந்தாகவே இருக்கின்றன. ‘புதிய தலைமுறை’யில் ஓரளவு நல்ல விவாதங்கள் வருகின்றன என்றாலும் அவற்றில் வழவழா கொழகொழா விவாதங்களே மிகுதி. ‘தந்தி டிவி’யில்  பாண்டே சற்று ஆக்ரோஷத்துடன் (அர்னாப் மாதிரி, சர்தேசாய் மாதிரி) ஆழமான கருத்தாக்கம் செய்கிறார். ஆனாலும் தமிழக முதல்வரைப் பற்றிக் குறைவாகப் பேசி அவரை நோகடிக்கச்செய்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு அதிகம் தென்படுகிறது. காரணம் தெரியவில்லை.

பத்திரிகை

பிரபல பத்திரிகையாளர் ஞாநி(சங்கரன்) ஆம்-ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவில், சினிமாவில் இருந்து புகழ் பெற்றவர்கள் கூட, அரசியலுக்கு வரவேண்டும் என்ற அரிப்பு உடையவர்களே. காரணம், ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து இயங்கினால் தான் மக்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கேட்பார்கள். சுயேச்சைகளுக்கு இங்கு மதிப்பில்லை. ஞாநி, சுய சிந்தனையுள்ள எழுத்தாளர். நாடகம், சினிமா தளங்களிலும் இயங்கும் லட்சியவாதி. அவருடைய ‘ஓ பக்கங்கள்’ புகழ் பெற்றவை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து வெளியிடும் துணிச்சல் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு இருந்ததில்லை. விகடன், குமுதம், கல்கி என்று ‘ஓ பக்கங்கள்’ மாறிக்கொண்டே வந்து இப்போது கல்கியில் நிற்கிறது. ஆம் ஆத்மியில் இவர் சேர்ந்துவிட்ட நிலையில் கல்கியும் இனிமேல் இதை வெளியிடத் தயங்கலாம். ஞாநி இதெற்கெல்லாம் கவலைப்படமாட்டார். தனக்கு நியாயம் என்று பட்டதை அவர் எடுத்துச் சொல்லத் தயங்கவே மாட்டார். ஆம்-ஆத்மிகளின் லட்சியமும் இதுதானே!

தன் அரசியல் பிரவேசம் பற்றி ‘கல்கி’யில் அவர் எழுதியதிலிருந்து ஒரு பகுதி:

“............நான் ஏன் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன் ?

இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கமுடியும். ஆனால் தற்காலிக அரசியல் சிக்கல்களை சந்திக்கும் போக்கால், அது நடக்காமலே போய்விட்டது. தவிர ஒற்றை சித்தாந்த அடிப்படையில் இயங்கி மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

நமக்கு காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயண குரு, பாரதி, நேரு, பகத்சிங் என்று பலரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடமிருந்து எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும் ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே ஒற்றை சித்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. டெல்லியில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்கமுடியும் என்று மக்கள் நம்பிக்கையை தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மிமீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது. அதே போல தமிழ்நாட்டிலும், தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.”

தமிழக அரசியலில் ஒரு புதிய அலையை இவர் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்போமா?
படம்-நன்றி: தமிழ் இந்து-20.3.2014 - பக்கம் 10

சிரிப்பு
“கமலா, எங்க அம்மா கீழே விழுந்தப்ப நீ பார்த்துட்டே இருந்தியாமே! ஏன் தூக்கலை?”

“டாக்டர் என்னை ரொம்ப வெயிட்டான பொருளைத் தூக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.”

(நன்றி: ‘கல்கி’ 23.2.2014- பக்கம் 21 – எழுதியவர்: பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்)


குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa