திங்கள், செப்டம்பர் 22, 2014

(பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை

(பதிவு 108நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடுதழுவிய உரை நிகழ்த்தினார். அதைச்  சுமார் 2 கோடி மாணவர்கள் கேட்டும் பார்த்தும் ரசித்தனர். அந்நிகழ்ச்சிக்கு முன்னர் சீனப் பிரதமர் வந்திருந்தால், கன்பூசியசின் கீழ்க்கண்ட கருத்துக்களை அவர் மோடிக்குச் சொல்லியிருக்கலாம்:

1 கல்வியை விரும்பாமல் அன்பினை மட்டும் விரும்புபவன், அறியாமை என்ற குறைபாடு உடையவன்.

2 அறிவினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவன், விந்தை அல்லது வலிமையற்ற கருத்துக்கள் உடையவன் என்று குறை பேசப்படுவான்

3 நேர்மையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவனின் குறைபாடு, பொருள்களை அழிக்கும் அல்லது நிலைகுலைவினை உண்டாக்கும்.

4 எளிமையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பவில்லையெனில், அவன் குறைபாடு, நடைமுறையினை மட்டும் பின்பற்றுவதாக அமைந்துவிடும்.

5 வீரத்தை மட்டும் விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், அவன் குறைபாடு, கட்டுப்பாடின்மை அல்லது பலாத்காரத்தில் முடியும்.

6 பண்புகளை உறுதிப்படுத்துதலை விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், பிடிவாத குணம் என்னும் குறைபாட்டில் முடிந்துவிடும்.

அது மட்டுமல்ல, குடும்ப உறவுகளுக்கு, இந்தியாவைப் போலவே தாங்களும் முன்னுரிமை அளிப்பதாகச் சீனப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொண்டு, கீழ்க்கண்ட கன்பூசியசின் பத்துக் கருத்துக்களை எடுத்துக் காட்டியிருக்கலாம்:

1 பிள்ளைகளுக்குத் தந்தை காட்டும் அன்பு
2 பிள்ளைகள் தந்தைக்குச் செலுத்தவேண்டிய பக்தி கலந்த அன்பு
3 தம்பியரிடத்தில் தமையன்மார் காட்டும் பெருந்தன்மை
4 தமையன்மாரிடத்தில் தம்பியர் செலுத்தவேண்டிய மரியாதை
5 மனைவியிடத்தில் கணவனின் நன்னடத்தை
6 கணவனிடத்தில் மனைவியின் பணிவு
7 மூத்தோர்கள் இளையவர்களிடம் காட்டவேண்டிய தயவு
இளையோர் மூத்தோரிடத்தில் காட்டவேண்டிய பணிவு
9 ஆள்வோர் குடிமக்களிடம் காட்டும் தயவு
10 குடிமக்கள் ஆள்வோரிடம் செலுத்தும் விசுவாசம்

 ‘மனிதன் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை?’ என்ற கேள்விக்குப் பதிலாக சீன அறிஞர் கன்பூசியஸ் தெரிவித்தவையே இவை.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட, முனைவர் சோ.ந.கந்தசாமி எழுதிய/தொகுத்த   ‘சீன இலக்கியம்’ என்ற நூலில் இடறியபோது  கிடைத்த செய்திகள் இவை. ஜூலை 2013 வெளியீடு. 720 பக்கம் ரூ.500.
****
‘சீனத்தராய் விடுவாரோ?’ என்று பாரதி எழுதினான். 1961இல் சீனா இந்தியாவின் மீது வஞ்சகமாகப் படையெடுத்தது முதல், சீனாவை நமது எதிரியாகவே பார்த்துவருகிறோம். ஆனால் இடைப்பட்ட இந்த ஐம்பது வருடங்களில், தனது 137 கோடி மக்கள்தொகைக்கும் உணவளித்தும், நாட்டின் உள்கட்டமைப்பினைச் சீரமைத்தும், உலகிலேயே நீளமான ரயில்பாதையை அமைத்தும், அமெரிக்காவின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் தன் நாட்டிற்கு இழுத்துக்கொண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைத் தன்னுள் கொண்டதாகச் சீனா வளர்ந்துவிட்டது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் (GDP-nominal) இப்போது எண்பத்தேழு சதம் அளவுக்குச் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கிறது! எனவே சீனாவை எதிரியாகப் பார்க்காமல், நமது ஆசிய நண்பனாகப் பார்த்தலே, அரசியல் ரீதியான அறிவுடைமையாகும் என்ற தெளிவு இப்போதாவது நமது தலைவர்களுக்கு வந்தது நன்மைக்கே.

எனவே தான் பிரதமர் மோடி, அமெரிக்காவை விட, சீனாவோடு பொருளாதார நல்லுறவு கொள்வதில் முனைந்து நிற்கிறார். அதையொட்டியே, சீனப் பிரதமர் சி ஜின்பிங்கும் அவரது அழகிய மனைவியும் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்தனர். 13 முக்கியப் பொருளாதார ஒப்பந்தங்கள் கையொப்பமாயின.

ஆனால், சீனா என்பது மூடிய கதவுக்குப் பின்னால் ரகசியமாக இயங்கும் நாடு என்பதுதான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், தன்னைப் பற்றியும் தனது மக்களைப் பற்றியும் அதிகாரபூர்வமான செய்திகளை வெளியிடுவதில் சீனா பின்தங்கி இருப்பதே. அதைமீறி மேலைநாட்டு ஊடகங்கள் வாயிலாக ஓரிரு செய்திகள் வெளியானாலும் அப்படி வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையைச் சுதந்திரமான பத்திரிகையாளர்கள்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அந்நாடு அனுமதி வழங்குவதும் இல்லை. விளையாட்டுப் போட்டிகளைத் தவிர, தனது கலை, இலக்கியம், கல்வி பற்றிய செய்திகளை இன்னும் பரவலாக வெளியிடவில்லை அந்த நாடு (என்றே தோன்றுகிறது).

குறிப்பாக, சீனாவில் முக்கிய எழுத்தாளர்கள் யார் யார் என்பது நமக்குத் தெரியாத செய்தியாகவே இருக்கிறது. ரஷியா, ஐம்பது-அறுபதுகளில் இந்தியாவெங்கும், ஒவ்வொரு மொழிகளிலும் தனது இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கென்றே ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி இருந்தது. டால்ஸ்டாயும், தாஸ்தாவெஸ்கியும், அலெக்சாண்டர் ஸோல்செனிட்செனும் மிகைல் ஷோலக்கொவும் தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்ட பெயர்கள். அந்த அளவுக்கு சீனாவின் எழுத்தாளர்களைப் பற்றி நாம் அறிய முடிந்திருக்கிறதா?


முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்களின் ஆராய்ச்சி நூலான ‘சீன இலக்கியம்’ அந்தக் குறையை நீக்க முன்வந்திருக்கும் முதல் தமிழ் நூலாகக் கருதுகிறேன். (எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில்.) இதில் கி.பி. 1000 வரையிலான இலக்கியங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பிந்தைய கால இலக்கியங்களைப் பற்றி இவரோ அல்லது பிறரோ எழுதினால் நல்லது.


முனைவர் சோ.ந.கந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மலாயப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். இப்போது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘உலகச் செம்மொழிகள் உயராய்வு மைய’த்தின் இயக்குனராகப் பொறுப்பில் உள்ளவர். ஆங்கிலத்தில் 16 நூல்கள் உட்பட, இதுவரை 55 நூல்களை எழுதியிருக்கிறார். இந்தச் ‘சீன இலக்கியம்’ எழுதுவதற்கு அத்தகைய அனுபவமும், மிகுந்த நேரமும் உழைப்பும் ஆழ்ந்த கவனமும் காரணமாக இருந்திருப்பதை இந்நூலின் முதல் நூறு பக்கங்களைப் படிப்பதற்குள்ளேயே தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காகவும், மிக அழகிய தமிழில் சீன இலக்கியங்களின் சில பகுதிகளை  மொழிபெயர்த்து ஆங்காங்கே  எடுத்துக்காட்டாக வழங்கியுள்ள பாங்கிற்கும் நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

இவருடைய எழுத்துக்கும், சீன இலக்கியத்தின் ஒரு மாதிரியாகவும்  ‘வாங்கு ஷீஃபூ’ என்ற நாடகாசிரியரின் ‘மேற்குக் கூடம்’ (தெ வெஸ்டேர்ன் சேம்பர்) என்ற நூலில் இடம்பெறும் ஒரு கவிதை பகுதியைத் தருகிறேன் (பக்கம்.677) மாணவனான ‘சங்’ என்ற காதலன், தன் காதலியான ‘யிங்யிங்’கை முதல்முதலில் பார்த்த அனுபவத்தை இந்தக் கவிதை கூறுகிறது:

மலர்களுக்கு அப்பால் காஞ்சனப் பறவை எழுப்பும்
ஓசையை ஒத்தது அவள் குரலொலி.
அவள் பயிலும் நடை ஒவ்வொன்றும்
உள்ளத்தில் காதலைக் கிளர்ந்தெழச் செய்கிறது.

ஆடல் புரியும் இடை எவ்வளவு மென்மையும்
தொய்வும் குழைவும் உடையது!

மாலைத் தென்றலின் முன்பு அசைந்தாடுகின்ற
வில்லோ மரத்தினைப் போலக் கவர்ச்சிக் கவினும்
இனிமைப் பண்பும் மயக்கமும் ஆற்றலும்
அவளிடம் கணக்கில் அடங்கா!

மலரின் இதழ்கள் வீழ்ந்து மணம்கமழும் பாதையில்
எவ்வளவு மென்மையாக அவள் நடைபயில்கிறாள்!

அவள் பாதச் சுவடுகள் இலேசாகப் பட்ட தூசுகூட
கமகம என்று மணம் கமழ்கிறது!

மெதுவாகவும் தயக்கமாகவும் அவள் பயிலும் நடை
அவள் நெஞ்சத்தின் அசைவுகளை வெளிப்படுத்திக் காட்டும்!

சிறுவாயிலின் அருகில் அவள் நெருங்குகிறாள்,
அடுத்து ஒரு அடிதான் நகர்ந்திருப்பாள்,
அவள் சுழன்று திரும்பிப் பார்த்த பார்வை
என்னைக் களிப்பூட்டியது, சுண்டி யிழுத்தது
கவர்ச்சியால் என்னைக் கட்டுப் படுத்தியது!

தனக்குப் பின்னால் மூடுபனிக்குள் வில்லோ மரங்களை
விட்டுவிட்டு விண்ணக மாளிகைக்குள்
அந்தத் தேவதை திரும்பிச் சென்றுள்ளது!

சிட்டுக் குருவிகள் வெறுமனே ஒலிப்பன.

தங்கள் பள்ளி/கல்லூரி நூலகத்தில் வாங்கி வைக்கத் தகுந்த நூல் இது. வரும் காலத்தில் சீன-இந்திய இலக்கிய உறவுகளும் ஏற்படலாம். ஏற்கெனவே, சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு வந்துகொண்டிருக்கிறது. சீனத் தமிழ் அகராதியும் வெளியாகியுள்ளது. சீன மொழியைக் கற்பிப்பதற்காக ‘CHINEASY.org’ என்ற இணையதளமும் உள்ளது. ஷா லான் என்ற இளம்பெண் இதை நடத்துகிறார். 
இது வெறும் படமல்ல! 'முட்டாள்' என்பதைக் குறிக்கும் சீன எழுத்து! 
இவர்தான் ஷா லான் ! (chineasy.org) நடத்துபவர்
தமிழ் இலக்கியவாதிகள் சீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருப்பதாகவே கருதலாம். முந்திக்கொள்பவர்கள் பயன்பெறுவார்கள்.
****
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).

8 கருத்துகள்:

  1. கன்பூசியசின் கருத்துக்கள் அருமை சார்! பரவாயில்லை பேர் "கன்ஃப்யூஷன்" என்ற ஒரு சின்ன ஆங்கில உச்சரிப்பை நினைவூட்டினாலும் மனிதரின் கருத்துக்கள் கன்ஃபூஷன் இல்லாத பளிச் கருத்துக்களாக உள்ளது.

    ஆராய்ச்சி நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் ஆழ்ந்த, விரிந்த படிக்கும் பழக்கத்திற்கு , இப் பதிவு நல்லதோர் எடுத்துக்காட்டு!
    நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. செல்லப்பா அவர்களே, சீன மொழி மற்றும் சீனாவை பற்றிய தங்கள் வலைப்பதிவு மிக சிறப்பானதும் கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது. சீனக் கவிதையை படித்த பிறகு அந்நாட்டு கவிஞர்களும் நம் நாட்டு கவிஞர்கள் போலவே பெண்களை வர்ணிப்பதில் வல்லுனர்களாக உள்ளது தெரிகிறது. சீன நாட்டு பொருளாதாரம் ஒரு மூடிய புத்தகமே. அந்நாட்டு பொருளாதாரக் கொள்கை மற்றும் வங்கிகளின் செயல்பாடு இன்றும் மர்மமாகவே இருக்கிறது. சீனப்ப்ரதமரின் அழகான மனைவி என்ற தங்கள் வலைப்பதிவு தங்கள் மிகக்கூர்மையான கண்ணோட்டத்தை காட்டுகிறது. வளரட்டும் தங்கள் பணி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் ஆழ்ந்த பட்டறிவைக் காட்டுகிறது இப்பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. ஐயா பதிவர் சந்திப்பிற்கு வருகின்றீர்களா
    தங்களைச் சந்திக்க ஆவலாய் காத்திரருக்கின்றேன்
    தம4

    பதிலளிநீக்கு
  6. அருமை அய்யா
    நல்ல தகவல் ...
    த.ம கூடுதல் ஒன்று ..

    பதிலளிநீக்கு
  7. மோடி சொல்லியிருக்கலாம் என்றும் சீனப் பிரதமர் சொல்லி யிருக்கலாம் என்றும் எழுதும் போது கன்ஃப்யூசியசின் கருத்துக்களைசொன்னதை ரசித்தேன் ஒரு சந்தேகம் சீனப் பிரதமரா , ஜனாதிபதியா.?அந்தக் காதல் கவிதையைப் படித்தபோதுநான் எழுதியிருந்த “கேசாதி பாதம் -காதலி “ பதிவு இதைவிடச் சிறப்பாக இருந்தது என்று நான் சொன்னால் தற்பெருமை ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விஸ்தாரமான பதிவு!. நல்ல நேரத்தில் கிடைத்திருக்கிறது அந்த புத்தகம்!.
    கலாச்சார அடிப்படையில் இரு நாடுகளுமே ஒருமித்த கருத்து உடையவை. ஆனாலும் ஒருவரை ஒருவர் நம்பாததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். இனியாவது அது மாறுகிறதா என்று பார்ப்போம்!.

    பதிலளிநீக்கு