புதன், ஜூலை 23, 2014

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

பொன்னார் மேனியனே!  புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!
மன்னே, மாமணியே!  மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே நின்னையல்லால்,  இனி, யாரை நினைக்கேனே?

(சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பாடல். ஏழாம் திருமுறையில் 24வது திருப்பதிகமாக அமைந்துள்ளது. சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருமழபாடி, 54வது பாடல் பெற்ற தலமாகும்.)
***
பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக ஒரு நீளமான சரித்திர நாவல் எழுதி, அதைத் தானே புத்தகமாக வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ராஜனுக்கு இருந்தது. ஆனால் அவனது  ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமுடைய உயிரினங்கள் யாரும்  அவனுடைய ஆசிரிய வர்க்கத்திலோ, மாணவச் செல்வங்களிலோ, உற்றார் உறவினர்களிலோ  இல்லை.


ஒரு ஜூன் மாதத்தின் மாலை இருட்டில் பேருந்து நிலையம் அருகில், அவனைப் போலவே சிறுகதைகள் எழுதும் ஆர்வம் கொண்டவனும், அதே உயர்நிலைப்பள்ளியில் அன்றுதான் ஏழாம் வகுப்பில் சேர்ந்தவனுமான  ஒரு நண்பனை அவன் சந்திக்க நேர்ந்தது. அந்த நண்பன் வேறு யாருமல்ல, அடியேன்தான்! பள்ளியில் சேர்ந்த முதல்நாள் என்பதால், அவன்  முகம் மனதில் பதியவில்லை. ஆனால் அவன் என்னைப் பார்த்திருக்கிறான் என்பது தெரிந்தது.

“டேய், நீ இன்று புதிதாகச் சேர்ந்தவன் இல்லையா?” என்றான்.

சுருக்கென்றது எனக்கு. டேய் என்று என்னை யாரும் அழைத்ததில்லை. இராணிப்பேட்டையில் சக மாணவர்கள் என்னை மரியாதையுடன்தான் குறிப்பிடுவார்கள். நான் முதல் மதிப்பெண் வாங்குவதால் இருக்கலாம். இந்தப் புது ஊரில் என்னை இன்னும் யாருக்கும் தெரியாது. ஒருவேளை இவனே முதல் மாணவனாகவும் இருக்கலாம். காலாண்டுத் தேர்வு நடந்து, மதிப்பெண் வரும்வரை பொறுமையாகத்தான்  இருக்கவேண்டும். இன்னொரு காரணம், பாண்டியராஜன் என்னைவிட உடல் வலிமை கொண்டவனாகத் தோன்றினான்.

“ஆமாம் நண்பா!” என்றேன்.

“நண்பா கிண்பா என்றெல்லாம் கூப்பிடாதே! ராஜன் என்று சொல்! என்னைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று மிக நெருங்கி வந்து அவன் கேட்டவிதமே கிலியூட்டுவதாக இருந்தது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “இன்றுதான் பள்ளியில் சேர்ந்திருக்கிறேன். உன்னைப் பற்றி எப்படித் தெரியும்? நீதான் சொல்லவேண்டும்” என்றேன்.

“’கடல் எரிந்த மர்மம்’ என்ற கதையைப் படித்திருக்கிறாயா?”

“இல்லையே” என்றேன் தயக்கத்துடன். ஒரு நாளில் மூன்று மணிநேரம் நூலகத்தில் செலவிடும் வழக்கமுடையவன் நான். இருந்தும் அப்படியொரு கதையைப் படித்ததாக நினைவுக்கு வரவில்லை.

“’பாரசீகத்தில் வந்தியத்தேவன்’ படித்திருக்கிறாயா?”

“இல்லை.”

ராஜன் நெருங்கி வந்தான். “புலித்தேவன் ரகசியங்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையாவது படித்திருக்கிறாயா?” என்றான். இல்லை என்று சொன்னால் சட்டையைப் பிடித்துக் கசக்கிவிடுவான்போல் தோன்றியது. அவசரமாக நகர்ந்தேன். “சத்தியமாக இல்லை நண்பா! இதெல்லாம் எந்தப் பத்திரிகையில் வந்தது என்று சொல்வாயா?” என்று பரிதாபமாகக் கேட்டேன்.

அடுத்த நிமிடம் “ஆஹா..ஹா...” என்று பெருத்த குரலில் சிரித்தபடி என்னை இறுக்கக் கட்டிக்கொண்டான்.

“நான் எழுதினால் அல்லவா வெளியிடுவார்கள்? இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லையே!” என்று தன் பிடியை விடாமல் சிரித்தான்.

சரிதான், இவன் ஒரு அல்டாப் பேர்வழி என்று மனதிற்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டது. இவனைவிட நான் பரவாயில்லை. அப்போதே ஏழெட்டு கதைகள் எழுதி விகடனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். (எல்லாமே திரும்பி வந்துவிட்டன!) அதைப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று வெறும் புன்னகையுடன், “அதானே பார்த்தேன்!” என்றேன். “எப்போது ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறாய் நண்பா?”

ராஜன், தன் சட்டைப் பையில் இருந்து சர்க்கரையில் செய்த அச்சு மிட்டாய் ஒன்றைக் கொடுத்தான்.  “உனக்குப் பிடிக்கிறதா பார்! எங்களுக்கு ஒரு மிட்டாய்க் கடை இருக்கிறது.  எவ்வளவு வேண்டுமோ தினமும் தருகிறேன்” என்றான்.


பாலாற்றங்கரையில் ‘மயானக் கொள்ளை’ திருவிழாவின்போது இம்மாதிரி சர்க்கரை மிட்டாய்களைப் பார்த்திருக்கிறேன். இனிப்பு சற்றே அதிகம்தான். பரவாயில்லை. “நன்றாக இருக்கிறது” என்றேன்.

நடந்துகொண்டே பெரிய ஏரிக்கரைக்கு வந்தோம். அங்கிருந்துதான் ஊருக்கே குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. இளம்பெண்கள் தோள்களில் ஒரு மூங்கில் பட்டையின் இருபுறமும் பித்தளைக்குடங்களில் குடிநீரை வைத்துச் சுமந்து போய்க்கொண்டிருந்தார்கள். அருகிலுள்ள காடுகளில் இருந்து விறகுச் சுள்ளிகளைப் பொறுக்கி நீண்ட கட்டுகளாக்கித் தலையில்  சுமந்தபடி சில ஏழைப்பெண்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சில மாட்டுவண்டிகள் ஜல் ஜல் என்ற ஓசையுடன் விரைந்துகொண்டிருந்தன. ஏரியின் எதிர்ப்புறத்தில் சிறியதொரு கோவிலில் ஒரு முக்குறுணி விநாயகர் தூங்காவிளக்கின் ஒளியில் பக்தர்களை எதிர்நோக்கியபடி இருந்தார். அருகில் இருந்த ‘யாரப்’ தர்க்காவிலிருந்து சாம்பிராணி மணம் காற்றில் அடர்த்தியாகப் பயணித்துக்கொண்டிருந்தது. அருகில்தான் எங்கள் வீடு. தென்றல் மாதிரி மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது.

“எவ்வளவு அமைதியாக இருக்கிறது பார்த்தாயா? நீ என்னோடு வரத் தயாரா?  ஒவ்வொரு விடுமுறை நாளிலும் காலையிலிருந்து  மாலைவரை மரத்தடி நிழலில் உட்கார்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தால் ஆறுமாதத்தில் மூன்று நூல்களையும் முடித்துவிடுவேன்” என்றான் ராஜன்.  

அவனுடைய தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய கதையாக இருக்கும்? கதைக்கான குறிப்புகள் தயாராக வைத்திருக்கிறானா?

‘கடல் எரிந்த மர்மம்’ தான் அவனது மாஸ்டர்பீசாக இருக்குமாம். பதினைந்து  பாகங்கள் எழுதப்போகிறானாம். பொன்னியின் செல்வனைப் போல மூன்று மடங்கு பெரிதாக இருக்குமாம். முதல் ஐந்து பாகங்கள் சரித்திரக் கதையாகவும், அடுத்த ஐந்து பாகங்கள் மர்மக் கதையாகவும், கடைசி ஐந்து பாகங்கள் சமூகக்கதையாகவும் இருக்குமாம். ரஷ்யாவில் கூட அவ்வளவு பெரிய நாவல் யாரும் எழுதியதில்லையாம். வெளிவந்து  பத்து வருடத்திற்குள் நோபல் பரிசே கிடைத்தாலும் ஆச்ச்சரியமில்லையாம். அப்படிப்பட்ட கதைக்கருவாம்....

ஏராளமான நூல்களை ஒரு எழுத்தாளன் எழுதி முடித்துவிட்ட பிறகு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘மாஸ்டர்பீஸ்’ என்று அறிவிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் அநேகமாக அவனுடைய கடைசி காலத்தில்தான்.  இவனோ ஆரம்பத்திலேயே அதை எழுதிவிடப் போவதாகச் சொல்கிறானே என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவனுடைய ஆர்வத்தையும் கண்களில் மிளிர்ந்த நம்பிக்கையொளியையும் பார்த்தபோது இவன் வித்தியாசமானவன் என்று தெரிந்தது. இவனால் எதுவும் சாத்தியமே என்று தோன்றியது.

“கங்கிராஜூலேஷன்ஸ்” என்றேன். “இந்த ஊருக்கு வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! இப்படியொரு இலட்சிய எழுத்தாளனை இங்கு சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. உன் முயற்சி வெற்றி பெறட்டும். என் ஒத்துழைப்பு உனக்கு எப்போதும் உண்டு” என்று விடைபெற்றேன்.
****
பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில்தான் எங்களுக்கு வகுப்பு அமைந்தது. திடீர் மழை வந்துவிட்டால் ஓடிப்போய் கிராஃட் ரூமுக்குள் அடைக்கலமாகவேண்டும். சில நேரங்களில் காக்கைகள் எச்சமிடும் – எங்கள் மீதோ, ஆசிரியர் மீதோ. அப்போது உடனே குழாயடிக்கு ஓடித் துடைத்துக்கொள்வோம்.  மற்றபடித்  துன்பமில்லை.

ஒரே மரத்தடியில் தினமும் தொடர்ந்து ஒரே வகுப்பை நடத்துவதில் ஆசிரியர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே ஜனநாயக முறைப்படி சீட்டுக் குலுக்கி மரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒருநாள் தூங்குமூஞ்சி மரம், ஒருநாள் ஆலமரம், ஒருநாள் கொன்றை மரம்.

அப்படி ஒருநாள் கொன்றை மரத்தின் அடியில் தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோதுதான் ராஜன் ஓடிவந்தான். (நான் ஏழாம் வகுப்பு –‘அ’ பிரிவு. கொன்றை மரம். அவன் ‘இ’ பிரிவு. தூங்குமூஞ்சிமரம்.)

“ஐயா..ஐயா...” என்று ஆசிரியரிடம் ஓடிவந்து ஏதோ சொன்னான். ஆசிரியர் என்னை நிமிர்ந்து பார்த்தார். “சரி, போய்விட்டு சீக்கிரம் வந்துவிடு” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் ராஜன் என்னை வேகமாக அப்புறப்படுத்திக்கொண்டு போனான். “ஒன்றும் பேசாதே! உன் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி உன்னை வெளியே கிளப்பிக்கொண்டு வந்திருக்கிறேன். வா, நம் கடைக்குப் போகலாம்” என்றான்.

எனக்குப் பகீரென்றது. இப்படியெல்லாம் பொய் சொன்னதில்லை நான். அதுவும் தாத்தாவைப் பற்றி. அவருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?
என் முகம் வேர்ப்பதைக் கண்டவன், “என்னடா இதற்கெல்லாம் வேர்க்கிறது உனக்கு! நான் என்ன மாதிரியெல்லாம் போய் சொல்லுவேன் தெரியுமா?” என்றான். “சும்மா ஜாலிக்காகத் தான்! வா, என் கதைக்கு முதல் அத்தியாயம் எழுதுவதற்கு அருமையான கரு கிடைத்துவிட்டது. மறந்துபோவதற்குள் அதை உன்னிடம் சொல்லவேண்டும்” என்றான்.   

அவன் பேசத் தொடங்கியதும்  மெய்ம்மறந்துபோனேன். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினாராமே, அந்த எழுத்தாணி மட்டும் என்னிடம் இல்லையே என்று ஏங்கினேன். அவ்வளவு வேகமாகக் கதையை விவரித்துக்கொண்டே போனான். வந்தியத்தேவன் மாதிரி ஒருவன் அதேமாதிரி வெள்ளைக்குதிரையில் புழுதி கிளப்பிக்கொண்டு போகும் காட்டுப்பகுதியின் வருணனையுடன் கதை தொடங்கியது. யார் யாரோ வந்தார்கள். சோழர்கள், பல்லவர்கள், யவனர்கள், சாவகத்தீவினர்...   பாரசீகத்திலிருந்து கதாநாயகி வருவாள், அதற்கு இன்னும் ஐந்து அத்தியாயங்கள் பொறுக்கவேண்டும் என்றான்.     

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பினோம். என் இடத்தில் இன்னொருவன் அமர்ந்துவிட்டான். என்னைவிடப் பூஞ்சையானவன். அவனை மிரட்டி நகர்த்திவிட்டு இடத்தை மீட்டேன். காற்று சற்றே வேகத்துடன் வீசியது. மரத்தின் மேலிருந்து சில கொன்றைப் பூக்கள் கொத்தாக என் தலையில் விழுந்தன. அடர்சிகப்பு நிறத்தில் இருந்தன. (சரக்கொன்றை அல்ல- அது தங்கமான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.)

அக்கொன்றைப் பூக்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டுவரப்போவதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
(தொடரும்).
அடுத்த பதிவைப் படிக்க: (பதிவு-103)மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2
 © Y Chellappa

12 கருத்துகள்:

  1. அல்டாப் பேர்வழி மாதிரி தெரியவில்லை...

    சுவாரஸ்யத்தை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. சுவையான நடை! சொல்லுங்கள்! மேலே செல்லுங்கள் ! தொடர்வோம்!

    பதிலளிநீக்கு
  3. சார்! அட்டகாசமான ஒரு கதை ஆரம்பித்திருக்கின்றீர்கள்! உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?!!! பாண்டியன் என்ன சொல்லப் போகிறான் என்பதை தயவு செய்து தாமதிக்காமல் பதிவிடவும் சார்! தொடர்கின்றோம்! அருமை சார்!!

    பதிலளிநீக்கு
  4. ஆகா தொடக்கமே அருமை ஐயா
    அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
    தம 6

    பதிலளிநீக்கு
  5. துவக்கமே அபாரம். அடுத்த பகுதியின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. இது உண்மைக் கதையா கற்பனைக் கதையா என்று தெரியவில்லை.
    எனினும் சுவாரஸ்யம்....

    பதிலளிநீக்கு
  7. நீங்கெல்லாம் அப்பவே அப்படீங்களா சார் ? அடுத்த பதிவை நோக்கி...

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் பூத்தது கொன்றை மரம் ...!எட்தனை அத்தியாயங்கள் என்று முடிவு செய்து விட்டீர்களா.?ராஜனின் கற்பனைக் கதைகள் போல , பல பதிவுகள் நீளுமா. ? சுவாரசியம். தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு

  9. //நான் ஏழாம் வகுப்பு –‘அ’ பிரிவு. கொன்றை மரம்.
    அவன் ‘இ’ பிரிவு. தூங்குமூஞ்சிமரம்.//

    ரசிக்கத்தக்க வரிகள்!.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    கவிஞர் (ஐயா)

    கதை ஆரம்பம் மிக நன்றாக உள்ளது படிக்க படிக்க திகட்டவில்லை ஐயா...பகிர்வுக்கு நன்றி
    த.ம8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. விறுவிறுப்பாக உள்ளது. தாமதமாகப் படிக்கிறேன். ஆதலால் பின்தொடர்வதில் தாமதம். பதிவின் ஆரம்பத்தில் தாங்கள் கூறியுள்ள மழபாடி கோயிலுக்குப் பலமுறை சென்றுள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு