புதன், ஜூலை 09, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (1)

நண்பர்களே, சில மாதங்களாக எனது வலைப்பதிவுகள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதை அறிவீர்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று, இந்தியப் பொதுத்தேர்தல். ஒரு வலுவான மத்திய அரசு அமைந்தால் தான் நாட்டிற்கு நல்லது என்ற சிந்தனையை என்னோடு எவ்வளவு பேர் சேர்ந்து செயல்படுத்துவார்களோ என்ற கவலை ஒரு பக்கம் (!) திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணம் நல்லவிதம் அமையவேண்டுமே என்ற கவலை  இன்னொரு பக்கம்.   இரண்டுமே இப்போது இனிதாக நிறைவேறி விட்டதால், இனித் தொடர்ந்து எழுதுவேன். வழக்கம் போல ஆதரவு தாருங்கள். (படித்தோ, அல்லது பின்னூட்டம் இட்டோ, அல்லது இரண்டு வகையிலுமேயோ.)

இடையில் சில நாட்கள் முகநூல் (Facebook) பக்கம் சென்றுவந்தேன். முகநூல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே. ‘முக’ நூல் என்பதாலோ என்னவோ, பலர், தினமும் தங்கள் முகங்களைப் பல்வேறு கோணங்களில் அழகுபடுத்திக்கொண்டு, அந்தப் படங்களைச் சூரியன் இந்தியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக ஒருமுறையும்,  சூரியன் ஆஸ்திரேலியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக இன்னொரு முறையும் வெளியிட்டுவருவதைப் பார்க்க முடிந்தது. சிலரோ, வெறும் ‘காலை வணக்கம்’ ‘இரவு வணக்கம்’ மற்றும், ‘மதிய வணக்கம்’ மட்டுமே போட்டு, அதற்கும் பல நண்பர்களிடமிருந்து ‘லைக்’ பெறுவதையும் பார்த்தேன். சிலர், திருக்குறள்,   சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் இவற்றிலிருந்து மேற்கோள் காட்டுவதன்மூலம் மெல்லத் தமிழ் இனிச் சாகாதிருக்க முயற்சி செய்வதையும் கண்டேன். மார்க் ஜக்கர்பர்க் என்னும் இளைஞனின் சிறுமுயற்சி எப்படி இந்த உலகிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் மிக எளிதாக ஒன்றிணைத்துவருகிறது என்பதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் முகநூலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்றையும் என்னால் உணர முடிந்தது.


முகநூலில் பதிவு இடுபவர் யாராயிருப்பினும், அவர் என்ன மனநிலையில் எழுதினார் என்பதைப் பல சமயம் வாசகர்கள் புரிந்துகொள்ள இயலாத குழப்பம் நிலவுகிறது. இதனால், பின்னூட்டங்கள் வாயிலாகப் பெரும் வார்த்தைப்போர்கள் அன்றாடம் நடந்துவருவதைக் காண்கிறேன். தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி வேண்டாத விஷயங்களை எழுதித் தனது நெஞ்செரிச்சலைத் தணித்துக்கொள்ளும் போக்கு மிகவும் வளர்ந்து வருகிறது. படிக்கும்போதே நம்மையும் அந்த விவாத வலையில் இழுத்துக்கொண்டுபோய் விடுகிறது. உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உறக்கத்திற்குச் சற்று முன்னரே பெரும்பாலானவர்கள் முகநூல் பார்ப்பதால், உடலின் தளர்ச்சியும் உள்ளத்தின் அயர்ச்சியும் என்ன மாதிரிப் பின்னூட்டம் இடுகிறோம் என்று சரியாகப் பகுத்துணரமுடியாத இக்கட்டைத் தோற்றுவித்துவிடுகின்றன. இன்றுகூட, காமராஜரைச் சாக்காகவைத்து எழுதப்பட்ட முகநூல் பதிவில் பின்னூட்டம் இட்ட ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள். இதனால் முகநூல் என்றாலே அச்சம் கொள்ளவேண்டியிருக்கிறது.

இதே போன்ற அபாயம் வலைப்பதிவுகளிலும் உண்டென்றாலும், முகநூலை விடவும் சற்றே உயர்ந்த பீடத்தில் வலைப்பதிவுகள் அமர்ந்திருப்பதை மறுக்கமுடியாது. முகநூலில் ஆரம்பித்து வலைப்பதிவராகத் தங்களை UPGRADE  செய்துகொள்வதே சராசரி எழுத்தாளனின் கனவாக இருக்கிறது. வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் பெரும்பாலும் அறிவுஜீவிகள் என்பதால் அவர்களிடையில் நாமும் உழல்வதன்மூலம் பூவோடு சேர்ந்த நாறும் மணப்பதுபோல் மணக்கலாமே என்ற இளம் ஆசை எனக்கு உண்டு. எனவேதான் இனி முகநூல்பக்கம் போகவேண்டாமென்று எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பதிவுலகமே போதும்.

இடைக்காலத்தில், முகநூலில் ஒரு நண்பர், அமெரிக்க வாழ்க்கை பற்றிப்  பின்வருமாறு கேட்டிருந்தார் (Sundararajan Sudha):


ஒருவாரம் அமெரிக்கா போய் வந்தாலே ஒரு பயணக்கட்டுரை எழுதிவிடத் துடிக்கும் பலர் நடுவே, பலமுறை சென்றுவந்த பிறகும் முறையான பயணக்கட்டுரை எழுதுவதற்கு நான் கூச்சப்படவேண்டியவனாகிறேன். காரணம், இன்றைய காலகட்டத்தில், வீட்டிற்கு ஒருவர் `அமெரிக்காவில் பணியாற்றுபவராகவோ, உயர்படிப்பு படித்துக்கொண்டிருப்பவராகவோ உள்ளதால், அவர்கள்மூலம் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அமெரிக்க வாழ்வுமுறையின் அம்சங்கள் ஏற்கெனவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. புதிதாக நாம் சொல்ல என்ன இருக்கும் என்ற தயக்கம் ஏற்படுகிறது. மேலும், கேபிள் டிவி வந்தபின், எல்லா அமெரிக்க சேனல்களையும் பார்க்கமுடிவதால், உலகம் சுருங்கிவிட்டது. நான் சொல்லவரும் விஷயங்களை எனக்குமுன்பாகவே நீங்கள் தெரிந்துகொண்டிருக்கக் கூடும்.
இருந்தாலும், நண்பர் ஒருவர் கேட்டுவிட்டதால், அவருக்காக இந்தப் பதிவை எழுதுகிறேன். உங்கள் அமெரிக்க அனுபவம் வேறாக இருந்தால், அன்புகூர்ந்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.  

கேள்வி (1): அமெரிக்காவின் பூர்வீக மக்கள் இந்தியர்களை எப்படி பார்க்கிறார்கள்?

‘பூர்விக’ மக்கள் என்னும்போது, ‘நீக்ரோக்கள்’ என்றும், ‘கறுப்பினத்தார்’ என்றும் முன்னால் அழைக்கப்பட்டுவந்தவர்களைப் பற்றிச் சொல்கிறார் என்று தெரிகிறது. இவர்கள் இப்போது ‘ஆப்பிரிக்கன் அமெரிக்கர்கள்’ என்றுதான் அழைக்கப்படவேண்டும். (ஆனால் அமெரிக்கப் பத்திரிகைகளில்  blacks  என்ற சொல்லைத் தாராளமாகப் பயன்படுத்துவது இன்னும் நிற்கவில்லை.)

பொதுவாக     ஆப்பிரிக்கன் அமெரிக்கர்கள், வாழ்க்கைத்தரத்தில் அமெரிக்க வெள்ளையர்களை (whites) விடச் சற்றுக் குறைந்த நிலையிலேயே இருப்பதாகத்தான் தெரிகிறது. பஸ்களிலும் ரயில்களிலும் அலுவலகம் செல்லும் கூட்டத்தைப் பார்க்கையில், அவர்களின் எண்ணிக்கை, வெள்ளையர்களை விடக் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், சம்பளம் குறைவாகத் தரும் தொழில்களில் அவர்களே பெருவாரியாக இருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்பவர்களை எடுத்துக்கொண்டால், உயர் படிப்புக்காகவோ, அல்லது H-1-B  விசா மூலமாகவோ செல்பவர்களே மிகுதி என்பதால், இவர்கள் அனைவருமே, ஆப்பிரிக்கன் அமெரிக்கர்களிடமிருந்து எந்த வசதியையும் திருடிக்கொள்ள வேண்டிய நிலையில் இல்லை. எனவே, இந்தியர்களுக்கும் அவர்களுக்கும் போட்டி பொறாமை இருப்பதை எங்கும் என்னால் காண இயலவில்லை. மேலும், இந்தியர்கள் தங்குமிடங்களும் அவர்கள் தங்குமிடங்களும் வெவ்வேறு பகுதிகளில் இருப்பதால் ஒருவரின் வாழ்வுமுறை அடுத்தவரைப் பாதிப்பதாகத் தெரியவில்லை. 

இந்தியக் குழந்தைகளும் அமெரிக்கக் குழந்தைகளும் ஒரே பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. பெரும்பாலான இந்தியப் பெண்கள் கணவரின்  dependent visa வில் இருப்பதால், அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதியில்லை. எனவே தங்கள் குழந்தைகளின் கல்வியை, இந்தியாவில் இருப்பதுபோன்றே, தங்கள் முழுப் பொறுப்பில் கொண்டுவந்து விடுகிறார்கள். ‘அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்பதை நிலைநாட்டுகிறார்கள்.  Spelling Bee  போன்ற கடினமான போட்டிகளில் இந்தியக் குழந்தைகள் தொடர்ந்து பல வருடங்களாகப் பரிசுகளைத் தட்டிக்கொண்டு வருகிறார்கள். இந்தியர்களின் வருமானமும், அங்குள்ள அமெரிக்க வெள்ளையர்களின் வருமானத்தை எட்டும் அளவுக்கோ அல்லது இரண்டாம் இடத்திலோ இருப்பதால், இந்தியர்களுக்குத் தானாகவே ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலிருந்து வந்து எங்கள் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்கிறாயே- என்று எந்த இடத்திலும் குழாயடிச் சண்டைகள் நடைபெறுவதில்லை. (இங்கிலாந்தில் இது சகஜம் என்கிறார்கள்.) உள்ளூர் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகும் நிலையிலும், இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர்களும், கொரியர்களும், மெக்ஸிகன்களும் லட்சக்கணக்கில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் வந்து குவிந்தபோதிலும், உள்ளூர் வேலை உள்ளூர்க்காரனுக்கே என்று யாரும் சங்கு ஊதுவதில்லை. 

(கணினித்துறையில்  INFOSYS, TCS, CTS, HCL  போன்ற நிறுவனங்களுக்கு எதிராக அவ்வப்பொழுது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கம் இடுவதுண்டு. அதெல்லாம் தேர்தல் காரணங்களுக்காக  மட்டுமே. உள்ளூர இந்தியர்களை யாரும் வெறுப்பதில்லை.)  

கேள்வி (2) அமெரிக்காவில் கிரீன்கார்டு இளைஞர்களுக்கு பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கமுடிகிறதா?

இது மிக நுட்பமாகக் கவனிக்கவேண்டிய விஷயம். பொதுவான பதில் கிடையாது. என்றாலும் கீழ்க்கண்ட சம்பவங்கள் பெற்றோர் என்ற முறையில் உங்கள் நிம்மதியைக் குலைக்ககூடும்:

(அ) உங்கள் மருமகன் கிரீன் கார்டு வைத்திருந்தால், உங்கள் மகள் அமெரிக்காவில் வேலை தேடிக்கொள்ள வாய்ப்பு உண்டு. வேலைசெய்து சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெண், தன்னைக் காத்துக்கொள்ளும் திறம் பெற்றுவிடுகிறாள் என்பது இந்தியாவைப் போன்றே இங்கும் உண்மையே. சம்பாதிக்கும் மனைவியைக் கணவன் ஓரளவாவது மதிப்போடுதான் நடத்தியாகவேண்டும்.   எனவே தொல்லைகள் குறைவு.

(ஆ) கிரீன் கார்டு பெறுவதற்குக் குறைந்தது ஏழு முதல் பதினைந்து ஆண்டுகள்வரை ஆகலாம். அமெரிக்காவிலேயே  postgraduation முடித்த இளைஞர்கள் இதில் முன்னுரிமை பெறுவார்கள். கணவனுக்கு க்ரீன் கார்டு வராதவரை, இந்திய மனைவி அங்கு வேலை பார்க்க இயலாது. இது அவளுக்கு மிகப் பெரிய மன அழுத்தம் தரக்கூடியதாகும். நாள் முழுதும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கவேண்டும். பொருளாதார ரீதியாகக் கணவனுக்குத் துணை செய்யமுடியவில்லையே என்ற பெருங்கவலை அவள் கண்களில் கருவளையத்தைப் பெரிதாக்கும். இந்தியாவில் நல்ல வேலையில் இருந்துவிட்டு, திருமணத்தின் காரணமாக அமெரிக்கா வந்தவள் என்றால் கையிருப்பு இல்லாமல் கணவன் பணத்தைச் செலவழிக்கிறோமே என்ற குற்ற உணர்வு அவளைத் தவிக்க வைக்கும். கணவனுக்குத் திடீரென்று வேலை போய்விட்டால், அல்லது, ஒரு  project  ஐ விட்டு விலகி இன்னொரு   projectக்கு அவன் செல்வதாக இருந்தால், இடைப்பட்ட காலத்திற்குச் சம்பளம் கிடையாது என்ற நிலைமை அவர்களின் கவலையை மேலும் அதிகப்படுத்திவிடும். மருத்துவச் செலவுகள் வராதவரை நிம்மதி. வந்துவிட்டாலோ, காப்பீடு இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள் உங்களை நோயாளியாக ஏற்கமாட்டார்கள். விளையாடும்போது கால் இடறி விழுந்த மாணவன் ஒருவன், இந்தியா போய் மருத்துவம் பார்த்துக்கொண்டு திரும்பிவந்தான். கேட்டால் அதுதான் சிக்கனம் என்றான்.

வரதட்சிணைக் கொடுமை போன்ற காரணங்களால் மனைவியர் துயரப்படுவது இந்தியாபோன்றே இங்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்தியாவை விட அமெரிக்காவில் பெண்களுக்கு நிச்சயமான  பாதுகாப்பு உண்டு. இரவில் பன்னிரண்டு மணியானாலும் தனியாகச் சென்று வரலாம்.  911  என்ற போலீஸ் தொலைபேசி, கூப்பிட்ட உடனே உதவிக்கு வரும்.

வேலைக்குப் போவதில்தான் மனைவியருக்குப் பிரச்சினையே தவிர, வசதி இருந்தால் தாங்கள் விரும்பிய படிப்புகளைத் தொடரலாம். படிப்பை முடித்தபின், வேலை பெறவும், அதன் காரணமாகத் தங்களுக்கே  H-1-B விசா பெற்றுக்கொள்ளவும்  வழியுண்டு-  வேலைதரும் நிறுவனம் ஒப்புக்கொண்டால். (இதில் பல  conditions apply!)

     (மற்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்த பதிவில் காணலாம்.)
© Y Chellappa

23 கருத்துகள்:

  1. நிச்சயமான பாதுகாப்பு இங்கும் வர வேண்டும்...

    இன்னும் அறியாதவற்றை அறிய காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. முக நூல் முகம் காட்டுவதற்கு மட்டுமே என்றும், முக நூல் வழியாகக் காதலித்து கொலை வரைச் செல்லுவதும் நடக்கத்தான் செய்கின்றது! கத்திக்கு எப்படி இரண்டு உபயொகங்கள் உண்டோ அது போல முகநூலுக்கும் இரண்டு முகம். நாம் எந்த முகத்தை உபயோகிக்கின்றோம் என்பதைப் பொருத்தே!

    அமெரிக்க வாழ்க்கை நாம் அறிந்தவரை பல நல்ல விஷயங்கள் இருக்கத்தான் இருக்கின்றது! ஆனால், இந்தியாவில் மிகச் சுதந்திரமாக இருந்தவர்களுக்கு....வண்டியை எங்கு வேண்டுமானாலும் பார்க் செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் இய்ற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ளலாம், எங்கு வேண்டுமானலும் குப்பை போடலாம், வெற்றிலையைக் குதப்பித் துப்பலாம், அடுத்த வீட்டு மாமரத்தில் மாங்காய் கல்லெறிந்தோ இல்லைத் தெரியாமலோ பறிக்கலாம், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக நமது வண்டியை நிறுத்தலாம்....அதனால் ட்ராஃபிக் ஜாம் ஆனாலும்.....சிக்னலில் நிற்காமல் செல்லலாம்......இன்னும் பல....இது போன்ற சுதந்திரம் உண்டா சார்?!!!

    பதிலளிநீக்கு
  3. என்னைப் போன்று படிக்கின்ற பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உங்களின் இந்த அமெரிக்க தகவல்கள் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம் !
    #வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் பெரும்பாலும் அறிவுஜீவிகள் #
    நானும் ஒரு வலைத்தள பதிவர் என்பதால் வந்த சந்தேகம் ... அந்த பெரும்பாலோரில் நானும் இருக்கிறேனா ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்கா போவோரில் நிறைய பேர் இங்கெ திரும்பி வர விரும்புவதில்லையே.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. Mr. ChellappA:

    I removed all my comments. I dont think your blog is good enough for having my opinions (in any form) here. Thanks for the understanding!

    பதிலளிநீக்கு
  14. அமெரிக்காவின் பூர்வீக மக்கள் கறுப்பினத்தார் அல்ல அவர்கள் செவ்விந்தியர்கள் ...

    பதிலளிநீக்கு
  15. அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள்தான் ஐயா
    அறியாத பல செய்திகளைஅறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  16. நெடுநாள் கழித்து உங்களின் எழுத்தைக் கண்டு மகிழ்ச்சி. முகநூல் தொடர்பாக தாங்கள் கூறிய கருத்துக்களை ஓரளவு ஏற்கிறேன். இருப்பினும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு தளமாக அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தாங்கள் கூறியது போல காலை வணக்கம், மாலை வணக்கம் போன்றவற்றை விட்டுவிட்டு எழுதலாம். பயணக்கட்டுரை பற்றிய தங்களது கருத்தை மாற்றி தாங்களும் பயண அனுபவங்களை எழுதலாம் என்பது என் வேண்டுகோள். தங்கள் மூலமாக மாறுபட்ட பல அனுபவங்களை நாங்கள் தெரிந்துகொள்ளவும் அது உதவும் என்பது என் நம்பிக்கை. தஞ்சையைச் சேர்ந்த அண்ணன் தங்கம் அவர்களின் அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை என்ற பயண நூலைத் தாங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஆய்விற்கான பதில்கள்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  18. MR Chellappa.
    Please stop your nonsense. The first answer shows that you have no idea about America.
    ///இந்தியாவிலிருந்து வந்து எங்கள் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்கிறாயே- என்று எந்த இடத்திலும் குழாயடிச் சண்டைகள் நடைபெறுவதில்லை. ///////
    Its really stupid of you to write about this when you have no idea about the subtle discrimination.

    பதிலளிநீக்கு
  19. முக நூல் ஆபத்து பற்றிய விளக்கம் கசப்பான உண்மை!

    ஐயா, நானறிந்தவரை அமெரிக்காவின் பூர்வகுடிகள் செவ்விதியர்களேயாவர். அவர்கள் இந்தியர்கள் என அழைக்கபடுவதற்கு காரணம், கிரிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்கபோகிறேன் என்று கிளம்பி, திசை தவறி அமெரிக்க கண்டத்தை அடைந்தார். அதனை அவர் இந்தியா என கருதியதால் அங்கிருந்த மக்களை " இந்தியர்கள் " என அழைத்தார். அதுவே நிலைத்துவிட்டது ! பின்னர் இத்தாலிய மாலுமி அமெரிகோ வெஸ்புஸி, கொலம்பஸ் கண்டது அமெரிக்க கண்டம் என தெளிவுபடுத்திய பிறகு அவரின் பெயரின் நினைவாகவே அமெரிக்கா பிறந்தது. பின்னர் வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை மூலம் இந்தியாவின் இன்றைய கேரளாவின் கோழிகோட்டில் முதல் முறையாக கால்பதித்தார்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
  20. அமெரிக்க பற்றிய உங்கள் பார்வையை அறிய முடிந்தது. அமெரிக்க பழங்குடிகளை ஆப்பரிக்க அமெரிக்கர் என்று ஏன் அழைக்க வேண்டும் என்ற ஐயம் உண்டு

    பதிலளிநீக்கு
  21. விளையாடும்போது கால் இடறி விழுந்த மாணவன் ஒருவன், இந்தியா போய் மருத்துவம் பார்த்துக்கொண்டு திரும்பிவந்தான். கேட்டால் அதுதான் சிக்கனம் என்றான்.//

    சிறிய வாக்கியம்தான் ஆனால் அதன் வீரியம் ?
    இந்தத் தொடர்ந்தால் .. மகிழ்வோம்

    பதிலளிநீக்கு
  22. American Indian means red indians,but they don't like to call them as red indian but they like to call just Indian and with their own tribes name.
    For example, novajo Indian like that.

    Black people are called African American.

    For us,like Indian always describe as a East Indian or Asian Indian.
    Thanks

    பதிலளிநீக்கு