சனி, மே 24, 2014

விநாயகனும் வெற்றித்திருமகளும் (‘அபுசி-தொபசி’-42)

(கடந்த ஒருமாத காலமாக “அபுசி-தொபசி” வெளிவராமல் போனதற்கு இந்தியப் பொதுத்தேர்தலும் நரேந்திரமோடியும் கத்திரி வெயிலும் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத மின்வெட்டும்  மட்டுமே காரணங்களாக இருக்கமுடியாது. பள்ளி விடுமுறை என்பதால் எனது மேசைக்கணினியை பெரும்பாலான நேரம் ஆக்கிரமித்துக்கொண்டு எனக்கு இடமளிக்க மறுத்த எனது பேரனும் ஒரு முக்கியக் காரணம். ஆனால் இதை அவனிடம் சொல்லிக் கோள்மூட்டிவிட வேண்டாம், பிளீஸ்! இனிமேல் வாரம் தவறாமல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன். ஜூலைமுதல், மீண்டும் வாரம் இருமுறையாகத் தொடரும்.)

விநாயகனும் வெற்றித்திருமகளும்

1975இல் கடலூரில் வங்கி மேலாளராக வந்து சேர்ந்தேன். நகரின் ஒரு மூலையில், பெண்ணையாற்றங்கரைக்குச் சிறிது முன்னால் பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் வங்கி இயங்கத் தொடங்கியது. பெரும்பாலும் குடியிருப்புகளும் ஒருசில மளிகைக்கடைகளும் மட்டுமே இருந்த மஞ்சக்குப்பம் என்ற பகுதி அது. ஒரு வங்கி துவக்கப்படுவதற்கான பொருளாதார அம்சங்கள் எதுவும் இல்லாத பகுதி.

புதிதாக வங்கி துவங்கினால் மேலாளருக்கு உள்ள ஒரே பணி ‘டெபாசிட்’ சேகரிப்பதுதானே! அதிலும் வணிகர்கள், தொழிலதிபர்கள் முதலிடம் பெறவேண்டியவர்கள் அல்லவா? அவர்களைத் தேடிக்கொண்டு நான் போகவேண்டியிருந்த பகுதி, திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்பட்ட ‘கடலூர்-புதுநகர்’. அங்குதான் பேருந்து நிலையமும் ரயில் நிலையமும் இருந்தன.

‘கற்றுணை பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயமே’

என்று பாடப்பெற்ற பாடலீசுவரன் திருக்கோயிலும் அங்குதான் இருந்தது.
 பாடலீஸ்வரர் திருக்கோயில் (நன்றி- தினமலர்.காம்)

திருமணம் ஆகாத ‘பேச்சிலர்’களில் நானும் ஒருவனாக இருந்த காலம் அது.  உண்மையில் பேச்சுத்துணைக்கும் ஆளில்லாத நிலைமைதான். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி எங்கள் வங்கியில் கணக்கு துவங்குங்கள் என்று கேட்பதில் எனது மாலைகளும் இரவுகளும் செலவழிந்துகொண்டிருந்தன.

அப்போதுதான் ஒருநாள் லாரன்ஸ் ரோட்டில் ‘பூம்புகார்’ என்ற கடையைப் பார்த்தேன். தமிழக அரசின் நிறுவனம். கைவினைப் பொருட்களின் வணிகத்திற்காக மிகுந்த முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பீங்கானில் செய்யப்பட்ட ஒரு விநாயகர் பொம்மை என்னைக் கவர்ந்தது. வெள்ளை வெளேர் என்று நின்ற கோலத்தில் இளமைத்துடிப்புடன் இருந்தார் பிள்ளையார். அந்த நாளில் நின்ற கோலத்துப் பிள்ளையார் எங்கும் விற்கப்படுவதில்லை. பெரும்தொப்பையுடன், சுண்டெலியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இடம்புரி விநாயகர்களே அதிகம். வலம்புரி விநாயகர் சில கடைகளில் கிடைக்கலாம். விலை அதிகம்.   அது மட்டுமன்றி, ‘கல்கி’யின் சின்னமான ‘நடனமாடும் பிள்ளையாரை’ப் பார்த்துப்பார்த்து எனக்கு அவர்மேல் ஒரு காதல். அந்த மாதிரி ஒரு பிள்ளையார் கிடைத்தால் வாங்கிவிட வேண்டுமென்று மிகுந்த ஆசை. ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் கூடவேயில்லை.   

கடையில் விசாரித்தேன். விலை சற்றே அதிகம் சொன்னார்கள். பரவாயில்லை என்று பொம்மையை எடுத்தேன். நாலைந்து இருந்தன. ஆனால் எதிலும் ஃபினிஷிங் சரியில்லை என்பதால் வருத்தத்துடன் விலகினேன்.

1976 மே மாதம் 23ஆம் தேதி காலை மீண்டும் பூம்புகாருக்குச் செல்ல நேரிட்டது. என்ன ஆச்சரியம்! எனக்கு எந்த மாதிரி இழைப்பில் வேண்டுமென்று விரும்பினேனோ, அதே மாதிரி அழகிய அமைப்பில், பிசிறில்லாமல், வெள்ளைப் பீங்கானில் (ஒரே  ஒரு)  விநாயகப் பெருமான் அங்கே வீற்றிருந்தார்! ஓடிச் சென்று வாங்கினேன்.  ஆனால், என்னுடன் வந்திருந்த நண்பருக்கும் அதே விநாயகர்தான் வேண்டியிருந்தது. அடுத்தநாள், அதாவது, 1976 மே மாதம் 24ஆம் தேதி,   கடலூர் வாசவி கல்யாண மண்டபத்தில் நடக்கவிருந்த ஒரு திருமணத்திற்கு மாப்பிள்ளைத் தோழராக வந்திருந்தார் அவர். மணமகளின் பெயரில் வெற்றித்திருமகள் இருந்தாளாம்.  ‘இந்த விநாயகரை நான் திருமணப்பரிசாக அவர்களுக்கு அளிக்கப்போகிறேன்’ என்றார். ‘நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த விநாயகரை நீ எப்படி வாங்கலாம்’ என்று அவருடன் சண்டை போட முடியாத இக்கட்டான நிலையில் நான். அவர்தான் வென்றார்.

அந்தப் பெண்மணிக்கும் இந்த விநாயகர் மிகவும் பிடித்துப் போய்விட்டாராம். தன் பூசையறையில் வைத்துவிட்டார். அந்த விநாயகரைத்தான் இதோ இங்கே பார்க்கிறீர்கள்:


என்ன பொருத்தம் பாருங்கள், இன்றும் மே மாதம் 24ஆம் தேதிதான்! அன்று கடிமணம் புரிந்து, அந்த விநாயகரின் பேரருளால் கருத்தொருமித்து, மக்கள்-சுற்றம் பெருகி, இனிய வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தம்பதியரின் திருமணப் புகைப்படம் இதோ:
  

மணமகள் பெயர்: விஜயலட்சுமி.
மணமகன் பெயர்: செல்லப்பா.  

(இவர்தான், பின்னாளில் ‘இராய.செல்லப்பா’, ‘செல்லப்பா யக்யஸ்வாமி’,  ‘இமயத்தலைவன்’ என்ற பெயர்களில் தனக்குத் தோன்றுவதை அவ்வப்போது எழுதி உங்களுக்குத் தொல்லை தந்துகொண்டிருப்பவர்!)    

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa
Email: chellappay@yahoo.com

16 கருத்துகள்:

  1. திருமண நன்நாள் வாழ்த்துக்கள் ஐயா
    தம 1

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு வயதான பின்பும் பளபளவென்று மின்னுகிறாரே விநாயகன் ! கணவனின் அன்பு பரிசு என்பதால் நல்ல பராமரிப்போ ?
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவனைத்தான் சரியாகப் பராமரிக்க முடியவில்லை, பொம்மையையாவது பராமரிப்போமே என்றே நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்!

      நீக்கு
  3. மண நாள் வாழ்த்துக்கள். பழைய அரிய கருப்பு வெள்ளை புகைப்படம் பதிவிற்கு அணி சேர்க்கிறது. தாங்கள் எழுதுவது தொல்லையல்ல, எழுதுங்கள். தொடர்ந்து படிக்கிறேன். நேரம் இருக்கும்போது மறுமொழி எழுதுகிறேன். அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது, என் தளத்திற்குப் பெருமை சேர்க்கிறது ஐயா! மிக்க நன்றி.

      நீக்கு
  4. மணநாள் வாழ்த்து! வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியோரின் வாழ்த்துக்குத் தலை வணங்குகிறேன் ஐயா! மிக்க நன்றி!

      நீக்கு
  5. 38வது திருமணநாள் வாழ்த்துக்கள்
    ///,இதை அவனிடம் சொல்லிக் கோள்மூட்டிவிட வேண்டாம், பிளீஸ்! //
    இன்று சொல்ல மாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. இறுதியில் நீங்கள் காதல் கொண்ட விநாயகர் தங்களிடமே வந்துவிட்டாரே!

    எங்கள் இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! விநாயகருக்கு என் மீது எப்போதுமே காதல் உண்டு! அது ஒரு தனிக்கதை! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  7. இதயங்கனிந்த திருமணநாள் வாழத்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
  8. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். வெற்றிச் செல்வி விஜயலட்சுமிக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்

    பதிலளிநீக்கு