வியாழன், ஏப்ரல் 10, 2014

பாவம் பாத்திமா! (‘அபுசி-தொபசி’-41)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

(அபுசி-தொபசி – யில் ‘பு’ மட்டும் இன்று).

பு: புத்தகம்

சோவியத் ரஷியாவில் அங்கம் வகித்துவந்த சின்னச்சின்ன நாடுகளுள் ஒன்று, ஒசேட்டியா. அந்த ஒசேட்டிய நாட்டின் சிறந்த ஓவியராகவும் கவிஞராகவும் போற்றப்படுபவர், கொஸ்தா கெதாகுரோவ் (KOSTA KHETAGUROV) ஆவார். ‘ ஒசெத்தியாவின் இசைக்காவியம்’  (THE OSSETIAN LYRE) என்ற அவரது நூல் தேசிய நூலாகவே திகழ்கிறது. சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ரஷ்யப் புரட்சி மூள்வதற்குக் காரணகர்த்தர்களாக விளங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர். பலமுறை நாடு கடத்தப்பட்டார். எனினும் தம் கவிதைகளில் புரட்சித்தீயை அணையாமல் காத்தவர். துரதிர்ஷ்டவசமாக, ரஷியப் புரட்சி ஏற்பட்டு லெனின் ஆட்சிக்கு வரும் முன்னரே இவர் மரணம் அடைந்தார். (1906).

எனது நூலகத்தின் புழுதியைத் துடைத்துக்கொண்டிருக்கையில் கிடைத்தது, என்சிபிஎச் 1989 இல் வெளியிட்ட “கொஸ்தா கெதாகுரோவ் கவிதைகள்” என்ற நூறு பக்க நூல். இதில் கொஸ்தாவின் 25 சிறு கவிதைகளும், ‘பாத்திமா’ என்ற நீண்ட கவிதையும் இடம்பெற்றுள்ளன. சிறு கவிதைகளை  நா.முகம்மது ஷெரிப் என்பவரும், ‘பாத்திமா’வை டாக்டர் கா.செல்லப்பனும் மொழிபெயர்த்துள்ளனர்.  

சோவியத் ரஷியாவின் இன்னொரு பெரும் கவிஞரான தாரா ஷெவ்சென்கோ தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்டவர். அவருடைய கவிதைகளைப் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். (இன்னொருவரும் மொழிபெயர்த்திருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.) ஆனால் கொஸ்தா கெதாகுரோவ் கவிதைகளை இப்போதுதான் படிக்கிறேன். (கடந்த 24 வருடங்களாகப் பத்திரமாக வைத்திருந்தேன் என்பதே பெரிய விஷயம் அல்லவா?)

கொஸ்தாவின் சிறு கவிதைகளாக இடம் பெற்றவற்றில் பெரும்பாலானவை கதைக்கவிதைகள். அவற்றைவிடவும் சுவையான  ‘பாத்திமா’வோ ஒரு குறுங்காவியம். காக்கசிய நாட்டின் பழம்பாடல் ஒன்றின் விரிவுபடுத்திய வடிவம். அதிலிருந்துதான் சில பகுதிகளை எடுத்துக்காட்டப்போகிறேன்:

மனைவியை இழந்தவன் நயீப். அவனுடைய மைந்தன் டியாம்புலத். அக்காலத்தில் காக்கசியர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் உள்நாட்டுப் போர்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அப்படிப்பட்டதொரு போரில் பங்கெடுத்துக்கொண்டு ஐந்தாண்டுகளுக்கு முன் போனவன்தான், டியாம்புலத். என்ன ஆனான் என்றே தகவல் தெரியவில்லை.
 
கவிஞர் கொஸ்தா - படம்: நன்றி: விக்கிபீடியா
நயீபின் வளர்ப்பு மகள்தான் பாத்திமா. இளம் அழகி. அவளுக்குக் கணவனைத் தேடுகிறான் நயீப். வருகின்ற வரன்களையெல்லாம் இவள் மறுதலிக்கிறாள். நயீப் அவளைக் கெஞ்சுகிறான். நீ மணம்புரிந்துகொண்டுவிட்டால் என் கடமை முடிந்துவிடுமே என்கிறான். அவளோ ஏதோ ஒரு காரணத்தால் திருமணத்தில் விருப்பம் இல்லாதிருக்கிறாள். அப்போது நடக்கும் உரையாடல் இது, கவிதை வடிவில்:

அன்பு மகளே, இதோ பார்.
என் தலை வெள்ளியாய் மாறிவிட்டது.
விரைவில் ஒரு கல்லறைமேடு
என் எலும்புகளை மூடிவிடும்.

உன் அன்னை இறந்த நாளில்
ஒண்ட இடமின்றி அனாதையாய்
நம் ஊரில் நீ நின்றபோது
உன்னை நான் ஏற்றேன்
என் சொந்த மகளாய்.

உன்னைப் போற்றுவேன் என
பெரியவர்களிடம் புனித வாக்குக் கொடுத்தேன்.

நம் மண்ணின் சட்டப்படி
நல்லதொரு இளவரசனுக்கு
உன்னை உறவாகுவேன் என்றேன்.

இளவேனிற் காலத்தில் மொட்டவிழும்
தென்னக ரோஜா போல்
இந்த மலைகளின் அணிகலன் போல்
என் கைகளில் செழித்து வளர்ந்தாய்.

உன் பேரழகு பற்றிய ஊரவர் பேச்சு
பலதடவை வீரமிக்க இளவரசர்களையும்
   உயர்குடிமக்களையும்
நம் வாசலுக்கு ஈர்த்து வந்தது.
அவர்களில் ஒருவர்கூட
உன் கவனத்தை ஈர்க்கவில்லையா?...


பாத்திமா இவ்வளவு நாளாகத் தன மனதிற்குள்ளேயே காதலனாக வரித்து வைத்திருந்தது, டியாம்புலாத்தைத்தான்.  போர்க்களம் செல்லும் வயது வராதபோதும், தந்தையிடம் விரும்பி யாசித்துப் போனான். தந்தை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியுமே! ஐந்து வருடங்களாகியும் தகவல் இல்லையே! இனியும் காத்திருப்பதில் அர்த்தம் என்ன? அவளை மிகவும் விரும்புவதாகச் சொல்லிக்கொண்டு அவளையே சுற்றிவரும் இப்ராஹீம் என்ற அடிமையைத் திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதான்! பாத்திமா பேசுகிறாள்:

“ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
சுவடே இன்றிச் சென்றுவிட்டன.
கனவுகள் இல்லாத இரவுகள் போல
ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்றுகூட இல்லாது-

ஆனால் என்னை நம்புங்கள்,
சிலநேரம் நான் சந்தேகப்படுகிறேன்...
ஆனால் இன்னும் காத்துக் கிடக்கிறேன்...
ஆனால் வெறுக்கத்தக்க பெண்ணின்
கனவிற்கும் சபதங்களுக்கும் விலையேது?

எல்லாத் துன்பங்களும் பயனற்றுப் போயின-

மூதாதையரின் புனிதச் சட்டங்களை நீங்கள்
புறக்கணிக்கக் கூடாது.

நெடுநாள் முன்பு பிரிந்தோம் நாங்கள்,
நிரந்தரமாகப் பிரிந்தோம்
என்பது எங்கள் விதியோ என்னவோ.

எல்லாம் வல்ல அல்லாவிற்குப் புகழ்சேர்க!

நான் பணிகிறேன் தந்தையே!
என் சோக விதிக்கு விட்டுத் தருகிறேன்.

இனியும் ஒரு சுமையாய்
இருக்கத் துணியேன்...

பழஞ்சட்டங்களுக்குப் பணிகின்றேன்.
என் இளமையின் உறுதிமொழியை
     உடைத்தெறிகிறேன்.
டியாம்புலத் பெயரை மறந்துவிடுகிறேன்.
உங்கள் விருப்பம் எப்படியோ
நான் மணம் செய்துகொள்கிறேன்-
இப்ராஹிமை!”

இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான், நயீப். “அவன் கடையன். ஏழை” என்று நினைவுபடுத்துகிறான். “நிதானத்தோடு பேசு, தந்தையே!.. அவன் இதயம் அன்பால் நிறைந்துள்ளது; உணர்வால் ஒளிர்கிறது. அவனுடைய

உழைப்பில், வியர்வை வெள்ளத்தில்,
     கண்ணீர்ப்பெருக்கில்
என் கனவுகளைப் புதைத்துக்கொள்ள
ஆற்றல் கிட்டினால் மன அமைதியும்
    நிறைவும் பெறுவேன்...”

என்கிறாள் பாத்திமா.

அந்தக் கிழவன் தன் கைகளால்
தன் கண்களை மறைத்துக் கொண்டான்,
கம்பளத்தில் சிந்திய கண்ணீரையே
மறுமொழியாகத் தந்தான்.

இப்ராஹிமோடு இவளுக்குத் திருமணம் ஆகிறது. ஒரு குழந்தையும் பிறக்கிறது.

சிறிது காலத்திற்குப் பிறகு ஒருநாள். ஏதோ ஒரு கிராமம். அனைவரும் இரவு உணவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது  குதிரை வீரன் ஒருவன் வருகிறான். ‘வாருங்கள், எங்களோடு அமர்ந்து ரொட்டியைச் சாப்பிடுங்கள். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்று அழைக்கிறார்கள். அவன் தன்னைப் பற்றிச் சொல்கிறான்:

“நானொரு பாடகன். தேச சஞ்சாரி.
ஒரு இடையனும்தான்.
எண்ணத்தில் வறுமையும் சொற்களில்
    செல்வமும் பெற்றவன்.
இளம்பெண்களுக்கு விருப்பம் என்மீது.
முது பெண்டிர்க்கோ எதிரி நான்.

நான் செல்வது தொலைதூரம் அல்ல.
ஆற்றருகில் கிராமம் ஒன்றுள்ளது.
அங்கு திருவிழாக் கோலாகலத்தில்
முதிய நயீபிற்கு மகிழ்வூட்டச் செல்கிறேன்...”.

ஆம், அவன்தான் டியாம்புலத்! போர் முடிந்து எங்கெங்கெல்லாமோ சென்றுவந்து, கடைசியாகத் தன் தந்தையைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறான்.

தந்தை இறந்து போனது அவனுக்கு எப்படித் தெரியும்? தன் காதலி பாத்திமா இன்னொருவனுக்கு மனைவியானதும், அவள் இப்போது ஒரு குழந்தைக்குத் தாய் என்பதும் அவனுக்கு எப்படித் தெரியும்?

பாத்திமாவும் இவனும் சந்திக்கும் காட்சிகளும், இவன் அவளைத் தன்னோடு வரச் சொல்வதும், அவள்’ என்னை மறந்துவிடு, நான் இன்னொருவனுக்கு மனைவி’ என்று சொல்வதும்....உருக்கமான கவிதை. தன் குழந்தை நிலாவொளியில் படுத்துறங்கும்போது அதைப் பார்த்து அவள் ரசிப்பதும், இரவின் நிசப்தத்தில் அவளுக்கு இப்ராஹீம் பட்டுக் கைக்குட்டை அன்பளிப்பு தருவதும் இக்கவிதையின் இன்னும் சில அழகான காட்சிகள். நல்ல மொழிபெயர்ப்பு. நீங்களாகவே படிக்கவேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? ஆற்றோரம் ஓர் இரவில் இவளைச் சந்திக்கவரும்போதே, இவளுடைய கணவன் இப்ராஹிமைக் கொன்றுபோட்டுவிட்டுத்தான் வந்திருந்தான் டியாம்புலத். எப்படியும் இவள்  வசப்படுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால் அது நடக்கவில்லை. அவனிடமிருந்து தப்பி ஓடுகிறாள்.

“ஓ கொலைகாரா ! போய்த் தொலை!”

அம்புபட்ட விலங்குபோல்
அவள் விருட்டென ஓடினாள்.
அந்த இருண்ட இரவில்
மீண்டும் ஒருமுறை அவள்
காட்டுத்தனமாய் உறுமினாள்.

“கொலைகாரா!” – மீண்டும் சிரித்தாள்.

அதாவது டியாம்புலத்தை அவள் கல்லெறிந்து கொன்றுவிடுகிறாள் என்று தெரிகிறது. பிறகு அவள் பித்துப் பிடித்தவளாகிறாள்.

“நிறைவு மொழி” என்ற முடிவுரையில் கவிஞர் இப்படிச் சொல்கிறார்:

கிராமம் இப்போது மாறிவிட்டது.
குடில்கள் இருந்த இடத்தில்
இப்போது வீடுகள்...
ஒரே ஒரு குடிசை மட்டும் மாறவேயில்லை.

அதுதான் பாத்திமாவின் குடிசை.

...பெண்ணொருத்தி கடந்து சென்றாள்,
ஆடைகள் கிழிந்திருக்க வெறுங்கால்களுடன்.

பையன்கள் அவளை விரட்டிச் சென்றனர்,
மண்கட்டியை, கற்களை அவள்மீது வீசிக்கொண்டு ...

எப்போதாவது சிலவேளை அவள்
    சிரிப்புடன் கூறினாள்
“பொறு கொஞ்சம், பொல்லாப் பையா!
வீட்டிருக்கு வருவாய், அப்போது
நான் தண்டனை தருவேன்.”

கவிஞர் கேட்கிறார்: “யாரவள்? ஏன் அவள் சமூகத்தினின்றும் தள்ளியிருக்கிறாள்?”

“அவள் ஒரு பைத்தியம்......பாத்திமா! அவளுக்கொரு பையன் இருந்தான். அவனைக் கழுத்தை நெரிக்கப் போனாள் பாத்திமா. அப்போது ஒரு ஆசிரியர் தடுத்து, அவனை ஒரு விடுதியில் கொண்டு சேர்த்தார்.  இப்போது தனித்திருக்கிறாள். நாள் முழுதும் இப்படித்தான் ஓய்வின்றி பரபரப்பாய் இருப்பாள்.” என்று பதில் கிடைக்கிறது.


இரவு வந்ததும் ஒரு நிழல்போல் நடந்து
ஆற்றங்கரைக்குப் போவாள்.
ஒரு பேதைப் பாடல் பாடுவாள்.

“கதிரவன் மறைந்து விட்டான்.
வையம் துயில் கொண்டுள்ளது.
இரவின் கனவுகள் சிறகடித்து
  மேலே செல்கின்றன.
என் நெஞ்சம் அன்பால் வலி
   அனுபவிக்கிறது.
உனக்காக, என் அன்பே, நான்
    காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்ணீரைத் துடைக்க
   கடிதே வா!”

என்று கவிதையை முடிக்கிறார் கொஸ்தா.

கவிதையை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான பணி. எனினும், அதை, இனிமையான ஒன்றாகச் செய்து காட்டியிருக்கிறார்கள் முகம்மது ஷெரிப்பும்  டாக்டர் கா.செல்லப்பனும். நமது பாராட்டுக்குரியவர்கள்.  

என்சிபிஎச் நிறுவனம், வலது கம்யூனிஸ்ட்டு கட்சிக்குச் சொந்தமானதாக இருந்ததாள், ரஷிய நூல்களைத் தமிழில் வெளியிடும் முதல் உரிமையை இப்பதிப்பகத்திற்கு ரஷியா தந்திருந்தது. அதனால் தான் எண்ணற்ற ரஷிய இலக்கியங்களை இதுவரை என்சிபிஎச் பதிப்பித்துள்ளது. கொஸ்தாவின் கவிதை மாதிரி இன்னும் பல ரஷிய நாட்டுக் கவிதைகளை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் மீள்பதிப்பு இன்று கிடைப்பதில்லை. ஒரே ஒரு முயற்சியாக, அத்தகைய கவிதைகளை மட்டுமாவது ஒரு பெரிய தொகுப்பாக, 500 முதல் 800 பக்க அளவில் ‘ரஷியக் கவிதைத்தொகுப்பு’ என்று ஒரே புத்தகமாகக் கொண்டுவந்தால், அடுத்த புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்பது நமது நம்பிக்கை.  ஆய்வு மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிகவும் பயன்படும்.
***
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

திங்கள், ஏப்ரல் 07, 2014

ஸ்ரீஇராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி 10 ஆம் தேதி( ‘அபுசி-தொபசி’-40)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
கடைசியாக NDTV நடத்திய கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி அநேகமாக 259 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறக்கூடும் என்றும், சுயேச்சைகள் 17 இடங்களில் ஜெயிக்கக்கூடும் என்றும் தெளிவாகியுள்ளது. இரண்டையும் கூட்டினால் மோடிக்கு வேண்டிய அறுதிப் பெரும்பான்மையான 273 இடங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். எனவே, பிரதமர் பதவிமேல் ஆசை கொண்டிருந்த ஜெ.யின் கனவு நிச்சயமாகத் தகர்ந்துபோவது மட்டுமல்ல, அஇஅதிமுக  ஆதரவில்தான் மோடி அரசு பதவியேற்கமுடியும் என்ற அடுத்த எதிர்பார்ப்பும் நிறைவேறப்போவதில்லை. 

ஜெ.யின் மூன்றாவது அனுமானமான, காங்கிரசுக்கு அடுத்தபடியாக ‘தனிப்பெரும்’ குழுவாக அஇஅதிமுக இருக்கும் என்பதும் தகர்ந்துபோகலாம். ஏனெனில், ஜெ.யை விட, மம்தா அம்மையாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று NDTV கணிப்பு கூறுகிறது.


மேற்படி விவாதத்தில் பிரணாய் ராய் கூறியபடி,  தேர்தல் நெருங்க நெருங்க, எந்தக் கட்சியையும் சாராத ‘ஊசலாடும்’ வாக்காளர்களில் சுமார் 1% பேர், அதிகம் வெற்றி பெறக்கூடும் என்று கருதப்படும் கட்சிக்கு ஆதரவாகத் திரும்பும் சாத்தியக்கூறு இருக்கிறதாம். ஆகவே, மோடி சுமார் 300 இடங்களில் வெல்வதும் கூட சாத்தியமாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், எவ்வளவு இடங்களில் அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. உலக அரங்கில் முதுகெலும்பில்லாத அரசாக ஏளனமாகப் பார்க்கப்படும் சோனியா-மன்மோகன் அரசுக்கு மாற்றாக இனி வரப்போகும் எந்த அரசும், தனிப் பெரும்பான்மையுடன் வரமுடிந்தால், அதுவே அமெரிக்கா, சீனா  உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகச் சரியான சமிக்ஞையை அனுப்புவதாக அமையும். ரூபாயின் மதிப்பு பலப்படுவதோடு, உறுதியான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கும் வழிவகுக்கும். நாட்டில் நிலவும் POLICY PARALYSIS  என்னும் ‘கொள்கை முடக்க நோய்’ விரைவில் கட்டுப்படுத்தப்படுவதற்கும் பாதை அமையும்.

புத்தகம்

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ‘HISTORICAL RAMA’ என்ற தலைப்பில் சென்னை திநகர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சியை 05-04-2014 சனிக்கிழமை மாலை கேட்டேன்/கண்டேன். பத்ரி சேஷாத்ரியும் நண்பர்களும் மாதம்தோறும் முதல் சனிக்கிழமையன்று இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்களாம். 

இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் நிறுவினார் ஹரி. அதைப் புரிந்துகொள்ள நமக்கும் சற்று முயற்சி தேவை என்பது தெரிந்தது.

இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128).

இந்த ஆராய்ச்சிக்கு வானவியல் மென்பொருள் மிகவும் பயன்பட்டது என்றார் ஹரி. இராமாயணத்தில் கூறப்பட்ட வானவியல் சான்றுகளை, மேற்படி மென்பொருள்மூலம் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதால் கிடைத்த தகவல்கள் இவை:

  • நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது,  கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.
  • வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.
  • ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.
  • சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (‘கிஷ்கிந்தா’) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.
  • அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற்காகக்  கட்டப்பட்ட பாலம் (‘ராமசேது’) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாகும். 
 
டாக்டர் டி.கே.ஹரி - மனைவி ஹேமா ஹரி
இன்னும் பல செய்திகளைப் பற்றிச் சுருக்கமாகத்தான் பேசமுடிந்தது ஹரியால். நேரமின்மைதான் காரணம். எனவே தனது புத்தகங்களைப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். HISTORICAL RAAMA  என்ற பெயரிலேயே புத்தகம் வந்துள்ளது.  பார்க்கவும்:

அதுபற்றியும், இன்னும் அதிகத் தகவல்களுக்கும் நீங்கள் பார்க்கவேண்டிய அவரது இணையதளம்:           www.bharathgyan.com
(தன் மனைவி வந்திருந்தால் இன்னும் சில தகவல்களைச் சிறப்பாகத் தந்திருப்பார் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார் ஹரி.) 

ஒருநல்ல நிகழ்ச்சிக்குக் காரணமாயிருந்த பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி. என்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்து ரசித்த நண்பர் ஜனார்த்தனன் – விமலா ஸ்ரீராம் தம்பதிக்கும் நன்றி.

(திருமதி விமலா ஸ்ரீராம், இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர தாகம்’ நாவலை  INTO THE HEAVEN OF FREEDOM  என்ற பெயரில்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். கிழக்கு பதிப்பகத்தின்  NHM  வெளியீடு. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ நாவலையும் அவர் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்.)

சினிமா
முன்பெல்லாம் எஸ்.எஸ்.வாசனும், ஏ.வி.எம்.மும் தான் படம் எடுக்க வருவார்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இன்று படம் எடுக்கும் கருவிகளும் அவற்றைக் கையாளும் திறமும் எளியவர்களுக்கும் கைவந்திருக்கிறது. எனவே, குறும்படம் என்ற பெயரில் குறைந்த செலவில் படம் எடுத்து, தம்மை வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

அண்மையில் இம்மாதிரியான இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன். ஒன்று, ‘மகாமுடி’ -  MAHAMUDI; இன்னொன்று: PAROLE.  – பரோல்.

‘மகாமுடி’ என்பது கேரளத்தின் மாகாபலிச் சக்கரவர்த்தியின் கதை. ‘பரோல்’ என்பது சமூக உளவியல் சார்ந்த சிந்தனையைக் கிளறும் சிறுகதை. இரண்டையுமே எழுதி, உருவாக்கி, நடித்தும், இயக்கியும்  இருப்பவர் யார் தெரியுமா? நம் வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான திருவாளர். துளசிதரன் தில்லையகத்து  அவர்கள்! (http://thillaiakathuchronicles.blogspot.com)

பள்ளியில் மாணவர்களுக்குப் பாடமாக நடத்துவதற்குத்தான், இப்படங்களைத் தம் சொந்த செலவில் தயாரித்து, வெளியிட்டிருக்கிறார், துளசிதரன். எத்தகைய இலட்சியவாதி பாருங்கள்!
'பரோல்' - துளசிதரன், அவர் மனைவி உஷா

‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்பது எல்லோர் கண்களையுமே குருடாக்கிவிடும்’ என்று மகாத்மா காந்தி கூறிய கருத்தே,  ‘பரோல்’ குறும்படத்தின் அடிநாதம்.   உடற்குறை உள்ளவர்களுக்கு (  PHYSICALLY CHALLENGED) நாம் சிகிச்சை யளிக்கத் தயாராக இருக்கிறோம்;  உணர்வுக்குறை உள்ளவர்களுக்கு ( EMOTIONALLY CHALLENGED) அப்படிச் செய்கிறோமா? என்று கேட்கிறார் துளசிதரன்.
'பரோல்- கதாநாயகன்-கொலையாளி

ஒரு சிறுமியைப் பலவந்தப்படுத்திக் கொன்றுவிடுகிறான் ஒரு மாணவன். அது தெரிந்து ஆக்ரோஷத்துடன் அவனைக் கொன்றுபோடுகிறார் சிறுமியின் தந்தை. அதனால் ஜெயிலுக்குப் போகிறார். நிம்மதியில்லை. ஜெயிலில் அவருடன் இருப்பவன் சொல்கிறான்: ‘நாம் கொலைகாரர்கள். திரும்பவும் வெளியே போனால் ஒருவரும் சேர்க்கமாட்டார்கள். ஒதுக்கிவிடுவார்கள். நமக்குள்ள  ஒரே வழி, தற்கொலை செய்துகொண்டு உலகைவிட்டே போவதுதான்.’
'பரோல்'- கொலையாளியின் தற்கொலையைத் தடுக்கும் துளசிதரன்

இவர் பரோலில் வருகிறார். எல்லோரும் இவரைக் கண்டு ஒதுங்குகிறார்கள். தனிமைப்படுத்தப்படுகிறார். சமூகம் இவரை வெறுக்கிறது. யாருக்கும் தெரியாமல்,  ஒரு மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அப்போது அவரை ஓடிப்போய்த் தடுக்கிறார், கொல்லப்பட்ட மாணவனின் தந்தை.  ‘உன் உயிரை நீக்கிக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. திருந்தி வாழவேண்டும்’ என்கிறார்.  இக்கதாபாத்திரத்தில் வருபவர்தான், துளசிதரன். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (அவர் மனைவியும், மகளும் கூட!) அது மட்டுமன்றி, படத்தில் நடிக்கும் அனைவரிடமிருந்தும் நல்ல நடிப்பை வெளிக்கொணரும் முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள், தில்லையகத்து துளசிதரன் அவர்களே!  

இந்தப் படத்தை யூடியூபில் பார்க்கலாம்: 
https://www.youtube.com/watch?v=U350Teh_-_o

தொலைக்காட்சி :
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (06-04-2014 ஞாயிறு) விஜய் டிவியில் ‘நீயா நானா’ பார்த்தேன். அதுவும் தற்செயலாகத்தான். இல்லையெனில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே T-20 கிரிக்கெட் இறுதிப் பந்தயம் டாக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ‘நீயா நானா’வை யார் பார்க்கப் போகிறார்கள்!

கோபிநாத் -திருமணத்தில்
நிகழ்ச்சியின் தலைப்பு: “அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் சந்திக்கும் இன்ப துன்பங்கள், சவால்கள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறைகள்“ என்பதாகும். எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், சோம.வள்ளியப்பன், ‘பாரதி மணி’ ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கேள்விகளில் சில:

கேள்வி (1): தனியாக இருப்பதை விரும்புகிறீர்களா, உங்கள் பிள்ளை/பெண்களுடன் வாழ்வதை விரும்புகிறீர்களா?

விடை: பிள்ளை/பெண்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறோம். ஆனால், வேலை நிமித்தம் அவர்கள் வெளியே போய்விடுகிறார்களே! எனவே தனியாக வாழ்வது தவிர்க்க முடியாமல் போகிறது.

கேள்வி (2): நீங்கள் உங்கள் குழந்தைகளை எந்தவிதமான அன்பும் கரிசனமும் காட்டி வளர்த்தீர்களோ, அதே மாதிரி அன்பையும் கரிசனத்தையும் உங்கள் பிள்ளைகள்/பெண்கள் உங்களிடம் இந்த வயதில் காட்டுகிறார்களா?

விடை: நிச்சயமாக இல்லை.

(ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண்மணி மிகத்தெளிவாகச் சொன்னார்: ‘நாங்கள் அவர்களுக்குக் காட்டிய அன்பையும் கரிசனத்தையும் அவர்கள, தங்கள் குழந்தைகளிடம் நிச்சயம் காட்டுகிறார்கள். சந்தேகமேயில்லை. ஆனால், எங்களிடம்தான் காட்டுவதில்லை.’)

கேள்வி (3): பேரக் குழந்தைகளை வளர்க்கும் பணிக்காக உங்களை, உங்கள் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதை இன்பமாகப் பார்க்கிறீர்களா, துன்பமாகப் பார்க்கிறீர்களா?

விடை: குறுகிய காலம் என்றால் அது இன்பமே. பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் சூழ்ந்திருக்கும் வாழ்க்கை மிகவும் இன்பமானதே. ஆனால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பணியே நமக்கு முதன்மையான பணியாய் இருந்துவிட்டால், வயதான காலத்தில் அது ஒரு சுமையாகத்தான் அமைந்துவிடுகிறது. (உதாரணமாக: குழந்தையைத் தூக்கிக்கொள்ளவும், ஓடும் குழந்தையைத் துரத்திப் பிடிக்கவும் உடலில் வலிமை இல்லாமல் போதல்.)

கேள்வி (4): அறுபது வயதுக்கு முன்பு, அறுபது வயதுக்குப் பின்பு – என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விடை: அறுபது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவோம் ஆதலால், ஐந்துமணிக்கே எழுந்து அடுப்பு பற்றவைக்கவேண்டியதில்லை. செய்தித்தாளை முழுமையாகப் படிக்கலாம். காலைவேளையிலும் டிவி பார்க்கலாம். நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். டென்ஷன் குறைவு. வயதானவர்கள் என்றால் மக்கள் பொதுவாக மரியாதை கொடுக்கிறார்கள்.

(இந்த இடத்தில், 77 வயதான பாரதிமணி ஒரு ஜோக் அடித்தார். எப்போதும் கைத்தடி வைத்திருக்கும் அவரைக் கண்டால் இளம்பெண்கள் ஓடிவந்து கைபிடித்துச் சாலையைக் கடக்க  உதவுகிறார்களாம். ‘அவர்களின் கையை விடுவதற்கே மனம் வருவதில்லை’ என்று சிரித்தார் அவர்.)

கேள்வி (5): வயதானவர்களுக்கு வரும் நோய்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

விடை: கூடியவரையில், செலவு அதிகம் வைக்காத அக்குப்பஞ்சர், யோகா முதலியவற்றை மேற்கொள்கிறோம். ஆனால், இதயநோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கை கால்களை முடக்கும் ஆர்த்ரைட்டிஸ், மற்றும் கேன்சர்  போன்ற நோய்கள்  எங்களை இயங்கவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, சுயபச்சாதாபம் கொள்ளவும் வைக்கின்றன. இதனால் ஓரிடத்திலேயே அடைந்துகிடப்பது தவிர்க்கமுடியாத விஷயமாகிறது.

(ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் தொண்ணூறு சதம்பேர் நடுத்தர, மேல்-நடுத்தர வர்க்கத்தினராக இருந்தபடியால், மேற்படி நோய்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி தங்களுக்கு இருப்பது இறைவன் கொடுத்த வரம் என்றனர். தம் குழந்தைகளும் போதுமான அளவுக்கு நிதிஉதவி செய்வதாகக் கூறினார். ஆனால், தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பயன்படவேண்டிய பணத்தை, வயதான தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பது குற்ற உணர்ச்சியை ஊட்டுவதாகத் தெரிவித்தனர்.)

கேள்வி (6): தனிமையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அறுபது வயதுக்குப் பிறகு புதிதாக ஏதேனும் கற்றுக்கொண்டீர்களா?

விடை: சிலர், கீபோர்டு கற்றுக்கொண்டனர். சிலர் கார் ஓட்டக் கற்றுக்கொண்டனர். சிலர் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர். சிலர், ஒத்த கருத்துடைய சங்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். பாரதிமணி, தான், அறுபது வயதுக்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்ததாகக் கூறினார்.

கேள்வி (7): உங்களிடம் உள்ள சொத்து – வீடு, பணம் முதலியன – பற்றிய உங்கள் பார்வை என்ன?

விடை: வயதானவர்களின் சொத்துக்கள் சாகும்வரையில் அவர்கள் பெயரிலேயே இருப்பதுதான் நல்லது. (சோம. வள்ளியப்பன் இதைத் தீவிரமாக ஆதரித்தார்.) ஆனால், தன் பிள்ளை, பெண்களுக்கு இன்னின்ன சொத்து தரப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிடுவது நல்லது. (அதாவது உயில் எழுதி வைத்துவிடுதல்.)
பி.ஏ.கிருஷ்ணன் - எழுத்தாளர் -(படம்: நன்றி: இணையம்)
பி.ஏ.கிருஷ்ணன், நாட்டில் தற்போது வாழக்கைத்தரம் உயர்ந்துவருவதால், எழுபத்திரண்டு வயதுவரை உயிர்வாழ்வது சாத்தியமாகியிருக்கிறது என்றார். தமிழ்நாட்டையும் கேரளத்தையும் ஒப்பிட்ட அவர், கேரளத்தில் சராசரி உயிர்வாழ்தல் 77 வயது என்றார். (தமிழ் நாட்டில் 72.) இந்த உயர்வுக்குக் காரணம், அங்கு, தனிமையில் வாழும் வயோதிகர்கள் தமிழ்நாட்டைவிடக் குறைவாக இருப்பதுதான் என்றார்.

எனவே, ‘தனிமையை வெற்றி கொள்ளுதல்’ என்பதுதான் அறுபது வயதுக்குப் பிறகு மனிதன் எதிர்கொள்ளும் தீவிரமான சவால் என்று தெரிந்தது.

‘நம் நாட்டில், பெரும்பாலானவர்களிடம், அறுபது வயதுக்குப் பிறகு எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய திட்டமிடல் இல்லவே இல்லை என்பது அபாயகரமானதாகும்’ என்று சொல்லி விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் கோபிநாத்.

திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது,  கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோமே, என்ன ஆயிற்றோ என்று. இந்தியா தோற்றுப்போயிருந்தது. பலநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ‘நீயா நானா’வைப் பார்த்த திருப்தியில் இருந்த எனக்கு, இத்தோல்வி பெரிதாகப் படவில்லை. வாழ்த்துக்கள், கோபிநாத்!

பத்திரிகை 
2000களின் ஆரம்பத்தில் பெங்களூரில் இருந்தேன். அப்போதுதான் 'டைம்ஸ் ஆப். இந்தியா' தனது பெங்களூர் பதிப்பைத் தொடங்கியிருந்தது. இந்தியப் பத்திரிகைகளிலேயே அதிக பணபலம் உடைய டைம்ஸ்,  PREDATORY MARKETING  என்ற உத்தியைப் பயன்படுத்த முனைந்தது. அதாவது, அன்று, டெக்கன் ஹெரால்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து -இவையெல்லாம் இரண்டரை முதல் மூன்று ரூபாய் விலையில் வந்துகொண்டிருக்கையில், டைம்ஸ், தன் விலையை வெறும் ஒரு ரூபாயாகக் குறைத்தது. எதிர்பார்த்தபடியே விற்பனை கிறுகிறுவென்று கூடியது. வாசகர்கள் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்று நம்பிய மற்ற மூன்று பத்திரிகைகளும் விற்காமல் தேங்கின. வேறு வழியின்றி அவையும் தங்கள் விலையைக் குறைத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஓராண்டுக்குமேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தங்கள் வழக்கமான விலைக்கு மீண்டும் தாவினார்கள். ஆனால் அதற்குள் டைம்ஸ், பெங்களூரில் அதிக விற்பனையாகும் இதழ் என்ற நிலையை எட்டிவிட்டது. இன்றுவரை அதுதான் 'லீடிங்.'

சென்னையில் அதுபோல் தனது பதிப்பைத் தொடங்கியவுடன்  டைம்ஸ் ஆப் இந்தியா இன்னொரு புதிய உத்தியையும் கடைபிடித்தது. வீடுவீடாகச் சென்று 'ஆண்டுச் சந்தா வெறும் 299 ரூபாய்' என்று வசூலிக்கத் தொடங்கினார்கள். கடந்த மூன்று வருடங்களாக நான் அவர்களின் வலையில் விழாமல் கழன்றுகொண்டே வந்தேன். காரணம், டைம்ஸில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கும்.  நல்ல வெளிச்சம் இல்லாத நிலையில் படிக்கவே முடியாது. காகிதம் மிகவும் திராபையான காகிதமாக இருக்கும். செய்திகளை எடுத்து வழங்குவதிலும் (PRESENTATION), எந்தப் பக்கத்தில் எந்தவகையான செய்திகளை அச்சிடுவது என்பதில்  ஒரு தொடர்ச்சி (CONSISTENCY)    இல்லாமலும் இருக்கும். ஆனால் சென்ற வாரம் அந்த '299 ரூபாய்க்கு ஒரு வருடச் சந்தா' வியாதிக்கு நானும் இரையானேன்.  

இரண்டு காரணங்கள்: ஒன்று, அந்த விற்பனையாளருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியிருந்தது. இரண்டு, பத்திரிகையைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அப்படியே வாங்கிவைத்துக்கொண்டு, பழைய பேப்பர்காரரிடம் போட்டாலும் மாதம் இருபது ரூபாய் திரும்பக் கிடைத்துவிடும். அதாவது, மாதம் ஒன்றுக்கு நிகரச் செலவு வெறும் ஐந்து ரூபாய்க்கும் குறைவு. (இந்த இரண்டாவது தான் வலிமையான காரணம். இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எனது குடியிருப்பிலுள்ள ஒரு  நண்பர்.) இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியாகும் பத்திரிகைகளில் நேர்மை, நீதி, நியாயம் என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சிரிப்பு

"காங்கிரசுக்கு இனி வசந்த காலம்தான்...." 

கரூரில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சரும், இத்தேர்தலில் போட்டியிட முன்வராதவருமான ஜி.கே.வாசன் பேச்சு. (தமிழ் இந்து - 6-4-2014 பக்கம் 7)
   
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa