திங்கள், பிப்ரவரி 03, 2014

தீய காரியங்கள் காலத்தை வென்று நிற்கும் ( ‘அபுசி-தொபசி’-27)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

(ஓர் அறிவிப்பு: எனது மேசைக் கணினியும் அதன் திரையும் தமக்குள் இரண்டுநாட்கள்  ஊடல் கொண்டுவிட்டதால் சென்ற வியாழக்கிழமை அபுசிதொபசியை வெளியிட இயலவில்லை. மன்னிக்கவும்.)

அரசியல் 
மத்தியில் தேர்தல் நடப்பதற்குள் இன்னும் எத்தனை விதமான கூட்டணிகள் ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது. உருப்படியாக எந்த ஒரு தலைவரும் தனிப்பெரும்பான்மை பெற வழியில்லாது போகும் முடிவையா மக்கள் தரப்போகிறார்கள்? அழகிரியும் விஜயகாந்த்தும் என்ன செய்யப்போகிறார்கள்? கேள்விகள் தான் நம்மிடம் உண்டு. விடைகள்?

புத்தகம்

புத்தகக் கண்காட்சியில் கி. நடராசனின் ‘மனைப்பாம்பு’ என்ற சிறுகதை தொகுதி கண்ணில் பட்டது என் அதிர்ஷ்டமே. மிக நல்ல கதைகள். ‘உணர்ச்சிமிக்க எழுத்து’ என்று சொல்வதுகூட மிகவும் குறைவான மதிப்பீடே. அவ்வளவு அற்புதமான எழுத்து. மொத்தம் பதினைந்து கதைகள்.

நூலில் இடம் பெற்றுள்ள சில கதைகள், ‘கீற்று’ இணையதளத்தில் வெளிவந்தவையாம்.


பொதுவுடைமைப் பார்வை கொண்ட ஆசிரியரின் அனுபவபூர்வமான கதைகள், அன்றாடம் நிகழும் சமூகப் பிரச்சினைகளையே முன்னெடுத்துவந்து நம் முன் நின்று நியாயம் கேட்கின்றன.

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் நூறாண்டுகளுக்குமேல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த மத்திய சிறைச்சாலை, இடித்துத் தள்ளப்பட்டு, புழலுக்கு இடமாற்றம் செய்யப்பட நிகழ்ச்சியை ‘ஆன்மாக்களின் கல்லறை’ என்ற கதையில் பதிவுசெய்கிறார் நடராசன். அச் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாகக் கொண்டுவரப்பட்டவர்கள் எவ்வாறு காவல்துறையால் மிருகத்தனமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை அவர் வர்ணிக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது.

விளைநிலங்கள் எல்லாம் துண்டுதுண்டுகளாக வீடுகட்டும் மனைகளாக விற்கப்படும் நிகழ்வை ‘மனைப்பாம்பு’ என்ற கதையில் சித்திரிக்கிறார் நடராசன். நிலத்தை விற்றவர்கள் பிழைப்புக்கு வேறு வழியின்றி அதே ஊரில் கூலி வேலைக்குச் செல்லும் கொடுமை நெஞ்சைப் பிளக்கிறது. அக்கதையின் ஒரு பகுதி:

“நிலம் விற்ற பணத்தில் பெண்ணின் திருமணம், பிள்ளையின் படிப்பு போக எஞ்சியிருந்தது, பெற்றோர்களின் சோற்றுப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் மனிதன் வெறும் சோற்றால் அடித்த பிண்டமா என்ன என்ற கேள்வி கண்ணுசாமியிடம் எழாமல் இல்லை. தனது எதிர்கால வாழ்க்கையை என்ன பண்ணுவது.. எப்படிக் கழிப்பது என்பது அவருக்கு விளங்கவில்லை...?

அவரது உழைப்பு, உணவு, உடை, பழக்கவழக்கம், காலை, மாலை, பகல், இரவு, வானம், பூமி, மழை, வெயில், சாரல், காற்று, பாதை, சுகம், துக்கம், உறவு, உணர்வு, உணர்ச்சி...இன்னும் வாழ்வின் அனைத்தும் பல நுண் இழைகளால் அந்தத் துண்டு நிலத்துடன் பிணைக்கப்பட்டு கிடந்தது. அவற்றைப் பண பரிவர்த்தனை மாதிரி ஒரு நொடியில் எப்படி விட்டு விலகுவது என்னும் மந்திர வித்தை அவருக்குப் புரியவில்லை....”

“ரியல் எஸ்டேட் அதிபர் பூமி பூசைக்காக அடியாட்களுடன் வந்து காரில் இறங்கினார். குடுமி வைத்த குண்டு ஐயர்களும் அதில் அடக்கம். விவசாய நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரிப்பதற்கு பூமி பூசை நடந்தது. கண்ணுசாமியையும் அந்த அதிபர் வற்புறுத்தி கலந்துகொள்ளச் செய்தார். வீட்டு மனைகள் வாங்க வந்தவர்களிடம் அவரை அறிமுகம் செய்து வாயாரப் புகழ்ந்தார்.  பூசை முடிந்ததும் வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு நூறு ரூபாய் கட்டிலிருந்து தாள்களை உருவி உருவிக் கொடுத்தார். அந்த நூறு ரூபாய் கட்டை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணுசாமி.

இவருக்கும் இரண்டு நூறு ரூபாய்த்தாள்களை ரியல் எஸ்டேட் அதிபர் கொடுத்தார். தட்சணையா...இனாமா..அல்லது பிச்சையா..என்று புரியாமல் தயங்கித் தயங்கி அவர் பெற்றுக்கொண்டார்...”
கி.நடராசன்

இக்கதையில் வரும் இயற்கை வருணனைகள் கண்ணைவிட்டு நகராதவை. நிச்சயம் படிக்கவேண்டிய கதை. நிச்சயம் படிக்கவேண்டிய புத்தகம்.

மனைப்பாம்பு – கி.நடராசன்: முரண்களரி வெளியீடு.  34/25,  வேதாச்சலம் தெரு, காந்திநகர், சின்ன சேக்காடு, மணலி, சென்னை-  68. அலைபேசி:   7871850950, 9841374809. பக்கம் 120, ரூபாய்  90.  

சினிமா & தொலைக்காட்சி

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்-4 ன் இறுதிக்கட்டத்தைப் பார்ப்பதிலேயே பொழுது கடந்துவிட்டது. சனிக்கிழமை (01-02-2014)  இரவு ஏழு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, மறுநாள் அதிகாலை ஒன்றரை மணிவரை நீண்டது. கிட்டத்தட்ட சமமான பாடல்திறன் கொண்ட ஐந்து பேர்களுக்கிடையில் இறுதிப்போட்டி.  ஆனால் அலைபேசியிலும் இணையத்திலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் தான் முடிவைத் தீர்மானிக்கும் என்ற நிலையில், அதிகமான மக்கள்-தொடர்பு இல்லாத பெண் பாடகிகளுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை.   ஆனால் இந்த முறை, சோனியா என்ற பாடகிக்கு ப்ளூ பிஷ் பில்டர்ஸ் என்ற நிறுவனம் எல்லா தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஆதரவு தேடியது. (இதற்கே சுமார் நாற்பது லட்ச ரூபாய் செலவாகியிருக்கலாம்!) ஆனால் சோனியாவுக்கும் சரி, இன்னொரு பாடகியான பார்வதிக்கும் சரி, அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.

இரண்டாவது இடத்தில் வந்தவர், சய்யது சுபகான் என்ற இளைஞர். முதல் இடம் பெற்றவர், திவாகர் என்ற, சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து சுயமுயற்சியால் சங்கீதம் கற்ற, ஏழை இளைஞர். இந்த இருவரின் வெற்றியிலிருந்து தெரியவந்தது என்னவென்றால், மக்கள், சாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த ஒன்றையும் விட, திறமை ஒன்றையே கவனத்தில் கொள்கிறார்கள் என்பதே. திவாகருக்கு நம் வாழ்த்துக்கள்.

பழங்காலத்தில், தன்னை வாழ்த்திப்பாடும் புலவர்களுக்கு யானையைப் பரிசாகத் தருவார்களாம் மன்னர்கள். சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் புலவன், இந்த யானையை எப்படிக் காப்பாற்றுவான்? ஆகவே, சில கிராமங்களையும் இனாமாகத் தருவார்களாம். திவாகருக்கு, அருண் எக்செல்லோ நிறுவனம் ஒரு மூன்றுஅறை கொண்ட அடுக்குவீட்டைப் பரிசாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதைப் பராமரிக்க அவருக்கு வசதி செய்து கொடுப்பார்களா என்பது தெரியவில்லை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று விட்டுவிடவேண்டாம் என்பதே நம் கவலை.

பத்திரிகை

‘நவீன விருட்சம்’ ஜனவரி 2014 இதழைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன் என்பது வெட்கப்படவேண்டிய விஷயம். (அதாவது நான் வெட்கப்படவேண்டிய விஷயம்.) ஏனென்றால் பல்வேறு சிரமங்களுக்கிடையே வெளிவரும் இந்தக் காலாண்டிதழ், என்னுடைய வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து தான் வெளியாகிறது. இத்தனை வருடங்களில் ஒருமுறையாவது எட்டிப்பார்த்து சந்தா செலுத்தியிருக்கக்கூடாதோ? மரமண்டை. (என்னைத்தான் சொல்கிறேன்!) தமிழ்நாட்டுக்கு வெளியில் தொடர்ந்து வசிப்பதன் அபாயங்களில் இதுவும் ஒன்று. உடனடியாக இன்று பிராயச்சித்தம் செய்துவிடப்போகிறேன். நிற்க.

48 பக்கமுள்ள நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட இந்தச் சிற்றிதழில் எல்லா விஷயங்களுமே சிறப்பாக உள்ளன. அசிங்கமான இந்த உலகத்தை அதிக நாட்கள் பார்க்கவேண்டாமே என்று இளம் வயதிலேயே காலமாகிவிட்ட சுப்பிரமணிய ராஜுவின் ‘வடிகால்’ என்ற சிறுகதை மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. என்னமாய் எழுதியிருக்கிறார் மனுஷன்! கள்ள உறவுக்கு மனிதர்களைச் சேர்த்துவிடும் தொழில் செய்யும் ஏழை ஒருவனின் கதை.


இதைத்தவிர, ஜான்னவியின் வேலை என்ற கதையும், ப்ரியராஜின் ஜூலையில் பூத்த டிசம்பர் பூக்கள் என்ற கதையும், அழகியசிங்கரின் லாக்கர் என்ற கதையும் இடம்பெற்றுள்ளன. வங்கியில், லாக்கரைத் திறந்து நகை எடுக்க உள்ளேபோன பெண்மணியைக் கவனிக்காமல் உள்ளேவிட்டுவிட்டுப் பூட்டிவிட்ட நிகழ்ச்சியைக் கதையாக எழுதுகிறார் அழகியசிங்கர். இந்த இதழின் ஆசிரியரும் அவர்தான். ‘406 சதுர அடிகள்’, ‘ராம் காலனி’ போன்ற சிறந்த சிறுகதை தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர்.

அழகிய சிங்கர், தாம் படிப்பதற்குப் புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்?

“ஒரு யூகம்தான் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறது. பல புத்தகங்கள் நம் முன்னால் படிக்க இருக்கின்றன. சிலவற்றைத்தான் நாம் படிக்கமுடியும். பெரும்பாலும் திரும்பவும் ஒரு படைப்பை நம்மால் படிக்க முடியாது.  நமக்கு நேரம் இருக்காது. திரும்பவும் அதை எடுத்துப் படிக்கவேண்டுமென்று தோன்றுவது அபூர்வமாக இருக்கும். ஒருமுறையாவது படிக்கலாம் என்ற எண்ணம் இல்லாத புத்தகங்கள் நம் முன்னால் அதிகமாக இருக்கும். பின், புத்தகம்  படிக்கிற திருப்தி நிலை. இதுவும் நமக்கு எளிதில் கிடைக்காது. ஆனால் ஒரு புத்தகத்தை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று நினைப்பவன். புத்தகம் தயாரிக்கும் மனநிலையை நான் மதிக்கிறேன். பின் படிக்கமுடியும் புத்தகங்களைப் படிக்கிறேன். இல்லாவிட்டால் பேசாமல் இருந்து விடுகிறேன்..”

நவீன விருட்சம்- தனி இதழ் ரூ.15. ஆண்டு சந்தா ரூ.60. முகவரி: சீதாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், புதிய எண். 16, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.  தொலைபேசி: 044-24710610; 9444113205; 9176613205.

சிரிப்பு

கரைந்த நிழல்கள் நாவலைப் பற்றி இன்னும் சில நினைவுகள் உள்ளன. நான் திறந்தவெளியில் ஒரு பூங்காவில் ஒரு குறிப்பிட்ட பெஞ்சில் அமர்ந்துதான் இந்நாவலை எழுதினேன். காலை ஆறு மணிக்கே அங்கு போய்விடுவேன். அந்த பெஞ்சில் ஏற்கெனவே யாராவது உட்கார்ந்து விட்டிருந்தால் நிம்மதியாக இருப்பேன்- அன்று ஏதும் எழுதாமல் இருக்கலாமே! பூங்காவில் கொஞ்சம் மரங்களே இருந்ததால் காலை ஏழு மணிக்கே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிடும். எனவே எனக்கு எழுதக் கிடைக்கும் நேரம் வெறும் அரைமணி தான்.

“அந்தப் பூங்காவிலிருந்துதான் நான் ஏராளமான கதைகளும், இரண்டு நாவல்களும்,  மொழிபெயர்ப்புகளும், கருத்தரங்கக் கட்டுரைகளும், ஒரு நாடகமும் கூட – எழுதினேன். ஆனால் பின்னாளில் அங்கிருந்து எழுதுவதைக் கைவிடவேண்டியதாயிற்று. தெரிந்தவர்களெல்லாம் அருகில் உட்கார்ந்து பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர். அடிக்கடி ஒரு ஜோதிடர் வந்து என் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா என்பார். என்னிடமிருந்து ஏதாவது கறந்தால் ஒரு வேளை காபிக்கு ஆகுமே என்பது அவர் கவலை. புகைபிடிப்பதற்காக வந்த இன்னொரு நண்பரோ, புகைப்பதை விட, நான் எழுதுவதை இடைமறிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும் என்று கருதினார். சோற்றுக்காக ஒவ்வொருவனும் உழைத்தாகவேண்டும் என்பது தெரிந்திருந்தும், அடுத்தவன் உழைப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருந்தது. 

இதெல்லாம் நான் எழுதுவதைத் தாமதப்படுத்தினாலும் நான் கலங்கவில்லை. நான் தொடர்ந்து எழுதுவதைத் தடுப்பதின்மூலம் அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.  நான் எழுதியவற்றுள் ஏதோ ஒன்றைப் படித்துவிட்டு, அதனால் இனி நான் எழுதாமலிருப்பதே நல்லது  என்று அவர்களுக்குத் தீர்மானமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்பது என்னுடைய ரகசியக் கணிப்பு. 

என்னுடைய மிகச் சிறந்த விமர்சகர்கள் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். சுமார் பதினைந்து வருடங்கள் அந்தப் பூங்காதான் என்னை எழுதத் தூண்டியது. கூட்டமும் கூச்சலும் அதிகமாகிவிட்ட பின்னாட்களில் நான் அங்கு போவதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் என்னைப் பற்றி யார் எழுத நேர்ந்தாலும் அந்தப் பூங்காவைப் பற்றியும் எழுதப்பட்டுவிடுகிறது. நாம் செய்யும் தீய காரியங்கள், காலத்தை வென்று நிற்கின்றன.”

(ஆங்கில ஹிந்து- ஞாயிறு 02-02-2014 Literary Review- ஆறாம் பக்கம் – தனது முதல் நாவலான ‘கரைந்த நிழல்கள்’ பற்றி அசோகமித்திரன் எழுதிய கட்டுரையின் கடைசி இரண்டு பத்திகளின் தமிழாக்கம். தமிழாக்கியது: அடியேன்.)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

29 கருத்துகள்:

  1. மனைப்பாம்பு புத்தகம் விமர்சனம் ரசனை... ரகசியக் கணிப்பு அதை விட... திவாகர் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா..

    அரசியல் கள நிலைகள். மற்றும் புதிய புத்தகம் பற்றி தகவல் மற்றும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் பற்றிய தகவல் எல்லாவற்றையும் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள்... வாழ்த்துக்கள் ஐயா..த.ம 2வது வாக்கு

    மலேசியாவில் கூட திவாகர்தான் பல இதயங்களை நெகிழவைத்தவர்.... அவர் எனறும் சிறப்புடன் வாழட்டும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ, மலேசியாவில் கூட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறதா? நல்லது, தமிழ் இப்படியாவது வாழட்டும்! தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. வழக்கம் போல் பல் சுவை தந்தது

    பதிலளிநீக்கு
  4. திவாகர் 'வாய் 'உள்ள பிள்ளை...இத்தனை மனங்களை சம்பாதித்த அவருக்கு பணத்தைச் சம்பாதிக்க வழி தெரிந்து விடும் !
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. புத்தக விமர்சனம் ரசனையோடு எழுதியுள்ளீர்கள்! ஐயா! அதிலும் பத்திரிகை விருட்சம் பற்றிக் குறிப்பிடும் போது இடையே நல்ல நகைச்சுவை இலமறைகாயாக் ஊடுருவி நிற்பது தங்களது எழுத்தாற்றலைச் சொல்லுகின்றது! அருமை!

    .//விளைநிலங்கள் எல்லாம் துண்டுதுண்டுகளாக வீடுகட்டும் மனைகளாக விற்கப்படும் நிகழ்வை ‘மனைப்பாம்பு’ என்ற கதையில் சித்திரிக்கிறார் நடராசன். நிலத்தை விற்றவர்கள் பிழைப்புக்கு வேறு வழியின்றி அதே ஊரில் கூலி வேலைக்குச் செல்லும் கொடுமை நெஞ்சைப் பிளக்கிறது. அக்கதையின் ஒரு பகுதி:// கசப்பான உண்மை! உண்மை எப்பொதுமே கசக்கத்தானே செய்யும்!

    திவாகர் பிழத்துக் கொள்ள்வார்! அவரைப் பற்றிக் கவலை இல்லை! சோனியா கேரளத்தில் ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வென்றவர்தான்! அவர்க்கும் சரி, சூப்பர் சிங்கரில் பாடும் திறமை உள்ளவர்களுக்கு பரிசு கிடக்க வில்லை என்றாலும் பிழைத்து விடுவார்கள்! அப்படிப்பட்ட ஒரு தளம் தான் அது! நமக்கு நம் இளமைக் காலத்தில் இப்படிப்பட்டத் தளங்கள் ஏது?!

    எல்லாமே வழக்கம் போல் அருமை!

    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, நம் இளமைக் காலத்தில் இப்படியெல்லாம் காட்சி ஊடகங்கள் இல்லையே! வானொலி ஒன்றைத்தவிர வேறு வாய்ப்புக்கள் இல்லையே! இன்றைய இளைஞர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களை ஊக்குவிக்க பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், என்னமாய்ப் போட்டி போடுகின்றன! பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவோர் பாராட்டுக்குரியவர்கள்!

      நீக்கு
  6. பகிர்வு மிகவும் பிடித்திருந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஐயா ! "தோ-பிகா-ஜமீன்" என்ற திரைப்படம் 50ம் ஆண்டுகளில் வந்தது ! பிமல் ராய் இயக்கம் ! பால் ராஜ் சஹானி,மீனாராய் நடித்தார்கள் ! சர்வதேச அளவில் விருதுகள் வாங்கிய படம் ! விளை நிலங்களை வாங்கி தொழிற்சாலைகள் கட்டும் அன்றய நிலமையை சுட்டிக்காட்டியது 1 விவசாயி நகரத்தில் ரிக்ஷா இழுத்து பிழைக்கும்னிலைக்குதள்ளப்படுகிறான் ! அந்த நிலை இன்றும் தொடருவதை மனப்பாம்பு சுட்டுகிறது ! என்ன செய்ய ? ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?' என்று பொங்கினார் பாரதிதாசன். வலியோரின் வடிவம்தான் மாறுகிறதே தவிர, வதைக்கப்படும் கொடுமை மாறுவதேயில்லை. வதைக்கப்படுவதைக் கூட, உலகமயமாக்கலின் பெயரால் மக்கள் ரசிக்க ஆரம்பித்திருப்பது நெஞ்சைப் புண்ணாக்குகிறது. தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  8. ஆங்கில இந்து 02-02-2014 நாளிதழில் வந்த (தனது முதல் நாவலான ‘கரைந்த நிழல்கள்’ பற்றி அசோகமித்திரன்) கட்டுரையைப் படித்தேன். தங்களது மொழிபெயர்ப்பையும் படித்தேன். தமிழாக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி' என்பார்களே! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  9. மக்கள், சாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த ஒன்றையும் விட, திறமை ஒன்றையே கவனத்தில் கொள்கிறார்கள் //உண்மைதான்

    பதிலளிநீக்கு
  10. நிறையப் படிக்கிறீர்கள். நன்றாகத் தொகுக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கருத்துக்களை தொடர்ந்து கொடுத்து வரும் உங்கள் சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் வலைப்பூ மிகவும் அழகாக உள்ளது. கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது :)

    தளத்திற்கும் உங்கள் பதிவுகளுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடும் கோடையில் திடீரென்று ஒருகணம் வீசும் தென்றல் மாதிரி இருக்கிறது, உங்கள் வருகை! மிக்க நன்றி!

      நீக்கு
  12. //விடைகள்?//

    அரசியலில் 'எது'வும் நடக்கும்! பார்த்திருப்போம்!

    புத்தகம், பத்திரிகை, சிரிப்பு என அனைத்து அம்சங்களும் சுவை!

    பதிலளிநீக்கு
  13. விளைநிலங்கள் எல்லாம் துண்டுதுண்டுகளாக வீடுகட்டும் மனைகளாக விற்கப்படும் நிகழ்வை ‘மனைப்பாம்பு’ என்ற கதையில் சித்திரிக்கிறார் ////
    மனம் கனக்க வைக்கும் நிதர்சனம் ..!

    பதிலளிநீக்கு
  14. ‘மனைப்பாம்பு’
    மனம் கனக்க வைக்கும் நிதர்சனம் ..!

    பதிலளிநீக்கு