திங்கள், ஜனவரி 27, 2014

பால்யகால சகி- இனப்படுகொலை- கஸ்தூரியின் வினாவிடை ( ‘அபுசி-தொபசி’-26)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
தில்லியில், பதவிக்கு வந்தபிறகு கேஜ்ரிவால் நடத்தும் கூத்துக்களுக்குச் சற்றும் குறையாதது, சென்னையில், பதவிநீக்கப்பட்ட மு. க. அழகிரி நடத்தும் கூத்து. இவரால் தி.மு.க.வின் ஓட்டுவங்கிக்கு ஆபத்து வருமா என்பது தெரியவில்லை. நான் கேட்டவரையில், அழகிரி, தி.மு.க.வின் இருண்ட முகமாகத்தான் இருந்தார் என்றும், அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது, கட்சியின் நல்லதிர்ஷ்டமே என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவரைச் சுற்றியிருந்த அடியாட்கள் கூட்டமும் இப்போது மு.க.ஸ்டாலின் அருகே போய்விட்டதாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. அடியாட்கள் இல்லாமல் அழகிரியால் என்ன செய்யமுடியும் என்று மக்கள் கேட்கிறார்கள். அவர் அறிமுகப்படுத்திய ‘திருமங்கலம் ஃபார்முலா’ ஆளும்கட்சியால் மட்டுமே கடைபிடிக்கமுடியும். தி.மு.க. இன்று எதிர்க்கட்சிதானே! ஆகவே, அழகிரியின் விலக்கம், உண்மையில் கட்சியின் வாக்குவங்கியை மேலும் பலப்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது.

ஆனால், கருணாநிதியின் தமிழ் நினைத்தபடி விளையாடக் கூடியதாயிற்றே! “முந்திப் பிறந்தவனே வா! மு.க. அழைக்கிறேன் வா!” என்று கலைஞர், சில வாரங்களில் தன் பெயருள்ள தொலைக்காட்சியில்  பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தகம்
வைக்கம் முகமது பஷீரின் நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல், ‘பால்யகால சகி’. அதே பெயரில் தமிழாக்கம் குளச்சல் மு யூசுஃப். காலச்சுவடு வெளியீடு. புத்தகக் கண்காட்சியின் கடைசி நாளில் அவசரமாக வாங்கியது. எண்பது பக்கம், அறுபது ரூபாய்.


இது ஒரு சோகக்கதை.  1944இல் வெளியானது. இன்றைக்கு எழுபது வருடங்கள் முன்பு! மஜீத் என்ற இளைஞனுக்கும் சுகறா என்ற பெண்ணுக்குமான காதல். தகப்பனை எதிர்த்துக்கொள்ள இயலாத மஜீத், தன் காதலை எப்படிச் சொல்லுவான்? விஷயம் அறிந்த தந்தை அவனை வீட்டை விட்டு விரட்டுகிறார். எத்தனையோ வருடங்கள் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மீண்டும் வருகிறான். காதலியின் வீட்டில் காத்திருப்பார்களா? யாரோ ஒருவனுக்கு இரண்டாம்தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். ஆனால் அது மனதுக்குகந்த திருமணமில்லை.....

மஜீத் வருவான் என்று சுகறா நம்பிக்கையோடு காத்திருந்தாள். அவர்களின் சந்திப்பை பஷீர் இப்படி எழுதுகிறார். (பக்.60)

(சுகறா சொல்கிறாள்): “நான் தெனசரி (உங்க கடிதத்தை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்னைக்கு வரும், நாளைக்கு வரும்னு தெனசரி நெனைப்பேன்.”

“அப்புறம் எப்படி இந்தக் கல்யாணம் நடந்தது?” (என்கிறான் மஜீத்.)

“நான் சொன்னேனில்லையா, எங்கிட்ட ஆருமே கேக்கலேன்னு. மட்டுமில்லே, நான் ஒரு பாரமா எவ்வளவு நாளுதான் இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணாப் பெறந்தவ இல்லையா? ....கடைசியில் வீட்டெயும் தோட்டத்தெயும் பணயம் வெச்சு, பொன்னும், சாதனமும் வாங்கி கல்யாணம் கழிஞ்சது.”

“பெறகு , ஏன் இவ்வளவு மோசமா இருக்கே?”

சுகறா எதுவும் பேசவில்லை.

“சொல்லு, சொகறா, ஏன் இப்பிடி ஆயிட்டே?”

“மனவெசனந்தான்”

“ஏன் மனவெசனம்?”
 ......

“சொகறா.”

“ஓ..”

“சொல்லு.”

சுகறா வாய்விட்டழுதாள். பிறகு மெல்ல தன்னைத் தேற்றிக்கொண்டு அவளது கணவனைப் பற்றி சொன்னாள்:

“பெரிய  கோபக்காரரு. அவருக்கு வேற ஒரு பெஞ்சாதியும் அதுலே ரெண்டு குழந்தைகளும் உண்டு. நான் எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டு, கணக்குப் பாத்து என் பங்கெ பிரிச்சு வாங்கணும்னு தெனசரி சொல்லுவாரு. எனக்குத் தங்கச்சிங்க இல்லையா? நான் என்ன செய்ய முடியும்? மாட்டேன்னு சொல்லும்போதெல்லாம் என்னெ அடிப்பாரு. ஒரு நாளு என் அடிவயித்துலே மிதிச்சதிலே நான், குப்புற விழுந்துட்டேன். அன்னைக்கு ஒடைஞ்சதுதான் இந்தப் பல்லு, இன்னா.”

அவள் வாயைத் திறந்து காட்டினாள். வெள்ளை வரிசைகளின் இடையே ஒரு கறுப்பு இடைவெளி.

“சொகறா.”

“ஓ..!”

“பெறகு?”

“நான் அங்கெ போன பெறகு இதுவரெ பசிதீர எதுவும் சாப்பிட்டதில்லை. ஒரு நிமிசங்கூட மன சந்தோசமா இருந்ததில்லெ. நான் அங்கெ ஒரு பெஞ்சாதி இல்லெ. வேலைக்காரி! கூலிக்குக் கதம்பை அடிச்சுக்குடுத்து பணம் சம்பாதிக்கணும். கொறஞ்சுபோனா அடி கெடைக்கும். சாப்பிட ஒண்ணுமே தரமாட்டாங்க. நான் வீட்டுக்கு வெலக்கா இருந்தப்போ...”

“?...?”

“தொடர்ந்து நாலு நாளு.... பட்டினியாட்டு கெடந்ததுண்டு.”

‘பஷீரின் விசேஷ கலையனுபவம் என்னவென்று கேட்டால், அது உணர்வின் உச்சநிலை வெளிப்பாடு என்று தயக்கமில்லாமல் சொல்லமுடியும். துடிப்பான சிறுசிறு வார்த்தைகளால் சொல்லப்பட்ட மனித மனதின் துடிப்பை அதில் எப்போதுமே உணர முடியும்’ என்கிறார் முன்னுரை வழங்கிய எம்.பி.போள். ஆமோதிக்க வேண்டியதுதான்.

சினிமா & தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் நடைபெறும் ‘வினாவிடை’ நிகழ்ச்சி பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். நடிகை கஸ்தூரி அழகிய தமிழில், ஒரு சீரிய கல்வியாளருக்குரிய கம்பீரத்துடன், நேரத்தை வீணாக்காமல்,  அதே சமயம் சிரிப்பும் சுழிப்பும்  அளவோடு கலந்து, வழங்கும் அருமையான நிகழ்ச்சி. பதின்மூன்று வாரங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் இன்று.


நான்கு கல்லூரிகள், ஒவ்வொன்றிலும் மூன்று மாணவர்கள். சென்னை ஐ.ஐ.ட்டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பூ.சா.கோ. கல்லூரி, திண்டுக்கல் கல்லூரி ஆகியன இறுதிக்கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள்.
 
முதல் பரிசு வென்ற ஐ.ஐ.ட்டி. குழு
அற்புதமான கேள்விகள். சிந்தனையைக் கிளறும்படியான  format. கடைசியில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயைத் தட்டிக்கொண்டு போனவர்கள், சென்னை ஐ.ஐ.ட்டி. மாணவர்கள்தாம். (ஐ.ஐ.ட்டி. என்றாலே மனப்பாடத் திறமையும் நினைவாற்றலும்தானே அவர்களின் அடையாளங்கள்! என்றாலும் அவர்களும் கடினமாகப் போட்டியிட்டுத்தான் வெல்ல முடிந்தது.)
 
இரண்டாம் பரிசு வென்ற பூ.சா.கோ.கலைக் கல்லூரி, கோவை, குழு
இரண்டாவது பரிசு ஐம்பதாயிரம் ரூபாயை வென்றவர்கள், கோவை பூ.சா.கோ. கல்லூரி மாணவர்கள்.
 
வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா பல்கலைக் குழு

திறமையாக நடத்திய கஸ்தூரிக்கு எவ்வளவு பரிசு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வினாவிடை நிகழ்வு எப்போது என்றும் தெரியவில்லை. மாணவர்கள் ‘புதுயுக’த்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பத்திரிகை

எது இனப்படுகொலை? – கவிஞர் சேரன்  (‘காலச்சுவடு’ ஜனவரி 2014)

இனப்படுகொலை (Genocide) என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, ‘இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு’. இன்னொன்று, இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள்- என்கிறார் சேரன்.

"இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெல்ல இடம் பெற்று வருவது; மாற்று இனத்தவர்களின் குடியேற்றம், வெறுப்பு ஏற்படக்கூடிய வகையில் ‘மற்றவர்’களைப் பற்றிக் கல்வியிலும் பாடப் புத்தகங்களிலும் வரலாற்று எழுதலிலும் சித்திரிப்பது, திட்டமிட்ட ஒதுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும். இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983  நடந்தேறிய ஈழத்தமிழருக்கு எதிரான ‘கலவரங்கள்’ இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான்.
 
இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரசப் படையினர்மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை. ஜூன்1956 - டிசம்பர்2008 காலப்பகுதியில் இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான ‘கலவரங்களை’யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள் இடம்பெற்ற ஊர்களுக்கு நான் சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப் படுகொலைகள் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன். அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து  எட்டுமாதக் குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

இத்தகைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகியிருந்தாலும் ‘பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்ற வழமையான இலங்கை அரசின் உத்தியோகப் பூர்வமான அறிக்கையே வெளியாகும்.  1982இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடகநிலைமை பெருமளவுக்கு இதுதான்.”

மூன்றாவதாகவும் ஒரு அம்சத்தைச் சேரன் தருகிறார். “இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி (இன) மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம் (ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பாயம் 1994 இல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் இனப்படுகொலைக்கான கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப்படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியிருக்கிறது....ஈழ இனப்படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் தொடங்கியுள்ளன. இவற்றுள் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.”

சேரனின் முயற்சிக்கு அனைத்துலகத் தமிழ் மக்களும் துணையிருப்பார்கள் என்பது உறுதி. இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்ந்தபோது, அதன் எதிரொலியாகத் தில்லியில் சீக்கியர்கள் சிலநூறு பேர் கொல்லப்பட்டார்கள். சீக்கிய சமுதாயம் அதுபற்றி எண்ணற்ற வழக்குகளைத் தொடர்ந்து பலகோடி ரூபாய்களை இழப்பீடாகப் பெற்றும் இன்னும் விடாமல், சோனியாகாந்திமீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சென்ற ஆண்டு அவர் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றபோது அவரைக் கைதுசெய்ய வாரண்ட்டை அவருக்கு வழங்க முயற்சி மேற்கொண்டதை நாம் நினைவு கூற வேண்டும். சீக்கியர்களுக்கு உள்ள இன உணர்வு தமிழர்களாகிய நமக்கு  ஏன் இல்லை?

கலைமகள் –ஜனவரி 2014  - ஆண்டு ராசி பலன்

2014ஆம் ஆண்டின் பொதுப்பலன்களை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். தனுசு ராசிக்கு “தினமும் சுரைக்காய்ச் சித்தரை வணங்கினால் நல்ல திருப்பங்கள் ஏற்படும்” என்று இருக்கிறது. இவரைப் பற்றியும் வணங்கும் முறை பற்றியும் மேற்கொண்டு விவரங்கள் தேவை. யாராவது எழுதுங்களேன்! (அடியேன் ராசி தனுசு!)

சிரிப்பு
“நீங்க ரொம்ப லக்கி டாக்டர்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“நான் உடம்பு சரியாயிட்டா டிஸ்சார்ஜ் ஆகி போயிடுவேன். நீங்க எப்பவுமே நர்சுங்களோட இருக்கீங்களே.”

(நன்றி - தமிழ் இந்து -  26.01.2014 –   பக்கம் 12 – எழுதியவர்: பர்வீன் யூனுஸ். பாராட்டுக்கள்! இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களாமே!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
© Y.Chellappa


24 கருத்துகள்:

  1. சேரனின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. புத்தக விமர்சனமாக லேசாக
    ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டிப் போனவிதமே
    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
    என்பதைப்போல கதையின் சிறப்பை உணர முடிந்தது
    சேரன் அவர்களின் கருத்து மிகச் சரி
    பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. சேரனின் பற்றிய பகிர்வுக்கு நன்றி ஐயா
    அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  4. இவ்வாரப் பதிவில் மனதில் நின்றது வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைப் பதிவு. மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுப் புத்தகத்தையும் படிக்கும்போது எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த எழுத்தின் வலிமை ஆச்சரியப்படுத்துகிறது. தமிழில் லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களை நினைவுபடுத்துகிறது. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  5. அபுசி தொபசி இனி வாரம் இருமுறையா ?நல்லது வரவேற்கிறேன் !
    த .ம 6

    பதிலளிநீக்கு
  6. சேரனின் கருத்து உட்பட அனைத்து தகவல்களுக்கும் நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. பதிலுக்கு இவர்கள் சும்மா கை கட்டி நின்றிருப்பார்களா என்ன. இதேபோல் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பதே கட்டம் போட்டு எழுதப் படுகிறது. ஆனால் சில தினங்களுக்குமுன் 275 இலங்கை மீனவர்கள் நம் சிறையில் இருப்பதாகச் செய்தி வந்ததே. பல நேரங்களில் இன்றைய தீவிரவாதி நாளைய தியாகி....! எதையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள தயக்கம்வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீனவர்கள் பிரச்சினை வேறு மாதிரியானது. அதில் நம்மவர்கள் தான் பெரும்பாலும் எல்லை மீறிச்சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் தமிழக அரசும் சரி, இந்திய அரசும் சரி, கைகட்டப்பட்டு நிற்கின்றனர். (2) ஒரு விடுதலைக்காகப் போராடும் அமைப்பு வன்முறையைக் கையில் எடுப்பதையும், அதற்கு எதிராகச் சர்வ வல்லமை படைத்த அரசே வன்முறையை கையில் எடுப்பதையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?

      நீக்கு
  8. பஷீரின் கதை மனதைப் பிழிந்தது! பகிர்வுக்கு நன்றி!

    கெஜ்ரிவால் ம்ம்ம்ஹூம் தேறுவது போல் தெரியவில்லை

    சேரன் எழுத்தைப் பகிர்ந்தற்கு மிக்க நன்றி!

    சுரைக்காய் சித்தர் கோயில் நாராயணவரம்/நாராயாணவனம் என்ன்னும் இடத்தில், கோயிலுக்கு அருகே உள்ளது. நாராயண வனத்தில் தான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதித் தாயாருக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்!..அங்கு பத்மாவதி தாயார் சந்நிதியில் ஒரு பெரிய கல்லினால் ஆன இயந்திரம் இருக்கிறது! அதில்தான் தாயாருக்கு மஞ்சள் அரைத்ததாகச் சொல்லுகின்றார்கள். இந்தக் கோவிலில் ஜர்கண்டி கிடையாது! நிம்மதியாக ஆற அமர வணங்கலாம். கோவிலிலிருந்து நேரே பார்த்தால் ஆஞ்சனேயர் சந்நிதி. இடது பக்கம் திரும்பினால் சுரைக்காய் சித்தர் கோவில்! தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர். இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். இது நான் கோயிலில் இருந்து அறிந்தது. இவரப் பற்றிய தகவல் இந்த சுட்டியில் உள்ளது.

    https://groups.google.com/forum/#!topic/mintamil/X9OqwFMGeYE

    நாராயணவரம்/வனம் திருப்பதிக்குச் செல்லும் பாதையில், புத்தூர் எனும் ஊரில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ளது. சரியாக 2 மணி னேரப் பயணத்தில் புத்தூர். அங்கிருந்து நிறைய ஆட்டோக்கள் செல்கின்றன. ஒரு வருடம் முன்பு ரூ.60 வாங்கினார்கள். தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷன் அருகே காய்கறி மார்கெட் உள்ளது. காலையில் நல்ல ஃப்ரெஷ்ஷாக காய்கள் கிடைக்கும். விலையும் குறைவு.

    ஜோக் அருமை!

    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துளசியாரே! நாராயணவரத்தை விரைவில் சென்று பார்க்க விரும்புகிறேன். நல்லது நடக்கக்கூடும் என்றால் ஒரு புதிய ஊருக்குச் சென்று வருவதில் என்ன சிரமம்! தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. கவிஞர் சேரன் கூறியுள்ள கருத்துக்களைப் படித்தேன்! வேதனையில் உள்ளம் துடிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! சேரனின் எழுத்து துடிக்கவைக்கும் எழுத்து. அவர் முயற்சிகள் வெல்வதாக!

      நீக்கு
  10. //இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களாமே!//

    எழுதறவங்களை மட்டும்தானா?
    அச்சுக் கோர்ப்பவர்களை (டைப் செட்டிங் செய்பவர்களை),
    பிரசுரிப்பவர்களை,
    பத். ஆசிரியரை,
    பத்திரிகையைப் படிப்பவர்களை,
    விநியோகஸ்தர்களை,
    அப்புறம் எழுதுன அந்த லெட்டரைக் கொண்டுவந்து தரும் போஸ்ட்மேனை - இவர்களையெல்லாம் ஜெ.-இல் போடமாட்டார்களா ஐயா?
    (ஐயா... சும்மா ஜோக்குக்கு...!)

    பதிலளிநீக்கு
  11. vanakkam,. I really appreciate your kind compliments for my quiz programme. Quizzing and reading have always been passions, although life's demands leave me not enough time to pursue them these days.

    regards, kasthuri

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுயுகத்தின் வழியாகத் தாங்கள் எடுத்திருக்கும் அறிவுபூர்வமான பாத்திரம், தங்களின் எதிர்காலத்தை நன்கு வழிநடத்திச் செல்லும் என்பது உறுதி. பல்வேறு பணிகளுக்கிடையிலும் எனது எழுத்தை வாசிக்க நேரம் கண்டது மகிழ்ச்சிக்குரியது. நன்றி, கஸ்தூரி அவர்களே!

      நீக்கு