திங்கள், ஜனவரி 27, 2014

பால்யகால சகி- இனப்படுகொலை- கஸ்தூரியின் வினாவிடை ( ‘அபுசி-தொபசி’-26)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
தில்லியில், பதவிக்கு வந்தபிறகு கேஜ்ரிவால் நடத்தும் கூத்துக்களுக்குச் சற்றும் குறையாதது, சென்னையில், பதவிநீக்கப்பட்ட மு. க. அழகிரி நடத்தும் கூத்து. இவரால் தி.மு.க.வின் ஓட்டுவங்கிக்கு ஆபத்து வருமா என்பது தெரியவில்லை. நான் கேட்டவரையில், அழகிரி, தி.மு.க.வின் இருண்ட முகமாகத்தான் இருந்தார் என்றும், அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டது, கட்சியின் நல்லதிர்ஷ்டமே என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவரைச் சுற்றியிருந்த அடியாட்கள் கூட்டமும் இப்போது மு.க.ஸ்டாலின் அருகே போய்விட்டதாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. அடியாட்கள் இல்லாமல் அழகிரியால் என்ன செய்யமுடியும் என்று மக்கள் கேட்கிறார்கள். அவர் அறிமுகப்படுத்திய ‘திருமங்கலம் ஃபார்முலா’ ஆளும்கட்சியால் மட்டுமே கடைபிடிக்கமுடியும். தி.மு.க. இன்று எதிர்க்கட்சிதானே! ஆகவே, அழகிரியின் விலக்கம், உண்மையில் கட்சியின் வாக்குவங்கியை மேலும் பலப்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது.

ஆனால், கருணாநிதியின் தமிழ் நினைத்தபடி விளையாடக் கூடியதாயிற்றே! “முந்திப் பிறந்தவனே வா! மு.க. அழைக்கிறேன் வா!” என்று கலைஞர், சில வாரங்களில் தன் பெயருள்ள தொலைக்காட்சியில்  பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தகம்
வைக்கம் முகமது பஷீரின் நீண்ட சிறுகதை அல்லது குறுநாவல், ‘பால்யகால சகி’. அதே பெயரில் தமிழாக்கம் குளச்சல் மு யூசுஃப். காலச்சுவடு வெளியீடு. புத்தகக் கண்காட்சியின் கடைசி நாளில் அவசரமாக வாங்கியது. எண்பது பக்கம், அறுபது ரூபாய்.


இது ஒரு சோகக்கதை.  1944இல் வெளியானது. இன்றைக்கு எழுபது வருடங்கள் முன்பு! மஜீத் என்ற இளைஞனுக்கும் சுகறா என்ற பெண்ணுக்குமான காதல். தகப்பனை எதிர்த்துக்கொள்ள இயலாத மஜீத், தன் காதலை எப்படிச் சொல்லுவான்? விஷயம் அறிந்த தந்தை அவனை வீட்டை விட்டு விரட்டுகிறார். எத்தனையோ வருடங்கள் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மீண்டும் வருகிறான். காதலியின் வீட்டில் காத்திருப்பார்களா? யாரோ ஒருவனுக்கு இரண்டாம்தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். ஆனால் அது மனதுக்குகந்த திருமணமில்லை.....

மஜீத் வருவான் என்று சுகறா நம்பிக்கையோடு காத்திருந்தாள். அவர்களின் சந்திப்பை பஷீர் இப்படி எழுதுகிறார். (பக்.60)

(சுகறா சொல்கிறாள்): “நான் தெனசரி (உங்க கடிதத்தை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இன்னைக்கு வரும், நாளைக்கு வரும்னு தெனசரி நெனைப்பேன்.”

“அப்புறம் எப்படி இந்தக் கல்யாணம் நடந்தது?” (என்கிறான் மஜீத்.)

“நான் சொன்னேனில்லையா, எங்கிட்ட ஆருமே கேக்கலேன்னு. மட்டுமில்லே, நான் ஒரு பாரமா எவ்வளவு நாளுதான் இருக்க முடியும்? நான் ஒரு பெண்ணாப் பெறந்தவ இல்லையா? ....கடைசியில் வீட்டெயும் தோட்டத்தெயும் பணயம் வெச்சு, பொன்னும், சாதனமும் வாங்கி கல்யாணம் கழிஞ்சது.”

“பெறகு , ஏன் இவ்வளவு மோசமா இருக்கே?”

சுகறா எதுவும் பேசவில்லை.

“சொல்லு, சொகறா, ஏன் இப்பிடி ஆயிட்டே?”

“மனவெசனந்தான்”

“ஏன் மனவெசனம்?”
 ......

“சொகறா.”

“ஓ..”

“சொல்லு.”

சுகறா வாய்விட்டழுதாள். பிறகு மெல்ல தன்னைத் தேற்றிக்கொண்டு அவளது கணவனைப் பற்றி சொன்னாள்:

“பெரிய  கோபக்காரரு. அவருக்கு வேற ஒரு பெஞ்சாதியும் அதுலே ரெண்டு குழந்தைகளும் உண்டு. நான் எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டு, கணக்குப் பாத்து என் பங்கெ பிரிச்சு வாங்கணும்னு தெனசரி சொல்லுவாரு. எனக்குத் தங்கச்சிங்க இல்லையா? நான் என்ன செய்ய முடியும்? மாட்டேன்னு சொல்லும்போதெல்லாம் என்னெ அடிப்பாரு. ஒரு நாளு என் அடிவயித்துலே மிதிச்சதிலே நான், குப்புற விழுந்துட்டேன். அன்னைக்கு ஒடைஞ்சதுதான் இந்தப் பல்லு, இன்னா.”

அவள் வாயைத் திறந்து காட்டினாள். வெள்ளை வரிசைகளின் இடையே ஒரு கறுப்பு இடைவெளி.

“சொகறா.”

“ஓ..!”

“பெறகு?”

“நான் அங்கெ போன பெறகு இதுவரெ பசிதீர எதுவும் சாப்பிட்டதில்லை. ஒரு நிமிசங்கூட மன சந்தோசமா இருந்ததில்லெ. நான் அங்கெ ஒரு பெஞ்சாதி இல்லெ. வேலைக்காரி! கூலிக்குக் கதம்பை அடிச்சுக்குடுத்து பணம் சம்பாதிக்கணும். கொறஞ்சுபோனா அடி கெடைக்கும். சாப்பிட ஒண்ணுமே தரமாட்டாங்க. நான் வீட்டுக்கு வெலக்கா இருந்தப்போ...”

“?...?”

“தொடர்ந்து நாலு நாளு.... பட்டினியாட்டு கெடந்ததுண்டு.”

‘பஷீரின் விசேஷ கலையனுபவம் என்னவென்று கேட்டால், அது உணர்வின் உச்சநிலை வெளிப்பாடு என்று தயக்கமில்லாமல் சொல்லமுடியும். துடிப்பான சிறுசிறு வார்த்தைகளால் சொல்லப்பட்ட மனித மனதின் துடிப்பை அதில் எப்போதுமே உணர முடியும்’ என்கிறார் முன்னுரை வழங்கிய எம்.பி.போள். ஆமோதிக்க வேண்டியதுதான்.

சினிமா & தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்கட்சியில் ஞாயிறுதோறும் நடைபெறும் ‘வினாவிடை’ நிகழ்ச்சி பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். நடிகை கஸ்தூரி அழகிய தமிழில், ஒரு சீரிய கல்வியாளருக்குரிய கம்பீரத்துடன், நேரத்தை வீணாக்காமல்,  அதே சமயம் சிரிப்பும் சுழிப்பும்  அளவோடு கலந்து, வழங்கும் அருமையான நிகழ்ச்சி. பதின்மூன்று வாரங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் இன்று.


நான்கு கல்லூரிகள், ஒவ்வொன்றிலும் மூன்று மாணவர்கள். சென்னை ஐ.ஐ.ட்டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை பூ.சா.கோ. கல்லூரி, திண்டுக்கல் கல்லூரி ஆகியன இறுதிக்கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள்.
 
முதல் பரிசு வென்ற ஐ.ஐ.ட்டி. குழு
அற்புதமான கேள்விகள். சிந்தனையைக் கிளறும்படியான  format. கடைசியில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயைத் தட்டிக்கொண்டு போனவர்கள், சென்னை ஐ.ஐ.ட்டி. மாணவர்கள்தாம். (ஐ.ஐ.ட்டி. என்றாலே மனப்பாடத் திறமையும் நினைவாற்றலும்தானே அவர்களின் அடையாளங்கள்! என்றாலும் அவர்களும் கடினமாகப் போட்டியிட்டுத்தான் வெல்ல முடிந்தது.)
 
இரண்டாம் பரிசு வென்ற பூ.சா.கோ.கலைக் கல்லூரி, கோவை, குழு
இரண்டாவது பரிசு ஐம்பதாயிரம் ரூபாயை வென்றவர்கள், கோவை பூ.சா.கோ. கல்லூரி மாணவர்கள்.
 
வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணா பல்கலைக் குழு

திறமையாக நடத்திய கஸ்தூரிக்கு எவ்வளவு பரிசு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அடுத்த வினாவிடை நிகழ்வு எப்போது என்றும் தெரியவில்லை. மாணவர்கள் ‘புதுயுக’த்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பத்திரிகை

எது இனப்படுகொலை? – கவிஞர் சேரன்  (‘காலச்சுவடு’ ஜனவரி 2014)

இனப்படுகொலை (Genocide) என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, ‘இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு’. இன்னொன்று, இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள்- என்கிறார் சேரன்.

"இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெல்ல இடம் பெற்று வருவது; மாற்று இனத்தவர்களின் குடியேற்றம், வெறுப்பு ஏற்படக்கூடிய வகையில் ‘மற்றவர்’களைப் பற்றிக் கல்வியிலும் பாடப் புத்தகங்களிலும் வரலாற்று எழுதலிலும் சித்திரிப்பது, திட்டமிட்ட ஒதுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும். இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983  நடந்தேறிய ஈழத்தமிழருக்கு எதிரான ‘கலவரங்கள்’ இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான்.
 
இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரசப் படையினர்மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை. ஜூன்1956 - டிசம்பர்2008 காலப்பகுதியில் இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான ‘கலவரங்களை’யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள் இடம்பெற்ற ஊர்களுக்கு நான் சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப் படுகொலைகள் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன். அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து  எட்டுமாதக் குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

இத்தகைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகியிருந்தாலும் ‘பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்ற வழமையான இலங்கை அரசின் உத்தியோகப் பூர்வமான அறிக்கையே வெளியாகும்.  1982இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடகநிலைமை பெருமளவுக்கு இதுதான்.”

மூன்றாவதாகவும் ஒரு அம்சத்தைச் சேரன் தருகிறார். “இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி (இன) மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம் (ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பாயம் 1994 இல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் இனப்படுகொலைக்கான கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப்படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியிருக்கிறது....ஈழ இனப்படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் தொடங்கியுள்ளன. இவற்றுள் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.”

சேரனின் முயற்சிக்கு அனைத்துலகத் தமிழ் மக்களும் துணையிருப்பார்கள் என்பது உறுதி. இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்ந்தபோது, அதன் எதிரொலியாகத் தில்லியில் சீக்கியர்கள் சிலநூறு பேர் கொல்லப்பட்டார்கள். சீக்கிய சமுதாயம் அதுபற்றி எண்ணற்ற வழக்குகளைத் தொடர்ந்து பலகோடி ரூபாய்களை இழப்பீடாகப் பெற்றும் இன்னும் விடாமல், சோனியாகாந்திமீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சென்ற ஆண்டு அவர் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றபோது அவரைக் கைதுசெய்ய வாரண்ட்டை அவருக்கு வழங்க முயற்சி மேற்கொண்டதை நாம் நினைவு கூற வேண்டும். சீக்கியர்களுக்கு உள்ள இன உணர்வு தமிழர்களாகிய நமக்கு  ஏன் இல்லை?

கலைமகள் –ஜனவரி 2014  - ஆண்டு ராசி பலன்

2014ஆம் ஆண்டின் பொதுப்பலன்களை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். தனுசு ராசிக்கு “தினமும் சுரைக்காய்ச் சித்தரை வணங்கினால் நல்ல திருப்பங்கள் ஏற்படும்” என்று இருக்கிறது. இவரைப் பற்றியும் வணங்கும் முறை பற்றியும் மேற்கொண்டு விவரங்கள் தேவை. யாராவது எழுதுங்களேன்! (அடியேன் ராசி தனுசு!)

சிரிப்பு
“நீங்க ரொம்ப லக்கி டாக்டர்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“நான் உடம்பு சரியாயிட்டா டிஸ்சார்ஜ் ஆகி போயிடுவேன். நீங்க எப்பவுமே நர்சுங்களோட இருக்கீங்களே.”

(நன்றி - தமிழ் இந்து -  26.01.2014 –   பக்கம் 12 – எழுதியவர்: பர்வீன் யூனுஸ். பாராட்டுக்கள்! இந்த மாதிரியான ஜோக் அமெரிக்காவில் எழுதினால் ஜெயிலில் போட்டுவிடுவார்களாமே!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
© Y.Chellappa


வியாழன், ஜனவரி 23, 2014

மூத்தவள் ‘அமா’, இளையவள் ‘றீ மா’ – (அபுசிதொபசி-25)

(புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவற்றுள் சில நூல்களைப் பற்றி இன்றும் தொடர்கிறேன்.)

நேற்று (புதன்கிழமை- 22-01-2014) 37-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதிநாள். ஏற்கெனவே இரண்டுமுறை போயிருந்தேன். முப்பது புத்தகங்கள் வாங்கியிருந்தேன். வங்கி இருப்பில் சில ஆயிரங்கள் குறைந்தது தெரிந்ததும், ‘ஐந்து அலமாரிகளும் நிரம்பி வழிகிறதே, இன்னும் வாங்கத்தான் வேண்டுமா’ என்ற (மறைமுகக்) கோபம் இல்லாளிடமிருந்து வெளிப்பட்டது. நேரிடையாக அல்ல, தன் மகளுடன் தொலைபேசும்போது. இருந்தாலும் நமது வழக்கத்தை மாற்றிக்கொள்ள முடிகிறதா? ‘இன்று தான் கடைசி. இன்று விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டுமே’ என்று (மெல்லிய குரலில், ஆனால் வீட்டிலுள்ளவர்களுக்குக் கேட்கும்படியாக) நானும் ஒரு நண்பருடன் தொலைபேசினேன். கூடவே, அன்று எங்கள் குடியிருப்பில் திடீர் மரணம் எய்திவிட்ட ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டு, மனித வாழ்க்கையின் நிலையாமையை விவாதித்தேன். ‘எனவே இன்று கட்டாயம் புத்தகக் காட்சிக்குப் போய்வந்துவிடுவது நல்லதல்லவா?’ என்றேன். பேசி முடித்ததும், வியப்பூட்டும் விதமாக,  ஒரு திடீர் காப்பியுடன் எனக்கு உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது! ‘போய் வாருங்களேன், உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்?’ என்றார் துணைவி.

இப்படி திடீர் அனுமதி கிடைத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது என்னைப்போன்ற சராசரிக் கணவர்களுக்குத் தெரியாதா என்ன? ‘நீ வந்தால் தான் போவேன், இல்லையென்றால் வேண்டாம். ஏற்கெனவே நிறைய வாங்கியாகிவிட்டதே’ என்றேன் தயக்கத்துடன். ‘நான் வரவில்லை’ என்றார். எனக்குப் பகீரென்றது. ‘ஏன், வந்தால் என்ன? நீயில்லாமல் நான் எங்கும் போவதில்லையே! கோபமா?’ என்றேன். (எந்தச் சூழ்நிலையில் எம்மாதிரி பேசவேண்டும் என்பது சராசரிக் கணவர்களுக்குத் தெரியாத விஷயமா?) ‘நான் இன்று இரவு கடலூர் போகிறேனே’ என்றார் முகமெல்லாம் மலர. அவர் தந்தையின் ஊராயிற்றே! ஓ, அதுதான் காரணமா? மேற்கொண்டு ஏதும் பேசாமல் உடனே நடையைக் கட்டினேன், புத்தகப் பொருட்காட்சிக்கு.
*** 

கடைசிதினம்-மாலைநேரம்  என்பதால் புத்தகக் காண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரைபோல் இங்கும் தகரப் பெட்டியில் ‘மாங்காய் சுண்டல்’, கைமுறுக்கு, வேர்க்கடலை  ஏந்திக்கொண்டு வியாபாரிகள்-பெரும்பாலும் சிறுவர்களே- திரிந்தவண்ணம் இருந்தனர்.

ஒரு சுண்டல் சிறுவன், இன்னொரு சுண்டல் சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான், ‘இன்னும் பத்து ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும், ‘முத்து காமிக்ஸ்’ புத்தகம் வாங்குவேன்’ என்று. (பளபளா தாளில் முத்து காமிக்ஸ் இப்போதெல்லாம் அறுபதுமுதல் நூறு ரூபாய்.) பீட்சா வாங்க நினைக்காமல் புத்தகம் வாங்க நினைத்தாயே, தம்பி, நீ வாழ்க! உனக்காத்தானடா இந்தப் புத்தகக் கண்காட்சி!
***
புத்தகக் கடை வைத்திருந்தவர்கள் எல்லாரும் பதின்மூன்று நாள் உழைப்பில் களைத்துப் போயிருந்தனர். என் பதிப்பாளர், பொன்.வாசுதேவன், பாவம், இளைத்தும் போயிருந்தார், சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் போனதால். (அவருடைய கடையும் இளைத்துப் போயிருந்ததாகத் தோன்றியது. நிறைய விற்பனை ஆகியிருக்கக்கூடும்.)

இன்று எல்லா வரிசைகளையும் ஒருதரம் பார்த்துவிடுவது என்ற முடிவோடு விரைந்து நடந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது, ‘தமிழ்ப்பணி’ அரங்கு. அங்கு அதிர்ஷ்டவசமாக எனக்குக் காட்சிதந்தார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள். பட்டுப்போன்ற வெண் மீசை. உலகில் எங்கிருந்தாலும் அவரை எடுத்துக்காட்டும் ‘டிரேட் மார்க்’ அது. மூக்கின் இருபுறமும் சமமாக நீண்டு, அதன் முடிவில் அகன்று விரிந்து கீழ்நோக்கி நிலம்பார்க்கும் மீசை. எண்பதைத் தொடும் பிராயத்தினர். இருபத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரிந்தவர். அருமை மனைவியைச் சில ஆண்டுகள்முன்பு இழந்துவிட்ட சோகம் இன்னும் கண்களில் தெரிகிறது.













உலகக் கவிஞர்கள் மாநாடு எங்கு நடந்தாலும் தவறாமல் இவரைப் பார்க்கலாம். திரும்பிவந்தவுடன் அந்தப் பயண அனுபவங்களைப் புத்தகமாக்கி விடுவார். சொந்தமாக அச்சகமும், பதிப்பகமும், ‘தமிழ்ப்பணி’ என்ற மாத இதழும்... தமிழ் நாட்டில் வேறெந்தக் கவிஞரிடம் இருக்கிறது?



‘மனோன்மணீய’த்திற்குப் பிறகு தமிழில் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு நாடக நூல் எழுதியவர் இவரே. ரஷியாவின் மிகச்சிறந்த கவிஞர் ஒருவரின் (தாரா சு ச்வேன்கோ) கவிதைநூலை இவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஓர் ஊரில் தங்கிவிட்டுப் போன இராணுவ வீரன் ஒருவனால் கர்ப்பிணியாக்கப்பட்ட பெண்ணொருத்தி, அந்த இராணுவ வீரர்கள் தம் கூடாரத்தைக் கலைத்துவிட்டு வேறொரு ஊருக்கு வண்டிகளில் புறப்படும்போது, ஒவ்வொரு வண்டியாகப் பார்த்து ‘அவன் இருப்பானோ’ என்று தேடும் காட்சியைப் பெருங்கவிக்கோவின் உயிருள்ள வரிகளில் படித்தது இன்றும் கண்முன்னால் தெரிகிறது.

தமிழைக் காப்போம் என்ற முழக்கத்துடன் குமரியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டவர். ‘கலைஞரும் கடவுளும் என்னிரு கண்கள்’ என்று தன் ஆன்மிகத்தை உலகறியப் பறைசாற்றியவர். ஐயப்பன் மீது அந்த நாட்களிலேயே இசைப்பேழை வெளியிட்டவர். ஹூஸ்டன் நகர் மீனாட்சி அம்மை கோவிலைக் கண்டவுடன், ‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ பாடியவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அமைத்து உலகளாவிய நட்புக்குப் பாலம் வகுத்தவர்.

‘சேது காவியம்’ என்ற தலைப்பில் மாபெரும் அளவில் காவியம் படைத்திருப்பவர். (அதன் ஐந்தாம் காண்டம் வெளியீட்டு விழா 09-02-2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அழைப்பிதழ் பார்க்கவும். அனைவரும் வருக!)

பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார். (கடைசியாக அவரைப் பார்த்துப் பத்து வருடங்கள் ஆகியிருக்கும்.) கட்டித் தழுவிக் கொண்டார். 

அவரையும் என்னையும் பிணைத்தது தமிழ் மட்டுமின்றி, அரவிந்த அன்னையின் அருளாட்சியுமாகும். அதை நினைவு கூர்ந்தார். எனது ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ சிறுகதைத் தொகுதியை அவரிடம் கொடுத்து ஆசிபெற்றேன்.

அப்போது என் குடும்பம் பற்றி விசாரித்தார். பேரக் குழந்தைகளுக்காகப் புத்தகம் வாங்குவதுதான் இன்றைய நோக்கம் என்றேன். தனது ‘கொஞ்சும் இன்பம்’ என்ற குழந்தை பாடல் புத்தகத்தைக் கொடுத்தார். எழுபது கவிதை நூல்களைப் பெரியவர்களுக்காக எழுதியவர், குழந்தைகளுக்காகவும் எழுதியிருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலிருந்து சில பாடல்கள் இதோ:

விழி தம்பி விழி,
விடிந்ததப்பா விழி!
எ\ழு தம்பி எழு!
எழுந்துழைப்பைத் தொழு!

படி தம்பி படி
பாடம் நன்கு படி!
அடி தம்பி அடி
ஆணவத்தை அடி! (பக்.15)

கிழமைப் பெயர்களை மனப்பாடம் செய்ய உதவும் அழகிய பாடல்:

ஞாயிற்றுக்கிழமை
நண்பன் வந்தான்

திங்கட்கிழமை
திருச்சி சென்றோம்

செவ்வாய்க்கிழமை
செயல்கள் முடித்தோம்

புதன்கிழமை
புறப்பட்டு வந்தோம்

வியாழக்கிழமை
வீட்டில் தங்கினோம்

வெள்ளிக்கிழமை
நண்பன் சென்றான்

சனிக்கிழமை
தடைகள் நீங்கின

அதற்குப் பின்னால்
ஆ! ஆ! இன்பம்!


இம்மாதிரி இனிய பாடல்கள் கொண்ட நூல் இது.

விடைபெறும்போது, தாம் திருக்குறளுக்கு உரை எழுதியதைச் சொன்னார். (செம்மொழி உரை). கையடக்கமான அழகிய பதிப்பு. தங்கள் கையொப்பம் வேண்டுமே என்றேன். உடனே ஒரு வெண்பா எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். ஆசுகவி ஆயிற்றே!



பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் அவர்களின் முகவரி: 12, சாயிநகர் இணைப்பு, சென்னை 6000092. Vamusethuraman35@gmail.com. Ph. 044-24798375, 28552237. அவரது எல்லா நூல்களையும் அவரே வெளியிட்டிருக்கிறார்.
*** 

தன் தந்தையார் பெருங்கவிக்கோவின் நூல்களை வெளியிடுதலும், தமிழ்ப்பணி இதழைக் கொண்டுவருதலுமே தலையாய கடமையாகக்கொண்டு செயல்படுகிறார், மூத்தமகன், வா.மு.சே.திருவள்ளுவர். அவரும் ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நல்ல பேச்சாளர், நல்ல கவிஞர். தனது பர்மியப் பயணம் பற்றி அவர் எழுதியுள்ள நூல் ‘பர்மா மண்ணிலே..’. அதிலிருந்து சில பகுதிகள்:

பர்மியப் பெயர்களும் மொழியும்

பர்மிய நாட்டில் பெரும்பான்மையான மக்கள் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இஸ்லாம், கிறித்தவம், ஹிந்து சமயங்களைச் சேர்ந்தவர்கள். ஆயினும் அவர்கள் பர்மிய மொழிப் பெயர்களையே சூட்டிக்கொள்கிறார்கள். அதனால் ஒருவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுகொள்ள முடியாது.

மௌங் செய்ன்....மவ்ங் செய்ன் என்பது ஒரு பொதுப்பெயர். மௌங் என்பது தம்பி அல்லது இளவல் என்றும், செய்ன் என்பது வைரம் என்றும் பொருள்படும். இளமையில் மௌங் செய்ன், வாலிபப் பருவத்தைக் கடந்ததும் கோ மவுங்செய்ன் என்றும், மூப்புத் தன்மை அடையும்போது ஊ மௌங் செய்ன் என்றும் அழைக்கப்படுவார்.

‘மௌங்’ தம்பி, ‘கோ’ அண்ணன், ‘ஊ’ தாத்தா என்பன உறவுமுறை சார்ந்த மரியாதைச் சொற்களாகும்.

அதேபோல், இளம் பெண்களின் பெயருக்கு முன்னே ‘மா’ என்றும், தாய்ப்பருவமுள்ளவர்களை ‘டோ’ என்றும் அழைப்பது முறையாகும்.

மா என்றால் சகோதரி என(வும்) பொருள்படும். தனக்கு மூத்த ஒரு பெண்மணியை ‘அமா’ என்றும், தனக்கு வயதில் சிறிய பெண்பிள்ளையை ‘றீ மா’ என்றும் சொல்வார்கள். அதேபோல, மூத்த பெண்களை சின்னம்மா, பெரியம்மா, அத்தே என்ற முறையில் ‘அடோ’ என்று அழைப்பார்கள்.

துறவிகளை –ஆண்பாலராயினும் பெண்பாலராயினும், ‘ஊ’ என்ற மரியாதைப் பெயாரால் அழைக்கிறார்கள்.

இராணுவத்தில் சேவை செய்பவர்களை ‘போ’ என்ற அடைமொழியிட்டு அழைப்பர். போ என்றால் வீரன், தீரன் என்று பொருளாம்.

பர்மாவில் உள்ள தமிழர்கள் தம் பெயரோடு ஒரு பர்மியப் பெயரை இணைத்து வைத்துள்ளார்கள். ஆனால் தம் பெயரின் இறுதியில் சாதிப்பெயரை கட்டாயம் போடுகிறார்கள்.

துறவிகளின் இறப்புவிழா

வெந்நீர் ஊற்று நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வழியில், கோபுரம் போன்ற (ஓர் அமைப்பு) மரக்கட்டையால் செய்யப்பட்டு, மக்கள் வரிசையாக ஏறி நின்று, உச்சியில் சென்று வணங்கித் திரும்பிகொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஆங்காங்கே பொருட்களும் விற்பனை செய்துகொண்டிருந்தனர். ‘இது என்ன’ என்று வினவினேன். ‘புத்தத் துறவிகள் இறந்தால் அவர்களை கோபுரம் அமைத்து, சில நாட்கள் வைத்திருந்து, எல்லாப் பெருமக்களையும் வரவழைத்து, அவர்கள் உயரத்தில் மேலே சென்று சந்தனக்கட்டை, ஊதுபத்தி வைத்து வணங்குவர். ஒரு கோபுரத்தில் அவர் உடலும், மறு கோபுரத்தில் மரங்களும் அடுக்கி இறுதியாக எரிப்பர். இதை பர்மிய மக்கள் விழா எடுத்துக் கொண்டாடுவர்’ என்று கூறினார்.

(நாங்களும்) வரிசையில் நின்று, ஏணியில் ஏறி, துறவிக்கு ஊதுபத்தி வைத்து சிறிதுநேரம் அமைதியாக நின்று, வணங்கி, அஞ்சலி செலுத்தினோம். பின் அருகில் உள்ள மரக்கோபுரத்தில் சென்று அனைவரும் சிறுசிறு கட்டுக்களாக (மரக்கட்டைகளை) வைத்தனர். நாங்களும் சென்று கட்டைகளை வைத்து மண நிறைவடைந்தோம். பர்மிய மக்களின் குருபக்தி உண்மையிலேயே நெஞ்சைத்தொட்டது. ஆனால் அங்கு பேச்சுக்களே காணப்படவில்லை. தண்டரா சப்தங்கள் (மட்டுமே) ஒலித்துக் கொண்டிருந்தது.

யங்கூன் தங்கப் புத்தர் ஆலயம்

யங்கூன் நகரில் ‘சூலே பக்கோடா’ கோயில், யங்கூன் நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அகன்ற உயரமான உயர்கோபுரங்களில் தங்க மெருகூட்டி இரவும் பகலும் பளபளக்கும் வண்ணம் அமைத்துள்ளனர். அந்தப் பொன்னொளிர் கோபுரங்களைக் காண்பதற்கு கண்கோடி வேண்டும்.

நம் இந்திய மண்ணில் தோன்றிய புத்தபகவானின் கருத்துக்கள், கொள்கைகள் பல, உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை எண்ணும்போது இந்திய மண்ணில் பிறந்தவர்கள் நாம் என்ற எண்ணம் பெருமை பூக்கிறது.

கோயில் நுழைவாயிலில் அயலவர் என்று கண்டுவிட்டால் டாலர் கட்டணம் செலுத்தவேண்டும். (எனவே பர்மியர்களைப்போல கைலியைச் சட்டைக்குமேல் கட்டி பர்மியத் தமிழர்களாக மாறினோம்.)

எங்கு நோக்கினும் புத்தர் சிலைகள். சிறிய பெரிய வடிவங்களில் புத்தரின் அருட் கடாட்சத்தைக் காணமுடிகிறது.

மேல்தளத்தில் கோயிலைச் சுற்றி சிறிய புத்தரும் புத்தருக்கு அருகில் நீரூற்றுக்களும் வந்துகொண்டிருந்தன. என்ன என்று வினவியபோது, நாம் நினைத்தது நிறைவேற நம் வயது எத்தனை ஆண்டோ அத்தனை குவளையில் நீர் பிடித்து புத்தர்மீது ஊற்றி குளிரவைத்ததும் நினைத்தது நடக்கும் என்று கூறினர். யானும் புத்த பகவானை வேண்டி எனது வயதுக்கேற்ப 43 (குவளைகள்) கணக்கிட்டு நீர் ஊற்றி மகிழ்ந்தோம்.

தண்டாயுதபாணி திருக்கோயில்

யங்கூன் நகரத்தில் ஆறரை தண்டாயுதபாணி கோயில் உள்ளது.   மிகப் பெரிய கோயில். அந்தக் கோயிலைக் கண்டாலே எந்த அளவு வருமானம் கண்டு உருவாக்கியிருப்பார்கள் என்பதை அறியமுடியும்.

கோயிலின் ஓர் அறையில் இரும்புப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இரும்பு கதவு போட்டு மூடிவைத்துள்ளனர். மியான்மாரில் தொழில்செய்த செல்வச் சீமான்களின் கருவூலங்கள். கலவரத்தின்போது பெருமக்கள் அனைவரும் கோவிலில் பெட்டிகளை போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று நாடு திரும்பியவர்கள். அந்தப் பெட்டிகள் பச்சை நிறத்தில் அப்படியே இருந்தது கண்களில் நீரைப் பெருக்கெடுக்க வைத்தது.

கலவரத்தால் ஓடியவர்கள் போக, இருந்த அறுவரில் ஒருவராக இராமநாதன் செட்டியார் கோயிலில் இருந்தார். எங்களை கோயிலுக்குள் வரவேற்று இலைபோட்டு வடை தேநீரும் வழங்கினார்.

பல்வேறு செய்திகளையும் அங்கிருந்த பெருமக்களிடம் கலந்துரையாடினோம். விட்டுச் சென்ற சொத்துக்களைஎல்லாம் மீட்பதற்கு வழியுண்டா என்ற கணைகளையும் தொடுத்தோம். செட்டிமக்கள் வழிவந்த பெருமகனே நம் நிதியமைச்சர், தமிழர் சொத்துக்களைஎல்லாம் மீட்பதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்றார்....

© Y.Chellappa


குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில், மேல்நோக்கிய கட்டைவிரல் மீது அழுத்தவும். நன்றி.

திங்கள், ஜனவரி 20, 2014

தாகூரின் காதல் பரிசும், எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை நினைவுகளும் ( ‘அபுசி-தொ பசி’- 24)

(புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவற்றுள் சில நூல்களைப் பற்றி இன்றும் தொடர்கிறேன்.)
எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை சில கவிதைகள், மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட! ரவீந்திரநாத் தாகூரின் ‘காதல் பரிசு’ மாதிரி.


தாகூருக்கு எத்தனையோ மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. (கனடாவிலிருந்து ஜெயபாரதன், 'திண்ணை'யில் தொடர்ந்து தன் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறார்.) என்றாலும், அந்த நாளில் வி.ஆர்.எம்.செட்டியார் அளித்த மொழிபெயர்ப்பு தான்  ‘classic’  எனலாம். அத்தகைய ஒரு மொழிபெயர்ப்புதான் இது. வி.ஆர்.எம்.செட்டியார் மேற்பார்வையில் சா.அருணாசலம் மொழிபெயர்த்திருக்கிறார்.

எல்லாமே கவிதைகள். அழகிய உரைநடையில் அமைந்த மொழிபெயர்ப்பு. உதாரணத்திற்கு சில பகுதிகள்:
***
என்னிடமிருந்ததைக் கொண்டு எனது தட்டை நிரப்பி உன்னிடம் கொடுத்துவிட்டேன். உனது திருவடிகளுக்கு நாளை நான் எதைக் கொணர்வேன் என அறியாது திகைக்கின்றேன். பூக்கும் காலத்திற்குப் பின், மலர்களை இழந்த வெறுங்கிளைகளோடு வானத்தை நோக்கி நிற்கும் மரம்போல், நான் நிற்கிறேன்.

ஆனால் எனது முன்னைய நிவேதனங்களில், முடிவற்ற கண்ணீர் வெள்ளத்திலே சாம்பி வாடாத மலர் ஒன்றுகூட இல்லையா?

வெறுங்கையனாய் நான் உன்னிடம் வேனிற்காலத்தில் விடைபெறும்போது, நீ அதை நினைந்து உனது கண்களால் எனக்கு ஆசி வழங்குவாயா? (பக்.22)
***
வாத்துக்கள் ஆர்ப்பரிக்கவும், புறாக்கள் சூரிய ஸ்நானம் செய்யவும், மாலைப் பொழுதிலே மீன் பிடிப்போரின் சிறிய மரக்கலங்கள் புல்பரந்த கரையின் ஓரமாக நிழலில் தங்கும் தனிமையான நீர்நிலைகளின் மணற்பாங்கான கரையையே நான் நேசித்தேன்.

மூங்கில் புதர்களின் ஓரத்தில் நிழல் பரவியதும் பெண்கள் பாத்திரங்களோடு, சுற்றிவரும் சந்துகளின் வழியாக வந்து தங்குவதுமான மரங்கள் அடர்ந்த கரையை நீ நேசித்தாய்.

இருகரைக்கும் ஒரே பாடலைப் பாடிக்கொண்டும், ஒரே ஆறுதான் நம்மிருவரிடையேயும் ஓடியது. விண்மீன்களை நோக்கியவண்ணம் தனிமையாக மணலில் படுத்துக்கொண்டு நான் அதைக் கேட்டேன்.

காலைக் கதிரவனின் ஒளியிலே, சரிவான கரையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு நீயும் அதைக் கேட்டாய். நான் கேட்ட சொற்களை நீ அறியாய். உன்னிடம் அது பேசிய மறைமொழி, எனக்கு என்றும் இரகசியமாகவே உள்ளது. (பக்.20)
***
வசந்த காலத்தில் ஒருநாள், நேரம் தவறி, குழந்தையின் மாறும் மனநிலையோடும், உனது குழலிசையோடும் மலர்களோடும், நீ தோன்றினாய். நீர்க்குமிழிகளாலும் அலைகளாலும் எனது காதல் செந்தாமரையை அலைத்து, என் நெஞ்சை வாட்டினாய். உன்னுடன் வாழ்வின் இரகசியத்தில் புகுமாறு, நீ என்னை அழைத்தாய். ஆனால் கோடைகாலத்தில் அசைந்தே முணுமுணுக்கும் இலைகளினூடே, நான் துயின்றேன். நான் எழுந்ததும் வானத்தில் மேகங்கள் திரண்டன. காய்ந்த சருகுகள் காற்றில் பறந்தன. மழையோசையின் அதிர்ச்சியிலே, உனது நெருங்கிவரும் காலடிகளைக் கேட்கிறேன். மரணத்தின் இரகசியத்தில் உன்னுடன் கலந்து சேருமாறு நினது அந்தரங்க அழைப்பையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் உன்னருகில் வந்து என் கரங்களை உன் கரங்களோடு பிணைத்து நிற்கும்போது, உனது விழிகள் கனல்கின்றன. உனது கூந்தலிலிருந்து நீர் சொட்டுகிறது.(பக்.46)

காதல் பரிசு – வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 64, ரூ.25.

எம்.ஆர்.ராதா

தமிழ் திரைப்பட உலகில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டாக்கி மறைந்தவர் எம்.ஆர்.ராதா.  1967இல் தி.மு.க. ஆட்சிக்குவரக் காரணமாயிருந்தவை இரண்டு: ஒன்று, இந்தி எதிர்ப்பு. இரண்டாவது, எம்.ஜி.ஆரை. எம்.ஆர்.ராதா சுட்டது. கையிலும் மார்பிலும் கட்டுக்களோடு எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்த படம் தான் சராசரிக்கும் கீழான மக்களின் நெஞ்சைத்தொட்டு அவர்மீதான அனுதாபத்தைத் திமுகவுக்கு வாக்குகளாக மாற்றியளித்தது என்றால் மறுப்பதற்கில்லை. அதே அலையில் தான் எம்.ஜி.ஆர். பின்னாளில் தனிக்கட்சி அமைக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்தது. எனவே எம்.ஜி.ஆர். மட்டுமின்றி, செல்வி ஜெயலலிதாவும் கைகூப்பிக் கும்பிடவேண்டியவர் எம்.ஆர்.ராதா.

இந்த வழக்கில் சிறைசென்று திரும்பியதும், வெளிவந்த நூல்தான், விந்தன் எழுதிய “நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்”.  அதில் ராதா கூறுகிறார்:

(பக்.158) ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்திலே எனக்கு ஈடுகொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னால மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்குமேல்  கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலேயே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்க மாட்டார். ‘நான் விரும்பறது உங்களுடைய நடிப்புக்கலையை; ஓசிப் பெட்ரோலை இல்லே’ன்னு சொல்லி விடுவார்...

(பக்.161) கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதைவிட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கறது அவருக்குப் புரிஞ்சுப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற ப்ரொட்யூசர் அவர் ஒருத்தர்தான்....

(பக்.166) (என் வழக்கைப் பற்றி) ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே நான் மனம் விட்டுச் சொல்லி விடணும்னு நினைக்கிறேன். அதாவது, நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு நினைவை இழந்தவன் நான்தான். அந்த நிலையிலே என்னையும் முதல்லே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. அங்கே நினைவு திரும்பி நான் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கீதா மட்டும் என் பக்கத்திலே இல்லே; அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே! அதிலே எனக்கு ஒரு திருப்தி.....

நம் காலத்தின் மறக்கமுடியாத அரசியல், சினிமா நினைவுகளை மறுபடியும் அசைபோட உதவும் நூல்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்- வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 168, ரூ.100.

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

© Y.Chellappa