செவ்வாய், நவம்பர் 18, 2014

(பதிவு 110) மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி – துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்


மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி – துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்

எங்கள் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களின் கனவில் காந்திஜி வந்து பத்து கேள்விகளைக் கேட்டதாகவும், அதற்கு அவருடைய பத்து பதிவுலக நண்பர்கள் பதில் தரவேண்டும் என்று கில்லர்ஜி கட்டளையிட்டதாகவும், அதில் தானும் ஒருவர் என்றும் நண்பர் துளசிதரன் தெரிவித்திருக்கிறார். ‘யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்’ என்பதில் பெரிதும் நாட்டமுள்ள துளசிதரன், தன் பங்குக்குப் பத்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அதே சவாலை விடுத்திருக்கிறார். அந்தப் பத்தில் அடியேனும் ஒருவன்!  

கேள்விகள் காந்தியைப் பற்றியதாக இல்லாவிடினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கிவைத்து, இன்னும் முழுமையாகப் படிக்கப்படாத, ‘மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள்’ என்ற ஆறு தொகுதி நூல்களைத் தூசுதட்டி எடுத்தேன். எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் மகாத்மா! மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கிறது, காந்தியின் எழுத்துக்களைப் படிக்கும் அனுபவம். அதற்காகவே கில்லர்ஜிக்கும் துளசிதரனுக்கும் ஒரு கும்பிடு!


இனி, முதல் கேள்விக்குப் போகலாமா?

(1)நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

மறுபிறவி பற்றி மகாத்மா காந்தியின் கருத்து என்ன என்று தெரிந்துகொள்வோமா?

1909 அக்டோபர் முதல் தேதியன்று காந்தி, லண்டனில் விக்டோரியா தெரு, எண் 4-இல் இருந்த வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தபோது  லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதத்தில்  இப்படிக் குறிப்பிடுகிறார்:

“நீங்கள் ஹிந்து பத்திரிகைக்கு எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு கடிதத்தின் பிரதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள் எழுதிய ஒரிஜினலா என்று தெரியவில்லை. எனவே அதன் பிரதியை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உறுதி செய்யக் கோருகிறேன். மேலும் ஏதேனும் சேர்க்கவேண்டுமென்றாலும் சேர்த்து எழுதி அனுப்பினால் எங்கள் பத்திரிகையில் வெளியிடுவேன்.... 

மேற்படி கடிதத்தில் ‘மறுபிறவி’ என்ற கொள்கையை நீங்கள் மறுத்துப் பேசியிருப்பதாகப் படுகிறது. மறுபிறவி என்பதை இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரிதும் நம்பிக்கையோடு போற்றிவருகிறார்கள் (என்பதை நீங்கள் அறிவீர்கள்.) சொல்லப்போனால் அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவபூர்வமான உண்மை என்றே அவர்கள் கருதுகிறார்கள். மனித வாழ்க்கையின் பல விசித்திரங்களை மறுபிறவி என்ற கோட்பாடு எளிதாக விளக்கி விடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் பகுதியில் தங்கள் உரிமைக்காகச் சிறை சென்ற மக்கள், இந்த நம்பிக்கையால்தான் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். 

எனவே, உங்கள் கடிதத்தில் நீங்கள் மறுபிறவியை மறுப்பதுபோல் எழுதியுள்ள பகுதியைத் தயவுசெய்து மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இப்படிச் சொல்வதனால், மறுபிறவி என்ற கோட்பாட்டை உங்கள்மேல் நான் திணிப்பதாகக் கொள்ளவேண்டாம்....  “

இந்தக் கடிதத்திற்கு அதேவாரம் லியோ டால்ஸ்டாய் பதில் எழுகிறார், யாஸ்னயா போல்னயா நகரில் இருந்து: “....... நீங்கள் விரும்பினால் மறுபிறவி பற்றிய எனது கருத்துக்களை நீக்கிவிட்டு அக்கடிதத்தைப் பதிப்பிக்கலாம் என்று உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்...... எனது எழுத்துக்களைப் பதிப்பிக்க எனக்கு ராயல்டி எதுவும் தரவேண்டாம்... மறுபிறவி என்ற கோட்பாட்டை விட இறைவன்’ என்பதும் ‘அன்பு’ என்பதுமே நிரந்தரமானவை என்றும், ஆத்மா அழிவதேயில்லை என்றும் மக்கள் நம்புவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஆழமான ஈடுபாடும் ஒழுக்கமும் உண்டாவதற்கு இன்னும் வலிமையான காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்...”

(‘Tolstoy and Gandhi’ – pp 59-63)

மகாத்மா காந்தியைப் போல் எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை உண்டு. ஏனெனில், அறுபதைக் கடந்த நிலையிலும் எண்ணிய பலவற்றை இன்னும் சாதிக்க முடியாத கவலை மிகவுண்டு. அவற்றை இந்தப் பிறவியில் இல்லாது போனால், அடுத்த பிறவியிலாவது சாதிக்க முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி தரக்கூடியது வேறென்ன இருக்க முடியும்? ஆனால் சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாகவேண்டும்:

-மீண்டும் மனிதனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ஆண்மகனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் தமிழனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ‘கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி’ப் பிறத்தல் சாத்தியமா?
-மீண்டும் அதே பெற்றோர்களுக்குப் பிறக்க வேண்டுமா?
-மிக முக்கியமாக, மீண்டும் அதே வாழ்க்கைத்துணைதான் வாய்க்குமா?

இப்படிப் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே, அடுத்த பிறவியில் எங்கு பிறக்கலாம் என்பதை நான் முடிவு செய்ய முடியும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். பதில் தெரிந்தவர்கள் விரைந்து தெரிவிக்க வேண்டுகிறேன். அதற்குள் கில்லர்ஜியின் பத்தாவது கேள்வியையும் பார்த்துவிடலாமா?

(10) நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய்; உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது; ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்....?

ஆகா, என்னே கில்லர்ஜியின் சதித் திட்டம்! அடுத்த பிறவியில் நான் என்னவாகப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு தனக்கும் அதே பிறவி வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு எனது முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறாரோ என்று சந்தேகப்படுகிறேன். தொலையட்டும்- கெடுவான் கேடு நினைப்பான்!

மனிதப் பிறவி இல்லாமல் போனால் வேறு என்னவாகப் பிறக்கலாம் என்று இதுவரை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. இப்போது செய்யவேண்டியதாகிறது. 

தினத்தந்தியில் ‘சிந்துபாத்’ கதை – கன்னித்தீவு-  வந்த புதிதில் – ஏன், இன்றும் கூட – ஆர்வமாக சலூன்களுக்குப் போய் அக்கதையைப் படித்த தலைமுறை அல்லவா எங்கள் தலைமுறை! அது திடீரென்று நினைவுக்கு வந்தது. அக்கதையில் இளம் வயதில் எங்களைக் கவர்ந்த பாத்திரம் ஒன்று உண்டு – அது தான், கடற்கன்னி! ஆழ்கடலில் திடீரென்று கூட்டம் கூட்டமாக வந்து கடற்கன்னிகள் நீர்விளையாட்டு ஆடுவார்களாம். ஆனால் அவர்களை யாராலும் பிடிக்க முடியாதாம்! இடுப்புவரை இளம் பெண்ணாகவும், இடுப்புக்குக் கீழே மீனாகவும் இருப்பார்களாம்!

அதுபோன்ற கடற்கன்னிகளை அவ்வப்பொழுது மாலுமிகள் பார்த்ததாக தினத்தந்தியில் (மட்டும்!) செய்திகள் வரும். இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை.

ஆகவே, கில்லர்ஜி அவர்களே, துளசிதரன் அவர்களே, மானிடப் பிறவி இல்லாத பட்சத்தில், நான் ஒரு கடற்கன்னியாகப் பிறக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். இது எப்படியிருக்கு?
 கடற்கன்னி - நன்றி: இணையம்

(இங்கும் ஒரு கேள்வி எழுகிறது. கடற்கன்னிகள் மட்டும்தான் இருப்பார்களா? அவர்களது ஆண்பாலான கடற்கண்ணன்கள் இருக்கமாட்டார்களா? அவர்களைப் பற்றி  யாரும் சொன்னதில்லையே, ஏன்?)

(கடற்கன்னிகளைப் பற்றி மகாத்மாவின் நூல்களில் எந்தக் குறிப்பும் அகப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.)

(c) Y. Chellappa 


(கில்லர்ஜியின் மற்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதிலை எதிர்பார்க்கலாம்.)  

வியாழன், செப்டம்பர் 25, 2014

( பதிவு 109) சிவாஜி கணேசனும் அசோகமித்திரனும் (அபுசி-தொபசி 46)

(பதிவு 109) (அபுசி –தொபசி -46) (25-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)


for அரசியல்/அறிவிப்பு/அனுபவம்:

அந்தக் காலத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் ‘புகுமுக வகுப்பு’ என்று பெயர். அதைப் பள்ளியில் படிக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்துதான்  படிக்கவேண்டும். கல்லூரிகள் அப்போது அதிகமாக இல்லாததால், பெரும்பாலானவர்களின் படிப்பு, பதினொன்றாவதுடன் முடிந்துவிட்டிருக்கும். என்னுடைய நல்வினைப்பயனாக மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. அதில் புகுமுகவகுப்பில் சேர்ந்தேன். கணக்கு, பௌதிகம், இரசாயனம் கொண்ட முதல் பிரிவு.

என் தந்தையின் நண்பர் ஒருவர் திமிரியில் இருந்தார். இராணிப்பேட்டையிலிருந்து 12 கிமி தொலைவில் இருந்த சிறு நகரம். அந்தக் காலத்து பி.ஏ. (கணிதம்), பி.ட்டி. முடித்து, அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.(பெயர் மறந்துவிட்டது. சங்கரன் என்று வைத்துக்கொள்வோமே!)  அவர் என்னிடம் அன்போடு சொன்னார்: ‘குழந்தே! எங்கள் வீட்டில் தடுக்கி விழுந்தால் மேத்ஸ் புக்ஸ்தான். நானும் மேத்ஸ், எங்க அப்பாவும் மேத்ஸ், எங்க சித்தப்பாவும் மேத்ஸ். அதனால், நீ வந்தால் உனக்கு வேண்டிய எல்லாப் புத்தகங்களயும் எடுத்துக்கொண்டு போகலாம். காசு கொடுத்து வாங்கி அப்பாவுக்குச் செலவு வைத்துவிடாதே. நாளைக்கே வா’ என்றார்.

என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்பது இன்னும் ஒரு வாரம் கழித்துதான் அறிவிக்கப்படும் என்றேன். சிரித்தார். ‘உனக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாதா? நீ வாடா கண்ணா’ என்றார்.
***
எதிர்க்காற்றில் பன்னிரண்டு கிமி சைக்கிள் மிதித்துக்கொண்டு அவர் வீட்டை அடைந்தபோது காலை பத்துமணி.  ஞாயிற்றுக்கிழமை. ஓட்டடை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆறுமாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்கவேண்டும் என்பது சங்கரனின் தந்தையார் கட்டளையாம். சிலந்திவலைகள் சற்றே அதிகம்போல் தோன்றியது. அதைப் பொருட்படுத்தாமல் தென்னங்கூரை வேய்ந்த மொட்டைமாடியில் டியுஷன் நடந்துகொண்டிருந்தது. “ஏ க்யூப் மைனஸ் பி க்யூப் ஈக்வல்ஸ்.....” என்று சொல்லிக்கொண்டிருந்த சங்கரன், என்னைப் பார்த்ததும்  இறங்கி வந்தார்.

‘உட்காரப்பா...அம்மா, நம்ப சாஸ்திரிகளோட பிள்ளை. மேத்ஸ் புக்ஸ் கொடுக்கிறதா சொல்லியிருந்தேன்..’ என்று தாயாரிடம் அறிமுகப்படுத்தினார். சிறு ஊஞ்சலில் அமர்ந்து ஒட்டடை அடிப்பவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த வயதான பெண்மணி, மெல்ல எழுந்து ‘வாப்பா’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.  

சிறிதுநேரத்தில் அவரைவிட அதிக வயதான ஒரு பெண்மணி ‘காப்பி சாப்பிடப்பா’ என்று டபரா-டம்ப்ளரில் நுரை பொங்கும் காப்பியைக் கொடுத்தார். தமிழர் உபசரிப்பின் அடையாளமே காப்பிதானே!

அரைமணிநேரம் ஆயிற்று. உட்காரலாம் என்றால் இன்னும் தரையில் விழுந்திருந்த ஒட்டடைகள் நீக்கப்படவில்லை. நின்றுகொண்டே இருந்தேன். சங்கரனின் அப்பா வந்தார். வயது எண்பத்தைந்தாம். ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ‘வாடா கண்ணா..’  என்று வாய் நிறையக் கூப்பிட்டார். ‘மேத்ஸ் படிக்கிறியா?  வெரி குட். உனக்கு என்னென்ன புக்ஸ் வேண்டும்? எல்லாம் பரணில் மூட்டைகட்டி வைத்திருக்கிறேன். சொன்னால் எடுத்துத் தருகிறேன்’ என்று என்னுடைய முகத்தையே பார்த்தார்.

நான் ‘பேந்தப் பேந்த’ விழித்தேன். இன்னும் கல்லூரி திறக்காத நிலையில் நான் என்னவென்று சொல்வது? அதற்குள் சங்கரன் வந்துவிட்டார். ‘அப்பா, அவனுக்கு ஒண்ணும் தெரியாது. பி.யு.சி.-மேத்சுக்கு என்ன வேண்டும்னு ஒனக்குத் தெரியாதா?’ என்றார்.

‘என்ன, பி.யு.சி.யா?    நான் பி.எஸ்.சி.ன்னு இல்ல இருந்தேன்’ என்று என்னை அலட்சியமாகப் பார்த்தார் சங்கரனின் அப்பா. ‘எங்கிட்ட பி.யு.சி.க்கு எந்தப் புத்தகமும் கிடையாதே! வேணுமானால் ‘அனலிட்டிகல் ஜியாமெட்ரி’ இருக்கு, அதைக் கொடுக்கட்டுமா? ஆனால் அது எம்.ஏ. புத்தகமாச்சே, உனக்குப் பயன்படுமா?’ என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 12 கிமி வந்தாயிற்று. இன்னொரு 12 கிமி திரும்பிப் போகவேண்டும். இப்போதே பதினோருமணி வெய்யில் சுள்ளென்றிருந்தது. சீக்கிரம் இடத்தைக் காலிசெய்தாக வேண்டும். ‘பரவாயில்லை கொடுங்கள், நான் எம்.எஸ்.சி படிக்கும்போது பயன்படுமே’ என்றேன்.

அவர் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. சங்கரன் ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு எங்கோ போனார். ‘சரி, இங்கேயே இரு, கொண்டுவருகிறேன்’ என்று மாடிக்குப் போனார் சங்கரனின் அப்பா.

வரும்போது அவர் கையில் இருந்தது 1924ஆம் வருடத்தில் வெளியிடப்பட்ட ‘அனலிட்டிக்கல் ஜியாமெட்ரி’ என்ற சுமார் இருநூற்றைம்பது பக்கமுள்ள, பைண்டு செய்யப்பட்டு, ஓரங்கள் கரையான் அரித்த, பழுப்பேறிய புத்தகம். பெருமாள் பிரசாதம் மாதிரி அதை அவர் கொடுக்க, நான் பக்தியோடு வாங்கிக்கொண்டேன். வயதானவர்கள் எது கொடுத்தாலும் அது ஆசீர்வாதமல்லவா? ‘வேண்டாம்’ என்று சொல்லி அவர் மனதைப் புண்படுத்துவானேன்?

‘மெதுவாத் தெறக்கணும். இல்லேன்னா பக்கங்கள் பிஸ்கட் மாதிரி ஓடிஞ்சு வந்துடும்.    ஆகி வந்த புத்தகம். எங்க அப்பா படிச்சது, அப்புறம் நான் படிச்சேன். என் தம்பி படிச்சான். இதை யாருக்கும் தரமாட்டேன். எங்க வாத்தியார் கேட்டாலே தரமாட்டேன்னா பாத்துக்கோயேன். என்னமோ தெரியலே, ஒன்னப் பாத்தா ஒடனே தரணும்னு தோணித்து. அதுவே ஒரு நல்ல சகுனம் பாரேன். நீ சொன்ன மாதிரியே  எம்.ஏ. படிக்கத்தான் போறே பாத்துண்டே இரு, என் வாக்குப் பலிக்கறதா இல்லையான்னு!’ என்றார் பெரியவர்.   
      
அவரை நமஸ்கரித்துவிட்டு சைக்கிளை எடுத்தேன்.
****
வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை அப்படியே ஒரு காகிதக் கவரில் வைத்து குறுக்கிலும் நெடுக்கிலும் நூலால் கட்டி அலமாரியின் உச்சிப் பலகையில் வைத்தேன். சிதிலமாகிப்போய்க் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தால் எனக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அப்புறம் மறந்தே போனேன்.

திடீரென்று ஒருநாள், வேறு எதையோ எடுக்கும்போது இந்தப் புத்தகம் தரையில் விழுந்தது. குனிந்து எடுத்தேன் அலமாரி இருந்த இடம்  எப்போதுமே சற்று இருட்டாக இருக்கும். கையில் முள் குத்துவதுபோல் உணர்ந்தேன். விரைந்து வெளியில் வந்தேன். கையிலிருந்த புத்தகத்தின் உள்ளிருந்து ஏதோ ஒரு கூரான முள் நீட்டிக்கொண்டிருந்தது. அதற்குள் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. முழங்கைவரை மரத்துப் போவதுபோல் இருந்தது. ‘அம்மா’ என்று வலியால் அலறினேன். புத்தகம் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அதிலிருந்து ஓடியது, சிறிய தேள் ஒன்று! சிறிய அம்மிக் குழவியால் அதை ஒரே அடியில் கூழாக்கினார் அம்மா.

நல்ல வேளை அப்பா வீட்டில் இருந்தார். தேள்கடிக்கு மந்திரிக்கும் பழக்கம் அப்பாவுக்கு உண்டு. ஏராளமானவர்கள் வந்து குணம் பெற்றதை அறிவேன். அன்றுதான் எனக்கு அதை நேரில் அறியும் வாய்ப்புக் கிட்டியது. தேள் கொட்டிய கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மந்திரங்கள் சொன்னார். பிறகு தோள்பட்டையிலிருந்து மெதுவாக மாசாஜ் செய்வதுபோல் விரல்களால் மணிக்கட்டுவரை தடவினார். பிறகு அந்த விரல்களைத் தரையில் செங்குத்தாக நிற்கவைத்து, டொக், டொக் கென்று ஓசை வரும்படி தட்டினார். அப்படி மூன்றுமுறை செய்தார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு வலி குறைந்தது. மரத்துப் போன கை பழையபடி ஆயிற்று.

அடுத்த வாரம், அப்பா சங்கரனைப் பார்த்தாராம். எனக்குக் கொடுத்த புத்தகத்தில் முக்கியமான பொருள் ஏதேனும் இருந்ததா- பை சான்ஸ்- என்று கேட்டாராம். இருந்தால் கொண்டுவந்து கொடுக்கும்படி சொன்னாராம். செத்துப்போன தேளை எப்படி நான் திருப்பிக் கொடுப்பது?

அந்தப் புத்தகத்தில் இன்னும் கிழியாமல் இருந்த சில பகுதிகள், எனது பி.எஸ்சி வகுப்பில் பயன்பட்டன. பெரியவர் வாக்குப்படியே நான் எம்.எஸ்.சி படிக்க முடிந்தது. ஆனால் அங்கு இந்தப் புத்தகத்திற்குத் தேவை இருக்கவில்லை. அதற்குள் அது பொடிப்பொடியாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டதால், சேலம் ராஜகணபதி கோயில் முன்பிருந்த குப்பைக்கூடையில் போட்டேன். பிள்ளையார் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டு, விபூதியைத் தரித்துக்கொண்டு கிளம்பினேன். இப்போது நினைத்தாலும் தேளின் உருவம் கண்முன்னால் நிற்கிறது.

இப்போதெல்லாம் ஓட்டு வீடுகளே இல்லாததால், தேள்கள் காணக் கிடைப்பதில்லை. கடைசியாக நான் தேளைப் பார்த்து சுமார் இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும்.

பு for புத்தகம் :  (அடுத்த இதழில் காண்க.)

சி for சினிமா & தொ for தொலைக்காட்சி

நீயா நானா கோபிநாத்தின் நள்ளிரவுக்கு முந்தைய நிகழ்ச்சியை –அதாவது – நீயா நானா நிகழ்ச்சியை- எப்போதாவது பார்ப்பதுண்டு. கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்தபோது – என்ன ஆச்சரியம்- எனக்கு மிகவும் பிடித்த தலைப்பில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆத்மார்த்த ரசிகர்கள் – எழுத்தாளர் ஆத்மார்த்தியும் இருந்தார்- சிவாஜி மீது தங்களுக்கு எப்படிப் பிரியம் எழுந்தது, ஏன் எழுந்தது, எவ்வளவு அடர்த்தியான பிரியம் அது- என்பதை உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பவர்களை அப்படியே ஐம்பதாண்டுகளுக்குப் பின்னே கொண்டு போய்விட்டது அந்த நிகழ்ச்சி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தனக்கே உரிய வெண்கலக் குரலில் சிவாஜி கணேசன் மீதுள்ள தன் ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தினார். சிவாஜி என்ற ஒரு நடிகர் வந்திராவிட்டால் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு யார் உயிர் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டார்.

சில ரசிகைகள் – இளம் வயதில் அவர்களும் மிக அழகாக இருந்திருக்கக்கூடும் – சிவாஜி கணேசனைத் தங்கள் அன்பிற்குரியவராக இதயத்திற்குள் ரகசியமாகப் பொத்தி வைத்திருந்ததை மெல்ல வெளிப்படுத்தினார்கள். பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிறகும்,  சிவாஜி மீதான தங்களது இளம்பருவத்து ஒருதலைக் காதலை வெளிப்படுத்துவதில், நாணம் கலந்த தயக்கம் அவர்களிடம் இருந்ததை ரசிக்கமுடிந்தது.

ஒரு ரசிகர் சிவாஜி கணேசன் பேசிய மிக நீண்ட வசனம் ஒன்றைக் கடகடவென்று ஒப்பித்துக் கைதட்டல் வாங்கினார். ஆனால் அவரது உணர்ச்சிப்பெருக்கின் வேகத்தோடு ஒத்துழைப்பதில் அவருக்குக் குரலுக்குச் சற்றே தயக்கம் இருந்தது.

வழக்கம் போல, சிறப்பு அழைப்பாளர்கள் ‘தேமேன்னு’ அமர்ந்திருந்தார்கள்.

சிவாஜி கணேசனின் நடிப்பும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பழனி’யில் வரும் ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற பாடலில் அவரது நடிப்பு உச்சக்கட்டத்தைத் தொடும். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே- மனதினால் வந்த நோயடா..’ என்ற வரிகளுக்கு அவர் நடிக்கும்போது நம் கண்ணிலிருந்து நீரை வரவழைப்பது சிவாஜியா, கண்ணதாசனா, டி.எம்.எஸ்.ஸா, அல்லது இந்த மூன்றுமாகி நிற்கும் கதாபாத்திரமா என்று தெரியாது. 

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவர் தூக்கிலிடப்படும் காட்சி வந்ததும் நான் அழுதே விட்டேன். யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களும் அழுதுகொண்டிருந்தார்களே! ஆற்காடு ஜோதி தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பாலாற்றுப் பாலத்தின் மீது இராணிப்பேட்டைக்கு நடந்து சென்று கொண்டிருந்த என் மனதில் ஒரே ஒரு சிந்தனைதான் இருந்தது. சிவாஜியைத் தூக்கில் போட்டுவிட்டார்களே, இனி அவர் நடித்துப் புதிய படங்கள் வராமல் போய்விடுமே என்ற கவலை. அவர் இறந்தது சினிமாவில்தான், நிஜத்தில் அல்ல என்ற பிரமை தீருவதற்குச் சில மாதங்கள் ஆயின.

பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த எல்லாப் ‘ப’ வரிசைப் படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பலே பாண்டியா’வில் வரும் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?’ என்ற பாடலும், ‘பச்சை விளக்கி’ன் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலும் வறுமையால் இருண்டிருந்த என் இளம் நெஞ்சில் நம்பிக்கை விளக்கை ஏற்றிய பாடல்கள்.  ‘பாலும் பழமும்’ பாடலான ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ மற்றும் ‘ஆலயமணி’யின் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடலும் என் வளர்நெஞ்சில் காதலைத் தூவிய பாடல்கள். ‘நெஞ்சிருக்கும் வரை’யின் ‘முத்துக்களோ கண்கள்..’ பாடல் விரக்தி மனநிலைக்கு ஆறுதல் கொடுத்ததாகும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நிறுத்திவிடுகிறேன். இல்லையென்றால்,  அந்த ரசிகைகள் மாதிரி நானும் (அந்தக் காலத்தில்) சில நடிகைகளை என் மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன் என்ற உண்மை வெளிவந்துவிடலாம். மீதமிருக்கும் நிம்மதியை ஏன் இழக்கவேண்டும்?

for பத்திரிகை

‘காலச் சுவடு’ –செப்டம்பர் 2014 இதழில் அசோகமித்திரனின் பேட்டியைப் படித்தேன். இதுவும் ஒரு ஐம்பது வருட அனுபவத்தை நினைத்துப்பார்க்கச் சொல்வதாகும். யார் கேட்டாலும் இல்லையென்னாமல் எழுதிக் கொடுத்துவிடுவேன் என்று அசோகமித்திரன் சொல்கிறார். ‘சாவி’ கதை கேட்பாராம். முதலில் தலைப்பு சொல்லி விடவேண்டுமாம். தலைப்பில் தயக்கம் காட்டினால் அவ்வளவுதான், சான்ஸ் போய்விடுமாம். ‘மானசரோவர்’ என்ற தலைப்பு அப்படித் திடீரென்று பீறிட்டுக்கொண்டு வந்த தலைப்பு தானாம்.
மனைவியுடன் அசோகமித்திரன (படம்: நன்றி: காலச்சுவடு)
பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்குச் சன்மானம் கொடுக்கவேண்டும் என்ற பொருளாதார நீதியைப் பற்றி அசோகமித்திரனுக்குக் கவலையில்லை. அவர்பாட்டுக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். வசதியான ஜெயகாந்தன் போன்றவர்கள் எப்போதோ எழுதுவதை நிறுத்திவிட்டபோதும், இன்றுவரை விடாமல் எழுதிக்கொண்டிருப்பவர் அசோகமித்திரன். நீங்கள் நிச்சயமாகப் படிக்கவேண்டிய பேட்டி. சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவரின் பதில்களும்:

உங்கள் கதைகளில் ஆண் பாத்திரங்களைவிடப் பெண் பாத்திரங்கள் துலக்கமாக இருக்கின்றன. அவர்களுடைய உணர்வுகளை மிகவும் உண்மையாகச் சொல்கிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்.

அப்படியும் சொல்லலாம். ஆனால் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. ஒருவகையில் அது எழுதுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. ஆண் பாத்திரங்களில் அது குறைவு.

அறுபது வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதாவது எழுத்துத்திணறல்’ (writer’s block) ஏற்பட்டது உண்டா?

இல்லை. ஆனால் சோர்வு ஏற்பட்டதுண்டு. சோர்வாக இருக்கிற சமயம் யாராவது கதை வேண்டும் என்று கேட்பார்கள். எழுத ஆரம்பிப்பேன். ஒருவர் கதை கேட்டு எழுதிக்கொடுக்க முடியவில்லை என்றால் எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும்.

கல்கியைப் பற்றி....

கல்கியை எல்லோரும் மேம்போக்காக எழுதி இருக்கிறார். அதில் சரித்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அவர் இந்தப் பொன்னியின் செல்வனைவேண்டுமென்றேதான் நீட்டிக்கொண்டு போகிறார். அது உண்மை. ஆனால் தென்னிந்திய வரலாறு கிடைப்பதற்கு எனக்கு முழுக்க இந்தப் புத்தகம் உதவி செய்தது. அந்தப் புத்தகத்தை சி.பி. ராமசாமி அய்யர் மகன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஐந்து தொகுதிகள். எதற்கு இந்த வேலையற்ற வேலை என்று கேட்டேன். அந்த மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். அப்போது பேசிய கருணாநிதி தான் பார்த்த காஞ்சி, மாமல்லபுரம் எல்லாம் கல்கியின் நாவலைப் படித்த பிறகு புதிதாகத் தெரிவதாக அண்ணா சொன்னார் என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால் அவரை நாம் எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியுமா? சுந்தர ராமசாமி மாதிரி கல்கியைக் கிண்டல் செய்தவர்கள் வேறு யாருமில்லை. ஜே.ஜே. சில குறிப்புகளை ஆரம்பிக்கிறபோதே சிவகாமியம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாரா என்று ஜே.ஜே. கேட்பதாகத்தான் ஆரம்பிப்பார்....
(இந்த அருமையான பேட்டியை எடுத்த சுகுமாரனுக்கும், தேவிபாரதிக்கும், வெளியிட்ட காலச்சுவடுக்கும் நன்றி.)
இணையத்தில் படிக்க: http://www.kalachuvadu.com/issue-177/page40.asp
சி for சிரிப்பு/சிந்தனை

ஞாயிற்றுக்கிழமையன்று ஏதோ ஒரு சேனலில் பிரசன்னா நடித்த பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்கள் சீரியசாக இருந்ததைக் கண்டு அவர்களை நல்ல மூடுக்குக் கொண்டுவருவதற்காகப் பிரசன்னா சொன்ன நகைச்சுவை துணுக்கு இது:

வாசகர் (நூலகரிடம் ஒரு தடிமனான புத்தகத்தைக் கொடுத்து): என்ன புத்தகமய்யா இது! ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள், கதையே இல்லையே!

நூலகர் (நிம்மதிப் பெருமூச்சுடன்): நீங்கள் தானா அது? டெலிபோன் டைரக்டரியைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். திருப்பிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி!
*****
(குறிப்பு: வழக்கமான பதிவுகள்: அடுத்த இதழில் காண்க.)
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).-

திங்கள், செப்டம்பர் 22, 2014

(பதிவு 108) நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை

(பதிவு 108நரேந்திர மோடியிடம் சீனப் பிரதமர் சொல்லாத காதல் கவிதை

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாடுதழுவிய உரை நிகழ்த்தினார். அதைச்  சுமார் 2 கோடி மாணவர்கள் கேட்டும் பார்த்தும் ரசித்தனர். அந்நிகழ்ச்சிக்கு முன்னர் சீனப் பிரதமர் வந்திருந்தால், கன்பூசியசின் கீழ்க்கண்ட கருத்துக்களை அவர் மோடிக்குச் சொல்லியிருக்கலாம்:

1 கல்வியை விரும்பாமல் அன்பினை மட்டும் விரும்புபவன், அறியாமை என்ற குறைபாடு உடையவன்.

2 அறிவினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவன், விந்தை அல்லது வலிமையற்ற கருத்துக்கள் உடையவன் என்று குறை பேசப்படுவான்

3 நேர்மையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பாதவனின் குறைபாடு, பொருள்களை அழிக்கும் அல்லது நிலைகுலைவினை உண்டாக்கும்.

4 எளிமையினை மட்டும் விரும்பிக் கல்வியை விரும்பவில்லையெனில், அவன் குறைபாடு, நடைமுறையினை மட்டும் பின்பற்றுவதாக அமைந்துவிடும்.

5 வீரத்தை மட்டும் விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், அவன் குறைபாடு, கட்டுப்பாடின்மை அல்லது பலாத்காரத்தில் முடியும்.

6 பண்புகளை உறுதிப்படுத்துதலை விரும்பும் ஒருவன் கல்வியை விரும்பவில்லை யெனில், பிடிவாத குணம் என்னும் குறைபாட்டில் முடிந்துவிடும்.

அது மட்டுமல்ல, குடும்ப உறவுகளுக்கு, இந்தியாவைப் போலவே தாங்களும் முன்னுரிமை அளிப்பதாகச் சீனப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொண்டு, கீழ்க்கண்ட கன்பூசியசின் பத்துக் கருத்துக்களை எடுத்துக் காட்டியிருக்கலாம்:

1 பிள்ளைகளுக்குத் தந்தை காட்டும் அன்பு
2 பிள்ளைகள் தந்தைக்குச் செலுத்தவேண்டிய பக்தி கலந்த அன்பு
3 தம்பியரிடத்தில் தமையன்மார் காட்டும் பெருந்தன்மை
4 தமையன்மாரிடத்தில் தம்பியர் செலுத்தவேண்டிய மரியாதை
5 மனைவியிடத்தில் கணவனின் நன்னடத்தை
6 கணவனிடத்தில் மனைவியின் பணிவு
7 மூத்தோர்கள் இளையவர்களிடம் காட்டவேண்டிய தயவு
இளையோர் மூத்தோரிடத்தில் காட்டவேண்டிய பணிவு
9 ஆள்வோர் குடிமக்களிடம் காட்டும் தயவு
10 குடிமக்கள் ஆள்வோரிடம் செலுத்தும் விசுவாசம்

 ‘மனிதன் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை?’ என்ற கேள்விக்குப் பதிலாக சீன அறிஞர் கன்பூசியஸ் தெரிவித்தவையே இவை.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட, முனைவர் சோ.ந.கந்தசாமி எழுதிய/தொகுத்த   ‘சீன இலக்கியம்’ என்ற நூலில் இடறியபோது  கிடைத்த செய்திகள் இவை. ஜூலை 2013 வெளியீடு. 720 பக்கம் ரூ.500.
****
‘சீனத்தராய் விடுவாரோ?’ என்று பாரதி எழுதினான். 1961இல் சீனா இந்தியாவின் மீது வஞ்சகமாகப் படையெடுத்தது முதல், சீனாவை நமது எதிரியாகவே பார்த்துவருகிறோம். ஆனால் இடைப்பட்ட இந்த ஐம்பது வருடங்களில், தனது 137 கோடி மக்கள்தொகைக்கும் உணவளித்தும், நாட்டின் உள்கட்டமைப்பினைச் சீரமைத்தும், உலகிலேயே நீளமான ரயில்பாதையை அமைத்தும், அமெரிக்காவின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் தன் நாட்டிற்கு இழுத்துக்கொண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைத் தன்னுள் கொண்டதாகச் சீனா வளர்ந்துவிட்டது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் (GDP-nominal) இப்போது எண்பத்தேழு சதம் அளவுக்குச் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கிறது! எனவே சீனாவை எதிரியாகப் பார்க்காமல், நமது ஆசிய நண்பனாகப் பார்த்தலே, அரசியல் ரீதியான அறிவுடைமையாகும் என்ற தெளிவு இப்போதாவது நமது தலைவர்களுக்கு வந்தது நன்மைக்கே.

எனவே தான் பிரதமர் மோடி, அமெரிக்காவை விட, சீனாவோடு பொருளாதார நல்லுறவு கொள்வதில் முனைந்து நிற்கிறார். அதையொட்டியே, சீனப் பிரதமர் சி ஜின்பிங்கும் அவரது அழகிய மனைவியும் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்தனர். 13 முக்கியப் பொருளாதார ஒப்பந்தங்கள் கையொப்பமாயின.

ஆனால், சீனா என்பது மூடிய கதவுக்குப் பின்னால் ரகசியமாக இயங்கும் நாடு என்பதுதான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், தன்னைப் பற்றியும் தனது மக்களைப் பற்றியும் அதிகாரபூர்வமான செய்திகளை வெளியிடுவதில் சீனா பின்தங்கி இருப்பதே. அதைமீறி மேலைநாட்டு ஊடகங்கள் வாயிலாக ஓரிரு செய்திகள் வெளியானாலும் அப்படி வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையைச் சுதந்திரமான பத்திரிகையாளர்கள்மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அந்நாடு அனுமதி வழங்குவதும் இல்லை. விளையாட்டுப் போட்டிகளைத் தவிர, தனது கலை, இலக்கியம், கல்வி பற்றிய செய்திகளை இன்னும் பரவலாக வெளியிடவில்லை அந்த நாடு (என்றே தோன்றுகிறது).

குறிப்பாக, சீனாவில் முக்கிய எழுத்தாளர்கள் யார் யார் என்பது நமக்குத் தெரியாத செய்தியாகவே இருக்கிறது. ரஷியா, ஐம்பது-அறுபதுகளில் இந்தியாவெங்கும், ஒவ்வொரு மொழிகளிலும் தனது இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கென்றே ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி இருந்தது. டால்ஸ்டாயும், தாஸ்தாவெஸ்கியும், அலெக்சாண்டர் ஸோல்செனிட்செனும் மிகைல் ஷோலக்கொவும் தமிழ்நாட்டில் பிரபலமாகிவிட்ட பெயர்கள். அந்த அளவுக்கு சீனாவின் எழுத்தாளர்களைப் பற்றி நாம் அறிய முடிந்திருக்கிறதா?


முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்களின் ஆராய்ச்சி நூலான ‘சீன இலக்கியம்’ அந்தக் குறையை நீக்க முன்வந்திருக்கும் முதல் தமிழ் நூலாகக் கருதுகிறேன். (எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில்.) இதில் கி.பி. 1000 வரையிலான இலக்கியங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பிந்தைய கால இலக்கியங்களைப் பற்றி இவரோ அல்லது பிறரோ எழுதினால் நல்லது.


முனைவர் சோ.ந.கந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மலாயப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். இப்போது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘உலகச் செம்மொழிகள் உயராய்வு மைய’த்தின் இயக்குனராகப் பொறுப்பில் உள்ளவர். ஆங்கிலத்தில் 16 நூல்கள் உட்பட, இதுவரை 55 நூல்களை எழுதியிருக்கிறார். இந்தச் ‘சீன இலக்கியம்’ எழுதுவதற்கு அத்தகைய அனுபவமும், மிகுந்த நேரமும் உழைப்பும் ஆழ்ந்த கவனமும் காரணமாக இருந்திருப்பதை இந்நூலின் முதல் நூறு பக்கங்களைப் படிப்பதற்குள்ளேயே தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காகவும், மிக அழகிய தமிழில் சீன இலக்கியங்களின் சில பகுதிகளை  மொழிபெயர்த்து ஆங்காங்கே  எடுத்துக்காட்டாக வழங்கியுள்ள பாங்கிற்கும் நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

இவருடைய எழுத்துக்கும், சீன இலக்கியத்தின் ஒரு மாதிரியாகவும்  ‘வாங்கு ஷீஃபூ’ என்ற நாடகாசிரியரின் ‘மேற்குக் கூடம்’ (தெ வெஸ்டேர்ன் சேம்பர்) என்ற நூலில் இடம்பெறும் ஒரு கவிதை பகுதியைத் தருகிறேன் (பக்கம்.677) மாணவனான ‘சங்’ என்ற காதலன், தன் காதலியான ‘யிங்யிங்’கை முதல்முதலில் பார்த்த அனுபவத்தை இந்தக் கவிதை கூறுகிறது:

மலர்களுக்கு அப்பால் காஞ்சனப் பறவை எழுப்பும்
ஓசையை ஒத்தது அவள் குரலொலி.
அவள் பயிலும் நடை ஒவ்வொன்றும்
உள்ளத்தில் காதலைக் கிளர்ந்தெழச் செய்கிறது.

ஆடல் புரியும் இடை எவ்வளவு மென்மையும்
தொய்வும் குழைவும் உடையது!

மாலைத் தென்றலின் முன்பு அசைந்தாடுகின்ற
வில்லோ மரத்தினைப் போலக் கவர்ச்சிக் கவினும்
இனிமைப் பண்பும் மயக்கமும் ஆற்றலும்
அவளிடம் கணக்கில் அடங்கா!

மலரின் இதழ்கள் வீழ்ந்து மணம்கமழும் பாதையில்
எவ்வளவு மென்மையாக அவள் நடைபயில்கிறாள்!

அவள் பாதச் சுவடுகள் இலேசாகப் பட்ட தூசுகூட
கமகம என்று மணம் கமழ்கிறது!

மெதுவாகவும் தயக்கமாகவும் அவள் பயிலும் நடை
அவள் நெஞ்சத்தின் அசைவுகளை வெளிப்படுத்திக் காட்டும்!

சிறுவாயிலின் அருகில் அவள் நெருங்குகிறாள்,
அடுத்து ஒரு அடிதான் நகர்ந்திருப்பாள்,
அவள் சுழன்று திரும்பிப் பார்த்த பார்வை
என்னைக் களிப்பூட்டியது, சுண்டி யிழுத்தது
கவர்ச்சியால் என்னைக் கட்டுப் படுத்தியது!

தனக்குப் பின்னால் மூடுபனிக்குள் வில்லோ மரங்களை
விட்டுவிட்டு விண்ணக மாளிகைக்குள்
அந்தத் தேவதை திரும்பிச் சென்றுள்ளது!

சிட்டுக் குருவிகள் வெறுமனே ஒலிப்பன.

தங்கள் பள்ளி/கல்லூரி நூலகத்தில் வாங்கி வைக்கத் தகுந்த நூல் இது. வரும் காலத்தில் சீன-இந்திய இலக்கிய உறவுகளும் ஏற்படலாம். ஏற்கெனவே, சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு வந்துகொண்டிருக்கிறது. சீனத் தமிழ் அகராதியும் வெளியாகியுள்ளது. சீன மொழியைக் கற்பிப்பதற்காக ‘CHINEASY.org’ என்ற இணையதளமும் உள்ளது. ஷா லான் என்ற இளம்பெண் இதை நடத்துகிறார். 
இது வெறும் படமல்ல! 'முட்டாள்' என்பதைக் குறிக்கும் சீன எழுத்து! 
இவர்தான் ஷா லான் ! (chineasy.org) நடத்துபவர்
தமிழ் இலக்கியவாதிகள் சீன இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய காலம் வந்திருப்பதாகவே கருதலாம். முந்திக்கொள்பவர்கள் பயன்பெறுவார்கள்.
****
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).