திங்கள், டிசம்பர் 30, 2013

தெய்வத்தோடு பேசுவது எப்படி? ரஜினிகாந்த் கூறும் வழி ( ‘அபுசி-தொபசி’- 17)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இந்த ஆண்டின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு, அரவிந்த கேஜ்ரிவாலின் வெற்றிதான். ஒரு சாமானியன், தில்லியின் முதல் அமைச்சராக முடிகிற ஜனநாயக நிகழ்வு, பணபலத்திற்கும், ஊழலுக்கும் எதிராகவும் மக்கள் தயங்காமல் நிற்கத் தாயராக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.   இந்தப்  போக்கு ஏனைய மாநிலங்களிலும் தொடரவேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது..
புத்தகம்
தெய்வத்தோடு பேசுவது எப்படி? ரஜினிகாந்த் கூறும் வழி:

உங்களுக்கு இஷ்டமான ஒரு தெய்வத்தின் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். காலையில் அதற்கு பூஜை செய்யுங்கள். அந்த தெய்வத்தோடு ஒன்றி, அந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள்.

உங்கள் இரண்டு புருவத்திற்கு மத்தியிலும், நெஞ்சிலும் எப்பொழுதும் அந்த தெய்வம் நிறைந்திருக்கவேண்டும். அந்த தெய்வத்தைப்பற்றிய சிந்தனை எப்பொழுதும் இருக்கும்பொழுது தேவையற்ற வேறு சிந்தனைகள் உங்களை திசை திருப்பாது.

பக்தி மீரா, எதைப் பார்த்தாலும் கிருஷ்ணனாகவே பார்த்தார். சதா சர்வ காலமும் அந்தச் சிந்தனையிலேயே இருந்தார். பக்த ராமதாஸ் எல்லோரையும் இராமராய்ப் பார்த்தார். ‘யார் என்ன செய்யச் சொன்னாலும் சின்னக் குழந்தையைப்போல் செய்வார். ‘இராமர் சொன்னார் செய்கிறேன்’ என்பார்.

லௌகிகக் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டே இஷ்ட தெய்வ பக்தி செய்யவேண்டும்.

மாலையிலோ, இரவிலோ பூஜை செய்யும்பொழுது அன்று ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு இஷ்ட தெய்வத்திடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும்.



இஷ்ட தெய்வ பூஜையைத் தீவிரமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த தெய்வத்தைச் சிறு விக்ரக வடிவில் செய்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த விக்ரகத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தெய்வத்தை நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.

காலம் கனியும்பொழுது அந்த தெய்வம் குருவை அடையாளம் காண்பிக்கும். குருவின் துணையோடு அந்த தெய்வத்தோடு நீங்களும் பேசுவீர்கள்!

(நடிகர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறும் இக்கருத்து, திரு கே.எஸ்.நாகராஜன் ராஜா எழதிய “மௌனம்-பாபாஜியின் சரிதை” என்ற நூலில் பக்கம் 118-119இல் இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த்தின் குருவாகக் கருதப்படும் இமயமலை மானசரோவர் ஏரியின் அருகில் சித்தாஸ்ரமத்தில் அருவமாகக் குடிகொண்டிருக்கும் அவதார புருஷர் பாபாவின் சரித்திரம் இதில் கூறப்படுகிறது. நூலாசிரியரே ஓர் அருள்பெற்ற மானுடர் என்று தெரிகிறது. 128 பக்கம் 90 ரூபாய். கிரி டிரேடிங் கம்பெனி, கபாலீஸ்வரர் சன்னதி தெரு, மயிலாப்பூர், சென்னை 600004. தொலைபேசி: 044-24640376.)

சினிமா
எங்கள் குடியிருப்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை இலவசமாகத் திரைப்படம் ஒன்று காட்டினார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த படம். இலவசமாகக் காட்டினால் கூட்டம் வருவதற்குக் கேட்பானேன்? ஆனால் என்னால் முக்கால் மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை. “ஊதாக் கலரு ரிப்பன் ...உனக்கு யாரு அப்பன்..” என்ற பாடல் வரும்வரை இருந்தேன். இந்தப் பாடல் எப்படியோ  பிரபலமாகிவிட்டது, அந்தக் காலத்து ‘எலந்தப்பயம்’ பாடல் மாதிரி. நல்லவேளை ரிப்பன்.....அப்பன்......என்பதைத் தொடர்ந்து ‘குப்பன்.....சுப்பன்..’ என்றெல்லாம் வரவில்லை.

அடுத்த நாள் விசாரித்ததில் படம் பரவாயில்லை என்று பொதுவான விமர்சனம் கிடைத்தது. பெரும்பாலான இளைஞர்களுக்குப் படம் பிடித்திருந்தது என்றார்கள். தமிழ்சினிமாவை உலகத்தரத்துக்குக் கொண்டுபோக மணிரத்னமும் கமல்ஹாசனும் நம்பிக்கொண்டிருப்பது இவர்களைத்தான்.
   
தொலைக்காட்சி
விஜய் டிவியில் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்துமணி வரை வெளியாகும் சூப்பர் ஸிங்கர் நிகழ்ச்சியை சிலநாள் பார்ப்பதுண்டு. வியாழக்கிழமை (26-12-2013) அன்று இரட்டை ஆஸ்கார் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

சமுதாயத்தில் மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் குடும்பங்களிலிருந்து, இசை என்றால் என்னவென்றே அறிந்திராத சிறுவர் சிறுமியரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசைக்கருவிகளில் கடந்த நான்கு வருடங்களாக இலவசமாகப் பயிற்சி அளித்து சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓர் இசைக்குழுவை அமைத்துள்ள தகவலைப் பகிர்ந்துகொண்டார். 

இக்குழுவில் இருந்த ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் சர்வதேச அளவில் ஒருநாள் புகழ் பெறப்போகிறோம் என்ற தன்னம்பிக்கையோடு உற்சாகமாக வாசித்துக் காட்டியதைப் பார்த்தபோது இசைத்துறைக்கு ரஹ்மான் வழங்கிய காணிக்கை இது என்றே சொல்லத்தோன்றுகிறது.  இன்னும் வாழ்வில் மிகப்பல உச்சங்களை எட்டப்போகின்ற ரஹ்மானுக்கு நமது வாழ்த்துக்கள்!

பத்திரிகை
ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் டிசம்பர் மாதத்தில் பேசியே தீரவேண்டியிருக்கிறது பத்திரிகைகளுக்கு. இருவருமே சிறந்த பேச்சாளர்கள். சிறந்த எழுத்தாளர்கள். இருவருமே தாங்கள் கொண்ட கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர்கள். இருவரும் ஒருவருடன் மற்றொருவர் தீவிரமான கருத்துவேறுபாடு கொண்டிருந்தபோதும் தமக்குள்ளே இழிசொல்லையோ கீழ்த்தரமான வார்த்தைகளையோ பரிமாறிக் கொண்டதில்லை.
"ராஜாஜி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்போம்!" படம் நன்றி: ஹிந்து

தனது முதல் மனைவி  நாகம்மாள் மறைந்தவுடன் அவருக்குத் தான் இழைத்துவிட்ட கொடுமைகளைத் தன்னிலை விளக்கமாகப் பெரியார் “எல்லாம் போயிற்று என்று  சொல்லட்டுமா?” என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறார்:

“எப்படியிருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணைவனாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.  நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்விலும் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ-போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை....”

பெரியாரின் ஆளுமையின் நேர்மைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

ராஜாஜியின் தீர்க்கதரிசனம் உலகப் பிரசித்தம். ராஜாஜி எழுதுகிறார்:

“சுயராஜ்யம் வந்த உடனே, இப்போது உள்ளதைவிட நல்ல அரசோ அல்லது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியோ ஏற்பட்டுவிடாது என்பதை நாம் எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் கிடைத்து நீண்ட காலத்துக்குப் பிறகும் இவை ஏற்பட்டுவிடாது. தேர்தல்களும் அவற்றில் லஞ்ச ஊழல்களும் அநீதிகளும் பணத்தின் பலமும் கொடுமையும் நிர்வாகத்தில் திறமையின்மையும் எல்லாம் சேர்ந்து சுதந்திரத்தை நாம் அடைந்த உடனேயே வாழ்க்கையை நரகமாக்கிவிடும். மக்கள் வருத்தத்தோடு பின்னோக்கிப் பார்ப்பார்கள். ஒப்புநோக்குகையில் பழைய ஆட்சியில் நீதியும் திறமையும் அமைதியும் ஏறத்தாழ நேர்மையான நிர்வாகமும் நிலவியதை எண்ணிப் பார்ப்பார்கள். நமக்குக் கிடைக்கக்கூடிய ஒரே லாபம் ஓர் இனத்தவர் என்ற முறையில் நாம் அவமானத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடுவதே”.
வெறும் கும்பிடு தான்! 

93 வயதான முதுபெரும்கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது (அப்போதைய முதல்வர்) கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடரவேண்டும்” என்று கெஞ்சினார். அன்று அது நடந்திருந்தால் இன்று தமிழ்நாடும் மற்றொரு குஜராத்தாக வளர்ந்து செழித்திருக்காதா? ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?

பெரியாரும் ராஜாஜியும் போன்ற சான்றோர்கள் நம்மிடையில் ஒருகாலத்தில் வாழ்ந்தார்கள் என்பதே இனிவரும் தலைமுறைகளுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

சிரிப்பு
டிசம்பர் மங்கையர் மலரிலிருந்து:
குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

“ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு க்ளவுஸ் போட்டு விடலாம். சற்று வளர்ந்த குழந்தையாக இருந்தால் விரலில் சுத்தமான வேப்பெண்ணெய் தடவலாம்.” (நடக்கிற காரியமா இது!)

சொன்னார்கள்...

இந்தியாவிலிருந்து புராதனச் சிலைகளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் சுபாஷ் கபூர் பற்றிய ஆவேசமான கட்டுரையில் இப்படி எழுதுகிறார் மதிப்பிற்குரிய ஜோதிட அறிஞர் திரு ஏ.எம்.இராஜகோபாலன்:

அளவில் பெரியவையும், மதிப்பில் உயர்ந்தவையுமான இத்தகைய சிலா விக்கிரகங்களைக் கடத்திச் செல்ல நமது காவல்துறை, சுங்கத்துறை, விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் எவ்விதம் இவ்வளவு எளிதாக அனுமதித்து வருகின்றனர் என்பதே என் கேள்வி!

நம் நாடு சுதந்திரம் பெற்றபிறகு பெரும்பாலும் முக்கியப் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவருமே அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பதால்தான், இன்றைய இந்தியாவில் உயரதிகாரிகளைக்  'கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்' எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணத்திற்காக, எத்தகைய பாவத்தையும் செய்யத் துணிந்துவிட்டனர் - நேர்மை என்றால் என்ன என்றே தெரியாத நம் அரசும், அதன் அதிகாரிகளும்!

விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களைக் களவாடினால் மரண தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், ஊழல்கள் மலிந்த இன்றைய இந்தியாவில் சுபாஷ் கபூர் போன்ற கயவர்களுக்குத்தான் மாலையும், மரியாதையும்! ஒழுக்கமும், தேசப்பற்றும் இல்லாதவர்களால் நடத்தப்படும் அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இனியும் நம்மிடம் என்ன இருக்கிறது, இழப்பதற்கு?

(நன்றி: குமுதம் ஜோதிடம் வார இதழ் 03-01-2014  பக்கம் 2)

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
 முக்கிய அறிவிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  ௦1-௦1-2௦14 புதன் அன்று  சிறப்பு அபுசிதொபசி -18 வெளியாகும். 

23 கருத்துகள்:

  1. அனைத்து தகவல்களும் அருமை... முக்கியமாக பெரியாரின் ஆளுமையின் நேர்மை மிகவும் அருமை... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ராஜாஜி பின்னாடி என்ன சொன்னார் என்பது இருக்கட்டும். காமராஜருக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து அவர்களை வளர்த்தவரே இவர்தானே....

    பதிலளிநீக்கு
  3. தொகுப்புகள் நன்றாக informative ஆக உள்ளன .

    பதிலளிநீக்கு
  4. முன்னிட்டு ௦1-௦1-2௦14 புதன் அன்று சிறப்பு

    2014 என்று திருத்துங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் பகுதிகளும் சிறப்பாய், பயனுள்ளவையாய் இருக்கின்றன. த.ம.+1

    பதிலளிநீக்கு
  6. 01-01-2014 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி 06-01-2014-ல் வெளியாகும் அபுசி-தொபசியில் விமர்சனம் வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் எழுதும்போது எது மனதில் நிற்கிறதோ அதுதானே வெளிவரும்! இந்த மனதை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லையே! உங்கள் அனுபவம் எப்படி?

      நீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி ஐயா! தங்களுக்குமேனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  8. இவ்வாரப் பதிவில் என்னைக் கவர்ந்தது பெரியார்-ராஜாஜி தொடர்பான பதிவு. எத்தனை முறை சொல்லப்பட்டாலும், எழுதப்பட்டாலும் அந்தந்த காலகட்டத்திற்கு தேவைப்படுபவை இவை. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. [[93 வயதான முதுபெரும்கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது (அப்போதைய முதல்வர்) கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடரவேண்டும்” என்று கெஞ்சினார். அன்று அது நடந்திருந்தால் இன்று தமிழ்நாடும் மற்றொரு குஜராத்தாக வளர்ந்து செழித்திருக்காதா? ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?]]

    பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது முதல் அமைச்சர் ராமசாமி ரெட்டியார்! ஊடகங்கள் மறைத்து ராஜாஜிக்கு பொய்யான புகழை சேர்த்தது ஒரு பெரிய இடைச்செருகல். இந்த உண்மை முழுவதும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்.

    ஐயா! கொஞ்சம் எது உண்மை என்று உணருங்கள்; சும்மா ஊடகங்கள் சொல்லும் பொய்யை மட்டும் நம்பி எல்லோரும் ஏன் தான் இல்லாத பெருமையை ராஜாஜிக்கு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு மு.க. பிடிக்காமல் இருக்கலாம்; முகவும் இந்த கொடுமைக்கு ஒரு காரணம்; ஒரே முக்கிய காரணம் நம்ம ராஜாஜி ஐயா!

    மு.க.வைப் பிட்க்காமல் இருந்த்கால்? அதற்காக அந்த இல்லாத பெருமை எதற்கு ராஜாஜிக்கு?

    இந்த இடுகையை -- ஆதரத்துடன் கொடுத்த இடுகையைப் படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்...மேலே சொன்னவற்றை மாற்றி எழுதி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சாதனையாக மாற்றி எழுதுங்கள்.

    கீழே படிக்க என் இடுகை...ஆதாரத்துடன்....
    தலைப்பு: ராஜாஜி பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் என்பது முழுப் பொய்!
    படிக்க லிங்க்:
    http://www.nambalki.com/2013/08/blog-post_19.html

    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, தங்கள் விரிவான பின்னூட்டம் கண்டேன். தங்கள் பதிவையும் சென்று படித்தேன். தாங்களே எழுதியதுபோல், மதுவிலக்கு என்ற கொள்கையைத் தமிழ்நாட்டில் முதலில் கொண்டுவந்தவர் ராஜாஜி என்பதும், அதற்குப் பத்தாண்டுகள் பிறகு வந்த ஓமந்தூரார் தமிழ்நாடு முழுதும் அதை விரிவுபடுத்தினார் என்பதும் வரலாற்று உண்மைகள்.

      என் பதிவில் நான் சொல்லவந்தது இதையல்லவே! எந்த ராஜாஜியின் ஆதரவால் 1967இல் பதவிக்கு வந்ததோ தி.மு.க. அரசு, அது மதுவை வைத்து வருமானம் திரட்ட முற்பட்டபோது, அதைத் தட்டிகேட்கும் தார்மீக உரிமை அந்த ராஜாஜிக்கு இருந்தது. எனவே அவர் கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று கோரிக்கை விடுத்தார் என்பதைத் தான் எழுதியிருக்கிறேன். அதுவும் வரலாற்று உண்மை அல்லவா?
      -ஓமந்தூராருக்குப் பெருமை சேர்க்கவேண்டியது அவசியம். நானும் கடலூரில் பணியாற்றியிருக்கிறேன். தென்னார்க்காடு மாவட்ட ரெட்டியார்கள் பற்றியும் கரும்பு விவசாயத்தில் அவர்கள் ஓமந்தூராரின் கருணையால் ஒரே இரவில் லட்சாதிபதிகள் ஆனார்கள் என்பதையும் என்னைப் போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதைத்தவிர எனவே ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பாதிக்கத்தக்க நல்லன அவர் செய்திருக்கிறாரா என்பது பற்றி மேற்கொண்டு ஆராயாமல் நான் எதையும் எழுதமுடியாது. காமராஜர் போல், கக்கன் போல், ஜீவா போல் ஓமந்தூராரது எளிமை அனைவராலும் போற்றப்படவேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

      கலைஞர் கருணாநிதி மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை - மது அருந்துவதை அவர் மக்கள் இயக்கமாக மாற்றினார் என்ற வரலாற்று உண்மையைப் பதிவிடுவதைத் தவிர. இன்று பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறார்கள் கூட 'சரக்கு' அருந்துபவர்களாக மாறிவிட மூல காரணம் அவரது ஆட்சிக்காலத்தில் தான் துவங்கியது என்பது, எந்தப் பெற்றோர்களாலும், எந்தத் தாய்மார்களாலும் மறந்துவிடமுடியாது. அவர்களைத் தான் நான் பிரதிபலித்தேன். கலைஞரின் தமிழ்த் தொண்டை எந்தக் கொம்பனாலும் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.

      தொடர்ந்து தங்களிடமிருந்து இத்தகைய அறிவுபூர்வமான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன். இது எனது பொறுப்புணர்ச்சியையும் அதிகப்படுத்தும். நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. நிறைய முரண்பாடுகள்;
      நீங்களுமா? இப்படி ஊடகங்களின் பொய்களை நம்ப வேண்டுமா?

      [[எந்த ராஜாஜியின் ஆதரவால் 1967இல் பதவிக்கு வந்ததோ தி.மு.க. அரசு]
      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இது ஒரு syndicated bluff; ராஜாஜியின் சுதந்திரர கட்சி நாறின நாறு உலகம் அறியும். ராஜாஜியின் செல்வாக்கு மயிலாப்பூர், மந்தவெளி, மாம்பலம்; அதுவும் அவரை எதிர்த்து "ஐயர்" தேர்தலில் போட்டியிடாத வரை தான்!

      [[அது மதுவை வைத்து வருமானம் திரட்ட முற்பட்டபோது, அதைத் தட்டிகேட்கும் தார்மீக உரிமை அந்த ராஜாஜிக்கு இருந்தது]]

      அவருக்கு அந்த தார்மீக உரிமை இல்லை; மூன்று வருடம் மூன்று தொகுதிகள்; செய்ய முடியாதவர் ஒரு பிரதம மந்திரி அல்ல! இது விற்பனை வரி கொண்டு வர ஒரு சாக்கு!

      இதற்க்கு இங்கு பின்னூட்டம் போடுவதை விட...நான் ஒரு பதிவு போடுகிறேன்;

      நீக்கு
  10. பெரியாரையும் ராஜஜியையும் நாம் டிஸ்ம்பர் மாதம் நினைவு கூறுகிறோம் ! பெரியார்தான் பி.ராமமூர்த்தி அவர்களுக்கு திருமனம் செய்வித்தார் ! ராஜஜி முதலமைசராக இருந்த பொதுதான் ,தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பி.ராமமூர்த்தி இருந்தார் ! பி.ராமமூர்த்தியும் டிஸ்ம்பரில் தான் இறந்தார் ! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்று பாடுபட்டவர் பி றாமமூர்த்தி ! ஏனோ தோன்றியது ! எழுதினேன் ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! அமரர் பி.ராமமூர்த்தி அவர்களையும் நிச்சயம் நாம் நினைவுகூரத்தான் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொதுவுடமைக்கொள்கைகளைப் பிற அரசியல் கட்சிகள் களவாடிக்கொண்டு அவற்றுடன் உள்ளூர் பிரச்சினைகளையும் கையிலெடுத்து மக்களைத் திசைமாற்றி, கொள்கையில்லாத அரசியலே ஆதரிக்கப்படவேண்டிய அரசியல் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதால், இன்று பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகத் தங்களையே தியாகம் செய்துவிட்ட ராமமூர்த்தி மாதிரி பெரியோர்களை இன்று பத்திரிகைகள் அறவே மறந்துவிட்டன. பிறிதொரு நாளில் அவர்பற்றி எழுதுவேன். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. //ராஜாஜியின் தீர்க்கதரிசனத்தை ஏற்காமல் போனோமே என்று கருணாநிதி இப்போதாவது குற்ற உணர்வு கொள்வாரா?//

    கருணாநிதியை விட மிகப் பெரிய குற்றவாளி ஜெயலலிதாதான்!.

    மக்களுக்கு அரசாங்கம் எதைச் செய்யவேண்டுமோ அதைதான் செய்ய வேண்டும். மது விற்பனை என்பது உலகின் எல்லா நாடுகளிலும் தனியாரால் நடத்தப்படுகிறது. தனியார் விற்பனை என்பதால், அரசாங்க காவல் துறையைக் கண்டு, குடிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கு பயம் இருக்கும். ஆனால் இங்கு அரசங்கமே விற்பதால் குடிப்பவனையும் விற்பவனையும் ஒன்றும் கேள்வி கேட்க முடிவதில்லை.

    மதுபானக் கடைகளை அரசாங்கமே நடத்துவதை மேற்கொள்ள வைத்து.... மாபெரும் வரலாற்று பிழையை செய்திருப்பவர் ஜெயலலிதாதான். அவர்தான் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திலும் உண்மை பளிச்சிடுகிறதுதான். ஆனால் முன் ஏர் சென்ற வழியில்தானே பின் ஏர் செல்லமுடியும்! இதையெல்லாம் எண்ணிப்பார்த்துதான் இவர்கள் இருவரையும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்று, அன்று, அவர் சொன்னார்! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  12. நல்ல பகிர்வுகள்! ARR இன் நல்ல உள்ளத்தையும் அவரது இந்த நல்ல ஊக்கத்தையும் வாழ்த்தி பாராட்டுவோம்! கண்டிப்பாக அவர் இன்னும் சிகரம் தொடுவார்!!

    சொன்னார்கள்....நல்ல பதிவு!! ஐயா!!

    மிக்க நன்றி நல்ல பகிர்வுகளுக்கு!!!

    தங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை! எனவே இந்தப் புத்தாண்டில் தாங்கள் இன்னும் நிறைய எழுதி சாதிக்கவேண்டும் என்றும் எங்களைப் போன்றோருக்கு ஊக்கம் தந்து முன்னோடியாக இருந்திட நாங்கள் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

    நன்றி!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு மனிதரிடத்தும் நல்லதும் அல்லதும் ஆன குணங்கள் இருக்கும். அவரவர் விருப்பப்படி அதை ஊதிப் பெரிதாக்கி உடைக்கலாம். அதுவும் அரசியல் தலைவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் அதனால்தான் அரசியல் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டாலும் கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன்.எழுபதுகளில் மது என்பதே அறியாத இளைஞர் சமுதாயம் இருந்தது என்பதை நம்ப முடிகிறதா.?.

    பதிலளிநீக்கு