திங்கள், நவம்பர் 11, 2013

வயதான பிறகு நாவல் எழுதுவதிலுள்ள சங்கடங்கள் ( ‘அபுசி-தொபசி’- 10)

  (“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்த அளவுக்குப் பணி செய்திருக்கிறார்கள் என்று ஜூனியர் விகடன் வாரம் ஒரு எம்.பி. வீதம் மதிப்பெண் போட்டுவருகிறது. இதில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண் வாங்கியவர்கள் மிகவும் குறைவு. சமீபத்திய இதழில் கடலூர் எம்.பி. யான கே.எஸ்.அழகிரிக்கு ஜூவி கொடுத்திருக்கும் மதிப்பெண் வெறும் முப்பத்திரண்டு தான்! இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எனவே இவரைச் செயல்படவிடாமல் தமிழக ஆளும்கட்சி முடக்கியுள்ளது என்பது தெளிவு. இவர் மீதான ஜூவியின் ஒரு முக்கியக் குற்றச்சாட்டு, கடலூர் புதுநகரில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நான்கு வருடங்களாகியும் இன்னும் முடியவில்லை என்பதாகும்.





சுரங்கப்பாதை அமைப்பது கடலூர் நகராட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அங்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை. சுரங்கப்பாதை அமையப்போகும் இடத்திலுள்ள உள்ளூர்ப் பெரியமனிதர்களின் கடைகள், இடங்கள் இவற்றைத் தமிழக ஆளும்கட்சியும் தி.மு.க.வும் பாதுகாக்க முனைந்திருக்கும் நிலையில் எங்கிருந்து வரும் சுரங்கப்பாதை? (கடலூர் மேல் உனக்கு என்ன அக்கறை என்கிறீர்களா? எனது மாமியார் ஊர் ஐயா!) 

புத்தகம்
வயதானவர்கள் நாவல் எழுதுவதில் பல சங்கடங்கள் உண்டு என்று தெரிகிறது- அவர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் தான்.

‘ஹிந்து’ ஆங்கிலப் பதிப்பில் 08-11-2013 Friday Review  பக்கம் 4 இல் ஒரு தமிழ் நாவலைப் பற்றி இவ்வாறு விமர்சனம் வந்துள்ளது:

மூன்று தலைமுறைக் கதை என்றாலே சிக்கலானதுதான். ஆகவே, கதைக்கருவானது, கதை நிகழ்வதாகச் சொல்லப்படும் காலத்துச் சரித்திரத்தில் கவனத்தோடு இணைக்கப்படவேண்டும். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும். உதாரணத்திற்கு இந்நாவலில் காணப்படும் சில குழப்பங்களைக் கூறலாம்:

  1. ரங்கன் தனது இருபதுகளில் திருமணம் செய்துகொண்டதாகவும், மணமான பத்துவருடம் கழித்தே குழந்தை பிறந்ததாகவும் பக்கம் 938இல் வருகிறது. ஆனால், அவனுக்கு  85 வயது ஆகும்போதுதான் அவனுடைய இரண்டு குழந்தைகளும் கல்லூரிக்குப் போகிறார்கள் என்று பக்கம்  885 இல் வருகிறது.
  2. 'நல்லி' கடை 1928இல் தொடங்கப்பட்டதாகப் பட்டாபி, வேதாவிடம் கூறுகிறான். (பக்கம் 179) அப்போது மைதிலி என்ற கதாபாத்திரம் குழந்தையாக இருக்கிறது. ஆனால்   1921இல் அதே மைதிலி தனது மூன்றாவது குழந்தையைச் சுமந்திருப்பதாக பக்கம் 531இல் வருகிறது.
இதிலிருந்து பெறும் பாடம் என்ன?
எழுபது வயதுக்குமேல் யாரும் நாவல் எழுதாதீர்கள். அப்படி எழுதினால் ஆயிரம் பக்கம் வரும்படி எழுதாதீர்கள். அப்படியும்  எழுத நேர்ந்தால் மூன்று தலைமுறைக் கதையை எழுதாதீர்கள். நினைவாற்றல் தேய்ந்துவரும்பொழுதில் தேவைக்குமேல் ரிஸ்க் எடுப்பதில் என்ன லாபம்?

(ஜெயகாந்தன் எழுதுவதை ஏன் நிறுத்தினார் என்று புரிகிறதா?)

 அதுசரி, மேற்படி நாவலின் பெயர் என்ன, யார் எழுதியது என்கிறீர்களா? கடைசியில் பாருங்கள்.

சினிமா

தீபாவளியன்று விஜய் டிவியில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஒளிபரப்பினார்கள். அதற்கு ஒருநாள் முன்புவரை, வலைப்பதிவுகளில் இப்படத்தைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று எழுதியிருந்ததை நானும் நம்பிவிட்டேன். படம் பார்த்த பின்னால்தான் தெரிந்தது, அதெல்லாம் ஆதிசங்கரர் சொன்ன மாயை என்று. முதல் பதினைந்து நிமிடம், இப்படத்தை யாராவது எழுந்துவிடாமல், தொடர்ந்து, பார்க்கக்கூடுமானால், அவர்களை உலகில் எந்தச் சக்தியாலும்  எழவைக்க முடியாது என்பது சத்தியம். இனிமேல் பிரபல பதிவர்கள் கொடுக்கும் சர்ட்டிபிகேட்டை நம்பிப் படம் பார்ப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று புரிந்துவிட்டது.

தொலைக்காட்சி

நவம்பர் மாதம் வந்தால்போதும், வேளுக்குடியார், காலண்டர் விற்கத் தொடங்கிவிடுகிறார். (தூர்தர்ஷன், விஜய் டிவி புகழ்...). (அருகிலுள்ள அவரது படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதை முதலில் வெளியிட்டவருக்கு நன்றி.)

பேராசிரியர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுடைய வைணவம் பற்றிய உரைகள் அற்புதமானவை என்பதில் இரண்டு கருத்து இருக்கமுடியாது.  இந்து சமயம் செல்வம் துறத்தலை வாழ்வின் ஒரு நோக்கமாக வலியுறுத்தினாலும், இன்றைய சூழ்நிலையில் பணமில்லாதவன் பிணம் என்பது உண்மையன்றோ! எனவே தமது அறிவுத்திறமையைப் பணமாக்கத் தெரிந்த எவரும் நமது மரியாதைக்குரியவர்களே. 

ஸிட்டி யூனியன் வங்கியின் எந்தவொரு கிளையிலும்போய், ரூபாய் இருநூறு செலுத்திப் பதிவு செய்துகொண்டால், ஜனவரி முதல் வாரம் பெருமாள் காலண்டரும், நான்கு டிவிடிக்களும் கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்படுமாம். யாருடைய வீட்டிலெல்லாம் வேளுக்குடியாரின் சொல்மழை பொழியப்போகிறதோ, அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள். (அதுசரி,  பக்திதான் எப்போதுமே சூடாக விற்பனையாகும் பொருள் என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறதோ?)

பத்திரிகை

விகடன் தீபாவளி மலர் – 2013 இல் பிரபஞ்சன் ஒரு அற்புதமான கதை எழுதியிருக்கிறார். (பக்கம் 276-283)(நிறைவோடு இருக்கிறேன்”).



பழைய காதலர்களான மூர்த்தியும் சுமதியும் தத்தமக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு ஒருநாள் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். தம் குழந்தைகளுக்கு இவர்கள் ஒருவரையோருவர் எப்படி அறிமுகப்படுத்துவார்கள்?
சுமதி தன் மகளிடம் இப்படிச் சொல்கிறாள்: “உனக்குச் சொல்லி இருக்கேன்ல, நான் அந்தியூர்ல கொஞ்ச காலம் வேலை பார்த்தேன்னு. அப்போ இவர் பழக்கம். இவரோட நெருங்கின நண்பர்  கோபி என் ஆபீஸுக்கு வருவார். அப்போ அறிமுகம்”.
சாமர்த்தியமான, பாதுகாப்பான பொய். சுமதியின் அலுவலகத்தில் மூர்த்தி பணியாற்றியதில்லை. அவள் அலுவலகத்தில் அவனுக்கு நண்பனும் இல்லை. இப்போது மூர்த்தியின் முறை. (தன் மகனிடம் சொல்கிறான்.)
“தம்பி, என் ஆபீஸ்ல ரீட்டான்னு ஒருத்தங்க வொர்க் பண்ணாங்க. அவங்களைப் பார்க்க இவங்க வருவாங்க. அப்போ பழக்கம்.”

பெண்ணும் பையனும் தலையசைத்துக்கொண்டார்கள். ‘ஹலோ’ சொல்லிக்கொண்டார்கள்.

எப்படியிருக்கிறது அறிமுகம்? சரி, மேற்கொண்டு என்ன ஆகும்?

ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ மாதிரி, சுஜாதாவின் ‘நகரம்’ மாதிரி, தி.ஜானகிராமனின் ‘துணை’ மாதிரி, பிரபஞ்சனின் பேர்சொல்லும் கதை இது. படிக்க மறந்தால் ஒரு அற்புதமான அனுபவத்தை இழந்தவராவீர்கள்.

சிரிப்பு
“தலைவருக்கு சினிமா பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.”

“அதுக்காக ஊதா கலரு ரிப்பனை வெட்டித்தான் திறப்புவிழாவை நடத்துவோம்னு சொல்றது கொஞ்சம் ஓவர்.”

(நன்றி: 10-10-2013 தமிழ் இந்து – பக்கம் 12. படித்தவுடன் சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பல்ல.)
======================================================================
 
விடை:
திருமதி விஜயலட்சுமி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ என்ற நாவல் தான் அது.

சில நாள் முன்பு தான் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. ஆயிரம் பக்கங்கள்-விலை ரூபாய் நானூற்றுத் தொண்ணூறு.

ஆசிரியர், அகில இந்திய வானொலியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

சு.சமுத்திரத்தின் நாவல் ஒன்றை ஹிந்திக்கு மொழிபெயர்த்தவர்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com.

32 கருத்துகள்:

  1. பணமில்லாதவன் பிணம் என்பது உண்மையன்றோ! அப்படியென்றால் எத்தனையோ நடைபிணங்கள் என்னைப்போல் வாழ்ந்து வருகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க ஒண்ணு! "இன்சூரன்ஸ் இல்லாதவன் பிணம்" என்பது தான் இன்றைய புதுமொழி! வருகைக்கு நன்றி. ('அதில்' ஒன்று குறைகிறதே, கவனிக்கலாமே!)

      நீக்கு
  2. மூன்று தலைமுறைக் கதை ஒன்றை (பாலங்கள்) சிவசங்கரி விகடனில் எழுத அதற்கு மூன்று ஓவியர்களை வரைய வைத்து விகடன் அழகாக வெளியிட்டது நினைவில் நிழலாடுகிறது. ஓ.ஆட்டுக்குட்டி...? ஹி... ஹி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஞாபகசக்தி அபாரம்! நீங்கள் தொண்ணூறு வயது ஆன பிறகும் நாவல் எழுத அனுமதிக்கப்படுகிறீர்கள்! சரியா?

      நீக்கு
  3. வேளுக்குடி கலண்டர் மற்றும் சி.டி. ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக இந்த சிடி யூனியன் வங்கி டோர் டெலிவரி செய்தால் நல்லது, என்னைப்போன்ன்ற கிழங்களுக்குக்காக.

    சீனியர் சிடிசன்களுக்காக ஒரு பத்து பர்சண்ட் டிச்கௌன்ண்ட் தரக்கூடாதோ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரே! டிஸ்கவுன்ட்டு என்றால் அய்யர் கடைகளில் தான் கிடைக்கும். அய்யங்கார் கடைகளில் கிடைக்காது! எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்!

      நீக்கு
  4. ஒவ்வொரு திங்களையும்
    எதிர்பார்க்கும்படிச் செய்துவிட்டது பதிவு
    அறியாத தகவல்களை சுவாரஸ்யத்துடன்
    சொல்லிச் செல்வது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. (ஜெயகாந்தன் எழுதுவதை ஏன் நிறுத்தினார் என்று புரிகிறதா?) - அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இன்றளவும் ஜெயகாந்தன் நல்ல நினைவாற்றலுடன் தான் இருக்கிறார். அவர் நாவல் எழுதாமல் இருப்பதற்குக் காரணம், விகடனிலும் குமுதத்திலும் மூன்றாவது தலைமுறை ஆசிரியர்கள் வந்துவிட்டது தான். தத்தா எழுதினால் இவர்கள் பிரசுரிக்கத் தயாரில்லையே!

      நீக்கு
  6. தீபாவளியன்று விஜய் டிவியில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஒளிபரப்பினார்கள். அதற்கு ஒருநாள் முன்புவரை, வலைப்பதிவுகளில் இப்படத்தைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று எழுதியிருந்ததை நானும் நம்பிவிட்டேன். படம் பார்த்த பின்னால்தான் தெரிந்தது, அதெல்லாம் ஆதிசங்கரர் சொன்ன மாயை என்று. முதல் பதினைந்து நிமிடம், இப்படத்தை யாராவது எழுந்துவிடாமல், தொடர்ந்து, பார்க்கக்கூடுமானால், அவர்களை உலகில் எந்தச் சக்தியாலும் எழவைக்க முடியாது என்பது சத்தியம். இனிமேல் பிரபல பதிவர்கள் கொடுக்கும் சர்ட்டிபிகேட்டை நம்பிப் படம் பார்ப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று புரிந்துவிட்டது.//

    மிகவும் சரியான கருத்து ஐயா ...



    “தலைவருக்கு சினிமா பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்.”

    “அதுக்காக ஊதா கலரு ரிப்பனை வெட்டித்தான் திறப்புவிழாவை நடத்துவோம்னு சொல்றது கொஞ்சம் ஓவர்.”

    அருமையான காமடி சிரிப்பைத் தான் அடக்க முடியவில்லை ஐயா :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையால் என்தளம் வெளிச்சம் பெற்றது, நன்றி !

      நீக்கு
  7. மூன்றுதலைமுறை சிக்கல் தான் நினைவில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குள்ள துக்கம் என்னவென்றால், ஹிந்துவில் நல்லா தமிழ்ப் புத்தகங்களுக்கு விமர்சனம் வருவதே அபூர்வம். வந்தாலும் இம்மாதிரி நெகட்டிவ் விமர்சனங்களாகவே இருக்கின்றன. ஆயிரம் பக்கம் எழுதிய எழுத்தாளர் எவ்வளவு சங்கடப்பட்டிருப்பார்! அவரது முயற்சிக்கு எங்கேயாவது அங்கீகாரம் கிடைக்கிறதா? இந்து போன்ற பெரிய பத்திரிகைகள் விமர்சனம் எழுதும்போது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் எழுதவேண்டாமா?

      நீக்கு
    2. நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது சரி. உற்சாகப்படுத்த இஷ்டமில்லை என்றால் விமர்சனமே வேண்டாமே! எதற்கு இது போன்ற குறைகள் மட்டுமே சொல்லும் விமர்சனம்?

      நீக்கு

  8. வருகைக்கு நன்றி. எனது கவிதைப் பின்னூட்டம் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே.
    அறியாத பல தகவல்கள் தங்களிம் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திங்கள் என்றால் இனிமே உங்கள் பதிவு தான் ஞாபகம் வரும். கண்டிப்பாக தொடர்ந்து வருவேன். நல்லதொரு அழகான பதிவிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. தகவல்களின் சிறப்பான பகிர்வுகள் ரசிக்கவைக்கின்றன..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் டயரி நன்று! தொடர்வேன் வாரம் தோறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே மறந்துவிட்டீர்களோ என்று பார்த்தேன். நல்ல வேளை! தங்கள் வருகைக்கு நன்றி. விரைவில் சந்திப்போம்.

      நீக்கு
  12. //(கடலூர் மேல் உனக்கு என்ன அக்கறை என்கிறீர்களா? எனது மாமியார் ஊர் ஐயா!) //

    சார், மாமியார் ஊரு என்றால் நாம் மதிப்பு கொடுத்துதான் ஆகவேண்டும். அதுவும் போக அது எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஊராச்சே. கடலூர் மாவட்ட தலைநகர் என்றாலும், இன்னும் சரியான முறையில் வளர்ச்சி காணாத ஊர் அது. எனது சித்தப்பா வீடு மஞ்சகுப்பம் செம்மண்டலத்தில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருங்கி வந்துவிட்டீர்கள் நண்பரே! கேஎன்ஸி எதிரிலுள்ள தவுலத் நகரில் நுழைந்து காந்திநகருக்கு வந்தால், ARLM school ன் பிரின்சிபாலாக இருந்த சீதாராமன் அவர்களின் வீடு 20, காந்திநகரில் உள்ளது. சென்ற வருடம் அவர் மறைந்துவிட்டார். அவர் தான் எனது மாமனார். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. ஆ... ஆலமரம் புதினம் 1000 பக்கங்களா?!!! ஒரே புத்தகமாவா? 2 அல்லது 3 தொகுதிகளாய் வெளியிட்டிருக்கலாம். 490 ரூபாய் செலவழித்து வாங்குவார்களா? ஆச்சரியமாய் இருக்கிறது.
    [நீங்கள் படிச்சீங்களா ஐயா?]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று தலைமுறைக் கதை என்பதால், ஒரு தலைமுறைக்கு முன்னூறு பக்கம் என்று வைத்துக்கொள்ளுங்களேன், ஆயிரம் பக்கம் என்பது தேவை தான். ஆனால் அவ்வளவு நீண்ட கதையை எழுத குவிந்த கவனமும், தடையில்லாத சூழ்நிலையும் முதல் தேவைகள் அல்லவா? அது எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்? (2) நான் இன்னும் படிக்கவில்லை. ஜனவரி வரை பொறுக்கவேண்டும். புத்தகக் காட்சியில் வாங்கலாம் என்றிருக்கிறேன். (3) இவருடைய நண்பர் (அல்லது உறவினர்?) ஒருவர் எனக்கு வேண்டியவர். அவருக்காகவும் படித்தாகவேண்டும். நன்றி.

      நீக்கு
  14. வலைப்பதிவுகளில் வரும் சினிமா விமர்சனங்களை எல்லாம் நீங்கள் படிக்கிறீர்களா? அப்ப உங்களுக்கு ரொம்ப டைம் ப்ரீயாக இருக்கிறது போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, இரவு பத்து மணியிலிருந்து பன்னிரண்டு வரை வலைப்பூக்களைப் படிக்கிறேன். குறைந்தது பத்து முதல் பதினைந்து பேருடைய தளங்களைக் கவனிக்கிறேன். இதில் பாதியாவது இதுவரை பார்க்காத தளங்களாக இருக்கும். உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த நேரத்தை உலகின் மிகப் பழையதானதும் முக்கியமானதுமான வேறொரு பணிக்காக ஒதுக்கியிருப்பீர்கள்...!

      நீக்கு
  15. //விகடனிலும் குமுதத்திலும் மூன்றாவது தலைமுறை ஆசிரியர்கள் வந்துவிட்டது தான். தத்தா எழுதினால் இவர்கள் பிரசுரிக்கத் தயாரில்லையே!//

    குமுதத்தில் எழுதும் கி.ராஜநாராயணன் அவர்கள் இளைஞரா ஐயா?
    (மனத்தால் இளைஞர் என்று பதில் தராதீர்கள் ஐயா!)

    பதிலளிநீக்கு
  16. அறியாத தகவல்கள் சுவாரசிய்த்துடன். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு