திங்கள், செப்டம்பர் 30, 2013

நமீதா, நீயுமா? ……. அபுசி-தொபசி (4)


(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்


முதலில் வைஜயந்திமாலா, பிறகு ஜெயப்ரதா. அதன் பிறகு ரோஜாவும்  குஷ்பூவும். நடுவில் கொஞ்சநாள் மனோரமாவும்  வடிவேலுவும். திரைத்துறையில் இருந்து அரசியலில் குதித்தவர்கள் பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர் நமீதா! பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்திருக்கிறாராம். பா.ஜ.க.வினர் மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுதுமே கத்தரித்துப் பாதுகாக்கும்படியான நமீதாவின் அழகிய புகைப்படத்துடன் அவரது பேட்டியை (வழக்கம்போல்) மற்றவர்களை முந்திக்கொண்டு வெளியிட்டுள்ளது, குமுதம்.(௦௨-௧௦-௨௦௧௩ -2.10.2013 -இதழ்). ஆனால் பேட்டியில் சுவாரசியம் இல்லை. ஏனெனில், எந்தக் கட்சியில் சேருவது என்று இன்னும் அவர் முடிவெடுக்கவில்லையாம்.




‘நமோ’வின் மாநிலமான குஜராத்தில் பிறந்திருந்தாலும், நமீதாவுக்குத் தமிழ்நாட்டு அம்மாவின் தைரியம் மிகவும் பிடிக்கிறதாம். ஆனால் யாரும் அதிமுக-வுக்கு வரும்படி இதுவரை அழைக்கவில்லையாம்! காரணம் என்னவாக இருக்கும்? ஜூனியர் விகடன் அல்லது நக்கீரன் படித்தால் தெரியாமலா போகும்?


புத்தகம்

ஹரணி’ எழுதிய ‘செல்லாத நோட்டு’ என்ற பதின்மூன்று புத்தம்புதிய சிறுகதைகள் அடங்கிய தொகுதி படிக்கக் கிடைத்தது. (கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், கரந்தை, தஞ்சாவூர்  வெளியீடு. 144 (௧௪௪) பக்கம் 90, (௯௦) ரூபாய்.) 


தினந்தோறும் குறிப்பிடத்தக்க நேரத்தை அலுவலகப் பயணத்திற்காகச் செலவிடும் ஹரணிக்கு எப்படித்தான் நேரம் கிடைக்குமோ - அனாயாசமாக எழுதித்தள்ளி விடுகிறார்.  அவற்றை அழகிய புத்தக வடிவிலும் விரைவில் கொண்டுவந்துவிடுகிறார். இதே வசதி தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.


“சமூகத்தின் மீதான விமர்சனம் எனும்போது அதன் அமைப்புக்குள் இயங்கும் நானும் பொறுப்பாகவேண்டிய கடமையில், கோபமும் இயலாமையும் ஒருசேர வெளிப்பட்டு சுடுமணலில் ஊற்றியநீரைப்போல ஆகிவிடுகிறது,  எவ்விதப் பயனுமற்று. கடுகளவு நியாயமுமற்ற வன்மத்திற்குக்கூட சிலசமயங்களில் மௌனத்தோடு சகித்து விலகிவிடுகிற காயம் எனக்கும் வடுவாக இருக்கிறது. இருப்பினும் படைப்பில் நான் மனச்சாட்சியின் ஓங்கிய குரலில் எடுத்துப் பேசுவதில் இன்றளவும் பின்வாங்காதிருக்கிறேன். இந்தக்குரல் நரிகளைப் பரிகளாக்கிய நியாயம் போல ஒரு சமூக அழுத்தத்தை உருவாக்கிவிடும் என்கிற நம்பிக்கை இன்றுவரை எழுதிக்கொண்டேயிருக்க உதவுகிறது....” என்று தன்னிலை விளக்கம் அளிக்கிறார் ஹரணி.


சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டாலே கைது செய்யப்படும் அபாயம் நிலவும் உலகில், சம்பளத்திற்குப் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தினர், அரசியல் சமுதாயப் பிரச்சினைகளுக்காகக் கொந்தளிப்பதோ, கொதித்தெழுந்து போராடுவதோ  அபூர்வமாகி விடுகிறது. அவர்களுக்கு உள்ள வலிமையான வழி, எழுத்து ஒன்றே. ஹரணியும் அதே வழியையே பின்பற்றுகிறார். 



‘தொட்டிச்செடி’ , ‘அம்மாவுக்காய்’, ‘மனிதனாக வாழ்ந்திடல் வேண்டும்’ ஆகிய கதைகளும், தலைப்புக் கதையான ‘செல்லாத நோட்டு’ம் மறக்க முடியாதவை.

பெற்ற மகனிடம் சொல்ல முடியாத தன் கடந்தகாலத் தவறுகளைப் பேரனிடம் சொல்லிப் பிராயச்சித்தம் தேடும் தாத்தாவின் கதை ‘இப்படியாகக் கழிந்தது’.  அதில் தகப்பனைப் பார்த்து கேட்கிறான் இளங்கோ: “சின்ன புள்ளய அழச்சிட்டு போனா காலத்துல வீட்டுக்கு வரமாட்டிங்களா? நீங்களே சுகர் பேஷண்ட். எதாச்சும் ஆச்சுன்னா புள்ள கதி என்னாவும்...எதுவும் சொல்லத் தெரியுமா? இல்ல வீடு தான் தெரியுமா? ஏன்தான் இப்படிப் பண்ணறீங்களோ?” 

கணவனிடம் கேட்கிறாள் தேன்மொழி: “உங்கப்பாவுக்கு என்மேல குற்றப் பத்திரிக்கை வாசிக்கறது தானே வழக்கம்? உங்கம்மா செத்துப்போய் தான் குறைஞ்சிருக்கு..!”

மகனை மிரட்டிக் கேட்கிறாள், தாத்தா என்ன சொன்னார் என்று. அவன் சொல்கிறான்: “தாத்தா.... கதை தான் சொன்னிச்சு. அப்புறம் அழுதுச்சி”.

ம்... எல்லார் வீட்டிலும் ஒரு இளங்கோ, ஒரு தேன்மொழி, ஒரு பேரன் இல்லாமலா? அப்புறம் தாத்தாக்கள் அழாமல் என்ன செய்வது?

ஹரணியின் எழுத்து உணர்ச்சிகொட்டும் எழுத்து. வாசித்துப் பாருங்கள்.

சினிமா

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காகவே புறப்பட்டு வந்த ஜனாதிபதி, விழா முடிந்து திரும்பும்போதில் அவரது ஹெலிகாப்டர் சொதப்பிவிட்டதால் இன்னொன்றில் அவர் பயணமாகிப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார் என்பது ஆறுதலான விஷயம்.
நன்றி:இணையம்

இந்திய சினிமா என்பது தனிப்பட்ட விஷயம் அல்ல. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. பலகோடி ஏழைகளுக்கு சினிமா ஒன்றுதான் மலிவுவிலை சந்தோஷம். ஆனால் இஷ்டம்போல் டிக்கெட் வசூலிக்கும் மல்டிப்ளெக்ஸ்கள் வருகையால் அது நடுத்தர மக்களுக்கே கூட  எட்டாக்கனியாகி விடுமோ என்ற பயம் உண்டாகி யிருக்கிறது. ஏழைகள் என்ன செய்வார்கள்! கலைஞர் கொடுத்த இலவச தொலைக்காட்சியும் காவல்துறையின் கண்காணிப்பை மீறி சரளமாக விற்பனையாகும் திருட்டு வி.சி.டி.யும் தான் அவர்களுக்குப் புகலிடம். கணினி தெரிந்தவர்கள் யூடியூபில் குறும்படம் பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள்? மொத்தத்தில் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாயில்லை என்பது தெளிவு.

படம் தியேட்டருக்கு வருவதற்குள் கந்துவட்டிக்காரன் முதல் கட்சிக்காரன் வரை சமாளித்தாக வேண்டும். அண்மைக் காலமாக இன்னொரு அபாயமும் சேர்ந்துவிட்டது:  நேற்றுவரை யாரும் கேள்விப்பட்டிராத ‘கேட்டதைக் கொடுக்கிறாயா, இல்லை, தியேட்டரைத் தாக்கட்டுமா’ என்ற பாணியில் சில திடீர்க்கும்பல்கள் செய்யும் பிளாக்மெயில். எதிர்த்து நிற்கும் சக்தி கமலஹாசனுக்கு இருந்தது. விஜய்க்கு இல்லையே!


தொலைக்காட்சி

தரமானதும கௌரவமானதுமான  நிகழ்ச்சிகளைத் தருவதில் தூர்தர்ஷனை அடித்துக்கொள்ள இன்னொரு தொலைக்காட்சி இல்லை என்பது தெரிந்ததே.
    
கோட்டா நீலிமா


DD National-இல் சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கும் (மறு ஒளிபரப்பாக ஞாயிறு இரவு எட்டு மணிக்கும்) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘கிதாப்னாமா’ அல்லது ‘BOOKS & BEYOND’ சனிக்கிழமை (29-9-2013) அன்று பார்த்தபோது தற்காலத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கத்தக்க அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஓர் அழகிய பெண்மணி இரண்டு எழுத்தாளர்களுடன் அறிவுபூர்வமாக உரையாடிக்கொண்டிருந்தார். (ரூப்ளினா போஸ் என்று பெயராம்.)   CHANAKYA’S  CHANT என்ற ஆங்கில நாவலை எழுதிய திரு.அஷ்வின் சங்கியும், SHOES OF THE DEAD .என்ற ஆங்கில நாவலை எழுதிய திருமதி கோட்டா நீலிமாவும் ஆகிய அவ்விருவருமே நல்ல வேலைகளில் இருப்பவர்கள். (பாதி நாள் அமெரிக்காவில்.)  தாங்கள் வேலை பார்க்கும் சந்தர்ப்பத்தில் சந்திக்க நேரும்  மனிதர்களைப் பற்றி வேறு எங்கும் சுதந்திரமாகக் கருத்துச் சொல்ல வழியில்லாத நிலையில் நாவல் மூலம் அக்குறையைத் தீர்த்துக்கொள்வதாகக் கூறினார்கள். (நம்மவர்கள்  மட்டும் வேறென்ன செய்கிறார்களாம் ?)
 
கீதாஞ்சலி ஸ்ரீ


அருணவா சின்ஹா என்ற மொழிபெயர்ப்பாளர் தமது மொழிபெயர்ப்பையும் அதன் மூலப்பகுதியையும் (அதிக உணர்ச்சியின்றி) படித்துக்காட்டினார். கீதாஞ்சலிஸ்ரீ என்ற கண்ணாடியணிந்த இன்னொரு அழகிய இந்தி  நாவலாசிரியை, தனது நாவலில் இருந்தும் கவிதையில் இருந்தும் சில பகுதிகளை அழகிய மெய்ப்பாடுகளுடன் படித்தார். (‘அழகிய’ என்ற சொல்லை அதிகம்  பயன்படுத்திவிட்டேனோ?)

பத்திரிகை

விவசாயக் கடன்கள் வழங்கும் பொருட்டு ஆங்கிலேயர் காலத்தில் (21-8-1904இல்) இந்தியாவிலேயே முதல் முறையாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் இன்னும் இயங்கிவருகிறது. இந்தியாவின் நூற்றாண்டைக்கடந்த வேளாண் கூட்டுறவுச் சங்கம் இது ஒன்று தான்.

துரதிர்ஷ்டமாக இது இயங்கிவரும் கட்டிடமும் நூற்றாண்டு பழமையானது தான். வர்த்தக வங்கிகள் மூலை முடுக்கெல்லாம் கிளைபரப்பிவரும் இன்னாளில் இக்கூட்டுறவு சங்கத்தில் கடன்பெறுவோர் குறைந்துகொண்டே வருகின்றனராம். அதனால் இது இப்போது ‘கூட்டுறவு நியாயவிலைக்கடையாக’ இயங்கிவருகிறது. ஆனால் மாதம் முழுதும் திறக்கப்படுவதில்லை என்கின்றனராம் பொது மக்கள். வயதானவர்கள் என்றாலே இளப்பம் தானோ? (நன்றி: தினமலர்-28.9.2013)

(ஒரு திடீர் க்விஸ்: 1904 இல் துவங்கிய சிட்டி யூனியன் பேங்க், 1906 இல் துவங்கிய கார்ப்பரேஷன் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் உள்ள இரண்டு ஒற்றுமைகள் என்ன? விடை: (A) இரண்டுமே நூற்றாண்டுகளைக் கடந்தவை. (B) இரண்டிலும் நான் பணியாற்றி இருக்கிறேன்.) 

அவுட்லுக் குழுமத்திலிருந்து விடாமல் மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கிறது. சந்தா செலுத்தச் சொல்லி அல்ல, செலுத்திய சந்தாவின் மீதித் தொகையைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி!  
ஆம், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘நியூஸ்வீக்’ இதழுக்கு அவுட்லுக் மூலம் சந்தா செலுத்தியிருந்தேன். ஆனால் 79 வருடங்களாக அச்சுப்பதிப்பாக வெளிவந்துகொண்டிருந்த நியுஸ்வீக், ௩௧-௧௨-௨௦௧௨ (31-டிசம்பர்-2012) -உடன்  ‘இணையம் மட்டும்’ என்று மாறிவிட்டது. (அதற்கும் சந்தா உண்டு.) எனவே அனுப்ப முடியாமற்போன எதிர்கால இதழ்களுக்கான சந்தாத் தொகையை தனது குழுமத்தின் வேறு ஏதேனும் இதழுக்கு மாற்றிக் கொள்ளும்படி தினந்தோறும் மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கிறது. நான் மசிவதாக இல்லை. ஏனெனில் எனக்கு வரவேண்டிய பாக்கித்தொகை நூறு ருபாய்க்கும் குறைவே. அதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், குறைந்தது ஐநூறு ரூபாய்க்கான சந்தாவை நான் தேர்ந்தெடுத்தாக வேண்டும்!

அது சரி, தமிழில் சிலர் (சிறு) பத்திரிகைகள் ஆரம்பித்து சந்தா வசூல் செய்துவிட்டு, திடீரென்று நிறுத்திவிடுகிறார்களே, அவர்கள் இதுபோலத் திருப்பித் தந்திருக்கிறார்களா?

சிரிப்பு

பதிவர் திருவிழாவில் காசுகொடுத்து வாங்கிய பத்து நூல்களில் ஒன்று, ‘சேட்டைக்காரன்’ எழுதிய ‘மொட்டைத் தலையும் முழங்காலும்’. முழுக்க முழுக்க நகைச்சுவைக் கதை/கட்டுரைகள் கொண்டது. (160 பக்கம், ரூ. 120, ழகரம் புத்தகச்சோலை, சென்னை-33 அலைபேசி  9003036166.)


சேட்டைக்காரன் என்ற  புனைபெயரில்  எழுதும் வேணுகோபாலன் ,  பதிவர் உலகில் நன்கு அறிமுகமானவர். இவரது மின்சாரத் தொடர்வண்டிப் பயண அனுபவங்கள் இணையத்தில் பிரபலமானவை. இப்போது சினிமாவிலும் இவர் தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அழகிய வடிவமைப்பில் சுவையான ஓவியங்களுடன் வெளியாகியிருக்கும் இந்நூலிலிருந்து சிறு எடுத்துக்காட்டு:

"வி.ஆர்.எஸ். வாங்கினாலும் வாங்கினார், வெங்கடசாமி குக்கருக்குள் அகப்பட்ட இட்லித்தட்டு போல வீட்டுக்குள் சிறைப்பட்டுப் போயிருந்தார். தினசரியும் டன் கணக்கில் தூசிதட்டிப் பைல்களைப் பிரித்துப்புரட்டி, நாலைந்து காப்பி குடித்து, அக்கடாவென்று கால்பரப்பி அரசியல்பேசி ஐந்து மணியாவதற்கு முன்னமே அரக்கப்பரக்கக் கிளம்பியதெல்லாம் கடந்தகாலமாகிப் போக, இப்போது வீடே கதியாகிப்போனது. போதாக்குறைக்கு சகதர்மிணி சூடாமணி வேறு, புடவை கட்டிய பிரகாஷ்ராஜ் மாதிரி ஏகத்துக்கும் வில்லத்தனம்! ஒரு காப்பியைக் கூடச் சூடாகத் தந்து பழக்கமில்லாத மனைவி சூடாமணியை ‘ஆறினமணி’ என்று அழைத்தாலென்ன என்று அண்மைக்காலமாக வேங்கடசாமி யோசித்துக்கொண்டிருக்கிறார். 

 (மளிகை சாமான்கள் வாங்கிவருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாமான்கள் லிஸ்ட்டுடன் வெளியில் கிளம்புகிறார்.).....

"தெருவில் இறங்கும்போது இடுப்பில் வேட்டியும், மேலே சட்டையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை;  ஆனால் செல்போன் இல்லாமல் போனால் அது மிகப் பெரிய கலாச்சாரச் சீரழிவு என்பதால், எங்கே போனாலும் செல்போனை மடியில் கட்டிக்கொள்வதும், அப்படி மடியில் கட்டிக்கொள்வதற்காகவேனும் வேட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புவதும் வெங்கடசாமியின் வாடிக்கையாய்ப் போனது......."

© Y.Chellappa

Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.




 

14 கருத்துகள்:

  1. சூடாமணியை ‘ஆறினமணி’ என்று அழைத்தாலென்ன ??// அய்யோ பாவம்.உங்களின் அபுசி தொபசி அருமை

    பதிலளிநீக்கு
  2. பல்சுவைகளை தாங்கி வரும் அபுசி-தொபசி அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா. ஹரணி அவர்கள் கடும் உழைப்பாளி . பயண நேரத்தைக் கூட எழுத்தாக்கும் ஆற்றல் படைத்தவர். போற்றப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  4. அழகழகான விஷயங்களை அழகாகத் தந்திருக்கிறீர்கள். நானும் அதிகம் அழகு போட்டு விட்டேனோ...?

    பதிலளிநீக்கு
  5. அபுசி தொ ப சி யை தொடர்ந்து தந்து என் தேடல் பசியை போக்குமாறு வேண்டுகிறேன் !

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து வருகை தரும் - கவியாழியார், திண்டுக்கல்லார், கரந்தையார், ஷாஜகானார் - ஆகியோருக்கு நன்றிகள். இனித் தொடர்ந்து வரவிருக்கும் ஜோக்காளியாருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு இல்லாமல் வலைஉலகில் வெற்றி காண இயலுமா? மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஹரணியின் எழுத்து உணர்ச்சிகொட்டும் எழுத்து.

    அருமையான தொகுப்புகள் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. மிக்க மகிழ்ச்சி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. ஒரு முறை இடம் பார்ப்பது தொடர்பாக ஆவடி தாண்டி செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு நண்பரோடு அந்தப் பக்கம் சுற்றும் போது இந்த கூட்டுறவு ,சங்கத்தை பார்த்தேன். நண்பர் , சங்கத்தைப் பற்றிய வரலாறை கூறினார். கூட்டுறவு சங்கத்தை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். அதை பதிவிடனும் என்று நினைத்திருந்தேன். மறந்துவிட்டேன். நல்ல பதிவு சார்!.

    பதிலளிநீக்கு
  10. இளைஞர்களுக்கு மறதி வரலாமா? இனிமேலாவது உடனுக்குடன் பதிவு போடுங்கள்.ஆவலோடு காத்திருக்கிறேன்.வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இவ்வாரப்பதிவில் புத்தக மதிப்புரைகள் மிகவும் அருமை. தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஐயா!(நேற்று - அதாவது-அக்டோபர் மூன்றாம் தேதி 'தமிழ் ஹிந்து'வில் உங்கள் கடிதம் பார்த்தேன்.)

    பதிலளிநீக்கு
  13. அருமையான தொகுப்புகள்
    புத்தக மதிப்புரைகள் மிகவும் அருமை நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு