திங்கள், செப்டம்பர் 09, 2013

அபுசி-தொபசி - (1)

-இராய. செல்லப்பா 

(“அபுசி-தொபசி” என்ற இப்புதிய பகுதி இனி வாரம் ஒருமுறை வெளியாகும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. “அபுசி-தொபசி”  என்றால் என்ன அர்த்தம் என்று யாராவது கேட்கும்வரை விளக்கம் அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது).

அரசியல்
திரு ரொமேஷ் பண்டாரி சனிக்கிழமையன்று (7-9-2013) காலமானார் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, அதன் செயலாளராக உயர்ந்தவர், பண்டாரி. (1985-86). ராஜீவ் காந்தியின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக இருந்தவர்.




ராஜீவ் காந்திக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித்தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து வந்து, பல்வேறு சங்கடங்களை அவருக்கு உண்டாக்கியவர். விடுதலைப் புலிகளை ‘திசை தெரியாது அலையும் மதியிலிகள்’ என்று குறிப்பிட்டதால் பிரபாகரனின் தனிப்பட்ட வெறுப்புக்கு ஆளானவர். பொதுவாகவே தமிழர்களை மதிக்காதவர். குறிப்பாக இலங்கைத் தமிழர்களை எப்படியும் அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ராஜீவ் காந்திக்கு ஊட்டியவர். இவர் மட்டும் இல்லையென்றால் விடுதலிப்புலிகளின் சரித்திரமே மாறியிருப்பதோடு, ஐ.பி.கே.எஃப். என்ற இந்தியப்படை இலங்கைக்குச் சென்று, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனேயின் அரசியல் சூழ்ச்சியால் தமிழர்களைக் கொன்று குவித்த பெரும்பாவமும் அதன் பின்னூட்டமாக நடந்த ராஜீவ் காந்தியின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

எஜமான விசுவாசத்தின் காரணமாக இவருக்குக் கவர்னர் பதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன- டில்லி, கோவா, திரிபுரா, மற்றும் உத்தர் பிரதேஷ். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக. ஆனால் அவரது பக்குவமற்ற அரசியல் செயல்பாடுகளால் போராலும் பட்டினியாலும் உயிரிழந்த லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் ஆத்மா சந்தியடையுமா?

புத்தகம்
 
‘வாமனன்’ எழுதி மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட (திருத்திய பதிப்பு மார்ச் 2008) “டி.எம்.எஸ். – ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்” என்ற அருமையான வாழ்க்கை வரலாற்று நூல் படிக்கக் கிடைத்தது. 500 பக்க நூல். டி.எம்.எஸ்.உயிரோடு இருந்தபொழுதே, அதுவும் அவர், தமிழ்நாடு இயல் இசை மன்றத் தலைவர் என்ற உச்சனிலையில் இருந்தபொழுதில் வந்த நூல் என்பதால் இதை அவர் ரசித்துப் படித்திருப்பார் என்பதிலும், இதில் இடம் பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் நம்புதற்குறியவை என்பதிலும் இந்த நூல் அதிகம் விற்பனையாகியிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. இன்னும் முடிக்கவில்லை யென்றாலும் சில ரசமான நிகழ்வுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்:

டி.எம்.எஸ். தன் இளம்வயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். அவளை மணம்புரிய வேண்டிப் பெண் கேட்டபொழுது, பெண்ணின் தாயார் அலட்சியமாக: “என்ன, அங்க இங்க பாடிக்கிட்டிருக்காரு..அவ்வளவு தானே! நிலையான வருமானம் இல்லையே” என்றாராம். எதிர்காலத்தில் நல்லா வருவான் என்றிருக்கிறார் தூது போனவர். “அப்படியானால்  வைரத்தோடு, வைர மூக்குத்தி, இருபது பவுன் நகை போட்டா சம்மதிக்கிறேன்” என்றாராம் அவர்! அத்துடன் போயிற்று காதல்.

 அப்போதெல்லாம் ஃபோட்டோக்கடைகளில் ரூபாய்க்கு எட்டுப் படம் எடுத்துத்தரும் முறை இருந்ததாம். நீண்ட குடுமியுடன் படம் எடுத்துக்கொண்ட பின், நேரே நாவிதரிடம் சென்று கிராப் தலையாக மாற்றிக்கொண்டாராம் டி.எம்.எஸ். (சினிமா உலகத்திற்குச் செல்லும் முன் அந்த மாற்றம் தேவைப்பட்டதாகத் தோன்றியது.) அவரது பின் குடுமி, அவரது அக்காவிற்கு ஒரு சவுரியாகவும் மனைவிக்கு ஒருசவுரியாகவும் பின்னாளில் பயன்பட்டதாம்!

 பி.யூ.சின்னப்பாவின் எடுபிடியாகச் சிலகாலம் பணியாற்றிக்கொண்டிருந்தார் டி.எம்.எஸ். ஒரு நாள் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது இவர் கையில் ஓரணாவைக் கொடுத்து ஜாடி பீடி ஒரு கட்டு வாங்கிவரச் சொன்னாராம் சின்னப்பா. அத்துடன் அவரைவிட்டு விலக ஆரம்பித்தார் இவர்.

‘பாலும் பழமும்’ படத்தின் ஒரு பாடல் ஒலிப்பதிவானபோது சௌந்தரராஜனுக்குக் கடுமையான ஜலதோஷம். உடல்நிலை சரியானதும் பாடுகிறேனே என்றாராம். ‘கதாநாயகன் ஊட்டியில் பாடுவது தான்.....நீங்கள் ஜலதோஷத்துடன் பாடினால் பொருத்தமாக இருக்கும்’ என்றார்களாம் தயாரிப்பு நிர்வாகிகள். கொடுக்கிற  தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது உண்மையாயிற்று!

‘வானம்பாடி’ படத்தில் வரும் ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்ற பாடலில் ஒரு வரி: “அவன்-காதலித்து வேதனையில் சாக வேண்டும்” என்று எழுதியிருந்தாராம் கண்ணதாசன். அவரது சொந்தப்படம். “சாக வேண்டும்” என்று பாட மறுத்துவிட்டாராம் சௌந்தரராஜன். வேறு வழியின்றி “அவன்-காதலித்து வேதனையில் வாட வேண்டும்” என்று மாற்றிக்கொடுத்தாராம் கண்ணதாசன்.

சாதனைகளை யாரும் கடையில் விற்பதில்லை. உரிய வேர்வையை விலையாகக் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் காட்டும் இந்நூல், முன்னுக்கு வர நினைக்கும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. தமிழ் சினிமாவின் வரலாறு தெரிய விரும்புகிறவர்களுக்கும் இன்றியமையாதது. வாமனனுக்கு நம் நன்றிகள்.

சினிமா
 
வடிவேலு என்ற நகைச்சுவையாளர் காணாமல் போனது தமிழ் சினிமா உலகுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்று இப்போது தான் தெரிகிறது. கவுண்டமணி-செந்தில் என்ற ஆபாச ஜோடியிடமிருந்து சினிமாவை மீட்டுக்கொடுத்த ஜாம்பவான் வடிவேலு. நகைச்சுவை இமயமாம் நாகேஷின் மறுபதிப்பாக இருந்த திறமையாளர். அவரது இடத்தை இப்போது சந்தானம் என்ற நடிகர் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.

அங்க அசைவுகளில் வேறுபாடோ, வசன உச்சரிப்புகளில் வேறுபாடோ, ‘டைமிங்’ என்ற அதி முக்கியமான குணாதிசயமோ இல்லாத இவரை எப்படி நகைச்சுவையாளராக இயக்குனர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. ஆம், இயக்குனர்கள் என்று பெயர் சொல்லக்கூடியவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் - எல்லாமே  trial  & error  ஆசாமிகள்  தான்  என்கிறீர்களா? நீங்கள் சொன்னால் சரியாய்த் தானிருக்கும்.

தொலைக்காட்சி

ஆறு மாத அமெரிக்க ஓய்வுக்குப் பின் இப்போது தான் தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ‘புதிய தலைமுறை’ இன்னும் புதுமையை இழக்கவில்லையென்று தோன்றுகிறது. பெண் தொகுப்பாளிகள், சற்று பூசினாற்போல் காணப்படுகிறார்கள். திறமை கூடியதாலென்று நினைக்கிறேன். முகத்தில் ஆரம்பகால மென்முறுவல் குறைந்திருக்கிறது. வெயிலோ, மின்வெட்டோ, அலுவலகப் பிரச்சினைகளோ, கணவரோ , செல்ல நாய்க்கு ஜுரமோ  காரணமாக இருக்கலாம்.

சன் டிவி இன்னும் மாறவில்லை என்பதற்கு அடையாளமாக ‘கரகாட்டக்காரனி’ லிருந்து காரைத் தள்ளிக்கொண்டுபோகும் காட்சி பத்தாயிரத்து முன்னூற்றி இருபத்தெட்டாவது தடவையாக வெளியானது. ஜெயா மேக்ஸில் எப்பொழுதும்போல் ஜெயலலிதாவின் இளமைக்காலப் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாயின. ‘சூரிய காந்தி’ யிலும் ‘மேஜர் சந்திரகாந்த்’ திலும் என்ன மாதிரி ஒரு ஜொலிப்பும் துள்ளலும்!

பத்திரிகை
 
‘கல்கி’ உதவி ஆசிரியர் கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு 50,000 ரூபாய் கிடைத்திருக்கிறது. (உங்களுக்கு எப்போது, அமிர்தம் சூர்யா?)  ஆனால் ஒரு வருத்தம்: கல்கியின் வடிவத்தைப் பெரிதாக்கியவர்கள், பக்கங்களைக் குறைத்து விட்டிருக்கிறார்கள். (“பெரிதினும் பெரிது கேள்” என்றால் இது தானா பாஸ்?) கையில் எடுத்தால் அந்தக்காலத் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ மாதிரி ‘லேசான’ ஃபீலிங். வரிகளுக்கு இடையிலான இடைவெளியையும் பெரிதாக்கியிருக்கிறார்கள். இதனால் அச்சடிக்கப்படும்  வார்த்தைகளின் மொத்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. முன்பு அரைமணி நேரம் படிக்க முடிந்த கல்கி, இப்போது இருபதே நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. ஆனால் வண்ணப்படங்களும் சினிமாச் செய்திகளும் படுத்தும் அட்டகாசம் அதிகம். Fabulous Design & Fantastic Execution. கல்கி வயதானவர்களுக்கா இல்லை இளைஞர்களுக்கா என்று பட்டிமன்றம் வைக்கலாம்.

‘கலைமகள்’ – செப்டம்பர் இதழில் கோமதி ராஜ்குமார் எழுதிய ’குறை ஒன்றும் இல்லை’ என்ற  அருமையான இலக்கியக்கட்டுரை வெளியாகியுள்ளது. ‘குறை’ என்று ஞானியரும் பக்தர்களும் குறிப்பிடுவது என்னவாக இருக்கும் என்று ஆழ அகலமாக ஆய்வு செய்கிறது. ‘மறக்க முடியாத வில்லன்கள்’ வரிசையில் இந்த மாதம் எஸ்.வி.ரங்காராவ் பற்றி எழுதும் எஸ்.சுந்தரதாஸ் நம்மைச் சில பத்தாண்டுகள் பின்னோக்கிக் கொண்டுபோய்விடுகிறார்.

இலங்கை எழுத்தாளர்களைப் பற்றிய கீழாம்புரின் தொடர் கட்டுரை ‘இலங்கையில் கண்டதும் கேட்டதும்’ சுவாரசியமானது. இலங்கை எழுத்தாளர்களில் ஒருவரான சுவாமி விபுலானந்தரின் இப்பாடலை அவர் எடுத்துக்காட்டில் நீண்ட நாட்களுக்குப் பின் படித்து மகிழ்ந்தேன்:

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!

‘அமுதசுரபி’ செப்டம்பர் இதழில் திருப்பூர் கிருஷ்ணன், அமரர் வாலிக்காக எழுதிய அஞ்சலிக் கவிதையிலிருந்து சில வரிகள்:

சிதம்பரத்தின் வரி உயர்ந்தால் துன்பம் – வாலி
செய்யுளிலே வரி வளர்ந்தால் இன்பம்.

அதே இதழில் பாரதி பற்றி வெளியாகியுள்ள 38 வெண்பாக்களில், தேனியிலிருந்து த. கிருஷ்ணசாமி எழுதிய, முதல் பரிசு பெற்ற, காட்சிபூர்வமான  வெண்பா இது:  

மண்டி மளிகையது வந்ததென இன்பமுடன்
முண்டியடித்து வந்த செல்லம்மா – வண்டிதனில்
புத்தகங்கள் மட்டுமே பாரதியார் கொண்டுவர
மெத்தவும் நொந்தார் மெலிந்து!

சிரிப்பு
நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை யல்லவா?) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தக் கதை அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.
 
‘அமர இலக்கியம்’ என்பது என்ன? பச்சைத் தமிழில் ‘சாகாத இலக்கியம்’ என்று சொல்லலாம். நல்லது! இந்தக் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனால் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை! ஒரு பெரிய கேணி, வாயை ‘ஆ’ என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது! கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள்! இப்படிப்பட்ட கதையை ‘அமர இலக்கியம்’ என்று சொல்லாவிட்டால் வேறு எதைச் சொல்வது?
     (‘பொய்மான் கரடு’ நாவலுக்குக் ‘கல்கி’ எழுதிய முன்னுரையிலிருந்து)
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.

15 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்புகள் .. ரசிக்கவைத்தன..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே! தவறாமல் அடுத்த வாரமும் வாருங்கள்!

      நீக்கு
  2. ரசிக்க வைக்கும் கதம்பம்... தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அபுசி-தொபசி என்னவென்று தெரியாதவர்கள் பதிவின் உள் கொடுத்திருக்கும் தலைப்பின் முதல் எழுத்தை பார்த்தாலே போதுமே

    பதிலளிநீக்கு

  4. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு

  5. மிக்க நன்றி நியூஜெர்சியில் வாழும் மதுரைத் தமிழன் அவர்களே! தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. செய்திகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.தொடருங்கள் ஐயா தொடர்கிறோம். நன்றி

    பதிலளிநீக்கு
  7. நன்றி, கரந்தையார் அவர்களே! தங்கள் ஊக்குவிப்பு மகிழ்ச்சியூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  8. பல்வேறு வகையான செய்திகள். அவையும் தேவையானவையே. Fidel Castro breakfasts with more than 300 pages of world news daily என்று ப்ரன்ட்லைன் ஆங்கில வார இதழில் 15 ஆண்டுகளுக்கு முன் படித்ததாக நினைவு. உங்களது இப்பதிவைப் படித்தபோது எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  9. நன்றி, கலாகுமரன் அவர்களே! அடிக்கடி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி, டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே! தங்கள் வருகை உற்சாகமூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  11. அபுசி-தொபசி - 1 பல்சுவையும் கலந்த விருந்தாக இருக்கிறது. டி.எம்.எஸ். பற்றியும் நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றியும் எழுதியிருப்பது ரொம்பவும் நிஜம்.

    தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் நன்றாக இருக்கிறது. கல்கியின் அளவு எந்த அளவிலும் சேராத ஒன்றாக இருக்கிறது. வேறு கைக்கு மாறிவிட்டது என்பதற்காக கல்கி பிள்ளையாரையும் எடுத்து விட்டார்களே! தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது - சினிமா பத்திரிக்கை போல இருக்கிறது - இன்றைய தலைமுறையினரை கவர வேண்டும் என்றால் சினிமா ஒன்றுதானா?

    கலைமகள், அமுதசுரபி இரண்டு மட்டுமே தரத்தை இழக்காமல் இருந்து வரும் பத்திரிகைகள்.

    கல்கியின் நகைச்சுவையைப் படித்தவுடனே - இன்றைய 'கல்கி'பத்திரிக்கையின் நிலை பற்றி அவர் என்ன நினைப்பார் என்று தோன்றியது.
    அபுசி-தொபசி என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  12. ''..(தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை யல்லவா?) ..''
    இன்று தான் வந்தேனய்யா.
    மெல்ல மெல்ல கருத்திடுவேன். அரசியல் பிடிக்காது.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு