சனி, ஆகஸ்ட் 24, 2013

கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின் இளைஞர் இலக்கியப் பரிசு

கதிர்பாரதிக்கு சாகித்ய அகாதெமியின்  இளைஞர் இலக்கியப் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 'யுவ புரஸ்கார்' என்று கூறுவர்.

கதிர்பாரதியின் 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதை நூலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள ஓர் இளைஞருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கதிர்பாரதி இப்போது கல்கியில் பணியாற்றி வருகிறார்.

'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' பற்றி நான் ஏற்கெனவே அவருடைய தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறேன். அந்த நூலில் சில சிறந்த கவிதைகள் இடம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.

முக்கியமாக கிராமப்புறத்தில் தமிழ் மீடியத்தில் பயிலும் மாணவர்களுக்குப் புரியக்கூடிய மொழி நடையில் அதிகமான  கவிதைகள்  இடம் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில் இவர்கள் தாம் இன்று கவிதையின் புரவலர்களாக இருக்கிறார்கள்.

என்ன எழுதுகிறோம் என்பதை விட யாருக்காக எழுதுகிறோம் என்பதே இளைஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். 'மெசியா'வில் இந்தச் சிக்கலைக் காண முடிகிறது.

'யூமா வாசுகி' யின் செல்வாக்கு தன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச்  சொல்கிறார், கதிர். தமிழில் வேறு நல்ல கவிஞர்களும் உண்டு என்பதை அவருக்கு நாம் நினைவூட்டுவோமாக.

பத்திரிகையில் உயர் பொறுப்பில் இருப்பவர் என்பதால் அவருக்குத் தகுதிக்கு மீறிய பாராட்டுக்களை அள்ளித் தெளிக்க அதற்கென்றே உள்ள ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்வரலாம். அப்பாராட்டுக்களை உண்மையென்று நம்பிவிடக் கூடிய சூழலையும்  அவர்கள் ஏற்படுத்திவிடலாம்.

கதிர்பாரதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞரான அவர், தம்முடைய  சிறந்த மற்றும் மிகச்சிறந்த  கவிதைகள் இனிமேல் தான் எழுதப்படவேண்டும் என்பதை  அடிக்கடி நினைவில் கொள்ளவேண்டும்.

அத்துடன் யூமா வாசுகி போலவோ அல்லது லா.ச.ரா. போலவோ எழுத முற்படவேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறேன். சராசரித் தமிழனுக்குப் புரியக்கூடிய நடையிலும் மொழி அமைப்பிலும் கவிதை எழுதப்பட வேண்டியதே இன்றைய தேவையாக இருக்கிறது.

'கவிராஜன் கதை'  முன்னுரையில் வைரமுத்து சொன்னது போல் 'தன்னையே கிள்ளிக் கொண்டு அழும்' கவிஞர்கள் நமக்குத் தேவையில்லை. காதலியை வர்ணிக்கும், காதல் தோல்வியை மட்டுமே சித்திரிக்கும் கவிதைகளை  மற்றவர்கள் எழுதட்டும். கதிர்பாரதிக்கு அந்த  வேலை வேண்டாமே!


மு. மேத்தாவுக்குப் பிறகு புதுக்கவிதையை சராசரி மக்களின் தளத்திற்குக் கொண்டு செல்லும் கவிஞன் இன்னும் தோன்றவில்லை. வைரமுத்துவுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் சினிமாவில் பணம் பண்ணப் போய்விட்டார். உரைநடையை உடைத்துப்போட்டு பக்கநிரப்பியாகக் கவிதையைப் பயன்படுத்தும் பத்திரிகையாளர்களின் போக்குக்கு உடன்படாமல் நல்ல கவிதை எழுதுபவர்கள் மனுஷ்யபுத்திரன் மாதிரி ஒரு சிலரே. கதிர் பாரதியின் வரவினால் அந்த எண்ணிக்கை  மேலும் ஒன்றாக  உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.

கதிர்பாரதிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். அதே சமயம் எனக்குக் கவலையும் வருகிறது. பத்திரிகையின் தலைமை உதவி ஆசிரியர் பொறுப்பு என்பது சாமான்யமானதல்ல. தன்னை மறந்து உழைக்கச் சொல்லும். தன் உழைப்பின் பலனைப் பிறருக்குத் தரச் சொல்லும். இதற்கு மத்தியில் தன படைப்பாற்றலைத் துருப்பிடிக்காமல் வைத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட நேரலாம். பரிசுக்களிப்பிலிருந்து  மீண்டவுடன்  அவரது அடுத்த கவிதைத் தொகுப்பை எதிர்நோக்கலாம். அப்போது அவரை மறு மதிப்பீடு செய்வது சாத்தியமாகலாம்.

எழுபது வயதுக்கு மேல் பரிசு தந்து மருத்துவச் செலவுகளுக்காகவே சாகித்ய அகாதெமி என்றிருந்த நிலைமை மாறி, வளரும் பயிருக்கு நீராகவும் உரமாகவும் பயன்படும் 'யுவ புரஸ்கார்' விருதுகளைத்  தகுதியுள்ள இளைஞர்களுக்கு  வழங்கிடும் அகாதெமிக்கும் வாழ்த்துக்கள்.

-கவிஞர் இராய.செல்லப்பா (சென்னையிலிருந்து)
தொலைபேசி: 9600141229. (chellappay@yahoo.com)

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

அமெரிக்காவுக்கு விடிவு காலம் உண்டா? (“வீழ்ச்சியின் விதிகள் ஐந்து”)


“ரொம்பக் கவலையாக இருக்கிறது” என்கிறார்கள் விவரம் அறிந்த இரு மேலாண்மை அறிஞர்கள்.

அமெரிக்கா இன்று வேகமாகத் திவால் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்ரில்லியன் கணக்கில் வாங்கியிருக்கும் கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தான், அமெரிக்க பட்ஜெட்டில் மிகப் பெரிய செலவினமாக உள்ளது. சமூகநலம் என்ற பெயரால் நாடு ஏழ்மையானதொரு தலைமுறையை உருவாக்கி விட்டிருக்கிறது. சுயமரியாதை என்பதே பெரும்பாலும் தொலைந்துபோய் விட்டது. நாட்டின் கடன்மதிப்பீடு கீழிறக்கப்பட்டு விட்டது. உலகில் யார் எங்கு சண்டையிட்டாலும் ஓடிப்போய்க் காவலுக்கு நிற்கிற போலீஸ்காரனின் நிலைமை தான் இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தாங்கள் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொணர்ந்துவிட்டதாக அமெரிக்கர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் ஆள் மாறினாலும் ஆட்சி மாறினாலும் நாடென்னவோ தவறான திசையில் மட்டுமே பயணித்துக்கொண்டிருக்கிறது.

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

150 பக்க நூலுக்கு பாரதியாரின் 57 பக்க முன்னுரை



இந்தியாவின் ஆன்மிகப் பொக்கிஷமாகவும் வேதங்களின் சாரம்சமாகவும் கருதப்படுவது பகவத்கீதை.

ஆதிசங்கரரில் தொடங்கி, விவேகானந்தரும், ராமகிருஷ்ணமடத் துறவியர் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அரசியல் போராட்ட வீரர்களாக விளங்கிய பால கங்காதர திலகரும், மகான் அரவிந்தரும்,  நம் காலத்தில் தமிழ்வாணனும், கண்ணதாசனும் உரை எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக அமைந்தது பாரதியாரின் உரை. கையடக்கப் பதிப்பாகப் பலர் வெளியிட்டிருக்கிறார்கள். என் கையில் இருப்பது சாருப்ரபா (நக்கீரன்) வெளியீடு. விலை பத்து ரூபாய்.