புதன், ஜூலை 31, 2013

தாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு


 வங்காள மொழியில் ரவீந்திரநாத தாகூர் எழுதி, நோபல் பரிசு பெற்ற கவிதை நூல் “கீதாஞ்சலி”. இதை, அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1912 நவம்பர் மாதம் லண்டனில் வெளியானது. அங்குள்ள “இந்தியா சொசைட்டி” இதனை வெளியிட்டது. முதல் பதிப்பில் 750 பிரதிகள் அச்சிட்டதாகவும், அதில் 250 பிரதிகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. 


இரண்டாம் பதிப்பை மாக்மில்லன் கம்பெனி 1913 மார்ச் மாதம் வெளியிட்டது. அவ்வருடம் நோபல் பரிசுக்கு இன்னூல் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததால்,  தொடர்ந்து பத்து முறை மறு அச்சு செய்யப்பட்டது. 1913 நவம்பர் 13ஆம் நாள் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வில்லியம் ராதென்ஸ்டீன் (William Rothenstein) என்ற அறிஞர் தான் இந்நூலை முதலில் படித்து அதன் சிறப்பைப் புரிந்துகொண்டவர். பிரபல ஆங்கிலக் கவிஞரான வில்லியம் பி யீட்ஸிடம் (W.B.Yeats) இதை அறிமுகப்படுத்தினார். அது மட்டுமன்றி, இங்கிலாந்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், ஓவியர்கள் அனைவரிடமும் தாகூரை அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற நூல் வெளியீட்டாளர்களான ‘மாக்மில்லன் கம்பெனி’ யிடமும் அவர் தான் இதை எடுத்துச் சென்று இரண்டாம் பதிப்பு வெளியிடக் காரணமானவர். அதனால், இந்நூலை ராதென்ஸ்டீனுக்கே அர்ப்பணம் செய்தார், தாகூர். 

கவிஞர் யீட்ஸ், இந்நூலில் சிறந்த கவிதைகளைத் தொகுத்தும், சிற்சில திருத்தங்களை வலியுறுத்தியும் தாகூருக்கு அனுப்பினார். அப்படி வெளியான நூலுக்குத் தான் நோபல் பரிசு கிடைத்தது.
****

கீதாஞ்சலியை மொழிபெயர்த்த அனுபவத்தை யீட்ஸ் தன் முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்:

“இந்நூலின் மொழிபெயர்ப்புப் பிரதியைக் கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் படித்தேன். ரயில் பயணங்களிலும், வெளியூர் செல்லும் பஸ்களிலும், உணவு விடுதிகளிலும் பல நாட்கள் படித்தேன். படிக்கும்போது யாராவது பார்த்துவிடக்கூடாதே என்று மூடிக்கொள்வேன். ஏனென்றால் அந்த அளவுக்கு இக்கவிதைகள் என்னை நெஞ்சுருகச் செய்துவிடும். மூல வங்காள மொழியில் படிக்கும்போது இக்கவிதைகள் ஓசை நயமும், மொழிபெயர்க்க இயலாததொரு வரிவடிவமும், கனவுலகில் நம்மைக் கொண்டுபோவதான சிந்தனைக் கோப்பும் உடையவை என்று என் இந்திய நண்பர்கள் கூறுகிறார்கள். கவிதையும் சமயமும் ஒன்றோடொன்று இணைந்து  நூற்றாண்டுகளாக நீடித்து, கற்றோரும் மற்றோரும் பாடிப்பழகிய உவமையும் உணர்ச்சியும் கலந்ததாய் மீண்டும் காவியச் சிந்தனையாளனிடம் சென்று சேர்ந்ததால் உருவான விந்தை இது.......

“காதலனோ காதலியோ ஒருவருக்காக மற்றவர் காத்திருக்கும் போது இக்கவிதைகளை முணுமுணுத்தால் தங்கள் வேற்றுமைகளை மறப்பித்து, இளமையைப் புதுப்பிக்கும் குளியலைத் தரும் மந்திரக்குளமாக உணரமுடியும்.  ஒவ்வொரு கவிதையிலும் கவிஞரின் நெஞ்சம், இக்காதலர்களை நோக்கியே பேசுகிறது. ஆனால் அவர்களைக் கண்டிப்பதுமில்லை, கழிவிரக்கம் கொள்வதுமில்லை. அவர்களின் காதல் சந்தர்ப்பங்களைப் புரிந்துகொண்டதால் வரும் வார்த்தைகள் இவை.......

“(இங்கிலாந்தில்) நாம் மிக நீண்ட நூல்களை எழுதுகிறோம்.  ஒரு பக்கமாவது அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை. அரசியலிலும் பொருளீட்டுவதிலும் நாம் காட்டும் அதே முறைகளைப் புத்தகம் எழுதுவதிலும் காட்டுகிறோம். ஆனால், தாகூரோ, இந்திய நாகரிகத்தின் முன்னால் தன்னைச் சரணடையவிட்டு, தனது ஆன்மாவைக் கண்டெடுக்கும் முயற்சியாக நூல் எழுதியிருக்கிறார்....”
****
2003-2007ஆம் ஆண்டில் வங்கியில் ஏ.டி.எம். களை மேலாண்மை செய்யும் பிரிவின் தலைமை அதிகாரியாக நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கணினித்துறையில் அதிகாரியாக ஒரு வங்காளி இளைஞர் என்னிடம் வந்து சேர்ந்தார். சில மாதங்களே இருந்தார். பிறகு தகவல்-தொடர்புத் துறைக் கம்பெனி ஒன்றில் கல்கத்தாவில் வேலை கிடைத்ததால் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். அவரிடம் ஒருமுறை ரவீந்திரநாத தாகூரின் ‘கீதாஞ்சலி’யை வங்காள மூலத்தில் படிக்க வேண்டும் என்ற எனது ஆசையை வெளியிட்டேன். ஒரு பக்கம் மூலமும் மறுபக்கம் ஆங்கில அல்லது தமிழ் உரையும் உள்ளதாக ஒரு புத்தகம் கல்கத்தா போகும்போது வாங்கிவரச் சொன்னேன். பிறகு எனக்கும் மறந்துபோய்விட்டது, அவருக்கும் தான்.  

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்து ஒரு புத்தகக்கட்டு வந்தது. அதில் விகடன் அளவிலான தடித்த அட்டைப் புத்தகம் இருந்தது. ஒரு பக்கம் தாகூரின் அசல் கையெழுத்தில் கவிதையும், இன்னொரு பக்கத்தில் தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பும், அற்புதமான பின்னணி ஒவியங்களுடன் இருந்தன. எங்கு தாகூரின் அசல் கையெழுத்தில் கவிதை கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அச்செழுத்தில் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

இத்தகைய அமைப்பில் வெளியாகும் முதல் பதிப்பு அது தான். தாகூரின் விஸ்வபாரதி பல்கலைகழகமும் UBSPD என்ற பிரபல புத்தக வெளியீட்டாளரும் இணைந்து, கொண்டுவந்திருந்த நூல் அது.

அப்போது பிரதமராகவும் (அதன் காரணமாக விஸ்வபாரதியின் வேந்தராகவும்)  இருந்த அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் முன்னுரையோடு வந்திருந்தது. நூலின் பின்னுரையாக, W.B.யீட்ஸ் வழங்கிய முதல் மொழிபெயர்ப்பின் முன்னுரையும், கீதாஞ்சலியின் ஃப்ரென்ச்சு மொழிபெயர்ப்பாளர் ஆண்டிரே கிட் (Andre Gide), போர்ச்சுகீசிய மொழிபெயர்ப்பாளர் ஐவோ ஸ்டானியோலா (Ivo Storniolo), ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் ஸுக்கோ வடானபே (Suko Watanabe) ஆகியோர் வழங்கிய முன்னுரையின் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியில் தாகூரைப் பற்றி வழங்கிய விமரசனக் கட்டுரையும் உள்ளது.

1913இல் அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை ஏற்றுக்கொண்டு தாகூர் வழங்கிய ஏற்புரையும் முழுமையாகத் தரப்பட்டுள்ளது. (தேதி 26 மே 1921 என்று தாகூர் கையொப்பம் இட்டிருக்கிறார். அப்படியானால் எட்டு வருடங்கள் கழித்துத் தான் பரிசை அவர் நேரில் சென்று  பெற முடிந்ததாகத்  தெரிகிறது. முதலாம் உலகப்போர் காரணமாக என்று நினைக்கிறேன்.)

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பற்றி மேலை நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளின் துண்டுப்படங்கள் அட்டையின் உட்புறம் பதிக்கப்பட்டிருப்பது புத்தகத்தின் மதிப்பைக் கூட்டுகிறது.
பத்திரிகை செய்திகளின் துண்டுப்படங்கள்
****
உதாரணத்திற்காக இரண்டு கவிதைகளைத் தாகூரின் கையெழுத்தில் கீழே கொடுத்திருக்கிறேன். இவற்றைத்  தமிழில் (என்னால் இயன்ற இலக்கிய  நேர்மையுடன்)  மொழிபெயர்த்தும் தந்திருக்கிறேன்:  

கீதாஞ்சலி-32


என்னைக் காதலிக்கும் எல்லோரும் எப்படியேனும் என்னைப் பிடித்து வைத்துக்கொள்ளவே முயல்கிறார்கள்.

ஆனால் அவர்களினும் பெரிதாகக் காதலிக்கும் நீ  என்னைச் சுதந்திரமாக விட்டிருக்கிறாய்.

மறந்துவிடுவேனோ என்றஞ்சி அவர்கள் தனியே விடுவதில்லை என்னை. ஆனால், நாட்கள் கழிந்துகொண்டே போயினும் உன்னைக் காண முடியவில்லையே  என்னால்.

வணங்கி அழைக்காமலும்,  நெஞ்சில் வைத்துப் போற்றாமலும் நான் இருந்திட்டாலும் கூட, என் காதலுக்காகவே காத்திருக்கும் நின் காதல். 
****

கீதாஞ்சலி -31 (முதல் பக்கம்)


கைதியே, உன்னை விலங்கிட்டது யார், சொல்?”

“என் தலைவன்” என்றான் கைதி.

“ஆஸ்தியிலும் அதிகாரத்திலும் எவரையும் வென்றுவிட  எண்ணினேன். அரசனுக்குரிய பொன்னையெல்லாம் என் பொக்கிஷத்தில் ஒளித்தேன். உறக்கம் என்னை ஆட்கொண்டபோது ஓடி விழுந்தேன் என் தலைவனின் கட்டிலில். எழுந்து பார்க்கையில் கைதியாகிக் கிடந்தேன் எனது பொக்கிஷ அறையிலேயே.” 

(இரண்டாம் பக்கம்)




“கைதியே, உடைத்தெறியமுடியாத இவ்விலங்கைச் செய்தது யார்?”

“நான் தான்” என்றான் கைதி.

“மிக்க அக்கறையோடு இதைச் செய்தேன், கவலையற்ற சுதந்திரத்தில் நான் திளைப்பதற்காக, வெல்ல முடியாத என் அதிகாரத்தால் உலகைச் சிறைப்பிடித்தற் பொருட்டு. இரவும் பகலும் பெருந்தீயில் இட்டும் ,  ஓங்கியடித்தும்  செதுக்கினேன் இதனை. சங்கிலியின் வளையங்கள் பூரணமாகி உடைக்கமுடியாத உறுதியுடன் விலங்கு தயாரானபோதில் என்னையே அது தளைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்”.
****

இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பிய நண்பரின் பெயர் மிருண்மோய் மௌலிக் (Mrinmoy Maulik). தனது முகவரியை அவர் குறிப்பிடாததால் பலவாறு முயன்று யாரோ கொடுத்த ஒரு மின்னஞ்சலுக்கு நன்றிக் கடிதம் அனுப்பினேன். பதில் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

(Gitanjali by Rabindranath Tagore : Published by UBS Publishers’ Distributors Ltd., 60, Nelson Manickam Road, Aminjikarai, Chennai-600029. First Edition 2003. Rs.495)

© Y.Chellappa

7 கருத்துகள்:

  1. தங்களின் மொழிபெயர்ப்பு அபாரம் அய்யா. நன்றி. தாகூர் பற்றி அறியாத பல தகவல்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. மொழிபெயர்ப்பு மிகவும் அருமை ஐயா... இது போல் தொடர வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தளத்தில் இப்போது தான் மேய்ந்து விட்டு வநதேன். எவ்வளவு தகவல்கள். அப்பப்பா. தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. http://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/ தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி.

    சி. ஜெயபாரதன்

    பதிலளிநீக்கு
  4. கீதாஞ்சலி (31)
    சிறைக் கைதி!

    மூலம்: இரவீந்திரநாத் தாகூர்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


    சிறைக் கைதியே!
    என்னிடம் சொல்லிடு,
    உன்னைத் தண்டித்து
    சிறையில் தள்ளியவன் யார்?”
    “எனது மேலதிகாரி”
    என்று பதிலுரைத்தான் கைதி.
    “பணம் திரட்டி ஆளும் திறத்திலும்
    உலகை மிஞ்சி
    மேலோங்கி
    அனைவரையும் அமுக்கலாம் என்று
    நினைத்தேன்!
    மன்னவன் துணையால்
    ஏராளமாய்
    செல்வக் குவியலைத்
    திரட்டி என்
    புதையல் களஞ்சியத்தை
    நிரப்பினேன்!
    மரணம் கொண்டு போனபின் எனது
    பிரபுவின்
    படுக்கையில் கிடந்தேன்!
    விழித்ததும் கண்டது என்ன ?
    நான் கட்டிய
    புதையல் களஞ்சிய மாளிகை
    என்னும்
    சிறைச் சாலைக் கைதியாய்
    நானே
    சிக்கிக் கொண்டதை!

    சிறைக் கைதியே!
    என்னிடம் சொல்லிடு,
    உன் கைவிலங்கின் உடைக்க முடியாத
    இந்த இரும்புச் சங்கிலியை
    மெய்வருந்தி
    உருவாக்கியவன் யார்?
    மிகக் கவனமாய்
    இரும்பு விலங்கை
    உருக்கக் காய்ச்சி
    பட்டறையில்
    வார்த் தெடுத்தவன் நானேதான்!
    சேர்த்த செல்வாக்கும்
    தோற்காத என் தீரமும்
    தரணியை
    எனக்குக் கீழாக்கி
    தங்கு தடையின்றி தனியாக
    என்னை
    விடுதலை மனிதனாய் விட்டுவிடும் என்று
    பெருமிதம் கொண்டேன்!
    கடும் சூட்டுக் கனலில்
    இரவு பகலாய்
    காய்ச்சி
    இரும்புச் சங்கிலியை
    கடியதாய் ஓங்கி அடித்து
    வடித்தேன்!
    இறுதியில்
    என் வேலை முடிந்து,
    முறியாத கைவிலங்கு முழுதாய் ஆனதும்,
    நான் கண்டதென்ன,
    சங்கிலி
    பற்றிக் கொண்டது
    கெட்டியாய்
    முற்றிலும் என்னை!

    *****************

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா, தங்களது மொழிபெயர்ப்பு மிக அருமை.
    கீதாஞ்சலியை மொழிபெயர்த்தது
    போல் தாகூரின் மற்ற பாடல்
    வரிகளையும் தமிழில் மொழி
    பெயர்த்தால் நன்றாக இருக்கும்.
    குறிப்பாக 'Lovers gift and
    Crossing'
    எதிர்ப்பார்ப்புடன்,
    மை.அமல்ராஜ்.

    பதிலளிநீக்கு