வியாழன், ஜூன் 27, 2013

இன்று அகிலன் பிறந்தநாள்- (ஜூன் 27) - ‘பால்மரக் காட்டினிலே’

தமிழின் மறக்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர், அகிலன். 1922ல் இதே ஜூன் 27 ல் பிறந்தவர். 1988 ஜனவரி 31ல் அமரரானவர். அவரது நினைவாக இக்கட்டுரையை எழுதுவதில் நெஞ்சம் நெகிழ்கிறது.
அகிலன் (என்கிற அகிலாண்டம்) 
1960 முதலே கல்கி, விகடன், கலைமகள் இம்மூன்று பத்திரிகைகளும் என் வீட்டிற்கு வரும். (இவை மூன்றும் தான் 'குடும்ப'ப் பத்திரிகைகளாகக் கருதப்பட்டன.   முதலில் மாதம் மும்முறையாகவும் பிறகு வார இதழாகவும் வந்த  'குமுதம்'  இந்த கௌவரத்தை அடைய நீண்ட காலம் ஆயிற்று. எனவே குமுதம் தொடர்ச்சியாக வாங்க மாட்டார்கள்).

கலைமகளிலும் கல்கியிலும் விகடனிலும் அகிலன் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தீபாவளி மலர்களில் சிறுகதைகள் எழுதியிருக்கக்கூடும். (அடுத்த முறை புதுடில்லி சென்றால் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்க்கவேண்டும். அங்கு 1950 முதல் இன்றுவரை விகடன் தீபாவளி மலர்கள் ‘பைண்டு’ செய்து பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன).

கல்கியில் அவருடைய ‘புது வெள்ளம்’ தொடரைப் படித்தது நன்றாக நினைவிருக்கிறது. சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்த்துப்போராடும் இளைஞன் ஒருவனைக் கதாநாயகனாகப் படைத்திருந்தார். ஒரு காட்சி பளிச்சென்று கண்ணில் தெரிகிறது: ஒரு அரிசி ஆலையைக் காட்டுகிறார். (அல்லது ஒரு மொத்த வியாபாரியின் இருப்பிடமா?) அங்கு நெல் அரைக்கப்பட்டு உமி நீக்கிய அரிசி தனியாக வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே அரிசி மாதிரியே அதே அளவில் சிறியதாக ஏதோ ஒரு தானியம் குவித்து  வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலைக்காரர் வந்து ஒரு படி அரிசிக்கு அரை ஆழாக்கு (அல்லது அந்த மாதிரி ஒரு விகிதத்தில்) இதை அரிசியோடு கலந்தபின் அரிசி மூட்டைகள் விற்பனைக்குப் போகின்றன. என்னடா என்று பார்த்தால், கலக்கப்பட்டது அரிசி மாதிரியே அதே நிறத்தில் அதே வடிவத்தில் இருந்த கல்லாம்!

அந்த நாளில் அரிசியில் கல் பொறுக்குவது சிறுவர், சிறுமிகளுக்கும், பாட்டிமார்களுக்கும் பொழுதுபோக்காக இருந்தது. (பாட்டிகளுக்குத் துணையாக கல் பொறுக்கித்தரும் சிறுவர்களுக்கு, பாட்டி அப்பளம் இடும்பொழுதெல்லாம்  பிரண்டை வாசனையுடன் கூடிய அப்பள மாவு சிறப்பு அன்பளிப்பாக கிடைப்பதுண்டு). அரிசி என்றில்லை, அதிகம் விற்பனையாகும் துவரம்பருப்பு, பைத்தம்பருப்பு இவற்றிலும் இப்படித்தான் மிகுதியாக கல் கலக்கப்பட்டிருக்கும்.

(1974ல் இராணிப்பேட்டையிலிருந்து சென்னையில் குடியேறிய போது, மளிகை வியாபாரம் நாடார்களின் கைக்குப் போய்விட்டதைக் காண முடிந்தது. ‘கல் நீக்கிய அரிசி’ ‘கல் நீக்கிய பருப்பு’ என்று நாடார் கடைகளில் சிறு பலகையில் கட்டம் கட்டி, சிகப்பு அல்லது நீல சாக்பீஸால் எழுதியிருப்பார்கள். எந்தத் தொழிலிலும் வாடிக்கையாளர்களின் நலனை முதன்மையாகக் கருதவேண்டும் என்ற அடிப்படையான ‘மார்க்கெட்டிங்’  கொள்கையை மளிகைத் தொழிலுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாடார்கள் என்றே தோன்றுகிறது).     

இம்மாதிரி, அரிசி பருப்பில் கலப்பதற்கென்றே சிறு கற்களைத் தயாரிக்க சித்தூரில் சில ஆலைகள் இருந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுவார். அதைப் படிக்கும் போது எனக்கு எழுந்த ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஏனெனில் எவ்வளவு மன ஒருமையோடு அரிசியில் கல் பொறுக்கினாலும், சாப்பிடும்போது ஒரு பெரிய கல் என் பல்லில் குத்தி வலிக்க வைப்பது வாடிக்கையாக இருந்தது.

அதன் பிறகு அகிலனின் நூல்களைத் தேடிப்பிடித்து வாசிக்கலானேன். தேன்கனிக்கோட்டையில் மூன்று வருடம் படித்துக்கொண்டிருந்தபொழுது, நூலகத்தில் இருந்த அகிலனின் புத்தகங்கள் ஒன்றுவிடாமல் வாசித்திருக்கிறேன். பெரும்பாலும் சிறுகதைகள்.

‘பாவை விளக்கு’ படம் பார்த்து பல வருடம் கழித்து தான் புத்தக வடிவில் கிடைத்தது. ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்மனம்’ இரண்டும் வெளிவந்து பத்து வருடம் கழித்து தான் படித்தேன்.

அகிலனின் தொடர்கதையான ‘வேங்கையின் மைந்தன்’ சிவாஜி கணேசன் அவர்களால் நாடகமாக நடிக்கப்பட்டது. (ஆற்காட்டில் பார்த்தேன்). அவரது நடிப்பில் ‘பாவை விளக்கு’ தவிர, ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் படமானது ‘வாழ்வு எங்கே?’ என்ற நாவல்.(‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’, ‘கள்ளமலர் சிரிப்பிலே’ பாடல்கள் கேட்டிருப்பீர்களே!) எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ என்ற பெயரில் படமானது கல்கியில் வந்த ‘கயல்விழி’ என்ற தொடர்கதை.

‘வானமா பூமியா’, ‘நெஞ்சின் அலைகள்’, சித்திரப் பாவை’ ஆகியவை சென்னை தொலைக்காட்சியில் தொடர்களாக வந்துள்ளன. (ஆச்சரியமாக இல்லை?  ஒரு பெண்ணைக் கண்ணீர் வடிப்பவளாகவும், இன்னொரு பெண்ணை அரக்கியாகவும் காட்டும் கதைகளைத் தானே இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் அனுமதிக்கிறார்கள்?)

‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்காக ‘சாகித்ய அகாதெமி’ பரிசும், ‘சித்திரப்பாவை’ க்காக ‘ஞானபீடம்’ பரிசும் வென்றவர்.

தனது 16 வது வயதிலிருந்தே எழுத ஆரம்பித்தவர் அகிலன். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் முயற்சியால் கல்வி மேற்கொண்டவர். முதலில் ரயில்வே அஞ்சலகத்துறையில் சிறிது காலம் இருந்தார். பின்னர் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வுபெற்றார். இவரது இலக்கிய முயற்சிகளுக்குப் பல்வகையிலும் தூண்டுகோலாகவும் பக்கபலமாகவும் இருந்தவர் ‘கலைமகள்’ ஆசிரியர் அமரர் கி.வா.ஜ. அவர்கள்.

அகிலனின் குடும்பத்தினர் பதிப்பகத்துறையில் இருக்கிறார்கள். ‘தமிழ்ப் புத்தகாலயம்’ என்றும் ‘தாகம்’ என்றும் இயங்கும் பதிப்பகங்களை சென்னை தி.நகரில் நடத்திவருகிறார், அவருடைய மைந்தர், திரு அகிலன் கண்ணன். அகிலன் பற்றிய மேலும் தகவல்கள் அறிய சொடுக்குங்கள்:  www.akilan.50megs.com
*****
‘பால்மரக் காட்டினிலே’ – நாவல்
1975ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பையேற்று மலேசியாவில் நான்கு வாரம் பயணம் மேற்கொண்டார், அகிலன். ‘வரும் போது நாவலுடன் வாருங்கள்' என்று சொன்னாராம் கலைமகள் ஆசிரியர்  கி.வா.ஜ. உடனிருந்த கலைமகள் அதிபர் ராமரத்னமும் ஆமோதித்தாராம். அதன் விளைவாக ஒரு நாவலுக்கான கருப்பொருளைத் தேடிக்கொண்டிருந்தவர், மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதலாம் என்று தீர்மானித்து அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டாராம். அதன் விளைவு தான் ‘பால்மரக்காட்டினிலே’ என்ற நாவல். 1976ல் கலைமகளில் தொடராக வந்தது. (2013 ஜனவரியில் சென்னை புத்தகக் காட்சியில் வாங்கினேன். 240 பக்கம். ரூ.100.  புத்தகம் கிடைக்குமிடம்: தமிழ்ப்புத்தகாலயம்/தாகம், சென்னை-17. மின்னஞ்சல்: tamilputhakalayam@yahoo.com).

ஆங்கிலேயர்களால் சொர்க்க வாழ்வு கிடைக்கும் என்று பொய்வாக்குறுதி வழங்கப்பட்டு கப்பல்களில் விலங்குகளைப்போல் அடைக்கப்பட்டு மலேசிய ரப்பர்க்காடுகளில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டு தலைமுறை தலைமுறையாய் வறுமையிலும் அறியாமையிலும் விழுந்துகிடந்த தமிழ்த் தொழிலாளிகளில் ஒருவன் பாலன். கொஞ்சம் படித்து ஆசிரியராகவும் இருப்பவன்.  அவன் தான் கதாநாயகன்.

உலக யுத்தம் முடிவதற்கு சற்று முன், அமெரிக்க-இங்கிலாந்துப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது,  ஜப்பானியப் படை. அது  பர்மா எல்லையிலிருந்து மலேசியாவை  நோக்கி  முன்னேறிக் கொண்டிருந்த  நிலையில், ஆங்கில முதலாளிகள் உயிருக்குப் பயந்து தங்கள் ரப்பர் தோட்டங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டுப் போக முற்பட்டனர். அதுவரை அத்தோட்டங்களில் உழைத்துவந்த தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாயிற்று. ஒரு நாள் நோட்டீசில் பலர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள். அங்கிருந்து தான் கதை துவங்குகிறது. கங்காணிகளின் நியாயமற்ற நடவடிக்கைகளும், கங்காணிகளுக்கும் ஆங்கில முதலாளிகளுக்கும் இடைப்பட்டவர்களாக  வேலையிலிருந்த சிலரின் முறையற்ற போக்கும் கதையின் உயிரோட்டமாக விளங்குகிறது.

இக்கதை நிறைவு பெற்ற இதழில் கி.வா.ஜ. இப்படி எழுதுகிறார்:
“பால்மரக் காட்டினிலே  உள்ளவர்களின் நிலையை உயர்த்தப் பாடுபட்டான் பாலன். தன் சகோதர மக்களுக்கு அறிவையும் துணிவையும் ஊட்ட முற்பட்டான். தன் குடும்பச் சிக்கலுக்கு இடையில் அவன் நிமிர்ந்து நின்று இந்தத் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்......(இந்த இதழுடன்) இந்தக் கதை நிறைவு பெறுகிறது. ஆனால்... இன்னும் நிறைவு பெறவில்லை. உலகத்தில் வறுமையாலும் மனிதாபிமானமற்றவராலும் அவல வாழ்வில் உழலும் மக்கள் இருக்கும்வரை இத்தகைய கதைகள் நிறைவு பெறுவதில்லை...”

அகிலன் தன் முன்னுரையில் கூறுகிறார்:
“வாழ்வதற்கென்று கப்பலேறிக் கடல் கடந்து சென்று இன்றும்கூட (1975-76) நன்றாக வாழமுடியாமல் வாயில்லாப்  பூச்சிகளாக நிற்கும் ஓரினத்தின் வரலாற்றுச் சிறுதுளியை இதில் நான் படம் பிடிக்க முனைந்துள்ளேன்....என்னுடைய குறைபாடுகளை நான் மூடி மறைக்கவில்லை. நான் எழுதும் இந்த வாழ்க்கையில் நேரடியான அனுபவம் பெறாதவன். தோட்டப்புறங்களில் வாழாதவன். ஆனாலும் தமிழ்நாட்டு எழுத்தாளன் ஒருவன் மேற்கொள்ளும் முதல் முயற்சி இது...எதிர்காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து வெளிவரப்போகும் தலைசிறந்த-தோட்டப்புற வாழ்க்கை கொண்ட- நாவல்களுக்கு, காலத்தால் சருகாய் உதிரும் இந்த நாவல் சிறிதளவு உரமாகப் பயன்படுமானால் அதையே நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுவேன்”.

37 ஆண்டுகள் கழிந்தபின்னும் இந்த நாவல் ‘சருகாய் உதிர’வில்லை. ஆணிவேரிட்டு உயர்ந்த மரமாக நிற்கிறது.
அகிலன் என்ற மாபெரும் எழுத்தாளருக்கு அவரின் 91வது பிறந்தநாளில் ஓர் எளிய வாசகனின் அஞ்சலி இது.
*****
(c ) Y .Chellappa
email : chellappay@yahoo.com  

10 கருத்துகள்:

  1. சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அகிலன் என்ற மாபெரும் எழுத்தாளருக்கு அவரின் 91வது பிறந்தநாளில். தாங்கள் செலுத்தும் அஞ்சலியில், ஓர் எளிய வாசகனாய் நானும் இணைந்து கொள்கின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  3. என் இல்ல நூலகத்தில் உள்ள நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று அகிலனின் வேங்கையின் மைந்தன். கல்லூரி நாள்களில் விரும்பிப் படிக்க ஆரம்பித்த நான், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது மறுபடியும் படிக்கிறேன். படிப்பவர் மனதில் ஆழமாகப் பதிவு பெறும் வகையில் உள்ள அவருடைய எழுத்தில் மயங்காதவர் எவருமிலர். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கருத்துரை சொன்ன நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், டாக்டர் ஜம்புலிங்கம் ஆகியோருக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பாவை விளக்கை ஒரே இரவில் படித்து முடித்தது நினைவு வருகிறது

    பதிலளிநீக்கு
  6. திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. It is so nice of you that u made me recollect Akilan and his great novels.
    I was one among the avid readers of Akilan those days.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com
    (குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    பதிலளிநீக்கு
  9. //இத்தகைய கதைகள் நிறைவு பெறுவதில்லை...”// என்று மானுட அவலத்தைச் சொன்ன வரி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
    ...மீ.மணிகண்டன்

    பதிலளிநீக்கு