வியாழன், மே 09, 2013

அமெரிக்காவின் புதிய மதம்:
“ஸயண்ட்டாலஜி சர்ச்”
SCIENTOLOGY CHURCH


“பூமியில் எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து நல்லவர்கள் துன்பமடைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களைக் காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நான் அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான்.

அதன்படி, கலியுகத்தில் ‘கல்கி’  அவதாரம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மக்களிடம், “நானே கல்கி” என்று பெருத்த விளம்பரத்துடனும் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடனும் ஒரு பெரியவர் தம்பதி சமேதராய் அழகான ஆங்கிலத்தில் பேசி, ஞாயிறுதோறும் தொலைக்காட்சிகளில் அதிக  டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றதை மறந்திருக்க மாட்டீர்கள்.

கிறித்தவ மதத்திலும் இந்த நம்பிக்கை உண்டு. ‘ஏசு வருகிறார்’ என்று பல சுவர்களில் எழுதியிருப்பதைச் சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் அடிக்கடி பார்க்கமுடியும்.

ஆனால் அறிவியலில் உன்னதமான ஆய்வுகளின் நிலைக்களனாக விளங்கும் அமெரிக்காவில், ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்புவதில்லை என்பதே கொள்கையாய் வாழும் அமெரிக்க மக்களிடம் இத்தகைய கல்கி அவதார நம்பிக்கையை ஒருவர் உண்டாக்கியது மட்டுமன்றி, ‘சர்ச் ஆஃப் ஸயண்ட்டாலஜி’ என்ற புதிய மதத்தை ஏற்படுத்தி, பில்லியன் கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்ற செய்தியை என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. ஆனால் என்ன செய்வது! சில நாட்கள் முன்பு ஜான்ஸன் நூலகத்தில் 2013ன் புதிய வெளியீடான

“GOING CLEAR” – Scientology, Hollywood & the Prison of Belief –by LAWRENCE WRIGHT

என்ற நூலைப் படிக்க நேரிட்டபோது உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். இன்று நேற்றல்ல, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் புதிய மதம் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஃப்ளாரிடாவில் ‘க்ளியர்வாட்டர்’ என்ற இடத்தில் இதன் தலைமை சர்ச் அமைந்துள்ளது. இதனை நிறுவிய அமெரிக்க ‘கல்கி’ யின் பெயர், லாஃபயெட் ரொனால்டு ஹ்யூபர்ட் .  (Lafayette Ronald Hubbard).  






(இந்தியாவிலும் இதே போன்றதொரு புதிய மதத்திற்கான இயக்கம் –‘தியஸாப்பிகல் சொஸைட்டி’ என்ற பெயரில் கிளம்பியது. இதன் உறுப்பினர்களுக்கு மாய மந்திரக் கலைகளில் பயிற்சி வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் எதிர்காலத் தலைவராகக் கணிக்கப்பட்டு, தலைமைப் பொறுப்புக்களில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதன் ரகசிய நடவடிக்கைகள் பிடிக்காமல் விலகியவர் தான், புகழ்பெற்ற தத்துவ ஞானி ஜி. கிருஷ்ணமூர்த்தி என்ற ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. நல்ல வேளையாக தியஸாப்பிகல் சொஸைட்டி, அடையாறு ஆலமரத்துடன் நின்று விட்டது).

ரொனால்டு 1911ல் நெப்ராஸ்காவில் டில்டன் என்ற ஊரில் ஒரு மெத்தாடிஸ்ட்டு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இரண்டு வயதானபோது இவருடைய குடும்பம் தங்கவேட்டைக்குப் பிரபலமான ஹெலினா என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தார்கள். (மொன்ட்டானா மானிலம்).

(தங்கவேட்டை Gold Hunt  என்றால் என்ன? அந்த நாளில், பின்தங்கியிருந்த அமெரிக்காவை முன்னேற்றுவதற்காக அரசாங்கம் அறிவித்திருந்த திட்டம் தான் தங்கவேட்டை. அதன்படி, “யார் வேண்டுமானாலும் பூமியைத்தோண்டிச் சுரங்கம் வெட்டித் தங்கத்தை எடுத்துக்கொள்ளலாம்; சுரங்கமும் அது அமைந்துள்ள நிலமும், அதிலிருந்து வழிவழியாகக் கிடைக்கும் தங்கமும் பிற உலோகங்களும் பரம்பரையாக அவர்களுக்கே சொந்தம், அரசுக்கு எதுவும் தரவேண்டியதில்லை”. இன்று திரைப்படத்துறையும் மென்பொருள்துறையும் கோலோச்சிவரும் கலிஃபோர்னியா மாநிலம் இப்படித்தான் பல்வேறு நாட்டுக் குடியேறிகளின் வியர்வையால் உருவாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற “மெக்கன்னா’ஸ் கோல்டு”  என்ற படத்தை நீங்களோ அல்லது உங்கள் பெற்றோரோ பார்த்திருக்கக் கூடும்).

படிப்பில் ஒன்றும் புலியில்லை, ரொனால்டு. எனவே கவனம் வேறு திசைகளில் சென்றது. தன் 12-வது வயதில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையிலுள்ள ஸியாட்டலிலிருந்து கிழக்குக் கடற்கரையிலுள்ள வாஷிங்டன் டி.ஸி.-க்கு 7000 மைல் கடல் யாத்திரையை மேற்கொண்டான், ரொனால்டு.

அவனது தந்தையின் நண்பரான தாம்ஸன் என்பவர், அவனுக்கு சிக்மண்ட் ஃப்ராய்டின் உளவியல் தத்துவங்களைக் கற்றுக் கொடுத்தார். “எது உன்னைப் பொருத்தவரை உண்மை இல்லையோ, அது உண்மையிலேயே உண்மையில்லை” என்று அவர் விளக்கினார். (புரிகிறதா? இது கௌதம புத்தர் சொன்ன வாக்கியமாம்). மனிதனுக்கு அடிப்படையான உள்ளுணர்ச்சிகள் இரண்டே இரண்டு தான்: (அ) தற்காத்துக் கொள்ளுதல் (ஆ) இனப்பெருக்கம் செய்தல். அவன் செய்யும் எந்தக் காரியத்தையும் இந்த இரண்டில் ஒன்றின் தாக்கத்தாலேயே நிகழ்வதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று ரொனால்டுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சீனாவுக்குப் பத்து நாள் பயணமாகப் போனான் ரொனால்டு. அங்கு பௌத்தத் துறவியரையும் சில மந்திரவாதிகளையும் சந்தித்தான். அவர்களின் போதனையின் பயனாகவோ என்னவோ, அவன் மனதில் “ஏன்” என்ற கேள்வி எழுந்தது.
-ஏன் உலகில் இவ்வளவு துன்பங்களும் துயரங்களும் ?

-ஏன் இதற்கு முன் எவ்வளவோ ஞானிகள் வழிகாட்டிச் சென்றிருந்தாலும், மனித குலம் பேதைமை, மகிழ்ச்சியின்மை, போர் இவற்றை இன்னும் முழுதாக வெற்றி கொள்ளவில்லை?
சமயம் பற்றிய ஆன்மிகக் கருத்துக்கள் அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்ததாம்.

கல்வி யில்லாமல் உலகில் முன்னேறமுடியாது என்பதால் அவனை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்தனர். ஆனால் படிப்பை விடவும் ‘ஆய கலைகளில்’ ஒன்றான காதற்கலையில் அவன் மனம் செல்ல ஆரம்பித்தது. விமான ஓட்டியாக வேண்டுமென்ற பேராவலுடன் அதே இடத்தில் பயின்று கொண்டிருந்த மார்கரெட் லூயிஸ் கிரப் (GRUBB) என்ற மாணவியைக் காதலித்து மணமும் செய்துகொண்டான். பிறகு படிப்பாவது, மண்ணாவது!

வாழ்க்கைக்கு வைட்டமின் ‘ப’ வேண்டுமே! அதற்காக எழுத்தாளரானர், ரொனால்டு. (திருமணம் ஆகிவிட்டதால், ‘அன்’ விகுதிக்குப் பதில் ‘அர்’ விகுதி போடுகிறேன்).

சிறந்த எழுத்துத் திறமையும் பேச்சுத் திறமையும் இயல்பாகவே ரொனால்டுக்கு இருந்ததாம். அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால், பதிப்பாளர்கள் என்ன கேட்கிறார்களோ அதை தானே அவர் எழுதவேண்டும்? காமம் கலந்த இளைஞர் இலக்கியம் தான் அவர் அதிகமாக எழுதவேண்டிவந்தது. இதை ஆங்கிலத்தில் Pulp Literature என்பார்கள். தமிழில் ‘சரோஜாதேவி நூல்கள்’ எனலாம். (நான் படித்ததில்லை; கடைகளில் பார்த்திருக்கிறேன். அட்டைப் படத்துடன் ஐந்து ரூபாயும் அட்டை இல்லாமல் இரண்டு ரூபாயும் விலை. மக்கிய தாளில் தெளிவில்லாத அச்சில் சுமார் முப்பது நாற்பது பக்கங்கள் அளவே இருக்கும். கல்லூரியில் புகுமுக வகுப்பில் பௌதிகம் நடக்கும் போது இந்த அட்டையில்லாத புத்தகத்தை ரெகார்டு நோட்டின் அடியில் மறைத்துக் கொண்டு படிப்பார்கள். புத்தகத்தைக் கொண்டுவரும் ஜெயபாலுக்கு பௌதிக ஆய்வகத்தில் எப்போதும் 50க்கு 50 மதிப்பெண் கொடுப்பார், பேராசிரியர். ரொம்பவும் நேர்மையானவர் என்பார்கள்).

அதே சமயம், அமெரிக்காவில் ஆரம்ப கால அறிவியல் நூல்கள் எழுதியதில் இவருக்கு ஐஸக் அஸிமோவுக்குச் சமமான இடம் உண்டு என்கிறார்கள்.

ரொனால்டு, திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே  பலதரப்பட்ட இளம்பெண்களோடு பழகிக்கொண்டிருந்தவர். இது திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. நீண்ட நாட்கள் பெண்-தொடர்பு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். மனைவியைப் பலவாறும் துன்புறுத்திவந்தார். தன் விருப்பத்திற்கு இணங்காத பெண்களைப் பலவந்தப்படுத்துவதும் அதன் காரணமாகப் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் வாடிக்கையாயிற்று.   

நமது இந்து மத வழக்கப்படி, குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு பிரம்மசரியம் வற்புறுத்தப்படுகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு இல்லறமே கட்டயாமாக்கப்பட்டது. இதன் காரணம் என்னவென்றால், ஆழ்மனத்தின் ஒருமுனைப்பட்ட சக்தியினால் மேலுக்கு எழுப்பப்படும், அனைத்து அறிவுகளுக்கும் தாயான ‘குண்டலினி’ சக்தி என்னும் நெருப்பானது,  அதீத காம உணர்ச்சியை உண்டாக்கி விடக்கொடியதாகும். மேற்கொண்டு காமத்தை அனுபவிப்பதின் மூலமே அந்த நெருப்பை அணைத்து ஆன்மிகத்தில் அடுத்த நிலையை அடைய முடியும்.. வேறு வகையில் சொல்வதானால், காமத்தை முழுதாக வென்ற பின்னரே, முழுமையான ஞானம் கைகூடும்.

ஆகவே தான், காமத்தை முழுதாக வெல்லாத உடம்பில் குண்டலினி சக்தியைக் கைவரப்பெற்று விட்டவர்கள், எத்தகைய ஞானியாயினும், மீண்டும் காமத்தில் ஈடுபட்டேயாக வேண்டியவர்களாகி விடுகிறார்கள். ஆன்மிகத்தில் பிரபலமான சிலர், காமவழிப்பட்டு, அதனால் தொடர்புடைய சமூகவியல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வது இதனால் தான். காமத்தில் அந்த உடம்பைப் பிரயோகித்து, குண்டலினியைத் தணிக்காதவர்களால் அதிக நாட்கள் அந்த உடம்பைப் பூமியில் வைத்திருக்க முடிவதில்லை.  அதே சமயம், காமத்தை வென்ற துறவிகள் இக்குண்டலினியைத் தம்முடலில் எழுப்பிக்கொண்டவுடன், இந்த நெருப்புடன் தாங்கள் நீண்டநாட்கள் வாழ இயலாது என்பதைப் புரிந்துகொண்டதால், தம் சீடர்களிடம் முன்கூட்டியே அறிவித்து ஜீவசமாதி அடைகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இந்தக் குண்டலினி எழுப்பலால் மனிதகுலத்திற்கு எந்தப் பயனும் இல்லை. எனவே தான், இக்குண்டலினி யோகம் என்பது குறைவுடைய யோகம் என்றும், அதற்கு மாற்றாக ’பூரண யோகம்’ என்ற புதிய கோட்பாட்டைத் தாம் உருவாக்கப்போவதாகவும் கூறினார், ஞானி அரவிந்தர்.

ரொனால்டின் அதீதக் காம வெளிப்பாட்டிற்கும் இந்தக் குண்டலினி எழுப்பமே காரணமாக இருக்கலாமோ ? இந்தப் பிரச்சினைகளுக்கு நடுவே தான், ரொனால்டின் புதிய கண்டுபிடிப்பான
DIANETCIS –THE MODERN SCIENCE OF MENTAL HEALTH

பிறக்கிறது. ஆன்மிக அடித்தளம் இல்லாத மனதிலிருந்து இத்தகைய கருத்து பிறப்பதற்கில்லை.

இந்த ‘டயனட்டிக்ஸ்’ என்னும் புதிய உளவியல் முறையை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தனது எழுத்துக்கள் மூலமும் சொற்பொழிவுகளின் மூலமும் பிரபலமாக்கி, அதன்மூலம் தன்னைப் பின்பற்றும் மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டார், ரொனால்டு. 1950ல் நியுஜெர்சியில் எலிஸபெத் என்ற இடத்தில் 'ஹ்யூபர்ட்டு டயனட்டிக்ஸ் ரிசர்ச் ஃபௌண்டேஷன்' நிறுவினார்.   “மனநலத்திற்கான நவீன அறிவியல் – டயனட்டிக்ஸ்” என்ற நூலை வெளியிட்டார். இந்தப் புதிய உளவியல்முறையின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறினார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பணம் கொழித்தது. ஆறு இடங்களில் தனது நிறுவனத்தை விரிவு படுத்தினார்.

படிப்படியாக இது வளர்ந்து அவரை ‘கல்கி’ மாதிரி, ‘ஓஷொ’ மாதிரி ஒரு CULT தலைவராக உயர்த்தியது. 1952ல் தனது கொள்கையான டயனட்டிக்சை விரிவுபடுத்தி,  ‘ஸயண்ட்டாலஜி’ (SCIENTOLOGY)  என்ற புதிய மதமாக அறிவித்தார்.

கப்பற்படையில் சிறிது காலம் பணியாற்றியிருந்ததால் அவருக்கு கடல்மீது மோகம் உண்டு. தனக்கென்று சொந்தமாகச் சில கப்பல்களை வாங்கினார். அந்தக் கப்பல்களில் தனது சீடர்களை ஏற்றிக்கொண்டு உபதேசங்கள் செய்யலானார். அவரது இயக்கத்திற்கு  SEA ORGANISATION   சுருக்கமாக 'SEA-ORG’ என்று பெயரிட்டார். பல்வேறு நாடுகளுக்கும் சென்று தன் ஸயண்ட்டாலஜி மதத்தைப் பரப்ப விரும்பினார். ஆனால், இவரது கப்பல்களை, மதவாதிகளும் அறிவியல் அறிஞர்களும் எதித்து நின்று தங்கள் நாட்டுத் துறைமுகங்களில் நுழையாதபடி செய்துவிட்டனர். நோய் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு பொய் பித்தலாட்டம் செய்வதாக ‘மோசடி’ப் பிரிவின் கீழ் பல வழக்குகள் இவர் மேல் பதிவாகின.  1975ல் கடல் வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுக்கொண்டு அமெரிக்காவில் தரை வாழ்க்கைக்குத் திரும்பினார். 1978ல் ஃப்ளோரிடாவில் தனி இடம் வாங்கித் தலைமைப் பீடம் –CHURCH OF SCIENTOLOGY- அமைத்தார். ஆனால் பல்வேறு வழக்குகள் இவர்மீது இருந்ததால் தலைமறைவாகக் கலிஃபோர்னியா பாலைவனப் பகுதியில் தனிமையில் வாழ்ந்து 1986ல் மரணமடைந்தார்.

இவரது மரணத்திற்குப் பின், SEA-ORG –ல் சீடராக இருந்த டேவிட் மிஸ்கவிக் (DAVID  MISCAVIGE) என்பவர் ஸயண்ட்டாலஜி சர்ச்சின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ரொனால்டுக்கு ஆதரவாக இருந்தவர்களையெல்லாம் விரட்டியடித்தார். ரொனால்டின் மனைவியைத் துரத்திவிட்டு, அவரது மகளைத் தனது வேலைக்காரியாக வைத்துக்கொண்டார்.
********
டயனட்டிக்ஸ் என்றால் என்ன?

பயம் மற்றும் பிறவகை உளவியல் குறைபாடுகளை நீக்கும் புதிய வழிமுறை தான், டயனட்டிக்ஸ் என்கிறார் ரொனால்டு.

மனித மனமானது, பகுத்துணரும் மனம் ( "analytical mind") என்றும் பின்னிருந்து செயல்படும் மனம் ("reactive mind") என்றும் இரண்டாகப் பிரிந்திருப்பது. இந்த இரண்டாவது மனம் தான், அதிர்ச்சி, வலி, நோய், போன்ற அனுபவங்களைப் படம் போலப் பதிவுசெய்து கொள்கிறது. இந்த அனுபவங்களை ‘எங்கிராம்ஸ்’ (ENGRAMS)  என்று ரொனால்டு அழைக்கிறார். இந்த ‘எங்கிராம்’களை அழிப்பதன் மூலம், அதிர்ச்சி, வலி, நோய், போன்ற அனுபவங்கள் மனித மனத்தில் ஏற்படுத்தியிருந்த பிறழ்வுகளை (ABERRATIONS)  நீக்கி, மனதைச் சுத்தப்படுத்தினால், எப்படிப்பட்ட நோயையும் நீக்கிவிட முடியும். அதற்கான வழி தான் டயனட்டிக்ஸ் என்கிறார் ரொனால்டு.

ஆஸ்த்மா, ஆர்த்ரைட்டிஸ், லுகேமியா உள்படப் பல நோய்களுக்குக்  காரணமான ‘எங்கிராம்’களை நீக்க ரொனால்டு, ‘ஆடிட்டிங்’ (AUDITING) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, ரொனால்டின் கொள்கைகளின் வழியாகப் பயிற்சி பெற்ற ‘ஆடிட்டர்’ ஒருவர், நோயாளியுடன் தனிமையில் அமர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலம் நோயாளியின் மனதில் இருக்கும் எங்கிராம்களை வெளியில் எடுப்பாராம். (கிட்டத்தட்ட ஃப்ராய்டின் ஸைக்கோ-அனலிசிஸ் மாதிரி தான்).
*******
டேவிட் மிஸ்கவிக் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஸயண்ட்டாலஜி மதம் மேலும் ரசியமான மதமாயிற்று. ஆனால் அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. ஹாலிவுட் நடிகர்களைக் கவர்ந்திழுத்தார். ஏராளமான செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்த்தார். அரசாங்கத்திடமிருந்து ஒரு பில்லியன் டாலருக்கு வரி விலக்கு பெற்றார்.

தனது சர்ச்சிலிருந்து யாரும் வெளியேறாதபடியும், வெளியேறியவர்கள் தனக்கு எதிராகப் பேசாதபடியும் பார்த்துக்கொள்ள தனி உளவுப்படை அமைத்தார். ரொனால்ட் மாதிரி இல்லாமல் பெண்கள் விஷயத்தில் விலகியே இருந்தார்.

பெரும்தொகையை நுழைவுக் கட்டணமாகச் செலுத்திய பிறகே உறுப்பினர் ஆக முடியும் என்பதாலும், ‘ஆடிட்டிங்கின் போது தான் கூறும் பதில்களை வைத்தே தன்னை ‘பிளாக்மெயில்’ செய்வார்கள் என்பதாலும், உறுப்பினரான பின் எவரும் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பது இல்லை. மீறிப் பேட்டியளித்தவர்கள் சிலர் போன இடம் தெரியாமல் ஆனார்களாம். இதனால் இந்த மதம் பற்றிய செய்திகளை நீங்கள் அடிக்கடி பார்க்கமுடியாது.

மேற்கொண்டு இந்த விஷயத்தைப்  பற்றிப் படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட நூல்கள் / வலைத்தளங்கள் உதவும்:

www.studytech.org/home.php

“INSIDE SCIENTOLOGY” by JANET REITMAN
****
(c) Y.Chellappa

 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

4 கருத்துகள்:

  1. கல்கியின் Golden Temple பல கோடிகள் பெறும்...!!!

    நேர்மையான பேராசிரியர்...

    உடம்பில் குண்டலினி சக்தியை ஏற்றுவது எளிது... இறக்கி வைப்பது தெரியாமல் அழிபவரும் உண்டு... தவறாக பயன்படுத்திய உறவினரும் உண்டு... (60 வயதில் மூன்றாவது திருமணம்)

    குண்டலினி என்பது அதுவல்ல... 'அது'க்காகவும் அல்ல...

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் (வானளவு செல்வம் சேர்க்க) உலகம் முழுக்க உண்டு என்பது மட்டும் புரிகிறது...

    வலைத்தள இணைப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு எழுத்து வடிவம் சார்ந்த AI என்பதால் அது சம்பந்தமாக என்னால் உதவ முடியவில்லை.

      நீக்கு