வியாழன், ஏப்ரல் 04, 2013

என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள் - காத்தரீன் பூ(Boo)

இன்று அறிமுகத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள ஆங்கில நூல், 2012ல் எழுதப்பட்டு, வெளியாகி, ‘நியூயார்க் டைம்ஸ்’ பட்டியலின்படி 2013ல் தொடர்ந்து 12 வாரங்களாக முதல் இருபது இடங்களுக்குள் இருக்கும் ஒரு நூல். “Behind The Beautiful Forevers : life, death and hope in a Mumbai undercity”.  “என்றும் அழகான ஏழ்மைப்புரங்கள்” என்று மொழிபெயர்க்கலாம். (சேரி என்னும் பொருள்படும்  Slums  என்பதைக் குறிக்க ‘ஏழ்மைப்புரங்கள்’ என்ற புதிய சொல்லை நான் உருவாக்கியிருக்கிறேன். பரவாயில்லையா?)
 
காத்தரீன் பூ (Katherine Boo) 48 வயது அமெரிக்கப் பெண்மணி. ‘நியூயார்க்கர்’ இதழில் 20 ஆண்டு பணிபுரிந்தவர். பத்தாண்டுக்கும் மேலாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழோடு நிருபர் மற்றும் வேறு பல பொறுப்புகளில் இருந்தவர். குறிப்பாக ஏழை மக்களைப் பற்றி எழுதுவதில் கவனம் செலுத்துபவர். ஏழ்மையைப் பறைசாற்றுவதோடு அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதையும் பதிவு செய்பவர்.






பத்திரிகைகளில் வெளியான தனது கட்டுரைகளுக்காகப் புலிட்ஸர் உள்ளிட்ட சில பரிசுகளை வென்றவர் இந்தப் பெண்மணி.

இந்தியாவின் ஏழ்மையைப் பற்றி நேரில் கண்டு தனது பத்திரிகைக்காக கட்டுரைகள் எழுதவேண்டுமென்று பெரு விருப்பம் கொண்டிருந்த பூவுக்கு, அதற்குரிய வாய்ப்பு 2007-8 ல் கிடைத்தது. அதற்கு முக்கியமான காரணம், சுனில் கில்னானி என்ற இந்தியரைக் கணவராகக் கொண்டதும் ஆகும்.

மும்பாய் நகரில் உள்ள தாராவி என்னும் மிகப்பெரிய ஏழ்மைப்புரத்தைப் பற்றி ஏற்கெனவே “கோடீஸ்வரச் சேரி நாய்” (The Slumdog Millionaire) என்ற நூலும் வெற்றிகரமானதொரு திரைப்படமும் வந்துவிட்டிருந்த படியால், பூ அம்மையார் வேறொரு ஏழ்மைப்புரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அது தான், அன்னவாடி. மும்பாய் விமான நிலையத்தைச் சுற்றியும் அதன் அருகிலும் இருக்கும் பகுதி.

எல்லாப் பெருநகரங்களிலும் உலவும் வழக்கமான நடப்புகள், அன்னவாடியிலும் இல்லாமல் இல்லை. ஆனால் இங்கு அவற்றை நடத்தும் மாந்தர்கள் யாரும் உள்ளூரினர் அல்லர். பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மானிலங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களிலும் சரிபாதி, முஸ்லீம்கள். கல்வியறிவோ, பனமோ இன்றி, பத்து விரல்களை மட்டுமே நம்பி வந்தவர்கள். பெருநகரத்து அழுக்கையெல்லாம் வெளுக்கின்ற இவர்கள் மட்டும் இல்லையென்றால் நகரத்தின் எத்தனையோ தொழில்கள் உழைப்பாளிகளின்றி நசிந்துபோகும்.

அன்னவாடியில் வீடுகள் ஏது! எல்லாமே குடிசைகள் தாம். சிலவற்றுக்குச் சுவர்கள் இருக்கும். பெரும்பாலானவை அடுத்தடுத்த கித்தான் தொங்கல்களைத்தான் சுவர்களாகக் கொண்டிருக்கும். எனவே மனிதர்களிடையில் ரகசியம் என்பதே இல்லை. இருவரிசை குடிசைகளுக்கிடையே உள்ள குறுகிய பாதை தான் தெரு என்றழைக்கப்படும். மழைக்காலம் என்றிராமல் எப்போதும் சாக்கடை நீர் அதில் வழிந்து கொண்டிருக்கும். பெரு நகரத்து வீடுகளின் இடிபாடுகள் இந்தத் தெரு ஓரம் தான் கொட்டப்பெறும். சிறுவர்கள் நகர் முழுதும் போய் பொறுக்கிகொண்டு வரும் குப்பைப் பொருட்கள் வந்துசேரும் முதல் இடம் இது தான். தரம் பிரித்துக் கொள்முதல் ஆகும்வரை இந்த இடமே கதி.

நொண்டிப்பெண் ஒருத்தி. அவளுக்குப் பெயரே இல்லை. வாயாடி. நொண்டி யென்பதால் அவளைப் பெண் கேட்பார் இல்லை. அதீத காம உணர்ச்சிக்கு வடிகால் தேடிக்கொண்டிருக்கிறாள்.

அடுத்த வீட்டில் ஒரு முஸ்லிம் குடியேறிகள் குடும்பம். தாயார் வாயாடி மட்டுமல்ல, அகராதியில் இல்லாத சொற்களை மட்டுமே பேசுகிறவள். புருஷன் தொடர்-நோயாளி. அவர்களது கடைசி மகன் படிப்பு வராமல், தகப்பனின் தொழிலில் திறமை பெற்றவனாகிறான். (ஏனைய சிறுவர்கள் கொண்டுவரும் குப்பைப் பொருள்களை வாங்கி, அவற்றைக் காகிதம், கண்ணாடி, பிளாஸ்டிக், மற்றவை என்று தரம் பிரித்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பது). அதன் காரணமாக அவர்களது பொருளாதாரம்  முன்னேறுகிறது. கித்தான் தொங்கல்கள் மண்சுவர்களாக மாறுகின்றன. வீட்டுப் பெண்கள், மானத்தை மறைக்கும் அளவுக்கு ஆடைகள் வாங்க முடிகிறது. இதெல்லாம் அந்த நொண்டிப் பெண்ணுக்கும் மற்ற குடும்பங்களுக்கும் பொறாமையை உண்டுபண்ணுகிறது.

திடீரென்று அந்த நொண்டிப் பெண் செத்துப் போகிறாள். அவளை யாரோ அடித்துத் தான் கொன்று விட்டார்கள் என்று போலீஸ் வழக்கு எழுதிக்கொண்டு அந்த உழைப்பாளிச் சிறுவனையும் தந்தையையும் லாக்கப்பில் வைக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக யாரும் சாட்சி சொல்ல வருவதில்லை.

ஆனால் சிவசேனா மகளிர் அணித் தலைவி ஒருத்தி உதவிக்கு வருகிறாள். சும்மா அல்ல, ஒரு பெரும் தொகை கொடுப்பதாக இருந்தால். அதில் ஒரு பகுதி போலீசுக்குப் போகுமாம். தொகையைக் கொடுத்த பின்னும் அவர்களை விடுவிப்பதில் அக்கறை காட்டாமல் இருக்கிறது போலீஸ்.

வைகறை பொழுதில் விமான நிலயத்தின் மதிலேறிக் குதித்து கேன்டீனிலிருந்து  காகிதக் கிண்ணங்களையும், தட்டுக்களையும் பொறுக்கிக் கொண்டு வரும் சிறுவர்கள்; அவர்களில் மாமூல் தருபவர்களை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு மற்றவர்களைப் பிடித்து வன்மையாகத் தாக்கி, போலீசில் ஒப்படைக்கும் விமான நிலையப் பாதுகாப்புப் படை; லாக்கப்பில் வைக்கும் சிறுவர்களை விடுவிப்பதற்காக போதைப் பொருள் விற்கும் அன்னவாடி ஆசாமிகளைப் பற்றி துப்பு சொல்லும்படி நிர்ப்பந்திக்கும் சிறை அதிகாரிகள்;  துப்பு சொல்லித் தப்புகின்ற சிறுவர்களைப் பற்றி போதைப் பொருள் ஆசாமிகளுக்கு  துப்பு சொல்லித் தங்களின் போட்டியாளர்களை இல்லாமல் ஆக்கும் சிறுவர்கள்; துப்பு சொன்னவர்களை பட்டப் பகலிலேயெ வெட்டிக் கொலை செய்யும் ரவுடிகள்; சிவசேனா தலைவிகளோ அல்லது பெருந்தொகையோ வரும் வரை வழக்கு பதிவு செய்யாமலேயே காத்திருக்கும் போலீஸ்; நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு உரிய இடம் தரவும் வழியில்லாத, மருந்துகள் தயார் நிலையில் இல்லாத ஆஸ்பத்திரி......இப்படி நூல் முழுதும் உருக்கமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன.

 தங்களுக்குள் மொழி, இன, மதம் சார்ந்த வேறுபாடுகள் இருந்த போதும், தொழில் போட்டிகள் நிலவியபோதும், அன்னவாடி மக்கள், ஹோலி, நவராத்திரி, வினாயக சதுர்த்தி போன்ற விழா நாட்களில் ஒன்றுகூடத் தவறுவதில்லை. படிப்பில் ஆர்வம் கொண்ட பல அன்னவாடிச் சிறுவர்கள்  கருமமே கண்ணானவராய், தங்களைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கவனத்தைச் சிதறவிடாமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

-கேத்தரீன் பூ காட்டும் ஏழ்மைப்புரம் இது தான். வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் பயன் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களைச் சென்று சேராத அவலம் ஒன்று என்றால், நீதியின் காவலர்களே கையூட்டுக் காரர்களாய் மாறி, சமூகநீதிக்கு விலை கூறுவது இன்னொரு அவலம். ஆனால் காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

இந்தியா போன்ற நாடுகளின் ஏழ்மையைப் பற்றி வெளியாகும் நூல்களுக்கு மேற்கு நாடுகளில் நிச்சயமான சந்தை யொன்று உண்டு. அதையொட்டி அவ்வப்பொழுது இத்தகைய நூல்கள் வருவதுண்டு. என்றாலும், நம்மைச் சுற்றியுள்ள அவலங்களை நாமாக முன்வந்து அகற்றிடாதவரை, இத்தகைய நூல்கள் வெளிவருவதை நாம் எப்படித் தடுக்க முடியும்?

-விரைவில் யாராவது ஹாலிவுட் தயாரிப்பாளர் இந்த நூலைப் படமாக்கி விடவும் கூடும். இப்போதே படித்துவிட்டால் படம் பார்க்கும்போது நன்றாகப் புரியும் அல்லவா?
*****  
(C) Y.Chellappa
email: chellappay@yahoo.com 

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?
 

8 கருத்துகள்:

  1. தங்களின் நூல் அறிமுகமே, அந்நூலினைப் படிக்கத் தூண்டுகின்றது அய்யா. ஆனாலும் நமது நாட்டின் அவலங்கள் நீங்காதா என்ற ஏக்கமும் மனதினில் தோன்றுகின்றது. நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! நீங்கள் ஏங்க வேண்டியதில்லை. உலகின் எல்லா நாடுகளிலும் ஏழ்மை உண்டு. ஆப்பிரிக்காவை விடவா? ஏழ்மையை ‘எதிர்கொண்டு வெல்வோம்’ என்ற மனோபாவத்தைக் கல்வியின் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்புவதே நம்மால் முடியும் தொண்டு.

    பதிலளிநீக்கு
  3. வெளிவந்து ஓராண்டாகியும் என் பார்வைக்கு - தகவலறிவுக்கு - எட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நான் மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. 2012 இறுதியில் தான் வெளிவந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஜனவரி 2013 லிருந்து தான் நியுயார்க் டைம்ஸ் பட்டியலில் இந்த நூல் இடம் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நூல் அறிமுகம் அருமை!//விரைவில் யாராவது ஹாலிவுட் தயாரிப்பாளர் இந்த நூலைப் படமாக்கி விடவும் கூடும். இப்போதே படித்துவிட்டால் படம் பார்க்கும்போது நன்றாகப் புரியும் அல்லவா?//
    - இப்படி எல்லாம் புத்தகங்களை தேடி நல்ல கான்செப்ட்டை நீங்க கொடுக்கும் போது நான் தமிழ்லயே படம் எடுத்துடலாம்னு நினைக்கிறேன். அடடா உங்க டைரியில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. நேரம் அதிகமாக ஒதுக்கி ஒரு நாள் மொத்தமாக படித்து விடுகிறேன் சார்..!

    பதிலளிநீக்கு
  6. என் மகளுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவள் அழைத்ததால் தானே நியுஜெர்சி வந்தேன்! இல்லாவிடில் இந்த பிளாக் எழுதும் முயற்சி தோன்றியிருக்காதே!

    பதிலளிநீக்கு
  7. "சேரியை" சேரியென்றே அழைப்ப‌தில் த‌வறில்லையே? அது தூய‌ த‌மிழ் சொல் தானே?
    'காபியை' த‌மி‌ழாக்க‌ கொட்டை வ‌டி நீர் எனச் சொல்வ‌தால்,
    'தேநீர்' என்ப‌தை இலைவடிநீர‌ என அழ‌க்க‌ வேண்டுமா?
    "ஏழ்மைபுர‌ம்" ந‌ல்ல‌ சொல். ஆனால் சேரி என்ப‌தை ஏன் ஒவ்வ‌தா அர்த்த‌தில் பார்க்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால், சேரியில் வசிப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்: 'சேரி' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்தும் போது அவர்கள் கௌரவக் குறைவாகவே உணர்கிறார்கள்.

    பதிலளிநீக்கு