திங்கள், ஏப்ரல் 01, 2013

“உங்களுக்கு தற்கொலை எண்ணம் இல்லையா?”

கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களெல்லாம் கற்பனையில் மூழ்கிக் கிடப்பவர்கள். நிஜங்களிலிருந்து விலகினவர்களாகவே கருதப்படுபவர்கள். இவர்களிலும் மாபெரும் கற்பனைத்திறம் கொண்டவர்கள், தங்களின் மரணத்திற்குப் பின்னரே சரியாக உணரப்பட்டிருக்கிறார்கள்.

தமிழில் ஒரு கம்பனும் திருவள்ளுவரும் பாரதியும் அவரவர் வாழ்நாளில் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டார்கள் என்பதை அறிவோம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நிலைமையும் இதுதான். மரணமெய்தி கிட்டத்தட்ட 50 முதல் 100 ஆண்டுகள் ஆன பின்னர் தான் இவர்களைப் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட முடிந்தது. ஆன்மிக உலகில் இது இன்னும் அதிக ஆழமான விஷயம். 200 ஆண்டுகள் புராதனமானது என்று சொன்னால் தான் மக்கள் ஒரு கோவிலுக்கே போகிறார்கள்.



‘விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுகுருவியைப் போலே’ என்பான் பாரதி.    

எனக்குத் தெரிந்தவர், என் மாமாவுக்கு எதிர்வீட்டுக்காரர், என்னுடைய எதிரிக்கு எதிரி, என் மேலாளருக்கு இவரை எதிர்த்தால் பிடிக்காது – போன்ற காரணங்களால் நமக்குள் அறிமுகமாகி விடுபவர்கள் மிகுதி. எனக்குப் பிடிக்கிற கட்சியை, சினிமாவை, புத்தகத்தை யாருக்குப் பிடிக்கிறதோ அவரை எனக்கும் பிடித்துப் போகிறது, அது நியாயமல்ல என்பது புரிந்தாலும்.   

அக்கரைக்கு இக்கரை பச்சை என்றொரு பழமொழி. தூரத்துப் பச்சை கண்ணுக்கு இன்பம் என்றும் இதைச் சொல்வார்கள். ஒரு விஷயத்திலிருந்து நாம் வெகு தூரத்தில் இருந்தால் அந்த விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி விமர்சிப்பது எளிதாகி விடுகிறது. அருகே இருக்கும்போது மாயைகள் நம்மை மயக்கிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லும் பொழுது,  “எதிர்வரும் தலைமுறைகள் இப்படியொரு மனிதர் இரத்தமும் சதையுமாக பூமியில் நடமாடினார் என்பதையே நம்ப இயலாமற் போகலாம்” என்றார். காரணம், சத்தியாகிரகம் என்னும் மாபெரும் கொள்கையின் மாண்பு மக்களிடையே வேரூன்றிட ஒரு சில தலைமுறைகளாவது தேவைப்படும் என்று அவர் கருதியதே.

‘கல்கி’ பொன்னியின் செல்வன் எழுதினார். ‘மங்கள நூலகம்’ தான் முதல் பதிப்பாளர் (என்று ஞாபகம்). அந்த வெளியீட்டால் கல்கிக்கும் சரி, பதிப்பாளருக்கும் சரி,  எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சிக்குச் சென்று பாருங்கள். தமிழ் நாட்டிலுள்ள அத்தனை பதிப்பகங்களும் ஆளுக்கொரு ஸைசில் பொன்னியின் செல்வனை வெளியிட்டிருப்பது தெரியும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவம். நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டதால், ஆசிரியருக்கு எதுவும் தரவேண்டாம். எல்லாமே லாபம் தான். ஆனால் உண்மையான காரணம், கல்கி இறந்து 54 வருடங்களுக்குப் பிறகு அவருடைய படைப்பின் மேதைமை மேன்மேலும் நன்றாக உணரப்பட்டு வருகிறது என்பது தான். ஒரு சமுதாயத்தின், ஒரு மொழியின் வரலாற்றில் 50 வருடம் என்பது மிகச் சிறிய மழைத்துளி போலத் தான்.

சூப்பர் சிங்கர் போன்ற பாடல் போட்டிகளில் கூட, 50, 60 வருடங்களுக்கு முன் வெளிவந்த பாடல்கள் தான் முதலிடம் பிடிக்கின்றன என்பதை அறிவோம்.
மனுஷ்யபுத்திரன், நாடறிந்த கவிஞர். சுஜாதா நாவல்களை உயர்தரமாகப் பதிப்பித்தவர். ‘உயிர்மை’யின் ஆசிரியர். இணையத்தில் நன்கு அறிமுகமானவர். கலைஞர் கருணாநிதிக்கு முன்னரே சக்கர நாற்காலிக்கு இலக்கிய அந்தஸ்து வழங்கியவர். இளம்பெண்களால் மிகுதியாக வாசிக்கப்படும் கவிஞர். ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்று 1993ல் அலறி வெளியே வந்தவர். 2012 புத்தகக் காட்சியில் அப்போது தான் சூடாக வெளிவந்திருந்த ‘பசித்த பொழுது’ என்னும் 235 கவிதைகளைக் கொண்ட தடி நூலை வாங்கினேன். அவருடைய கையொப்பமும் வாங்கினேன்.(மேலட்டையில் மஞ்சள் போர்வையில் சாமியார் மாதிரி ஒரு பூனை). அத்தனை பெரிய கவிதை நூலை, அதுவும் இரண்டாண்டுகளாக நூலகத்துறை எந்தப் பதிப்பாளரிடமிருந்தும் நூல்களை வாங்கியிருக்காத நிலைமையில்,   வெளியிடுவதென்றால் நிச்சயம் தைரியம் வேண்டும். சொந்தப் பதிப்பகம் இருந்தால் இது ஒரு வசதி.

அரைத் தலைகாணி எடை கொண்ட ‘பசித்த பொழுது’, வாங்கிய உடனே கடல் கடந்து போய்விட்டது. இந்த ஆண்டு அதே கடலை நானும் தாண்டிவந்து, மகள் வீட்டில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். (இங்கு வேறு தலைகாணிகள் உண்டு). பாதி வரை வந்து விட்டேன்.    
அப்போது தான், திடீரென்று, மனுஷ்யபுத்திரன் ஒருவேளை தற்கொலை செய்துகொண்டுவிடுவாரோ என்ற கவலை மேலிட்டுவிட்டது.

ஓர் இளம் வாசகி, மனுஷ்யபுத்திரனை மெல்ல அணுகி, அவரிடமே கேட்டு விடுகிறாள். (முதல் முறையாக அப்போது தான் வந்த ரசிகை).
“உங்களுக்கு
இப்போதைக்கு தற்கொலை செய்துகொள்ளும்
எண்ணம் ஏதும் இல்லையா?”

மனுஷ்யபுத்திரன் கொஞ்சம் அழுத்தமான ஆள் என்று தான் நமக்குத் தெரியுமே! “நான் எனது ரகசியத் திட்டங்களை யாராவது கண்டுபிடித்துக் கேட்டால் இல்லை என்று உறுதியாக மறுத்துவிடுவேன்” என்று சொல்பவராயிற்றே! அந்தப் பெண்ணிடம், ‘அப்படி ஏதும் திட்டம் இல்லை’ என்கிறார்.
என்னம்மா, இப்படியொரு புதிரான கேள்வி என்று காரணம் கேட்கிறார். அவள் சொன்ன பதில்:

“இந்த நாட்களில்
எழுத்தாளர்களின் சராசரி வயது
மிகவும் அதிகரித்துவிட்டது.

எழுத்தாளர்களுக்கு வரக்கூடிய
பெரும்பாலான நோய்களுக்கு
மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
தவிரவும்,

எல்லா எழுத்தாளர்களும்
ஏதாவது ஒரு கைத்தொழிலைக்
கற்றுக்கொண்டுவிடுவதால்
பட்டினிச் சாவுகளும்
கணிசமாகக் குறைந்துவிட்டன.
மேலும்
பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள்
வாகனம் ஓட்டத் தெரியாதவர்கள் என்பதால்
மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு நிகழ்வது போல
விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கும்
வாய்ப்புக் குறைவு.
தவறாக நினைக்க வேண்டாம்
நான் உங்கள் தற்கொலையைப் பற்றி
கேட்பதற்கு இதெல்லாம் தான் காரணம்” என்றாள்.

மனுஷ்யபுத்திரனுக்கு அவளுடைய லாஜிக் பிடிக்கிறது. தனது தற்கொலையை அவள் ஏன் அவ்வளவு விரும்புகிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
“நீங்கள் இங்கே இருக்கும்வரை
உங்களுடைய ஒரு கவிதையைக் கூட
என்னால்
அதற்குரிய நியாயத்துடன்
வாசிக்க முடிவதே இல்லை.
இதற்குமேல் காத்திருக்க முடியாது”
என்றாள் படபடப்புடன்.
 ****
கவிஞன் உயிரோடிருக்கும் வரை அவனுடைய கருத்துக்களை முழுமையாகப் புரிந்துகொள்வார் அதிகம் இல்லை என்ற ஆற்றாமையினால் விளைந்த கவிதை மட்டுமல்ல இது, காலம் கடந்து நிற்கும் கவிதைகளை எழுதுபவன் யாரோ, அவன், காலனைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டியதில்லை  என்ற நிதர்சனத்தினால் விளைந்த கவிதையும் கூட. (“என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்” என்று எமனைப் பார்த்து பாரதி கூறவில்லையா?)
*****
அந்தப் பெண் அப்புறம் என்ன செய்தாள் என்பது பற்றித் தகவல் இல்லை. மனுஷ்யபுத்திரன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது....!
நீங்களும் படியுங்களேன், “பசித்த பொழுது” நூலை. வெறும் 350 ரூபாய் தான். சரவணபவனில் இரண்டு பேர் ஒருவேளை சாப்பிட்டால் 500 ரூபாய் ஆகுமே! நான் எடுத்துக்காட்டியிருக்கும் கவிதை: ‘வாசகர் சந்திப்பு-2’. 166-167 பக்கங்களில் உள்ளது.
*****
email: chellappay@yahoo.com

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

2 கருத்துகள்:

  1. “பசித்த பொழுது அறிமுகமே படிக்கத் தூண்டுகின்றது அய்யா. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஒரே ஒரு கவிதை தான். நூலில் இன்னும் ஏராளமான நல்ல கவிதைகள் உண்டு. விரைந்து வாங்குங்கள். நிதானமாகப் படியுங்கள்.

    பதிலளிநீக்கு